ஆசாரசீலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2022
பார்வையிட்டோர்: 2,309 
 

இரவு பத்து மணி கடந்தும் மின்விளக்குகள் அணைக்கப்படவில்லை!

சேவையர் சிற்றம்பலத்தாரின் வீட்டில் பத்து மணிக்குப் பிறகு, ஒளிபரப்ப எந்த மின்விளக்குக்கும் அனுமதி இல்லை. இந்த மின்சாரத்தடையை மீறிச் சமையலறையில் போய்நின்று பாத்திரம் கழுவி வைக்கவோ, சாமான் சக்கட்டுகளை அடுக்கி வைக்கவோ கூடாது. இது மனையாள் கனகேசுவரிக்கு அவர் இட்டு வைத்திருக்கும் கடுமையான கட்டளை.

தண்ணீர்ப் பாவனையிலும் இதேபோன்று அவர் மிகுந்த கட்டுப்பாடுடையவர்.

‘கஞ்சன்’ என்று யாராவது அவரைக் கணக்கிட்டால், அது அவரவர் பார்வைக் கோளாறு என்றே பொருள்கொள்ள வேண்டும்! அடுத்தடுத்த தலைமுறையினர் பாவனைக்குத் தேவையான மின்சாரமோ, நல்ல குடிநீரோ, சுத்தமான காற்றோ உலகில் அருகி வருவது குறித்த கரிசனைதான், தமது இந்த இறுக்கமான கட்டுப்பாடுகளுக்குக் காரணம் என்பது அவரது வியாக்கியானம்.

ஏழரை மணிக்குக் கைகால் முகம் கழுவிச் சுத்தமான உடை உடுத்தி, சுவாமி அறையினுள் போய் அமர்ந்து கொள்வார். அரை மணிநேரத் தியானம், தேவார திருவாசக பாராயணம், பூசை புனஸ்காரம் முடித்து, நெற்றியில் திரிபுண்டரம் துலங்கப் பக்தி சிரத்தையோடு வெளியே வருவார்.

சரியாக எட்டுமணிக்கு ‘அப்பனே நல்லூர்க் கந்தா, கடம்பா, முருகா’ என வாய்விட்டுச் செபித்துச் சேவித்தபடி, மேசையில் வந்தமர்ந்து, இராப் போசனத்தை முடித்துக்கொள்வார். கனடா தேசம் வந்த பிறகும் மச்ச மாமிசங்களைத் தொட்டும் பார்த்திராத சைவ ஆசாரசீலராகத் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதென்பது சும்மா லேசுப்பட்ட விசயமல்ல.

சாப்பாட்டுக்குப் பின், சீனி வருத்தத்துக்கு மெற்ஃபோர்மினும், கொலெச்ரெறோலுக்கு கிரெஸ்ரரும், இரத்த அழுத்ததுக்கு கண்டெஸார்ரனும், இரத்தத்தை மென்மையாக்குவதற்கு பேபி அஸ்பிரினும் போட்டு, சிறியளவு தண்ணீர் மென்று விழுங்குவார். ‘ருத் பிக்’ ஒன்றை எடுத்துப் பல்லுக் குத்தித் துப்பித் துப்பி, வீட்டுக்குள்ளேயே மேலுங்கீழுமாக சிறியதொரு சமிபாட்டுக் குறுநடை நடப்பார். காற்றும் களவாகப் புகாவண்ணம் அடித்து மூடிய கதவுகளையும், யன்னல்களையும் சுவர்களையும் ஊடுருவி, அண்டை அயலுக்கும் கேட்கத் தக்கதாக ஓசையெழுப்பித் தொண்டை செருமுவார், சில சமயங்களில் ஏவறையும் விடுவார்.

சரியாக ஒன்பது மணிக்கு, ரிவி முன்னால் வந்து குந்துவாரானால், சிபிசி நாஷனல் நிகழ்ச்சியில், பீற்றர் மான்ஸ்ப்பிறிஜ் வாய்மலரும் வார்த்தைகள் அனைத்தையும் கூர்ந்து அவதானித்து, வரிக்கு வரி மனதில் பதித்து வைத்துக்கொள்வார். உள்நாட்டு, வெளிநாட்டு நடப்புகளை அறியவேண்டுமெனும் வேணவாவுக்கும் மேலாக, தொலைபேசியில் நண்பர்களுக்குத் தனது ஆழ்ந்தகன்ற அரசியல் ஞானத்தை அடிபிசகாமல் அப்படியே பகிர்தல் வேண்டுமெனும் பெருவிருப்பே அதற்கான பிரதான காரணம். சிபிசி நாஷனல் முடிந்த கையோடு சேவையர் சித்தம்பலத்தார், சயனத்துகெனப் போய்ச் சரிந்துவிடுவார்.

மனையாள் கனகேசுதான் பாவம்! ஒரு சராசரிக் கனடாத் தமிழ் மனைவி போல, ஒரு தமிழ்ச் சினிமாப் படமோ, ஒரு நாடக சீரியலோ பார்க்க முடியாமல், சிவனே என்று போய்ப் போர்த்து மூடிக்கொண்டு படுக்கவேண்டிய சட்ட திட்டங்கள் அந்த வீட்டில் எப்போதும் அமலில் இருக்கும்!

சிற்றம்பலத்தார் இலங்கை நில அளவைத் திணைக்களத்தில் சேவையராக நீண்ட காலம் பணியாற்றியவர். நாட்டின் நாலாதிக்கிலும் அலைக்கழிந்து பணியாற்றிய அனுபவம் மிக்கவர். புதிய மிலெனியத்தின் ஆரம்ப காலத்திலேயே நாட்டு நிலைமை நல்லதல்ல என்பதை மோப்பம் பிடித்தவர், அப்போதே குடும்பத்தோடு கனடாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். கனடாவிலும் ஒரு ஆறு ஆண்டுகள் பலதரப்பட்ட பணிகளைச் செய்து, கடந்த ஏழு வருடங்களாக ஓய்வூதியத்துடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

சிற்றம்பலத்தாருக்கும் கனகேசுவரிக்கும் அந்த நாளையில் கலியாணம் பேசிக் கட்டிவைத்தவர்கள், சகல பொருத்தமும் சரியாய்ப் பொருந்திவரப் பார்த்திருந்தும், சரீரப் பொருத்தத்தை மட்டும் கோட்டை விட்டிருந்தனர். சாதாரணமாக, நடக்காமல் உருண்டு செல்லும் ஐந்தரையடி வாமனரான சிற்றம்பலத்தாரையும், தளரா வளர்தெங்கு போல ஆறடி வளர்ந்த கனகேசுவரியையும் வழிதெருவில் காண்பவர்கள், ‘முற்றுப் புள்ளியும் கேள்விக் குறியும் கூடிப் போகுதுகள்’ எனத் தமக்குள் கேலி சொல்லிச் சிரிப்பது வழக்கம். தோற்றத்தில் மட்டுமென்ன, குணவியல்புகளிலும் இருவரும் கணிசமான வேறுபாடு கொண்டவர்கள். வாய் திறந்து ஒலியெழுப்பத் தெரியாத ஒட்டகச் சிவிங்கி போலவே, அவரது கட்டளைகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் அடங்கி ஒடுங்கி, கனகேசுவரி அவருடன் தனது காலத்தைக் கழித்து வருகிறாள்.

கடந்துபோன கோடை காலத்தில் ஒருநாள், சமையல் சாப்பாடுகள், கூட்டித் துடைப்புகளை முடித்துவிட்டுக் களையாறவென்று ரிவி முன்னால் வந்து குந்தியிருந்தாள்.

ரொறன்ரோ நகரில் ‘கரிபானா’ ஊர்வலம் கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. எல்லா ரொறன்ரோ தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டிருந்த கேளிக்கை ஊர்வலத்தைக் கனகேசு புதினம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘உமக்கு வேறை வேலை இல்லையே? உடம்பிலை ஆமான துண்டுதுணி கட்டாமல், தெருவிலை நிண்டு அவளுகள் காவடி எடுத்தாடுகிறாளுகள். நீர் உந்த அரிகண்டங்களைக் கண் வெட்டாமல் பாத்துக்கொண்டிருக்கிறீர்!’

‘இதென்ன கரைச்சலப்பா…உங்களோடை? நானெங்கை கண்வெட்டாமல் பாத்துக்கொண்டிருக்கிறன்?’ சொல்ல நினத்தும், கனகேசு வாய் திறக்கவில்லை.

‘இன்னும் கொஞ்ச நாளையிலை, ‘பிறைட் பரேட்’ என்று, க்கேய் – லெஸ்பியன் ஆணும் பெண்ணும் கோமணத்தோடை ஊர்வலம் போவினம். அதையும் வந்து ஆவெண்டு குந்தியிருந்து பாருமன்’

‘சும்மா எந்த நேரமும் என்னோடை தனகாட்டால், உங்களுக்குப் பத்தியப்படாதே!’

எதிர்த்துப் பேசத் துணிச்சலில்லாதவளாய், தன்பாட்டில் வாய்க்குள் முணுமுணுத்தபடி, ரிவியை நிற்பாடிவிட்டு எழுந்து போய்விட்டாள், கனகேசு.

இப்படியாக, எதிர்க்கட்சியே இல்லாத சிங்கப்பூர்ப் பாராளுமன்றம், சித்தாவின் குடும்பம்!

இன்று மட்டும் வழமைக்கு மாறாக இரவு பத்து மணிக்குப் பிறகும் சட்ட திட்டங்கள் சற்றே தளர்த்தப்பட்டு, மின்விளக்குகள் களைகட்டி மின்னுவதற்கும், இருவரும் கண் விழித்துக் காத்திருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு!

சித்தா – கனகேசு தம்பதியினரின் ஏகபுத்திரி திரிபுரசுந்தரி மூன்று மாதத்துக்குப் பிறகு இன்று வீட்டுக்கு வருகிறாள்.
தேவி பெயரைத் தினம் தினம் உச்சரிப்பாதால் சித்திக்கும் தெய்வ கடாட்ஷங்களைக் கருத்தில் கொண்டு, அப்பா வைத்த பெயரைச் சுருக்கி, திரா என மாற்றிக்கொண்ட அவள், அமெரிக்காவில் இப்போது மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தின் ஒரு பிரதான பிரிவின் மனேஜிங் டிறெக்ரராகப் பணியாற்றி வருகிறாள்.

கனடா வோட்டர்லூ பல்கலைக்கழகத்தின் அந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பட்டதாரியான அவளுக்கு, ‘மைக்ரோசொஃப்ற் நிறுவனம் கூப்பிட்டு வேலை கொடுத்தது’ என்பதில் சித்தாவுக்கு எப்போதுமே சொல்லிலடங்காப் புழுகம்!

தனது முதற் பட்டத்துடன் 112 ஆயிரம் அமெரிக்க டொலர் சம்பளம் கிடைக்கப் பெற்றவள், திரா. நான்கு வருடங்களுக்குள் முதுமாணிப் பட்டமும், அதைத் தொடர்ந்து பிஎச்டியும் பெற்றுக்கொண்ட அவளுக்கு, மைக்ரோசொஃப்ற் இப்போது மாதமொன்றுக்கு 160 ஆயிரம் அமெரிக்க டொலரை அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்றால் பாருங்களேன்! சித்தாவின் இந்த வீடும், காரும், சுகசீவியமும் அவளது வருமானத்தின் சுவறல்கள்தான்!

‘பத்து மணிக்கு வருவேன் எனச் சொன்னவள், நேரம் பத்தரை தாண்டியும் வந்து சேரவில்லை’ என எண்ணி, அம்மாவும் அப்பாவும் அடிக்கடி மணிக்கூட்டைப் பார்த்தபடி பரபரத்துக் கொண்டிருக்கின்றனர்.

திராவின் அதிஷ்டம் சித்தாவின் கூரையைப் பிய்த்துச் செல்வத்தைக் கொட்டி வருகின்ற போதிலும், ஒரேயொரு கவலை அவரையும் அவரது மனையாளையும் சதா அரித்துக்கொண்டிருக்கிறது!

முப்பத்தாறு வயது கடந்தும், ஒரு கலியாணமும் இதுவரை அவளுக்குப் பொருந்தி வரவில்லை!

திரா நிறம் கொஞ்சம் குறைவு. சாடையாக ஊதிப் பெருத்த உடல். பேரழகி என்று சொல்ல முடியாதென்றாலும், சுமாரான அழகி!

பள்ளி நாட்களில் சகதமிழ் மாணவிகள் போல, ஆட்டம் பாட்டம் கலை கலாசாரமென்று அவளுக்குப் பெரிய நாட்டம் இருக்கவில்லை. பாட்டு, சங்கீதம் சுட்டுப் போட்டலும் வரமறுத்தன. ‘பரதநாட்டியத்துக்கு அனுப்புவமே?’ என்று கனகேசு ஒருநாள் கேட்டதுக்கு, ‘சேச்சே… ஆயிரம்பேர் ஆவெண்டு பாத்துக்கொண்டிருக்க, என்ரை பிள்ளை அவையளுக்கு முன்னாலை, கையைக் காலைத் தூக்கி ஆட்டிக் காட்டி, அப்பிடி ஒரு அரங்கேற்றம் செய்யவேணுமே?’ எனக்கூறிச் சித்தா தட்டிக் கழித்துவிட்டார்.

ஆண் பிள்ளைகளோடு அவளை அதிகம் சேர விடமாட்டார். பாடம் சம்பந்தமாக ஏதாவது புறொஜெக்ற்ஸ் அல்லது வீட்டுவேலை இருந்தாலும், பெண் பிள்ளைகளோடு சேர்ந்துதான் அவற்றைச் செய்ய வேண்டும். அதற்குத் தன்னிலும், வார இறுதி இரவுகளில் அவர்களது வீடுகளுக்கு ‘ஸ்லீப் ஓவர்’ போக அனுமதி கிடைக்காது. பல்கலைக்கழக நாட்களில் ‘டேற்றிங்’ எனப்படும் காதலிணக்கச் சந்திப்பின் கதை எடுத்தாலே சித்தாவுக்குச் சிரசில் ஏறிவிடும். இவை யாவும் எங்கள் கலாசாரம், விழுமியங்கள், ஒழுக்கங்களுக்கு விரோதமானவை எனத் தன் மகளுக்குப் புத்தி புகட்டித் தடுத்து வைத்திருக்கிறார்.

திரா முதற் பட்டம் பெற்று, நல்ல உத்தியோகம் கிடைத்தவுடன் மாப்பிள்ளை தேடுபடலம் ஆரம்பமாயிற்று. பல இடங்களிலிருந்து பேச்சுக்கால் வந்தது. மாப்பிள்ளைமாரின் சுயவிபரத் திரட்டுகளில் சொல்லியவற்றையும் சொல்லாதவற்றையும் சித்தா, பூதக் கண்ணாடியின் கீழ்வைத்து நுண்மப் பரிசோதனைகள் பல செய்து பார்த்தார்.
சாதகம் பொருந்தவில்லை| சம்பளம் போதாது| வேலை சரியில்லை| ஆள் சரியில்லை| ஆளுமை சரியில்லை| மண்டையில் மயிரில்லை| கலர் சரியான கறுப்பு| சாதி குறைவு| சமயம் சரிவராது| ஊரிலை இடம் வாய்ப்பில்லை என்று சித்தா முட்டையில் மயிர் புடுங்கிக்கொண்டிருந்ததால், வந்த வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போயின.

அவள் முதுமாணிப் பட்டம் பெற்ற பின்னரும் இதே புராணந்தான்! ஆனால் பொருத்தமான மாப்பிள்ளைக்கான பற்றாக்குறை படிப்படியாக வேகவளர்ச்சி அடைந்தது! பிஎச்டியின் பின்னர் அவளது படிப்புக்கும், வேலைக்கும், வயதுக்கும், வருமானத்துக்கும் சமானமான மாப்பிள்ளை எடுப்பதென்பது, கல்லில் நாருரிப்பது போலக் கடினமாகி, வெறும் கனவாகிப் போனது!

நாளாக நாளாக, அவளுக்கு வரன் தேடும் விடயத்தில் தாம் தவறிழைத்துவிட்டோமோ என நினைந்து வருந்தத் தொடங்கினார். தான் பெற்ற செல்ல மகளுக்கு இல்லற வாழ்க்கை இனிமேல் இல்லாமலே போய்விடுமோ என எண்ணி எண்ணி இரகசியமாக மனதுக்குள் இரத்தக் கண்ணீர் வடிக்கலானார்.

மணிக் கணக்கில் கடவுளிடம் கையேந்தினார். கலியாணத் தரகர்களிடம் காசைக் கரைத்தார். நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என எல்லோரிடமும் சொல்லி வைத்தார். மாப்பிள்ளைக்கென அவர் விதித்திருந்த நிபந்தனைகளைத் தளர்த்திப் பார்த்தார். தாரம் இழந்தவர்களைக்கூடக் கருத்தில் கொண்டார்.

‘மட்ரிமொனி’ கலியாண இடைத்தரகு இணையத் தளங்களில் தேடிப் பார்த்தார். ஊரிலும் கனடாவிலும் தமிழர் வாழும் ஏனைய வெளிநாடுகளிலும் பிரசுரமாகும் செய்திப் பத்திரிகைகளில் விளம்பரம் போட்டுப் பார்த்தார் –

‘யாழ் சைவ வேளாள உயர் குடிப்பிறந்த, கனடாவை வதிவிடமாகக் கொண்ட, பிஎச்டி கல்வித் தகைமை கொண்ட, அமெரிக்காவில் மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தில் உயர்பதவி புரியும், மாதம் 160 ஆயிரம் அமெரிக்க டொலர் சம்பாத்தியம் உடைய, நற்குணமும் அழகும் நிரம்பிய, செவ்வாய் தோஷமேதுமற்ற, 36 வயதுப் பெண்ணுக்குப் பொருத்தமான மாப்பிள்ளை தேவை’

எனும் விளம்பரமும் வீணாய்ப் போயிற்று.

தாய் கனகேசுவரியோ தன் மகளுக்குத் திருமணம் கைக்கூட வேண்டுமென வேண்டி – நவகன்னிகைகளுக்கு 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அர்ச்சனை செய்தாள்; ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பாளை வழிபட்டாள்; புரட்டாதி மாதம் சுக்கிலபக்ஷ தசமி முதல், ஐப்பசி அமாவாசையுடன் நிறைவுறும் கேதார கௌரி விரதம் பிடித்தாள்; ‘துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்’ எனப் பாடிப்பாடி ஐப்பசியில் மிகக் கடுமையான கந்தசஷ்டி விரதமிருந்தாள்.

ஒன்றுமே பலிக்கவில்லை!

கடவுளரும் கைவிட்டனரே என்ற கவலையில் இருவரும் வாடிப்போயிருந்த சமயம், ஒருமுறை திரிபுரசுந்தரி தனது பெற்றோரைப் பார்க்கவென்று கனடா வந்தாள். அவர்களது மனக் கவலையை ஊகிக்க முடியாத சராசரித் தமிழ்ப் பெண்ணா அவள்? தாய் தந்தையருடன் ஆறுதலாக இருந்து, மனம் விட்டுப் பேசினாள்.

‘ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகளோடு பேசாதே, பழகாதே என்று எனக்குப் புத்திமதி சொன்னீர்கள். கிளிப்பிள்ளை போல என்னைப் பொத்திப் பொத்தி வளர்த்தீர்கள். படி..படி…என்று மட்டும் சொல்லிச் சொல்லிப் படிப்பிலும் வேலையிலும் என்னை உச்சத்துக்கு எடுத்துச் சென்றீர்கள். இப்போது என்ன நடந்தது? எனக்குப் பொருத்தமான மாப்பிள்ளை இல்லை என்று வருத்தப்படுகிறீர்கள்.’

‘ஐயோ…அதுதான் நான் செய்த பெரிய பிழை தாயே…என்னை மன்னிச்சுக்கொள்ளம்மா…என்னை மன்னிச்சுக்கொள்…’ சிற்றம்பலத்தார் ஓவென்று வாய்விட்டு அழுதார்!

அப்பா இப்படி அழுவார் என அவள் எதிர்பார்க்கவே இல்லை!

ஓடிவந்து அவரருகே அமர்ந்திருந்து… கண்ணீரைத் துடைத்து விட்டாள். கரங்களைப் பற்றிப் பிடித்து அன்போடு தடவிக் கொடுத்தாள்.

தாயும் தேம்பித் தேம்பி அழுதாள்.

‘அப்பா…ஏன் அழுகிறியளப்பா? அழாதெயுங்கோ? என்ரை கலியாணத்தைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல், நான் நல்ல சந்தோசமாத்தானே இருக்கிறனப்பா…’

‘நாங்கள் சந்தோசமாயில்லையே, அம்மா…!’ கனகேசு சொல்லியழுதாள்.

‘அம்மா.. அப்பா, ரெண்டுபேரும் தயவுசெய்து நான் சொல்லுறதைக் கேளுங்கோ. ஒரு காலத்திலை, அதிலையும் முக்கியமாக எங்கடை தமிழ்ச் சூழலிலை, கலியாணம் என்கிறது ஒரு பெண்ணுக்கு மிகவும் அவசியமாயிருந்தது. அது அவளுக்குப் பல விதமான பாதுகாப்பையும் கொடுத்தது. அதை நான் இல்லை எண்டு சொல்லேல்லை.’

‘ஆனால் இப்ப நிலைமை அப்பிடி இல்லையப்பா. ஒரு பெண்ணுக்கு ஆண் துணை தேவை என்கிற கட்டாயம் இப்ப இல்லையப்பா. ஒரு ஆணில் தங்கி இருக்காமல், அவள் தனியாக, சுதந்திரமாக வாழக்கூடிய காலம் இப்ப வந்திட்டுது…’

மகளின் பேச்சைக் கண் கலங்கியவாறு செவிமடுத்துக்கொண்டிருந்த சித்தா சொன்னார் –

‘அது சரி அம்மா…ஒரு பெண்ணுக்கு பணமும் பொருளும் சுதந்திரமும் இருந்தால் மட்டும் போதாது, தாயே! அதுக்கும் மேலாலை, அவள் பெறவேண்டிய பலதும் குடும்ப வாழ்வுக்குள்ளை இருக்குது தாயே. அதை உனக்குத் தரமுடியாத பாவியாய்ப் போனேனே! ஐயோ…நான் பாவியாய்ப் போனேனே!’

தாங்க முடியாத துயரினால் துடிக்கும் தன் பெற்றோரைத் தேற்ற வழியின்றி, திரா தடுமாறினாள்.

‘சரி…மற்றதை விடு, ஒரு பேரப் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சி விளயாடுற சந்தோசங்கூட இந்தப் பாவியளுக்கு இல்லாமல் போச்சே!’

‘அப்பா, திரும்பவும் உங்கட சந்தோசத்தைப் பற்றித்தான் யோசிக்கிறியள். என்னுடைய சுதந்திரத்தையும், அதாலை எனக்குக் கிடைக்கிற சந்தோசத்தையும் பற்றி யோசிக்கிறியளில்லையே!’

சொற்ப வினாடிகள் மூவரும் ஆளையாள் நோக்குவதைத் தவிர்த்து, ஈர விழிகளுடன் கீழே நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கரிய புகை மூட்டமாகச் சூழ்திருந்த மௌனத்தைக் கலைத்து, திரா மீண்டும் அழாக் குறையாகச் சொன்னாள் –

‘அப்பா, நான் அப்பிடிச் சொன்னதுக்கு, என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ! இப்ப உங்களுக்குத் தேவை, என்னுடைய சந்தோசந்தானே. நான் ஒரு குறையுமில்லாமல் நல்ல சந்தோசமாக இருக்கிறன். எனக்கு எந்தக் கவலையும் கிடையாதம்மா…பிளீஸ் அப்பா…அழ வேண்டாமப்பா’

இருவரையும் அணைத்து, அன்போடு வருடிக் கொடுத்தாள், திரா!

கார் ஒன்று வீட்டுக்கு முன்னால் வந்து, மூச்சை அடக்கி, பிரகாசமாக ஒளிரும் இரு கண்களையும் மூடி, ஓய்ந்து நிற்கிறது.

ஆவலோடு கனகேசு ஓடிப்போய்க் கதவைத் திறக்கிறாள்.

காரிலிருந்து இறங்கி வந்து, தாயைக் கட்டியணைத்து முத்தமிடுகிறாள், திரா. அம்மாவுக்குப் பின்னால் வந்து நிற்கும் அப்பாவுக்கும் அதே அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறது.

திராவைப் பின்தொடர்ந்து, அவளை விடச் சற்று உயரமான, ஆனால் ஏறக்குறைய அவளது வயது மதிக்கத்தக்க, வெள்ளைக்காரப் பெண்ணொருத்தியும் வீட்டுக்குள் வருகிறாள்.

சித்தாவுக்கும் கனகேசுக்கும் முகம் மலர, ‘ஹாய்’ சொல்கிறாள். இருவரும் பதிலுக்கு ‘ஹாய்’ சொல்லி அவளையும் உள்ளே வரவேற்கின்றனர்.

பயணப் பொதிகளை ஓரமாக வைத்துவிட்டு, ஹால் நடுவே போடப்பட்டுள்ள சோஃபாக்களில் இருவரும் அமர்ந்திருந்து தம்மை ஆசுவாசப்படுத்துகின்றனர். அப்பாவும் அம்மாவும் எதிரே உட்கார்ந்து கொள்கின்றனர்.

எதிர்பாராத விதமாக இடம்பெற்ற ஒரு வீதி விபத்துக் காரணமாக, பிரயாணம் தாமதமாகிப் போனதாக, திரா அப்பாவுக்குச் சொல்கிறாள்.

அம்மா எழுந்து, ‘முதல் இப்ப ஏதாவது குடிக்கப் போறியளோ? இல்லை, குளிச்சிட்டு வந்து, ஒரேயடியாச் சாபிடப் போறியளோ?’ எனக் கேட்கிறாள்.

‘இலையம்மா…நாங்கள் நேரத்தோடை டின்னர் சாப்பிட்டிட்டம். பிறகு, ஹைவேயை விட்டு வெளியே வந்தவுடனை, ஒரு ரிம் ஹோர்ட்டன்ஸிலை காரை நிப்பாட்டி, கோப்பி வாங்கிக் குடிச்சுக்கொண்டுதான் வாறம். இனி ஒண்டும் வேண்டாம் அம்மா…’

சொல்லிக்கொண்டே தனது நண்பிக்கு அம்மா, அப்பாவை அறிமுகம் செய்கிறாள்.

இருகரம் கூப்பி, இருவரையும் குறுநகையோடு நோக்கி, ‘வனக்கம்’ என்கிறாள் அந்த வெள்ளைக்காரப் பிள்ளை. அவளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பயிற்சியை எண்ணி வியந்தவாறு, இருவரும் பதில் வணக்கம் கூறுகின்றனர்.

அவளும் தன்னோடு ஒரே பகுதியில், ஏறக்குறைய ஒரேதரப் பணியில் இருப்பதாக, திரா அவளைத் தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்கிறாள்.

‘இவள் எனக்கு மிகவும் நெருக்கமான தோழி. ஒரே அடுக்குமாடி இருப்பிடத்தில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்’ என அந்த வெள்ளையினப் பெண் கூறுகிறாள்.

‘நல்லது’ என ஆங்கிலத்தில் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார், சித்தா.

அவளும் நன்றியோடு புன்னகைக்கிறாள்.

முதற் சந்திப்பு என்பதால் ஒரு சம்பிரதாயத்துக்காகக் கனடா, அமெரிக்கா, வேலை வாய்ப்புகள், வாழ்க்கை முறைகள், ஒற்றுமை வேற்றுமைகள் இன்னோரன்ன சில சில்லறை விடயங்களைச் சிறிதுநேரம் பேசுகின்றனர்.

இடைநடுவே, சித்தாவின் காதில் படும்படியாக, மெதுவாகக் கனகேசு கேட்கிறாள் –

‘எங்கட பிள்ளையைப் போல, இந்தப் பிள்ளையும் கலியாணம் கட்டேல்லையே?’

தாயின் அப்பாவித்தனமான கேள்வியைத் திரா, ஒரு மெல்லிய சிரிப்புடன் தனது தோழிக்குத் தமிழில் கூறுகிறாள்.

‘அமெரிக்காவின் சில மாநிலங்களில் திருமணம் தொடர்பாக மிக இறுக்கமான சட்ட திட்டங்கள் உண்டு. கனடாவில் நிலைமை அப்படியல்ல’ என்று சிற்றம்பலத்தாரைப் பார்த்துக் கூறிய அந்தப் பெண் –

‘அதிலும், ஒன்ராறியோ மாகாணத்தில், ஒரே பாலினத் திருமணங்களுக்கு, ஏகபோக அங்கீகாரம் உண்டல்லவா!’ எனச் சொல்கிறாள்.

‘சரி…காலையிலை எழும்பி ஆறுதலாகக் கதைப்பமே, அப்பா…! எனக்குக் களைப்பாய் இருக்கிது…’ எனக் கூறியபடி, தன் தோழியின் கரம் பற்றி எழுப்புகிறாள், திரா.

அவளுடன் கூடவே எழுந்த அந்தப் பெண், மீண்டும் திராவின் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து –

‘இந்த இனிய தோழிக்காக, உங்களுக்கு நன்றி!’ எனக் கூறி –

திராவின் உதடுகளில் முத்தமிடுகிறாள்.

இருவரும் கை கோர்த்தபடி, பெற்றோருக்கு ‘க்குட் நைற்’ சொல்லிக்கொண்டு, தமக்கான அறையை நோக்கி நடக்கின்றனர்.

பாவம், கனகேசு எழுந்து சமயலறை மின்விளக்கை அணைக்கச் செல்கிறாள்.

வீடு முழுவதையும் இருள் விழுங்கிக்கொள்கிறது.

சித்தா, சிலையாக உறைந்துபோயிருக்கிறார்!

– 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *