அஸ்திவாரம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 10,174 
 

“இப்பெல்லாம் சோக்கு போக்குக்கு நெனைச்சபோது துணிமணிகள வாங்கிப்போட்டுக்கறாங்க. அம்பது வருசத்துக்கு முன்னால வகுத்துப்பசிக்கு குடிக்க கஞ்சி கூடக்கெடைக்காம ரொம்பம்மே நாங்கெல்லாம் சிரமப்பட்டமாக்கு. காலுக்கு போடறதுக்கு செருப்புங்கூட வாங்க காசில்லாம முள்ளுக்கல்லுல நடக்கற போது கால்ல முள் ஏறி சீப்புடுச்சு வாரக்கணக்குல நடக்க முடியாம சீரழிஞ்சிருக்கறம்னா பாத்துக்குவே.. அன்னைக்கெல்லாம் காயமான மருந்துப்பூடு பொறிச்சு நசுக்கி சாரப்புழிஞ்சு உட்டம்னா ரெண்டு நாள்ல காயமாறிப்போகும். இப்பவாட்ட தொட்டதுக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு ஆரு போனாங்க?” என தந்தை கூறிய பாமரத்தனமான பேச்சு தனக்குப்பிடிக்காததால் திரும்பி நின்றான் விவசாயி ரங்கையனின் மகன் ராசு.

தந்தையும் மகன் காது கொடுத்துக்கேட்கா விட்டாலும் தனது மனக்குமுறலை விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். 

“இப்ப என்னடான்னா நடக்காம கார்லயும், பைக்கிலியும் போறதுக்கே பத்து சோடி செருப்பு, பாக்கற துணியெல்லாம் வாங்கிப்போடறது, நாயிக்கு பொறந்த நாள் கொண்டாடறதுன்னு சம்பாறிக்கற காச இன்னைக்கு வேணும், நாளைக்கு வேணும்னு சேத்து வெக்காம கரைச்சுப்போடறாங்க. நாங்கெல்லாம் துணி கிழிஞ்சாலே தெச்சுப்போடுவோம், இப்ப பட்டனு ஒடைஞ்சாலே மாத்தி வெக்கிறது கெடையாது. செருப்பையும் தெச்சுப்போடறது கெடையாது. எங்க காலத்துல‌ கெராமத்துல ஆம்பளைக கோவணம் தாங்கட்டுவாங்க, விசேசத்துக்கு போகோணும்னா மட்டுலும் இடுப்புக்கு வேட்டி கட்டி, தோளுக்கு துண்டு போடுவாங்க. பொம்பளைங்க ஒரே சேலையை இடுப்புல சுத்திக்கட்டி முந்தானைய மேல போட்டு ஒடம்ப மறைச்சுக்குவாங்க. இப்பவும் நீங்கெல்லாம் அப்படி வாழோனும்னு நாஞ்சொல்லல. தேவையில்லாம கடன ஒடன வாங்கி ஆடம்பரமா எதுக்கு வாழோனு, கடைசில கடனுக்கு இருக்கற சொத்த ஏன் அழிக்கோணும்னுதாஞ்சொல்லறேன். நாஞ்சொல்லறது ஒனக்கு செகுடங்காதுல சங்கூதுன கதையாத்தான் இருக்குது” என தன் மகனிடம் இயலாமையின் வெளிப்பாடாகவும், கவலையுடனான கோபத்துடனும் பேசினார்.

“நீங்கெல்லாம் அப்பாவா?”

“ஏஞ்சாமி…?”

“என்னோட பர்த்டே கூட ஞாபகம் வெச்சுக்கத்தெரியல. ஒரு கிப்ட் கூட வாங்கித்தரலே. சும்மா எப்பப்பாத்தாலும், அதப்பண்ணாத, இதப்பண்ணாதன்னு சொல்லிட்டு. பேசாம செத்திரலாம்னு தோணுது”

“தப்பு, தப்புன்னு சொல்லு. இப்படியெல்லாம் அபசகுனமா பேசப்பிடாது. சோத்துக்கு வழியில்லாம நாங்க பெளைச்ச போதுங்கூட வாழ்ந்து போடோனும்னு வைராக்யமா இருந்து போட்டோம். இப்ப நாம கஷ்டப்பட்டாலும் பரவால்லேன்னு, நம்ம வயித்துல பொறந்த பையன் நல்லாருக்கோணும்னு காட்ட வாங்கி ஊட்டக்கட்டி, காசு பணத்த சேத்து வெச்சு போறதுக்கு வாரதுக்கு பைக்கும், காரும் வாங்கிக்கொடுத்து, சொகமா வாழ வேண்டிய காலத்துல இப்படிச்சொன்னா எப்புடி? நீயும் லட்சக்கணக்குல சம்பாதிக்கிறே? அப்புறமென்ன கஷ்டம்? ஆசைப்படறது எல்லாங்கெடச்ச பின்னால பேராசப்படறது கெடைக்குலீன்னு ஆராச்சும் கவலப்படுவாங்களா? ஊட்ல இருக்கறவங்கல சந்தோசமா வெச்சுக்கறத உட்டுப்போட்டு சங்கடப்படுத்துவாங்களா? நானே எழுதப்படிக்கத்தெரியாத தற்குறி. மழைக்குங்கூட பள்ளிக்கொடத்துப்பக்கம் ஒதுங்கினதில்ல. என்னப்போயி பொறந்தநாளத்தெரியலீன்னு சொன்னா எப்படி? நாம படிக்காட்டியும் நம்ம பையன அதுதான் உன்னைய படிக்க வெச்சுப்போடோனும்னு வெய்ய வேனல்ல பாடுபட்டு வெவசாயம் பண்ணி, ஆடு, மாடு மேச்சு ரெண்டு பணம் மிச்சம் பண்ணி உன்னைய வெளி தேசத்துக்கே அது தான் அமரிக்காவுக்கே அனுப்பி படிக்கவெச்சுப்போட்டனில்ல கண்ணு. உனக்கு செலவுக்கு காசு கொடுக்கோனுங்காட்டிக்கு ஒன்னங்கிழிஞ்ச துணியத்தா நானும், உன்ற அம்மாக்காரியும் தெச்சுப்போடறம்னா பாத்துக்கவே” கண்களில் கண்ணீர் பொங்க ஒரே மகன் ராசு என்கிற ராஜேந்திரனிடம் கெஞ்சுவது போல் பேசினார்.

ராசுவுக்கு உயர்ந்த நிலையில் வாழவேண்டும் என்கிற கற்பனையில் பேராசைப்படுமளவுக்கு நடைமுறையில் சாத்தியமா? என யோசிக்கத்தெரியாததாலும், உழைக்காமலேயே வசதியாக வாழவேண்டுமென்கிற ஆசையாலும், வசதி படைத்தவர்களோடு மட்டும் தனது வாழ்வை ஒப்பிட்டுப்பார்ப்பதாலும் கஷ்டப்படும் தந்தையின் நிலை புரியவில்லை. வசதியாக உள்ள நண்பர்களைப்பார்த்து தானும் அவர்களைப்போல் வாழ வேண்டும் என நினைக்கிறானே தவிர நண்பர்களின் தந்தைகள் படித்து பெரிய பதவி வகித்தவர்கள், தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள் என்பதையும், நம் தந்தை சாதாரண விவசாயி என்பதையும் சிறிதும் கூட யோசித்தும் பார்க்காமலேயே பெற்றோரை பிரச்சினை எதுவுமின்றி பிரச்சினை செய்து நிம்மதியிழக்கப்பேசிக்கொண்டிருந்தான்.

நகரத்தில் உள்ள ஒரு வெளிநாட்டுக்கம்பெனிக்கு தினமும் வீட்டிலிருந்து வேலைக்கு செல்பவன் அன்று வீடு திரும்பிய போது வீட்டில் பெற்றோரைக்காணவில்லை என்பதையறிந்து அதிர்ச்சியடைந்தான். பெற்றோருக்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் என தெரிந்த பின் பதறிப்போனான். இரண்டு நாட்கள் அலைந்து எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்ற போது ராசுவைக்கண்ட காவலரும் உறவினருமான முருகன் “வாப்பா ராசு. இப்ப புரியுதா பெத்தவங்க எவ்வளவு முக்கியம்னு? அம்மா ஊட்டப்பாத்துட்டு வேளாவேளைக்கு சமைச்சு,தொவைச்சு போட்டுருவாங்க. அப்பா உன்னையே நெனைச்சு அரைவயிறு கஞ்சி குடிச்சு காட்ல பாடு பட்டு, மாட்டக்கறந்து காச மிச்சம் பண்ணி வெச்சிடுவாரு. நீ பேருக்கேத்தாப்ல படிச்ச படிப்புக்கு வேலையப்பாத்துட்டு ராசாவாட்ட இருந்துட்டே. பெத்தவங்க நம்மளப்பத்தி நெனைச்சு வாழும்போது நாம அவங்களப்பத்தி நெனைக்க வேண்டாமா? நீ அவங்களப்பத்தி நெனைக்கோணும்னு தான் சொல்லாம போயிட்டாங்க” காவலர் சொல்லக்கேட்ட போது தலை கவிழ்ந்தான் ராசு.

“பெத்த பையனோட பேராசைனால எல்லாமே இருந்தும் நிம்மதியில்லைன்னு எங்கிட்டத்தான் வந்து அழுதாங்க. நாந்தான் காசிக்கு டூர் அனுப்பிச்சேன். அவங்க போன வாங்கி சுச்சாப்பண்ணிப்போட்டு வேற போனக்கொடுத்து அனுப்பி வெச்சேன். இன்னும் ரெண்டு நாள்ல வந்திடுவாங்க. தம்பி பெத்தவங்க தான் ஊட்டோட அஸ்திவாரம் மாதிரி. அஸ்திவாரத்துல போடற கல்லும், மண்ணும் கண்ணுக்குத்தெரியாது. ஆனா அது தான் நாம கட்டற உயரமான கட்டடத்த தாங்கிப்பிடிக்குது. உனக்கு பேராசை இருக்குதுன்னா நீ முயற்ச்சி பண்ணி சம்பாதிக்கப்பாரு. அத உட்டுப்போட்டு பணக்காரங்கலப்பார்த்து பொறாமைப்பட்டுட்டு அதில்ல, இதில்லைன்னு வயசானவங்க அவங்க கிட்டச்சொன்னா என்ன பண்ணுவாங்க?” காவலரின் அறிவுரையைக்கேட்டவன் வீடு திரும்பி பெற்றோர் வரும் வரை சமைக்க, கூட்ட, துவைக்க என தாயின் வேலைகளையும், மாடு பிடித்துக்கட்ட, பால் கறக்க, பயிர்களுக்கு தண்ணி கட்ட, வெயிலில் பாத்தி கட்ட, வயலில் களை எடுக்க என தந்தையின் வேலைகளையும் தனி ஒருவனாக செய்த போது தான் பெற்றோர் படும் சிரமங்களைத்தெரிந்து கொண்டான். அவர்கள் சம்பளம் வாங்காத விசுவாசமான வேலையாட்களைப்போன்றவர்கள் எனவும் புரிந்து கொண்டான்.

உயிர் வாழ அதிக வசதி முக்கியமில்லை. குடும்பத்தினர் ஒருவர் நலனை மற்றவர் காத்து வாழ்வது தான் வாழ்க்கை. குழந்தைப்பருவத்தில் பெற்றோர் நம்மைக்காப்பதும், வயதான காலத்தில் அவர்களை குழந்தைகளைப்போல் நினைத்து நாம் காப்பதும் தான் வாழ்வின் உண்மையான, உன்னதமான முறை என்பதை தற்போது புரிந்து கொண்டதால் மனம் மாறிய ராசு, பெற்றோர் வந்ததும் கண் கண்ட தெய்வங்களாக அவன் கண்களுக்குத்தெரிய, ஆனந்தக்கண்ணீர் சிந்தி அவர்களது கால்களைத்தொட்டு வணங்கியவன் அன்று முதல் அன்பாகப்பேசி, பண்பாக நடந்து கொண்டதைக்கண்டு பெற்றோரும் மகிழ்ந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *