ஆசை முள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 2,857 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கஸ்ட்டமர் சேட்டிஸ்ஃபேக்ஷன் ரொம்ப முக்கியம்” பேச ஆரம்பித்தபோது பேண்ட் பாக்கெட்டில் கைத் தொலைபேசி சைலண்ட்டாக அதிர ஆரம்பித்தது. மீட்டிங் ரூமில் இருந்தவர்கள் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தான். பரிச்சயமில்லாத நம்பராய் இருந்தது. “எக்ஸ்கியூஸ் மீ” சொல்லி வெளியே வந்தான் தொல்காப்பியன்.

“ஹலோ” என்றான்.

“நான் மோகன் பேசறென். நீங்க தொல்காப்பியன் தானே? மறுமுனைக்குரல்.

எந்த மோகன் என்று குரலுக்குரிய உருவத்தை மூளை தேடிக் கொண்டிருக்க “ஆமாம், நான் தொல்காப்பியன்தான், நீங்க…” என்று இழுத்தான்.

“உன் கிளாஸ்மெட் மோகன். பொன்னமராவதி வி.வி.எச்.எஸ்ல ஒன்னாப் படிச்சமே? வி.மோகன்… மாமரம்.., பண்ணை வீடு… ஞாபகம் வந்திருச்சா? என்னடா எப்படி இருக்கே”… மோகன் குரலில் ஆவல் பொங்கியது. அது தொல்காப்பியனையும் தொற்றிக் கொண்டது.

“ம்… ஞாபகம் வந்துருச்சு. எத்தனை வருசமாச்சு. நான் கல்லூரிப் படிப்புக்கு சென்னைக்கி வந்தப்புறம் உங்க தொடர்பெல்லாம் விட்டுப்போச்சு. எப்படிடா இருக்கே? கல்யாணம்லாம் ஆச்சா? இப்ப எங்கேருந்து பேசுறே?”

“இங்கதான் சிங்கப்பூர்… ஃபேமிலி டூர் வந்தம். இப்ப செந்தோசாவில இருக்கோம், எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒனக்கு? சரி சரி நீ ஃப்ரீன்னாப் பேசறேன். பிசின்னா அப்பறம் பேசலாம்.”

“எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். எங்க வீட்டுக்கு வா.அதெல்லாம் சாவகாசமா பேசிக்கலாம். இப்ப நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். மறுபடி நானே கூப்புடுறேன். இந்த நம்பர்தானே?”

“ஆமாண்டா…’”

“முதல் பெஞ்சு மாணவன் மோகன். நல்லா படிப்பான். மோகன் இன்ஜினியரிங் ஜாய்ன் பண்ணுனதா கேள்வி. தலை முடிய சுருட்டி குருவிக்கூடு மாதிரி நெளிச்சு விட்டிருப்பான். சிரிச்சா குழி விழும். மீனாட்ட சொல்லணும். வீட்டுக்குக் கூப்புடணும்” பல நினைவுகளும் தொல்காப்பியனை ஆக்கிரமித்தன.

நினைவுகளைத் தற்காலிகமாக ஒதுக்கி விட்டு மறுபடி மீட்டிங் ரூம், கஸ்ட்டமர் இன்டெக்ஸ், பவர்பாய்ண்ட் சிலைட், டார்கெட், டைம்லைன், ஆக்ஷன் ஐட்டெம்ஸ், ஹூ? வென்? என அன்றைய நாளின் அரைநாள் கழிந்தது.

லஞ்சு டைம் வந்தது. சாப்பிட உட்கார்ந்தவனுக்கு மோகன் ஞாபகம் வந்தது. மோகனுடன் பண்ணை வீட்டு மாந்தோப்பில் போய் மாங்காய் அடித்தது, வீட்டிலிருந்து உப்புத் திருடி பேப்பரில் மடித்து எடுத்துப்போய் மாங்காய் அறுத்து தொட்டுத் தின்றது. தோட்டக்காரனிடம் மாட்டிக் கொண்டு உதை வாங்கியது எல்லாம் நினைக்கச் சிரிப்பாக இருந்தது.உப்பு மாங்காயை நினைத்தவுடன் நாவில் எச்சில் ஊறுவதுபோல் பழைய நினைவுகள் ஊறின.

இருவருக்கும் பகிர்ந்து கொள்ள ஆயிரம் இருந்தது.

மோகனைக் கூப்பிட்டு குடும்பத்தைப் பத்தி, நண்பர்களைப் பத்தி, உத்தியோகத்தைப் பத்தி என்று நிறைய பேசித் தீர்த்தான். மோகனிடம் மணிக்கணக்காய்ப் பேசிக் கொண்டிருந்ததில் மீனா பேசவில்லை என்பதையே தொல்காப்பியன் மறந்து விட்டான். மாலை டீ பிரேக்கின் போதுதான் ஞாபகம் வந்தது. பிசியாய் இருப்பாள் என்று இருந்து விட்டான்.

ஆனால் காலைக் களேபரம்தான் காரணம் என்பதைப் பிறகுதான் புரிந்து கொண்டான்.

காலையில் அப்படி என்ன நடந்துவிட்டது?

பிள்ளைகள் காலைப்பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். வளர்ந்து விட்டார்கள். அவரவர் வேலைகளை அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.

காலைச் சிற்றுண்டிக்காக பிரட்டும், ஜாமும் அடுப்படி மேசையில் இருந்தன.

தொல்காப்பியன் காலைப் பேப்பரில் ஆழ்ந்திருந்தான். “என்னங்க கோப்பி அவன்ல வெச்சுருக்கேன். எடுத்து சர்க்கரை போட்டு ஆத்திக் குடிங்க. எனக்கு பாதி இருக்கட்டும்.”

“ம்” என்றான்.

“டேய் ரவி, ரம்யா, அப்பாக்கிட்ட ரெண்டு ரெண்டு வெள்ளி வாங்கிக்குங்க. கூல்டிரிங்க்ஸ் வேண்டாம். சளிப்புடிச்சுக்கும். மதியத்துக்கு ரைசும், காய்கறி எதாச்சும் வாங்கிக்குங்க” சொல்லிவிட்டுக் குளியல் அறை புகுந்தாள் மீனா.

பிள்ளைகள் ‘பை, பை’ சொல்லிக்கொண்டு முதுகில் பொதிசுமந்து புறப்பட்டார்கள் பள்ளிக்கு. அப்போதுதான் தொல்காப்பியனுக்கு உரைத்தது “ஐயையோ மறந்தே போய்விட்டேனே. இன்று காலை யு.எஸ்.கிளையண்ட்ஸ் ஸோட கான்கால் இருக்கே” பதறிக் கொண்டு எழுந்தவன் ஐந்து நிமிடத்திற்குள் பறப்பட்டுவிட்டான்.

“மீனா, இன்னிக்கி நீயே போயிக்க, சீக்கிரம் போகணுங்கிறதே மறந்துட்டேன். நான் கெளம்புறேன்.’

“என்னங்க, நானும் அஞ்சு நிமிசத்துல ரெடியாயிட றேனே, நீங்களும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, ஜன்னலைச் சாத்துங்க. அயன் பாக்ஸ் ஆஃப் பண்ணுங்க. பிளீஸ்பா” பாத்ரூமுக்குள்ளிருந்து தலையை நீட்டிக்கெஞ்சினாள் மீனா.

“சாரிம்மா, ரொம்ப முக்கியமான மீட்டிங். இப்பவே லேட்டு” சொல்லிக் கொண்டு ஓடியே போய் விட்டான். மீனாவுக்கு கோபம் எரிமலையாகக் குமுறிக் கொண்டு வந்தது.

இனி இவளாக எம்மார்ட்டி எடுத்து ஃபீடர் பஸ் எடுத்து அலுவலகம் அடைவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

வழக்கமாக மீனாவை அவள் அலுவலக வாசலில் இறக்கிவிட்டுப் போவான். எல்லா நாட்களும் அப்படி இருப்பதில்லை. சில நாட்களில் மீட்டிங் இருக்கிறதென்று சீக்கிரமே கிளம்பி விடுவான். இவளுக்குத் தாமதமாகி விடும்.

மீனா வேலைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து இதே பரபரப்புதான். மாலையில் ஆத்துப் போய் வருவாள் மீனா. பார்க்கப் பாவமாய் இருக்கும். மெய்ட் வைத்துக் கொள் வோமா என்றான் தொல்காப்பியன். அவள் “மெய்டெல் லாம் பிரச்சினை, வேலையை விட்டுவிடுகிறேன்” என்றாள். யோசித்தார்கள், வேலையை விட்டுவிட்டால் என்னவாகும்? காடி வைத்துக் கட்டுபடியாகாது. காண்டோ வாசம் சாத்தியமாகாது. கைவிட்டார்கள் யோசனையை, நீங்கள் கொஞ்சம் வீட்டு வேலைகளில் ஒத்துழைத்தால் சமாளித்து வண்டியை ஓட்டலாம் என்றாள் மீனா. மாலை ப்ரேக்கின் போது மீனாவைக் கூப்பிட்டான் தொல்காப்பியன்.

“மீனா பேசவே இல்லையே… ஏன்? பிசியா?”

“பிடிக்கலை… அதான் பேசல…”

“சரி… கோபமா? நேத்து நான் வரும்போது நீ தூங்கிட்டே… காலையில நானும் சொல்ல மறந்துட்டேன். திடீர்னு ஞாபகம் வந்துச்சு… சரி அத விடு. அப்பறம், மீனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?”

“சொன்னாத்தானே தெரியும்” குறையாத கோபத்துடன் வெடுக்கென்றாள் மீனா.

“என்னோட கிளாஸ்மெட் மோகன் ஃபேமிலியோட சிங்கப்பூர் டூர் வந்திருக்கான். என்கிட்ட பேசினான்” தொல்காப்பியன் முடிக்கவில்லை.

அதற்குள், அவனைப் புரிந்து கொண்டவளாக மீனா விடம் இருந்து பிறந்தது உத்தரவு. “வீட்டுக்கு மட்டும் வரச் சொல்லிராதீங்க. என்னால ஒன்னும் பண்ண முடியாது. நாளைக்கி ஒர்க்கிங் டே ரெண்டு பேரும் வேலைக்கிப் போறம்.”

“இல்லம்மா, ஒர்க்கிங் டேயா இருக்கேன்னு நானும் நெனச்சேன். சண்டே வரச் சொன்னேன். அவனுக்கு நாளைக்கி மதியம் ரிடர்ன் ஃபிளைட்டாம். அதுவும் இல்லாம, அவன் ஒருவாரம் ஓட்டல்ல சாப்புட்டு நாக்கு செத்துப் போச்சாம். அவன் அப்பிடிச் சொல்லும்போது என்னால சும்மா இருக்க முடியாம வாயில வந்துருச்சு. வீட்டுக்கு வா, நைட்டு எங்க வீட்ல டின்னர் சாப்பிடலாம்னேன். சும்மா பேச்சுக்குத்தான் சொன்னேன். அவனும் சரின்னுட்டான்’

“எனக்கும் நல்லாத்தான் வாயில வருது”

“சரி என்ன பண்றது? ஃப்ரண்டு வந்துட்டாங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்போமே?”

“என்னங்க, கொஞ்சம் நெனச்சுப் பாருங்க. நானும் மனுஷிதானெ, வேலைக்கிம் போயி வீட்டுலயும் பாக்கமுடியுமா? வீட்டுல வேலைக்காரி இருக்காளா? சொல்லுங்க”

“நானா வேண்டாம்கிறேன். நீதானே வெச்சுக்க மாட்டேங்குற. சரி, கோமளாஸ்ல ஆர்டர் பண்ணிடலாமா?”

“ஐயோ, என்னால எல்லாம் வழி பண்ண முடியாது. நீங்க வேணும்னா ஹோட்டலுக்குக் கூட்டி போயிட்டு கொலஸ்ட்ரால ஏத்திக்கிட்டு வீட்டுக்கு வந்து சேருங்க. என்ன விட்ருங்க” தொல்காப்பியனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு ஆசையில் நண்பனை வரச்சொல்லி விட்டான். மீனா சொல்வதும் சரிதான்.

“உங்க நம்பர் அவருக்கு எப்படிக் கெடச்சுது?”

“நான் சிங்கப்பூர்ல இருக்கிறது அவனுக்குத் தெரியுமாம். அதோட என் பேரு ரொம்ப யுனீக் பேராம். டேரக்டரில நம்பர் எடுத்து சும்மா டிரை பண்ணானாம். அது கால் டைவர்ட் ஆகி என் செல்லுக்கு வந்திருக்கு.”

“நல்லா வச்சாங்க உங்களுக்கு பேரு.”

“மீனா, என்னைப் பேசு. ஏன் எனக்கு பேரு வச்சவுங்கள இழுக்குறே?”

“சரி, சரி, முடிவாச் சொல்லிட்டேன் என்னால எதுவும் முடியாது. ஏதாவது சொல்லி சமாளிங்க. ‘ஆபீஸ் வேலையில ஹெல்டப் ஆயிட்டேன்’ வரமுடியலைன்னு சொல்லுங்க”

“என்னப் பொய் சொல்லச் சொல்லுறியா?”

“ஐயோ, இவரு பெரிய அரிச்சந்திரரு.”

“சரி, போன வச்சிரு” தொல்காப்பியனுக்கு ஒரே குழப்பம். இதுக்குப் போய் பொய் சொல்ல வேணுமா? நீண்ட நாள் நண்பனை, அவன் குடும்பத்தை பார்க்கப் போகிற ஆவல், தன் குடும்பத்தை அவர்களிடம் காட்டப் போகிற ஆவல் எல்லாம் நீர்த்துப் போனது.

மறுபடி கைத்தொலைபேசியில் மீனா.

“கைத்தொலைபேசிய ஏந்தான் கண்டுபிடிச்சாங்களோ? இவளுக்கு நெனச்சு நெனச்சு திட்ட வசதியாப் போச்சு” என்று நினைத்துக் கொண்டே எடுத்தான்.

“என்ன?”

“சரி போய்க் கூட்டிக்கிட்டு வந்து தொலைங்க. நான் தமிழ்க் கடையில போயி தோசைமா வாங்கிட்டு போறேன். சட்னி அரைச்சுக்கலாம். வரும்போது வடையும் கேக்கும் வாங்கிட்டு வாங்க. கூட வெக்கலாம்.”

“ம்”

“என்னாது, சத்தத்தே காணோம்?”

“அதான் ‘ம்’ன்னு சொன்னேனே.”

“நீங்க அடிக்கிற கூத்துக்கெல்லாம் நாந்தானே கெடச்சேன்.”

“சரி, தேங்க்ஸ் மீனா.”

தொல்காப்பியனுக்கு அவள் சம்மதிச்சது சந்தோஷமா இருந்தது. ஆனா அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. திருவள்ளுவர் சொன்ன ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ குறள் ஞாபகம் வந்த உடனே அவள் இவன் மேலே உள்ள கோவத்துல மொகத்தக் மொகத்தக் காட்டீட்டான்னா, என்ன பண்றதுன்னு ஒரே யோசனை.

சி.டி.யி. எக்ஸ்பிரஸ் வேயில் வண்டிகள் ஊர்ந்து கொண்டிருந்தன.

தொல்காப்பியனின் மனசுக்குள்ளும் பல எண்ணங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன.

“மனைவி வேலைக்கி போயி கிடைக்கிற வசதிகளுக்கு ஆசைப்பட்டா இது போல சில சந்தோசங்களை இழக்கத் தான் வேண்டும் போல. வேலைக்கி மனைவிய அனுப்புறது உதவியா? உபத்திரமா? தெரியல அப்படிக் கிடைக்கிற வசதிகளை முழுமையா அனுபவிக்கிறமா? அதுக்கு நேரம் இருக்கா?”இப்படி பல கருத்துக்களும் ஒன்றன் பின்னாடி ஒன்றாக வந்து அவன் மனசுலயும் ஒரே டிராஃபிக் ஜாம்.

ஸ்பீடாமீட்டரைப் பார்த்தான். அதன் முள் இருபதுக்கும் முப்பதுக்கும் நடுவில் ஊசலாடியது.

முள்ளின் ஒருபுறம் மனைவியின் வேலை, அதனால் கிடைக்கும் வசதிகள் ஆகவும் மறுபுறம் அதனால் இழக்கும் சந்தோஷங்கள் ஆகவும் இருப்பதாக நினைத்தான். ஒன்று கூடினால் இன்னொன்று குறைகிறது.

முள்ளை எங்கே நிறுத்துவது என்பதை ஓரளவு புறச்சூழல்கள் கட்டுப்படுத்தினாலும் முடிவான செயலாக்கம் அவரவர் கால்களுக்கடியில் இருக்கும் ஆக்ஸ்சலரேட்டரில் அவரவர்கள் கொடுக்கும் அழுத்தத்தினால்தானே என்று பட்டது. மோகனின் அழைப்பு அவன் நினைவுகளைக் கலைத்தது.

“ஹலோ மோகன், சொல்லுடா, உங்களை கூட்டத் தாண்டா வந்திட்டிருக்கேன். ஹோட்டல் நியூபார்க்தானே? ஒரே ட்ராஃபிக் ஜாம்”

“சாரிடா, நாங்க மியூசிக் ஃபவுண்டனாமே? அது ரெம்ப நல்லாருக்குமாமுல்ல அது பாக்கத்தான் வெயிட் பண்றோம். அது முடிஞ்சு வர லேட்டாயிடும். ரெம்பொ அலஞ்சிட்டம்டா. ரூமுக்குப் போயி குளிச்சு, ரெஃப்ரெஷ் பண்ணா சரியாருக்கும்டா…அதுனால இன்னொரு முறை உங்க வீட்டுக்கு வர்றமுடா… ரொம்ப சாரிடா.”

“இட்ஸ் ஓகேடா. அப்ப சரிடா நான் வீட்டுக்குப் போறேன். இன்னொரு முறை சந்திப்போம்” சொல்லிவிட்டு தொல்காப்பியனுக்கு அப்பாடா என்று இருந்தது. பெரிய இக்கட்டிலிருந்து விடுபட்டிருந்தான்.

சிட்டிக்குச் சாரைசாரையாக ஊர்ந்து கொண்டிருந்த எறும்பு ஊர்வலத்தில் இருந்து பிரிந்தான். அடுத்த எக்சிட்டில் வெளியேறி வேகமெடுத்தான். மனித ஆசைகளைப் போல ஸ்பீடாமீட்டர் முள் இப்போது 30, 40, 50, 60 என ஏறி, இன்னும் ஏறி எழுபதுக்கும் எண்பதுக்கும் இடையில்.

மீனாவின் அலுவலகம் நோக்கி வண்டி போய்க்கொண்டிருந்தது, அவளையும் அழைத்துச் செல்ல.

– நாம், புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *