கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2021
பார்வையிட்டோர்: 6,352 
 

அழுகை எல்லாம் எப்போதோ தீர்ந்து போயிருந்தது.

ஆக்ஸிஜன் சிலிண்டரின் உபயத்தால் சுவாசித்துக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள் விமலா. திரவ உணவு உள்ளே செலுத்த ஒரு ட்யூப் கழிவை வெளியே எடுக்க ஒரு ட்யூப் மூடியிருந்த அவர் இமைமேல் அமர்ந்த ஈயை புத்தகம் விசிறித் துரத்தினாள். உள்ளே வந்த நர்ஸ் கருவியின் மானிட்டரில் உயர்ந்து தாழ்ந்து – ஓடிக் கொண்டிருந்த அவரின் இதயத் துடிப்பின் கோடுகளை சற்று நேரம் மொனமாக கவனித்தாள்.

“ஏம்மா, டாக்டர் என்ன சொல்றாரு?”

“உங்க தம்பி கூட பேசிட்டிருக்காரு. அவர் வந்து விபரமா சொல்வாருங்க.”

“பரவால்லைம்மா, உனக்குத் தெரிஞ்சதை சொல்லேன். இனிமே அவரு பிழைக்கிறதுக்கு வாய்ப்பே இல்லையா?” நர்ஸ் தயங்கினாள். விமலாவை நேராகப் பார்த்தாள்.

“உங்களுக்கு எத்தனைக் குழந்தைங்கம்மா?”

“ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேரையும் கட்டிக் கொடுத்தாச்சு. ஒருத்தி விருத்தாசலத்தில் இருக்கா. ஒருத்தி டெல்லில் இருக்கா”

“மாப்பிள்ளைங்க வசதியா இருக்காங்களா?” “சொகரியமா இருக்காங்க. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம், நீ என் குடும்பத்தைப் பத்தி விசாரிச்சிட்டிருக்கியேம்மா?”

“தைரியமா இருங்கம்மா. ரெண்டு பொண்ணுங்க இருக்காங்கன்னு சொல்றீங்க. அப்புறம் என்ன கவலை? இங்க ஆறுமாசம் அங்க ஆறுமாசம்னு இருக்கலாமே….” மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க, எதுவும் நம்ம கைல இல்லை .”

நர்ஸ் போய்விட, மீண்டும் ஈயை விரட்டினாள்.

தொண்டையை அடைத்தது. இதைவிட நாசூக்காக சொல்ல முடியாது. அவ்வளவுதானா?

உங்கள் இந்த செயற்கை சுவாசம் நம் தாம்பத்யத்தின் கடைசி இழைகளா? இப்போது நம் இல்லற வாழ்வின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறதா?

முப்பத்து இரண்டு வருடங்களா? நிஜமாகவா? நமக்கு திருமணமாகி அத்தனை வருடங்களா ஆகி விட்டன? நிச்சயதார்த்தத்தின் போது நீங்கள் ரகசியமாக என் தொடையைக் கிள்ளியது நேற்று இல்லையா? அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர்ந்து, “ஏய், விமலா, நிஜமா சொல்லு, உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்று மைசூர்பாகு உடைத்துச்

சாப்பிட்டபடி நீங்கள் கேட்டதும்… அப்போது உதிர்ந்து உங்கள் பட்டுச்சட்டையில் விழுந்த துணுக்கை கறையாகிவிடப் போகிதே என்று அவசரமாக நான் தட்டி விட்டதும் விநாடி விநாடியாக ஞாபகத்தில் ஓடுகிறதே…

“கேக்கறனில்ல? சொல்லு”

“ம்.”

“பொய் சொல்றே. உனக்கு கொஞ்சம் வருத்தம்தான்”

“ஐயோ, இல்லை !”

“உங்கப்பா உனக்கு பேங்க்ல உத்தியோகம் பார்க்கிற மாப்பிள்ளையாதான் ரெண்டு வருஷமா தேடிட்டிருந்தாராமே. நீதானே அப்படிப் பார்கச் சொன்னியாம். கடைசில ஒரு மளிகைக்கடை நடத்தறவன் மாப்பிள்ளையா அமைஞ்சுட்டேன். மனசுல ஏமாற்றம் இருக்காதா?”

“உத்தியோகத்தை விட குணம்தான் முக்கியம்”

“அப்படீன்னு எடுத்துச் சொல்லி உன்னை சமாதானப்படுத்திட்டாங்க. அப்படித்தானே? சரி, போகட்டும். பேங்க் வேலை பார்க்கற் மாப்பிள்ளைதான் அதிகம் சம்பாரிப்பானா?”

“அதுக்காக இல்லை .”

“வேறு எதுக்காக அப்படி ஆசைப்பட்ட?”

“நிறைய லீவு கிடைக்கும். வெளியூர் சுத்தலாம். சாயங்கலாம் சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்புறம் நிறைய நேரம் இருக்கும். சினிமா, டிரமான்னு அடிக்கடி கூட்டிட்டுப் போவாங்க.”

“அதென்னமோ நியாயம்தான். நான் சினிமா பார்த்தே ஆறு மாசம் ஆச்சு. இது சம்பாரிக்கிற வயது. எனக்கு வியாபாரத்துல ஆர்வம் ஜாஸ்தி. நம்ம ஊர்ல கடை போட்டா தெரிஞ்ச மூஞ்சிகளுக்கு கடன் இல்லைன்னு சொல்ல முடியாமல் போயிடும். லாபம் எல்லாம் வசூல் ஆகாத கடன்லேயே கிடக்கும். அதனாலதான் முப்பத்தஞ்சு கிலோ மீட்டர் தள்ளி டவுன்ல பார்த்து கடை பிடிச்சேன். ஆரம்பிச்சு இரண்டு வருஷம் ஆச்சு. தினம் இங்க வீட்லேர்ந்து ஏழரை மணிக்கெல்லாம் புறப்பட்டுடுவேன். பஸ் பிடிச்சுப் போயி கடை திறந்தா, மறுபடி கடை கட்டிட்டு வீட்டுக்கு வர்றப்போ மணி ஒம்போது ஒம்பதரை ஆய்டும்.”

“ஞாயிற்றுக்கிழமை?”

“ஞாயிற்றுக்கிழமை லீவுதான். எங்கடா இவன் இருபத்து நாலு மணி நேரமும் கடையே கதின்னு இருந்துடுவானோன்னு பயந்துட்டியா? (ஞாயிற்றுக்கிழமை பூரா உன்னோட தான் இருப்பேன். சினிமா, டிராமா எங்க வேணாலும் போகலாம். இன்னும் நல்லா உழைச்சு தொழிலை விருத்தி செஞ்சிட்டேன்னு வெச்சுக்க. அப்புறம் ஆளுங்களைப் பார்த்துக்கச் சொல்லிட்டு ஒரு வாரம், பத்து நாள்னு வெளியூர் டூர் எல்லாம் போகலாம். சரியா?”

“சரிங்க ”

“கொஞ்சம் முன்னேறி தலையெடுக்கிற வரைக்கும் பொறுமையா இருக்கணும். நாலு காசு இருந்தாதான் நம்மளை மதிப்பாங்க. புரிஞ்சுதா?”

“புரியுதுங்க.”

அதன் பிறகு கொட்டாவி வரும் வரை மளிகைக் கடையில் உள்ள தொழில் சூத்திரங்களையும், வியாபாரத் தந்திரங்களையும் கண்கள் பளபளக்க எத்தனை ஆர்வமாகப் பேசினீர்கள். முதலிரவில் மளிகைக்கடையின் வரவு செலவு கணக்கைப் பற்றிப் பேசிய முதல் நபர் நீங்களாகத்தான் இருப்பீர்கள். தொழிலில் தான் உங்களுக்கு எத்தனை ஆர்வம்! அந்த ஆர்வத் தீ இந்த முப்பத்து இரண்டு வருடங்களில் ஒருநாள் கூட சுடர் மங்கி நான் பார்த்ததில்லை .

மூன்று மாதங்களுக்கு முன்பு சரக்கு கொள்முதலுக்கு போன இடத்தில் திடீரென்னு மயக்கம் போட்டு விழுந்து, தகவல் வந்து, ஆஸ்பத்திரியில் சேர்த்து …

எல்லா சோதனைகளும் முடித்து உங்கள் மூளையில் கட்டி என்று டாக்டர் சொன்னபோது கூட நீங்கள் வருத்தப்பட்டது உங்கள் உடலுக்காக இல்லையே…..

“என்ன விமலா, டாக்டர் ஏதோ ஆபரேஷன் அது இதுன்றார். மாப்பிள்ளைங்களுக்கும் பண்ணிக்கச் சொல்றாங்க. எனக்கு ஒண்ணும் ஆகாது. புதுசா ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியோட ஏஜென்சி எடுக்கலாம்னு பேச்சுவார்த்தை நடத்திட்டிருக்கேன். இப்பப் போயி….

“இப்பக்கூட உங்களுக்கு வியாபாரத்திலதான் சிந்தனையா? ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. சொந்த வீடு இருக்கு. கடை இருக்கு. பேங்க்ல பணம் இருக்கு. இன்னும் யாருக்காக சம்பாரிக்கணும் நீங்க?”

“இன்னும் எவ்வளவோ கடமைகள் இருக்கு விமலா?”

“என்ன கடமை?”

“கட்டிக் கொடுத்துட்டா சரியாப்போச்சா. ஒண்ணொண்ணுக்கும் செய்ய சாதிச்சுட்டேன்? உழைப்புல சலிப்பே வரக் கூடாது விமலா. போதும்னு எப்ப நினைக்கிறமோ அப்பவே சோம்பேறித்தனம் வந்துடும்” என்றீர்களே….

தொடர்ந்து ஒரு மணிநேரம் நீங்கள் ஓய்வாக உட்கார்ந்திருந்து நான் பார்த்ததேயில்லை. எப்போதும் காலில் சக்கரங்கள்.

கல்யாணமான புதுசில் ஒரு வருடத்திற்கு மட்டும் நேரத்திற்கு வீட்டுக்கு வந்தீர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியே அழைத்துச் சென்றீர்கள். அப்புறம்?

வீட்டுக்கு வர பனிரெண்டு மணி, ஒரு மணி கூட ஆகும். ஞாயிற்றுக்கிழமைகளில் கடை திறக்கப் போய் விடுவீர்கள். சில சமயம் கடைக்கு மாடியில் உள்ள அறையிலேயே தங்கியும் விடுவீர்கள்.

உங்களோடு பேசும் நேரம் குறைந்தபோது, நல்ல வேளையாக குழந்தைகள் பிறந்தார்கள். எனக்கு ஒரு புதிய உலகம் கிடைத்தது. ஏன் இப்படி அசுரத்தனமாக உழைக்கிறீர்கள்?” என்று நான் அலுத்துக் கொள்ளும் போதெல்லாம் குழந்தைகளின் படிப்புச் செலவு, அவர்களின் கல்யாணச் செலவு என்று நியாயமான காரணங்களைச் சொல்லி விடுவீர்கள்.

உங்கள் நேரம் எனக்கு முழுமையாகக் கிடைக்காமல் போகிறதே என்று ஏக்கம் ஏற்படும் போதெல்லாம், நம் குடும்பத்திற்காகத்தானே இப்படி உழைக்கிறார் என்று யோசித்து நானே சமாதானப்படுத்திக் கொண்டுள்ளேன்.

இரண்டு பெண்களுக்கும் கல்யாணமான பிறகு நீங்கள் நிதானப்பட்டு, ஓய்வெடுப்பீர்கள், எப்போதும் என்னோடு இருப்பீர்கள் என்ற நினைத்திருந்தேன்.

ஆனால் இப்போது… நிரந்தரமான ஒரு ஓய்வை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறீர்களே… தாங்க முடியவில்லை.

சிகரெட், மது என்று எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாத உங்கள் உடம்புக்கு ஏன் இப்படி நோய் வந்தது? குடும்பத்திற்காக உழைப்பதைத் தவிர வேறு எதுவுமே தெரியாதே உங்களுக்கு …. யார் செய்த பாவத்திற்கு நீங்கள் இப்படி மூன்று மாதம் ஆஸ்பத்திரியில் ரணகளப்பட்டீர்கள்?

இனி காலையில் யாருடைய முகத்தில் விழிப்பேன்? யாருக்காக சமையல் செய்து டிஃபன்பாக்ஸில் அடைத்துக் கொடுப்பேன்? துவைக்க உங்கள் சட்டை, வேட்டி இருக்கப் போவதில்லை. இரவு சமையல் சூடாக செய்து வைத்துவிட்டுக் காத்திருந்தால் நீங்கள் வரப்போவதில்லை . நாம் இருவரும் சேர்ந்து டி.வி. பார்க்கப்போவதில்லை. கடையில் நடந்த சம்பவங்களை நீங்கள் சுவாரசியமாக சொல்லப் போவதில்லை . ஏதாவது பரியாமல் கேட்டால் ‘அசடு!’ என்று திட்டப் போவதில்லை.

விமலா உதடுகளைக் கடித்து கொண்டாள். பார்வையைத் திருப்பி ஜன்னல் வழியாக விரையும் வாகனங்களைப் பார்த்தாள்.

“அக்கா !”

முந்தானை முனையில் விழிகளை ஒற்றிக்கொண்டு திரும்பிப் பார்த்தாள்.

சண்முகம் கையில் காகிதங்களுடன் நின்றிருந்தான். ஒன்று விட்ட தம்பி.

“டாக்டர் என்னப்பா சொல்றாரு?”

“இப்போ இதயம் இயந்திரத்துலதான் துடிச்சிட்டிருக்காம். பிழைக்க வாய்ப்பே இல்லை என்றார். மூளை இறந்துடுச்சாம். இனிமே இங்கே கண்ட்டினியூ பண்றது அநாவசியச் செலவுன்றார். நீ சரின்னு சொன்னியின்னா அனிதாவுக்கம், நந்தினிக்கும் தகவல் கொடுத்துட்டு ஊருக்கு எடுத்துட்டுப் போக ஏற்பாடு செஞ்சிடுவேன்.”

விமலா கட்டில் பக்கம் திரும்பாமல், “செஞ்சிடு” என்றாள்.

வாடகைக்கு எடுத்த நாற்காலிகள் மடக்கி மினி லாரியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. தற்காலிகப் பந்தல் பிரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஊதுபத்திகள் புகைந்து கொண்டிருக்க, புதுமாலை போடப்பட்ட புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் விமலா.

மாப்பிள்ளைகள் மீண்டும் கருமாதிக்கு வருவதாய் சொல்லி புறப்பட்டுப் போயிருக்க, இரண்டு மகள்களும் எஞ்சிய முக்கிய உறவினர்களை கவனித்து முடித்து விட்டு அம்மா அருகில் வந்து அமர்ந்தார்கள்.

“அம்மா, கருமாதி முடிஞ்சதும் டெல்லி வந்துடும்மா. என்னோடயே இருந்துடு” என்றாள் அனிதா.

அம்மாவுக்கு குளிர் ஒத்துக்காது. உன்னோட நிரந்தரமா இருக்க முடியாது. என்னோட இருந்துடட்டும்” என்றாள் நந்தினி . “நான் எங்கயும் வரலை. இங்க தான், இதே வீட்ல தான் இருக்கப் போறேன்” என்றாள் விமலா.

“என்னம்மா பேசறே? இங்க இனிமே யார் இருக்கா உனக்கு?”

“அவரோட ஞாபகங்கள் இருக்கு”

வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள் விமலா. ஆஸ்பத்திரியில் அவரை கவனித்துக் கொண்ட நர்ஸ்! புடவையில் இருந்ததால் உடனே புரியவில்லை . நர்ஸ் துக்கம் விசாரிக்கக் கூட வருவாளா?

அவள் வந்து விமலா அருகில் அமர்ந்தாள்.

சற்று நேரம் ஆறுதல் சொல்லிவிட்டு, கொடுக்கப்பட்ட காபியைக் குடித்துவிட்டு, “உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணுமே, அந்த ரூமுக்குப் போயிடலாமா?” என்றாள்.

விமலா புரியாமல் பார்த்து, அவளோடு நடந்து தனியறைக்கு வந்ததும், “என்ன பேசணும்?” என்றாள்.

“பதினைஞ்சு நாளைக்கு முன்னாடி உங்க கணவர் கொஞ்சம் தெம்பா இருந்தப்போ என்கிட்ட ஒரு கவர் கொடுத்தார். அவர் பிழைச்சிட்டா அவர்கிட்டேயே திரும்ப ஒப்படைச்சிடணுமனும், இறந்துட்டா உங்ககிட்ட ஒப்படைக்கணும்னு சொல்லியிருந்தார். அதை ஒப்படைக்கத்தான் வந்தேன். இந்தாங்க”

நர்ஸ் கொடுத்த கவரை நடுங்கும் விரல்களால் வாங்கினாள். நர்ஸ் போனதும் கிழித்து உள்ளிருந்த கடிதத்தைப் படித்தாள்.

‘அன்பு மனைவி விமலாவுக்கு ….’

இறந்த பிறகு என் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் என் மனதில் பாரமாக அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெரிய ரகசியத்தை நான் இறக்கி வைத்தாக வேண்டும்.

என்னை மன்னித்து விடு விமலா. நான் உன்னை ஏமாற்றி விட்டேன். உனக்கு துரோகம் செய்துவிட்டேன். நம் திருமணத்திற்கு முன்பே டவுனில் டீச்சராக வேலை பார்க்கும் ரோஸியை நேசித்தேன். மதம் விட்டு மதம் திருமணம் செய்ய அப்பா சம்மதிக்கவில்லை .

அவசரமாக உன்னை எனக்கு கட்டி வைக்க முயன்றார். இந்தத் திருமணத்திற்கு நான் சம்மதிக்கவில்லை என்றால் விஷம் சாப்பிட்டு விடுவேன் என்று மிரட்டினார். வேறு வழியில்லாமல் உன்னை திருமணம் செய்து கொண்டேன்.

நான் டவுனில் கடை ஆரம்பித்ததே ரோஸியை அடிக்கடி சந்திக்கத்தான். அவளை என்னால் மறக்க முடியவில்லை . பிரியவும் முடியவில்லை . அவளாலும்தான். எனவே டவுனில் ஒரு வீடு பிடித்து நாங்கள் ரகசியமாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்தோம்.

இன்று வரை இந்த ரகசிய வாழ்க்கை தொடர்கிறது. அவளுக்கு ஒரு பையன், இரண்டு பெண்கள். பையன் படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான். பெண்கள் கல்யாண வயதில் இருக்கிறார்கள்.

விமலா, என்னை நீ மன்னிப்பாயா?

ஊடல் நலம் மோசமானதும் நமது வக்கீலை அழைத்து உயில் எழுதிவிட்டேன். அதில் கடையை என் பையன் பெயருக்கும், டவுனில் என் பெயரில் வாங்கின கிரவுண்டையும், பேங்க் கணக்குகளையும்
எழுதியிருக்கிறேன்.

வேண்டா வெறுப்பாக உன்னை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் உனக்கு நான் எந்தக் குறையும் வைத்ததில்லை . உடைகள், நகைகள், சாப்பாடு, இரண்டு குழந்தைகள் என்று நிறைவாக வைத்திருந்தேன்.

என்னைப் புரிந்து கொண்டு மன்னிப்பாய் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு
உன் கணவன்

விமலா தொய்ந்து உட்கார்ந்தாள்.

கடவுளே! முப்பத்திரண்டு வருடங்களாக நான் ஏமாளியாக இருந்திருக்கிறேனே? ஒரு நாளில்லை. இரண்டு நாளில்லை. முப்பத்திரண்டு வருஷங்கள்!

இத்தனை வருஷமும் ஒரு நாடகக் கணவனாகவே வாழ்ந்தீர்களா? உழைக்கிறேன் பேர்வழி என்ற அங்கே அந்த வீட்டில் வாழ்ந்தீர்களா?

எப்போதாவது அபூர்வமாக அன்பாகப் பேசின வார்த்தைகள் கூட ஒத்திகை பார்க்கப்பட்ட வசனங்களா?

எனக்கு நீங்கள் கொடுத்தது வாழ்க்கை அல்ல; ஒரு அகதிக்கு கொடுக்கப்படும் அடைக்கலம்!

அனிதா உள்ளே வந்தாள், “என்னாச்சும்மா… உனக்கு ஒண்ணும் இல்லையே? ஏன்மா இப்படி உக்காந்திருக்கே? வக்கீல் வந்திருக்காரும்மா, வா”, என்றாள்.

விமலா கூடத்திற்கு வந்தாள்.

வக்கீல் வணக்கம் சொல்லிவிட்டு, “உங்க வீட்டுக்காரர் உயில் எழுதியிருக்காரும்மா” என்றார்.

“தெரியும். எனக்கு இந்த வீடு தேவையில்லை. அதையும் அங்கேயே கொடுத்திடுங்க. எங்க கையெழுத்துப் போடணுமோ போட்டுடறேன்.” என்றாள்.

“அம்மா, என்னாச்சு? யாருக்கு கொடுக்கச் சொல்றே?” என்றாள் நந்தினி. விமலா அமைதியா அந்தக் கடிதத்தை நீட்டினாள்.

நந்தினியும், அனிதாவும் ஒரு சேரப் படித்து அதிர்ந்தார்கள்.

“உங்க கோபம் ரொம்ப சரிதான். அதுக்காக ஒரு சொத்தை எதுக்காக இழக்கணும்?” என்றார் வக்கீல்

“அவர் செஞ்ச கொடுமைக்கு அபராதமா இந்தச் சொத்தை வசூல் பண்ணிக்கச் சொல்றீங்களா? என்னோட முப்பத்திரண்டு வருஷ வாழ்க்கையை இழந்திருக்கேன் ஸார் இந்த மனுஷன்கிட்டே சொத்து என்ன? ஆனா இந்த மனுஷனுக்காக ஒரு விஷயத்தை இழக்க நான் தயாராக இல்லை .”

விமலா விடுவிடுவென்று எழுந்து சாமி மடத்திற்குச் சென்றாள். குங்குமம் எடுத்து தன் வெற்று நெற்றியில் வைத்துக் கொண்டாள். பூச்சரம் எடுத்துத் தன் கூந்தலில் செருகிக் கொண்டாள்.

மறுபடி வக்கீலிடம் வந்தாள்.

“இந்த வீட்ல இருக்கிற பாத்திரம், பண்டம் எல்லாம் அந்தாள் பணத்தில வாங்கினது. எதுவும் எனக்கு வேணாம். அந்தத் தையல் மிஷின் எங்கப்பா எனக்குக் கொடுத்தது. அது மட்டும் எனக்குப் போதும். எங்கே கையெழுத்துப் போடணும்?” என்றாள் அதிகாரமாக.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *