ஆலமர காலனி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 5,753 
 
 

எப்பொழுதும் பரபரப்பாய் காணப்படும் ஆலமர காலனியில் அன்று எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அப்படி பேர் வந்ததற்கே காரணமான நூறு வயதை கடந்து விட்ட அந்த ஆலமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.

அந்த மரத்துக்கு பத்தடி தள்ளி திசை வாரியாக வீடுகள் வரிசையாக இருந்தன. அவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றெண்ணி பெரிய பெரிய இயந்திர வண்டிகள் இரண்டும் அருகருகே நின்று அதனை பிடித்துக்கொள்ள கீழே அதனை இயந்திர இரம்பம் கொண்டு அறுவையை ஆரம்பித்தார்கள். அப்படி ஆரம்பித்த அறுவை முடிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரம் ஆனது.அதன் பின் அதனை மெல்ல மெல்ல, கீழே சாய்ப்பதற்கு கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்கள் தேவைப்பட்டது. ஒவ்வொரு கிளையாக வெட்டி எடுத்து அதனை மொட்டையாக்கி,ஊரே வேடிக்கை பார்க்க அது பரிதாபமாய் தலை சாய்த்தது. தலையையும் உடம்பையும் சாய்த்தவர்கள் வெற்றிக்களிப்பாய் அடுத்து வேரோடு பிடுங்க கீழ் மட்டத்தில் அதே இயந்திர வாகனத்தின் மூலம் அதன் அடிமரத்தை சுற்றி குழி பறிக்க ஆரம்பித்தது.

நாற்புறங்களங்களிலும் வரிசையாய் வீடுகள் அமைந்திருக்க, அதன் கீழ் அந்த வீடுகளில் வசித்து வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் சம்பளமில்லா பணியாளனாய் சுத்தமான காற்றை விசிறிக்கொண்டிருந்த்து அந்த மரம். அங்குள்ளவர்களை ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை வரை வெயில் சுட்டெரிக்கும் காலம் என்று கூட இது வரை தெரியாமல் வைத்துக்கொண்டது.. காரணம் அந்த இடத்தை சுற்றி படர்ந்து நிழலை கொடுத்து கொண்டிருக்கும். அப்பொழுது பிறந்த குழந்தையாகட்டும், ஐந்து வயதுதான் ஆகட்டும் இந்த மரத்தினடியில் ஒரு தொட்டிலை அதன் விழுதுகளிலேயே குறுக்கும் நெடுக்குமாய் போட்டு படுத்துறங்கிய குழந்தைகள் எத்தனை பேர்.

இப்பொழுது இந்த மரம் கீழே சாய்க்கப்படுவதை சற்று தள்ளி இருந்த வீட்டிலிருந்து எண்பது வயது மதிக்கத்தகுந்த ஒருவர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் கூட இந்த தொட்டிலில் தூங்கியவர்தான்.இப்பொழுது மனமும் செயலும் முடங்கி கிடக்க வெறும் கண்களால் மட்டுமே கீழே விழும் மரத்தை பார்த்துக்கொண்டிருக்கும் அவர், நீ போய் விட்டாய், என்னை எப்பொழுது இந்த வீட்டார் அனுப்பி வைக்கப்போகிறார்கள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாரோ என்னவோ !

அவர் மனதிற்குள் சொல்லிக்கொண்டார் என் அம்மா கூட அடிக்கடி சொல்லியிருக்கிறாள் இந்த மரத்துலதாண்டா உங்கப்பாவும் படுத்து தூங்கியிருக்காராம். இவர் வயதே எழுபது அகவை என்கிற போது அவர் அப்பாவும் இதே மரத்தில் தூறி கட்டி தூங்கியிருக்கிறார் என்றால் அதன் வயதை நம்மால் கணக்கிட முடிவதில்லை.

போதும் நாம் இத்துடன் நிறுத்திக்கொள்வேம், இதன் அருமைகளையும் பெருமைகளையும். ஏனென்றால் நள்ளிரவு ஆகி விட்டதால் அதை வெட்டியவரை போதும் என்று பணீயாளர்களும் அந்த இயந்திர வாகன்ங்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டன.

சுற்றி பிரகாசமாய் எரிய விட்டுக்கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் எடுத்துச்செல்லப்பட்டு அந்த இடம் முழுவதும் கரு இருட்டு சூழ்ந்து கொண்டது.

வேலை நடைபெறுவதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட வெளிச்சத்தில், பிரகாசம் மங்கி காணப்பட்ட, அங்குள்ள வீடுகளில் முன் வாசலில் எரிந்து கொண்டிருந்த சிறு சிறு விளக்குகள் இப்பொழுது இந்த இருட்டை விரட்ட முயற்சி செய்து கொண்டுள்ளது.

“மெல்ல விசும்புக் குரல் மட்டும் கேட்கிறது. இந்த விசும்பல் குழந்தையினுடையது அல்ல என்று நிச்சயமாக சொல்லி விட முடியும். காரணம் அதன் குரல் வயது தோய்ந்த, மூப்பின் காரணமாக வாழும் பெரியவர்கள், ஒரு வித இயலாமையில் அரற்றுவார்களே அது போல இருந்தது.

அம்மா ஏன் அழுகிறாய்? இப்பொழுது மென்மையாய் மற்றொரு குரல் கேட்டது. கேட்ட குரல் மரம் வெட்டுபவர்களால் மிச்சம் விடப்பட்ட அடிமரத்தின் மேல் பகுதியில் இருந்து வந்தது. எதற்காக அழுகிறாய்? என்னை முழுவதுமாய் வெட்டி விட்டார்களே என்றா? இல்லை நாளை உன்னையும் மண்ணின் ஆழத்திலிருந்து வெளியே எடுத்து கொன்று விடுவார்கள் என்று பயத்தினால் அழுகிறாயா?

சாவை கண்டு பயப்படுவதற்கு நான் என்ன மனித பிறவியா? என் வாழ்நாளில் எத்தனை மரணங்களையும், பிறப்புக்களையும் பார்த்திருக்கிறேன். முதன் முதலில் உன்னை பிரசவிக்க இந்த பூமியில் காலை ஊன்றி ஊன்றி எதிர்த்து வர நான் எடுத்துக்கொண்ட காலம் ஆறு மாதங்கள் தெரியுமா? இரு இலைகள் வெளி வர, நான் ஒரு துளி என் கால்களை இந்த பூமியில் அழுத்திக்கொள்ளவேண்டும்.இப்படி இந்த நூறு வருடங்களாய் உங்களை வெளிக்கொணர எத்தனை தூரம் இந்த மண்ணுக்குள் அழுத்தி உள்ளே சென்றிருப்பேன். அவ்வளவு சீக்கிரத்தில் என்னை வெளியில் எடுத்து விட முடியுமா? இன்று என்னை எடுக்க முடியாமல் நாளை வரலாம் என்று சொல்லி சென்றுவிட்ட இந்த மனிதர்களால் நான் மரணமடைந்து விடுவேன் என்று பயப்படவில்லை.

வெளிப்புறம் அவர்களால் விடப்பட்ட அடி மரத்தின் தண்டு கேட்டது, அப்புறம் ஏன் அழுகிறாய்? நான் நூறு வருடங்கள் பின்னோக்கி பார்த்து அழுகிறேன்.இத்தனை வருடங்கள் வாழ்ந்து விட்ட களைப்பு என்று கூட வைத்துக்கொள்ளலாம்.நம்முடைய வாழ்நாள் நூறு வருடங்களுக்கு மேல் என்பது சாதாரணமானதுதான் என்றாலும் இந்த மனிதர்களுடன் வாழ்வது என்பது, பெரும் புயல், மழை சீற்றங்களை விட சிரமமானது என்பது தெரியுமா?

நான் உங்களை பிறக்க வைத்து இந்த பூமியின் மேல் கொண்டு வர எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று தெரியுமா?

அந்த கதையை சொல்,உன் மகனான எனக்கும் தெரியும் என்றாலும், உன் குரலால் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இன்று மட்டுமே நான் உன்னுடன் இருப்பேன். நாளை இருவரும் வெட்டப்பட்டு பிரிந்து விடுவோம், உனக்காவது வேறோரு உயிர்ப்புக்களை உருவாக்க முடியும். நான் உன்னிடமிருந்து வெட்டப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டால், அதன் பின் நம்முடைய தொடர்புகள் காணாமல் போய் விடும்.

அலமு என்றொரு குட்டி பெண் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நீ சிறு வயதில் இளமையானவனாய், அப்படியே கிளி பச்சையாய், மினு மினுத்துக்கொண்டிருப்பாய். உன்னை கண்டவுடன் அந்த அலமுவுக்கு உன் மேல் கொள்ளை ஆசை. தினமும் உன்னை வந்து பார்த்து விட்டு போகாமல் இருக்க மாட்டாள்.என் வயிற்றிலிருந்து முளைத்தவனல்லவா நீ, உன்னை அவள் தொட்டு தொட்டு கொஞ்சிக்கொண்டிருப்பதை, மண்ணிற்குள் இருந்து ஆசையாய் உன்னையும், அவளையும் பார்த்துக்கொண்டிருப்பேன்.

எனக்கும் கனவுகள் போல் ஞாபகம் வருகிறது. பாவாடை சட்டை போட்டிருப்பாள், குஞ்சலம் வைத்த சடை போட்டிருந்த ஞாபகம். சரிதானே. ஆம், அந்த குஞ்சலத்தை ஆட்டி ஆட்டி அவள் கொஞ்சி கொண்டிருப்பாள் உன்னோடு.

அவளை இந்தளவுக்கு ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறாயே அம்மா சொன்னது அந்த அடிமரம். பெருமூச்சுடன் நான் இந்த இடத்திற்கு வருவதற்கே அவள்தான் காரணம், அப்பொழுது இந்த இடம் முழுவதும் காடாய் இருந்தது. பரந்து விரிந்து இருக்கும் இந்த காட்டை தாண்டி வலது புறம் மாட்டு வண்டி செல்லும் பாதை தெரியும். அதன் வழியாக சென்றால் அங்கு ஒரு அக்ரஹாரம் இருக்கும். அதை ஒட்டி சற்று தள்ளி இரயில்வேயில் பணி புரியும் தொழிலாளர்களுக்கான் குடியிருப்பு ஒன்றிருந்த்து. அங்குதான் எண்ணி வைத்தால் நான்கைந்து வீடுகள் இருக்கும். அவையும் அங்கங்கு விரிசல் விட்டு,கொஞ்சம் பரிதாபமாக காணப்படும். அந்த வழியாக இரயில் பாதை போட வேண்டி ஆங்கில அரசாங்கம் அந்த குடியிருப்பை உருவாக்கி இருந்த்து.அலமுவின் அப்பாவும் அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார்.அவர்களின் மூத்த மகளாய் சுட்டிப்பெண் அலமு இருந்தாள்.

அவளோடு சேர்த்து நான்கைந்து குழந்தைகள் அவர்கள் வீட்டில் இருந்தன. எப்பொழுதும் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் இருந்தது அந்த வீடு. அவள் அப்பா, விடியலில் எழுந்து ஆற்றுக்கு சென்று ஸ்நானம் செய்து விட்டு அப்படியே அங்குள்ள கோவிலுக்கு சென்று ஆண்டவனை பிரார்தித்து விட்டு வீட்டுக்கு திரும்புவார். பின் மனைவி தரும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்று திரும்பும் ஒரு அப்பாவி குடும்ப தலைவனாக இருந்தார். அலமுவின் அம்மாவுக்கு இவர்களை திட்டிக்கொண்டிருப்பதுதான் வேலையோ என்று சில சமயம் நினைப்பேன்.

நில் நில் நீ இங்கிருக்கிறாய்? அதெப்படி அங்கு நடந்தவைகளை சொல்லிக்கொண்டு இருக்கிறாய். சொல்கிறேன். நான் பிறந்தது அவர்கள் வீட்டு முன்னால்தான்.அவர்கள் அம்மா எப்பொழுதும் காக்கைக்கு உணவு வைக்காமல் சாப்பிடமாட்டார்கள். அங்கு அவர்கள் வைக்கும் உணவை சாப்பிட வரும் காகத்தின் எச்சத்தில் விழுந்த நான் அவர்கள் வீட்டு முன் இருந்த சிறு மண் பரப்பில் மெல்ல உயிர் பெற்றேன். இரு இலைகளை கொண்டு நீ வெளியில் வந்தாய்.

முன்னரே சொல்லியிருக்கிறேன். அந்த வயதில் நீ அழகாய் இருந்தாய். உன்னை ஒரு நாள் பார்த்த அலமு தன் குண்டு கண்களால் உன் அழகை பருகியது மட்டுமில்லாமல் தன் பட்டு கைகளால் தொட்டு தொட்டு தடவுவாள். பிரசவம் முடிந்து தன் குழந்தையை யாராவது கொஞ்சும் போது வேடிக்கை பார்க்கும் தாயை போல நான் அதை கவனித்து கொண்டிருப்பேன்.

ஒரு நாள் அலமுவின் அம்மா அங்கு தோட்ட வேலை செய்வதற்காக வந்தவனிடம் இங்க ஒரு ஆலமரம் செடி வந்துருச்சு, அதை பிடுங்கிட்டு, மண்ணை கொத்தி விட்டுடு. இல்லாட்டி வீட்டுல வேர் புகுந்து நாசமாயிடும். நாளைக்கு காலையில வந்து செஞ்சுடறேனுங்க என்று அவன் சொல்லி விட்டு சென்று விட்டான். அருகில் இருந்து அதனை பார்த்துக்கொண்டிருந்தாள் அலமு.

அப்பொழுது அவள் முகத்தை நீ பார்த்திருக்க வேண்டும், அவள் கண்கள் இரண்டும் பொங்கி அழுவதற்கு தயாராய் நினறன. உதடு துடித்தது. அம்மாவிடம் இதை மறுத்து சொல்ல வந்தவள் அம்மாவின் முகத்தை பார்த்தவுடன் வெறும் அழுகையுடன் நிறுத்திக்கொண்டாள்.

என்னடி என்னைய முறைச்சு பார்த்துகிட்டிருக்கே? அம்மாவின் கோபக்குரல் அவளுக்கு பயத்தை உண்டு பண்ண ஒண்ணு மில்லம்மா என்று பதில் சொல்லவே தடுமாறி விட்டாள்.அப்பொழுதெல்லாம் இவர்கள் திண்ணை பள்ளிக்கு இந்த மாட்டு வண்டி வழி தடம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த இடம் புதர்களும் செடிகளும் நிறைந்திருக்கும். குழந்தைகள் பயந்து பயந்துதான் இந்த இடத்தை கடப்பார்கள். ஒரு சில நேரம் பெரியவர்களும் துணைக்கு வருவார்கள். அப்பொழுதெல்லாம் எவ்வளவு தூரம் என்றாலும் வெறும் கால் நடைதான். சில நேரங்களில் மாட்டு வண்டி சவாரி கிடைக்கும். அதுவும் அந்த இடத்தை கடந்து செல்லும் விவசாயிகளின் புண்ணியத்தில்.

விடியற்காலை ஐந்து மணிக்கு விழித்து எழுந்து விட்ட அலமு அம்மா உள் வேலையாக இருக்கும்போது சத்தமில்லாமல் வெளியே வந்தவள் தன் பிஞ்சு கைகளால் என்னை தோண்டி எடுக்க முயற்சித்தாள். அந்த குழந்தை கைகளால் கட்டாந்தரையாக இருக்கும் தரையை எப்படி குழி பறித்து என்னை எடுக்க முடியும்? அதுவும், எனக்கு எந்த காயங்களும் படாமல் எடுக்க வேண்டும் என்று முயற்சித்தாள்.

அப்பொழுது பக்கத்து வீட்டிலிருந்து வெளியே எட்டிப்பார்த்த அலமுவின் பள்ளி தோழன் ரங்கு அலமு என்னவோ செய்து கொண்டிருக்கிறாள் என்று அந்த இடத்துக்கு வந்தான்.

அலமு என்ன பண்ணிக்கிட்டிருக்க? கேட்டவன் இவள் தன் கைகளால் என்னை சுற்றி குழி பறிப்பதை கண்டவன் கொஞ்சம் நில்லு அம்மு, நான் குத்தறதுக்கு ஏதாவது கொண்டு வர்றேன்னு ஓடினான்.அவனும் பிஞ்சு கைகள் கொண்டவன்தானே, எப்படியோ ஒரு சிறு குச்சியை எடுத்து வந்தான். இருவரும் மாறி மாறி என்னை சுற்றி குழி பறித்தனர்.

உள்ளிருந்து அம்மா “அலமு” “அலமு” என்று கூவினாள். இந்தா வந்திட்டம்மா வெளியிலிருந்தே குரல் கொடுத்தவள் எங்கே அம்மா வந்து விடுவாளோ என்ற பயத்தில் பறித்தவரை போதும் என்னை வெளியே எடுத்துவிடலாம் என்று கொஞ்சம் வேகமாக இழுத்தாள். எனக்கு ஏற்பட்ட வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எப்படியோ அவள் கைகளுக்கு வெளியே வந்து விட்டேன். உன் தளிர் மேனி அதற்குள் சுருங்கி கருத்து விட்டாய். அதை கண்டவுடன் அலமுவின் முகமும் கருத்து போய் விட்டது.

அச்ச்ச்சோ.செடி செத்து போச்சாடா? வருத்த்த்துடன் தோழனிடம் கேட்க “இரு கொஞ்சம் தாய் மண் எடுத்து வேர்ல ஒட்ட வச்சுக்க. சொல்லிவிட்டு அவன் அம்மா கூப்பிட்டாள் என்று

பறந்து விட்டான்.இவள் அதை எங்கு ஒளித்து வைப்பது என்று கண்களை சுழல விட்டாள். அவளது வீட்டின் முன் வலது புறத்தில் வைக்கப்பட்டிருந்த குழவிக்கல் கண்களுக்கு தென்பட்டது. அதனருகே சென்று என்னை அந்த மண்ணின் கீழே சாய்த்து வைத்துவிட்டு முன்னாள் வைக்கப்பட்டிருந்த மண் குடுவையினுள் கையை விட்டு அலம்பினாள்.

அதற்குள் இவளை கூப்பிட்டு நீண்ட நேரமாக வராத்தால் வெளியே வந்த அம்மா “ஏண்டி எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டுட்டு இருக்கேன்” வெளியே என்னதான் பண்றே சொல்லிக்கொண்டே வந்தவள் இவள் தன் கைகளை அந்த குடுவையில் விட்டு அலம்பிக்கொண்டிருப்பதை கண்டவுடன் கோபம் தலைக்கேற, ஏண்டி அத்தனை தண்ணியும் நாசம் பண்ணிட்டியே என்று முதுகில் நாலு சாத்து சாத்தினாள்.

முதுகில அடி வாங்கிய வலி இருந்தாலும் எப்படியோ அம்மாவுக்கு தெரியாமல் செடியை எடுத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியினால் அவளுக்கு அந்த வலி பெரியதாக தெரியவில்லை. சட்டென்று உள்ளே ஓடினாள். அம்மாவும் இவளை திட்டிக்கொண்டே உள்ளே வந்தாள். அதற்குள் மற்ற குழந்தைகள் ஒவ்வொன்றாக எழுந்து கண்களை கசக்கிக்கொண்டே

இவளை சுற்றி வர, காலையில் நேரமே எழுந்து குளிக்க ஆற்றுக்கு சென்று விட்ட தன் கணவனை, நினைத்து, உங்கப்பா அஞ்சு நிமிசத்துல வந்துடுவாரு! அதுக்குள்ள ஏதாவது செய்யலாமுன்னு பார்த்தா இதுக ஒண்ணொன்னும் ! முற்றுப்பெறாமல் தனக்குள் முணங்கிக்கொண்டே எழுந்த குழந்தைகளுக்கு ஏதேனும் கலக்கி தரவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே போனாள்.

அம்மாவின் கண்களுக்கு தெரியாமல் ஒளித்து வைத்திருந்த செடியை எடுப்பதற்குள் படாத பாடு பட்டு விட்டாள் அலமு. அம்மா வாசல்படியிலே நின்று கொண்டு இவர்களை வழி அனுப்ப இவள் தயங்கி தயங்கி நடந்தாள். கூட வந்தவர்கள் ஏய் வா நேரமாச்சு என்று இவளை கையை பிடித்து இழுக்க இவளும் அவர்கள் கூடவே நடப்பது போலவே வீட்டை திரும்பி திரும்பி பார்த்து சென்றாள். அம்மா இவர்களை வழி அனுப்பி விட்டு வீட்டுக்குள் திரும்பி உள்ளே நுழைந்ததுதான் தாமதம் தலை தெறிக்க மீண்டும் வீட்டை நோக்கி ஓடினாள்.

அம்மா வெளியே வந்து விடப்போகிறாளோ,அவளின் தோள் மீதி போட்டிருந்த துணிப்பை “டொம்” டொம் என்று முதுகில் அடிக்க,அதனால் தடுமாறி அந்த குழவி இருக்கும் இடத்தை அடைந்தவள் சாத்தி வைத்திருந்த செடியை எடுத்துக்கொண்டு மீண்டும் வேகமாக ஓடி வந்தாள்.

அலமு எல்லோரையும் விட்டு விட்டு திரும்பி ஓடியதை வியப்புடன் பார்த்து கொண்டிருந்த இவள் தோழர்கள், மீண்டும் இவள் ஒரு செடியுடன் வருவதை பார்த்தவுடன் என்ன செடி?என்ன செடி? என்று ஆவலுடன் அவளை சுற்றிக்கொண்டனர்.

இவள் மூச்சு வாங்க இந்த செடி எங்க வீட்டு முன்னால வளர்ந்த்தாக்கும் ! இதை அம்மா இன்னைக்கு பிடுங்கி வெளியே போட சொல்லிட்டா, அதனால் நான் அதை புடுங்கிட்டு வந்திட்டேன். நாம் போற வழியில எங்கயாவது வச்சுடலாம், கூட வந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சியே ஒரு பரபரப்பாய் ஆக்கி விட்டது. சரி சரி வாங்க, நாம் போற இடத்துல எங்கயாவது வச்சுடலாம்.

அவர்கள் ஏகமாய் பரந்து விரிந்து கிடந்த இந்த காட்டை கடக்கும்போது அலமுவின் தோழி அவள் கையை பற்றி “அலமு” இந்த இடத்துல நட்டு வச்சுடலாம் என்று சொல்லவும்

அனைவரும் தாங்கள் கையில் கொண்டு வந்திருந்த பைகளை கீழே வைத்துவிட்டு ஒரு இடத்தை, தேர்ந்தெடுத்து குழி பறிக்க ஆரம்பித்தனர். பள்ளிக்கு நேரமாச்சு ஒருத்தி கிளப்பி விட

தோண்டிய வரை போதும் என்று என்னை அந்த குழியில் நட்டு வைத்து மண்ணை போட்டு மூடினர். அலமு நட்டின உடனே தண்ணி ஊத்தணும், கூட வந்தவர்களில் ஒருவன் சொல்ல மற்றொருவன் தான் கையில் வைத்திருந்த குடுவையில் இருந்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றினான். என்னை நட்டு வைத்துவிட்டு மேலும் கீழுமாய் பார்த்து இரசித்துக்கொண்டிருந்த அலமுவையும் கையை பிடித்து “வா நேரமாச்சு” என்று இழுத்து சென்றனர்.

என்னை சரியாக நட்டு வைக்காததாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் தவித்துப்போனேன். அலமு வீட்டிலிருந்தால் தினமும் அவள் அம்மா வாசல் தெளிக்கும் தண்ணீரே எனக்கு போதுமானதாக இருக்கும். ஆனால் இங்கு இந்த வாண்டுகள் கொண்டு வந்து ஊற்றும், குவளை இல்லாவிட்டால் சிரட்டை தண்ணீர்தான் கிடைக்கும். என்ன அலமுவும்

அவள் நண்பர்களும் தினமும் தண்ணீர் ஊற்றிவிட்டு செல்வதால் உயிர் பிழைக்க போராடிய காலத்திலும் எனக்கு சமாளித்துக்கொள்ள முடிந்தது.மாலை வீடு திரும்பும்போது யாராவது ஒருவர் எனக்காக தண்ணீர் பிடித்து வந்து ஊற்றிவிட்டுத்தான் அவர்கள் வீடு செல்வார்கள்.

ஆறு மாத காலம் என் உயிர் பிழைக்குமா என்று போராட்டத்திலேயே கழிந்து விட்டது.

தினமும் போகும் போதும், வரும் போதும், அலமு, கண்கள் கலங்க என்னை பார்த்து செல்வதை நான் மண்ணிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பேன். இந்த பெண்ணுக்காகவாவது இறைவா என்னை பிழைக்க வைத்து விடு என்று இறைவனிடம் மன்றாடியிருக்கிறேன்.

ஆறாவது மாதம் உன் இரு இலைகளுக்கு மேல் புதிதாக இரு இலைகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளதை பார்த்த்தும் அலமுவுக்கும், அவள் நண்பர்களுக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை.

ஒரே ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் குதிப்பதை நான் மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தேன்.அதன் பின் அவள் தினமும் வந்து என்னை பார்த்து விட்டுத்தான் பள்ளிக்கு போவாள். ஒரு நாள் வரவில்லை என்றாலும் அவளை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

அப்பொழுது நீ இளந்தளிர், சிறு வயது, அவளை கண்டவுடன் படபடப்பாய். அவள் உன்னை கைகளால் மெல்ல வருடிக்கொடுப்பாள். நீ சிலிர்த்து நின்றதை நான் கீழிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பேன்.

அடுத்து வந்த வருடத்தில் உன்னுடைய உருவம் கொஞ்சம் மாறியது. கொஞ்சம் தடித்தாய், என்றாலும் இளந்தளிர்கள் உன்னை சுற்றி உருவாக்கி கொண்டுதான் இருந்தேன்.

இப்பொழுது நாம் பெரிய குடும்பம் ஆகிவிட்டதால், உங்கள் அனவரையும் சுமப்பதற்கு எனக்கு தண்ணீர் அதிகம் தேவைப்பட ஆரம்பித்தது. உன்னை மண்ணை உதைத்து,உதைத்து மேலே வளர்த்துவது போல நானும் கீழே மண்ணுக்குள் போக ஆரம்பித்தேன். உங்களை தாங்க கூடிய பலம் அப்பொழுதுதான் எனக்கு கிடைக்கும், அதுபோல உங்கள் அனைவருக்கும் தண்ணீர் தர நான் கீழே,கீழே போக வேண்டியதாயிற்று..

உனக்கு மூன்று வயது ஆன பொழுது, திடீரென அலமு நம்மை பார்க்க வருவதை நிறுத்தி விட்டாள். நீ அவளை பார்க்காமல் ஏங்கிப்போனதை உணர்ந்தேன். ஏன் நான் கூட அவளை பார்க்காமல் இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருந்தது, இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் உணவுக்காக நான் மண்ணுக்கடியில் போராட வேண்டி இருந்ததால் என்னால் அதிக நேரம் கவலைப்பட முடியவில்லை.. அவளை எதிர் பார்த்து ஏங்கி ஏங்கி மூன்று மாதங்கள் ஓடிய பொழுது “ஜல் ஜல் ஜல்” என்று ஒரு மாட்டு வண்டி அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. வண்டி சற்று தயங்கி அந்த இடத்தில் நிற்பதை பார்த்தேன்.

இறங்கி வந்தி நின்ற பெண்ணை கண்டதும் என்னால் பேசவே முடியவில்லை.சிறு பெண்ணாய் பார்த்த அலமு பெரிய மனுசியாய் வேசமிட்டு நின்று கொண்டிருந்தாள். உன்னை கையில் பற்றி கன்னத்தில் வைத்துக்கொண்டாள். மண்ணில் விழுந்த அவள் கண்ணீர் துளிகள் என் மேனியிலும் பட்டது.நான் திடுக்கிட்டேன்.

அலமு ஏன் அழுகிறாள்? கல்யாணப்பெண் போல அலங்காரம் பண்ணி கொண்டிருக்கிறாள். ஆனால் கண்களில் கண்ணீர் வழிகிறதே? இவளுக்கு பத்து வயது இருக்குமா? என்ன அழகாய் ரோஜாப்பூ போல இருக்கிறாள். இந்த குழந்தையிடம் இருந்தா இந்த அழுகை.உனக்கும் மூன்று வயது ஆகி இருந்ததால், உன் தண்டுகள் அவள் கண்ணீரை கண்டு சிலிர்த்துக்கொண்டன. நான் உன்னை மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தேன்.

“அலமு” போலாம் நேரமாச்சு” திடீரென்று ஒரு வண்டிக்கருகில் கேட்டது. மண்ணுக்குள் இருந்ததால், தள்ளி நின்று கொண்டிருப்பவர்களை பார்க்க முடியவில்லை.குரலை மட்டும்தான் கேட்க முடிந்தது. குரலை வைத்து வயதை எடை போட்டேன். வயது கொஞ்சம் முதிர்ந்து காணப்பட்டது. எனக்குள் சோகம் வந்து சூழ்ந்து கொண்டது. ஐயகோ, வயதானவரை இந்த குழந்தையின் தலையில் கட்டி விட்டார்களா? கடவுளே அதற்காகத்தான் இந்த குழந்தை அழுது கொண்டிருக்கிறதா? பாழும் சமுதயாமே, அந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன தெரியும்? அதனை கொண்டு போய் குடும்பம் என்னும் கடலுக்கு தள்ளி விடுகிறீர்களே, அதுவும் அவளை விட மிக வயது மூத்தவனுக்கு ! எனக்கு மனசு என்று ஒன்று இல்லாவிட்டாலும் ஒரு வித அயர்ச்சிதான் காணப்பட்டது.

ஆயிற்று நான்கு வருடங்கள் ஓடி விட்டன. நீ இப்பொழுது வளர்ந்து வாலிபனாகி விட்டாய். உன்னுடைய பாரங்கள் எனக்கு தாங்க முடியாததாகி விட்டது. நீங்களே உங்கள் இலைகள் மூலம் உணவை தேடிக்கொண்டாலும், தண்ணீர் தேவை என்பது நான் மட்டுமே முயற்சி செய்ய வேண்டியதாக இருக்கிறது. என்னுடைய கிளைகளை மண்ணுக்குள்ளும் விரிக்க ஆரம்பித்தேன். தண்ணீரை தேடி எங்கெங்கோ கிளைகளை பரவ விட்டேன்.அவைகள் தண்ணீர் இருக்கும் பக்கமாக மண்ணுக்கடியில் வேகமாக வளர்ந்தன.

ஒரு நாள் மாட்டு வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஒரு குடும்பம் இறங்கியது.முப்பது வயது மதிக்க தகுந்த ஆண், பெண்ணுக்கு இருபது இருக்கலாம், அவர்கள் கூடவே இரு ஆண் பிள்ளைகள், ஒரு பெண். இவர்கள் கூட தாத்தா பாட்டி என இருவர். எல்லோரும் வந்திறங்கினர்.

அப்பா கடைசியா நம்ம சொந்த ஊருக்கே வந்துட்டோம். போதும்பா, ஊர் ஊரா பிழைப்பு தேடி அலையறதுக்கு இங்கனயே இரண்டு மாடு வாங்கி இருந்துக்கலாம். சொல்லிக்கொண்டே வேக வேகமாக நாலு புறமும் கம்பை நட ஆரம்பித்தார்கள்.அந்த குடும்பமே வேலை செய்வதை பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.இரண்டு மணி நேரத்துக்குள் அருமையான குடிசை போட்டு விட்டனர். நீ கூட இலைகளால் சலசலத்து உற்சாகப்பட்டதை உணர்ந்து கொண்டேன்.

அலமு போன பின்னால் இந்த குடும்பம் வந்தது உண்மையிலேயே நமக்கு சந்தோசமாக இருந்தது. அப்பாவும், பிள்ளையும் அந்த இடங்களை சுத்தப்படுத்தினர். உன்னை பார்த்து அப்பா இந்த ஆலமரம் நல்லா வளர்ந்திருக்கு, இதையும் வெட்டணுமா? இந்த கேள்வி என்னை பயமுறுத்தி விட்டது. ஆனால் அந்த பெரியவர் வேணாண்டா, இப்பவே நல்ல உயரமா வளர்ந்திருக்கு, நமக்கு இதுக்கு கீழே படுக்கறதுக்கும், குழந்தைகள் விளையாடறதுக்கும் வசதியாய் இருக்கும் என்று சொன்னதும்தான் போன உயிர் திரும்ப வந்தது.

இப்ப எனக்கு மேலே உனக்கு கீழே எப்பவும் குழந்தைகள் விளையாடறதை பாத்துகிட்டே இருக்கறது ஒரு சந்தோசத்தை கொடுக்குது. மதியம் ஆனா எல்லாரும் குடும்பத்தோட இங்க வந்து உட்கார்ந்துக்கறது நிறைவை கொடுக்குது. அப்புறம் உன் மேலே நிறைய பறவைகள் எல்லாம் வந்து உட்கார ஆரம்பிச்சிடுச்சு. நீ நாளுக்கு நாள் உயரமாயிட்டே போனே. அதை விட நல்ல அகலமாயிட்டும் வந்தே. உன்னைய பார்க்க பார்க்க எனக்கே கண்ணு பட்டுடுமோன்னு பயந்துக்குவேன். நீ நிறைய பூவை பூக்க ஆரம்பிச்சே. நீயே உன்னைய தாங்கறதுக்கு விழுதுகளை பூமிய பாத்து வளர்த்துக்கிட்டே. எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. தன்னுடைய குழந்தைக தானாவே காலை ஊன்றி வளர்றதை பாக்கறது எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா?

இப்ப நாம பாக்கறப்ப வந்த குழந்தைங்க பெரிசாயிடுச்சுங்க, தாத்தா, பாட்டி இரண்டு பேரும் உனக்கு கீழே தான் இறந்து போனாங்க. அவங்களை நாந்தான் மடியிலே தாங்கிட்டேன். அதுக்கப்புறம் அவங்களை எல்லாம் சுடுகாட்டுக்கு கொண்டு போய் புதைச்சாங்க. இந்த குழந்தைங்களுக்கு கல்யாணம் நடந்துச்சு, அவங்களும் தன்னோட துணைகளோட பக்கத்து பக்கத்துல குடிசை போட்டு கிட்டாங்க. இப்ப அக்கம் பக்கம் இருந்தும் கொஞ்சம் பேர் வந்து குடிசை போட்டு கிட்டாங்க. எல்லோரும் நம்ம மேல அன்பாகத்தான் இருந்தாங்க. இப்ப உனக்கு அடியிலே எப்பவும் குழந்தைங்க சத்தம் கேட்டுகிட்டே இருக்குது. நீயும் நடுத்தர வயசை தொட்டுட்டே.முதல்ல குழந்தைங்களா வந்து உனக்கு கீழே விளையாண்டவங்களுக்கே வயசு அமபதை தொட ஆரம்பிச்சுருச்சு. அவங்க கூட வந்த அப்பாவும், அம்மாவும் கூட இந்த உலகத்தை விட்டு போயிட்டாங்க.

ஒரு காலத்துல அலமுவும் மத்த குழந்தைகளும் பயந்து பயந்து நடந்து போன இடம் இப்ப கடைகளாகவும், வீடுகளாகவும் மாற ஆரம்பிச்சுது. குடிசையா இருந்தது எல்லாம் சுண்ணாம்பு வச்சு மச்சு வீடாக்க ஆரம்பிச்சுட்டாங்க.எவ்வளவு கட்டடவேலைகள், தோட்ட வேலைகள், ஒரு கிலோமீட்டர் தள்ளி நடந்தாலும் வேலை செய்யறவங்க நடந்து வந்து, உனக்கு கீழே உட்கார்ந்து ஓய்வு எடுத்துட்டுதான் போவாங்க. இது எனக்கு பெருமையா இருந்துச்சு.இதை விட சந்தோசமான சமாசாரம், இந்த இடம் நல்லா வளர்ந்துட்டதால முனிசிபாலிட்டி காரங்க ரோடு கூட போட்டுட்டாங்க, ஆனா அந்த ரோட்டுக்கு நாம இடைஞ்சலா இருக்கறதா பேசி கிட்டாங்க. நாமளா இவங்க ரோட்டு மேல வந்து உட்கார்ந்தோம். இவங்களா நாம இருக்கற பக்கம் ரோட்டை போட்டுட்டு இப்பா நாமதான் இடைஞ்சல் பண்ண்றோமுன்னுட்டு எல்லார்கிட்டேயும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

இப்ப நம்மளை சுத்தி நிறைய வீடுகள் வந்துடுச்சு.

ஒருத்தர் உன் மேல ஆணி அடிச்சு எதையோ மாட்டிட்டு போறாரு. அதை பாத்து நிறை பேருங்க அதே மாதிரி ஆணி அடிச்சு எதை எதையோ மாட்டிட்டு போறாங்க. எனக்கு வேதனையா இருக்கு. உன்னைய ஆளாக்கறதுக்கு நான் எப்படி பாடுபட்டிருப்பேன்.எதுக்கு ஆணி அடிக்கிறாங்க. உனக்கு எவ்வளவு வேதனையா இருந்திருக்கும். ஒரு கயித்தை வச்சு கட்டுனா என்ன?.

மறுபடி ஒரு சந்தோசமான சமாச்சாரமா உனக்கு அடியில உட்கார்ந்து பேசிக்கிறாங்க. இந்த இடத்துக்கு அரசாங்கம் “ஆலமர காலனி” அப்படீன்னு பேர் வச்சிடுச்சாம். எனக்கு இதை கேக்கறதுல ரொம்ப சந்தோசம். உனக்கும் சந்தோசமாகத்தான் இருக்கும். என் மகன் பெயர்ல ஒரு காலனி வருதுன்னா பெத்தவளுக்கு சந்தோசமா இருக்காதா?

இப்ப ஆலமர காலனி கொஞ்சம் கொஞ்சமா பிரபலமடைய ஆரம்பிச்சிருச்சு. உன்னைய நடுவுல வச்சுட்டு எல்லா பக்கமும் சந்து விட்டு நிறைய மச்சு வீடுகள் வர ஆரம்பிச்சிடுச்சு. இந்த இடம் ஒரு காலத்துல காடா இருந்துச்சுன்னு யாராவது சொன்னா நம்ப மாட்டாங்க.

ஒரு நாள் ! நாலு சக்கரத்துல ஒரு வண்டி வந்து நிக்குது. அங்கிருக்கறவங்க கொஞ்சம் பேர் ஆச்சர்யமா வந்து பாக்கறாங்க. அதுல இருக்கற ஒருத்தர் சொல்றார். என்ன இதைய போய் எல்லோரும் ஆச்சர்யமா பாக்கறீங்க. பெரிய பெரிய டவுன்னுக்குள்ள எல்லாம் இதுதான் ஓடுது.

பஸ் ஏற முடியாதவங்க இதுல ஏறி போய்க்கலாம். ஆனா கட்டணம் அதிகமாக கேப்பாங்க.

அப்படீன்னு சொல்றார். அவர் மதராஸ் அப்படீங்கற ஊர்ல வேலை செய்யறவராம், அக்கா வீட்டுக்கு உறவுக்கு வந்திருக்கார் குடும்பத்தோட.எப்பவும் உனக்கு கீழதான் உக்காந்திருப்பார்.

அந்த நாலு சக்கர வண்டியை ஓட்டிட்டு வந்தவர், வண்டிய விட்டு இறங்கறார் இந்த ஆலமரத்துக்கு கீழே நிறுத்திக்கிறேன். வண்டிய வாடகைக்கு ஓட்டறேன். சொல்லிவிட்டு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி விட்டார்.நம்ம காலனியிலயே இந்த வண்டி நிக்கறது அங்குள்ளவங்களுக்கு பெருமையா இருந்துச்சு. இது வரைக்கும் இந்த இடத்துல மாட்டு வண்டி நின்னிருக்குது, குதிரை வண்டி நின்னிருக்குது. இதுக்கு பேரு காரு வண்டி அப்படீன்னு பேசிகிட்டாங்க.

இப்ப காரு வண்டி வேணும்னா ஆலமர காலனிக்கு போனா கிடைக்கும். அப்படீன்னு அங்கு வரவங்க எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க. திடீருன்னு நம்மளை சுத்தி போட்டிருக்கற ரோட்டுல இந்த பக்கமும் அந்த பக்கமும் கூட்டமா ஆளுக நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.

அவங்க பேசி எல்லாம் முடிச்சுட்டு வாங்க நிழல்ல நிப்போமுன்னு உனக்கு கீழே வந்தாங்க.

அப்ப காலனி வாசி ஒருத்தர் வந்து என்ன சார் இங்க இத்தனை கூட்டம்? கேட்டவுடன் உங்க காலனிக்கு பஸ் ஸ்டாப் போட்டிருக்காங்க. இனிமேல் “ஆலமரம்” இல்லேன்னா ஆலமர காலனி அப்படீன்னு ஸ்டாப்பிங்குக்கு பேர் கொடுத்திருக்காங்க.

எனக்கு ஒரே சந்தோசமாயிடுச்சு. உன் பேர்ல காலனி வந்துடுச்சு. இப்ப பஸ் நிக்கற இடத்துக்கு கூட உன் பேரை கொடுத்துட்டாங்க.இப்ப பஸ்ஸுக எல்லாம் உன்னை சுத்தி சுத்திதான் போகுது. சில நேரம் நிக்குது. “ஆலமர ஸ்டாப்” இறங்கிக்குங்க கண்டக்டரின் குரல் கேக்கும்போதெல்லாம் எனக்கு அலமு ஞாபகம் வந்துடுது. அந்த குட்டி பொண்ணு என்னைய இங்க கொண்டு வந்து வச்சதுனாலதான் நமக்கு இத்தனை பெருமை அப்படீன்னு மனசுக்குள்ள நினைச்சுக்குவேன்.

நல்ல மதியான வேளையில உனக்கு கீழே நாலைஞ்சு பேரு உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்காங்க. அந்த காரு வண்டி கூட அங்க நின்னுகிட்டு இருக்குது. ஒரு வயசான பாட்டி தள்ளாடி தள்ளாடி நடந்து வர்றாங்க. வந்தவங்க அப்படியே உனக்கு கீழே வந்தவுடனே மயக்கமாயிடறாங்க. அப்ப அங்க உட்காந்திட்டு இருக்கறவங்க பதட்டத்தோட எழுந்து வர்றாங்க. யாரோ பாட்டி மயக்கம் போட்டு விழுந்துடுச்சு அப்படீன்னு சொல்லிகிட்டு யாராவது தண்ணி கொண்டாங்க, சொல்லி கொண்டே பாட்டிகிட்ட வர்றாங்க.

அந்த பாட்டி மண்ணுமேல விழுந்த உடனே எனக்கு புல்லரிக்க ஆரம்பிச்சுது.இது என்ன திடீருன்னு இப்படியாகுது அப்படீன்னு மேலே பாக்குறேன். அந்த உடம்போட ஸ்பரிசம் “ஆஹா” இது என்னோட அலமு உடம்பாச்சே. அப்படியே சந்தோசத்துல மிதக்குறேன். அலமு அலமு கடைசியில எங்கிட்ட வந்துட்டயா? உன்னைய உசுப்புறேன். நீ எதுக்குன்னு தெரியாம அம்மா

சொன்ன படி உன்னோட அங்கங்கள் எல்லாத்தையும் உலுப்புறே. இதனால் பூ காய், பழம் அப்படீன்னு அந்த பாட்டி மேலே விழுகுது. சுத்தி நிக்கறவங்க எல்லாம் என்ன காத்து கூட கம்மியா இருக்கு, ஆனா இந்த மரம் இப்படி ஆடுது அப்படீன்னு சொல்றாங்க.

அவங்களுக்கு தெரியுமா, எங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கு !, என்னைய உருவாக்குன ஜீவன் இப்ப என் கிட்டயே வந்து படுத்திருக்குதுன்னு. தெரியுமா?

பாட்டிய எழுப்ப எல்லோரும் முயற்சி பண்ணறாங்க. ஆனா பாட்டி அப்படியே உணர்ச்சியில்லாம கிடக்கறாங்க. எனக்கு புரிஞ்சு போச்சு. அலமு போய் சேர்ந்துட்டா. அவ ஜீவன் எங்கிட்ட வரணும்னு துடிச்சுகிட்டே இருந்திருக்கு. எப்படியோ தடுமாறி வந்து சேர்ந்துட்டா. இப்ப இவள் உடம்பை புதைக்க ஏற்பாடு பண்ணனுமே? எனக்கு உணர்ச்சி இருக்குன்னு சொன்ன்னே தவிர வாய் இல்லையே? அலமுவ இவங்க என்ன பண்ணுவாங்க அப்படீன்னு கவலையோட பார்த்துகிட்டு இருக்கேன்.

பாட்டி இறந்துட்டாங்க போல இருக்கு !இவங்க யாரு எங்க இருந்து வர்றாங்கன்னு தெரியலையே, பலர் பலவிதமாக பேசிக்கொண்டிருந்தனர்.எனக்கோ நேரம் செல்ல செல்ல என்ன நடக்குமோ என்கிற கவலையே பெரிதாக இருந்தது.

போலீஸ் வந்தது.எல்லாரையும் விசாரித்த்து. அநாதை பிணமாய் எரித்து விடலாம் என்று முடிவு செய்தது. அப்பொழுது அந்த காலனியை சேர்ந்த நான்கைந்து பெரியவர்கள், இளைஞர்கள், மெல்ல போலீசாரிடம் வந்தனர். ஐயா நாங்க வேணா இந்த பாட்டிய அடக்கம் பண்ற பொறுப்பை எடுத்துக்கறோம். இவங்க இந்த உலகத்துல வாழ்ந்து முடிச்சவங்க. இவங்களை அனாதை பிணமா எரிக்கறதை விட நாங்க எல்லாம் முன்னாடி நின்னு அடக்கம் பண்ணிடறோம். போலீஸ் மேலும் ஆலோசித்து சரி ஏற்பாடு பண்ணிக்குங்க. அப்படீன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.

என்னால மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியலை. என் அலமுவ, என் கிட்டயே வந்து உயிர் விட்ட அலமுவ அநாதையா அனுப்ப கூடாதுன்னு என் காலனிவாசிகளாலேயே அடக்கம் பண்ண வச்ச அந்த ஆண்டவுக்கு நன்றியை சொன்னேன். ஆண்டவா ஒரு வாயில்லா ஜீவனான என்னோட கோரிக்கைய கூட நிறைவேத்தி வைக்கிறியே !

அப்பவே எனக்கு இந்த மண்ணின் பிடிப்பு போய் விட்டது என்று உனக்கு தெரியுமா மகனே. இந்த பூமியில் கிட்டத்தட்ட எண்பது வருடங்கள் ஓட்டிவிட்டேன். என்னை உருவாக்கிய அலமுவும் இப்பொழுது மறைந்து விட்டாள்.அவள் என்னை விட ஐந்தாறு வயது மூத்தவளாய் இருக்கலாம்.ஆனால் அவள் தான் என் தாய் என்று சொல்வேன். தானாக உருவாகி இருக்கலாம், அந்த தோட்டக்காரனால் பிடுங்கி எறியப்பட்டு காணாமல் போயிருப்பேன். ஆனால் அலமுவின் கையால் உயிர் பிழைத்து இத்தனை நாள் வாழவேண்டும் என்ற விதி இருக்கிறது. அவளும் என்னிடமே இறுதி காலத்தில் வந்து சேரவேண்டும் என்ற விதியும் இருந்திருக்கிறது.

பாத்தியா?

என்ன ஆச்சு இந்த காலனிவாசிகளுக்கு? ஒருவருக்கொருவர் முறைத்து கிட்டிருக்காங்க? இவர்களின் மனோபாவங்கள் ஏன் இப்படி இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இப்பொழுதெல்லாம் வடக்கு பக்கம் இருப்பவர்கள் உனக்கு கீழே நின்றால் மற்ற பக்கமிருப்பவர்கள் நிற்பதில்லை. அதுபோல தெற்கு பக்கம் உள்ளவர்கள் வந்து நின்றால் வடக்கு பக்கம் உள்ளவர்கள் நிற்பதில்லை. எதனால் இப்படி? என்னை பொறுத்தவரை இந்த மக்கள் அனைவருமே என் மண்ணில் உள்ளவர்களல்லவா? இவர்களுக்குள் ஏன் இத்தனை விரோதம்? எனக்குள்ள நானே சிந்திச்சு பாத்துக்கறேன். அதற்கும் ஒரு நாள் என் மேல் உட்கார்ந்து கொண்டு இரண்டு பேர் பேசிக்கறதை கேட்ட பின் தான் புரிந்தது.

வடக்கு பக்கம் குடியிருந்த ஒருவரின் பையன் தெற்கு பக்கம் குடியிருந்தவரின் பெண்ணை, கூட்டிட்டு போய் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டான். இது அவர்களுக்குள் பெரும் விரோதமாய் முளை விட ஆரம்பித்து விட்டது. எனக்கு கவலை வந்தது. இத்தனை நாட்கள் இவர்கள் காட்டிய ஒற்றுமை அந்த இருவரால் பாழ்படுத்திக்குவாங்களோ அப்படீன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.

இவங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஒவ்வொரு மனிதனும் மற்றொருவனை பற்றி வெளியில் ஒரு விதமாகவும் மனதுக்குள் வேறு விதமாகவுமே கருத்து வச்சிருக்கறான்.நேரில் பேசும்போது அவனை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசிக்கொள்வதும், அவனுக்கு பின்னால் அவனை பற்றி புரணி பேசறதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உனக்கே தெரியும், இந்த காலனி மக்களின் எத்தனையோ இரகசியங்கள், புரணி பேசுதல் இவைகளை உனக்கு கீழே பேசிக்கொண்டுதானே இருந்தார்கள். நமக்கு காதும், உணர்வும் இல்லை என்ற எண்ணத்திலேதானே இப்படி கூட்டம் கூட்டமாய் புரணி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம் நாம் கேட்டுக்கொண்டுதானே இருந்தோம். நாம் மட்டும் வாய் இருந்து வெளியே சொல்லி இருந்தால் இந்நேரம் இங்கு என்ன நடந்திருக்கும்?

அப்பொழுதெல்லாம் இவர்கள் போலித்தனமாய் இருந்துவிட்டு, ஏதோ இருவர் காதல் மட்டும் தான் வாழ்க்கை, அதற்கு பின் என்ன என்று கூட தெரியாமல் போனவர்களை பற்றி கவலைபட்டு விரோதிகளாக்கிக்கொள்கிறார்கள். இதை விட வேடிக்கை கூட நடந்தது.அந்த பெண்ணின் வீட்டாரும், ஆணின் வீட்டாரும் கூட ராசியாகி விட்டார்கள். பாவம் அவர்களுக்காக விரோதமான இவர்கள் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேச வெட்கப்பட்டுக்கொண்டு முறைப்பா இருக்கறதா ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்கறாங்க..

அம்மா நீ இங்குள்ளவங்களை பற்றியும், அலமுவை பற்றியுமே இதுவரை சொல்லிக்கொண்டிருந்தாய். இந்த நூறு ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை மாற்றம்,இடங்களின் தோற்றங்கள் ஆகியவை பற்றி ஒன்றையும் பேசவில்லையே.அது மட்டுமல்ல, “ஆல மர காலனி” என்று பெயரிட்டு அழைத்துவிட்டு நம்மை வெட்டிவிட இவர்களுக்கு எப்படி மனம் வந்தது.

மகனே நாம் நிலையாக ஒரு இடத்தில் நின்று கொண்டிருப்பவர்கள். நமக்கு கேட்கும் திறன் கிரகிக்கும் திறன் இருந்தாலும் மற்ற இடங்களின் மாற்றங்களோ, அல்லது வாழ்ந்த மக்களின் மனோபாவங்களையோ கிரகிக்க கூடிய மனம் நம்மிடம் கிடையாது. நாம அந்த இடங்களுக்கு போய் பாக்கவும் முடியாது. நம்மால் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியும். அதையத்தான் இங்க உங்கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். இவங்க எப்படி நம்மளை வெட்டணும்னு மனசு வந்துச்சுன்னு.

ஒரு வருடத்திற்கு முன்னாள் இங்கு ஒரு சம்பவம் நடந்தது. யாரோ இருவர் எங்கேயோ நடந்த தகராறில் ஒரு வரை கொலை செய்து விட்டு உனக்கு அடியில் மறைத்து வைத்து விட்டு சென்று விட்டனர். நீயும், நானும் அதற்கு என்ன செய்ய முடியும்.

அதை மெளன சாட்சிகளாக வேடிக்கை பார்த்துக்கொண்டுதானிருந்தோம்.

அதற்கு மறு நாள் பத்திரிக்கைகள் நம் இடத்தில்தான், பல் வேறு தவறுகள் நடப்பதாகவும், ஆன் பெண்கள் நம்மை தாண்டி செல்லவே அச்சப்பட வேண்டியதாக நம் உருவம் இருப்பதாகவும் எழுதியிருந்தன. அதுவரை உன் பெயரை சொல்லி காலனி என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டிருந்தவர்கள், “கொலை கார காலனியா? என்று கேட்கும் அளவுக்கு வதந்திகளை பரப்பி விட்டார்கள். அடுத்து வடக்கு தெரு, தெற்கு தெரு இருவருக்கும் ஆகாமல் போனதால், இவர்கள் யாராவது ஒரு கூட்டம் உனக்கு அடியில் கூடினாலும் சதியாலோசனைதான் நடை பெறுகிறது என்று ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டார்கள். அதற்கு காரணம் நாம்தானாம். மிகப்பெரியதாகவும், எளிதில் ஒளிந்து கொள்ளக்கூடியதாகவும் உன் உருவம் இருப்பதாகவும், இருளில் யார் யாரோ பதுங்கி செல்கிறார்கள் என்று காவல் துறைக்கு மனு மேல் மனு போட்டிருக்கிறார்கள்.

அடுத்து இது போதாதென்று நடக்கும் பாதையை விட்டு ஒரு ஓரத்தில் இருந்து வந்த நாம் இவர்கள் பாதையை அகலப்படுத்தி போட நாம் இடைஞ்சலாக இருப்பதாகவும் கருதி நம்மை வெட்டுவதற்கு அனுமதி கோரி அரசுக்கு கடிதம் கடிதம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

அடுத்த்தாக மரம் வெட்டி பிழைப்பவர்களின் கண்ணை உறுத்தும் விதமாக நீ நன்கு வளர்ந்து செழித்து இருப்பது அவர்கள் கண்களுக்கு உறுத்தலாகவே இருந்து கொண்டிருக்கிறது நீ உன் உடலில் எல்லா ஜீவ ராசிகளும் வாழ வழி விட்டதால், விஷ ஜந்துக்கள் இதன் பொந்துக்களில் வாசம் செய்வதாகவும் இரவில் நம்மை சுற்றி நடமாடுவதால் பொது மக்களின் உயிருக்கு எப்பொழுதும் ஆபத்து என்று பொது மக்களும் சிலர் அரசுக்கு மனு கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி நம்மை புகழ்ந்து, வாழ்ந்து வந்த மனிதர்களே, தங்களுக்குள் இருக்கும் மனப்பான்மையால் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க மேற்கொண்ட முயற்சி இப்பொழுது நம்முடைய இறப்பில் வந்து முடிந்திருக்கிறது. நாம போயிட்டா இந்த இடம் சுத்தமாகிவிடும் அப்படீன்னு இங்குள்ள மக்கள் நினைச்சா அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்.

இதுவரை நான் உனக்கு அடியில் மக்கள் பேசிக்கொண்டிருந்த வரையில் இவைகள் அனைத்தையும்உனக்கு சொன்னேன். அதுவும் உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும், நாளை நம்முடைய பிரிவு என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது.அதனால் நம் வாழ்வு எப்படி இருந்தது என்பது இப் பூவுலகில் பதிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்திலேதான் இந்த கதையை உன்னிடம் சொன்னேன்.

காலை பத்து மணி அளவில் மீண்டும் மரத்தை சுற்றி குழி எடுக்க இயந்திரங்கள் வந்து விட்டன. வேலையாட்களும் வந்து விட்டனர். மரத்தை வெட்டி ஆங்காங்கே அடுக்கி வைத்திருந்ததை லாரியில் ஏற்றி அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.ஏறக்குறைய ஐந்து லாரிகள் இந்த மரத்துண்டுகளை ஏற்றி செல்ல வரிசையாக நின்று கொண்டிருந்தன.மிச்சம் இருந்த கிளைகளையும், சுள்ளிகளையும் அந்த காலனி மக்களே பொறுக்கி எடுத்து அவரவர்கள் வீட்டிற்க்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர்.

மேலே மிச்சமிருக்கும் துண்டையும் வெட்டி எடுத்துவிடலாமா? கேட்ட வேலையாளிடம் வேண்டாம் வேர் அடி வரை ஆழம் போயிருக்கிறது. அதனை இயந்திரத்தில் கட்டி இழுக்க வேண்டும். அதற்காக அப்படியே இருக்கட்டும். கடைசியில் பார்த்துக்கொள்ளலாம். மேஸ்திரி போலிருந்தவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

குழி எடுக்கும் வேலைகளை இயந்திரங்கள் செய்து கொண்டிருந்த வேலையிலும் வேர் சிரித்த்ததை மேலிருக்கும் தண்டு உணர்ந்த்து. “அம்மா” இப்பொழுது கூட சிரிக்கிறீர்களே?.

ஆம் அவர்கள் சொன்னதை கேட்டாயா? நான் பிரசவித்த முதல் குருத்து நீ, அதே போல் என்னை மண்ணிலிருந்து எடுக்கவேண்டுமென்றால் மேலே நீ இருந்தால்தான் முடியும் என்று சொல்கிறார்கள். கடைசி வரை நீ என்னுடன்தான் இருக்கிறாய்.

திடீரென்று பெரும் கூட்டம் ஒன்று அங்கு வந்த்து. நிறுத்துங்கள் நிறுத்துங்கள் கூச்சலிட்டனர்.யார் நீங்கள், எதற்காக நிறுத்த சொல்கிறீர்கள்.

இந்த மரத்தை வெட்டக்கூடாது என்று கோர்ட் உத்தரவு வாங்கி வந்திருக்கிறோம். உத்தரவை காட்டுகிறார்கள்.

வேலை அப்படியே நிறுத்தப்படுகிறது. வெட்டிய குழிகளை மூடி விட்டுத்தான் செல்ல வேண்டும். அந்த கூட்டத்தின் வேண்டுகோளுக்கு அந்த இயந்திரங்கள் பறித்த குழிகளை மீண்டும் முடுகின்றன.

அன்று இரவில மீண்டும் அதே அழுகை சத்தம் அம்மா அவர்கள்தான் நம்மை விட்டு விட்டு போய் விட்டார்களே மீண்டும் ஏன் அழுகிறாய்? மகனே நூற்றாண்டு வரை உன்னுடன் இருந்த என் செல்வங்கள் அனைத்தையும் இழந்து விட்டேன். இப்பொழுது நான் மட்டும் உயிரோடு இருப்பதால் என்ன பயன்?

அம்மா இத்தனை வருசம் வாழ்ந்த வாழ்க்கையை எனக்கு சொன்னீங்க. இப்ப நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. நீங்க ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் “உலகத்தில் இழப்பு வந்தால் வரவு அப்படீன்னு ஒன்று வரும்” நாம் இருவரும் இப்ப வாழப்போறது புதிய தளிர்களை படைக்கறதுக்கு மட்டும்தான். நூறு வருடங்களுக்கு முன்னால், நாம் பிறந்தவர்கள் என்பதை மறந்து இன்று புதிதாய் பிறந்தோம் என்று எண்ணி புதிய தளிர்களை படைப்போம்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *