கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 5,913 
 

மலர்ந்தும் மலராத காலைப் பொழுது 5.15 மணி அளவில் தன்னந்தனியே ஒரு ஆள் ஆஆஆஆ……வென்று ஒரு நாள் இரண்டு நாளில்லை. ஒருவார காலமாய்….ஓலம் விட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். நீங்கள் என்ன நினைப்பீர்களோ…. அதேதான் எனக்கும்.

எனக்கு வயது 63. மூன்றாண்டுகளுக்கு முன் அரசுப் பணியிலிருந்து ஓய்வு. நான் என்றைக்குப் பிறந்த கிராமத்தை விட்டு நகர்புறம் நோக்கி நகர்ந்தேனோ… கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக காலை 5.00 – 6.00 நடைப்பயிற்சி என்பது எனது உழைப்பு, உடற்பயிற்சியாகிப் போன விசயம்.

கிராமத்தில் அப்பா ஐந்து வேலி சொந்த நிலம் உள்ள மிராசு. எனக்கு விவசாயத்தில் விருப்பம் என்பதால்….விபரம் தெரிந்த நாள் முதலாக அப்பாவுடன் விளை நிலங்களுக்குச் சென்று வருவதோடு நிறுத்தாமல்….பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் வயல் வேலைகளில் ஆட்களுடன் சேர்ந்து வெட்டுவது,கொத்துவது என்று…. வேலை செய்வேன். காலை மாலை வயல்வெளிப் பயிர்களுக்கு தண்ணீர் இருக்கிறதா, களை இருக்கிறதா என்று நோட்டமிட்டு திரும்புவேன். இப்படி தினம் வயல்வெளிகளையேச் சுற்றி வருவதால்….உடற்பயிற்சி உடலுழைப்பு என்பதெல்லாம் அதிலேயே அடங்கிப் போய் விடுவதால்….அதற்கென்று நேரம் காலம் ஒதுக்குதல் என்பது அவசியமில்லாமல் போனது. கிராமத்தை விட்டு விலகி விவசாயமும் விட்டுப் போக…நடைப்பயிற்சியே எனக்கு உடற்பயிற்சி ஆகிப் போனது. இவ்வளவிற்கும் எனக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம், மார்பு கோளாறு, இதயக்கோளாறு…என்கிற எந்தவித பாதிப்பும் இல்லை.

உணவு விசயத்தில் நான் ரொம்ப ஒழுக்கமானவன். கிராமத்தில் எனக்கு சோறே எல்லாமாகிப் போனது போல் இன்றைக்கும் எனக்குக் காலையில் பழையது, மதியம் சுடு சோறு, இரவும் சோறு…. சோற்றைத் தவிர வேற எதுவும் தொடாதவன். சோறுதான் எனக்கு உணவு. அந்த உணவுதான் எனக்கு உயிர்.

விருந்தாளி, வேறு வேலைகளாக வெளியூர் சென்றால்தான் வேறு வழி இல்லாமல் இட்லி, தோசை எல்லாம். மற்றப்படி எனது உணவு விசயத்தில் கோடையிலும் குளிரிலும் அதில் மாற்றமென்பது கிடையாது.

மூன்று வேளையும் அரிசி சோறா ? கண்டிப்பாய் நீங்கள் சர்க்கரை நோய்க்கு ஆளாக்கப்பட்டிருப்பீர்கள் ! என்பதெல்லாம்…சுத்தப் பொய்.!!

எனது அப்பன், பாட்டன், முப்பாட்டன்….அவருக்கு முன்பு வாழ்ந்தவர்களெல்லாம் சோற்றைத் தவிர வேறு எதையும் கண்டறியாதவர்கள். சோறுதான் பிரதான உணவு. கம்பு, கேழ்வரகு… தினை என்பதெல்லாம்…உதிரி…. உணவுப் பொருட்கள். அவர்களுக்கு ஏது சர்க்கரை நோய், இதய நோய்.. பிற நோய்கள்.

என்றைக்கு காலை நீராகரம் போய் டீ, காப்பித் தண்ணி முளைத்து… இரவில் டிபன் என்கிற சிற்றுண்டியும் உள் நுழைந்ததோ…அன்றைக்கே நோய்களும் நொடிகளும் ஒவ்வொன்றாக மனித உடலில் வந்து உட்கார்ந்து கொண்டது என்பதுதான் உண்மை. இதில் மாற்றுக் கருத்து என்பது எனக்கு எள்ளளவு இல்லை. இதில் சர்வதேச வியாபார சந்தை சதிகளும் அடக்கம் என்பதும் உறுதி.

நான் தற்போது நிரந்தரவாசியாகிவிட்ட இடத்திலிருந்து வங்கக்கடல் மூன்று கிலோ மீட்டர் தூரம். இதில் போக அரை மணி நேரம். வர அரை மணி நேரம். என்பது எனது நடைப்பயிற்சி ஒரு மணி நேரம். அரைக் கிலோ மீட்டர் குடியிருப்புப் பகுதியைத் தாண்டி விட்டால்…கடற்கரைக்குக் கொஞ்சம் தூரம் வரை எல்லாம் வயல்கள்.

எல்லாம் ஆற்றுப் பாசனம். மேட்டூர் உபயம். அந்த தண்ணீர் பொய்த்துப் போன நிலையில் வடகிழக்குப் பருவமழையை நம்பி நெற்பயிர்கள். அது முடிந்து கண்டிப்பாக காலவாய்கள்.
கல் அறுப்பு, காலவாய் என்பது எல்லோரும் செய்யும் தொழில் இல்லை. கொஞ்சம் பணமுள்ள விருப்பப்பட்டவர்கள் செய்வது. அது அறுவடை முடிந்து காய்ந்து போன கோடை வயல்வெளிகளின் இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைப்பது. மற்றப்படி எல்லாம் பொட்டக்காடு.

எங்கள் ஊரிலிருந்து கடற்கரைக்கு மொத்தம் நான்கு சாலைகள். எல்லா சாலைகளும் சுமார் ஒவ்வொரு கிலோ மீட்;டர் இடைவெளி. இந்த இடைவெளிகளில்தான் வயல், வரப்பு, வாய்க்கால், குளங்கள். சுனாமிக்குப் பிறகுதான் இந்த நான்கு சாலைகளும் நன்றாக உயிர் பெற்று, உருவம் பெற்று தார் சாலைகளாக மாற்றம் பெற்றன. இந்த நேர் சாலைகளில் ஒன்றில்தான் எனக்குத் தினமும் காலை நடைப் பயிற்சிப் பழக்கம்.

நான் சென்;ற வாரத்தில் ஒருநாள்…… வழக்கம் போல் ஐந்து மணிக்கு எழுந்து நடந்தேன். பாதி தொலைவில்….ஐந்தேகால் மணி அளவில் விடிந்தும் விடியாத காலைப் பொழுதில்…ஆஆஆஆஆ….! என்று சத்தம் கேட்டது. அநாவசிய சத்தங்கள் இல்லாத காலை நேரமென்பதால்….சத்தம் நல்ல துல்லியமாக என் காதுகளில் வந்து விழுந்தது.
நன்றாக உற்றுக் கேட்டேன். அலறல் இல்லை. ஓலம். ! ஆண் குரல். விட்டு விட்டு வந்தது.

ஒலி வந்த திசையில் பார்வையைச் செலுத்தினேன். வயல் வெளிகளுக்கு நடுவே உள்ள ஒரு குளத்திலிருந்து அந்த ஒலி வந்தது. அந்த ஒலியை எழுப்பிய உருவம் எனக்கு அதன் முதுகைக் காட்டிக் கொண்டு நின்றது.

மீண்டும் மீண்டும் அந்த குரல் ஓலம் விட்டு விட்டு வந்தது. அந்தக் குளத்திற்கு அந்தப் பக்கத்தில் காலவாய் கல் அறுப்பு நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கல் அறுத்து மூடி இருந்தார்கள். நான்கு கொத்துகள்…. அதாவது நான்கு ஜோடிகள் களத்தில் கல் அறுவையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் முதல் நாளே மண்ணை ஊற வைத்து, பதமாக்கி… விடியல்காலை நான்கு மணிக்கு எழுந்து… மிதித்து சரியாக்கி ஐந்து மணி வாக்கில் கல் அச்சு வைத்து அறுக்க உட்கார்ந்தார்களென்றால்…. காலை 7.00 மணிக்கு சுள்ளென்று சூரியன் சுடுவதற்கு முன் எழுவார்கள். அதன் பிறகு அறுத்தக் கல் வெயிலில் காயும். இதனால்….அவர்கள் கல் அறுக்கும் இடத்திலேயே தற்காலிகக் கொட்டகைப் போட்டு குடும்பமாகத் தங்கி சமைத்து உண்டு தொழில் செய்வார்கள்.

அந்த ஆட்களில் ஒருவன்தான் இப்படி கத்துகிறானென்று நினைத்து நடந்தேன். திரும்பி வரும்போது அந்த குரல் இல்லை.

மறுநாளும் இதே நேரத்தில் அந்த குரல் கேட்டது.

இதுவும் விளையாட்டென்றுதான் எண்ணிப் போனேன்.

மூன்றாம் நாளும் இது கேட்கும்போதுதான் இது விளையாட்டில்லை. ஏதோ மனம் பிழன்றவன்…. வந்து செய்யும் வேலை தோன்றியது.

வீட்டிற்கு வந்து பையனிடம் சொன்னேன். அவன் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியன்.

” அப்படியெல்லாம் இருக்காதுப்பா. குரல் சாதகம் பண்ணறவனாய் இருப்பான் !” சொன்னான்.

எனக்கு அப்படியும் தோன்றியது. ஆனாலும்….

” குரல் சாதகம் பண்ணவனாய் இருந்தால்…. கழுத்தளவு தண்ணீரில் நின்று சாதகம் செய்வான். இவன் கரை மேல் நின்றல்லவா கத்துகிறான்.! ” சந்தேகத்தை எழுப்பினேன்.

”நீங்க போகும் நேரம்…தண்ணீரிலிருந்து எழுந்து வந்து கரையில் நின்று கத்துவான்ப்பா…” சொன்னான்.

” ஓ…அப்படி இருக்குமோ…!? ” எனக்குப் பட்டது.

ஆனாலும் இப்படி ஓலம் அதுவாக இருக்க முடியாதே ! தோன்றியது.

இதையும் அவனிடம் தெரிவித்தேன்.

” தெரியலைப்பா…! ” அவன் கழன்றான்.

” எதுவாய் இருந்தாலும் நாளைக்கு நேரடியாய்ப் பார்த்து வந்து சொல்றேன் !” சொன்னேன்.

” நீங்க ஒன்னும் பார்க்க வேணாம். பைத்தியமாய்க் கூட இருக்கலாம். கல்லெடுத்து அடிக்கப்போறான்…இல்லே….கடித்து குதறிடப் போறான். ! ” அப்பன் மேல் உள்ள அக்கரையில் அப்படிச் சொன்னான்.

இதைக் கேட்டதும் எனக்கும் உள்ளுக்குள் பயமும், உதறலும் சேர்ந்து வந்தது. இருந்தாலும்…..அவன் யார், ஏன், எப்படி இருப்பான்… ? என்கிற ஆவல் அதையும் தாண்டி எழுந்தது.

மறு நாளும் அதே சத்தம். தைரியமாக சாலையை விட்டு வயலில் இறங்கினேன். அவனை நோக்கி நடந்தேன். கிட்டே போகப் போக அவன் உருவம் தெரிந்தது. மாநிறமாக இருந்தான். மஞ்சள் நிற பனியன் போட்டிருந்தான். கீழே பனியன் பேண்ட் போட்டிருந்தான்.

திடீரென்று திரும்பி என்னைப் பார்த்தவன்….நான் வருவதைக் கண்டதும்….ஓலத்தை நிறுத்தி….எழுந்து நடந்தான். பதினெட்டு வயது பையன். முகம் அழகாக இருந்தது.

கொஞ்ச தூரம் நடந்து வரப்பில் சாய்த்து வைத்திருந்த எதையோ நிமிர்த்தினான். வரப்பு உயரமாக இருந்ததால் அவன் சாத்தி வைத்திருந்தது எதுவென்று தெரியவில்லை.

நிமிர்த்தியதும்தான் தெரிந்தது அது சிவப்பு நிற இரு சக்கர வாகனமென்பது.

வாகனத்தை நிமிர்த்தியவன் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அதை உயிர்ப்பித்து வயல் வெளிகளின் இடையே உள்ள சோடையில் விட்டான். அந்த வயல்வெளி சோடை காலவாய்க்காரர்கள் டிராக்டர் வாகனப் போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது. அவன் சாலையில் வண்டியை ஏற்றி நேரே கிழக்காக விட்டான்.

ஆக…. அவன் குப்பத்து பையன் உறுதியாகத் தெரிந்தது.

வண்டி ஓட்டும் அளவிற்கு இருக்கிறானென்றால்…. பையன் நன்றாக இருக்கிறான். ஆனால்;…. ஏன் இப்படி ஓலம். ஒரு வேளை குரல் சாதகம் செய்பவனோ… ?? சட்டைத் துணியெல்லாம் ஈரமாகத் தெரியவில்லையே…!

திரும்பி கல் அறுக்கும் இடம் சென்றேன். எல்லாம் முகமறியா ஆட்கள்.

” யார் தம்பி அது ? ” கல் அறுக்கும் ஒருவரின் எதிரில் நின்று கேட்டேன்.

” யார் ? ” அவர் கல் அறுவையை நிறுத்தித் திருப்பிக் கேட்டார்.

” தினம் ஒரு பையன் ஆஆஆஆ….!.ன்னு இந்த குளத்தில் வந்து கத்திட்டுப் போறானே அவன் ! ” என்றேன்.

”அவனா….?! கிழக்கே உள்ள பையன் வாய்ப் பேச முடியாதவன் சார்! ” என்றார் அவர்.

” வாய்ப் பேச முடியாதவரென்றால்…பிறவி செவிட்டு ஊமையா ? ”கேட்டேன்.

” இல்லே சார். இடையில் போனது. காது கேட்கும். ”

” இடையிலா..? எப்படி ? ”

” போன மாசம்….கிழக்கே…ஒரு குடிசை தீப்பிடிச்சு எரிஞ்சுது சார். இவன் அம்மா சமைக்கும்போது தீப்பிடிச்சிக்கிட்டு. இவன் கண்ணெதிர்லேயே… சிலிண்டர் வெடிச்சு குடிசையும் அந்த அம்மாவும் சிதறி சின்னா பின்னமாகிடுச்சு. அதை கண்ட இவனுக்கு அதிர்ச்சியில் பேச்சு நின்னு போச்சு. எங்கெங்கோ அவன் அப்பன்…வையித்தியம் பார்த்தான் சார். குரல் வராதுன்னு சொல்லிட்டாங்க. இருந்ததை இழந்தாச்சு இல்லியா ?! அதான் அந்தப் பையன் தினம் இங்கே வந்து மனசு விட்டு அழறான். ஓஓஓன்னு கத்தி குரலை வரழைக்கிறான். இல்லே…. குரல் போச்சேன்னு கதறுறான். அதுவும் இல்லே…. அம்மா போன துக்கத்தை நெனைச்சி துடிக்கிறான். பாவம் சார்.!! ” சொல்லி….அவர் கல் அறுவையைத் தொடங்கினார்.

எனக்கு மனசு ரொம்ப கனமாகிப் போக….ஏன் கேட்டோமென்று ஆனது. வுழியில் போன ஓணானை எடுத்து முதுகில் விட்டுக் கொண்டு விட்டோமே…! தோன்றியது.

மறு நாள் மறுநாள்…..அந்தப் பையனைக் காணவில்லை.

முகம் தெரியா மூன்றாம் மனிதனாகிய என் கண்ணில் பட்டதால்… வெட்கப்பட்டு வரவில்லைபோல.! – அப்படித்தான் நினைத்தேன்.

நான்காம் நாள்….

மாலை நான்கு மணி அளவில் நகரப்பக்கம் போய் நான் இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன்.

நடுவழியில் ஒரு லாரி நின்றது. அதைச் சுற்றி…..ஒரே கூட்டம்.

விபத்து ! புரிந்தது.

‘ யார்…? ‘ வண்டியை நிறுத்தி கூட்டத்தில் புகுந்தேன்.

லாரி முன் சக்கரத்தின் அடியில் இரு சக்கர வாகனத்துடன் தலை நசுங்கி…. கிடந்தவனைப் பார்த்த நான்…..

” ஆஆஆ…! ” அலறினேன்.

கூட்டத்தில் யாரோ ஒருவர், ” பாவம் சார் இந்த பையன். என்ன கஷ்டமோ. தானா விழுந்து உயிரை மாய்ச்சிக்கிட்டான் ! ” சொன்னார்.

ஏனக்கு இடிமேல் இடி. அதிர்ச்சி. கூட்டத்திலிருந்து கழன்று வந்து சாலை ஓரம் அமர்ந்தேன்.

இவன் சாவுக்குக் காரணம் …. ஆம்மா இறந்த துக்கமா, குரல் இழந்த பாதிப்பா ? ஆஆஆஆ… என்ற ஒலத்தைப் போல் இவன் சாவும் எனக்குள் விடைதெரியாத கேள்விகளாகவே என் எதிரில் நிற்க….

தற்கொலை என்பது எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது என்று தோன்றினாலும்…….இருந்து இவனால் என்ன செய்ய முடியும், எதைச் சாதிப்பான்! ? – மனம் நினைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *