அவள் தியாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,782 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மஹாத்மா காந்திஜி ஒரு வெறியனுடைய துப்பாக்கிக் குண் டுக்குப் பலியானார்” என்ற செய்தி….

சுற்றிலும் பத்து முரடர்கள் நின்று. பத்துச் சம்மட்டியினால் ஓங்கி அடித்தால் … அதைக்கூடத் தான் சகித்துக்கொள்ள முடியும். ஆனால் “மஹாத்மா சுடப்பட்டார்” என்ற செய்தி, வார்த்தைகளின் சக்தியிலே அடங்காத ஒரு வேதனையை என் உள்ளத்திலே சொரிந்தது.

என்னைச் சுற்றிலும் எல்லாம் மறைந்து விட்டன. காந்திஜி இல் லாத ஒரே இருண்ட உலகத்தைத்தான் நான் கண்டேன். அதிக வேதனையிலே தோன்றிய ஒரு மயக்கநிலை. அந்த நிலையிலே என் “கண்ம ணி யின் ஞாபகம் புரண்டது…..

அன்றைய தினம் கண்மணி என் வீட்டில் காலடி எடுத்து வைத் தாளோ, அன்றைய தினந்தான் என்னுடைய காந்திப்பித்தும் ஒரு நிரந்தரமான நிலையை அடைந்தது. அவருடைய தகப்பனாரோ காந்தீ யத்தில் மூழ்கியவர். “காந்தி – வேலுப்பிள்ளை ” என்று தான் அவரைச் சொல்வார்கள். அந்தப் பெருமகனுக்கு ஏற்ற சற்புத்திரியாகத்தான் கண்மணி பிறந்தாள்.

அவள் சத்தியத்தின் உருவம். அழகுக்கு அழகு செய்யும் நவீன நாகரீக ஆபரணங் களைக் கூட அவள் விரும்பவில்லை ; – அன்பே அவள் அணிகலன்.

தொட்டதற்கெல்லாம் முட்டைக் கண்ணீரையே ஆயுதமாக உபயோகிக்கும் பெண் குலத்துக்கு அவள்புறம்பானவள்; – அஹிம்சையே அவள் ஆயுதம்.

அவளுடைய இனிமையிலே நான் மயங்கிவிட்டேன். அவளுடைய அன்புக் கயிற்றிலே நான் கட்டுண்டு விட்டேன். அவளுடைய அன்புக் கயிற்றிலே நான் கட்டுண்டுவிட்டேன். அவள் தன்னுடையை லக்ஷியங்களுக்காகத் தன் கணவனை – என்னை – என்றும் மீறி நடந்ததில்லை. நான் அவளுக்கு அத்தகைய சந்தர்ப்பத்தை அளிக்கவும் இல்லை.

இவ்விதம் நாங்கள் கருத்தொருமித்த காதல் வாழ்க்கை நடத்தி வருகையிலேதான், நம் வாழ்விலே ஒரு சூறவாளி தோன்றிற்று. – இந்தச் சூறாவளி தோன்றுவதற்குக் காரண மானவரும் மகாத்மா காந்தியேதான்!

ஒரு நாள் இரவு நான் என்னுடைய அறையில் இருந்து ஏதோ ஒரு காதற் கதையைப் படித்துக் கொண்டிருந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கடைக்கண்ணால் என் கண் மணி வருவதைக் கவனித்துக் கொண்டேன். அவள் வந்து தன் மெல்லிய விரல்களால் என் கண்களைப் பொத்துவாள்; நான்…” என்ற எண்ணத்தோடு திரும்பிப் பாராமல் புத்தகத்தில் கவனமாயிருப்பவன் போலிருந்தேன்.

நான் ஏமாற்றம் அடைந்தேன். அவள் என் கண்களைப் பொத்தவில்லை. அதற்குப் பதில் என் கண்களை நன்றாகத் திறந்து பார்க்கும்படி செய்தாள். ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து என் முன்பு வைத்தாள். அதிலே சில வரிகளின் கீழ் பென்சிலால் அடையாளமிடப் பட்டிருந்தது.

“ஒரு மனிதன் ஒரு ஸ்திரீ மீதும், ஒரு ஸ்திரீ ஒரு மனிதன் மீதும் அன்பு செலுத்துவார் களாகில், எவ்வாறு அன்பு செலுத்த முடியும்?… ஒரு புருஷன் தன் மனைவியைச் சகோதரி யாகவும், ஒரு மனைவி தன் புருஷனைச் சகோதரனாகவும் பாவிக்கத்தொடங்கி விட்டால், உலகத்துக்குச் சேவை செய்ய அவர்கள் தகுந்தவராகி விடுகின்றனர்”.

இதை எழுதிய ஆசிரியருக்கு முட்டாள் பட்டம் சூட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு, எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். திடுக்கிட்டேன். நாக்கின் நுனிவரை வந்துவிட்ட என் வசைச் சொற்களைத் திருப்பி உள்ளே அனுப்பிவிட்டேன்.

எழுதியவரின் பெயர் “மகாத்மா காந்தி” என்றிருந்தது!

நான் போக எண்ணிய பாடை அடைபட்டவுடனே, சட்டென்று வேறு பாதையைக் கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறினேன்.

அவள் சொன்னாள்: “உங்கள் மனத்திலே உறுதியிருந்தால்….”

“இல்லாமலென்ன. மஹாத்மா காந்தியே சொல்லியிருக்கும் போது!…… நீ தயார்தானே?”

“இல்லாமல் உங்களைக் கேட்பேனா?” – அவள் முகத்தில் தோன்றிய பொலிவு……… “நல்லது; இன்று முதல் நீ என் சகோதரி!”

“தளரமாட்டீர்களே?”

“என்னுடைய வார்த்தையில் நம்பிக்கையில்லையா? மஹாத்மாவின் உபதேசதத்தை மீறுவேனா?”

அவள் மகிழ்ச்சி! ஆயிரமாயிரம் வருடங்கள் தவங்கிடந்தவனுக்குத் தெய்வம் வரமருளும் போது கூட இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ!

வெகு லேசாக என் வாயைத் திறந்து வரமளித்துவிட்டேன். ஆனால் என் நெஞ்சிலே ஒரு சூன்ய உணர்ச்சி படர்ந்தது.

படாடோப வாழ்வு நடத்தும் ஒருவன், தன்னுடைய கௌரவமான நண்பனுக்கு முன் னால் ஒரு நல்ல விஷயத்திற்கு ஆயிரம் ரூபா நன்கொடை தருவதாக வாக்களிக்கிறான். ஆனால், அந்த ஆயிரம் ரூபாவுக்காக அவன் என்னென்ன கஷ்டங்கள் பட நேருகிறதோ? மனைவியின் பிரிய நகைகளைத்தான் விற்க நேரிடுகிறதோ?

நானும் இதே நிலையில்தான் வரமளித்துவிட்டேன். கண்மணிக்கு முன்னால், என்னு டைய போலித்தனத்தைக் காட்டக் கூடாதென்று எண்ணிவிட்டேன். ஆனால்… என்ன மடத் தனம்! ஆவளுடைய “பெண்மை ”யின் இனிமைக்காகத்தானே அவளைத் திருப்திசெய்ய விரும்புகிறேன்? அந்தப் பெண்மையே எனக்கு உதவாமற் போகும்போது…? கூந்தல் தைலம் வாங்குவதற்குப் பணமில்லையே என்பதற்காக எந்தப் பெண்ணாவது தன்னுடைய கூந்தலையே வெட்டி விற்றதுண்டா? ஆனால் நான்…

சாரமற்ற இரு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் என்னுடைய நண்பரொருவருடன் சினிமாவுக்காகப் புறப்பட்டேன். இரண்டாவது காட்சிக்குத்தான். இப்படியாவது என் உள்ளத்

தின் சூன்யத்தை அகற்றிவிடலாமா என்ற நினைவு.

அது ஒரு ஆங்கிலப் படம் – காதற் கதை. அந்த நடிகன் என்ன பாக்கியம் செய்தானோ? அவனுடைய தொழிலே… ஒரு அழகிய பெண்ணை மார்புறத் தழுவி அவள் அதரங்களில் முத்தமிடுந்தொழில்…

நான் குளிக்கப் போனேன்; ஆனால் சேற்றைத்தான் பூசிக் கொண்டு, தியேட்டரிலிருந்து வெளி வந்தேன்.

நெஞ்சிலே வேட்கைக்கனல் எரிய வீட்டை அடைந்தேன். “பரவாயில்லை; தோல் வியை ஒப்புக்கொண்டு விடுவோம் – அவளை ஒரு மாதிரிச் சமாதானம் செய்துவிடலாம்” என்ற நினைவோடு அவளின் அறையருகே வந்தேன். கதவு உள்ளே பூட்டியிருந்தது!

“தட்டலாமா?”….

ஒரு நமிஷம் நின்றேன். மனம் துணியவில்லை ; மெதுவாகத் திரும்பினேன். “யாரது? – அவள் குரல்! அவளுக்குத் தூக்கம் வரவில்லைப் போலும்! “நான்தான்; கதவைத்திற!

“ஏன்? ஏதாவது… திறக்க வேண்டுமென்றால்…” அவள் குரலில் ஏதோ ஒரு நடுக்கம். திறந்தாள். விளக்கைத் தூண்டி விட்டாள்.

“ஏன்?… இந்த நேரத்தில்…”

ஒரு நிமிஷம் சொல்லிவிடலாமா என்ற நினைவு, ஆனால், வாயிலே வந்தவை வேறு வார்த்தைகள்தான்.

“ஏதோ கெட்ட கனவு கண்டேன், உனக்கு ஏதோ ஆபத்து வந்ததாக! மனம் கேட்கவில்லை; பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தேன்”

அவள் சிரித்தாள். என் வார்த்தையின் போலித் தன்மையைக் கண்டு கொண்டாளோ? “இதுதானா? நான் பத்திரமாயிருக்கிறேன். போய்ப் படுத்துக்கொள்ளுங்கள்!”

அதற்கு மேல் நான் அங்கே நிற்கவில்லை. திரும்பி என் அறையில் வந்து படுத்துக் கொண்டேன்.

ஒரு வாரத்துக்குள் இத்தகைய பல சம்பவங்கள்! – என் உள்ளத்திலே வெறியின் வேகம் தாங்க முடியாமல் வளர்ந்தது…

எட்டாவது நாள் ஏதோ சாதாரண காய்ச்சல் கண்மணியைப் பிடித்தது. சாதாரணமான நோயேயானாலும் வைத்தியரை அழைத்து வந்து மருந்து கொடுப்பித்தேன். இரண்டு நாட்கள் கழிந்தன. ஒருநாள் மாலையில் அவள் என்னை அவசரமாக அழைத்தாள். அவள் முகமெல் லாம் ஏதோ வித்தியாசமாகத் தோன்றிற்று. தன் பக்கத்தே அமரச் சொன்னாள்: அமர்ந்தேன்.

“என்னை மன்னியுங்கள், நான் இன்னும் அதிக நேரம் உயிரோடு இருக்க மாட்டேன்…

“சீ! என்ன வார்த்தை….”

“வீண் வார்த்தையல்ல; நான் விஷம் குடித்து விட்டேன்…. அமைதியாக இருங்கள். தீர ஆலோசித்த பிறகுதான் இக்காரியத்தைச் செய்தேன்… காந்திஜி கூறியபடி நீங்கள் பிரமச்சரிய வாழ்வு நடத்துவதற்கு நான் இடையூறாக இருந்தேன். கட்டாயத்தின் பேரில் உடலுறவை மாத்திரம் நீக்கி வைக்கமுடிந்தது. ஆனால், உண்மையான பிரமச்சரியம் ஐம்புலன்களாலும் அனுஷ்டிக்கப்பட வேண்டுமல்லவா?… எனக்கு வருத்தம் தோன்றியதுமே தான் இந்த நினைவு வந்தது: “நான் இறந்து போய்விட்டால் உங்கள் வாழ்வு பரிசுத்தமடையும். ஆனால் இந்த வருத்தம் என் உயிரையே மாய்க்கக்கூடிய – அவ்வளவு கொடியதல்லவே? ஆகவே தான் இக்குறுக்குவழியில் இறங்கினேன். வீண் பழி ஏதும் வராமலிருப்பதற்காக அரசாங்கத் தாருக்கு ஒரு கடிதம் எழுதி என் தலையணையின் கீழே வைத்திருக்கிறேன்…என்னுடைய இந்தச் செய்கையை மகாத்மா காந்தியே ஏற்றுக்கொள்வாரோ என்னவோ?-ஆனாலும் எனக்கு இப்படிச் செய்வதிலே பூரண மனத்திருப்தி இருக்கிறது – உங்களிடம் பூரண நம்பிக் கையும் இருக்கிறது. இனி, உங்கள் வாழ்வும் பரிசுத்தமடையும். – என்னை மன்னியுங்கள்…”

நான் சிலையாக விறைத்து விட்டேன்…சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் தெய்வமாகி விட்டாள்!

அவள் இந்த அரும்பெரும் உயிர்த்தியாகத்தை எதற்காகச் செய்தாள்? மஹாத்மா காந்திஜியின் கொள்கைகளுக்காகவா? அல்லது எனக்காகவா…?

நல்லவேளை! அவள் போய் விட்டாள். அல்லது இந்த 30.01.48ந் தேதிச் சம்பவத்தின் கொடுமையைத் தாங்கவேமாட்டாள்!

– மறுமலர்ச்சி 1948, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *