ஆயிரம் காலத்துப்பயிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 3,367 
 

பரந்த அந்த கரிசல் வெளியில், துல்லியமாய் வித்தியாசம் காட்டிய நெடுங்கோடாய் நீண்ட அந்த செம்மண் கப்பி சாலையில், முகம் முழுக்க வேர்வை வடிந்து கொண்டிருக்க வெடு வெடு வென கோபாவேசமாய் நடந்து கொண்டிருந்தாள் செண்பகம். அவ்வப்போது தன்னை யாரும் பின் தொடர்ந்து வருகிறார்களா என்றும் திரும்பி பார்த்துக்கொண்டாள். நெருப்பை வானத்தில் இருந்து கொட்டிய சூரியன் சுட்டுக்கொண்டிருந்த அந்த பிற்பகல் வேளையில், ஒரு குஞ்சு குளுவானையும் காணோம்.

வேர்வை வடிந்ததில், செண்பகத்தின் சேலை முழுசுமாய் நனைந்து போயிருந்தது. ‘யாரும் பின்னாடியே நம்மளைத்தேடிக்கிட்டு வந்து, இழுத்து கூட்டிட்டுப்போயிருவாகளோ?’ என்று அவள் எண்ணினாள். ‘புருசன்காரன் வீட்டுல இருந்து யாராவது வருவாகளோ?’ இப்படி யோசித்தபடி செண்பகம் அடிக்கடி திரும்பி பார்த்துக்கொண்டாள்.

‘என்ன இந்த ஊர்ல புருசன் வீட்டுல மூணு வருசம் தான் இருந்திருப்பேன். அவ்வளவு தான். இங்க இந்த கிராமத்துக்கு வாக்கப்பட்டு வந்து மூணு மாசி கழிஞ்சு போச்சு. அவ்வளவு தான். ஆனா, புருசன் வீட்டுல என் மாமனாரு, அவ்வளவு எதிர்பார்த்தாக. எப்படியாவது, குழந்தை பிறக்கும். வம்சம் தளைக்கும்னு. என் வவுத்துல ஒரு குழந்தை பொறந்தா, அந்த குழந்தையை கரும்புத்தூளில கட்டிக்கிட்டு, அவங்க குல தெய்வம் பாட்டக்குளம் வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு நடையா நடந்து வர்றதா வேண்டிக்கிட்டாக. ஆனா, அப்படி நடக்கல. என் வீட்டுக்காரரும் வேண்டிக்காத தெய்வம் இல்ல. சுத்தாத சாமி இல்ல. செய்யாத பரிகாரம் இல்ல.

‘ஒண்ணும் நடக்கலியே என் வெயிலுகந்தம்மா, கண் தொறக்க மாட்டியா? எங்க குடும்பம் பெருகணுமே!’ ன்னு என் வீட்டுக்காரவுக வேண்டிக்கிட்டாக.

ஆனா, குல தெய்வ சாமிக எல்லாம் ஒண்ணும் கண் தொறக்கல. ஏன்னு காரணம் எனக்கு மட்டும் தான் தெரியும். வெரசா நடந்து வந்ததுல, செம்மண் கப்பி சாலை முடிந்து, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து, மல்லி போகும் ரோடு குறுக்கே தெரிந்தது. இது ஒரு ஆபத்தான சாலை. தொடர்ந்து வண்டி போயி, வந்துகிட்டே இருக்கும். நிமிடத்துக்கு ஒரு வண்டி போகும். வரும்.

என்ன செய்ய ? என் அண்ணன் தலக்கையா சும்மாவா கஷ்டப்பட்டான் ? அவனும், போகாத ஊர் இல்ல. பாக்காத இடம் இல்ல. எப்படியாவது எனக்கு ஒரு மாப்பிள்ளையை பிடிச்சு, கட்டி வெக்கணும்னு ஆசைப்பட்டான். ஆனா, வந்த மாப்பிள்ளைக எல்லாரும், ‘எவ்வளவு நகை போடுவீங்க, கையில எவ்வளவு வரதட்சணை குடுப்பீங்க? பால் மாடு வாங்கி யாவாரம் பண்ண என் பிள்ளைக்கு பணம் தருவீயளா?’ என்றெல்லாம் கேட்டார்கள். அவர்களை எல்லாம் சந்தேகக்கண்ணோடு எங்க அண்ணன் தலக்கையா பாத்தான்.

‘இவனுக, கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு கண்டிசன் போடுறானுங்களே ! கல்யாணம் முடிஞ்ச பிறகு, என் தங்கச்சிய வெச்சு வாழுவங்களா? அல்லது, அவ கிட்ட காதுல, மூக்குல இருக்கற நகைகள உருவி எடுத்து, வித்து தின்னுட்டுப்போயிருவானுகளா?’ என்று என் அண்ணன் சந்தேகப்பட்டான்.’

கல்யாண ப்ரோக்கர் செல்வம்னு ஒருத்தன், எனக்காக, இங்க ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து, பாப்பையநாயக்கன்பட்டிக்கு ஆறு தடவ வண்டியில வந்துருக்கான். ஒரு தடவ ப்ரோக்கர் செல்வம், இங்க மாப்பிள வீட்டுக்கு வந்து போனா, அவனுக்கு ஐநூறு ரூவா.

‘ஆனா ஒரே முடிவு. இனிமே இங்க இந்த பாப்பையநாயக்கன்பட்டியில என் புருசனோட வாழ மாட்டேன். இப்படியா, நான் கஷ்டப்பட்டு இங்க மாமனார் கிட்டயும், புருஷன் கிட்டயும் வசவு வாங்கிக்கிட்டு குடித்தனம் நடத்தணும்?’….மத்தவங்க எல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழல ? அவனுகளுக்கு என்ன குறை வந்துச்சு ? மூணு பிள்ளை பெத்துக்கிட்டு, பொண்டாட்டிய பின்னாடியும்,பிள்ளைகளை முன்னாடியும் உக்கார வெச்சுக்கிட்டு, ஒரே பைக் வண்டியில ரோட்டுல சிரிச்சுக்கிட்டே ஓட்டிக்கிட்டு போறான் எங்க ஊர்க்காரன் கொன்னையாண்டி. அவனுக்கு ஒரு குறையும் இல்ல. நல்லா, பால் யாவாரம் பாக்குறான். கம்மாப்பட்டி ஊர்க்காரனுவளுக்கு பால் யாவாரம் பண்ண சொல்லியா தரணும். ஒத்த மாட்டை வெச்சுக்கிட்டு, ஒரு மந்தை பசு மாட்டை உண்டாக்கிருவானுவளே! எங்க அண்ணன் தலக்கையா எப்படிப்பட்டவன் ? ஆடு, மாடு மேய்க்கிறது. பால் விக்கிறது. மாடு தரகு பிடிக்கிறது. கூலி வேலைக்கு போறது. இத்தோட, லேவா தேவி வேற. அஞ்சு வட்டிக்கு பணம் குடுத்து வாங்கிக்கிட்டு இருக்கான். அந்த தைரியத்துல தான், எனக்கு இருபது பவன் போட்டுக்கட்டிக்கொடுத்தான். கல்யாணம் ஆன மறு வருசத்துல, என்னோட நகையை, அத்திகுளம் பேங்குல அடமானம் வைக்க எடுத்துக்கிட்டு போனாரு எங்க வீட்டுக்காரரு

அந்த பேங்குக்காரன், நகைய கல்லுல உரசிப்பாத்துட்டு, ‘ஐயா, இது, ஸ்ரீவில்லிபுத்தூர் எம். பி. வி. நகைக்கடையில செஞ்சதா? பதினாறு பாய்ண்டு தான் தங்கம் இருக்கு. மீதி பூராவும் செம்பு தான் இருக்கு. ஆனா, உங்க கிட்ட இருபத்து ரெண்டு காரட்டுன்னு சொல்லி அவன் ஏமாத்திட்டான்’ இதை நாங்க அடமானம் வாங்க முடியாது. இந்த ஊருல எந்த பேங்குலயும் இத வாங்க மாட்டாங்க’ ன்னு சொல்லி திருப்பி அனுப்பிச்சிட்டான்.

பிடிச்சது வினை. உடனே, என் அண்ணனை, பாப்பைய நாயக்கன்பட்டிக்கு வரச்சொல்லி தாக்கல் சொல்லி விட்டாரு என் மாமனார் அப்பையா. ரெண்டு நாள் கழிச்சு எங்க அண்ணன், பஸ் செலவை மிச்சம் பிடிக்க, நாலு மைல் சைக்கிள்ல லொடக்கு, லொடக்குன்னு மிதிச்சுக்கிட்டு வந்து சேர்ந்தான்.

‘ஏன்யா, ஏதோ, நீ யோக்கியன்னு நினைச்சு, உங்க வீட்டுல பெண்ணெடுத்தா, நீ என்னடான்னா, பிராடுக்கார பயலுவலா இருப்ப போலயே ! நீ உன் தங்கச்சிக்கு கல்யாணத்துல போட்ட இருவது பவன் நவை பூராவும் டூப்ளிகேட்டாம். அதுல பதினாறு கேரட் தான் தங்கம் இருக்காம். அந்த எம். பி. வி. கடைக்காரன் நகை பூராவும் டூப்ளிகேட் நகை தானாம். ரெண்டு நாளைக்கு முன்னாடி, அத்திகுளம் பேங்குக்கு போயிருந்தேன். அங்க, உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறிறுச்சு. நீயும் பிராடு. நீ நவை வாங்குன எம். பி. வி. கடையும் பிராடு. உன் குடும்பமும் பிராடு தானா?’ அப்படின்னு பிடிச்சு எங்க அண்ணன் தலக்கையாவை சவுக்கால விளாறுனா மாதிரி கேள்வி கேக்குறாரு என் மாமனார் அப்பையா.

‘நான் என்ன பண்ணுவேன் சொல்லுய்யா. அந்த எம். பி. வி. நகைக்கடைக்காரன் ஊரு பூராவும் கடனை வாங்கி வெச்சுட்டு, கடனாளி ஆகிப்போயிட்டான். அதனால, அவன் கடன்காரன் கண்ணுல படாம தலைமறைவா இருக்கான். அவன் கடையில இப்படி தான் மாத்து குறைவா நவை செய்யுறான்னு எனக்கு தெரியாது. நீ சொல்லித்தான் தெரிய வருது. போகுது விடு. அடுத்த தீவாளிக்கு, என் தங்கைக்கு கூடுதலா நவை போட்டு அனுப்பி வெக்கிறேன். அதுக்காக என் தங்கச்சிய கொடுமைப்படுத்தாத. அப்படி நீ எதுவாச்சும் என் தங்கச்சிக்கு செஞ்சா, எனக்கு தகவல் வந்துரும். உன்னைய சும்மா விடமாட்டேன்னு’ எங்க அண்ணன் தலக்கையா.வீராவேசமா போயிட்டான்.

ஆனா, இங்க இந்த பாப்பநாயக்கன்பட்டியில புருசன் வீட்டுல வாழ்றது நான் தான?!

என் வீட்டுக்காரருக்கு ஆடு மேய்க்கிறது தான் தொழில். அதனால, என்னையவும் அவரோட ஆடு மேய்க்க அனுப்புனாரு என் மாமனாரு. எனக்கு அது பிடிக்கல. சமைச்சு மட்டும் தான் போடுவேன்னு என் புருசன் கிட்ட சொன்னேன். ‘இல்ல, நீ தினமும் ஆடு மேச்சுட்டு வரணும்’னு என் மாமனாரு சொன்னாரு.

மறுபடி என் அண்ணன் தலக்கையாவுக்கு தாக்கல் போச்சு. எங்க அண்ணன் சைக்கிள்ல லொடக்கு, லொடக்குன்னு வந்தாரு. “யோவ், தலக்கையா. உன் தங்கச்சி என்ன கலெக்டருக்கா படிச்சுருக்கா? அவள தினசரி கம்மாய்க்கு போயி ஆடு மேய்க்கச்சொன்னா, அவ மாட்டேன், நான் சமைச்சு மட்டும் போடுவேங்குறா. ஏதாவது கேட்டா, ‘என் அண்ணனை கூப்புடுவேன்’னு சொல்றா. என்னய்யா இது?” என்றார் அப்பையா.

‘நான் என்னய்யா பண்ண? என் தங்கச்சிய பொத்தி, பொத்தி வளத்துட்டேன். அவளுக்கு கஷ்டமான வேலை எதுவும் செஞ்சு பழக்கம் இல்ல. அவ வீட்டோட இருக்கட்டும்.’

‘அதெப்படியா. எங்க வீட்டுல எல்லா ஆணுக, பெண்ணுங்களும், ஒண்ணாத்தான் வேல செய்வோம். சாப்பிடுறதும் அப்படித்தான். காலைல எந்திருச்சு, ஆடு, மாடு மேய்க்கிற வேலை செய்யலேன்னா எப்படி? இதுக்கு இஷ்டப்பட்டா இவ இங்க இருக்கட்டும்’ என்றார் என் மாமனார்.

எங்க அண்ணன் பிடிய விடாம, கோர்ட்டுல வக்கீல் கருப்புக்கோட்டை போட்டுக்கிட்டு வாதாடுற மாதிரி பேசுனான். அந்தா, இந்தான்னு இந்தப்பஞ்சாயத்து தொடர்ந்து, கடைசியில, நான் வீட்டு வேலை மாத்திரம் செஞ்சா போதுமுன்னு எங்க அண்ணன் முடிவா சொல்லிட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு போயிட்டான்.

வருசம் ஒண்ணாச்சு. ‘என்ன வீட்டுக்கு வாழ வந்தவ வவுத்துல புள்ள பூச்சி எதுவும் உண்டாகலியா?’ ன்னு என் அத்தை சொல்லி ஆதங்கப்பட்டா. என் மாமனாரு, என் வீட்டுக்காரரு கிட்ட என்ன விஷயம்னு கேட்டாவ. அவருக்கு என்ன தெரியும்? அவரும் ஏதோ சொல்லியிருப்பாரு போல. ஒருத்தருக்கும் ஒண்ணும் விளங்கல. நானும், என் வீட்டுக்காரருக்கு தினசரி சமைச்சு போட்டு, தூக்குவாளில சோத்தை கட்டிக்கொடுத்து, ஆடு மேய்க்க அனுப்பிச்சுக்கிட்டு இருந்தேன். வருசம் ரெண்டாச்சு. வீட்டுக்குள்ள அரசல் புரசலா பேச ஆரம்பிச்சுட்டாங்க. இந்த மாதிரி விஷயங்கள்ல, முதல்ல சந்தேகப்படுறது பொண்ணு மேல தான் இருக்கும். பிள்ளை பிறக்கலேன்னா, அவள முதல்ல மலடின்னு பட்டம் கட்டுறது மாமியாக்காரியாத்தான் இருக்கும்.

மாசம் ஒண்ணொண்ணா கழிய கழிய, எனக்கு வசவு அதிகமாக ஆரம்பிச்சுருச்சு. தினசரி காலைல எழுந்ததுல இருந்து, ராத்திரி வரைக்குமா ஒரு பொண்ணுக்கு வசவு விழுந்துகிட்டு இருக்கும்? ஆனா, புகுந்த வீட்டுக்கு வாழப்போற எல்லா பொண்ணுங்களுக்கும் அப்படித்தான் நிலைமை இருக்கும் போல.

எங்க அண்ணனுக்கு தாக்கல் போச்சு. எங்க அண்ணன் தலக்கையா சைக்கிள்ல வந்தாரு. எனக்காக எல்லா விசயத்துலயும் தலையைக்குடுக்கறதால அவனுக்கு தலக்கையான்னு பேரு வந்துருக்கணும் போல.

‘என்னய்யா, தங்க நகை செஞ்சு போடுறதுல ஏதோ பிராடு பண்ணிட்ட. சரி. உன் தங்கச்சிய ஆடு மேய்க்க அனுப்பக்கூடாதுன்னும் சொன்ன. சரின்னு ஒத்துக்கிட்டேன். ஆனா, இப்ப, உன் தங்கச்சிக்கு ஒண்ணும் உண்டாகுற மாதிரி தெரியல. இப்ப, என்ன சொல்ற ?’ அப்படின்னாரு என் மாமா அப்பையா.

‘நான் என்ன செய்யட்டும்? ஐயா, பிள்ளை பெறக்கறது நம்ம கையிலா இருக்கு? அதெல்லாம் ஆண்டவனாப்பாத்து தர்றான்யா. ஒருத்தனுக்கு சோத்துக்கே வழி இருக்காது. ஆனா, அவனுக்கு வீட்டுல ஆறு பிள்ள இருக்கும். ஒருத்தன் கோடீஸ்வரனா இருப்பான். ஆனா, அவனுக்கு பிள்ளை இல்லாம, வீடே வெறிச்சோடிப்போயிருக்கும். நாம என்ன செய்ய முடியும்? வேணாலும் எங்க குல தெய்வம் கோவிலுக்கு வேண்டிக்கலாம். அந்த சந்தனமாரி ஒரு வழி காட்டட்டும்’ என்றான் என் அண்ணன்.

எங்க அண்ணன் சொன்ன மாதிரி, ஒரு நல்ல நாள் பார்த்து, கம்மாப்பட்டி சந்தனமாரி கோவிலுக்குப்போய், குடும்பத்தோடு பொங்க வெச்சோம். சாமி கும்பிட்டோம். பிறகு ஊருக்கு திரும்பி வந்தோம். என்ன செஞ்சு என்ன பண்ண ? ஒண்ணும் வழி பெறக்கல.

என் புருஷன் வீட்டுல தான் ஒருத்தரும் பள்ளிக்கூடத்துக்குப்போயி படிக்கல. ஆனா, வீட்டுக்கு வந்து தபால் போடுற தபால்கார அய்யாவோட பையன் படிச்ச ஆளு போல. அவன் கிட்ட தபால்காரர் இதப்பத்தி கேட்டுருப்பாரு போல. அந்தப்பையன், ஒரே வார்த்தையிலே, ‘இது ஒரு பிரச்சனையே இல்ல. மதுரையில, இதுக்குன்னு ஒரு டாக்டர் இருக்காங்க. அவங்க பேரு மனோரமா. அவங்க, கேரளாக்காரங்க. அவங்க கிட்டப்போனா, உடனே இதுக்கு ஒரு வழி சொல்லுவாங்க’ அப்படின்னு, பளீர்ன்னு சொன்னாரு. இத தபால்காரர் வந்து எங்க மாமனார் கிட்ட சொல்லி வைக்க, அந்த டாக்டர் மனோரமாவோட விலாசத்தை விசாரிச்சு வாங்கிக்கிட்டு, என்னோட அருமை மாமனார் அப்பையா, என்னையவும், என் வீட்டுக்காரரரையும், அவர் குடும்பத்தையும் கூடவே கூட்டிக்கிட்டு அங்க போனாரு.

காலைல மதுரைக்கு போயி, மதுரை பூராவும் அவரு ஆஸ்பத்திரிய தேடிப்பாத்துட்டு, அந்த டாக்டரை பாத்துட்டு, அவர் என்னோட உடம்புல ஏதேதோ மிஷினை வெச்சு பாத்துட்டு, அந்த பொம்பள டாக்டர் என்னைய ஒரு பார்வை பாத்துட்டு, அப்புறமா, என்னைய ரூமுக்கு வெளிய இருக்கச்சொல்லிட்டு, என்னோட வீட்டுக்காரரை மட்டும் உள்ள கூப்பிட்டு ஏதோ பேசினாரு.

கொஞ்ச நேரம் கழிச்சு, ரூமுக்கு வெளிய வந்த என் வீட்டுக்காரரு பேயறைஞ்சது போல இருந்தாரு. கண்ணு ரெண்டும் ஜிவு ஜிவுன்னு செவந்து போச்சு. வெளிய வந்ததுமே அவர் கண்ணுல இருந்து அருவியா தண்ணி கொட்டுது.

‘அப்பா, அந்த கம்மாப்பட்டி தலக்கையா நம்ம எல்லாத்தையுமே ஏமாத்திட்டான். அவன் ஏதோ, ஆடு மேய்ச்சு, சாணி தட்டி விக்கிறவன்னு நெனைக்காதப்பா. பெரிய தெக்கத்திக் கள்ளன். கர்ப்பப்பையே இல்லாத ஒரு பொண்ணை நமக்கு கல்யாணம் பண்ணி வெச்சு, நம்ம தலையில மொளகாய் அரைச்சுட்டான் அந்த ஆட்டுக்காரப்பைய. ‘

‘இவ்வளவு களவாணித்தனமா அவன் பண்ணிட்டான்? அவன் கண்ணைப்பாக்குற போதே எனக்கு சந்தேகமா வந்தது. அவன் திருட்டு நாயா? இப்படி முழு மோசடியா பண்ணிருக்கான். அந்த நாயி வெளங்காது. அவன் குடும்பம் நாசமாப்போகும். ஆமா….அவன் தேவி….’

மறுபடி வாயால சொல்ல முடியாத பச்சை பச்சையான வார்த்தையால என் மாமா என்னையும், என் அண்ணனையும், என் குடும்பத்தையும் ஏசி, குடும்பத்தின் நாலு தலைமுறை வரைக்கும், அப்பன் பேர் தெரியாம பிறந்த ஆளுங்கன்னு வகை தொகை இல்லாமல் வசவு வைய்யிறாரு. அன்னிக்கு, அங்க மதுரையில இருந்து, இங்க பாப்பைய நாயக்கன்பட்டிக்கு திரும்பற வரைக்கும், எனக்கும்,என் அண்ணன் குடும்பத்துக்கும் விழுந்த வசவுகள எல்லாம் சேத்து வெச்சா, அத பூராத்தையும், ஒரு பெரிய வீட்டுக்குள்ள போட்டு பூட்டி வைக்கலாம். அவ்வளவு வசவு !!

அடுத்து ஒரு வாரத்துக்கு ஒருத்தரும் வீட்டுல என் கூட பேசல. எல்லாரும் நான் சமைச்சு சாப்புட மாட்டோம்னு சொல்லிட்டு, அக்கம் பக்கத்துல இருக்கற அவங்க பங்காளி வீட்டுக்கே போயி சாப்புட ஆரம்பிச்சுட்டாங்க. என் வீட்டுக்காரரோ, என் பக்கமே திரும்பல.

‘இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சு , இப்படி கர்ப்பப்பையே இல்லாத ஒரு மலடிய என் மவன் தலையில கட்டினான் பாரு, அந்த ப்ரோக்கர் பைய செல்வம் மட்டும் என் கையில கிடைச்சான், நொங்கு சீவுற மாதிரி, அருவாளால ஒரே சீவு. தலை மட்டும் துண்டா அங்கிட்டுப்போயி விழும்’ என்று அப்பையா சீறினார்.

‘ஏதோ, பண வசதி குறைவா இருந்தா, போகுதுன்னு விட்டுடலாம். வீட்டுக்கு வந்தவள நாம தான கண்ணு கலங்காம பாத்துக்கணும். அதனால, அவளுக்கு நாமே ஏதாவது நகை செஞ்சு போடலாம். அல்லது நம்ம செலவுல நல்ல துணி மணி வாங்கித்தந்து சந்தோசமா வெச்சுக்கலாம். இங்க என்னடான்னா, ஒரு பொண்ணுக்கு கண்டிப்பா இருக்க வேண்டியதே இல்லாம இருக்கே ! நம்மள எல்லாம் அந்த தலக்கையா மொத்தமா ஏமாத்தி, கிறுக்கனாக்கிட்டுப்போயிட்டான். நீங்க வருத்தப்பட்டு, கண்ணு கலங்காதீங்க மாமா. உங்க பையன் கந்தையாவுக்கு என்ன குறை? அவன் நல்லா செவப்பா, உயரமா, பாக்க லட்சணமா இருக்கான். நீங்க சரின்னு சொல்லுங்க. என் பொண்ணை, உங்க பையனுக்கு அடுத்த மாசமே நம்ம ஊர் கோவில்ல கல்யாணம் முடிச்சுத்தர்றேன். நீங்க கேக்குற சீர்வரிசை எல்லாம் செஞ்சு தர்றோம். என் வீட்டை நீங்களே வெச்சுக்குங்க. சரின்னு சொல்லுங்க. அடுத்த வாரம், வெள்ளிக்கிழமை பூ வெக்க எங்க வீட்டுக்கு வாங்க. என்ன சொல்றீங்க ?’ ன்னு, என் மாமனாரின் அங்காளி பங்காளிகளெல்லாம் வீட்டுக்கு வந்து என் காதுபடவே சம்பந்தம் பேச ஆரம்பிச்சுட்டாங்க.

இனி மேலும், என் புருசன் வீட்டுல இருந்தா, எனக்கு மரியாதை இல்லன்னு முடிவு செஞ்சேன். சொல்லாம, கொள்ளாம வெளியேறி, என் சொந்த ஊர் கம்மாபட்டிக்கு திரும்பணும்னு முடிவு பண்ணினேன்….

‘அவங்க என்னைய தேடட்டும். நான் இனிமே அங்க போக மாட்டேன்’ என்று மனதுக்குள் முணுமுணுத்தபடி செண்பகம் மல்லியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் போகும் தார் ரோட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

‘செண்பகம் எங்க போயித் தொலைஞ்சா’ என்று அவளைத்தேடிக்கொண்டிருந்தான் அவ புருசன் கந்தையா.

‘மவன் இப்படி பொண்டாட்டி நெலமையை நினைச்சு, ஒழுங்கா சோறு திங்காம போறானே ! எங்க போனானோ’ என்று அப்பையா, மகனை தேடிக்கொண்டிருந்தார்.

கல்யாண ப்ரோக்கர் செல்வம் வருத்தத்தில் இருந்தான். ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து, பாப்பைய நாயக்கன்பட்டிக்கு ஆறு தடவ வண்டியில வந்துட்டுப்போனதுக்கு, தனக்கு, ஒரு தடவைக்கு ஐநூறு ரூவா வீதம், ஆறு தடவைக்கு மூவாயிரம் ரூவா ப்ரோக்கர் கமிசன் பாக்கி வெச்சுருக்கான் அந்த கம்மாப்பட்டி தலக்கையா. வடிகட்டுன கஞ்சப்பைய. இவன் வீட்டுக்கு இன்னிக்கு போயி, வீட்டு வாசல்லயே உக்காந்து, ‘பணம் குடுத்தாத்தான் இங்க இருந்து போவேன்’னு முடிவா சொல்லிறணும். இவன் தலக்கையா எங்க போனான்னு ப்ரோக்கர் செல்வம், அவனை தேடிக்கொண்டிருந்தான்.

‘என்ன இந்த சைக்கிள்ல பெடல் சரியா மிதிக்க மாட்டேங்குதே. இந்த வண்டிய சரி செஞ்சு, மிதிச்சு, பாப்பைய நாயக்கன்பட்டில தங்கச்சி வீடு வரைக்கும் போயிட்டு வரணுமே! இந்த சைக்கிள் கடை பொன்னுசாமி கடைய தொறந்து வெச்சுட்டு, எங்க போனா?’ன்னு அவன் கடை வாசல்ல சைக்கிளை நிறுத்திட்டு, அங்கயும், இங்கயும் தலைய திருப்பி பொன்னுசாமிய தேடிக்கிட்டு இருந்தான் தலக்கையா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *