இதயம் இரும்போ!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,100 
 
 

சீறிச் சுழன்றடித்தது பேய் மழை. பளீர், பளீர் என்று வானத்தில் கோடிழுக்கும் மின்னல்கள், அண்டமே அதிர்கிறாற் போல இடிச் சத்தம்! நள்ளிரவில், கொட்டும் மழையில், சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு விருட் விருட்டென்று ஓட்டமும் நடையுமாக ஓர் இளம்பெண் செல்வதென்றால்..? எவ்வளவு பெரிய பைத்தியக்காரி நான்?

“போடீ போ! என்னிக்குமே திரும்பி வராதே! இந்த வீட்டில் அடியெடுத்து வைக்காதே! என்னைப் பொறுத்தவரை என் வயித்துல பொண்ணே பிறக்கலைன்னு நினைச்சுக்கறேன்…போ!” என்று ஆங்காரமாய்க் கூச்சலிட்டு, ஒரு வருடத்துக்கு முன் வீட்டை விட்டு விரட்டினாளே அம்மா, அவளைத் தேடி இந்த நேரங்கெட்ட நேரத்தில், சோவென்று அலறிக் கொண்டு கொட்டுகிற மழையில் தன்னந்தனியாக ஓடுகிறேன். “அம்மா! உன் மகளை மன்னித்து விடம்மா. இந்த நேரத்தில் நான் அநாதை. உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியில்லையம்மா. என்னைக் கைவிட்டு விடாதேம்மா!” என்று கெஞ்சிக் கதறப் போகிறேன்.

அம்மாவின் இரும்பு இதயம் என் கதறலுக்குச் செவி சாய்க்குமா?

மழை வலுத்தது. பாதையில் முழங்கால் அளவு நீர். நடப்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. கண்ணில் பெருகிய நீர், மழை நீருடன் சங்கமம் ஆக, தள்ளாடியபடியே என் இல்லையில்லை, அம்மாவின் வீட்டை நெருங்கினேன். பங்களா இருண்டு கிடந்தது, என் இதயத்தைப் போல.

***

“பார்வதி அம்மாளா?… ஐயோ!” என்று அந்தப் பகுதியே அஞ்சி நடுங்கும்படியான கண்டிப்புக்காரப் பேர்வழி என் தாய்.

அவளுடைய கனத்த சரீரமும், சோடா பாட்டில் அடிக் கண்ணாடிக்கப்பால் அனல் துண்டங்களாய் மின்னி, கனல் கக்கும் விழிகளும், எட்டு ஊரை அடி பணிய வைக்கும் கணீர்க் குரலும்…அப்பப்பா! அம்மா ஒரு விசித்திரமான பிறவி. யாரையும் மதிக்க மாட்டாள். எதற்கும் கலங்க மாட்டாள். அப்படி ஒரு சுபாவம்! வேலைக்காரி முனியம்மா, தோட்டக்கார வேலன், பால்கார செல்லையா போன்றவர்கள் அம்மாவைக் கண்டாலே நடுங்குவார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். எங்கள் டவுன் ஷிப் ஏரியாவில் வாயாடி, வம்பிகள் என்று பெயரெடுத்த மாதர் சங்கத் தலைவி ரங்கம், உப தலைவி மீனா போன்றவர்களே அம்மாவின் முன்னால் புலி முன் வெள்ளாட்டுக் குட்டிகளாய் பம்முவதைப் பார்க்கையில் எனக்குச் சிரிப்பாய் வரும். அம்மாவின் கனத்த உடலைக் கண்டு பயமா?அவளின் கம்பீரமான குரலைக் கேட்டு அச்சமா? அல்லது அம்மா பெரிய பணக்காரி என்ற தயக்கம் அவர்களை ஆட்டுவிக்கிறதா?

ஊர் கிடக்கட்டும். எங்கள் குடும்பம் நிர்வகிக்கும் டெக்°டைல்° தொழிற்சாலையை நிர்வகிக்கும் அண்ணா விந்தன் அம்மாவின் முகம் பார்த்துக்கூட இதுவரை பேசிய தில்லையே, பயமா இல்லை மரியாதையா? எப்படி வேண்டு மானாலும் இருக்கட்டும். அம்மா ஓர் இரும்பு இதயம் கொண்ட மனுஷி என்பதில் மட்டும் சந்தேகமேயில்லை. மாரடைப்பு என்று அப்பா திடீரென்று செத்துப் போனாரே, அப்போதாவது அவள் அசைந்து கொடுத்திருப்பாளா? ஊஹும். கண்ணில் இரு துளிக் கண்ணீர். வாயைத் திறந்து அழவேயிலை. சிலை போல அமர்ந்து கணவர் மரண அமைதியுடன் துயில் கொண்டிருப்பதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததுடன் சரி, ஊரெல்லாம் பார்வதி கல் நெஞ்சுக்காரி, இரும்பு இதயம் படைத்தவள் என்று தூற்றினார்கள். கொஞ்சமேனும் கவலைப் பட்டிருப்பாளா?…

இப்படிப்பட்டவளிடம் என் இதயத்து உணர்ச்சிகளை எப்படி எடுத்துக் கூறப் போகிறேன்? அன்று… அந்தக் கடைசி நாளில்.. ஓ! அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லையே! *

* *

மடை திறந்த வெள்ளமா? வானம் திறந்த மழையா?..புயலோடு புறப்பட்ட பூகம்பமா? – இவற்றில் நான் எது?

அம்மா கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மறுபடியும் அணிந்து கொண்டு அமைதியாக ஏறிட்டுப் பார்த்தாள். இறுகிக் கற்சிலை போல் தோற்றமளித்தது அவள் முகம். “என்னடீ சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விட்டாயா, இன்னும் மிச்சம் வெச்சிருக்கியா?” அவள் நிதானமாகக் கேட்டாள்.

“அம்மா!..” தயங்கினேன். “என்னை மன்னிச்சுடும்மா. உன் மகள் என்னிக்குமே தப்பே செய்ய மாட்டாள் நம்பும்மா. என்னையறியாமல் மனதைப் பறி கொடுத்துட்டேன். அவர் ரொம்ப நல்லவர்மா. பெரிய மனது வெச்சு எங்களைச் சேர்த்து வையம்மா!”

சத்தமாகச் சிரித்தாள் அம்மா. “காதலாம், கத்தரிக்காயாம்! நீ என் மகள்னு சொல்றதுக்கே நா கூசுதுடீ! என்னோட கௌரவம், குலப் பெருமை, மதிப்பு எல்லாத்தையும் ஒரே நொடியிலே குலைச்சுடறேன்னு சொல்லிக்கிட்டு வந்து நிக்கிறியே, அடிப்பாவி! யாருடீ அவன்? உன் மனசை மயக்கின அந்த மன்மதன்? அதை நான் தெரிஞ்சுக்கலாமா?”

அனல் கக்கும் விழிகளுடன் கனல் பறக்கும் வார்த்தைகளால் அவள் சாடுகிறாள். நான் மரமாய் நிற்கிறேன்.

அண்ணா தன்னுடைய கார் பிரேக் டவுன் என்று டாக்ஸியில் வந்திறங்கி விடுவெடென்று உள்ளே வந்தான். அவன் முகத்தில் மகிழ்ச்சி பூத்திருந்தது. “அம்மா! புதுச்சேரிக்காரங்களுக்கு நம்ம ஷிவானியைப் பிடிச்சுப் போச்சாம். என்கேஜ்மெண்டுக்கு நாள் பார்க்க வேண்டியதுதான்னு அருணாசலம் மாமா சொல்லிட்டார்… அவனை மேலே பேச விடாமல் கை நீட்டித் தடுத்தாள் அம்மா.”

“விந்தன், நிறுத்துடா! உன் தங்கை என்ன சொல்றா தெரியுமோ? யாரோ ஊர் பேர் தெரியாத ஒர்த்தனை லவ் பண்றாளாம்.! நீ என்னடான்னா..?”

“திடுக்கிட்டு நின்றான் அண்ணா. ஷிவானி!, அம்மா சொல்றதெல்லாம் உண்மையா அம்மா?”

“ஆமாம் அண்ணா! ஜாதி, மதம் பணம், ஏற்றத் தாழ்வு இவைகளுக்கு அப்பாற்பட்டதுதான் காதல். பரிசுத்தமான தவமுனிவர்கள் தங்கள் வேள்விச் சாலையில் புனிதமாய் போற்றிக் காக்கும் தூய அக்னியைப் போன்றதுதான் இரு உள்ளங்களின் சேர்க்கையும் – இப்படியெல்லாம் நீ எழுதுகிற கதைகளில் குறிப்பிட்டு வருகிறாயே, அது உன் சொந்தத் தங்கையின் வாழ்க்கையில் ஏற்பட்டதும் ஏன் அண்ணா இபடிச் சிலையாக நிற்கிறாய்? ஊருக்கு மட்டும்தான் உபதேசமா? சொல் அண்ணா!” அவன் சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாகக் கேட்டேன்.

“அடி ஷிவானி! நீ என்ன சொன்னாலும் சரி எனக்குப் பிடிக்காத ஒரு காரியத்துக்கு என் சம்மதம் ஒருபோதும் கிடைக்காது. அவனை மறந்துடு. அருணாசலம் மாமா பார்த்திருக்கும் பையன் யூ.எ°.ல சாஃப்ட்வேர்ல இருக்கான். மாசம் ஆறு லட்சம் ரூபா சம்பளம்… சொத்து பத்தெல்லாம் ஏராளம். இதை விட்டால் நல்ல சம்பந்தம் கிடைக்குமா?”

“அம்மா! நீயும் ஒரு பெண்தானே? ஒரு பெண்ணுக்குப் பணமே எல்லாத்தையும் நிறைவு செய்துடும்னு நம்பறியா?” நிதானமாகக் கேட்டேன்.

“அப்படின்னா..?”

“ஆமாம் அம்மா. நீ எப்படி உறுதியான மனம் படைத்தவளோ, உன் பெண்ணான எனக்கு மட்டும் அந்த உறுதி இல்லாமல் போகும்னு நீ எப்படியம்மா நினைச்சே? வாழ்ந்தால் அவரோடுதான் வாழுவேன். அவர் ஏழைதான். லட்சக்கணக்கில் சம்பாத்தியம் இல்லாதவராக, கோடிக் கணக்கில் சொத்து பத்துக்கள் இல்லாதவராக இருக்கலாம். ஒருநாள் சாலையில் அடிபட்டுக் கிடந்த மூதாட்டியைத் தன் டாக்ஸியில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றிய அவருடைய பரோபகார மனம் என்னை இளக்கி விட்டது. அவர் ஏழைதான். அவர் சம்பாதிக்கும் குறைவான வருமானத்தில் வெறும் கஞ்சி மட்டுமே குடித்தாலும் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ என்னால் முடியும்…”

மேலே பேசுமுன் யாரோ புது நபரின் குரல் குறுக்கிட்டது,.

“ஸார்! டாக்ஸி வெகு நேரமா நிக்குது. எனக்கு பணம் தந்து அனுப்பி விட்டால் தேவலை…” என்று டாக்ஸி டிரைவர் வாசலில் இருந்து சத்தமாகக் குரல் கொடுத்தார்.

“அந்தக் குரல்…?”

புல்லரித்தது எனக்கு. விடுவிடென்று வெளியே ஓடினேன். “பா°கர், நீங்களா? எனக்கு வார்த்தைகள் தொண்டையை அடைத்தன. தெய்வம்தான் என் அண்ணனை என் இதயச் செல்வரின் டாக்ஸியில் ஏற்றிக் கொணர்ந்ததோ?”

“வாங்க பா°கர் உள்ளே! இது எங்க வீடுதான். சரியான சமயத்தில்தான் வந்திருக்கீங்க..”

அம்மாவின் முகத்தில் ஈயாடவில்லை. அண்ணன் பேயறை பட்டவன் போல் நின்றான். ஒரு டாக்ஸி டிரைவரையா போயும் போயும் ஒரு டெக்°டைல் மில் உரிமையாளர் பெண்ணான நீ காதலித்தாய்? என்ற குறிப்பு அவன் முகத்தில் தெரிந்தது. வேறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டான் அண்ணா.

“என்னம்மா பேசாம நிக்கிறே? இவர்தான் உன் மாப்பிள்ளை. பி.ஏ.படிச்சிருக்கார். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்வரை, எந்தத் தொழிலும் கேவலம் இல்லைன்னு டாக்ஸி ஓட்டும் வேலை பார்க்கிறார். அம்மா, உன் கால்ல விழுந்து கேட்டுக்கறேன். தயவுசெஞ்சு எங்களைச் சேர்த்து வைக்க மாட்டேன்னு மாத்திரம் சொல்லிடாதேம்மா!”

என் கெஞ்சலோ, கண்ணீரோ அவள் இரும்பு இதயத்தைச் சிறிது கூட அசைத்ததாகத் தெரியவில்லை.

“ஏண்டி, கடைசியா உன் முடிவுதான் என்ன? இத்தனை காலம் உன்னைப் பெற்று வளர்த்தவளை மீறி நடக்க முடிவு செய்துட்டாயான்னு எனக்கு இப்பத் தெரியணும்..”

ஒரு நிமிடம் அமைதி. மயான அமைதி.

“அம்மா, என்னை மன்னிச்சுடும்மா! தெரியாமல் தவறு பண்ணிவிட்டேன். நீ சொல்கிற மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்ற பதிலை அவள் என்னிடம் எதிர்பார்த்தாள். ஆனால், உறுதியாக – முடிந்த முடிவாக என் வார்த்தைகள் வெளிவந்தன.

“என்னை மன்னிச்சுடும்மா! அவரை மறப்பதோ, அவரைப் பிரிவதோ என்னால் முடியாத காரியம்!”

“போடீ வெளீயே!” ஆங்காரமாகக் கத்தினாள் அம்மா.

கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் தள்ளுவாள். அந்த ஆவேசம் அவள் கண்களில் தெரிந்தது. அவள் காலில் விழுந்து வணங்கி னேன். கழுத்து, காது, கைகளில் இருந்த தங்க நகைகளைக் கழற்றி அம்மா முன் பணிவாக வைத்தேன். “போய் வருகிறேன் அம்மா, அண்ணா!” என்றேன். “போடீ! என்னிக்குமே திரும்பி வராதே! இந்த வீட்டுப் படியை மிதிக்காதே! என் வயித்துல பெண்ணே பிறக்கலைன்னு நினைச்சுக்கறேன்..போ!” என்று கத்திவிட்டு, சோபாவில் நிம்மதியாகச் சாய்ந்து கொண்டாள் அம்மா.

நீர் துளிர்த்த விழிகளுடன் பா°கரின் கரம் பிடித்து நடந்தேன். இனி அவருடன் தொடர வேண்டிய நிழல்தானே நான்?

டாக்ஸியில் ஏறும்போது மாடி வராந்தாவில் அண்ணாவின் பனித்த விழிகள் தெரிந்தன. என்மேல் உயிரையே வைத்திருந்தவன் அண்ணா. ஈவிரக்கமற்ற பாவி நான். யாரையுமே பொருட்படுத்தாமல் சுக வாழ்வைத் தேடிப் போகிறேன். நான் நாடிச் செல்வ்கது சுக வாழ்வுதானா?

திருநீர்மலையில் இருவரும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் இல்லறம் இனிதே துவங்கியது. தாயின் நினைவு என்னை வருந்த வைக்கும் சமயங்களில், போடீ போ! என்னிக்குமே திரும்பி வராதே! என்ற வார்த்தைகள் நினைவுக்கு வரும். கண்ணீர் வடித்து மனசுக்குள் கதறுவேன். அம்மா, பெற்ற மனம் பித்து என்பார்கள். இங்கே பெற்ற உன் மனம் கல்லாக இருக்கிறதே! நீ இரும்பு அம்மா. உன்னால் உன் மகளைப் பார்க்காமல் இருக்க முடியும் ஆனால், என்னால் உன்னைப் பாராமல் இருக்க முடியவில்லையே?

மனம் கலங்கும் நேரங்களில் ஆறுதலாக என்னை அணைத்து, செல்லமாகக் கன்னத்தில் தட்டி “என்ன, அம்மாவின் ஞாபகம் வந்து விட்டதா?” என்று அவர் கேட்பார். கண்களைத் துடைத்துக் கொண்டு முறுவலிக்க முயற்சிப்பேன்.

அம்மாவைச் சந்திக்கவே முடியாதோ என்ற என் ஆசை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு இப்போதுதான் நிறைவேறுகிறது. அதுவும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்..?

* * *

மழை வீறிட்ட ஒலியையும் மீறிக் கேட்டது, நான் கதவைத் தட்டிய சப்தம்.

எனக்கிருந்த பரபரப்பில் காலிங் பெல் இருப்பதைக்கூட மறந்து விட்டேன். வெளியே மழை, இடி, மின்னல், புயல்… கதவு திறக்கப்பட்டது. யாரது..? நிமிர்ந்தேன். அண்ணா! “ஷிவானி, நீயா?.. இந்த நள்ளிரவில்..?” அண்ணன் பதறினான். சொட்டச் சொட்ட நனைந்து நிற்கும் என் கோலத்தைக் கண்டு, என் எதிர்பாராத வரவைக் கண்டு.

சிறு குழந்தை விளையாடும்போது வேறு குழந்தைகள் அடித்து விட்டால் அழுவதுண்டு.அம்மாதிரிச் சமயத்தில் அது தன் தாயாரைக் கண்டுவிட்டால், அழுகை பீறிட்டுக் கிளம்பும். அதே நிலையில்தான் நானும் இருந்தேன். என் துயரத்தை உண்மையிலேயே தன் துயரமாகக் கருதக்கூடிய அண்ணனைக் கண்டதும் என் கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் பீறிட்டது. அதே சமயம் உள்ளேயிருந்து அம்மாவின் இரும்புக் குரல் கணீரென்று வெளிப்பட்டது.

“டேய் விந்தன்! அந்தக் கழிசடையுடன் என்னடா பேச்சு?.. வாழ்வைத் தேடிப் போனாளே, அது கசந்துடுச்சோ? அவளை வெளியே தள்ளிக் கதவைச் சாத்திட்டு வந்து படு!” ஈவிரக்கமின்றிப் பேசினாள் அம்மா. என் இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. கதறினேன்.

“நான் எங்கேம்மா போவேன்? உன்னை விட்டால் எனக்கு வேற கதி ஏது? நான் செஞ்ச தப்பையெல்லாம் மன்னிச்சு இந்தச் சமயம் நீ கருணை காட்டு அம்மா, ப்ளீ°!”

“என்னடி நாடகமாடறே? என்னை விட்டால் உனக்கு வேற கதி இல்லையா? இந்தப் புத்தி எங்கேடீ போச்சு, ஒரு வருசத்துக்கு முன்னே? ஏன், அந்த வாழ்க்கை அலுத்துப் போச்சா? இல்லை, அந்தப் பனாதைப் பயல் உன்னை விட்டு வேற எவளையாச்சும் இழுத்துக்கிட்டு ஓடிட்டானா?. உம்.. போடீ போ! உனக்கு இங்கே இடம் கிடையாது. நீ எனக்கு மகள் இல்லை. நீ யாரோ, நான் யாரோ! இன்னுமா இங்கே நிக்கிறே? டேய் விந்தா, கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிட்டு வாடா!”

அம்மாவா பேசுகிறாள்? இல்லையில்லை.,, அவளது இரும்பு நெஞ்சம் பேசுகிறது. வெளியே பேய் மழை ஆங்கார இரைச்சலுன் கொட்டிக் கொண்டிருக்கிறது.

“அம்மா!.. உன் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன். இந்த நேரத்துல எனக்கு உதவி செய்ய யாருமே கிடையாது. டாக்ஸியில் போய்க் கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி அவர் ஆ°பத்திரியில் சாகப் பிழைக்கக் கிடக்கறாரும்மா. மண்டையில் பலமான அடி. மூளையில் ரத்தம் உறைஞ்சுடுச்சாம் . உடனடியா ஆபரேஷன் செய்யலைன்னா உயிருக்கு ஆபத்தாம். ரெண்டு லட்ச ரூபா பணம் உடனே கட்டணும்னு ஆ°பத்திரியில் சொல்றாங்கம்மா. என் தாலி நிலைக்கணும்னா இந்த உதவியைச் செஞ்சால்தான் முடியும். அங்கே ஆ°பத்திரியில் அவர் சுய நினைவில்லாமக் கிடக்கிறார். அம்மா! என் தாலியைக் காப்பாத்து…” கதறி அவள் காலில் விழுகிறேன்.

அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை. “என்னடி ஷிவானி சொல்றே? நிஜமாகவா? ஐயோ!” அம்மா பதறுகிறாள்.

“அடிப் பைத்தியமே! இந்த விவரத்தை முன்னாலேயே சொல்லியிருக்கப்படாதோ? டேய் விந்தன்! இரும்பு ஸேஃபைத் திறந்து வேண்டிய பணத்தை எடுத்துகிட்டுப் போ! ஆ°பத்திரியில் பணத்தைக் கட்டு. மாப்பிள்ளை உயிரைக் காப்பாற்ற எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. உம்.. கிளம்பு!” அதே கம்பீரமான குரல். இது.. இது.. அம்மாதானா?

விழிகளைத் துடைத்துக் கொண்டு நம்பிக்கையின்றிப் பார்த்தேன். ஒருவேளை கிண்டலா? இல்லை, அம்மாதான் பேசுகிறாள்; பதறுகிறாள்!

தாலி என்ற பந்தத்தின் மதிப்புத் தெரிந்தவள்.. என்ன இருந்தாலும் அவளும் ஒரு தாய் அல்லவா? என் தாயின் பாதங்களைப் பற்றி, கண்ணீரைக் காணிக்கையாக்கினேன்.

இரும்பு இதயம்தான்! ஆனால், இரும்பு இளகாது என்று யார் சொன்னார்கள்?

(காஞ்சி வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *