கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 2,069 
 
 

அவன் வாழ்க்கை செக்குமாடுகள் சுற்றிச்சுற்றி வருவது போல் ஆகிவிட்டது. காலை முதல் அஸ்தமனம் வரையில், ஒரு கை போய் இணைப்பு விட்டுத் தள்ளாடிக் கொண்டிருந்த அந்த நாற்காலியில், மூட்டைக் கடியைச் சகித்துக் கொண்டிருப்பது அவனுக்குச் சுபாவமாகி விட்டது. ஆனால் அதிலும் அவனுக்குப் பரிபூரண திருப்தி தான் இருந்தது; ஏனென்றால் அவன் முழு வயிற்றுக்கு – குடும்பத்துக்கு – அந்த நாற்காலி சோறு போட்டது. அவனுடைய அந்தஸ்துக்கு ஏற்காது போனாலும், வந்த கடி தங்களை மட்டும் தான் முழுதும் பதிவு செய்யும் வேலையை ருசித்தோ ருசியாமலோ முறையாக அவன் செய்து கொண்டு வந்ததில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் அன்று வேறுவிதமாக இருந்தது. ஆபீஸ் கடிகாரம் மணி ஆறு அடித்த சப்தம் கேட்டுத்தான் திடீரென யோசனை கலைந்து நாற்காலியிலிருந்து பரம சிவம் எழுந்தான் . ஆபீஸ் நேரம் ஐந்து மணியோடு முடிந்து விட்டது. அவசரம் அவசரமாகக் கொத்துச் சாவி கலகலக்க , மேஜை அறைகளைப் பூட்டி விட்டு, நாற்காலி முதுகில் தொங்கிய கோட்டை எடுத்துத் தன் முதுகை மறைத்துக்கொண்டு படியிறங்கிச் சாலையில் நடக்கலானான்.

நேர் எதிரே கடலில் இருந்து ஊதிவரும் காற்றுக் குளிரெடுத்தது – அவனுடைய அன்றைத் தொல்லை களுக்கு ஊதிக்கொடுப்பது போல் . மணிச் சப்தத்தால் ஆபீஸ் அறையில் கலைந்த யோசனை ஒன்று கூடும் நுரை போல் மறுபடியும் மனத்தோடு கலந்து கொண்டது. தன் சட்டைப் பையில் கைவிட்டுச் சந்தேக நிவர்த்திக் காக மறுபடியும் அந்தக் கடுதாசியை எடுத்து அதில் இருந்த இரண்டொரு வரிகளைப் படித்து விட்டுப் போட்டுக்கொண்டான். அந்தக் கடிதம் மேல் ஆபீஸி லிருந்து கடிதப் போக்குவரத்துக்களைக் காலா காலத்தில் அனுப்பத் தவறியதற்காக அவனுக்கு ஒரு ‘ஷொட்டு வைத்து வந்திருந்த குறிப்பு. பல வருஷ ‘ஸர்வீஸ்’ காலத்தில் இந்த மாதிரி ‘ஷொட்டுகள் வருவது உத்தியோகஸ்தர்களுக்கு இயல்பான போதிலுங்கூடப் பரமசிவத்துக்கு அந்த முதல் ‘ஷொட்டு’ மிகவும் உறுத் தியது. இதற்குச் சந்தர்ப்பமே ஏற்படாமல் போயிருந் திருக்க வேண்டுமே என்ற நினைப்புத்தான் வழிநெடுக அவனைத் தொடர்ந்தது.

அதே மனநிலை தான் அவன் வீட்டுப்படி ஏறி நடையைக் கடந்து கூடத்துக்குச் சென்றபோதும். அந்த மாதிரி அவன் வருவதே ரொம்ப அபூர்வம். தினமும் கூடத்திற்கு வந்ததும் அவன் கண்கள், அழகான மூக்கும் முழியும் பதிந்து, மலர்ந்த புஷ்பம் போன்ற உதடுகளுடனும், காது மடல்களோடும் கூடிய அந்தச் சின்ன உருண்ட முகமான தன் மகிழ்ச்சிப் பொருளைப் பாய்ந்து தேடும். அலை தள்ளி அலை சுழிப்பது போல் மிருதுவான கை கால்களை இழுத்துச் சுழித்துத் தவழ்ந்து சலங்கை கலகலக்க நப்புக் கொட்டி வரும் தன் கற்பகப் பொருளை அப்படியே வாரி எடுத்துக்கொள் வான்.

ஆனால் இன்று…? மனத்துக்குக் கண்களைப் பறி கொடுத்துவிட்டுக் குறிப்பற்ற பார்வையுடன் கோட்டைக் கழற்றி ‘ஸ்டாண்டில் மாட்டப்போனான். அவன் செல்வம் அங்கேதான் இருந்தது. அவன் கண்கள் தேடவில்லை. அடுத்த க்ஷணம் ஒன்றும் புரியாத புண் பட்ட அந்தக் குழந்தை பரக்கப் பரக்கக் காலை வாரிப் போட்டுக் கெக்கலித்து வருவதையுங்கூட அவன் காதுகள் உணரவில்லை. கோட்டை மாட்டிவிட்டு ‘ஷர்ட்டை மாட்டிக்கொண்டிருந்தான்.

ஏதோ குளுமையாகவும் குருகுருப்பாகவும் அவன் கால்களில் ஊரும் உணர்ச்சிதான் அவனுக்கு அப்போது உண்டாயிற்று. அந்த ஷொட்டு தான் அவன் ஞாபகத் தில். விவரமில்லாத ஓர் அருவருப்புத்தான் அந்த ஊர்தலில் .

“ஸ்ஸ்….” என்று முகத்தைச் சுளித்து ஓசை செய்து கொண்டே காலை ஏதோ நினைவில் லேசாகப் பின்னால் தள்ளிவிட்டான். தான் செய்தது இன்ன தென்பதே அவனுக்குத் தெளிவில்லை. அப்போது காலில் மிருதுவாக ஏதோ தள்ளப்படவும் திடுக்கிட்டுப் போய், “அடடா!” என்று சொல்லிக்கொண்டே திரும்பினான். – குழந்தை கற்பகம் ! முழங்கால்களைத் தரையில் பதித்து அவன் கால்களைக் கட்டித் தொத்திய குழந்தை அந்த க்ஷணம் மல்லாந்து சாய்ந்தது.

பதறிப்போய்க் குழந்தையை அப்படியே தூக்கித் தோள் மீது தாங்கித் தலையைத் தடவிக் கொடுத்தான்.

“ஐயையோ ! குழந்தையின் மண்டை உடைந்து போச்சு!” என்று குழந்தையின் வீரிட்ட அலறலைக் கேட்டுத் துடிதுடித்து ஓடிவந்தாள் கனகம், கூடத்துக்கு.

“இங்கே கொடுங்கள் குழந்தையை! எங்கே காயம் பட்டதோ? வேண்டாண்டி அம்மா கற்பகம்!” என்று பதற்றத்துடன் குழந்தையைத் தன் கையில் வாங்கினாள் மின் வெட்டு நேரத்தில் அவள் கண்கள் குழந்தையின் உடல் முழுவதையும் ஆராய்ந்து விட்டன.

“ஒன்றும் காயமில்லை; நல்ல வேளை” என்று நடுங்கிய குரலில் சொன்னான் பரமசிவம்.

அலறிய குழந்தையின் முகம் சிவந்து விட்டது . வீரிட்டுக் கத்திக் கோணிய வாய் முழுதும் விரிந்து இழுத்துக் கொண்டு போய்விட்டது போல் துடித்தது. நிலைக்குத்தியது போலக் கண்கள் விரிந்து உறுத்துப் பார்த்தன. கண்ணீர் குப்பென்று துளித்தது. அழுகை கொஞ்சநேரத்துக்கு வெளியே வரவில்லை. முக நரம்புகள் வெடவெடத்தன. தாயும் தந்தையும் குழந்தையின் கண்ணராவி நிலையைப் பார்த்துத் தவியாய்த் தவித் தார்கள். அவர்கள் கண்களில் நீர்மல்கி விட்டது. குழந்தையின் அழுகை எப்போது வெளிவரும் என்று இரு விநாடிகளில் அவர்கள் பட்ட அவஸ்தை ! – குழந்தையைத் தேற்றும் வார்த்தைகள் கூட வெளிக் கிளம்பவில்லை.

அம்ம! ஒரு மட்டுக்கு அடித்தொண்டையிலிருந்து சன்னமாக ஆரம்பித்த அழுகை லேசாக வெளியே வந்து பலத்துக் கிளம்பியது. தாயும் தந்தையும் ஒரு பெருமூச்சு விட்டார்கள். உயிர் வந்தது குழந்தைக்கும் அவர்களுக்கும்.

“ஐயோ ! நாயனா தள்ளிவிட்டாரா? இப்படியா தள்ளுகிறது குழந்தையை? காலில் ஒரு கண் இல்லாமல் போச்சே உங்களுக்கு!” என்று கோபப் பாவனையுடன் கனகம் பரமசிவத்தைப் பார்த்துக் கொண்டே குழந்தையை மார்போடு சேர்த்துக் கொண்டாள். குழந்தை அலறல் தணியவில்லை.

“இல்லை கனகம்! எனக்கு ஏதோ நினைப்பு. காலில் ஏதோ ஊர்ந்தது போல இருந்தது . சலிப்புடன் காலால் தள்ளிவிட்டேன். குழந்தையைப் பார்க்கவில்லை. வேணு மென்று தள்ளுவேனா? இங்கே கொண்டா. நான் சமாதானப் படுத்துகிறேன்” என்று குழந்தையை இழுத்துத் தன் கையில் வாங்கினான். தான் செய்த தப்புக்குக் குழந்தையைத் தானே சமாதானப்படுத்த வேண்டுமென்று அவன் மனம் துடித்தது.

குழந்தையை வாங்கியது தான் தாமதம். அவன் முகத்தை ஒருதரம் ஏறிட்டுப் பார்த்துவிட்டு வீரிட்டுக் கத்தியது. முன்னை விட அதிகமாக அவன் கைப் பிடிக்கு நழுவி அம்மாவிடம் போகக் கை கால்களைப் போட்டுப் பிய்த்துக் கொண்டது. அவனைப் பார்க்கவே பயப்பட்டது போல் இருந்தது . கனகம்மா வாய் விட்டுச் சிரித்தாள்.

“கொடுங்களேன் குழந்தையை இங்கே ! போதும் நீங்க சமாதானப் படுத்துகிற அழகு! உங்களைப் பார்க்கவே அது பயப்படுகிறது. பொல்லாத நாயனா! அதுங்கிட்டப் போகாதேடீ கண்ணு!” என்று சொல்லிக்கொண்டே குழந்தையைத் திரும்பவும் தன் கையில் வாங்கிக் கொண்டாள். தன்னால் சமாதானப் படுத்த முடியாதென்று பரமசிவமும் அவளிடமே அந்தப் பொறுப்பைக் கட்டி விட்டான். குழந்தையுடன் கனகம்மா சமையலறைக்குப் போய்விட்டாள்.

ஆபீஸ் தொல்லையைப்பற்றித் தன் மனம் கவலைப் பட்ட நிலைமையில் குழந்தையை உதறிவிட்டதை நினைக்கும் போது அவன் மனம் வேதனைப் பட்டது. கன்றிப்போய் ரத்தம் சுரந்து நடுங்கிய முகம் இன்னும் அவன் கண் முன் சித்திரமாக நின்றது. கடைசியாக அவனிடம் வர மறுத்து அது காட்டிய பீதிப் பார்வையும் முகக்குறியும் அவனை உறுத்தின.

கொஞ்சநேரம் சென்றது. சமையலறையில் கற்பகத்தின் அழுகை தாயின் ஆறுதல்களுக்கு இடையே குறைந்து மறைந்து விட்டது. அதற்குள் பரமசிவத் துக்குப் பொறுக்கவில்லை. குழந்தையின் அமைதி முகத்தை உடனே பார்த்துவிட வேண்டுமென்று, “கற்பகம், நாயனா தள்ளிவிட்டேனா” என்று அர்த்த மில்லாமல் கேட்டுக்கொண்டே சமையலறைக்குள் எட்டு எடுத்து வைத்தான்.

“போதும் அழவிட்டலக்ஷணம்!” என்று புடைவைத்தலைப்பு மறைவிலிருந்து குழந்தையை எடுத்துக்கொண்டு எழுந்து சென்றாள் கனகம். பரமசிவம் அசட்டுச் சிரிப்புடன் குழந்தையை நெருங்கி, வலிக்கிறதா கண்ணு? எங்கே பட்டது?” என்று சொல்லிக்கொண்டே அதன் கன்னத்தில் கை வைத்துத் திருப்பினான்.

அவனைப் பார்த்ததும் குழந்தையின் கண்கள் மாறிய விதத்தைக் கண்டு அவன் பிரமித்துப்போனான். பீதிகலந்த ஒரு விழி விழித்தது அவனைக் கண்ட குழந்தை. “ஐயோ! என்னது, என்னது?” என்று இருவரும் வாய் திறக்கு முன்னமே குழந்தை வீரிட்டது. தாயின் தோள்களில் முகத்தைப் பதித்துக்கொண்டது.

“நீங்கள் கிட்ட வராதேயுங்களேன். கீழேயும் தள்ளிவிட்டு, அதுங்கிட்டப்போய் கொஞ்சினாமட்டும் அது மறந்து விடுமா என்ன?’ என்று கனகம்மாள் குழந்தையைக் கூடத்துக்கு மறுபுறம் கொண்டு போனாள். “நீ நாயனாவைப் பார்க்க வேண்டாண்டி கண்ணு; என்ன நாயனா வேண்டிக்கிடக்கு!” என்று தேற்றிக்கொண்டே பரமசிவத்தை விஷமத்துடன் பார்த்தாள்.

பரமசிவத்தின் முகத்தில் சிரிப்புத் தோன்றியது என்றாலும் அது திருப்தியான, சாந்தமான சிரிப்பல்ல; வேதனை கலந்த சிரிப்பு. குழந்தை ஏன் தன்னைக் கண்டு இப்படி அலறவேண்டும்? யாரிடம் சதா ஓடிவந்து விழுந்து மேலே துவைத்துக் கொஞ்சிக் குலாவிக்கொண் டிருக்குமோ அப்படிப்பட்ட தன்னைக் கண்டு! தனக்கு உயிரான குழந்தை தன்னை வெறுத்துத் தள்ளுவது இதுதான் முதல் தடவை. இதைத்தான் அவனால் சகிக்க முடியவில்லை. கற்பகத்தின் கசப்பு முகத்தை இதுவரையில் அவன் கண்டதில்லை.

“ஹம்! கீழே தெரியாமல் தள்ளிவிட்டால் இவ்வளவு வர்மமா அதற்கு? அடேயப்பா! உங்கம்மா கிட்டவே இரு. நாயனா- ரொம்பப் பொல்லாதவன் தான்!” என்று சொல்லிக் குழந்தையின் மனோ பாவத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே பரமசிவம் நகர்ந்து சென்றான்.

“என் கற்பகக் கண்ணுக்கு ரோஷம் இல்லையென்று நினைத்தேளா? இப்போ தெரிந்ததா? கும்பிடணும் என் தங்க விக்ரகத்தெ” என்று கனகம ஒரு தாயின் கர்வத்துடன் பீத்திக்கொண்டாள். அவள் தோள் மீது குழந்தை பட்டுப்போல் துவண்டு கழுத்தைக் கட்டிக் கொண்டு, அம்மா ஒருவேளை நாயனாவிடம் தள்ளி விடுவாளோ என்ற பயத்துடன் கண்களைத் திருப்பாமல் மூடித் திறந்து கொண்டிருந்தது.

கொஞ்சநேரம் ஆயிற்று. சற்று எட்டி நின்றே பரமசிவம் கற்பகத்தைக் கவனித்துக் கொண் டிருந்தான். கிட்டப்போய் நின்று மறுபடியும் சோதனை செய்து பார்க்க அவன் மனம் இடங் கொடுக்கவில்லை. ஆதலால் கொஞ்சநேரம் அப்படியே இருக்கச் செய்து விட்டால் மனம் கொஞ்சங் கொஞ்சமாக மாறிய பிறகு சாந்தப் படுத்திக் கொள்ளலாம் என்று இருந்தான். குழந்தையைச் சீக்கிரமாகவே தன் கையில் எடுத்துக் கொஞ்சவேண்டுமென்று ஆவல் அதிகரித்தது. ஆனால் குழந்தையோ பிடிவாதமாக இருந்தது. அவனுக்குக் கிட்ட நெருங்கவே இடங்கொடுக்கவில்லை.

குழந்தையின் மன நிலையே ரொம்ப மிருதுவானது. அன்பு அழைப்புக்கும் அணைப்புக்குந்தான் அதன் மனத்திலும் உடலிலும் இடம் உண்டு. அதற்குப் புண் உண்டாக்கியவர்கள், அதன் மனசு கசக்க இடம் தேடிய வர்கள் யாராக இருந்தாலும் சரி, அதன் தாய் தந்தை யரைக்கூட, அது மன்னிக்காது. விருப்புக்குத்தான் அதன் ஹிருதயத்தில் இடம்; வெறுப்புக்கு இல்லை!

இதை நினைத்து நினைத்துப் பார்த்துக் கொண்ட போது பரமசிவத்தின் மனத்தில் வேதனை அதிகரித்தது. குழந்தை ஆவலோடு எப்போதும் போல் தன்னிடம் தாவி வரவேண்டும் என்ற ஆவல் அவனை வாட்டியது. குழந்தையைச் சமாதானப்படுத்துவதைப் பற்றியே யோசனை செய்து கொண்டிருந்தான்.

அவனுக்கு வெளியே போகத் தோன்றவில்லை. கூடத்தைச் சுற்றிச் சுற்றி நடந்து கொண் டிருந்தான். கனகம் மற்றொரு மூலையில் இருந்து கேட்கும் கேள்வி களுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தான். ஒரு யோசனை தோன்றியது. மேஜை மீது கிடந்த கலர் கிலுகிலுப்பையை எடுத்துக்கொண்டு மெதுவாகக் குழந்தை கிட்டப் போனான். குழந்தை முகம் அவன் பக்கம் இருந்தது. கனகம் சுவரிலுள்ள படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் தோள் ஓரம் போய் நின்று குழந்தையைப் பார்த்தான்; அது தூங்கவில்லை. விழித்துக் கொண் டிருந்தது. “இந்தா கற்பகம், கிலுகிலுப்பை! சமத்துக் கண்ணு” என்று சொல்லிக்கொண்டே அதை மெதுவாக அதன் கைகளில் வைத்து அமுக்கினான். குழந்தை ஒரு முனகலுடன் தலையைத் தோளிலிருந்து உயர்த்தி உலுக்கிக்கொண்டு அதைக் கையில் வாங்கிக் கொண்டது. பரமசிவத்தின் கண்கள் மகிழ்ச்சியால் பிரகாச மடைந்தன. அடுத்த விநாடி கிலுகிலுப்பை குழந்தையின் கைகளிலிருந்து பாய்ந்து ஒரு மூலையில் போய் விழுந்தது.

“அப்படிப் போடு!” என்று கனகம் ஒரு குதி போட்டுச் சிரித்தாள். குழந்தையின் பிடிவாதமும் பரமசிவத்தின் தோல்வியும் அவளுக்கு உற்சாகமாக இருந்தன. கற்பகம் மீண்டும் அழ ஆரம்பிக்கவும் கனகம் கணவனிடம் பொய்க் கோபத்தைக் காட்டிக் குழந்தை யுடன் ஒரு புறம் தள்ளிப் போய்விட்டாள். குழந்தை ஆறுதல் யைத் தூங்கச் செய்யப் பரமசிவம் இப்போதும் தோல்வி அடைந்தான். நேரம் சென்றது.

தன் பிடிவாதம் அத்தனையையும் கண் இமைகளுக்குப் பின் மறைத்து வைத்திருப்பது போல் கண்களை மூடிக்கொண்டு தொட்டிலில் மிருதுவாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள் குழந்தை கற்பகம். தொட்டில் போய்த் திரும்பும் போதெல்லாம் குழந்தை நெற்றியில் உரசிக்கொண்டிருந்த மயிர் நிமிர்ந்து படிந்து கொண் டிருந்தது. கனகம் சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டிருந்தாள். பரமசிவம் மெதுவாக வந்து தொட்டில் ஆட்டத்தை நிறுத்தினான்.

“ஐயோ, அவள் தூங்கப்பட்டபாடு – போதும் ; எழுப்பிவிடாதீர்கள்” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள் கனகம்.

“இல்லை, பேசாமல் இரேன்” என்று புன் சிரிப்புடன் மெதுவாகத் தொட்டிலுக்குள் தலையைத் தாழ்த்திப் பரமசிவம் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான். உணர்வு அயர்ந்திருந்த அந்த நிலையில் தான் கற்பகத்தை நெருங்க அவனுக்குத் துணிவு வந்தது. “இப்போ என்ன செய்வாய்?” என்று சொல்லிக் கொண்டே மிருதுவாக அதன் கன்னத்தில் பட்டதும் படாததுமாக குற்றமுள்ள மனத்துடன் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஒருவித ஆறுதலுடன் படுக்கச் சென்றான் பரமசிவம்.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *