‘ஆதி’லெஷ்மி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,448 
 
 

‘‘அம்மா.. நாங்க தனியா போயிடலாம்னு இருக்கோம்..’’

கோபால், ஆதிலெஷ்மியின் அருகே வந்து இதைச் சொன்னபோது ஆதிலெஷ்மி அப்படியே வெல வெலத்துப் போனாள். எதை நினைத்து ஆதிலெஷ்மி பயந்து கொண்டிருந்தாளோ, அதை கோபால் சொல்லி விட்டான்.

அவளுடைய அடிவயிறு சுருண்டு குழைந்தது.

‘‘யப்பா.. வேண்டாம்ப்பா..’’ -சட் டென்று எழுந்து அவனெதிரே நின்று கை கூப்பினாள். கண்ணீர் பொங்கியது. கோபால் அலட்சியமாக இடது கையை உயர்த்தி மறுப்பதைப் போல் காட்டினான்.

‘‘இல்லம்மா! இனிமே இந்த வீட்ல என்னால இருக்க முடியாது. தினம் ஒரு சண்டை போட்டுக்கிட்டு என்னால மல்லுக்கு நிக்க முடியாது. எனக்கு நிம்மதியா இருக்கணும். நான் போறேன்.’’

ஆதிலெஷ்மி வாயைப் பொத்திக் கொண்டாள். விம்மி னாள். விம்மலின் தொடர்ச்சியாக அழுகை வெடித்தது.

‘‘அடப்பாவி.. இதுக்காகவா உங்க ரெண்டு பேரையும் உயிரைக் கொடுத்து வளர்த்தேன்? இந்த ஊரே உங்களைப் பார்த்துப் பொறாமைப் பட்டுச்சே.. ராமன் & லட்சுமணன் மாதிரி ஒத்துமையான அண்ணன் தம்பினு எல்லாரும் சொன்னாங்களே! அப்படியே பூரிச்சுப் போனேனே! சின்ன சண்டை கூட போட்டுக்காம வளந்தீங்களே.. இப்ப சின்னச் சின்ன விஷயத்தை எல்லாம் ஊதிப் பெரிசாக்கி, வீட்டை விட்டு தனியா போறேன்னு சொல்றியே.. என் மனசு தாங்கலைப்பா. வேண்டாம்ப்பா! என்னைத் தவிக்க விட்டுட்டுப் போகாதப்பா..’’ ஆதிலெஷ்மி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

‘‘அட.. உன்னை யாரு தவிக்க விட்டுட்டுப் போறா? நீயும் எங்க கூட வந்துடு.’’

கிழவிக்கு மனம் சமாதானமாகவில்லை.

‘‘என்னால இந்த வீட்டை விட்டுட்டு வர முடியாது. நான் சாகற வரைக்கும் இந்த வீட்லதான் இருப்பேன்.’’

‘‘அப்படின்னா, நீ இங்கயே கிட! நான் போறேன்’’

கிழவி ஏதேதோ பேசிப் பார்த்துவிட்டு கடைசியாக மல்லிகாவின் மேல் பாய்ந்தாள்.

‘‘எல்லாம் உன்னாலதான்டி! நீ இந்தக் குடும்பத்துல காலடி எடுத்து வச்ச பின்னாடிதான் எல்லா கிரகமும் புடிச்சி ஆட்டுது.. அண்ணன் மேல உசிரையே வச்சிருந்தவனை இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லி, வீட்டை விட்டே போற அளவுக்குப் பண்ணிட்டியே! பாவி!’’

கிழவியின் ஆவேசத்துக்கு ஈடு கொடுத்து மல்லிகா வும் ஆவேசம் பூசிக் கொண்டாள். கணவனிடம் பாய்ந்தாள்.

‘‘பார்த்தீங்களா.. பார்த்தீங்களா? அவங்க என்ன பேசறாங்கனு! நான் இந்தக் குடும்பத்தைப் பிரிச்சுட் டேனாம். இந்த வீட்டுல மத்தவங்களெல்லாம் காந்திக்கு வாரிசு பாருங்க..! அவங்க மனசுல எப்பவும் பெரிய புள்ளை மட்டும்தான் நல்லாயிருக்கணும்.. நல்லா வாழணும்ங்கற எண்ணம் இருக்கு. அதான் நாம நல்லாயிருக்கக் கூடாதுனு சாபம் கொடுக்கறாங்க.’’

மல்லிகாவின் குற்றச்சாட்டு கோபாலுக்கும் கோபத்தை வரவழைத்தது.

‘‘அம்மா.. உன் வாயில நல்ல வார்த்தையே வராதா? பிடிக்கலைன்னுதான் நாங்க தனியா போறோம். எங்க கூட வர்றதாயிருந்தா வா. வரப் பிடிக்கலைன்னா சந்தோஷமா வாழ்த்தி அனுப்பு.. சாபம் கொடுக்காதே!’’

‘‘வயிறு எரியும்போது எப்படி வாழ்த்த முடியும்? நீங்க நல்ல நிலமைல இருக்கீங்க. ஆனா, என் மூத்த புள்ளைதான் கஷ்டப்படறான். அவனுக்கு உறுதுணையா கூடவேயிருந்து கை தூக்கி விடுவேனு உன்னைத்தான் மலை போல நம்பிக்கிட்டிருந்தேன். கூடப் பிறந்தவனை இப்படி அம்போன்னு விட்டுட்டுப் போறியே.. துரோகி.. நம்பிக்கைத் துரோகி! நல்லாயிருப்பியா?’’

ஆதிலெஷ்மிக்கு ஆவேசம் குறையவில்லை. இளைய மகனின் சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாகக் கத்தினாள்.

‘‘அம்மா! நீ பெத்தவதானா.. இல்லை நீ பெத்தவதானானு கேட்கறேன்? அவனும் புள்ளைதான்.. நானும் புள்ளைதான். அவனை சுமந்த வயித்துலதானே என்னையும் சுமந்தே? ஒரு கண்ணுல வெண்ணெயையும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பையும் ஏன் தடவுறே? அவன் நல்லாயிருக்கணும். நான் கெட்டுப் போகணுமா? வயசான காலத்துல உனக்கு ஏன் இந்தப் பொறாமை? அவனைப் படிக்க வச்ச மாதிரிதான் என்னையும் படிக்க வச்சே. நான் கருத்தா படிச்சிக் கிட்டேன். உன் மூத்த புள்ளை ஊர் சுத்திக்கிட்டுக் கிடந்தான். இப்போ நான் கை நிறைய சம்பாதிக்கறதைப் பார்த்து பொறாமைப்பட்டா எப்படி?’’

இதுவரை பின்கட்டில் அமைதியாக இருந்த மூத்தவன் மூர்த்தி இப்போது ‘விருட்’டென கூடத்துக்கு வந்தான்.

‘‘ஆமாண்டா.. நான் உன்னைப் பார்த்து பொறாமைப் படறேன்தான். இனிமேலும் நீ இங்கயிருந்தா என் வயித்தெரிச்சலே உன்னை வாழ விடாமப் பண்ணிடும். போய்டு இங்கயிருந்து. என்கிட்ட படிப்பு இல்லை தான்.. உன்னை மாதிரி உத்யோகம் இல்லைதான். ஆனா கை, கால் இருக்கு. தட்டு மண்ணு துக்கியாவது என் பொண்டாட்டி புள்ளைங்களை காப்பாத்த முடியும். உன்கிட்ட வந்து கையேந்தி ஒரு நாளும் நிக்க மாட்டேன்.’’

மூர்த்தி ரோஷத்தில் கத்தவும் கூடவே அவன் மனைவியும் சேர்ந்து கொள்ள.. சண்டை முற்றி, வீடு தெரு நாய்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்டதைப் போலானது.

தீ பற்றிக் கொண்ட குடிசையை அணைக்க தெருவே கூடியதைப்போல் அக்கம் பக்கமெல்லாம் கூடிவிட்டது. ஆளாளுக்கு சமாதானம், பஞ்சாயத்து, அதட்டல், அறிவுரை என இறங்க, ஆதிலெஷ்மிக்கு அவமானத்தில் உடம்பு கூசியது. கூடத்தில் குப்புறப் படுத்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதாள். இத்தனை வருடங்களாக அவள் கட்டிக் காத்த மானம் சந்தி சிரித்து விட்டது. இனி கிராமத்தின் ஒவ்வொரு வாயிலும் இந்த வீட்டுக் கதைதான் புகுந்து புறப்படும்.

மூத்தவன் மூர்த்தி அதட்டினான்..

‘‘ந்தா.. இங்க என்ன எழவா விழுந்துடுச்சி.. ஒப்பாரி வைக்கிற? போறான் விடேன். யாரை நம்பியும் யாரும் இல்லை. நாங்க டவுசர் போட்டு வளர்ந்த காலத்தையே நினைச்சிக்கிட்டிருக்கியா? பங்காளிக்கு பல்லுல விஷம். அண்ணன் & தம்பியெல்லாம் ஆறு வயசு வரைக்கும்தான். ஊர் உலகத்துல நடக்காததா இங்க நடந்துடுச்சி.. படிக்குப் படி பங்காளி சண்டைதான். போறான்.. கஞ்சியோ கூழோ என்னால முடிஞ்சதை ஊத்தறேன். குடிச்சிட்டு கம்முனு கிட. புடிக்கலைன்னா புறப்பட்டு அவனோட போய்டு.’’

கிழவி சமாதானமடையவில்லை. அழுதழுது மூக்கைச் சிந்தி சுவரையெல்லாம் ஈரமாக்கினாள்.

களத்து மேட்டுக்கு நிழலைத் தந்து கொண்டிருந்த புளிய மரத்தடியில் அமர்ந்திருந்தாள் ஆதிலெஷ்மி கிழவி. கைகள் புளியம்பழத்தை உடைத்த வண்ணம் இருந்தன. கண்கள் குளம் கட்டியிருந்தது. வயது, ஒன்றிரண்டு பல்லை மட்டும் விட்டு வைத்திருந்த வாய் வழியே ஒப்பாரியும் இல்லாமல் தாலாட்டும் இல்லாமல் புது தினுசில் புலம்பிக் கொண்டிருந்தாள்.

கோபால் வீட்டை விட்டுச் சென்று பதினைந்து நாட்களுக்கும் மேலாகி விட்டது. அவளுடைய வயிறு கலங்கியது. பெரியவனுக் குப் பத்து வயது இருக்கும் போது கணவனைப் பறி கொடுத்து விட்டாள். அதற்குப் பிறகு வயல், வாய்க்கால் என எல்லாம் அவள் தலையில் விழுந்தது. இரு பிள்ளைகளையும் அரும்பாடு பட்டு வளர்த்தாள். ‘சோற்றோடு ஒற்றுமையையும் சேர்த்து ஊட்டி வளர்த்தேன்’ என கிழவி கர்வப்பட்ட தெல்லாம் இதோ இப்போது பொய்த்துப் போய்விட்டது.

‘‘பாவிப் பய! இப்படி பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டுப் போய்ட்டானே!’’ உடைத்த புளியம்பழத்தை மடியில் கட்டிக் கொண்டு கையை ஊன்றி எழுந்தாள். புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு களத்து மேட்டிலிருந்து இறங்கினாள். ஒற்றை வரப்பில் தள்ளாட்டமாக நடந்தபோது எதிரே குடையைத் தோளில் சாய்த்தபடி வந்து கொண்டிருந்தவரைப் பார்த்ததும் திடீரென தடுமாற்றம் கூடியது. ஒற்றை வரப்பு.. யாராவது ஒருவர் இறங்க வேண்டும். யார் வயலில் இறங்குவது?’’

நெஞ்சுக்குள் கிடந்த வீராப்பும் வைராக்கியமும் அவளை வயலில் இறங்க விடவில்லை.

அவர் இறங்கினார். அவள் நடந்தாள். அவரை கடக்கும்போது மெல்லிய அழைப்பு அவளை இழுத்து நிறுத்தியது.

‘‘ஆதிலெச்சுமி..’’

ஏறிட்டுப் பார்க்காமல் நின்றாள்.

‘‘சின்னப் புள்ள வூட்டை வுட்டுப் போய்ட்டானாமே!’’

கிழவிக்கு வற்றிப் போன நெஞ்சுக் கூட்டைப் பிளந்தைப் போலிருந்தது.

‘ரொம்ப அழுவுறியாமே! அழுது அழுது பாதி செத்துட்டதா ஊர்ல பேசிக்கறாங்க. அண்ணன் தம்பி சேர்ந்திருக்கணும்னு எந்தத் தாயும் ஆசைப்படறது வழக்கம்தான். ஆனா, அப்படி ஆசைப்பட உனக்கென்ன தகுதி இருக்கு? சோத்துப் பிரச்னையிலருந்து சோளி பிரச்னை வரைக்கும் ஊதிப் பெரிசாக்கி, கோவத்துல நான் சொன்ன ஒரு சின்ன வார்த்தையை வச்சே என் தம்பியை என்கிட்டேயிருந்து பிரிச்சுட்டுப் போனியே! கடைசிக் காலத்துல அவன் மூஞ்சைக் கூட பார்க்கக்கூடாதுனு நான் போட்ட கோடித்துணியைக் கூட அவன் மேல போர்த்தாம தூக்கி எறிஞ்சியே.. அதையெல்லாம் மறந்துட்டியா?

நானும் என் தம்பியும் கடைசி வரைக்கும் பிரிஞ்சேயிருக்கணும்னு நெனச்ச நீ, உன்னோட புள்ளைங்க மட்டும் ஒத்துமையாயிருக்கணும்னு துடிக்கிறது எந்த விதத்துல நியாயம்? செத்தவனைப் பார்க்கக் கூடாதுனு நீ அன்னிக்கு பிடிவாதமா நின்னப்போ, கூடப் பிறந்தவனைப் பார்க்க முடியலையேனு நான் என்னா துடி துடிச்சிருப்பேன்? இப்ப அந்தத் துடிப்பு உனக்குப் புரியுதா? இந்த உலகத்துல காரண காரியம் இல்லாம எதுவுமே நடக்கறதில்லை ஆதிலெச்சுமி!’’

சொல்லிவிட்டு அவர் நடக்க.. வரப்பில் நட்டமரமாக நின்றிருந்தாள் ஆதிலெஷ்மி.

– அக்டோபர் 2007

Print Friendly, PDF & Email

1 thought on “‘ஆதி’லெஷ்மி

  1. ‘தன் வினைத் தன்னைச் சுடும்’
    வினை விதைத்தவன் வினை அறுப்பான்’
    போன்ற பழமொழிகளின் உண்மைத்தன்மையினை ‘ஆதிலெக்ஷ்மி’ மட்டுமில்லை.. அனைத்து வாசகர்களுமே உணரும் வண்ணம், தெளிந்த நடையில் எழுதப்பட்ட ஒரு சிறந்த கதை.
    கதாசிரியருக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *