கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 8,089 
 
 

எதிர்பாராதவிதமாக நந்தினியைப் பூங்காவில் தன்னந்தனியே பார்த்ததும் எனக்குள்ளிருந்த ஆசை துளிர்விட்டது.

இவள் என் பால்ய சினேகிதி. ஒரே ஊர். பக்கத்துப் பக்கத்துத் தெரு. நாங்கள் ஒரே பள்ளிக்கூடம். ஒரே வகுப்பில்தான் படித்தோம். சின்ன வயசிலேயே அவள் பேரழகி.

அப்போதிருந்தே எனக்கு அவள் மீது ஒரு கண். தொட்டுவிளையாட ஆசை. நான் முயற்சி செய்வதற்குள் இன்னொருத்தன் முந்திக்கொண்டு விட்டான்.

அவனும் எங்களோடு படித்தவன். கொஞ்சம் பணக்காரன். நல்ல வாட்டசாட்டம். நந்தினி மயங்கிவிட்டாள். அவன் மயக்கி விட்டான்.

அவர்கள் பெயர்கள் பள்ளிக்கூடச் சுவர் கழிவரையெல்லாம் நாறிவிட்டது. எனக்கும் ‘ ச்சீ. .! ‘ என்று ஆகிவிட்டது.

பதினொன்றாம் வகுப்பிற்குப் பிறகு எங்கள் பாதையில் மாற்றம். அவள் பெயில். நான் பாஸ். கல்லூரிப் பக்கம் தலை வைத்தேன். நந்தினி அதே ஆண்டு பரிட்சை எழுதி பாஸ். தட்டச்சுப் பயிலப் போனாள் . எத்தனையோ பேர்கள் சைட்டடிக்க. .. இவளும் வழிய. .. அங்கேயும் அவள் பெயர் பாழ்.

அடுத்து வேலைக்குப் போனாள். அங்கும் ஒழுங்கு இல்லை. இரு சக ஊழியர்கள், இவளுக்காகவே நாடு பிரதான சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டார்கள். இரண்டு மூன்று கருக்கலைப்புகள். உடல் நலிவு. முடிவில் ஒரு இளிச்சவாயனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டாள். அவனுக்கு ஏற்கனவே பெண்டாட்டி, பிள்ளைகள் உண்டு. அந்த வாழ்க்கையும் இவளுக்கு முழுமையாக இல்லை. இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரிவு. கடந்த ஓராண்டு காலமாக தனியே வாழ்கிறாள்.

இவ்வளவிற்குப் பிறகும் நந்தினி அழகு குறையவில்லை.!

எனக்குள் இருந்த உள்ளுணர்வும் மறையவில்லை.!!

” நந்தினி. .! ” அருகில் சென்றேன்.

” சிவா. .” அவள் அதிசயித்தாள்.

” எப்படி இருக்கே. .? ”

” நல்லா இருக்கேன் ”

” அலுவலக வேலையெல்லாம் எப்படி. .? ”

” நல்லா போய்க்கிட்டிருக்கு. ” என்றவள். .. ” ஒரு சந்தோசமான சமாச்சாரம் சிவா . ” என்றாள் மலர்ச்சியுடன்.

” என்ன. .? ”

” ரெண்டு மாசமா நானும் , என் வீட்டுக்காரரும் சேர்ந்து வாழறோம். அவராகவே வந்தார். ” சொன்னாள்.

எனக்கு அவள் ஒவ்வொரு அணு, அசைவும் அத்துப்படி.

” அப்படியா. .? ! ” என்று ஆச்சரியப்பட்டவனாக விழிகளை உயர்த்தினேன்.

” ஆமாம் ! ” என்றாள்.

” அப்புறம் நந்தினி. .? ” என் மனதிலிருப்பத்தைச் சொல்ல பிள்ளையார் சுழி போட்டேன்.

” சொல்லு. .சிவா. ”

அவள் கண்களிருந்து பார்வையை விலக்காமல். ..

” சொ. .. சொன்னா தப்பா எடுத்துக்கக்கூடாது. ……”

” இல்லே… ”

பெண்ணுக்குப் புகழ்ச்சி பிடிக்கும் என்பது பாலபாடம்.!

” நீ தங்க பஸ்ப்பம் சாப்பிடுறீயா. .? ”

” இல்லேயே ஏன். .?”

” என்றும் பதினாறாய் இருக்கே. .?! ”

” பொய் சொல்றே. ..! ” வாய் சொன்னாலும் முகம் வெட்கத்தில் சிவந்தது.

” நிசம் நந்தினி. படிக்கும்போது நானும் உன்மேல ஆசைப்பட்டேன் தெரியுமா. .? ”

” தெரியும் ! ” சொல்லி என்னை அதிர வைத்தாள்.

” எப்படி. .? ”

” ஆண்களோட பார்வை, பேச்சு பெண்களுக்குத் தெரியும், புரியும் !”

‘ அட. .! இதனால்தானா. ..ஆண்கள் திருட்டுத்தனமாக பெண்ணின் எந்த இடத்தைப் பார்த்தாலும் அந்த இடத்தைத் திருத்திக் கொள்கிறார்கள், மறைத்துக் கொள்கிறார்கள் ! ‘ எனக்குள் வியப்பு.

” இன்னைக்கும் உன்மேல உள்ள அந்த ஆசை எனக்கு குறையல. ”

நந்தினி பதில் பேசாமல் தலைகுனிந்தாள்.

” அதைத் தீர்த்து வைக்க முடியுமா. .? ”

” மு. .. முடியாது ! ”

” ஏன். .”

” வேணாம் ! ”

” என் மேல ஆசை இல்லியா. .? ”

” இருக்கு . ஆனா வேணாம் . ”

” புரியல . .?! ”

” தப்பு ! ”

‘ தப்பானவள் தப்பு சொல்கிறாள்!! எப்படி, ஏன். ..? ‘ எனக்குள் குழப்பம்.

” உனக்கும் எனக்கு நாப்பது வயசு. நாம இளமையா தெரிஞ்சாலும் காலம் ஓடிடுச்சு. நாம படிச்ச நாட்களெல்லாம் இனிப்பாய் இருக்கு. வாழ்க்கை. .?! .. நடப்பெல்லாம் கசப்பாய் இருக்கு. என்னுடைய சூழ்நிலை. என் அழகும் ஆசையும் என்னை ரொம்பவே கெடுத்துச்சு. நான் வேலையில இல்லேன்னா எப்பவோ செத்திருப்பேன். ”

” என்ன சம்பந்தா சம்பந்தமில்லாம பேசறே. .? ”

” வர்றேன். பழசையெல்லாம் ஒதுக்கிட்டேன், விலக்கிட்டேன். இனி நேர்மையா வாழனும்ன்னு நினைக்கும்போதுதான் மனசுக்குத் திருப்தியாய் இருக்கு. நாம ஒழுங்கா இருக்கணும், புருஷனுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்கிற நினைப்பே என்னை அவளோட சேர்த்து வைச்சிருக்கு. நல்ல எண்ணத்துக்கு எத்தனை வலிமை. !! எனக்கே ஆச்சரியமா இருக்கு. இனி சாகிற வரை தப்பே செய்யக் கூடாது என்கிற முடிவுக்கு வந்துட்டேன்.”

” சிவா. .. ! என் மேல உள்ள ஆசை அழிய உன் மனைவிகிட்ட என்னை மற. நீயும் யோக்கியமில்லே. அதோட மட்டுமில்லாம உன் பத்துப் பதினைந்து வருட தாம்பத்திய வாழ்க்கையில் இருட்டுல எல்லா பொம்பளைங்களும் ஒன்னு என்கிறதை புரிஞ்சிருப்பே. அனுபவங்களால் நானும் எல்லா ஆண்களும் ஒன்னு என்கிறதைத் தாமதமா புரிஞ்சிக்கிட்டேன். இப்போ சரியாகிட்டேன்.நீயும் நெறிப்படுத்திக்கோ. மனைவிக்குத் துரோகம் வேணாம் ! ” நிறுத்தினாள்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரகம் என்றாலும் நந்தினி கெட்டு திருந்திவிட்டாள் ! – எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

” நன்றி ! ” சொல்லி எழுந்தேன்.

பூங்காவிற்கு வெளியே எனக்காக காத்திருந்த அவள் இளிச்சவாய் புருஷனான என் நண்பனிடம்..

” உன் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வை சுந்தர். நந்தினி சுத்தமா திருந்திட்டாள். இனி தப்பே செய்ய மாட்டாள். நான், நீ சொன்னபடி அவளை சோதிச்சுட்டேன். ” என்று சொல்லி என் ஆசைக்கும் முற்றுப்புள்ளி வைத்தேன்.

சுந்தர் முகம் மலர்ந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *