தாம்பத்யம் என்பது எவ்வளவு சிக்கலானது என்று பரமானந்தத்துக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும், அதை அனுபவிக்க நேர்ந்த பொழுது அதன் மேடு பள்ளங்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதையும் உணர்ந்து கொண்டான்.
அந்தராத்துமாக்களின் இணைப்பில் ஆனந்த மயமான ஒரு வாழ்க்கை தொடராகத் தொடர்ந்து அந்தியஷ்டமாகும் என்பது அவன் கண்டிருந்த கனவு. ஆனால் அது வெறும் பிரமை மட்டுமல்ல, இலட்சியவாதிகளுக்கு ஒவ்வாத உன்று என்றும் அவன் எண்ணியிருந்த பொழுது, சற்று கடினமான ஒன்றைச் செய்துவிட்டதாகவும், அதனால் தானே தன்னைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி விசாரணை செய்வதாகவும் அவன் எண்ணிப் புளுங்கிக் கொண்டிருந்தான்.
முன் கூடத்தின் ஒரு மூலையில் கிடந்த சாய்வு நாற்காலியில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்த அவனுக்கு நேரே முன்புறமாக அமைந்து, அவனுடைய கோலத்தை அப்பட்டமாக வெளிக்காட்டிக் கொண்டிருந்த கண்ணாடியில் அவன் தன்னை மறுபடியும் தரிசித்துக் கொண்டான்.
மனைவி சசிகலாவின் சிபார்சின் பெயரில் பெருவிலை கொடுத்து வாங்கப் பெற்ற அந்தக் கண்ணாடி கூட அவனுடைய அலங்கோல பாவங்களைக் குத்திக் காட்டி நிற்பது போலப் பட்டது அவனுக்கு.
அவனுடைய ஆத்மா வேதனைத் தீநறுக்குகளின் இடையே ஆழ்ந்து, தாங்காத வேதனையுடன் விலகிக் கொண்டிருந்தது.
பாடசாலை நேரத்துக்கே முடிந்து விட்டதால் அவனுடைய வேலையும் முடிந்து விட்டது.
அவன் மற்றவர்களைப் போல பொழுதை வீணே போக்கடிக்க விரும்பாமல் வீட்டுக்கே வந்திருந்தான்.
காலையில் அவனும் சசிகலாவும் புறப்பட்டதும் வெறிச்சொடிப் போய்க்கிடந்த அந்தக் கொழும்பு வாடகை வீடு , அவன் மாலை வந்ததும் வீட்டில் ஏற்படக்கூடிய களையைப் பெற்று, ஏதோ ஒருவித பொலிவுடன் காணத்தான் செய்தது. அந்தப் பொலிவு வார்த்தையளவிலேயே நின்று விட்டதால், அவன் தனிமையில் வெந்து கொண்டிருந்தான். அவனுடைய நெடும் பயணத்தில் ஏற்படவிருந்த தனிமை நோயைத் தீர்ப்பதற்கு அவனைப் போலவே படித்து பட்டம் பெற்று, அரசாங்கத்திலும் வேலை பார்க்கின்ற ஒருத்தியை அவனுடைய பெற்றோர்கள் கைப்பிடித்துக் கொடுத்த போது, ஏற்பட்ட ஆனந்தத்திவலைகள் பெரு வெள்ளமாகாது குமிழிகளாகவே மறைந்துவிட்ட பிரமை அவனை அடிக்கடி வெறுப்புறச் செய்து கொண்டிருந்தது. கைம்மை நோற்பவன் போல, அவன் ஆண்மகன் என்ற உயரிய நிலையையும் இழந்து வருந்திக் கொண்டிருந்தான்.
வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக மத்தியானம் வலிந்து உண்ட பாண் துண்டுகளின் விருப்பத்தை அவன் எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை விடவும் அவனைக் கொல்லும் உணர்ச்சிகளாக மனக்கடலில் உதித்த ஆசைகளை அன்றாடம் தணிப்பதற்கு சசிசலாவின் சம்மதம் தேவைப்பட்டது வாஸ்தவம் தான். அது இயற்கையும் கூட.
முதல் நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பாக, சசிகலா காலையில் சொல்லிக் கொள்ளாமலே காரில் ஏறிப்போன காட்சி அவன் இதயத்தைப் பிழிந்தெடுத்தது. எது எப்படியானாலும், கணவன் முன் பெண் மனைவிதான். அத்தகைய நிலையில் உள்ள ஒருத்தி அவனை யாரோ ஒருவனாக, விரும்பத்தகாதவனாக மதித்து இன்று நடந்தது சற்று விரக்தி மயமான தொன்றாகவே அவனுக்குப் பட்டது.
பரமானந்தத்தின் கண்கள் வெறித்தவாறே நிலைக் கண்ணாடியில் குத்தி நின்றன. கன்ன உச்சி எடுத்து வாரிவிட்டிருந்த கேசம் யாருக்காகவோ தலை வாருபவனைக் போல ஓடிக் கொண்டிருந்தது. சசிகலா கொழும்பு நாகரிகத்திற்கேற்றாற் போல் அவனுக்கு வாங்கிக் கொடுத்திருந்த டெரலின் சட்டையின் கை மடிப்புகள் அவன் விட்ட இடத்தில் நிற்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மடிந்து நின்றன.
அவனுடைய கரடு முரடான முகத்தைப் போலவே, கருமையும் ஊத்தையும் படிந்து பிரகாசமற்றுக் காணப்பட்டன அந்த ஜோடி சப்பாத்துக்கள். எதிலுமே ஒய்யாரம், நாகரிகம் என்பனவே அற்றுக் காணப்பட்ட தன்னுடைய நிலையை அவன் வெறுத்தான்.
“சே! உங்களை யாராவது பார்த்தால் பட்டதாரி என்ற சொல்லுவாங்களா? நீங்கள் யூளிவர்ஸிட்டியிலே எப்படி இருந்தீங்களோ?”
கண்களை ஏளனமாகக் குறுக்கி, இதழ்களை அடிக்கடி ஒதுக்கி சசிகலா அவனை நெற்றிக்கு நேரே எள்ளும் பொழுது, அவன் தன் வாழ்க்கையை நினைத்து ஒருமுறை மனதால் அழுது, அவளை விட்டு விட்டு வெளியே போவான். ஆண் உதிரம் என்ற ஆக்ரோஷம் எழும் பொழுது, “கேவலம் பெண்!” உயரிய மனப்பாங்கு தோன்ற தினவு எடுத்த கைகளை மடக்கியபடி வெளியேறுவான்.
சசிகலா செய்வதறியாமல் விழிப்பாள். பொறுமையை மீறிப் பேசுவது போலவே, தன்னையும் மீறி அழுவாள். புலம்புவாள்.
கூடத்தில் இருந்த சுவர்க்கடியாரம் மூன்றடித்து ஓய்ந்தது. அவன் எழுந்து தன்னை சற்று அலங்காரஞ் செய்து கொண்டான்.
அவள் வரப்போகிறாள் என்பது தான் அவனுக்கு அப்பொழுதிருந்த அவசரம். தன்னுடைய வகுப்பு மாணவி பாடம் கேட்பதற்காக வரப் போகிறாள் என்ற கலவரத்தில் எழுந்து சென்று முகத்தைக் கழுவி, துடைத்து, பவுடர் பூசி, தலைக்கும் இலேசாகக் கிரீம் பூசி, சீவி விட்டபடி உடுப்புப் பெட்டியைத் திறந்து இயந்திர வேகத்தில் ஆடைகளையும் மாற்றிக் கொண்ட அவன், தனது சப்பாத்துக்களையும் பாலிஷ் பண்ணி விட்டான்.
அவனுக்கு அவனுடைய மனைவியின் போக்குகளும் கதைகளும் பிடிக்காமல் போனதால், தன் வாழ்க்கையில் தான் கொண்ட பிடிப்பு இருக்கவே செய்தது. மனைவி மீது அன்பு குறைந்ததும், அந்த அன்பை யாரிடமோ செலுத்ததுவதன் மூலம் அவன் திருப்தியடைய துடித்து கொண்டிருந்தான்.
“மாலதி என்னட்டை இங்கிலிஷ் படிக்க வருகுது.” அவனுடைய நினைவுகள் அரும்பிய வார்த்தைகளைக் கேட்ட அதரங்கள் சற்று முறுவலித்தன. இனம் புரியாத வேதனையை மனம் கலந்து விட்டது.
“உங்களுக்கு இந்த உலகத்திலை என்ன தான் தெரியும். இங்கிலிஷ் மீடியம் கிறாயூவேட் இங்கிலிஸிலை ஆராச்சும் பேசினா , உங்களுடைய செந்தமிழிலை பதில் சொல்லுறீங்கள். இந்த லட்சணத்துக்கு டிரௌஸர் வேறை….”
“சசிகலா!”
அவன் ஒரு முறை செத்துப் போனான்.
இப்படிப் பல நிகழ்ச்சிகளுக்கு முடிவாக மாலதிக்கு ஆங்கிலங் கற்றுக் கொடுக்க முடிவு செய்தான் டியூஷன் என்ற போர்வையில் …….
மாலதி வந்து விட்டாள்.
மாணவி என்ற நிலைக்கும் மேலாக வளர்ந்து அங்கமெல்லாம் திரண்டிருந்த மாலதியின் சதைக் கைகள் புத்தகங்கள் இரண்டைக் குழந்தையைத் தூக்கினாற்போல் தாங்கிக் கொண்டிருந்தன. அவள் அதற்கும் தயாராக இருப்பவள்போல – அதையே எண்ணி ஏங்கி நிற்பவள் போல அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
கன்னங்கள், மார்புகள், அடிவயிறு, முழந்தாள்கள் என்பவற்றில் கண்டியிருந்த சதைக் கோளங்களில் அனைத்தையுமே இழந்தவனாக நின்று கொண்டிருந்தான் பரமானந்தம். அவளுக்கு ஆசிரியனாகி பல நாட்களாகி விட்டன. எனினும். அந்த நாட்களில் இல்லாத மனோநிலை அன்று ஏற்பட்டது எதிர்பாராத நிகழ்ச்சியாகவே அவனுக்குப் பட்டது.
“அறைக்குள்ளே போய் இரும்!” என்று அவளுக்குக் கூறிவிட்டு, அவன் படத்தில் புத்தக அலமாரியில் இருந்த இரண்டு நூல்களை எடுத்தபடி, அவளைத் தொடர்ந்து சென்று, அறைக் கதவை சாத்துவது தெரியாமல் கால்களால் மெல்ல அசைத்தபடி. அவள் நினைவைக் கட்டுப்படுத்த தொடங்கினான்.
‘மாலதி! நேற்று பேர்னாட்ஷோவுடன் ஆங்கில வரலாறு முடிந்து விட்டது. இனி அவர் காலத்திலிருந்து படிக்கலாம். அது சரி! பேர்னாட்ஷோவைப் பற்றி என்ன நினைக்கிறீர்?” பாடத்தில் கவனம் இருந்த பொழுதும், மனதில் ஏற்பட்ட சஞ்சலத்தை ஒரு புதுமலரின் மறுமொழியிலேனும் போக்கலாம்; அல்லது சற்று மறக்கலாம் என்ற நம்பிக்கையில் கேட்டான்.
“அவருக்கு என்ன? அவருடைய இலக்கிய அறிவே ஒரு தனி . உருவத்தில் இல்லாத அழகு அவருடைய அறிவில், உள்ளத்தில் இருப்பதை நான் உணர்கிறேன்.”
“அதாவது?…” அவன் இழுத்தான்.
“உங்கைைளப் போல…!”
“மாலதி……” அவள் களங்கமற்றுச் சொன்ன வார்த்தைகளில் சுய தரிசனத்தைப் பரீட்சித்ததை அவமானமாகக் கருதிய அவன் சற்று கடினமாகவே கத்தியதும், பாம்பு நெளிவது போல் தன் கால்களை ஏதோ பின்னுவதை இன்னதென்று உணர்ந்தபடி, தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
அது அன்பு!
“மாலதி”
“உம்!”
“…..”
நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருக்க இருவரும் அமைதியற்றுப் போய் விட்டவர்களாக, பேசாமலே இருந்தார்கள். மாலதியின் பக்கமாக இருந்து வீசிய காற்றுடன் மூச்சை விடுத்து அவனும் ஏதோ வித பிரார்த்தனையில் ஆழ்ந்து விட்டான்.
அவன் நெஞ்சில் மறுபடியும் அன்றிரவு நிகழ்ச்சி புடமிட்டது. அத்தகைய தொரு செயலை – ஆசைக் கனவின் நிறைவேற்றத்தை மனைவியிடமே செய்ய வேண்டும் என்ற பிராப்தம் அவனுக்கு ஏற்பட்டதையிட்டு, தன்னுடைய உணர்ச்சிகளை நொந்து கொண்டிருந்த அவனுக்கு, கால்கள் இன்னும் இன்னும் இசைந்து ஆறுதலை அளித்துக் கொண்டிருந்தன.
அவன் மௌனத்தை கலைத்தபடி சொன்னாள்.
“தன்னை அலங்காரமாக வைத்திருப்பவன் தான் பெண்ணையும் அப்படி வைத்திருப்பான் என்று சிலர் நம்புகிறார்கள். ஏதோ எனக்கு அப்படி நம்பிக்கை இல்லை .”
“மாலதி உம்மை எப்படி வாழ்த்துவதென்றே தெரியவில்லை அம்மா!”
பரமானந்தம் சில வார்த்தைகளே பேசினான். தன்னையும் காதோரங்களின் கதகதப்பில் உணர்ந்து கொண்டவன் அவள் வந்த நோக்கத்தை அர்த்தபுஷ்டியுடன் தெளிவாக்க நினைத்து, தனது கைகளை மேசையின் அடிவாரங்களின் ஊடாக முன் நீட்டி அலைந்த பொழுது, அவள், “எனக்கு என்னவோ செய்கிறது – நாளைக்கு வருகிறன்” என்ற படி எழுந்து விட்டாள்.
“ஆணை உணர்ச்சி மயமானவனாக்கி விட்டு, தன் உணர்ச்சிகளைக் கொன்றபடி வேடிக்கை பார்க்கின்ற ஜீவனுக்குப் பெயர் பெண்ணா?”
அவனுடைய ஆசைகளை உரிமையுள்ளவளாக வந்தவளாலும் தீர்க்க முடியவில்லை. எங்கோ இருந்து வந்து, எப்படியோ ஆகிவிட்ட மாலதி, தனது உணர்ச்சிகளுக்குப் புகலிடம் கேட்டு விட்டு, தானே தன்னை அவற்றிலிருந்து விடுவித்துக் கொண்டது அவனுக்கு புதிராக இருந்தது.
கபாலங்களின் நாலா பக்கங்களும் இதயங்களாகி அடித்துக் கொண்டிருந்தன. அவன் நிலை தவறாத குறையாக அவளுக்கு முன்னே எழுந்து சென்று விட்டான்.
“நான் போயிட்டு வாறன். உங்களுடைய மிஸஸ் வருகிற நேரமாச்சு…….”
மாலதியின் தயக்கத்தில் குடியிருந்த பொருளை உணர்ந்தவன் போல தலையை அசைத்தான் பரமானந்தம். “நாளைக்கு கட்டாயம் நேரத்துக்கே வருகிறேன்.” சொல்லிக் கொண்டே மாலதி போய்விட்டாள்.
வழமைபோல “ஹார்ண்” பண்ணி விட்டு, அவர்களது வீட்டுக்கு முன்னே காரை நிறுத்தினார், சசிகலாவைத் தினமும் ஏற்றிக் கொண்டு போய்வரும் அக்கவுண்டன்.
“தாங் யூ! குட் நைட் ” என்ற வார்த்தைகளைக் கிளியிடம் கற்றுக் கொண்டவள் போலக் கூறி விட்டு, கையில் தொங்கிக் கொண்டிருந்த கைப்பையை அலாக்காக ஆட்டியபடி துள்ளி நடந்து சென்ற சசிகலா, கூடம் இருண்டிருப்பதைக் கண்டு சுவிட்சைத் தட்டி விட்டாள்.
கூடத்தின் மூலையில் கிடந்த அந்தச் சாய்வு நாற்காலியில் மறுபடியும் அவனாகிக் கண்களை மூடியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் பரமானந்தம்.
“இஞ்சேருங்கோ….என்ன படுத்திருக்கிறியள்?” என்றபடி அவனருகே சென்று நெற்றிப் புடகுகளில் விரல் பதித்த அவள், அவனுக்குக் காய்ச்சல் அல்ல என்ற திருப்தியில் உள்ளறைக்குட் சென்று உடைகளைக் களைந்தாள்.
பரமானந்தத்துக்கு பக்தியையே சந்தேகிக்கின்ற நிலை ஏற்பட்டது. அவன் திறந்த விழிகள், நிலைபெற்று நின்ற கண்ணாடியில் விழுந்து கிடந்தன.
உள்ளறையில் பகல் முழுவதும் அவளுடன் ஒட்டியிருந்து விட்டு விடை பெற்றுக் கொண்டிருந்த அரைக் கை ஜாக்கெட் , பின்னல், சாரி அனைத்தும் கட்டிலுக்கு குடியேறிக் கொண்டிருந்தன.
‘நாகரிகம்…வேஷம்…ஆன்ம பலத்தைப் புரிந்து கொள்ளச் சக்தியற்றவளுக்கு இவை ஆதாரங்களா’
பரமானந்தம் ஒரு முறை அசைந்து, முன் போலவே திரும்பவும் படுத்துக் கொண்டான்.
சசிகலா முகத்தைக் கழுவி, தனது அதரங்கள் தாங்கியிருந்த செஞ்சாயத்தை கஷ்டப்பட்டுத் துடைத்தபடி முருகன் படத்துக்கு முன்பாக வந்து நின்றாள். தன்னைச் சிறிது அமைதிப் படுத்தியவாறு திருநீற்றைப் பூசியபடி, பரமானந்தத்தைத் திரும்பிப் பார்த்தாள்.
அவன் தனது கிடக்கையை விட்டு எழுந்து சென்று, வெளியே காணப்பட்ட மற்றொரு கதிரையில் சாய்ந்தான்.
நேரங்கள் தாழ்ந்து கொண்டிருந்தன. சசிசலா தேநீர், பிஸ்கட்சகிதம் தன் முன்வந்து நிற்பதை அப்பொழுதுதான் விழி திறந்த அவன் கண்டதும், இருக்கையையே நம்பாத உணர்சிகளில் துடித்தான் . துன்பத்தை ஒரேயடியாக அனுபவித்த பின் இடையில் ஏற்படும் இன்பத்தை இனங்கண்டு கொள்ளவே முடியாத மந்தநிலை…….
“குடியுங்கள்!” அவள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் இருந்தாள். கடந்த நாட்கள் திரும்புகின்றனவா?
“சசி!..” அவன் வாயார ஒரு முறை அழைத்துப் பார்த்தான். அவளுக்கு அது கேட்கவில்லை.
“உங்களடைய தேவைகள் என்ன என்பது எனக்குத் தெரிஞ்சு போச்சு! இரவெல்லாம் நான் கண்ட முடிவு இதுதான். உங்களுக்கு அன்பு பிடிக்காது. தேவைதான் பிடிக்கும். தேவை தேவையான இடத்தில் அன்பு செத்துவிடும். இது என் அனுபவம் ” அவள் சொல்லியபடி முன்பாக இருந்த ஸ்டுலை இழுத்து அதன் மீது தேநீர் தட்டை வைத்து விட்டு, இமையடிவாரங்களை விரல்களால் தடவி விட்டாள். பின்பு அவளே பேசினாள்.
“பொலிஸ்காரன் திருட நேரிட்டாலும் திருடக் கூடாது. நீதிபதி பொய் சொல்லக் கூடாது. பலவந்தம் மனைவியிடம் அல்ல……. அத்தான்!”
“சசிகலா! உனக்கு என்ன பிடித்து விட்டுது?” பரமானந்தம் கேட்டான்.
“இரவு என்ன நடந்தது? நான் உங்களுக்குச் சொன்னேன் – முழுகியிருக்கிறான். இப்ப வேண்டாமென்று நீங்கள் கேட்டீங்களா? என்னைச் சந்தேகிச்சீங்கள். இப்ப சொல்லுங்கள்…உங்களுக்கு என்ன வேணும்? ம்!”
அவள் நிதானமாகப் பேசிக் கொண்டேயிருந்தாள். பரமானந்தம் குற்றஞ் செய்து விட்டவனைப் போலக் குறுகினான்.
“உங்களுடைய பசியைத் தீர்ப்பதற்காகத்தான் கடவுள் பெண்ணைப் படைச்சிருந்தால் பெண் வர்க்கமே அழியட்டும்..இஞ்சை பாருங்கள்!..நான் போற்றுவதற்கும் போற்றப்படுவதற்குமாகப் பிறந்தவள். அவ்வளவு தான்”
கண்களை மறைத்த கண்ணீரைத் துடைத்து விட்டாள். பின்பு நிலத்தில் மண்டியிட்டு, கதிரையைப் பற்றியபடி அவன் கால்களில் சாய்ந்தாள் சசிகலா. நடுங்கிக் கொண்டிருந்த தன் கைகளால் அவள் கன்னத்தை வருடி விட்டான் அவன்.
பரமானந்தம் திடீரென்று எழுந்து வெளியே போனான். அவனை இரண்டு கைகளாலும் பற்றிபடி சசிகலா கேட்டாள் – “எங்கே போறியள்?”
“உம்! மாலதியை இனிமேல் டியூஷனுக்கு வர வேண்டாம் என்று சொல்லப் போகிறேன்.” அவன் நிதானத்துடன் கூறிக் கொண்டே, தனது சட்டையைச் சரி செய்தான்.
– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு