இதற்கு முந்தைய ‘புதுமனைவி மோகம்’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது.
சிறிய மனஸ்தாபத்திற்குப் பின் மனைவியுடன் சினேகமாகிற நிமிஷத்தின் இனிமையே இனிமை. சுகமே சுகம். முதல் சண்டைக்குப் பின் என் மனைவி வனஜாவே எனக்கு ரொம்பப் புதுசாக இருந்தாள். அவளில் எல்லாமே எனக்கு முன்பின் பார்த்திராத அற்புதங்களாகத் தெரிந்தன.
எனக்குக் கல்யாணமான முதல் வருடம் மகன் நிக்கில் பிறந்துவிட்டான்.
இருப்பினும் நானும் என் மனைவி வனஜாவும் குறிக்கீடுகள் இல்லாத சுதந்திரத்தில், தனிக்குடித்தன போதையில்தான் திளைத்திருந்தோம்.
எங்கள் மனதில் ஆசைக்காற்று குறையாமல் வீசிக்கொண்டிருந்தது. எங்கள் மனவெளியில் மோக மேகங்கள் நகர்ந்தன. பல இரவுகளில் மின்னல் மின்னி இடி முழங்கி லேசாக ஆரம்பித்த மோகமழை, நேரம் ஆக ஆக வேகமாகப் பெய்து நடு இரவுக்குப் பிறகு நிக்கில் தூக்கம் கலைந்து அழுத பிறகுதான் நின்றது.
ஆசை அறுபதுநாள்; மோகம் முப்பதுநாள் என்பார்கள். ஆனால் எங்கள் விஷயத்தில் முதல் ஐந்து வருடங்கள் ஆசையும் மோகமும் கரைபுரண்டுதான் ஓடின. வனஜா எனக்கு அலுக்கவேயில்லை. அதுவும் உடம்பை வருடும் மெல்லிய பெங்களூர் குளிரில் எனக்கு வனஜாவின் கதகதப்பும் அணைப்பும் தினமும் தேவையாக இருந்தது.
தாம்பத்திய வாழ்க்கையின் அமைப்பு மிகவும் சுவாரஸ்யமானது. சில நாட்களில் நிக்கிலின் குறுக்கீடுகள்; சில நாட்கள் வனஜாவுக்கு விருப்பம் இல்லாமை; சில தினங்கள் அவளுக்கு களைப்பு; மாதத்தின் சில இயற்கையான விலக்கல்கள்; நடுவில் சில நாட்கள் உறவினர்களின் தங்கல்கள்…
இப்படியாக முன்னும் பின்னுமாக வேற்றுமைகளோடும் ஒற்றுமைகளோடும் நாட்களும், மாதங்களும், வருடங்களும் வேகமாக ஓடின. நிக்கில் நான்கு வயதுப் பையனாகிவிட்டபோது, லாவண்யா பிறந்தாள். அதன்பிறகு, மகனைப் பள்ளிக்கூடம் அனுப்புவதும், மகளைக் கவனித்துக் கொள்வதும்தான் வனஜாவின் தினசரி வாழ்க்கையாகிவிட்டது.
இந்தச் சூழலில் என்றைக்காவது ஒருநாள் வேலைக்காரி வராவிட்டால் எரிகிற நெருப்பில் மேலும் எண்ணை விட்டது போலாகிவிடும். அந்த மாதிரிச் சமயங்களில் வனஜாவைப் பார்த்தால் என் மனைவிபோல இருக்கமாட்டாள்; ஒரு ஆயா போலத் தெரிவாள். இந்த லட்சணத்தில் குழந்தைகள் உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டால் இன்னும் மோசம். ‘போதும்டா சாமி’ என்று எங்கேயாவது ஓடிப்போகலாம் போலிருக்கும்.
இரண்டு குழந்தைகளுடன் சம்சார சாகரம் மூச்சுத் திணற வைத்தது. வனஜாவின் அழகும் இளமையும் வற்றி வடிந்து விட்டிருந்தது. ஐந்தே வருடங்களில் இல்லற வாழ்க்கை செக்குமாட்டு வாழ்க்கையாக யந்திரத்தன்மை அடைந்திருந்தது.
அதனால் பாலுறவு வாழ்விலும் புதுமைகள் இல்லை; ஆச்சர்யங்கள் இல்லை; பரபரப்பு இல்லை; அற்புத பாவனைகளும் இல்லை. காதல் போதைகள் கலைந்து போயிருந்தன. ஆனால் பாலுணர்வுக் கிளர்ச்சி என்கிற சுக உணர்வு என்னுள் வற்றிப் போயிருக்கவில்லை.
வனஜாவிடம் அந்தக் கிளர்ச்சி பற்றிக் கொள்ளவில்லை. ஆரம்ப காலங்களில் வனஜாவின் புடவையின் ஸ்பரிசத்திலேயே கற்பூரம் போல் பற்றி எறிந்த உணர்வு இப்போது அப்படியெல்லாம் பற்றிக் கொள்வதில்லை! மாறாக – ஆபீஸிலோ; வேறு இடத்திலோ இளமையாகத் தெரிகிற பெண்களைப் பார்த்தால் மனம் உடனே செயல்பட்டது. உலகத்தில் எத்தனை அழகழகான பெண்கள், அவர்களுக்குத்தான் எத்தனை கவர்ச்சியான உடம்புகள்…!
இத்தனை காலம் வணஜாவைத் தவிர வேறு பெண்களை விரும்பி உணர்வு வயப்பட்டு கவனித்துப் பார்த்ததில்லை. ஆனால் இப்போதெல்லாம் வனஜாவைத் தவிர பிற பெண்கள் அனைவரையும் உற்சாகத்துடன் கவனிக்கலானேன்.
என் ஆபீஸிலேயே கல்யாணமான பெண்கள் எவ்வளவு நளினமாக அலங்கரித்து வருகிறார்கள்… எத்தனை விதமான நறுமணங்களில் மணக்கிறார்கள். தினமும் எவ்வளவு புதியதாகவே பரிமளிக்கிறார்கள்..! என் வனஜா மட்டும் ஏன் இவ்வளவு பழசாகி விட்டாள்? ஏன் தன்னை வயோதிகத்துக்கு தயாராக்கிக் கொள்கிறாள்?
மற்ற பெண்கள் மிகவும் புதியதாகத் தெரிய தெரிய; வனஜா மிகப் பழையதாகத் தெரிய ஆரம்பித்தாள். நாட்கள் செல்லச்செல்ல வனஜாவின் வேர்வையும், ஆயா மாதிரியான அழுக்குத் தோற்றமும் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
சமைக்க வேண்டியது; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியது; துணிகள் தோய்க்க வேண்டியது; குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுப்பது; அவர்களுக்கு ஓயாமல் பாடம் சொல்லிக் கொடுப்பது; இரவு அவர்களைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு அவளும் குறட்டை விட்டுத் தூங்க வேண்டியது… புருஷனைப் பற்றிய அக்கறையே கிடையாது. அவனுக்கும் நம்மைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்ற கரிசனமே கிடையாது !அவள் பாட்டுக்கு அவள் தூங்கிக் கொண்டிருப்பாள். நான் பாட்டுக்கு நானும் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். வேறு ஒன்றும் வேண்டாம்..!
வனஜாவுக்கு வேண்டாமாக இருக்கலாம்; எனக்குமா வேண்டாம்? எனக்கு வேண்டும்! தினசரி வேண்டும். வியர்வை நெடி இல்லாமல் விதவிதமாக வேண்டும். ஆனால் வனஜாவுக்கு எந்த விதத்திலும் வேண்டாமாகவே இருந்தது.
ரொம்ப வற்புறுத்திக் கேட்டால் ஈடுபாடே இல்லாத ஒரு சம்மதம்.. கணவன் என்கிற கடனுக்கு. முஸ்தீபுகள் இல்லாத ஒரு அவசர முயங்கல். நான் எரிச்சலடைந்தால் “கல்யாணமாகி இத்தனை வருஷமாகி விட்டது; ரெண்டு குழந்தைகள் வேறு… இன்னுமா இத்தனை ஆசை?” என்று சொல்லி என்னை பதிலுக்கு கடுப்படிப்பாள். இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவானால் என்ன? அவளுக்கு நான் புருஷன்தானே? அதுவும் முப்பத்தியோரு வயதேயான புருஷன்…
ஆனால் நான் எத்தனை விளக்கி வாதாடினாலும் வனஜாவின் மனோநிலையை மாற்றவே முடியவில்லை. இரண்டு குழந்தைகளின் அம்மாவாக மட்டும் வேர்வையோடும் பழையதாகிப்போன உடம்போடும் ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருந்தாள். வேறுவழி தெரியாத அப்பாவியாய் அவளை அணுகிக் கொண்டிருந்த நானும் மனத்தால் சிறிது சிறிதாக வனஜாவிடம் இருந்து விலக ஆரம்பித்தேன்.
வீட்டிற்குத் தாமதமாக செல்லத் தொடங்கினேன். ஆபீஸ் நண்பர்களுடன் சேர்ந்து பெங்களூர் பப்களில் பீர் குடிக்க ஆரம்பித்து, பிறகு மதுவும் அருந்த ஆரம்பித்தேன். தினமும் ஆபீஸ் விட்டதும் நண்பன் மகேஷுடன் சேர்ந்து சஹார்கர்நகர் ட்ராய்ட் கார்டனில் அங்கேயே பாய்லர்களில் தயாரிக்கப்படும் விதம் விதமான மதுக்களை ஆசையுடன் ருசித்தேன்.
சிகரெட்டும் புகைக்க ஆரம்பித்தேன். புகையை உறிஞ்சுவதில் ஒரு சுகமான இதம் கிடைத்தது. இரவில் எத்தனை இம்சையாக இருந்தாலும் வனஜாவை அணுகக்கூடாது என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன். அவளாக என்றைக்காவது என்னை அணுகுகிறாளாவென்று காத்திருந்து காத்திருந்து பார்த்தேன். ம்ஹூம்… ‘நல்லவேளை ஆளைவிட்டான்’ என்ற நிம்மதியில் தூங்கித் தூங்கித்தான் எல்லா இரவுகளையும் கழித்தாள்.
அப்போதுதான் அந்த இரவில் ஒருநாள் முதல் முறையாக எனக்குள் அந்த எண்ணம் வந்தது. வேறொரு பெண்ணை அணுகிப் பார்த்தால் என்ன? மற்றொரு புதிய பெண்ணின் உடம்பை நாடினால் என்ன? தேங்கி முடங்கிப்போன என் உணர்வுகளையும் புதுப்பித்துக் கொண்டால் என்ன?
மங்கலான வெளிச்சத்தில் சற்றுத்தள்ளி ஒருக்களித்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த வனஜாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனம் வித்தியாசமான திசையில் சப்தமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது…
என் ஆபீஸ் பெண்களை முதல் முறையாகத் தப்பான பார்வையுடன் பார்த்தேன். அவர்களின் உடல் அமைப்புகளை ரகசியமாகக் கவனித்தேன். வலியப்போய் தேவையில்லாத விஷயங்களுக்குக்கூட அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். என் மனைவியிடம் இல்லாத ஒரு வாசனை அவர்களிடம் இருந்தது.
என் கல்யாண விஷயத்தில் நான் பெரிய தப்புப் பண்ணிவிட்டதாக நினைத்தேன். இன்னும் நல்ல பெண்ணாகப் பார்த்துப் பண்ணியிருக்கலாம். வேலைக்குப் போகிறவளையே பார்த்திருக்கலாம். அவர்களிடம் காதல் உணர்வுகூட சற்று அதிகம்தான் என்று தோன்றியது. வனஜாவிடம் காதல் உணர்வு கடுகளவுகூட கிடையாது. அவளுடைய கண்களில் எப்போதும் ஒருவிதமான அலுப்பும், களைப்பும்தான் படிந்திருக்கும். ஷி இஸ் நாட் அட் ஆல் ரொமான்டிக்.
களைத்துப் போகாத பெண் முகங்களைத் தேடி நான் லயிக்க ஆரம்பித்துவிட்டேன். அதே சமயம் என்னுடைய களைப்புக்கு ஆறுதல் தரக்கூடிய பெண் மனங்களுக்காக ஏங்கவும் ஆரம்பித்துவிட்டேன். சுருக்கமாகச் சொன்னால் நான் ஒரு பெண் பித்தனாகவே ஆகிவிட்டேன். களைப்பின் சுவடே இல்லாமல் களிப்புத் தாண்டவமாடும் பெண் முகத்தைப் பார்த்தால் அசந்துபோய் நின்றேன்.
மென்மையான மனம் கொண்ட பெண்ணாகத் தெரிந்தால் பின்னாடியே போனேன். எதிர்படுகிற எந்தப் பெண்ணிடமும் மனசைத் திறந்து கொட்டுவதற்கு தயாராக இருந்தேன். அதேமாதிரி எந்தப்பெண் மனம் திறந்து கொட்டினாலும் அதை அன்புடன் கேட்டுக் கொண்டிருக்கவும் நான் தயாராக இருந்தேன். பெண்களுக்காக நான் எதுவும் செய்யத் தயாராக காத்திருந்தேன்.
என் காத்திருப்பு வீண் போகவில்லை.
என் ஆபீஸிலேயே பணி புரிந்து கொண்டிருந்த கல்யாணி என்ற பெண்ணுடன் சற்று நெருக்கமாகப் பழக ஆரம்பித்தேன். அவளுடன் காதல் என்கிற உணர்வுடன் அடுத்த தளத்திற்கு மெதுவாக என்னால் நகர முடிந்தது.