இதுதான் பாசம் என்பதா…?

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 62,407 
 
 

அவள் அவசரமாக ஓடி வந்து உள்ளே ஏறியபோது, ரயில் மெல்ல நகரத் தொடங்கியிருந்தது. கையில் கொண்டு வந்த சூட்கேஸை மேலே தூக்கி வைக்க முடியாமல் அவளுக்கு மூச்சு வாங்கியது.

பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அவனிடம் ‘எக்ஸ்க்யூஸ் மீ… இதைக் கொஞ்சம் மேலே வைத்து விடுகிறீர்களா?’ என்றாள்.
Ithuthanpasam2
அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

அவள் ஒரு கணம் அதிர்ந்து போனாள்.

அவனை நேருக்கு நேர் சந்திப்போம் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண்களில் சட்டென ஈரம் படர்ந்தது. தலை லேசாக வலிப்பது போலிருந்தது.

‘அன்று அவள் எத்தனை இன்பக் கனவுகளோடு அவனின் பதிலுக்காகக் காத்திருந்தாள்… ஏன் அவன் அப்படி நடந்து கொண்டான்?’
அவன் அவளிடம் சூட்கேஸை வாங்கி உயரே வைத்துவிட்டு கேட்டான்.. ‘தனியாகவா போகிறீர்கள்?’

அவள் ‘ஆம்’ என்று தலையசைத்துவிட்டு ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள். பின் என்ன நினைத்தாளோ, ‘ஆசிரியர்களுக்கான விசேஷப் பயிற்சி முகாம் ஐந்து நாட்கள் இருக்கின்றன. அதற்குத்தான் போகின்றேன்.’

‘அப்படியா தட்ஸ் குட,; நானும் அதற்குத்தான் போகிறேன்’ என்றவன், சற்று இடைவெளிவிட்டு, ‘உங்ககிட்ட நான் கொஞ்சம் பர்சனலா பேசலாமா?’ என்றான்.

‘என்ன?’ என்பது போல அவள் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

‘உங்கள் திருமணத்திற்கு எனக்கும் அழைப்பிதழ் உண்டா?’

வியப்பும், அதிர்;ச்சியும் ஒன்றாகச் சேர அவள் புருவம் உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

‘இவன் என்ன சொல்கிறான்? அடித்துவிட்டு இதமாகத் தடவுகிறானா? இல்லை வேண்டுமென்றே ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை ஊசியால் குத்திக் கிழித்து வேடிக்கை பார்க்கிறானா? என் வேதனையில் இவனுக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம்.’

அவன் அவளின் பதிலுக்குக் காத்திராமல் தொடர்ந்தான்.

‘உங்களைப் பெண் பார்த்துவிட்டு வந்தபின் வேறு யாரையும் பார்க்க எனக்கு மனசு வரலை. உங்களைப் பார்த்த அன்றே நீங்கதான் எனக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை என்று நினைத்திருந்தேன். கற்பனையில்கூட உங்களோடு வாழ்ந்து பார்த்திருக்கின்றேன். ‘இல்லை’ என்றானதும் அந்த இழப்பை ஏனோ என்னால் தாங்கிக்க முடியலே!’

அவன் சொல்லி முடித்ததும், இருவரிடையேயும் சில விநாடி மௌனம் நிலவியது. அவள் மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்…

‘என் திருமணத்துக்கு உங்களுக்கு அழைப்பு உண்டா என்று கேட்கிறீர்கள், பரவாயில்லை, எனக்கு உங்க மேலே எந்தக் கோபமும் இல்லை. என்னைப் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லித்தான் நிராகரித்தார்கள். ஆனால், நீங்களோ எந்தக் காரணமும் சொல்லாமலே ‘பெண்ணைப் பிடிக்கலை’ என்று சொல்லி அனுப்பிச்சிங்க. மனசு உடைஞ்சு போயிடுச்சு. ஏன் இப்படிச் செஞ்சீங்க?’ வார்த்தைகள் வாய்க்குள் சிக்கிக் கொள்ள, அவள் அழுதுவிடுவாள் போல இருந்தது.

குனிந்த தலை நிமிர்ந்தபோது, இயலாமையின் வெளிப்பாடாய், அவள் கண்களில் இருந்து முத்துக்கள் உதிர்ந்தன.

‘என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? முறைப்பையனை விரும்புவதாகவும் உங்களை நிராகரிக்கும்படியும் நீங்கள்தானே கடிதத்தில் கேட்டிருந்தீர்கள்?’

‘கடிதமா.. நான் போட்டேனா..? உங்களுக்கா?’

அவள் திகைப்பதைப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘காரணம் என்னவென்று யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கடிதத்தில் எழுதி இருந்தீர்கள். உங்களுக்கு இஷ்டமில்லை என்று தெரிந்தபின் நான் வேறு என்ன முடிவு எடுக்க முடியும்?’

அவன் ப்ரீப்கேஸைத் திறந்து கடிதத்தை எடுத்துக் கொடுத்தான்.
அவளால் நம்பமுடியவில்லை. அவளது கையெழுத்தைப் போட்டு யாரோ வேண்டுமென்றே சதி செய்திருக்கிறார்கள்.

‘இல்லை.. இது என் கையெழுத்தில்லை!’ என்று அவள் அவசரமாக மறுத்தாள்.

அடுத்த கணம், தான் ஏதாவது அவசரப்பட்டுச் சொல்லி விட்டோமோ என்று கூச்சப்பட்டாள். முகம் சிவக்க அவனை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்ப்பதற்காக ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.

அவளது சிந்தனை எல்லாம் கடிதத்தைச் சுற்றியே வந்தன. வெளியே மரங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஓடி மறைந்து கொண்டிருந்தன.

அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது.

Ithuthanpasamஎதுவுமே பேசாமல் இருவரும் வெளியே நடந்து வந்தார்கள். எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பதை இருவரும் புரிந்து கொண்டார்கள். அவனுக்கு மனதில் இருந்த பெரிய சுமை குறைந்தது போல இருந்தது.

‘மீண்டும் சந்திப்போம்’ என்று சொல்லி இருவரும் பிரிந்து போனார்கள்.

இரண்டு வாரங்களுக்குப் பின் ஸ்ரீராமின் உறவினர் ஒருவர் சீதாவின் வீடு தேடி வந்தார்.

‘இந்தக் காலத்துப் பையன்களே இப்படித்தான். வேண்டாம்.. பிடிக்கலை என்பாங்க. அப்புறம், பிடிச்சிருக்கு என்பாங்க. புரிஞ்சுக்கிறதே ரொம்பக் கஷ்டம்.’

‘எனக்குப் புரியலையே.. என்ன சொல்றீங்க..?’ என்றார் சீதாவின் அப்பா.

‘பையனுக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்காம். எப்போ முகூர்த்தம் வெச்சுக்கலாம் என்று கேட்கச் சொன்னாங்க?’

‘அப்படியா?’ என்றார் அப்பா.

‘பயப்படாதீங்க பையன் உங்ககிட்ட இருந்து சீர், செனம்னு எதையும் எதிர்பார்கலை. உங்க வசதிக்கேற்ப செய்யுங்க!’

‘எதற்கும் பெண்ணுகிட்ட கேட்டுக்கிட்டு சம்மதம் சொல்கிறேனே’ என்றபடி உள்ளே குரல் கொடுத்தார்.

‘என்னப்பா கூப்பிட்டீங்களா?’

‘ஆமாம்மா.. உன்னை அவங்களுக்குப் பிடிச்சிருக்காம். சம்மதம் சொல்லிட்டாங்க, உன்னோட விருப்பம் என்னம்மா?’

‘என்னப்பா அப்படிக் கேட்கிறீங்க.. உங்க விருப்பம்தான் என்னோட விருப்பம்’

‘அப்போ சம்மதம் சொல்லிடட்டா?’

‘நான் சம்மதம் என்று சொன்னேனா?’

‘என்னம்மா குழப்பறே..’

‘ஆமாப்பா.. எனக்கு இந்தக் கல்யாணத்திலே இஷ்டமில்லை! எனக்கு இப்போ கல்யாணமே வேண்டாம்!’ அவள் முடிவாகச் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

எதிர்பாராத அவளது முடிவால், வந்தவர் ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்.

‘ஏனம்மா இப்படிச் செய்தாய்.. எல்லாம் நல்லபடியாய் நடக்கும்போது கடைசியிலே குழப்பிட்டியே!’

‘இல்லையப்பா.. அம்மா இல்லாத குறை தெரியாம எங்களை இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு நீங்க வளர்த்தீங்க. இப்போ என்னுடைய உழைப்பை நம்பித்தான் இந்தக் குடும்பமே இருக்கு. காலேஜில் படிக்கும் தம்பி, வயதுக்கு வந்த தங்கை இவங்களை எல்லாம் அம்போனு நடுவழியிலே விட்டுப்போக எனக்கு மனசு கேட்கலைப்பா! இந்தக் குடும்பத்துக்காக நீங்க இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு தனியாகச் சுமந்த சுமையை எனக்கும் கொஞ்சக் காலம் சுமந்து பார்க்கணும் போல இருக்கு. தம்பி படித்து முடித்து இந்தக் குடும்பப் பொறுப்பை எடுக்கும் வரைக்குமாவது நான் உங்களோட இருக்கணும். அதனாலேதான் இஷ்டமில்லை என்று சொன்னேன்!’

பாசம் என்பது என்ன என்று புரிந்த போது அவருக்கு அழுகையே வந்தது. மனதுக்குள் என்னவோ உறுத்த, அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு பதில் சொல்ல முடியாமல் குழந்தை போல் விக்கி விக்கி அழுதார்.

அவள் மெதுவாக அவருக்கு ஆறுதல் கூறி, அமைதிப் படுத்தி விட்டு உள்ளே போய் அந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் பார்த்தாள். அந்தக் கையெழுத்து..

‘அப்பா! நீங்களா அப்பா இப்படிச் செய்தீங்க? என்னுடைய பிரிவால், என்னையே நம்பி இருக்கும் இந்தக் குடும்பம் நடுத்தெருவிலே நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று பயந்துட்டீங்களாப்பா? என்னோட உணர்ச்சிகளை எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு என்னால் பொறுத்துக்க முடியும். ஆனால், இந்தக் குடும்பத்தால் வயிற்றுப் பசியை பொறுக்க முடியுமா? இவங்க என்னோடு உழைப்பை நம்பி இருக்கும் வரை நான் கல்யாணமே செய்துக்கப் போறதில்லை! பயப்படதீங்க அப்பா!’

கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தை கிழித்துப் போட்டாள். மனதில் இருந்த சுமை குறைந்தது போல இருந்தது!

நன்றி: ஆனந்தவிகடன்.
………………………………………………….

இந்த அப்பா ஒரு குற்றவாளிதான்!

ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும் இந்த அப்பா ஒரு குற்றவாளிதான். பெற்ற மகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத, அவற்றுக்கு மரியாதை தராத தந்தை. குறைந்தபட்சம் தனது இயலாமையை மகளிடம் ஒப்புக் கொண்டு விளக்குகிற நேர்மைகூட இல்லாதவர். அவளது திருமண விஷயத்தில் இவர் நடந்து கொண்ட விதம் ரொம்பவும் கிழ்த்தரமானது. இந்தக் கதையைப் படித்த யாருக்கும் அந்தப் பெண்ணின் மீது வருத்தம்தான் ஏற்படும்.

டி.ஜி. ஸ்ரீராமுலு – சென்னை.

பாவம், இந்த அப்பா!

இந்த அப்பாவும் மனிதர்தான். சொந்த பந்தங்களைக் கூப்பிட்டு மகளை மணக்கோலத்தில் காட்ட இவருக்கும் ஆசை இருக்கும்தான். ஆனால் என்ன பண்றது? வெளியில் சொல்ல முடியாத இயலாமை இவரைக் கட்டிப் போட்டிருக்கிறது. தன்னைப்பற்றிச் சிந்திக்காமல் தன் குடும்பத்திற்காக இவர் எடுத்த அந்த முடிவை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை. இவர் எழுத நேர்கின்ற அந்தக் கடிதம்.. அதை எழுதியதற்காக இவர் படக்கூடிய மனவேதனை.. பாவம், இந்த அப்பா!

எம். அமிர்தகல்யாணி – திருச்சி

Print Friendly, PDF & Email

2 thoughts on “இதுதான் பாசம் என்பதா…?

  1. ‘இதுதான் பாசம் என்பதா’ என்ற சிறுகதையில், ஓ ஹென்றி அவர்களின் பாணியில்,சிறுகதையின் கடைசீ பத்தியில் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு ட்விஸ்ட் கொடுத்து அசத்திவிட்டார் ஆசிரியர் குரு அரவிந்தன்.
    இப்படிப்பட்ட தந்தைமார்களும் இந்தச் சமூகத்தில் உண்டு என்பதை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
    மனதில் நிற்கும் நல்லதொரு சிறுகதை. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    ஜூனியர் தேஜ்

  2. அவர் அப்பா இல்லை. மோசமான குணம் படைத்தவர்.தன் மகள் முதிர்கன்னியாவதை எதிர் நோக்கும் மிருக குணம் கொண்டவர். மகளிடம் மாப்பிள்ளை வீட்டாரிடமும் கலந்து பேசி கல்யாணத்தை நடத்தி இருந்தால் எந்த குறையும் ஏற்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *