ஆன்மா சாந்தியடையுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 5,365 
 
 

அன்று அதிகாலை நான்கு மணிக்கே சமையறையில் லைட்டைப் போட்டுக் கொண்டு, பாத்திரங்களை உருட்டிக் கொண்டே பேசும் சத்தம் வீட்டில் யாரையும் தூங்க விட வில்லை!

அந்த வீட்டின் மூன்று மருமகள்களும் தலைக்கு குளித்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள்.

ராகவனுக்கு தூக்கம் வராததால் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, ஹாலில் உட்கார்ந்து அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

சாதாரணமாக ராகவன் காலை ஆறு மணிக்குத் தான் எழுவது வழக்கம்! அன்று வேறு வழியில்லாமல் நான்கு மணிக்கே எழுந்து கொண்டார்.

ராகவன் தான் அந்த வீட்டின் மூத்த மகன். அடுத்தது சரவணன். கடைசி பையன் சுந்தர். அப்பா காலத்திலேயே நிறைய சொத்து.

ராகவன் கிண்டியில் இருக்கும் கார் தொழிற்சாலையைப் பார்த்துக் கொள்கிறார். சரவணன் பெங்களூரில் ஒரு ஐ.டி. கம்பெனியில் எம்,டி. கடைசித் தம்பி சுந்தர் கோவை ஒப்பணக்கார வீதியில் இருக்கும் பிரமாண்டமான ஜவுளி மாளிகையின் உரிமையாளன்.

ராகவனுக்கு ஒரு மகள். இரண்டு பையன்கள். மகளுக்கு கல்யாணமாகி விட்டது. பையன்களுக்கும் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பெங்களூரில் இருக்கும் சரவணனுக்கு ஒரே மகன். மேற்படிப்புக்காக அமெரிக்கா போயிருக்கிறான்.

கடைசி பையன் சுந்தருக்கு ஒரு பையன். ஒரு பெண். பையன் பி.ஈ. கடைசி வருஷம். பெண் நிர்மலா கல்லூரியில் முதலாண்டு பி.ஏ.

ராகவனின் அப்பா பத்து வருஷத்திற்கு முன்பே ஹார்ட் அட்டாக்கில் காலமாகி விட்டார். தாய் சாந்தி போன வருஷம் தான் இறந்தார். அன்று அம்மா சந்தியின் முதலாண்டு நினைவு நாள். முதலாண்டு நினைவு தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று எல்லோரும் ஆசைப் பட்டார்கள். அதனால் எல்லோரும் இரண்டு நாட்கள் முன்னதாகவே குடும்பத்தோடு மூத்தவன் ராகவன் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

மூன்று மருமகள்களும் ஒற்றுமையாக அத்தைக்கு என்ன என்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து செய்தார்கள்.

எல்லோருக்கும் புது டிரஸ் எடுத்திருந்தார்கள். பாண்டி பஜார் முழுவதும் அலசியும் கூட அவர்களுக்குப் பிடித்த டிசைனில் பட்டுப் புடவைகள் கிடைக்க வில்லை! வேறு வழியில்லாமல் காஞ்சிபுரம் போய் எடுத்து வந்தார்கள். மறக்காமல் அவர்கள் வீட்டில் சமையல் வேலை செய்யும் காவேரி அம்மாளுக்கும் பட்டுப் புடவை எடுத்து வந்தார்கள்.

காவேரியம்மாவுக்கு வேலை தான் சமையல் வேலை. சாந்திக்கு சொந்த தங்கச்சி மாதிரி! கடந்த முப்பது வருஷமாக அந்த வீட்டின் பாதி நிர்வாகம் காவேரியின் கைகளில் தான் இருந்தது.

சாந்திக்கு அந்தரங்க ஆலோசகரே காவேரிதான்! அதனால் அவளுக்கு அந்த வீட்டில் தனி மரியாதை! காவேரியம்மாளும் எல்லை மீறாமல், அடக்கமாக எல்லோருக்கும் உரிய மரியாதை கொடுத்து வாழ்ந்து வந்தார்கள்.

அத்தை சாந்திக்கு என்ன என்ன பிடிக்கும் என்று மூன்று மருமகள்களும் காவேரியைக் கேட்டுக் கேட்டு அதை சிரத்தையாகப் பூர்த்தி செய்தார்கள்.

படையல் சாப்பாடிற்கு பொரியல் மட்டும் 11 வகை. மெது வடை சுடும் பொழுது சாந்தி அக்காவுக்கு மசால்வடை பிடிக்கும் என்று காவேரி சொல்ல வடையும் இரண்டு விதமாக மாறி விட்டது. பாயாசத்தோடு அத்தைக்கு சர்க்கரைப் பொங்கல் பிடிக்கும் என்பதால் அதுவும் ஸ்பெஷல்! கூட்டு, புளிக் குழம்பு, அப்பளம், ஊறுகாய், அவியல், மோர்க் குழம்பு, சாம்பார், ரசம், தயிர் என்று ஏகப்பட்ட ஐட்டம்.

சாந்தி ஒரு இனிப்பு பிரியை. கோவை எஸ். கே. மைசூர்பாகு என்றால் விரும்பி சாப்பிடுவார். அதனால் சுந்தர் வரும்பொழுது தன் அம்மாவின் வருஷாந்திரத்திற்கு நான்கு கிலோ மைசூர்பாகு வாங்கி வந்திருந்தான்.

சாந்தியின் கணவன் முத்துப் பாண்டி பரம்பரைப் பணக்காரர்! அவருக்கு சென்னையிலேயே நான்கு ஐந்து வீடுகள் உண்டு! பெரிய தொழிற்சாலையும் அவருக்கு கிண்டியில் இருந்தது. அதன் நிர்வாகத்தை அப்பா காலத்திலேயே மூத்த மகன் ராகவன் தான் பார்த்துக் கொண்டிருந்தார். முத்துப் பாண்டி ஹார்ட் அட்டாக்கில் காலமாகி பத்து வருஷமாகி விட்டது. கணவன் போன பிறகு சாந்தி தன் மூத்த மகன் ராகவனோடு, அதே வீட்டில் வசித்து வந்தாள். அங்கு வசதிக்கு எந்த குறையும் இல்லை! ஆனால் வீட்டில் பேசுவதற்குத்தான் ஆள் கிடைக்காது. அவரவருக்கு அவரவர் வேலையே பிரதானமாக இருக்கும்! கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டுப் போய் விடுவார்கள்! இந்தக் காலத்து சின்னஞ் சிறிசுகள் எல்லாம் வயசானவர்களை கண்டால் ஒதுங்கிப் போவதையே வழக்கமாக வைத்திருந்தார்கள்!

ராகவன் கிண்டி தொழிற்சாலைக்குப் போனால் இரவு தான் திரும்புவார். ராகவன் மனைவி கோகிலா லேடீஸ் கிளப் பிரசிடெண்ட். அவளுக்கு பொது சேவைக்கே நேரம் போதாது.

சாந்திக்கு உற்ற துணை காவேரி மட்டுமே! காவேரிக்கு கிட்டத் தட்ட சாந்தி வயசு தான்! கள்ளம் கபடம் இல்லாத மனசு! அதனால் சாந்தி எதையும் மனசு விட்டு காவேரியிடம் தனிமையில் சொல்லி விடுவாள்!

பொதுவாகவே இந்த வயசானவர்களுக்கு தங்கள் மன பாரத்தை இறக்கி வைக்க ஆள் கிடைக்கா விட்டால் தவித்துப் போய் விடுவார்கள்! யாரிடமாவது தங்கள் மனசில் இருப்பதை கொட்டினால் தான், அவர்களுக்கு தலையில் இருக்கும் தலைச் சுமையை இறக்கி வைத்த மாதிரி!

முதியோர்களுக்கு தனிமை கொடுமை! அதை விடக் கொடுமை தான் பெற்று வளர்த்த குழந்தைகளும், உயிரை கொடுத்து வளர்த்த பேரன் பேத்திகளும் வயசு வந்தவுடன் தங்களை ஒரு மூலையில் ஒதுக்கி விட்டு, அவர்களைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொள்வது! உணவு, உடை, இதர தேவைகள் மட்டும் முதியவர்களுக்கு இருந்தால் போதும் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்! முதியவர்களுக்கும் மனசு என்று ஒன்று இருப்பதை யாருமே புரிந்து கொள்வதில்லை! வயசாகி விட்டால் தனிமை ஒரு வேதனை! இன்றைய முதியோரின் முக்கிய பிரச்னையே தங்கள் சொந்தங்களின் புறக்கணிப்புத் தான்! வேறு வழி இல்லை போலிருக்கு! இதை கடந்து வருவது தான் முதுமைப் பருவத்தில் இருக்கும் கொடுமை!

சாந்திக்கு காவேரி ஒரு சுமை தாங்கி! சாந்தி எதை சொன்னாலும் ஒரு சொல் வெளியில் போகாது!

சாந்தி ராகவன் வீட்டில் வாழ்ந்தாலும், வருடத்திற்கு ஒரு முறையாவது பெங்களூரில் சரவணன் வீட்டில் கொஞ்ச நாட்களும், கோயமுத்தூரில் கடைசி மகன் சுந்தர் வீட்டில் கொஞ்ச நாளும் போய் இருந்து விட்டு வருவாள்.

பெற்ற மகன்கள் எல்லோரும் தனக்கு ஒன்றுதான் என்று சொல்வது போல் அது இருக்கும்! அங்கும் வேண்டியது ஏராளமாக கிடைக்கும். அன்பைத் தவிர!

பேத்தியிடம் ஏதாவது கேட்டால் அவள் காது கேட்காதது போல் அலட்சியமாகப் போவதைப் பார்த்து உண்மையாகவே அவள் உள்ளம் ரத்தக் கண்ணீர் சிந்தும்!

அதையெல்லாம் வந்து காவேரியிடம் கொட்டி விட்டு தனிமையில் கண்ணீர் சிந்திய நாட்கள் நிறைய!

இன்று அதே ரத்த சொந்தங்கள் சாந்திக்கு என்ன பிடிக்கும் என்று மாற்றி மாற்றி தேடிப் பிடித்து செய்வதைப் பார்க்கும் பொழுது காவேரிக்கு வியப்பாக இருந்தது.

சாந்தி உயிரோடு இருக்கும் பொழுது “ அத்தை உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொன்னால், நான் வெளியில் போகும் பொழுது வாங்கி வருகிறேன்!..” என்று யாராவது ஒரு மருமகள் சாந்தியை கேட்டிருந்தால் தனக்கு சொர்க்கமே கிடைத்து போல் சாந்தி அக்கா மகிழ்ச்சியை அடைந்திருப்பார்கள்!

இன்று பெரிய தலைவாழையிலையில் இடம் இல்லாத அளவுக்கு சாந்திக்குப் பிடித்த அத்தனை உணவு வகைகள்!

காவேரி வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்குப் போக மாலை ஐந்து மணியாகி விட்டது.

“ ஏண்டி!…உங்க முதலாளி வீட்டில் இன்று விருந்து பலமோ?…” என்றான் கணவன் கணேசன்.

“ அதை ஏன் கேட்கிறீங்க?…எங்க முதலாளி வீடு மாதிரி எந்த வீட்டிலும் பெரிய தலை வாழை இலைகளில் இறந்தவர்களின் நினைவு நாளில்

அவர்களுக்கு பிடிச்ச பொருட்களை எல்லாம் தேடித் தேடி நிரப்பி வைத்துப் பூஜை செய்திருக்க மாட்டாங்க!….”

“ எப்படியோ அந்த அம்மா ஆன்மா சாந்தியடைந்தா போதாதா?…”

“ எனக்கு என்னவோ இதில் எல்லாம் அந்த நம்பிக்கையே வர மாட்டேன்கிறது!…”

“ என்னடி!…. உங்க சாந்தியக்கா வீட்டை விட்டுக் கொடுத்து எப்பவுமே நீ பேச மாட்டே!….இன்னைக்கு இப்படி சொல்லறே?…”

“ நான் அவங்களுக்காக மட்டும் சொல்லைங்க!….நம்ம எல்லோருக்காகவும் தான் சொல்லறேன்!….

அந்த தலைவாழை இலையிலே அக்காவுக்குப் பிடிச்ச ஒவ்வொரு பொருளா கொண்டு வந்து வச்சாங்க!…எனக்கு அப்ப அந்தப் பொருள்களை பற்றி அக்கா சொன்ன ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் தான் நினைவு வந்ததுங்க!

அக்காவுக்கு பிடிக்குமென்று கோயமுத்தூர் மருமக நாலு கிலோ மைசூர் பாகு கொண்டு வந்திருந்தாங்க!…..ஒரு நாள்…. கோயமுத்தூர் மகன் சுந்தர் அம்மாவைப் பார்க்க இங்கு வருவதாகப் போன் பண்ணிச் சொன்னாங்க! உனக்கு என்ன பிடிக்கும்….ஏதாவது வாங்கிட்டு வரவா என்று போனிலேயே கேட்டுதுங்க!… அக்கா ஆசையா அரை கிலோ மைசூர்பாகு வாங்கிட்டுவா…என்று சொன்னாங்க…போனுக்குப் பக்கத்திலே இருந்த மருமக சித்ரா இதை கேட்டிருப்பாங்க போலிருக்கு!…அது தன் புருஷனிடம் ‘வயசாச்சே தவிர இந்தக் கிழத்திற்கு நாக்கை அடக்கத் துப்பு இல்லே!…’ என்று சொன்னது அப்படியே இங்கே தெளிவா போனில் கேட்டது!..அதற்கு ‘நீ கொஞ்சம் சும்மா இருடி!..’ என்று மகன் அதட்டியதும் காதில் விழுந்தது..அக்கா சுந்தர் கொண்டு வந்த மைசூர்பாகை அன்று தொடக் கூட இல்லே!…

தனிமையில் என்னிடம் ‘காவேரி மருமக சொல்லறதிலும் தப்பில்லே!…வயசாச்சே தவிர எனக்கு இன்னும் நாக்கை அடக்க முடியலே!….வயசான பிறகு தான் கண்டதை திங்க வேண்டும் என்ற ஆசையே மனுஷனுக்கு வருது…’ என்று ..கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதாங்க!…

அந்த மருமகதான் அத்தைக்குப் பிடிக்கும் என்று இன்று நாலு கிலோ மைசூர்பாகு வாங்கி வந்து பூஜைக்கு வச்சாங்க!..எனக்கு அந்த மைசூர் பாகு பாக்கெட்டைப் பார்த்ததும், எனக்கு கோயமுத்தூர் மருமக அக்காவைப் பற்றிச் சொன்ன அந்த நிகழ்ச்சிதான் ஞாபகத்திற்கு வந்தது!

அக்காவுக்கு இனிப்புனா ரொம்ப இஷ்டம்… நல்ல வேளை அவங்களுக்கு சுகர் கூட இல்லே!… ஒரு முறை பொங்கலுக்கு பெங்களூர் மகன் வீட்டிற்குப்

போயிருந்தாங்க!…வீட்டில் வச்ச சர்க்கரைப் பொங்கல் ரொம்ப ருசியாக இருந்ததாம்!…அத்தை இரண்டாவது தடவை கேட்டு வாங்கிச் சாப்பிட்டிருங்காங்க!..

உள்ளே மருமகள் சரவணன் தம்பிகிட்டே ‘உங்கம்மா காணாததைக் கண்ட மாதிரி வழிச்சு கட்டிட்டு சாப்பிடறாங்க……………வயசாச்சே தவிர வாயை அடக்கத் தெரியலே!’ என்று மாமியாருக்கு கேட்கட்டுமென்று அவங்க சத்தமாவே சொல்லியிருக்காங்க!.

இங்கு வந்து எங்கிட்ட அதைச் சொல்லிட்டு ரொம்ப வருத்தப் பட்டாங்க!….அதற்கு பிறகு அவங்க இனிப்பு சாப்பிடுவதையே விட்டு விட்டாங்க!….

அந்த பெங்களூரு மருமக மல்லிகாதான், அத்தைக்குப் பிடிக்குமென்று ஒரு பெரிய பாத்திரத்தில் நெய் வழிய வழிய சர்க்கரைப் பொங்கல் நிறைய செய்து இன்னைக்கு வைத்திருந்தாங்க!

அதைப் பார்த்தவுடன் பெங்களூரில் அக்கா பொங்கல் சாப்பிட்டபொழுது அந்த மருமகள் மல்லிகா சொன்ன வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்ததுங்க!…

ஒரு தீபாவளிக்கு ஜவுளி எடுக்க எல்லோரும் பாண்டி பஜார் போயிருந்தாங்க!…எல்லோரும் பிடிச்ச மாதிரி ஆளாளுக்கு உயர்தர பட்டுப் புடவைகள் தான் எடுத்தாங்க…அக்கா தனக்குப் பிடித்த நீல வர்ண பட்டுப் புடவையை தனக்காக எடுத்து வச்சிருங்காங்க!…

வீட்டுக்கு வந்தவுடன் ராகவன் சம்சாரம் ‘அத்தைக்கு வயசானாலும் இந்தப் பட்டுப் புடவை ஆசை மட்டும் இன்னும் போக மாட்டங்குது…பார்த்து ரசிக்க மாமா கூட இல்லே! ஆனா ஆசை மட்டும் அத்தைக்கு இன்னும் விடலே…’! என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே சொன்னாங்களாம்!…

முதியவர்கள் மனசை ரணப் படுத்துவதற்கு பேர் தான் இன்றைய இளைய தலைமுறைக்கு கேலியாம்!…..தமாஷாம்!…

அதற்குப் பிறகு அக்கா எந்த பங்ஷனுக்கும் பட்டுப் புடவை கட்டவே இல்லே!…நூல் புடவை தான் கட்டிக் கொண்டாங்க!…

ஏனுங்க!……. புருஷன் செத்துப் போனா… பெண்கள் தங்களுடைய எல்லா ஆசைகளையும் விட்டு விட வேண்டுமென்று இந்த ஆண்கள் நினைக்கிறீங்களே அது நியாயமா?…எந்த ஒரு ஆணாவது தன் பெண்டாட்டி செத்த பிறகு எல்லா ஆசைகளையும் விட்டு விட்டு வாழ்ந்ததாக உங்களால் ஒருத்தரை காட்ட முடியுமா?…ச்சே! இந்த ஆண்கள் புத்தியே அவ்வளவு தான்!…..ஆனா இந்த காலத்தில் பெண்கள் கூட இப்படி நினைக்கிறாங்களே,,,,அப்புறம் எப்படிங்க இந்த பெண்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்?..

இந்த தெவசத்திற்கு அக்காவுக்கு பிடிச்ச நீலவர்ணப் பட்டுப் புடவை நாற்பதாயிரம் ரூபாயிற்கு எடுத்து வந்து பூஜையில் வச்சிருந்தாங்க…

வயசான காலத்திலே ஆரோக்கியமா இருந்தா வாய்க்கு ருசியா சாப்பிடறதும் மனசுக்குப் பிடிச்சதை செய்யறதும் தப்பு இல்லேங்க………பொறுப்புள்ள குடும்பஸ்தர்கள் ஒவ்வொருவரும் அவங்களுக்கு .வயசாகிறவரை ஆணாக இருக்கட்டும்..பெண்ணாக இருக்கட்டும் தங்கள் பெற்ற குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதில் தான் கண்ணும் கருத்துமா இருப்பாங்க!..எல்லாக் கடமையும் முடிஞ்சு, வயசாகி ஓய்வா உட்காரும் பொழுது தான், தங்களுக்கு பிடிச்சதை சாப்பிட வேண்டும்…மனசுக்கு பிடிச்சதை செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவங்களுக்கு வருமுங்க!…ஆயுசு முழுவதும் நமக்காக பாடு பட்டவர்களை அவங்க சொந்த ரத்த பந்தமே கேலி பேசி குத்திக் காட்டுவது பாவங்க!…..ஆண்டவன் புண்ணியத்திலே ஆரோக்கியமும், எக்கச்சக்கமான சொத்து இருந்தும் கூட சாந்தி அக்கா எனக்குத் தெரிந்து அதை சந்தோஷமா அனுபவிக்கவில்லைங்க!…

இந்த பெத்தவங்க வருடாந்திரத்தை இவ்வளவு தடபுடலா நிறைய செலவு செய்து ஏன் செய்யறாங்க தெரியுமா? செத்துப் போன நம் பெரியவங்க மேலே இருந்து சாபம் கொடுத்தா அவங்க சந்ததியினர் வாழ்க்கை பாதித்து விடும் என்று யாரோ ஒரு மகராசன் சொல்லி விட்டுப் போயிட்டான்!…. இப்படி எல்லாம் நாம செய்யாட்டா அது நம்மை பாதிச்சிடும் என்ற பயத்தில் தான் இப்படி தடபுடலாகச் செய்யறாங்க! …..

அதனால் தான் தங்கள் குடும்பத்தில் பெரியவங்க செத்த பிறகு, தாங்களும், தங்கள் குழந்தைகளும் நல்லா இருக்க வேண்டும் என்ற சுயநலத்திற்காகத்தான் நிறையப் பேர் இப்படி தெவசத்தை தடபுடலா செய்யறாங்க!….

அது எனக்கு சுத்தமா பிடிக்லைங்க!…வயசானவங்க வீட்டில் இருந்தா…முதுமையில் அவர்கள் ஆசைப் படுவது போல் வாழ விட வேண்டுங்க! ……….அவங்க பெற்று வளர்த்த குழந்தைகளாவது ..தினசரி நாலு வார்த்தை அன்பா…. அக்கறையா அவங்கிட்டே விசாரிக்க வேண்டுங்க… வயிற்று உணவும் போட்டுக்க துணியும் கிடைச்சா போதாதுங்க!…முதியவங்களுக்கும் மனசு இருக்குதுங்க!,,,….அது சொந்தங்களின் பிரியமான நாலு வார்த்தைக்கு ஏங்கி

தவிக்குதுங்க!..வயசான தள்ளாமையில் தான் அது அன்புக்கு ஏங்குதுங்க! …….அதை அவங்க உயிரோடு இருக்கும் வரை யாருமே அதை புரிஞ்சுக்காமே அவங்களை அலட்சியமா புறக்கணிச்சிடறாங்க!

நான் சாந்தி அக்கா கூடப் பிறக்காமல் இருக்கலாம்…எனக்கு சாந்தி அக்கானா உயிருங்க…அவங்க உயிர் போகுவரை கூடவே இருந்து அவங்களுக்குப் பிடிச்சமாதிரி நடந்து கொண்டேன்!

இன்று கூட அக்கா தான் சாகும் வரை தொடாத மைசூர் பாகுவையும், சர்க்கரைப் பொங்கலையும் நானும் கையால் கூட தொடலைங்க!..எனக்கும் இன்று ஒரு பட்டு புடவை தந்திருக்காங்க!….அக்கா தன் கடைசி காலம் வரை கட்டாத பட்டுப் புடவையை, நான் கூட கட்ட மாட்டேனுங்க!… நாளைக்கு யாராவது ஒரு ஏழைக்கு அதை தானமாகக் கொடுக்கப் போகிறேன்!

இன்று நடந்த இந்த பூஜையில் என் சாந்தி அக்காவின் ஆன்மா சாந்தியடைய நான் மனசார வேண்டிக் கொண்டேனுங்க!…அக்கா ஆன்மா எங்கிருந்தாலும் என் வேண்டுதலைக் கேட்டு சாந்தி அடையும் என்று நான் நம்புறேனுங்க!.. நிறையப் பேர் தாய் தந்தை உயிரோடு இருக்கும் பொழுது நன்கு கவனித்து மகிழ்ச்சியாக வைத்திருப்பதை விட்டு விட்டு, அவர்கள் இறந்த பின் அவர்களின் நினைவு நாளை பெரிய அளவில் கொண்டாடுகிறார்களே, அதனால் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையுமா? …..எனக்கு இது கொஞ்சம் கூட புரியலையுங்க!..” என்று சொல்லி வேதனைப் பட்டாள் காவேரியம்மா!

­­­­- பாவையர் மலர் ஜூன் 2018 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *