பவானி கழுத்தில் ராஜா தாலி கட்ட கெட்டி மேளம் முழங்கியது. விசுக் விசுக்கென கேமராக்கள் ஃளாஷ் அடித்துத் தள்ளின. வீடியோக் காமிராக்களும் இயங்கின.
ஒவ்வொருவராக வந்து மணமக்களிடம் வாழ்த்து தெரிவித்தனர். புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வீடியோவிலும் பதிவாயினர்.
பவானியின் தந்தை ராக வன் மற்றும் தாய் மைதிலி முகம் கொள்ளாச் சிரிப்பில் தங்கள்
மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.உறவினர்களும் நண்பர்களும் அவர்களிடம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டு நகர்ந்தனர்.
“தம்பதி சமேதராய் பெரியவா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க!”
புரோகிதர் சொல்ல ராகவனும் மைதிலியும் தம் தம் கைகளில் அட்சதை வைத்துக் கொண்டு தயாராக காத்து நின்றார்கள்.
அப்போது பவானி ராஜா காதில் கிசு கிசுத்தாள். ராஜாவும் மெல்ல தலையாட்டியபடி
பவானியின் வலது கையை தன் வலது கையால் பற்றியவன் ராகவன் மற்றும் மைதிலியைக் கடந்து சென்றான்.
தங்கள் காலில்தான் முதலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கப் போகிறார்கள் என
எதிர்பார்த்து நின்ற ராகவனுக்கும் மைதிலிக்கும் பெருத்த ஏமாற்றம்.! மேலும் எங்கு
செல்கிறார்கள் என தெரியவில்லை. அவர்கள் போகின்ற திசையை கண் கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தனர்.
கடைசியாக, ஹால் மூலையில் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த காமாட்சி எதிரில் போய் நின்றார்கள். அந்த மூதாட்டி வேறு யாருமல்ல. ராஜாவின் அம்மா. ராஜாவும் பவானியும் அவர்கள் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். காமாட்சியம்மாள் அந்த புது மணமக்களை தன்னோடு அணைத்து ஆசி வழங்கினார்.
இதைக் கவனித்த ராகவன் மனைவி மைதிலியைப் பார்த்து புன்னகைத்தார் .
“பார்த்தாயா மைதிலி! நம்மப் பொண்ணு மரியாதை தெரிந்தவள். ஒத்தையாக இருந்தாலும் மாப்பிள்ளையின் அம்மா வயதில் மூத்தவர். அந்த வயதுக்கு மரியாதை கொடுத்து முதல் ஆசிர்வாதம் வாங்க வைத்திருக்கிறாள். இந்த மாதிரி ஒரு பெண்ணைப் பெற நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .”
“அதுல துளிக்கூட சந்தேகமே இல்லைங்க. சரி..சரி…அடுத்து ஆசிர்வாதம் வாங்க நம்மக் கிட்டதான் வராங்க.” என்றாள் சிரித்தப்படி மைதிலி.