இதுவும் ஒரு பிரசவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,318 
 

(1971 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உச்சந்தலையில் ஓங்கி அறைந்தது போலிருக்கிறது. நெற்றித்திட்டு விண் விண்ணென்று வலியெடுத்து வெடித்துச் சிதறிவிடும் போலிருக்கிறது. காற்றோட்டமற்ற புகைக்கிடங்கில் கிடந்து தத்தளிப்பது போல மூச்சு முட்டுகிறது. நினைவுகள் தடுமாறி எண்ணங்கள் தத்தளிக்கின்றன. இப்படி ஓர் அவலம் ஏற்படுமென ஏற்கெனவே தெரிந்திருந்தால்..!

“சுப்பையா அண்ணை , உங்களைத் தான்! பப்பாசிக்காய் ஏனெண்டு கேட்டனான்.” கனியிருப்பக் காய் கவர்வது மனிதன் சுயாதீனமாக இல்லை என்பதைத் தான் காட்டுகிறது!

சுப்பையா வாத்தியார் இகலோக நினைவுகட்கு இப்பொழுது தான் இழுபடுகிறார். அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் என்ன பதிலைச் சொல்வது என்றுதான் அவருக்குப் புரியவில்லை.

இருமலை மென்று விழுங்குகிறார். வார்த்தைகளும் மெல்லப்பட்டு சுப்பையா வாத்தியாருடன் கண்ணா மூஞ்சி விளையாடுகின்றன.

“மனிசிக்குப் பல்லுக்கொதி பிள்ளை சின்னப்பு வைத்தியர் பப்பாசிக்காயிலை சேர்த்துப் பாவிக்கச் சொல்லி மருந்தொண்டு தந்தவர். அது தான்….”

“அப்ப தேவையானதை ஆய்ஞ்சு கொண்டு போங்கோ சுப்பையாண்ணை. நான் உதிலை கடைக்கொருக்காப் போயிட்டு வாறன்.”

அவள் போய்விட்டாள். சுப்பையா வாத்தியாருக்குப் போன உயிர் மீள்கிறது.

கையிலிருக்கும் தடியைக் கொண்டு தலைக்கு மேலாக வளர்ந்து நிற்கும் பப்பாசிக்கன்று ஒன்றில் காயை பிடுங்குகிறார். பெண்பப்பாசிக்காயோடு ஆண்பப்பாசிக்காய்களும் இரண்டு விழுகின்றன. கண்கள் நாலா பக்கமும் வெறிகொண்டு சுழல எக்குக்குள் சொருகி வைத்திருந்த கடதாசிப்பையை நடுக்கத்துடன் விரித்து பப்பாசிக் காய்களை அதற்குள் போட்டு பொதிந்து மூடுகிறார்.

ஒரு கைங்கரியம் முடிந்துவிட்டது. இருந்தும் மனத்தின் அடித்தளத்தில் பதிந்து விட்ட பயத்தின் ரேகைகள் வலுத்துக் கொo U தான் வருகின்றன. தடியை தூர வீசி எறிந்துவிட்டு விசுக்விசுக்கென்று வீட்டை நோக்கி எட்டி மிதிக்கிறார்.

சுப்பையா என்று வெறுமனே பெயர் சொன்னால் ஒருவருக்கும் அவரைத் தெரிவதில்லை. சுப்பையா வாத்தி அல்லது சுப்பையாச் சட்டம்பி என்று சொன்னால் தான் எல்லோருக்கும் விளங்கும். தமிழ்ச் சட்டம்பியாக இருந்து வாழ்க்கையில் தட மடிக்கவேண்டுமென்டு அவரது தலைவிதி. அப்படித்தான் இருந்தாலும் மனிதனைச் சும்மாயிருக்க விடுகினமே!

எப்படியும் வாழலாமென்று வாழ்க்கை நடத்துபவரல்ல சுப்பையா வாத்தியார். இப்படித்தான் வாழ வேண்டுமென்று வழி வகுத்து, நேரான பாதையில் நெறிதவறாது நடப்பதுதான் அவருடைய அடி மனத்தின் ஆதங்கம். பகல் வேளைகளில் கைமாறுக் கொட்டிலுக்குள் சாக்குக் கட்டிலில் படுத்திருக்கும்போது கூரைக்கூடாக இலேசாகப் பாதை பிரித்து முகத்தில் சுளீரென வெயில் உறைக்கும் போது இவையெல்லாம் வெறும் விதண்டா வாதமாகத்தான் அவருக்குத் தெரியும். இந்தக் கௌரவத்திற்கு இழுக்குத் தேடித் தருவதற்காக எத்தனையோ சந்தர்ப்பங்களெல்லாம் வந்தபோது

மனதைக் கல்லாக்கி வைராக்கியத்தோடு கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்து விட்டார். ஆனால், நேர்மையாக வாழ வேண்டுமென்று விண்ணாணம் கதைப்பதெல்லாம் விளல்த்தனமானது என்பதை இப்பொழுது தான் அனுபவ வாயிலாக அனுபவிக்கிறார் சுப்பையா வாத்தியார்.

வீட்டினுள் நுழையும் போது மனக்கிலேசம் உடலையும் உள்ளத்தையும் கூனிக் குறுகச் செய்கிறது. கையிலே பிணமாகக் கனக்கும் பப்பாசிக்காய்ப் பொட்டலத்தைக் கட்டிலில் போட்டுவிட்டு அதே வீச்சில் தானும் அமர்ந்து கொள்கிறார். வாடிய கத்திரிக்காயாகத் தேகமெங்கும் சுருக்கங்கள் விழுந்து கிடக்கிறது. கன்று போட்ட மாட்டின் இடிந்து போன கொட்டாக முகத்தின் சதைப்பகுதியும் மண்டை எலும்புகள் வெளித்தள்ளி முகம் விகாரமாகத் தோன்றுகிறது. உழைப்பை அவர் தின்ன, உழைப்பு அவரை மென்று விழுங்கிக் கொண்டிருப்பதன் சாயல் துலக்கமாக அவரில் தெரிகிறது.

நடந்து வந்த களை, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. தேகமெல்லாம் பூட்டுப் பூட்டாக முறித்துப் போட்டது போல வலியெடுக்கிறது. நாவு தண்ணீருக்காக ஏங்கித் தவித்து சுருண்டு போய்க் கிடக்கிறது.

சை…. ஒரு செம்பு தண்ணியை மடக்குமடக்கெண்டு இப்ப குடிச்சால்…

பக்கத்தில் செம்பு இருப்பது கண்ணுக்குத் தட்டுப்படுகிறது. கட்டிலில் இருந்தபடி கால்களை நிலத்திலூன்றி செம்பை எட்டியெடுத்து உள்ளே பார்வையைச் செலுத்துகிறார். சொட்டுத் தண்ணிகூட இல்லை. அலைச்சல், தாகம், சோர்வு, ஏமாற்றம்! செம்பு தடாலெனக் கீழே விழுந்து உருள்கிறது. உண்டியில் உறைந்திருந்த கோபம் உன்மத்தம் கொண்டு சிரசிலேறி விறுவிறுத்துக் கொண்டிருக்கிறது.

“இஞ்சருங்கோணை, அவள் பெட்டையெல்ல அன்னாகாரமில்லாமல் அழுதழுது சீவனை மாய்க்கிறாள். நீங்களெண்டாலும் அந்த அறுந்து போவானட்டைப் போய் என்னெண்டாலும் கதைச்சுப் பாருங்கோவன்.

பெண்மைக்குரிய பேதமை, மனைவியென்ற உரிமை. அவள் வினவுகிறாள். புண்ணில் புளிப் பிடிக்கிறது!

என்னணை, இண்டைக்குத்தான் கண்டறியாத யோசனையெல்லாம் அப்பிடியென்ன சுவர் தலையிலை இடிஞ்சு விழுந்து போச்சே ? உலகத்திலை நடக்காத ஒண்டை அவள் செய்து போட்டாளே ?

‘பளார்… பளார்… பளார !’

அடித்த கைவிறுவிறுக்கிறது. ஆத்திரமடங்கவில்லை. அவளது கூந்தலைப் கோலிப்பிடித்துக் கைகளில் சுருட்டிப் படலைக்கு வெளியால் கொறகொறவென இழுத்துச் சென்று தள்ளுகிறார்.

“போடி வெளியாலை பறை நாயே! செய்யாததையுஞ் செய்து போட்டு என்னம் பொண்டில் நியாயமும் கதைக்க வந்திட்டியோ? அவகளுக்கென்ன வாயிலையும் வயிற்றிலையும் வாங்கி வைச்சிருப்பகள், ஆணாப் பிறந்தவனுக்கெல்லொ, அவமானமும் ஆய்க்கினையும்.”

படலையை இழுத்து உட்புறமாகக் கொழுவிவிட்டு கட்டிலில் தொப்பென் விழுகிறார். சிந்தனைகள் அவள் சொன்ன வார்த்தைகளை அசை போட்டு மேய்கின்றன.

‘எண்டாலும் அவள் அப்படி சொல்லியிருக்கப்படாது; ‘அவளை வெளியாலை துரத்தினது நல்லதுதான். அவளுக்குத் தெரியும் மனிசனுக்குக் கோவம் வந்தால் இப்படித்தான் ஆளுக்கு மேலாலை சீறும், பிறகு அடங்கிப்போமெண்டு, தகப்பன் வீட்டை போய் நிண்டிட்டு நாளைக்குக் காலமை தான் அவளும் வருவாள்.

அதுக்கிடையிலை ஒருதரும் இல்லாத நேரத்திலை காரியத்தைச் சுழுவா முடிச்சுப் போடலாம் !

கொஞ்சகாலமாகத் தமக்கு ஒன்றன் மேலொன்றாக அடுத்தடுத்து வந்து குவியும் துன்பச் சுமைகளை யோசித்துப் பார்க்கிறார் சுப்பையா வாத்தியார். எவ்வளவு துன்பம்? எவ்வளவு கரைச்சல்? உள்ளது ஒரு பெட்டைக் குஞ்சு. அதைக் கூட மானம் மரியாதையோடை ஒரு தன்ரை கையிலை பிடிச்சுக்குடுக்க நாதியற்றுப் போய் நிக்கிறன். அந்த எளிய ராஸ்கல் விசுவலிங்கன் காலை வாரியிருக்காட்டில் நானேன் இப்பிடி நாயாய் அலையப் போறன் கடந்தகால நிகழ்ச்சிகளை நினைக்கும் போது அடிவயிற்றில் வெறுப்பும் சினமும் குமட்டுகிறது.

விசுவலிங்கம், அவருடைய ஆசைத் தங்கையின் அருமைக் கணவன், எல்லா விஷயத்திலும் ஆள் நல்லவன் தான். காசு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கருமி. இந்த ஒரு சின்ன விஷயந்தான் விசுவலிங்கத்திற்கும் சுப்பையா வாத்தியாருக்குமிடையில் பெருமலையாய் கோடு கிழித்து நிற்கிறது.

விசுவலிங்கத்தின்ரை மூத்த பொடியனுக்கும் என்ரை பொட்டைக்குந்தானே சின்னனிலையிருந்து முடிச்சுப் போட்டுக் கொண்டு வந்தனாங்கள். அவளும் அண்ணையின்ரை பிள்ளையைத்தான் செய்யிறதெண்டு அடிச்சுச் சொல்லிக் கொண்டிருந்தவள். பெடியன் இஞ்சினியரா வந்தாப்போலை அவைக்கும் முருத்து முத்திப் போச்சு. கண்மூக்குத் தெரியாமல் சீதனம் முப்பதாயிரம் கேட்க வெளிக்கிட்டிட்டினம். அவன் பெடியன் தான் பாவம். இவளைப் செய்ய அவனுக்கு நல்ல விருப்பம். வேள்வு எடுத்தாப் போலை ஒவ்வொரு பயணத்துக்கும் அவளட்டையும் வந்து கதைக்காமல் போகமாட்டான். நானும் மூடிமறைச்செண்டாலும் எழுத்தை முடிச்சுப் போட்டு விட்டிருக்க வேணும். இப்படி நடக்குமெண்டு ஆர் கண்டது ?

‘வேள்வு எடுக்கேக்கிள்ளை, சீதனம் பற்றி ஒண்டும் விசுவலிங்கம் கதைக்கேல்லை. அடுத்த மாதம் கலியாண நாளை நிச்சயிக்கிற போதுதான் அவனுக்கு அந்த அறுந்துபோன குணமும் வந்தது. காசு முப்பதாயிரம் வச்சால்தான் கலியாணம் எண்டு நிண்டு கொண்டான்.

‘நானும் ஒரு அழுங்குப் பிடியன் தான். ஒரேயடியாகச் சீதனம் தர முடியாது. எண்டு நிண்டிருக்கக் கூடாது. இரந்து கிரந்தெண்டாலும் பத்தாயிரத்தோடை விஷயத்தை முடிச்சிருக்கவேணும்.

‘கலியாணப் பேச்சு இடையிலை முறிஞ்சு போச்சுத்தான் எண்டாலும் பெடியன் வீட்டுக்கு வாறதை நிறுத்தேல்ல. இப்படக்கான் ஒரு நாள் பொழுது சாயேக்கிள்ளை அவன் வீட்டை வந்திருந்தான். நான் அடிவளவிலை மாட்டுக்கு வைக்கோல் உதறிக் கொண்டிருக்க பெட்டையும் அவனும் வீட்டிலை கதைத்துக் கொண்டிருந்தவை. ஆரோ கூத்தாடியன் அந்த நேரம் பாத்து பெடியனுக்கும் பெட்டைக்கும் இரகசியமாகக் கலியாணம் முடியப் போகுது எண்டு விசுவலிங்கனுக்குக் காதைக் கடிச்சுப் போட்டாங்கள். அவன் படலையை அறுத்துக் கொண்டு வீட்டுக்கை உள்ளட்டுப் பொட்டையைத்தான் இழுத்துப் போட்டு அடிச்சான். பெத்த எனக்குப் பொறுக்க முடியுமே ! நான் ஓடிப்போய் விசுலிங்கன்ரை கழுத்திலை பிடிச்சு நெரிக்க அதைப் பார்த்து சகிக்காமல் அவன்ரை பெடியன் என்ரை முகத்திலை ஒரு தட்டுத்தட்ட…..

பல் வரிசையைத் தடவிப் பார்த்துக் கொள்கிறார். முன் வரிசையில் இரண்டு பற்களுக்கான இடம் காலிப்படுத்தப்பட்டிருக்கிறது. (இதன் பின்னர் சிரிப்பதையே நிறுத்திக் கொண்டார் சுப்பையா வாத்தியார்) மாமனுக்குப் பல்லுடைச்சவனட்டைத் தான் போய் காலைப் பிடிக்கச் சொல்லுறான் இவள்.

“ஐயோ ! பொழுது பட்டுப் போச்சு, தேத்தண்ணியைக் குடியுங்கோவன் !” பெட்டையைக் காணவில்லை, குரல் மட்டும் கேட்கிறது.

சுப்பையா வாத்தியார் சோம்பல் முறித்துக் கொண்டு கட்டிலை விட்டு எழுந்து கிணற்றடிப் பக்கமாக நடக்கிறார். ஆடுகாலில் தொங்கும் சிரட்டைக் குடுகையுள் கிடக்கும் உமிக்கரியில் கொஞ்சம் கையிலெடுத்துப் பல் விளக்குகிறார். துலாக் கயிற்றைப் பிடித்து நாலு வாளி குளிர்ந்த தண்ணீரை இழுத்துத் தலையில் கொட்டுகிறார். கையில் விபூதியைக் குழைத்து முருகன் படத்தின் முன் பக்த கோடியாக நின்று கொண்டு நெற்றியில் திரிபுண்டரமாக விபூதியை இழுக்கின்றார். அனுபவம் முதிர முதிர வாழ்க்கைத் தத்துவங்களும், தார்ப்பரியங்களும் தெளிவடைவது போல நீர்ப்பிடிப்புக் காயக்காய நீறும் பால் வண்ண ஜாலம் காட்டி மயக்குகின்றது.

“முருகா!….”

தேனீர்க் கிளாசை கையிலெடுத்து விளிம்பில் வாயை வைத்து உறிஞ்சுகின்றார்.

‘பெட்டை இப்ப அடுப்படிக்குள்ளை இரவுச் சாப்பாடு தேடிக் கொண்டிருப்பாள்.’

சின்னப்பு வைத்தியர் சொல்லிக் கொடுத்த கிரந்தங்கள் யாவற்றையும் மனதில் நிரைப்படுத்திப் பாராயணம் செய்கின்றார். சுறுசுறுப்பு உடலைச் சுற்றிப் பிடிக்கிறது.

பப்பாசிக் காய்களின் தோலை விறுவிறுவெனச் சீவுகிறார். எப்படியெல்லாமோ அது உருமாறிப் பாக்குத் திரணையளவில் சுப்பையா வாத்தியாரின் கைகளில் இப்பொழுது கிடக்கிறது.

“ஐயா! சாப்பிட வாருங்கோவன்.”

கையில் செம்புடன் முன்னால் நிற்கும் மகளை ஏறெடுத்துப் பார்க்கிறார். தாய்மையின் பூரிப்பு கன்னத்தின் சதைப் பகுதிகளில் வெடிப்புக் காட்டிப் பூரணத்துவம் பெற்றுப் பொலிகிறது.

நெஞ்சிலே இடியின் பேரோசை !

எழுந்து சென்று கையலம்பி விட்டு அடுப்படியுள் நுழைகிறார். கோப்பைச் சோற்றுள் கை பிசங்குப்படுகிறது. அசை போடும் மாட்டிற்கு முன் இருக்கும் தீனி தேவையற்றது தான்! பேருக்குச் சாப்பிடுகிறார்.

“செம்பை முத்தத்திலை விட்டிட்டு வந்திட்டன், எடுத்துக் கொண்டுவா பிள்ளை.” அவள் வெளியேறுகிறாள். கையிலிருக்கும் பாக்குத் திரணை குழம்புச் சட்டியில் போட்டுக் கலக்கப்படுகிறது.

செம்பை வாங்கி அண்ணாக்கக் கவிழ்க்கிறார். தண்ணீர் புரைக்கேறி அவதிப்பட, அவள் அவரது உச்சந் தலையை இதமாகத்தடவிக் கொடுக்கும் போது சுப்பையா வாத்தியாருக்குக் கண்களில் நீர் சுரந்து கொடுக்கிறது. சால்வைத் தலைப்பினால் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியேறுகிறார்.

“நீ சாப்பிடன் பிள்ளை!” மீண்டும் சிந்தனைகள் சேற்றெருமையாகின்றன.

“பெட்டையையும் காப்பாற்றவேணும், அதே நேரம் இரண்டாமாளுக்குத் தெரியவுங் கூடாது. சின்னப்புப் பரியாரியிடம் கொண்டு போகலாந்தான், பிறகு விஷயம் வெளிச்சுப் போயிடும். என்னவாயிருந்தாலும் சுப்பையா வாத்தீன்ரை பெட்டை தூங்கிச் செத்தாளெண்டு பெயர் வரட்டும். ஆனால்… கரைகுட்டி போட்டாள் என்ற பெயரை மட்டும் நான் கேட்க மாட்டன். அதுக்குச் சரியான வழி….?”

‘அன்னம்மா தான்! அவள் இந்த விஷயத்தில் லைசென்சு பெறாத மருந்து விச்சி!’

“பிள்ளை நீ சாப்பிடணை, உனக்குத் துணைக்காக அன்னம்மா மாமியை உதிலை போய்க் கூட்டிக் கொண்டு வாறன்.”

அன்னம்மா மாமிக்கு லைசென்சு இல்லைதான். இருந்தாலும் எல்லா விஷயத்தையும் அவளுக்குச் சொல்லுகிறார் சுப்பையா வாத்தியார். அவள் அவருக்குத் தைரியம் கூறுகிறாள்.

எங்கிருந்தோ இரண்டாஞ் சாமக்கோழி ஒன்று இறக்கைகளைப் படபடவென அடித்துக் கூவுகிறது. ஆந்தையொன்றின் அலறல் அந்தப் பிரதேசத்தை அதிபயங்கரமாகக் கற்பனை செய்ய வைக்கிறது. விடிவும் விபரீதமும், விடிவில் விபரீதம், விபரீதத்தில் விடிவு!

வீட்டுக்குள் முனகல் ஒலி இலேசாக எழுகிறது. சுப்பையா வாத்தியார் குளிர் காய்வதற்காக சுருட்டொன்றை வாயில் பொருத்தி அதற்கு நெருப்புத் தட்டி வைக்கிறார். முனகல் ஒலியின் வேகம் விரைகிறது. “வீ…” என்ற அலறல் ஒலி கேட்டுத் திகைக்கிறார். வீட்டின் பின்புறமாக ஓடிச் சென்று செத்தையில் பாதைபிரித்து அதனூடாக நோட்ட மிடுகிறார்.

கைவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அருகில் ஏதேதோ பொருட்களெல்லாம் இருக்கின்றன. அவள்- சுப்பையா வாத்தியின் மகள் – ஒட்டுச் சுவர்களுக்கு காலால் உதை கொடுத்து ஊன்றி, கைகள் இரண்டையும் பின்புறமாக நீட்டி, முகட்டுக் கப்பில் கோர்த்துப் பிடித்தபடி துடியாய்த் துடிக்கிறாள். நெருப்பில் விழுந்த புழுவின் துடிப்பு!

மீண்டும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு பார்வையை உள்ளே செலுத்துகிறார்.

அன்னம்மா அவளை அணைத்துப் பிடித்தபடி அடி வயிற்றைத் தடவிக்கொடுக்கிறாள். சேலை மறைக்கப்பட வேண்டிய இடத்திலிருந்து விலக்கப்படுகிறது. சுப்பையா வாத்தியார் கண்களை மூடிக் கொண்டு விசும்புகிறார்.

மீண்டும் “வீ…” என்ற அலறல். மரண அமைதி.

நிமிடங்களில் யுகங்கள் கரைகின்றன. சுப்பையா வாத்தியார் மூச்சை இறுக்கிப் பிடித்த வண்ணம் கட்டிலில் குப்புறப்படுத்துக் கிடக்கிறார்.

“சுப்பையா அண்ணை!”

எழுந்து சென்று அவள் கொடுக்கும் சேலைப் பொட்டலத்தைக் கைகளில் வாங்குகிறார். கண்களில் நீர் வரம்புகட்டி அணையுடைத்துப் பாய்கிறது.

ஒரு தலைமுறையின் கோபதாபங்கள் அடுத்த தலைமுறையைப் பாதிக்கும் வரையில் இப்படியான குறைப் பிரசவங்கட்கும் குறைச்சல் இல்லை என்பதை அவரது ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் உறுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

– 1971, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *