இதயத்தைப் பிழிந்த இடியப்ப உரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 10,829 
 

விஜயாவின் எடுபடாத தோற்றுப் போன கறைபட்டகல்யாண வாழ்க்கை காரண,மாக வீழுந்த அடிகளில் இதுவும் ஒன்று முதன் முதாலாகக் கல்யாணமான கனவு இன்பப் பெருக்குடன் அவள் புகுந்த வீட்டில் அதாவது அவளுக்கு மாலை சூடி மனம் குளிர்வித்த கணவன் ராகவன் வீட்டோடு வந்து வாழத் தொடங்கிய நேரம்

முன்பு தாய் தகப்பன் சகோதரங்களோடு வாழ்ந்து மகிழ்ச்சி கொண்டாடிய நாட்கள் போலில்லாமல் அவளை முற்றிலும் கருவறுத்துக் கழுவிலேற்றித் தண்டிக்கவே ராகவனோடு நேர்ந்த அந்த உறவுச் சங்கிலி அவன் சார்ந்த ஒவ்வொரு மனித ஜென்மங்களுக்கும் பிடிபடாத அதன் முனையைப் பற்றியவாறு மறு துருவத்தில் அவள் ஆம் அங்கு துருப்பிடித்துச் செல்லரித்துப் போன அவர்கள் வீட்டில் அவள் நிலை அப்படித்தான் பல அன்பு வரண்டு போன சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்து சகதியில் சிக்கிய கதையாகத் தீப்பற்றி எரிகிற நிலைமை தான்

பிறந்த நாள் தொடக்கம் பாவக் கறை படியாத அன்பு பெருக்கெடுத்தோடும் புண்ணிய இருப்பின் மேலோங்கிய ஒளிக் கதிர்களின் சுவடு குளித்தெழுந்த ஓர் ஒப்பற்ற ஆதர்ஸ தேவதை மாதிரி அவள் இருந்தாள். யார் கண் பட்டதோ? உடல் பசியின் தேவைகளுக்காகவே அவள் என்பது போல் ஒரு சகதி மண்ணோடு சுருங்கிப் போனது அவள் வாழ்க்கையென்ற தவம் எது வந்தாலும் உடன்பாடு கண்டு தேறக் கூடிய மனோபலம் அவள் கொண்டு வந்த பிறவிப் பெருமை. அதை உள்ளபடி அவர்கள் குறிப்பாக அவள் கணவன் சந்திரன் தெளிவான அறிவு நிலையில் புரிந்து கொள்ள நேர்ந்திருந்தால் அவள் அவர்கள் வீட்டில் எந்த மனப் பாதிப்புகளும் இல்லாமல் சுயாதீனமாகத் தான் தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்த மேலான தூய அன்பிலே மட்டும் கொடி விட்டுப் பறக்கின்ற உயிர் சார்பான வாழ்விய,ல் பெருமைகளுக்கு எத்தகைய பங்கமும் நேராமல் ஓர் ஒளித் தேவதையாக அவர்கள் அறியும்படியாகவே நின்று பிரகாசித்திருப்பாள்

ஆனால் அது நடக்கவில்லையே. கறை குளித்தெழும் ஓர் இருண்ட குகை போல் அவர்கள் வீடு மட்டுமல்ல, நிரந்தரமான வறுமைச் சுவடுகள் பட்டு அது செல்லரித்து வாழ்வின் களை காணாமல் நிற்பது போலவே இருளில் புதையுண்டு மறைந்து போன அவர்கள் மனங்களும் அறிவு சூன்யமாகி அன்பு வரண்டு கிடக்கும் அத்தகைய அவர்களின் மனங்களோடு நேருக்கு நேர் நின்று மோதி வாய்த் தர்க்கத்தாலே தனது உயிர் ஒளி கொண்டு பிரகாசிக்கும் சத்திய மனதைத் திறந்து காட்டி என்றைக்குமே அவர்களோடு அவள் தர்ம யுத்தம் புரிந்ததில்லை. வீணாக ஒரு வாய்ச் சண்டைக்கு இடம் கொடுத்துத் தன்னைக் களங்கப்படுத்திக் கொள்வதை என்றைக்குமே அவள் விரும்பியதில்லை.அப்படி நேர் வழியில் தன்னைத் தன் புனிதங்களைக் காற்றிலே பறக்கவிடாமல் காப்பாற்றும் பொருட்டு வரட்டு வாய் வார்த்தைகள் ஒழிந்து போன ஒரு மெளன தேவதையாக தன்னைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு அவள் அங்கு வாழ்கிற நிலையில் தான் அவள் தலையைக் கொய்து பசியாறுவதற்கென்றே அறிவு சூனியமாகிப் போன அம்பு போல்; வந்து தைக்கும் அவர்களின் தடம் புரண்ட சூடான வார்த்தைக் கணைகளுக்கு முகம் கொடுத்துப் போராடிக் களைக்க வேண்டிய பெருந் துன்பம் தீப்பற்றீயெரியும் ஒரு வாழ்க்கைச் சாபம் போல் அவள் தலை மீது வந்து விடிந்தது

இதிலிருந்து மீட்சி பெற்றுத் தான் விடுதலை பெறுவதற்கான தீர்வை அடைவது என்பது அப்படியொன்றும் சுலபமான காரியமல்ல என்று கருதியதால் வேறு வழியின்றி சந்திரனிடம் அவள் கொண்டிருக்கும் காதல் வசப்பட்ட அன்பு நிலையையும் தாண்டி பூரண சரணாகதியாகிவிட்ட அவளுக்கே உரித்தான பெண்ணியல் பெருமைகளுடன் கொஞ்சமும் சாகாமல் தலை நிமிர்ந்து நிற்கிற ஒரு வாழ்க்கை வரம் போல் அவள் வாழ்ந்து கழிக்கிற அந்தப் பொழுதுகளுக்கே திருஷ்டி கழிக்கிற காட்சிப் பொம்மைகள் மாதிரித் தான் உயிர் வரண்ட அந்த வீட்டிலுள்ள அனைவரது நிலையும் இதற்குச் சந்திரன் மட்டும் விதி விலக்கா என்ன?

அவன் வீட்டில் இருப்பதும் குறைவு அவனுக்குக் கச்சேரியில் கிளார்க் வேலை. வேலையில் மட்டும் மிகவும் கண்ணியமான ஒரு கெளரவ புருஷன் தான் என்ற நினைவு மயக்கம் அவனிடம் சற்றுத் தூக்கலாகவே தெரியும்.. அதற்கேற்ப ஓயாத வேலை தான். சனி ஞாயிறு கூட லீவு எடுப்பதில்லை. அது ஓவர்டைம் ஆகக் கழியும். அப்படி வருகின்ற அந்தக் காசும் அவள் கைக்கு வராது. அவன் காசை இலக்கு வைத்து பறிக்கிற சுய புத்தி கூட வராத அப்பாவித் தனமான வெள்ளை மனசு அவளுக்கு. அதுவும் அவர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது .இதிலே இன்னுமொரு கொடுமை கடைசியில் அவளுக்கு அப்பா பெரிய அளவில் கடன்பட்டு வாங்கிக் கொடுத்த நகைகள் கூட மிஞ்சவில்லை சந்திரனின் தம்பி ரகு டாக்டருக்குப் படித்து வருகின்றான் அதற்கான செலவைச் சமாளிக்க அவள் நகைகளைக் கொடுக்க வேண்டியதாயிற்று அவர்களின் மிகவும் கஷ்டப்படுகின்ற வறுமை நிலையைப் பார்த்துத் சந்திரனின் தந்தை கை நீட்டிக் கேட்கிற போது மனமிரங்கி அவள் கொடுத்த அந்த எல்லா நகைகளும் அவள் அறியாமலே விலை போன கொடுமை அவ்வளவு எளிதில் மறக்கக் கூடிய ஒரு சாதாரண விடயமல்ல. பெண்கள் மேனி மினுக்கிப் பளிங்கு தேவதைகளாய் எடுபட்டு வாழ்க்கையில் கறை குளிக்காமல் மிதப்பதற்கென்றே சந்தையில் விலை போகும் இந்த நகைகளின் மேல் என்றைக்குமே அவளுக்குப் பெரிய அளவில் ஆசை வந்ததில்லை அதற்காகவே உயிரை விடும் சராசரி பெண்களுக்கு மத்தியில் அவள் ஒரு மிகவும் வித்தியாசமான தனிக் கரக்டர்

இன்னும் சொல்லப் போனால் வாழ்க்கை நிலையாமை பற்றி எப்பவுமே மறந்து போகாத அறிவுக் கண் திறந்த விழிப்பு நிலை அவளுடைய இயல்பான பிறவிப் பெருமை மாதிரி `இறக்கும் போது எதுவும் கூட வரப் போவதில்லையென்பதை அவள் நன்கு அறீந்திருந்த போதிலும் தான் சீதனமாகத் தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த நகைகள் தன்னை அலங்கரித்து அழகு பார்ப்பதற்குப் பதிலாக வட்டிக் கடையில் தூங்கி வழிந்து அதையும் தாண்டி தன்னை ஒரு சொல் கேளாமலே விலை போன ஈனச் செயல் குறித்து அவள் உள்ளூரத் தார்மீகச் சினம் கொண்டு மனம் கொதிப்பதற்கு வேறொரு முக்கிய காரணம் இருந்தது அவள் நல்லபடி வாழ்வதற்காக அப்பா எப்படியெல்லாம் கடன்பட்டு அவளுக்கு வாங்கிக் கொடுத்த நகைகளை இப்படித் தங்கள் அற்ப தேவைகளுக்காக விற்றுப் பணம் சம்பாதித்த இந்த வீட்டு மனிதர்களின் மிகவும் கீழ்த்தரமான கறைபட்ட மனோ தர்ம செயற்பாடுகள் குறித்த கவலையின் பொருட்டே அவள் கண்களில் அவர்கள் அறியாமலே பொங்கி வழியும் இந்தக் கண்ணீர் வெள்ளம். அது இரத்தமாகப் பெருக்கெடுத்து ஓடினாலும் அவர்கள் அதைக் கணக்கில் எடுக்கப் போவதில்லையென்பது காலம் கடந்த ஞானமாகவே அவளுக்கு உறைத்தது

அவர்கள் பார்வையில் உணர்ச்சியுள்ள பெண்ணாக என்றைக்குமே அவள் பிடிபட்டதில்லை. காசைக் கொடுத்துச் சந்திரனை அவளல்ல அவள் பெற்றோர் விலைக்கு வாங்கி விட்டதாக அவளையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பழி வாங்கத் துடிக்கும் அன்பு வற்றிப் போன அவர்களின் சிறுமை நிலைக்கு முன்னால் தனது களங்கமற்ற புனிதங்களைச் சாட்சி கொண்டு நிரூபிக்க முடியாமல் போன மனவருத்தத்தோடு அவள் இருக்கும் சமயத்தில் தான் புதிதாகத் தோன்றிய அந்த ரணகளத்தில் அவளை இழுத்துப் போட்டுக் கொல்லும் சதிக்கு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது

சந்திரனுக்கு நேரெ இன்னும் கல்யாணமாகாமல் இருக்கிற ஓர் அக்கா .சந்திரன் போல் நல்ல கறுப்பில்லாமல் கடைந்தெடுத்த தங்கப் பதுமை மாதிரி அப்படியொரு நிறம். களையான முகம். இருந்துமென்ன. அவளுக்கு ஏதோ ராகு தோஷமாம். கல்யாணம் இன்னும் கை கூடாமல் முற்றிய முதிர் கன்னியாக இப்போது அவள்.. அதனால் தான் சந்திரனின் கல்யாணம் முறை தவறிய கல்யாணமாக நடந்தேறியதில் அவன் தந்தையோடு மனஸ்தாபம் கொண்டு முரண்பட்டுக் கொண்டதை அவள் அறிய நேர்ந்தாலும் இதற்காகத் தன்ன்னைத் தண்டிக்க நினைப்பது எந்தவிதத்திலே நியாமாகும் என்று அவளுக்குப் புரியவில்லை. கல்யாணப் புரோக்கர் நினைத்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம் அவருக்குக் காசொன்றே இலக்காகி விட்ட நிலையில் அவள் நிலை பற்றி அவரால் எப்படி யோசித்துச் செயல்பட்டிருக்க முடியும்

எல்லாம் கொண்டு வந்த விதியின்படி நடப்பதற்கு யாரைக் குறை சொல்வது? நடுத்தரக் குடும்பத்திலே பிறந்து ஓரளவு கஷ்ட நிலை பிடிபடாமல் வாழ்ந்த அவளுக்கு இப்படி அடுக்கடுக்காய் சோதனைகள் வருமென்று யார் கண்டார்கள்.. அதிலும் அவளைத் தீக்குளிக்க வைத்துப் புடம் போட்டுப் பார்க்கும் அளவுக்கு அவளுடைய அந்தக் கல்யாண வேள்வி கறைபட்டுப் போனது

அது மிகவும் பெரிய குடும்பம். தகப்பன் கந்தசாமிக்கு ஒழுங்கான வருமானமில்லை. சந்திரனின் வருமானமொன்றை மட்டுமே நம்பி அவர்கள் உயிர் வாழ்கிற நிலையில் கல்யாணமென்ற பெயரில் நடந்தேறிய அவளின் இந்தப் புது வரவு அவர்களுக்கு பெரும் மனக் கசப்பை அளித்த காரணமொன்றே போதும் அவளை உயிரோடு சமாதி வைக்க. அவர்கள் சமைக்கும் போது மனமிரங்கி அவள் உதவிக்கரம் நீட்டினால் ஏதோ ஒரு வகையில் அவள் மீது குறை கண்டு பிடித்து அவளை நோகடிப்பதற்கென்றெ அவர்களின் தலை விரித்தாடும் ஆவேசப் பிரசன்னம் வெகு அமர்க்களமாகக் களை கட்டி நடந்தேறும். அதை எதிர் கொள்ள முடியாமல் நிலை சரிந்து வெட்கத்தை மறந்து அவள் வாய் விட்டு எப்படி அழுது புலம்பினாலும் அவளின் அந்தத் தீனக்குரலை செவிமடுத்து நீதியை நிலை நாட்டச் சந்திரன் உட்பட எவருக்குமே மனம் வருவதில்லை. அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து போர்க் கொடி தூக்கும் பட்சத்தில் வானத்த்தைப் பார்த்து அழுகிற நிலை தான் அவளுக்கு. இப்படித் தான் ஒரு சமயம் இரவு உணவு தயாரிக்கும் நேரத்தில் அடுக்களைக்குள் அவளும் கூட இருந்தாள். மாமி ஒரு பக்கம் இருக்க, பெரிய மச்சாள் அதாவது சந்திரனின் அருமை அக்கா இடியப்பம் அவிப்பதற்கான ஆயத்தத்தில் இருக்கும் போது அவள் முன்னிலைக்கு வந்து விஜயா கேட்டாள்

“நான் அவிக்கட்டே மச்சாள்?”

“சரி தான் நீ அவிச்சு நாங்கள் சாப்பிட்ட மாதிரித் தான்”

“ஏன் அப்படி நினைக்கிறியள்? நான் வீட்டிலை கன காலம் இருந்து சமையல் பழகினது இப்ப கை கொடுக்கும் விடுங்கோ மச்சாள் நான் அவிச்சுக் காட்டுறன் “

“ பெரிய சமையல்காரி பெரிசாய் சமைக்க வந்திட்டா எங்கை அவி பாப்பம் நானும் இருந்து பாக்கத் தான் போறன்”

இது என்ன சமையல் போட்டி நடக்கிற இடமா? எனக்குச் சவால் விடுறதே இவையளுக்குப் பழக்கமாய்ப் போச்சு. இடியப்பம் பிழிஞ்சு பழக்கப்பட்ட கை இது .ஒரு நொடியிலை அவிச்சுக் காட்டிறன்”

வறுத்த சிவப்பு அரிசி மாவும் அவித்த கோதுமை மாவும் சம அளவில் கலந்து கொதி தண்ணீர் ஊற்றிக் கிண்டினால் பூவாய் மலரும் இடியப்பம். அதற்கான உரலைக் கையிலெடுத்துக் கொண்டு எல்லாம் தயார் செய்து பிழிகிற நிலையில் ஒரு சின்னக் கை இடறல். பதம் பிழைத்துப் போனதால் பிழியும் தருணத்தில் அச்சு விலகி ஆணி கழன்று மா இடியப்பமாக இல்லாமல் மாச்சிதறலாகவே பிசிறி வெளியேறுவது கண்டு அவள் குலை நடுங்கினாள்

“ ஐயோ மச்சாள் இப்படி நடந்ததுக்கு நான் பொறுப்பல்ல இண்டைக்கு என்ரை கஷ்ட காலம் பதம் பிழைச்சு போச்சு அம்மாட்டைச் சொல்லி வேறு இடியப்ப உரல் வாங்கித் தாறன்”

“அம்மாவும் ஆட்டுக் குட்டியும். அந்த மனுஷி இஞ்சை வந்தால் ஐயாவுக்குக் கோபம் வரும் அதெல்லாம் வேண்டாம் எங்களுக்கு வாங்கத் தெரியும்” என்று அக்கா மனம் ஆவேசம் கொண்டு சீறினதைக் கேட்டு வெறும் ஜடம் வெறித்த பொருள் காரணமாக அவளோடு ஒரு தார்மீக யுத்தமே புரிந்து நீதியை நிலை நாட்டுகின்ற தோரணையில் தொண்டை கிழியக் கத்திப் பேசியதால் மனம் உடைந்து அவளை அழ வைத்ததற்கு நீதி கேட்டுத் தர்மக் குரல் எழுப்பிப் பேச ஆளின்றி நாதியற்ற ஒரு அனாதை போல் சிவந்து கலங்கி வெறித்த பார்வையுடன் நிலை குத்தி அழுக்காகிப் போன அடுக்களை வாசலில் உறைந்து போன சிலையாக வெகு நேரமாய் தனிமையில் நின்று கொண்டிருந்த அவளுக்குத் துணையாகவும் பக்கபலமாகவும் ஆறுதல் கூறித் தேற்றுவதற்கு ஆளில்லாமல் போன தனிமையில் அவள் பொழுது நரகமாகவே கழிந்தது

அப்போது வேலை நேரம் முடிந்து வீடு வந்து சேர்ந்த சந்திரன் நினைத்திருந்தால் அவள் அப்படி நிற்க நேர்ந்த கொடுமையை உள் வாங்கிய சினத்துடன் அவளுக்காகப் பரிந்து நாலு வார்த்தை அக்காவின் குற்றத்தை எடுத்துச் சொல்லி உயிர் மறவாமல் பேசியிருந்தால் தீக்குளிக்க நேர்ந்த சோகம் தீர்ந்து அவள் வெகுவாக மனம் குளிர்ந்து புல்லரித்துப் போயிருப்பாள் அது நடக்காமல் அவளையே குற்றவாளியாக இனம் கண்டு மனம் கொதித்த சீற்றத்துடன் போவது போல் முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு அவன் அவசரமாக அவளைக் கடந்து உள்ளே போனது அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தையளித்தது

தன் மீது கருணை பெருகி வழிகின்ற அன்பு நதிப் பிரவாகத்தின் நிழல் கூடத் தீண்டியறியாத அவனுடைய உயிர் வரட்சியான இந்தக் கடும் போக்கு இருக்கும் வரை அவன் அப்படித் தான் இருப்பான் மேலும் அக்கா என்றால் அவனுக்கு உயிர் அதனால் அவளின் கறைபடிந்த நடத்தைகளின் மிக மோசமான ஒரு வெளிப்பாடாய்க் கோபம் கொந்தளித்து விஜயாவைப் பார்த்து அவள் கொட்டித் தீர்த்த வார்த்தைகளை நியாயப்படுத்திப் பார்க்கிற மாதியே அவனின் அப்போதைய நிலையிருந்தது அவனிடம் போய் இதற்கு நீதி கேட்டால் அது நடக்கிற காரியமல்ல என்று அவள் மிகவும் மன வேதனையோடு நினைவு கூர்ந்தாள்

வயிற்றுப் பசிக்கு இரையாகப் போகும் வெறும் இடியப்ப சமாச்சாரம் அதைப் பிழிந்து தருகிற இடியப்ப உரல் என்ன உயிர் போகும்படி கூச்சலிட்டுக் கூப்பாடு போடும் அளவுக்கு அவ்வளவு பெறுமதியான சொக்கத் தங்கமா அது? தங்கம் போனதுக்கே எதிர்ப்புத் தெரிவித்து வாய் திறக்காமல் இருந்தாளே அவள் அதன் புடம் போடப்பட்டு மின்னுகின்ற பெருமை கூட அறியாமல் அக்கா வாய் திறந்த குற்றதின் பொருட்டு உருண்டு சிதறுகின்ற அம்மாவை நினைக்கத் தான் அம்பு தைத்த பெருஞ் சோகம் அவள் மனதில்

சரி சந்திரனை மணந்த குற்றத்துக்காகத் தான் எனக்கு இரத்தம் வழியும் இந்தப் பலி பீடம் ஆனால் என்னோடு சேர்த்து ஒன்றுமறியாத அம்மாவை எதுக்கு இழுக்க வேணும்?அதிலும் மாமாவுக்கு……..சீ சொல்ல நாக்கூசுது அவர் இலட்சணத்திற்கு, அம்மாவைக் கண்டால் ஆகாதாம் அவர் முகத்தில் விழிக்கிறதையே பாவமென்று நினக்கிறவள் நான். அப்படியொரு மிருகம். அவருக்குப் போய் அம்மாவைக் கண்டால் கோபம் வருகுதாம் இதைச் சொல்லிச் சொல்லியே மூளைச் சலவை செய்து சந்திரனையும் அம்மாவுக்கு எதிராய் சண்டை போடத் தூண்டி விடுறது போதாதெண்டு இப்ப இவ சொன்னது இன்னும் கொடுமையாயிருக்கு என்னைப் பெற்றுப் போட்ட குற்றத்துக்கா அம்மாவுக்கு இந்த மிகப் பெரிய தண்டனை?”

இதைப் பற்றி ஒன்றுமே கேளாமல் வாய் மூடி மெளனமாக இருப்பது அம்மா பற்றி அக்கா கூறிய பொய்க்கே துணை போவது போல நான் கட்டிக் காக்கின்ற இந்த மெளன கவசம் எனக்குத் தான் அம்மாவுக்கல்ல ஆகவே இப்ப நான் வாய் திறக்க வேண்டிய தருணம் வந்திட்டுது

மெளனம் இறுகிப் போயிருந்த கனத்தைக் கலைத்துக் கொண்டு அவளுக்கே உரிய சுபாவம் மாறாமல் மென்மையாகக் குரலை உயர்த்தி அவள் கேட்டாள்

“மச்சாள் இழப்பு என்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல . கல்யாணமான நாளிலிருந்து எத்தனயோ இழப்புகளை நான் பாத்திட்டன் அதைப் பற்றியெல்லாம் நான் வாய் திறந்து கேக்கத் தொடங்கினால் நீங்கள் தாங்க மாட்டியள். .இப்ப என்ரை மன வருத்தம் இதுவல்ல கேவலம் இந்த இடியப்ப உரல். காசு கொடுத்தால் இன்னொண்டு வாங்கி விடலாம் ஆனால் இதுக்குப் போய் அம்மாவை உங்கடை இஷ்டத்துக்கு இழுக்கிறதிலை என்ன நியாமிருக்கு? இப்ப சொன்னியளே அவவின்ரை புனிதங்களையே கொச்சைப்படுத்துற மாதிரி ஒரு கொடிய வார்த்தை பாவம் ஆட்டுக் குட்டியென்றாலே அவவுக்கு என்னெண்டு தெரியாது அப்பா வீட்டிலை.மாடு தான் வளர்த்தவர் வாளி வாளியாகப் பால் கறந்து தான் பழக்கம் அவருக்கு. அந்தப் பால் குடிச்சு வளர்ந்த எங்கடை மனம் குறிப்பாய் அம்மாவின்ரை மனம் அது மாதிரித் தான் நீங்கள் நினைக்கிற மாதிரி ஊர் மேஞ்சு கண்டதையெல்லாம் கடிக்கிற ஆட்டுக் குட்டியல்ல என்ரை அம்மா என்னைப் பெற்ற அம்மா ஆட்டுக் குட்டியல்ல அவ தெய்வம்”

அவள் மனம் தெளிந்த ஒரு வேத வாக்காக உணர்ச்சிவசப்பட்டு அதைக் கூறி விட்டு மெளனமான போது நிச[ப்தம் நிலவியது நல்ல வேளை சந்திரன் வந்த களைப்போடு உள்ளே உடை கூட மாற்றாமல் படுத்துக் கிடந்ததால் அவள் கூறிய வார்த்தைகள் அவன் காதில் விழாமல் போனது அவள் செய்த புண்ணியம். இல்லாவிட்டால் அவளுக்கு எதிரான ஒரு பூகம்பமாய் அது வெடித்திருக்கும் அவளின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தவறுகின்ற ஒரு வரட்டுப் போக்கில் அவன் அவளைக் கொன்றே போட்டிருப்பான் ஆம் அது அவனுக்குக் கை வந்த கலை.

அக்கா அப்போது நெருப்பாகக் கக்கி விட்ட கொடூரமான அந்த வார்த்தைகளின் சூடு தணியவே வெகு நேரம் பிடித்தது …அது சூடேறி விட்ட கையோடு வேறு வழியின்றி தர்மாவேசத்தோடு சத்திய தேவதையே நேரில் வந்து வார்தைப் பிரகடனமாக அவர்கள் குழம்பிய புத்தி மயக்கத்தைத் தெளிவாக்கும் பொருட்டு உயிர் கொண்டு பேசுவது போல அப்போது அவள் கூறிவிட்ட வேத வாக்கின் சாரம் பிடிபடாமல் மயங்கி நிற்பது போல் விழி பிதுங்கி அக்கா நிற்கிற கோலத்தைக் கண்டு தான் கொண்ட கவலையையும் மீறி, அவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது. கடவுளை எங்கே கண்டோம் என்று அக்கா நினைத்திருக்கலாம் அது தான் அவள் கண்களில் அந்த இருள் மயக்கம் மனிதனையே மனிதனாகக் காண முடியாமல் போன அவர்கள் கண்களுக்குக் குறிப்பாக அக்காவின் கண்களுக்குக் கடவுளாவது பூதமாவது எல்லாம் ஒழிந்து நிற்கும் அவர்களை என்னவென்று சொல்வது?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *