இசக்கியின் பள்ளிப் பருவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 6,768 
 
 

(இதற்கு முந்தைய ‘பூரணி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ).

இசக்கிப் பாண்டியை நன்றாகத் தயார்செய்து பெரிய பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் கஸ்தூரி ஐயங்கார் கிட்ட கூட்டிட்டுப்போனா பூரணி.

“ஏம்மா, இந்தப் பயலைப் பார்த்தா ஏழெட்டு வயசுப் பயலாட்டம் இருக்கான்… நீ என்னமோ ஐந்து வயசுன்னு சொல்றயே?” எடுத்த எடுப்பிலேயே கஸ்தூரி ஐயங்கார் கேட்டார்.

“நெசமாத்தேன் சாமி… இப்பத்தேன் இவனுக்கு அஞ்சு வயசு முடிஞ்சிருக்கு. பாக்கறதுக்குத்தேன் இப்படியிருக்கான்.”

“நீ சொல்றே, எப்படி நான் நம்புறது?”

“பொய்யெல்லாம் சொல்றவளா இருந்தா டேசன் மாஸ்டர் வீட்ல வேல செஞ்சிருக்க முடியுங்களா?”

“எந்த ஸ்டேஷன் மாஸ்டர சொல்ற?”

“இப்ப வில்லிபுத்தூர்ல போட்டிருக்காங்களே…”

“ஓ… அப்ப ஒத்துக்கறேன். ஆராவமுதம் ஐயங்கார் ஆத்ல பொய்யெல்லாம் பேசிண்டிருக்க முடியாது. டேய் பயலே, உன் பேரென்ன?”

“என் பேரென்ன?” இசக்கி திருப்பிக் கேட்டான்.

“சூ… சாமிய அப்படியெல்லாம் கேட்கக் கூடாதுய்யா… உன் பேரைச் சொல்லு.”

“இசக்கி.”

“முழுப் பேரு இசக்கிப் பாண்டி சாமி.”

“உன் அய்யா பேரென்ன?”

“உன் அய்யா பேரென்ன?”

“எண்டா பையா, நான் கேட்டதையே திருப்பிக் கேட்டுண்டுருக்கியே, நீ என்ன போன ஜென்மத்துல கிளிப்பிள்ளையா இருந்தியா?” கஸ்தூரி ஐயங்கார் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“நீங்கதேன் சாமி இவனுக்கு எல்லாத்தையும் சொல்லிக் குடுக்கணும்.”

“சரிம்மா… ஒண்ணாங் கிளாஸ்ல விட்டுட்டுப் போ.”

இப்படியாக இசக்கியை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டாள் பூரணி. ஆனால் அவனைச் சேர்த்துவிட்டு அவளால் வீடுபோய்ச் சேர முடியவில்லை. அவளை முந்திக்கொண்டு இசக்கி சிட்டு மாதிரி வெளியில் பறந்து வந்துவிட்டான். என்ன சமாதானம் சொல்லியும் அவனை வகுப்பில் உட்கார வைக்கவே முடியவில்லை. பக்கத்திலேயே பூரணியும் உட்கார்ந்திருந்தால் இசக்கியும் ‘கம்’மென்று உட்கார்ந்திருப்பான்.

அவள் எழுந்தால் அவனும் எழுந்துவிடுவான். எல்லாப் பிள்ளைகளுமே ரெண்டு மூணு நாள் கொஞ்சம் அழுது கிழுதுதான் சரியானார்கள். ஆனால் இந்தப்பயல் ரெண்டு வாரம் ஆகியும்கூட முதல்நாள் மாதிரியே இருந்தான். பூரணியும் மகனுடன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டது மாதிரிதான் இருந்தாள்.

ஹெட்மாஸ்டருக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரது அனுபவத்தில் இப்படி ஒரு மாணவனைப் பார்த்ததே கிடையாது. இசக்கிப் பயலுக்கு, பக்கத்தில் அம்மா இருந்தால் மட்டும் போதாது. அவனுக்கு தின்பதற்கு எதாவது கொடுத்துக்கொண்டேவேறு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சேலையைப் பிடித்து இழுப்பான். அப்படி அவன் இழுக்கக் கூடாது என்பதற்காகவே பூரணி இசக்கிக்கு தின்பண்டம் கொடுத்துக்கொண்டே இருப்பாள். சீனிக் கிழங்கு; கொழாப்புட்டு; புட்டுப் பழம் என்று இப்படி ஒவ்வொன்றாய் தின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் மற்ற பயல்களுக்குக் கவனம் எப்படி வாத்தியார் சொல்லுகிற பாடத்தில் போகும்! பார்த்தார் வாத்தியார்… போய் ஹெட்மாஸ்டரிடம் சொல்லிவிட்டார்.

ஹெட்மாஸ்டருக்கு பயம் வந்துவிட்டது. யாராவது டிஈஓ வந்து இதையெல்லாம் பார்த்துத் தொலைத்து விட்டால் என்ன ஆவது?

பூரணியைக் கூப்பிட்டு அனுப்பினார். இசக்கிப் பயலும் அம்மா கூடவே போனான்.

“இவனை அழைச்சிட்டுப் போயிடும்மா. இனிமேல் கூட்டிட்டு வராதே. இன்னும் கொஞ்சம் பெரிய்ய பையனா ஆனப்புறம் அடுத்த வருஷம் ஸ்கூலில் சேர்” என்று கஸ்தூரி ஐயங்கார் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். பூரணி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள். ஹெட்மாஸ்டர் இரக்கம் காட்டவே இல்லை.

“அவன் படிக்காமே சும்மா உட்கார்த்திருந்தாலும்கூட நான் ஒண்ணும் சொல்லமாட்டேன். நீயும் அவனோடயே உக்காந்திண்டு இருந்தா இதென்ன பள்ளிக்கூடமா இல்லே உன்னோட வீடா…? போ போ அழைச்சிண்டு போயிடு.”

வேறு வழியில்லாமல் பூரணி இசக்கியை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் விட்டாள்.

“என்னடா படிச்சு முடிச்சாச்சா பள்ளியூடத்ல? நீ படிச்சது போதும், ஒங்கம்மாவை ஒனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கச் சொல்லு.”

எதிர் வீட்டில் இருந்த வயசானவரின் இந்தக் கிண்டல் பூரணிக்கு எரிச்சலைத் தந்தது. ஆனாலும் புருஷன் இல்லாதவ என்ற நினைப்பில் பேசாமல் இருந்தாள்.

ஆனால் இந்த இசக்கிப் பயல்தான் “பள்ளியூடத்துக்கு போப்பறேன், பள்ளியூடத்துக்கு போப்பறேன்” என்று அவள் சேலை நுனியைப் பிடித்து இழுத்து இழுத்து பூரணியின் உசிரை வாங்கினான்.

பூரணிக்கு கோபம் வந்துவிட்டது. அவனைப் போட்டு மொத்து மொத்து என்று மொத்தி எடுத்துவிட்டாள். இசக்கிப் பயலே கழிந்துவிட்டான். அவன் பிறந்த இந்த அஞ்சு வருசத்தில் மகனை பூரணி ஒரு அடிகூட அடித்தது கிடையாது. பின் என்ன? பள்ளிக்கூடத்தில் சேர்த்தால் பேசாமல் சட்டையையும், டவுசரையும் மாட்டிக்கொண்டு போக வேண்டியதுதானே..! திங்கறதுக்கும் வண்டி வண்டியாய்க் கொடுத்து அனுப்பத்தான் பூரணி தயாராக இருக்கிறாளே! அதுக்குமேல் அம்மாக்காரியும் வகுப்பில் அவனுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமென்றால் அம்மாக்காரியா படிக்கப் போகிறாள்? இது தெரியவில்லையே அந்த மடப் பயலுக்கு. ‘நீயும் வா, நீயும் வா’ன்னு பயல் கூப்பாடு போட்டான். ஆதுக்குத்தான் மொத்தினேன் செம்மையாய்…! எப்படி ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் ஆம்பளைப் பிள்ளைகள் லட்சணமாய் பள்ளிக்கூடம் போகுதுகள்..! பூரணிக்கு மனம் வலித்தது.

“பேசாம இந்தப் பயலை செந்தூருக்கு அனுப்பி விட்டுரு. அங்க போயி பனமரத்துல ஏறி இறங்கட்டும். அதுக்குத்தான் லாயக்கு இந்தப் பய…” என்று ஆளுக்கு ஆள் இசக்கியைப் பற்றி நக்கலாகவே பேசினார்கள்.

“ஒனக்கு அஞ்சு முடிஞ்சி ஆறு வயசாயிருச்சின்னு சொல்றா ஒன் அம்மாக்காரி. நீ இப்படி கெடா கணக்கா இருந்துக்கிட்டு டவுசரை கழட்டி எறிஞ்சிட்டு வந்து வந்து நிக்கறியே சீச்சி இந்த மாதிரி குண்டியைக் காட்டிக்கிட்டு எல்லாம் எங்க வீட்டுக்குள்ள வராதடாப்பா..”

எல்லோருமே இசக்கியை இந்த மாதிரி விரட்டிக்கொண்டே இருந்தால், அவனும் எத்தனை நாளைக்குத்தான் பேசாமல் இருப்பான்…? அப்படி விரட்டிய ஒருத்தரின் வீட்டில் சர்ரென்று ஒண்ணுக்கு அடித்து வைத்துவிட்டு ஓடியே விட்டான். கொஞ்ச நேரத்தில் தெருவே அல்லோலப் பட்டது. இப்படியா ஒரு பிள்ளை பிறக்கும் பூரணிக்கு? அவள் பாவம் என்னதான் செய்வாள்? பெத்த வயிறு தவித்தது…

கடையை ரெண்டு நாளைக்கி மூடிவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போய் ஆராவமுதம் ஐயங்காரைப் பார்த்து அழுதுவிட்டு வந்தாள். அவரும்தான் என்ன செய்வார்? ஏதாவது புத்தி சொன்னால் புரிந்து கொள்கிற வயசிலா இருந்தான் பூரணி மகன்? அவன் பாட்டுக்கு அம்மாவின் சேலைத்தலைப்பை இறுக்கிப் பிடித்தபடி தின்பதற்கு ஏதாவது கிடைக்குமாவென்று திருதிருவென்று முழித்தபடி நின்று கொண்டிருந்தான். ஐயங்காரின் மனைவி கை நிறைய சீடை கொண்டுவந்து இசக்கியிடம் கொடுத்தாள்.

“இனிமே டவுசர் இல்லாமே தெருவுக்கெல்லாம் போகப்படாது தெரியுமோல்லியோ?” என்றாள். என்னமோ பெரிய மனசு வைத்து சரியென்று தலையை ஆட்டினான். அன்றைக்கு கோகுலாஷ்டமி. பூரணி இசக்கியுடன் கோயிலுக்கெல்லாம் போய்விட்டு ஊர் திரும்பினாள்.

இப்படியே அடுத்த ஆனி மாசம் வந்துவிட்டது. இசக்கிக்கும் வயசு ஏழு ஆகிவிட்டது. முந்தி மாதிரியே மகனை நல்லா ஜோடித்து, முகத்துக்கு பவுடரெல்லாம் பூசி, ஒரு பெரிய பெருங்காய பையில் சிலேட்டை வைத்து பூரணி பெரிய பள்ளிக்கூட ஹெட்மாஸ்டரிடம் கூட்டிக்கொண்டு போனாள்.

ஹெட்மாஸ்டருக்கு இசக்கியை சுத்தமாக மறந்து போயிருந்தது.

“என்னம்மா வயசு இந்தப் பயலுக்கு?”

“ஆறு முடிஞ்சி ஏழு சாமி.”

“பாத்தா பத்து வயசுப் பையன் மாதிரி தெரியறான்.”

“போன வருசம்கூட கூட்டியாந்தேன் சாமி. பாதியிலேயே போகச்சொல்லி சொல்லிட்டீயளே…”

ஹெட் மாஸ்டருக்கு ஞாபகம் வந்துவிட்டது.

“அவனா இவன்?”

“ஆமா சாமி.”

“அவனுக்கு அண்ணனாட்டம் இருக்கான்.”

“கொஞ்சம் சாப்பாடு ஜாஸ்தி சாமி.”

“ஒன் பேரென்னடா?”

“ஒன் பேரென்னடா?” இசக்கி திருப்பிக்கேட்டான்.

“எத்தனை வாட்டி சொல்லி கூட்டிட்டு வந்தேன், திருப்பிக் கேக்காதேன்னு” பூரணி கோபத்தில் இசக்கியை சாத்து சாத்தென்று சாத்திவிட்டாள்.

இப்பத்தான் யாரும் எதிர்பாராத காரியத்தை செய்துவிட்டான் இசக்கி. சரெக்கென்று டவுசரை உயர்த்தி ஒன்றுக்கு இருந்துவிட்டான். பாவம் கஸ்தூரி ஐயங்கார். அவர் மேலெல்லாம் தெறித்துவிட்டது. காலையில் யார் முகத்தில் முழித்தாரோ, கிணற்றடிக்கு வேகமாய் ஓடினார். அவ்வளவுதான்… விஷயம் பள்ளி பூராவும் பரவிவிட்டது. பிறகென்ன?

“அதான் காட்ல ஆடு மேய்க்கிற பயலைக் கொண்டாந்து பள்ளிக்கூடத்ல விட்டா…” “பூரணிக்கு இப்பவாவது புத்தி வந்தா சரி…”

பூரணிக்கு மனம் ரணமானது. ‘ஏதோ பள்ளிக்கூடத்துக்குப் போய் பெரியப் பத்துவரை படிக்க வைக்கலாமென்று பார்த்தால் ஒண்ணாங் கிளாஸில் சேர்ப்பதற்கே நாய் படாத பாடு பட வேண்டியிருக்கே’ இனி எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு ஹெட்மாஸ்டரை போய்ப் பார்ப்பாள்?

இசக்கியை அடித்து மிரட்டி நடுத்தெரு பள்ளிக் கூடத்திலாவது சேர்க்கலாமென்று அங்கே கூட்டிக்கொண்டு போனாள். அது ரொம்பச் சின்னப் பள்ளிக்கூடம். அஞ்சாம் வகுப்பு வரைக்கும்தான் படிக்க முடியும். அங்கு இசக்கியை ஹெட்மாஸ்டர் தேவ இரக்கம் ஒண்ணாங் கிளாஸில் உடனே சேர்த்துக்கொண்டு விட்டார். பேரும் கேட்கவில்லை, ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் பூரணியை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாதா கோயிலுக்கு வரச்சொன்னார். ஏதோ அவரால் ஆன தொண்டு!

யாரும் மந்திரம் கிந்திரம் போட்டு விட்டார்களோ என்னவோ, இசக்கி பள்ளிக்கூட வகுப்பில் தன்னுடன் பூரணியும் உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனையை கைவிட்டு விட்டான். அப்பாடாவென்று இருந்தது பூரணிக்கு. எல்லாம் ஹெட்மாஸ்டர் சொன்னமாதிரி மேரி மாதாவின் கருணைதான் என்றும் அவளுக்குத் தோன்றியது. பூரணிக்கு மகன் கல்வியில் பெரிய தேர்ச்சி அடையவேண்டும் என்று அத்தனை பெரிய ஆசையெல்லாம் கிடையாது. தொந்தரவு பண்ணாமல் அவன் ஒரு பத்து வருசம் பள்ளிக்கு போய் வந்தால் போதும். மிச்சத்தை அவள் பார்த்துக் கொள்வாள் !

ஹெட்மாஸ்டர் தேவ இரக்கம் சொன்னது போல பூரணி வேற வேலை இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலை மாதா கோயிலுக்குப் போய்வந்தாள். பாளையங்கோட்டைப் பக்கம் ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள் கோயிலுக்கு அவ்வப்போது போய் வருவதுண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களின் கோயில்களுக்குப் போக மாட்டார்கள்!

ஒருநாள் ஹெட்மாஸ்டர் தேவ இரக்கம், பூரணியை பேசாமல் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துடேன் என்றார். பூரணிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வீட்டில் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தாள். அவளுடைய சொந்தக்காரர்கள் யாரும் கிறிஸ்துவ மதத்தில் சேரவில்லை. அதனால் சேர்வதற்கு அவளுக்குப் பயமாக இருந்தது.

தேவ இரக்கத்தின் முகத்தை நேருக்குநேர் பார்க்கவும் சங்கடமாக இருந்தது. மாதாகோயில் பக்கம்கூட இதனால் போகாமல் இருந்தாள். இந்தச் சமயத்தில் ஹெட்மாஸ்டர் தேவ இரக்கம் எதனாலோ வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரான மார்த்தாண்டம் போய்விட்டார். புது ஹெட்மாஸ்டர் வந்து சேர்ந்தார். அவர் பெயர் அல்போன்ஸ் பிள்ளை. பூரணி புது ஹெட்மாஸ்டரைப் போய் ஒரு மரியாதைக்குக்கூடப் பார்க்கவில்லை. அவளை அவருடைய மதத்தில் சேரச் சொன்னால் என்ன பண்ணுவது? அதனால் கப்சிப்பென்று வீட்டிலேயே இருந்துவிட்டாள்.

ஆனால் பூரணிக்குள் ஒரு பிரச்சினை அரித்துக்கொண்டே இருந்தது. அங்கு அஞ்சாம் வகுப்பு வரைக்கும்தான். ஆறாவது படிக்க, திருப்பியும் பெரிய பள்ளிக்கூடத்துக்குப் போய் கஸ்தூரி ஐயங்காரின் முகத்தில்தான் முழிக்க வேண்டும். எப்படி அவரின் முகத்தில் முழிப்பது?

ஆனால் இசக்கிப் பயல் அம்மாக்காரிக்கு அந்த தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தித் தரவே இல்லை. அவன்தான் அஞ்சாம் வகுப்பையே தாண்டவில்லையே! அதுவும் இல்லாமல் ‘தக்கி முக்கி’ அஞ்சாம் வகுப்புக்கு வந்து சேர்ந்தபோது மீசையே முளைத்து விட்டது அவனுக்கு!

ராமர் பதினாலு வருசம் காட்டுக்குள் இருந்த மாதிரி இசக்கியும் அந்த நடுத்தெரு பள்ளிக்கூடத்தில் சரியாக அதே பதினாலு வருசம் இருந்தான். அதுசரி, பதினாலு வருசம் ஒரு சின்னப் பள்ளிக்கூடத்தில் கிடந்தால் மீசை முளைக்காமல் என்ன செய்யும்? இன்னும் கொஞ்சம் கிடந்தால் தாடி கூட முளைக்கும்..!

பொதுவாக அந்தக் காலத்தில் ஹைஸ்கூல் வந்து விடுகிறபோது நிறைய பையன்களுக்கு மீசை வந்துவிடும். அது ஆச்சர்யமான விசயம் இல்லை. ஆனால் எலிமெண்டரி ஸ்கூலிலேயே ஒரு பையனுக்கு மீசை முளைத்து விட்டதென்றால் அது ரொம்ப ஆச்சர்யமான விசயம்தான்.

ஒரு சமயம் டிஈஓ நடுத்தெருப் பள்ளிக்கு இன்ஸ்பெக்ஷன் வந்திருந்தார். வகுப்புகளை சுற்றிப் பார்த்தவர், இசக்கியை கவனித்துவிட்டார்.

“என்னது ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் இன்னொரு வாத்யார் உட்கார்ந்திருக்கார்?” என்று மானத்தை வாங்குவதுபோல் கேட்டுவிட்டார். அல்போன்ஸ் பிள்ளைக்கு மானம் போய்விட்டது. ஆனால் இசக்கிக்கு அப்படியே உச்சி குளிர்ந்து போய்விட்டது. டிஈஓ அவனை வாத்யார் மாதிரி இருக்கிறானே என்று கேட்டு விட்டாரே…! அவன் வாத்யார் கிடையாது, மாணவன்தான் என்று சொல்லி விளக்குவதற்குள் அல்போன்ஸ் பிள்ளைக்கு ‘அப்பாடா ஆத்தாடா’ என்றாகிவிட்டது. அப்போது அந்த டிஈஓ முகம் போன போக்கைப் பார்க்கணுமே… ரொம்பக் கோபமாக இன்ஸ்பெக்ஷனை அப்படியே அம்போன்னு பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறிப் போயே விட்டார்.!

ஹெட்மாஸ்டர் அல்போன்ஸ் பிள்ளைக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. ‘குளத்துக்கிட்ட கோவிச்சுக்கிட்டு குண்டி கழுவாமப் போனா’ யாருக்கு நஷ்டம் என்று சொல்லிக்கொண்டார்.

பாவம், படிப்பு வராமல் ஒரு பையன் கஷ்டப் படுகிறான். அவன் மீது கருணை காட்ட வேண்டாமா? பெரிய பையன் ஆகிவிட்டான் என்பதற்காக அவனை வீட்டுக்குப் போ என்று விரட்டிவிடுவது தர்மமா? அதை மன்னிப்பாரா கர்த்தர்? அதுவும் தகப்பன் இல்லாத பிள்ளை. படிப்பு வந்தவரை படித்துவிட்டுப் போகட்டுமே… அல்போன்ஸ் பிள்ளை இசக்கியின் முதுகை பாசத்துடன் தட்டிக் கொடுத்தார்.

ஆனால் பாளை ஆசாமிகளின் வாயும், கையும் சும்மா இல்லை. வம்பு பேசும் வாய்க்கொழுப்பையும் தாண்டி, ‘அஞ்சாம் வகுப்பு படிக்கும்போதே மாணவனுக்கு மீசை முளைத்த அதிசயம்’ என்று இசக்கியின் வீட்டு முன்பக்கச் சுவரிலேயே அடுப்புக் கரியால் எழுதிப் போட்டார்கள்! ரெண்டு மூணு நாளில் ஊர் பூராவும் நிறைய வீட்டுச் சுவர்களில் ‘பத்தொன்பது வயசாகியும் அஞ்சாம் க்ளாஸ் தாண்டாத பனங்காட்டு மண்டை இசக்கி ஒழிக’ என்றும் எழுதிப் போடப்பட்டிருந்தது. பூரணிக்கு அழுகை தாங்க முடியவில்லை. இப்படியா ஒரு அப்பாவிப் பிள்ளையை ஊரே சேர்ந்து அவமானப் படுத்தும். கடவுள் என்கிற கடங்காரன் அந்தப் பிள்ளைக்கு கொஞ்சம்கூட புத்திசாலித்தனத்தை தராததற்கு, அந்தப் பிள்ளை பாவம் என்ன செய்வான்? அவனும்தான் முக்கி முக்கி புஸ்தகத்தை படித்துப் படித்துப் பார்க்கிறான். ஒரு எழவும் புரிஞ்சி தொலையமாட்டேன் என்கிறது. எல்லா பரிட்சைகளிலும் வாத்யார்கள் முட்டை முட்டையாகத்தான் போட்டு வைக்கிறார்கள். ஆனால் இசக்கிக்கு அதன் உண்மையான மதிப்பீடு தெரியாமல் பெருமையோடு அந்த மார்க்கை அப்படியே அழிக்காமல் அம்மாவிடம் கொண்டுவந்து காட்டினான். பூரணிக்கும் அதுவே பெரிய சந்தோஷமாக இருந்தது.

மணி அடிக்கிற வரையில் வகுப்பில் உட்கார்ந்திருந்து பரிட்சையெல்லாம் வேறு எழுதிவிட்டு வருகிறானே… இசக்கிப் பயல் விசயத்தில் அதுவே பெரிய விசயம்தானே! அதனால் பூரணி அகமகிழ்ந்து போனாள். ஒண்ணாங் கிளாஸில் இசக்கி பெயிலான போதுகூட அதனால்தான் அவள் கவலையே படவில்லை.

‘இப்ப என்ன அவசரம். நல்லா ரெண்டு வருசம் உட்கார்ந்தேதான் படிச்சிப் பாஸ் பண்ணட்டுமே’ என்று பேசாமல் இருந்துவிட்டாள். அம்மாக்காரியே பேசாமல் இருந்து விட்டபோது இசக்கிப் பயல் மட்டும் என்ன பேசிவிடப் போகிறான்? பாஸ் ஆகவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று கொஞ்சமாவது தெரிந்தால்தானே எதையாவது பேச? அவனுக்குத்தான் தெரியாதே பாஸ் ஆகவில்லை என்றால் என்ன அர்த்தமென்று.

ஆகையால் அவன் பாட்டுக்கு அவன் கூடப்படித்த மத்த எல்லாப் பயல்களும் பாஸாகி ரெண்டாங் க்ளாஸுக்கு போய்விட்ட பின்பும, சிரித்தபடி ஒன்ணாங் க்ளாஸ்லேயே விவரம் தெரியாமல் உட்கார்ந்திருந்தான்.

ரொம்பத் தெரிந்த அதே வாத்யார்! பயல்கள்தான் புதுசு புதுசாக வந்தார்கள். இந்த நிலை இசக்கியின் பள்ளிக்கூட வாழ்க்கையில் தொடர்கதை ஆன பிறகும்கூட இசக்கிப் பயலுக்கு கவலையே கிடையாது என்பதுதான் ரொம்ப ஆச்சர்யம்…

இசக்கியின் விடலைப் பருவம் எப்படி ஆக்ரோஷமாக மாறியது என்பதை பிறிதொரு சமயம் பார்க்கலாம்….

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *