ஆரம்ப விரிசல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 5,958 
 
 

(இதற்கு முந்தைய ‘விரட்டும் இளைஞர்கள்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது)

மரகதத்துடன் இதே குற்றாலத்திற்கு எத்தனையோ தடவைகள் சபரிநாதன் வந்திருக்கிறார். ஆனால் ஒருத்தன்கூட அவளை உற்றுப் பார்த்ததில்லை.

பத்து நாட்கள் குற்றாலத்தில் இருக்கலாம் என்று சொல்லி ராஜலக்ஷ்மியை அழைத்து வந்தவர், நான்காம் நாளே மூட்டையைக் கட்டச் சொன்னதில் அவள் மனசு லேசாகக் காயப்பட்டது. அதைப் புரிந்து கொள்ளாத சபரிநாதன் “ராஜி, இனிமே ஒன்னை குற்றாலத்துக்கே கூட்டிட்டு வரமாட்டேன்” என்று ஒருவித துவேஷத்துடன் சொன்னபோது அவளுக்கு ரொம்பவும் அவமானமாக இருந்தது.

திருநெல்வேலி ஜங்க்ஷன் போகிற பஸ்ஸில் ஏறி உட்காருவதற்குள் சபரிநாதனின் துவேஷம் மேலும் பலமடங்கு எகிறும்படி நேர்ந்துவிட்டது. அவரை ‘பெரிசு’ என்று கிண்டல் பண்ணின இளைஞன் குற்றாலம் பஸ் ஸ்டாண்டில் தனியாக நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான்.

சபரிநாதனுக்கு அவனைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்துவிட்டது. அவருக்குள் ஒரு ரெளத்திர அலை பொங்கி எழுந்தது. திம்மராஜபுரமாக இருந்திருந்தால் இன்னேரம் இந்தப் பயலை எரித்துச் சாம்பலாக்கி இருப்பார். சாம்பலை இதே குற்றால அருவிக்கே எடுத்துவந்து கரைத்திருப்பார்! அந்த இடத்தில் மீசையை முறுக்கிக் காட்டினதற்கு மேல் அவரால் வேறு எதுவும் பண்ண முடியவில்லை.

திம்மராஜபுரம் போய்ச் சேருகிறவரை சபரிநாதனுக்கும் ராஜலக்ஷ்மிக்கும் இடையே பேச்சே இல்லாமல் நிசப்தம்தான் கனமாகக் கவிந்திருந்தது. அந்த நிசப்தம் மிகப்பெரிய விரிசலுக்கான ஆரம்பப் புள்ளி என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த புள்ளி விழவும் ரொம்ப நாளாகவில்லை.

சபரிநாதனின் சொந்த அத்தை ஒருத்தி வள்ளியூரில் இருக்கிறாள். எமனுடைய வாயில் வருஷத்திற்கு நான்கு தடவைகள் விழுந்து விழுந்து எழுந்து உட்கார்ந்து விடுவதை வழக்கமாகவே வைத்திருந்தாள். அவளுக்கு என்ன வயசென்று நிஜமாகவே யாருக்கும் தெரியாது. அப்படியொரு பழுத்த பழம் அந்த அத்தை.

கல்யாணத்திற்கு அவளால் வரமுடியவில்லை. அவள் மண்டையைப் போடுவதற்கு முன் சபரிநாதன் புதுப் பெண்டாட்டியை அழைத்துக்கொண்டு ஒருதடவை வள்ளியூருக்கு வந்து ராஜலக்ஷ்மியைக் காட்ட வேண்டுமாம். அத்தையின் உத்திரவை சபரிநாதனால் மீற முடியவில்லை. அந்த அத்தையை அவருக்கு கொஞ்சம் பிடிக்கும். அதனால் சரியென்று டாக்ஸி ஒன்று ஏற்பாடு செய்து ராஜலக்ஷ்மியை ரொம்ப பத்திரமாக வள்ளியூருக்கு கூட்டிக்கொண்டு போனார். பாவம் ராஜலக்ஷ்மி. குற்றாலம் போய்வந்த கசப்பான அனுபவம் மனசில் உறுத்திக் கொண்டேயிருந்ததால் வெளியூர் போகிற பரவசம் அவளில் குன்றிப் போயிருந்தது. அதேபோல் அவருடைய மனசிலும் ஊர் ஊராகப் போகவேண்டும் என்ற ஆர்வம் சுத்தமாக வடிந்து போயிருந்தது. அதனால் டாக்ஸி பயணத்தில் கூட இருவரும் பேசாமலேயே இருந்தார்கள்.

சபரிநாதனையும் ராஜலக்ஷ்மியையும் ஒன்றாகப் பார்த்ததும் அத்தை கெழவி, “நல்ல காரியம் செஞ்சிருக்க சபரி, வயசான காலத்ல ஒத்தீல கெடந்து சாகிறதுக்கு ரொம்ப வெவரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்ட. ஒன் பெண்டாட்டியும் மயிலு கணக்கா அழகு சொட்டுதா! ஆனா பாக்குறதுக்குதான் நீங்க ரெண்டுபேரும் புருஷன் பெண்டாட்டியா தெரியல… ஒங்களைப் பாத்தா தகப்பனும் மகளும்தேன் சொல்லணும்!”

இப்படிச் சொல்லிவிட்டு கண்களை இடுக்கிக்கொண்டு இருக்கிற பொக்கை வாயைக் காட்டி சிரித்தாள். சபரிநாதன் ரொம்பவும் சிரமப்பட்டு அத்தையின் சிரிப்பை சகித்துக்கொண்டார். தன் மன காயத்தையோ ஆவேசத்தையோ காட்டிக் கொள்ளாமல் பல்லைக் கடித்துக்கொண்டு இரண்டு மணிநேரம் அத்தையுடன் இருந்துவிட்டுக் கிளம்பினார். ராஜலக்ஷ்மியின் முகத்தை அவரால் பார்க்கவே முடியவில்லை.

சபரிநாதனுக்கு ஒரு உண்மை நன்கு புரிந்தது. அவரையும் ராஜலக்ஷ்மியையும் சேர்த்துப் பார்க்கிற யாருக்கும், அவர்கள் இருவரும் தம்பதிகள் போல் தெரியவில்லை. ராஜலக்ஷ்மி அவருக்குத்தான் அழகிய இளம் மனைவி. இளைஞர்களின் பார்வைக்கு அவள் அழகிய இளமையான பெண் மட்டும்தான்! இதுதான் நிஜம். இந்த நிஜத்தை ஏற்க சபரிநாதனின் மனம் மறுத்தது. மறுத்து என்னத்த செய்ய? நிஜம் நிஜம்தான்.

அதனால் ஒரு மோசமான மன இறுக்கத்திற்கு சபரிநாதன் வள்ளியூர் போய் வந்ததில் ஆளாகிப்போனார். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். இந்த நேரம் பார்த்து தேர்தல் முடிவுகள் வெளியாகி கள்ளத்தோணி முக்கூடல் கோமதிநாயகம் வெற்றி பெற்ற செய்திவேறு பயங்கர வேட்டுச் சப்தங்களுடன் அறிவிக்கப்பட்டதும், அது சபரிநாதனை ரொம்பவும் பாதித்து விட்டது. நியாயமாகப் பார்த்தால் சபரிநாதன் நின்று ஜெயித்திருக்க வேண்டும்! காலம் செய்த கோலம். கள்ளத்தோணி சண்டியர் இன்று ஒரு மக்கள் பிரதிநிதி. அன்றைக்கு மட்டும் முருகபூபதி கும்பல் முறையோடு தன்னிடம் பேசியிருந்தால், சபரிநாதன் ஒரு எம்.எல்.ஏ ஆகி அவர் பாட்டுக்கு மக்களுக்கு சேவை செய்தபடி நிம்மதியாக இருந்திருப்பார். முப்பது வயசுக் குறைச்சலான ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு இப்படி அவமானத்திற்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்க மாட்டார்.

ராஜலக்ஷ்மியுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாம்பத்ய வாழ்க்கை என்ற புதிய பிரேமையும், கிளர்ச்சியும் சபரிநாதனின் மனநிலையில் இருந்து சரேலென கலையப் பார்த்தது. வெளியூர் என்றும் உறவினர் வீடுகள் என்றும் ராஜலக்ஷ்மியுடன் பெருமையுடன் பங்கேற்க வேண்டும் என்கிற அவருடைய கனவு அடிபட்டுப் போனது. வீட்டிற்குள்ளேயே ஒரு மாதிரியாக அடைபட ஆரம்பித்தார். ஆனால் வீட்டிற்குள்ளேயும் தொந்திரவு இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை. ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள் ‘புதுப்பொண்ணு’ ராஜலக்ஷ்மியைப் பார்த்துவிட்டுப்போக ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

ஆனால் அவரால் யாரையும் மனப்பூர்வமாக வரவேற்கவும் உபசரிக்கவும் முடியவில்லை. வருகிற எல்லோருக்கும் வள்ளியூர் அத்தையின் அபிப்பிராயம்தான் மனதிற்குள் இருக்குமோ என்ற சந்தேகம் அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த மனநிலையிலும் அவரின் திருட்டுப்புத்தி ராஜலக்ஷ்மியைப் பார்ப்பதற்கு காந்திமதி வந்து போகிறாளா என்பதை கண்காணித்துக்கொண்டே இருந்தது. ஆனால் காந்திமதி ராஜலக்ஷ்மியைப் பார்க்கவே வரவில்லை. சபரிநாதன் வீட்டுப் படியேறவில்லை காந்திமதி.

இது சபரிநாதனின் வினோதமான ஆக்ரோஷத்தை ரகசியமாகத் தாக்கியது. அவள் எப்படி வருவாள் என்று பெரிய மனசுடன் அவர் பேசாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை அவர். எதிர்வீட்டு நம்பியின் சம்சாரம் வீட்டுக்கு வந்தபோது, “எங்கே நம்ம கோட்டைசாமியின் மவ காந்திமதியை கண்ணுலேயே காங்கலியே” என்று கேட்கக்கூடாத கேள்வியை கேட்டுவிட்டார்.

‘வள்ளியூர் அத்தை கேட்டபோது மட்டும் உன் மனசு எப்படி புழுபோல் துடித்தது? நீ மட்டும் இப்போது அதைவிட மோசமான கேள்வியை கேட்கலாமா? பாவம் இல்லையா அந்தப் புருஷன் இல்லாத காந்திமதி? உனக்கு ஒரு நீதி, அத்தைக்கு ஒரு நீதியா?’ என்றெல்லாம் அவரின் மனசாட்சி சன்னமான குரலில் நியாயம் கேட்கத்தான் செய்தது. ஆனால் திமிர் பிடித்த சபரிநாதன் அதைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார்.

சபரிநாதன் நம்பியின் சம்சாரத்திடம் கேட்டதை, அதன் உள்குத்து புரியாமல் அவள் அதை அப்படியே காந்திமதியிடம் சொல்லிவிட்டாள். சபரிநாதனைவிட பல மடங்கு கோபக்காரி காந்திமதி… உடனே கேசவபெருமாள் சன்னதியில் போய் நின்றாள். அந்த அயோக்கியத்தனமான சபரிநாதனின் வம்பு விசாரணை அவளுடைய மனதில் தீக்கங்கு மாதிரி விழுந்து எரித்துக் கொண்டிருந்தது.

“பெருமாளே, நீரு என்ன செய்வீரோ எனக்குத் தெரியாது. என் மனசை அலைபாயவிட்ட மனுஷன் விளங்கித் துலங்கி இருக்கக்கூடாது… அந்த சண்டாளனுக்கு கொள்ளி விளங்கக்கூடாது. என் மனசை எரிச்சானே, ஒருநா அவன் மனசும் எரியணும்… அவன் குடியை சுட்டு எரிக்கணும்.”

சினத்தின் வேகத்தில் காந்திமதியின் நெஞ்சுக் கூட்டுக்குள் வெடித்துச் சிதறிய கடுமையான சொற்கள் கோயிலின் குடவறைச் சுவர்களில் முட்டி மோதித் தெரிந்தன. பலிக்கப் போகிற காந்திமதியின் இந்தச் சாபத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், சபரிநாதன் என்ற நிலப்பிரபு ராஜலக்ஷ்மியின் அழகைப் பார்க்க காந்திமதி வரமாட்டாளா என்று வீட்டுத் திண்ணையில் கொக்கு மாதிரி நின்றபடி காக்கா பார்வை பார்த்துக்கொண்டு காத்திருந்தார்.

ஆனால் அவருடைய பருப்பு காந்திமதியிடம் வேகவே இல்லை. ராஜலக்ஷ்மியை அவள் திரும்பிக்கூட பார்க்கவில்லை. இன்னும் யாரெல்லாம் ராஜலக்ஷ்மியைப் பார்க்க வரவில்லை என்பதை சபரிநாதன் குத்துமதிப்பாக ஒரு கணக்கை போட்டுப் பார்த்தார். அப்போது ஒரு உண்மை அவருக்கு உரைத்தது. திம்மராஜபுரத்தில் இருக்கும் ஒரு இளைஞன்கூட சபரிநாதன் வீட்டுக்குக் கல்யாணம் விசாரிப்பதற்கு வரவே இல்லை. யார் வீட்டில் எந்த ஊரில் கல்யாணம் நடந்தாலும் வயசு வித்தியாசம் பார்க்காமல் கல்யாணம் விசாரிக்க வந்து கொண்டிருப்பார்கள். இதுதான் அந்த ஊர் வழக்கம்.

முப்பது வருடத்திற்கு முன்பு சபரிநாதனின் கல்யாணம் கோவில்பட்டியில் நடந்தது. அப்போது மரகதத்தைப் பார்க்க வந்தவர்களில் ஊர் இளைஞர்களும் அடக்கம். அப்போதே மரகதத்துடன் இளைஞர்கள் மிகவும் சகஜமாக பேசுவார்கள். அது மாத்திரம் அல்லாமல், அவள் உயிருடன் இருந்தவரை ஏதாவது யோசனை கேட்கவும், நல்ல செய்தி இருந்தால் சொல்வதற்கும் இளைஞர்கள் சபரிநாதன் வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்திருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? அவரது மகள்கள் ஊரிலிருந்து வந்துவிட்டால் உடனே அவர்களை வந்து பார்க்கும் இளைஞர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தன்கூட ராஜலக்ஷ்மியைப் பார்க்கவோ அறிமுகம் செய்து கொள்ளவோ அவர் வீட்டுப் பக்கம் இதுவரையில் தலை காட்டவில்லை! இது ரொம்பவும் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பட்டது சபரிநாதனுக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *