அவன் அப்படித்தான்…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 5,488 
 

அது ஒரு காலைப்பொழுது ! பெயர் தெரியாத பறவைகள் எல்லாம் பெயர் வைக்கப்படாத ராகங்களை பாடி மகிழ்ந்து திரிந்தன. இரண்டு புறமும் பச்சைப்பசேல் நிலங்களாய் கடந்ததைப் பார்த்தபோது அந்த கிராமத்தில் இன்னமும் நீர் மிச்சமிருப்பதையும் நீர் திருடும் கம்பெனிகளின் கழுகு கண்களில் அந்த கிராமம் இன்னமும் படவில்லை என்பதும் புரிந்தது. குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும், சில கான்க்ரீட் மாடிவீடுகளுமாக மிஞ்சிப்போனால் இருநூறு அல்லது முன்னூறு வீடுகள் அந்த கிராமத்தில் இருக்கலாம். தூரத்தில் ஒரு சர்ச், சர்ச்லிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கல்லறைத்தோட்டம் என்று அந்த ஊர் மிக கச்சிதமாக அழகாக இருந்தது.

ஐந்தரை அடிக்கு சற்று குறைவான உயரங்கொண்ட அவன் கனத்த மனதோடு இறுகிய முகத்தோடு வரிசையாக இருந்த கல்லறைகளை ஒன்றன் பின் ஒன்றாக கடக்கிறான். காலைத்தென்றல் அவனை, அவனது இறுகியமுகத்தை, சுருண்ட கேசத்தை அவன் அனுமதி இல்லாமலே வருடிக்கொண்டிருந்தது. மாநிறமாய் இருந்த அவனின் மனதெல்லாம் ஆறாக்காயங்கள். காயங்கள் ஆற விரும்பினாலும் அவன் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளை கிளறி கிளறி ஆறாமல் பார்த்துக்கொண்டான். அந்த குறிப்பிட்ட கல்லறையின் முன் கால்கள் தானாக நின்றது.

மைனாவதி, தோற்ற்றம், மறைவு என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்த கல்லறை ஒரு இருபது ஆண்டுகள் வயதுடையது. எழுத்துக்கள் மற்றும் கல்லறையின் மேற்பகுதிகள் சமீப காலமாக லேசாக சிதிலமடைய ஆரம்பித்திருக்கின்றன. சுற்றிலும் மண்டிக்கிடந்த சருகுகள், குப்பைகளை சுத்தம் செய்தவன், தான் கொண்டு வந்திருந்த ரோஜா மாலையை அந்த கல்லறையின் மீது வைத்தவன், முன் காலில் மண்டி இட்டு கண்மூடி இருந்தான். உதடுகள் முணுமுணுத்தன, அதன் தொடர்ச்சியாக கண்ணில் இருந்து தாரை தரவிறக்கம் ஆகிக்கொண்டிருந்தது. கன்னத்தை முத்தமிட்டு உப்புச்சுவை உதட்டை உபசரித்து மின்னல் வேகத்தில் உயிரற்று போனது.

தரையில் சம்மணம் போட்டு அமர்கிறான், கண் முன்னால் நடந்த கொடுமையை தடுக்க முடியாத, தட்டிக்கேட்க முடியாத கையாலாகாதவனாகி விட்டேனே என்று தனக்குள் குமுறுகிறான். இவை எல்லாம் கடந்த பல ஆண்டுகளாய் நடக்கும் நிகழ்ச்சிகள் தாம் என்றாலும் இன்று அவன் மனதில் சோகம் அதிகம் இருந்தது. நினைவு தினத்தன்று மட்டும் எத்துணை ஆறுதல் சொல்லாலும் மனம் தேறுவதேயில்லை.

கண்ணை மூடிக்கொள்கிறான், , மனம் ஓரிடத்தில் நிற்கவில்லை. எங்கெங்கோ சுற்றி அலைகிறது. அடங்க மறுக்கிறது. கொஞ்ச நேரத்தில் மைனாவதி சிரித்தமுகத்தோடு அவனுள் வருகிறாள். அகண்ட நெற்றி, திரண்டு முன்னால் கண்ணருகில் அடிக்கடி உலவும் கற்றைக்கூந்தல். உதட்டுச் சிரிப்பில் தெரியும் சிறிய பற்கள்,அதன் இடைவெளி அதுக்கூறும் தேனான சொற்கள் என்று எல்லாம் அப்படியே அவனுக்குள் வந்து உயிர்பெறுகின்றன. பெரிய கண்களோடு அவனைப் பார்க்கிறாள், அப்படியே அவனை வாரி அணைத்துக் கொள்கிறாள். உச்சிமுகர்கிறாள் இச்சி இச்சி என்று கன்னத்தில் உதடுகளை பதிக்கிறாள். அவனுள் மீண்டும் அழுகை பீறிடுகிறது, தாரை மீண்டும் கன்னத்தை கழுவுகிறது. திடீரென்று’அம்மா’என்று உதடு உச்சரிக்கிறது. உள்ளம் ஓலமிடுகிறது.

எவ்வளவோ முயன்றும் அவனால் பழைய நினைவுகளுக்குள் போகாமல் இருக்கமுடியவில்லை. நாழிகைகள் கரைகின்றன, அன்று நடந்த அநியாயங்கள் கண் முன்னே விரிகின்றன.

‘மைனா … மைனா … காசு குடுறி… கை கால்லாம் நடுங்குது …’நிற்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டே கேட்டான் ராயப்பன்.

‘என்கிட்டே ஏதுங்க காசு … இருந்ததை எல்லாம் காலையிலே எடுத்துட்டுப் போய்க் குடிச்சாச்சு. இப்ப வந்து மறுபடியும் கேட்டா நா எங்க போறது பணத்துக்கு.’

‘ஏங்கோவத்தை கெளப்பாதடி… என்னால முடில. எனக்கு கெட்ட கோவம் வர்றதுக்குள்ள பணம் குடுத்துடு., ஆமாம் சொல்லிப்புட்டேன்’

‘ஒரு வேலை வெட்டிக்கும் போறதில்ல. புள்ளைங்க பசியும் பட்டினியுமா இருக்கேன்னும் ஒரு பொறுப்புள்ள அப்பனா நடந்துக்குனுமுன்னு நெனைக்கிறதில்ல. பொண்டாட்டி கஷ்டப்பட்டு வேலைக்குப்போய் சம்பாரிச்சுக்கிட்டு வந்தா அதையும் அடிச்சி புடுங்கறது … என்ன மனுஷங்க நீங்க ?’

‘ரொம்ப பேசாத..காசாக்குடு … எனக்கு பைத்தியம் புடிச்சமாறி இருக்கு. ஒடம்பெல்லாம் நடுங்குது. சீக்கிரம் குடுறி’.

‘இப்பலாம் ரொம்ப குடிக்கிறீங்க, இது நல்லதுக்கில்ல, போயி படுங்க பேசாம. என்ன மனுஷன் நீங்க ? நம்ம சின்ன புள்ளக்கி மூணு வயசாச்சி இன்னும் பேசல, டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போவணும்னு சொல்றேன், அதல்லாம் கொஞ்சமாவது காதுல ஏறுதா ? எப்ப பாத்தாலும் சதா சர்வகாலமும் குடி.. குடி.. அப்டி என்ன தா இருக்கோ அந்த சாராயத்துல…’

‘வந்தன்னா இன்னக்கி ஒன்ன கொன்னு போட்றுவேன்.அதிகம் பேசமா என்ன டென்சனாக்காம பணத்தக்குடு’

‘டெய்லி குடிச்சுப்புட்டு வர்ரது, வாயில வறதல்லாம் பேசறது, வாந்தி எடுக்கறது, சின்ன புள்ளைங்க இருக்காங்களேன்னு இல்லாம கண்டவன் கூட என்ன சேத்துப் பேசறது, என்னையும் புள்ளைங்களையும் அடிக்கிறது, வீட்டுல இருக்கற சாமா செட்ட எடுத்துட்டு போயி வித்துட்டு திரும்பவும் குடிக்கறது அப்பறமா திரும்பவும் வந்து அடிக்கிறது … இது என்ன வாழ்க்கையோ ? நீங்கலாம் என்ன ஜென்மமோ ?’நாளைக்கு எனக்கும் ஒரு பாட்டில் வாங்கிட்டு வாங்க … நானும் குடிக்கிறேன் … எனக்கு மட்டும் என்ன வந்திருக்கு, குடிச்சுட்டு நானும் விழுந்து கெடக்கேன்.’ஒங்கள மாதிரியே நானும் பொறுப்பில்லாம இருந்தா நம்ப புள்ளைங்களோட கதி என்னா ஆவுறது?’

‘என்னடி ரொம்ப பேசற … என்றபடி தள்ளாடி வந்த ராயப்பனுக்கு கோவம் தலைக்கேறி இருந்தது. கண்கள் குங்கும சிவப்பாய் இருந்தது. என்னடி பணமும் குடுக்கல … பதிலுக்கு பதில் வாயடிக்கிற … என்ன நெனச்சுக்கிட்டு இருக்க மனசுல நீ … ஓங்கி அறைந்துவிட்டான்’

பொறி கலங்கிப் போய் நின்ற மைனா சத்தம் போட்டாள். ‘ இந்த பாருங்க ஒழுங்கா போய்டுங்க … கை நீட்ற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க. எனக்கும் கோவம் வரும், அப்பறம் நான் சும்மா இருக்கமாட்டேன், சொல்லிட்டேன்…’

அதுவரை சும்மா இருந்த அவனின் அப்பத்தா அப்போதுதான் வாய்திறந்தாள்.’டேய் ராயப்பா.. ஏன்டா வம்பு பண்ற… அவளை ஏன்டா அடிக்கிற ?’என்று சொல்லிக்கொண்டிருக்கையில்,

அவனின் அம்மாவின் கணவன் என்றழைக்கப்படும் ராயப்பன் என்ற அந்த மிருகம் மைனாவை ஆத்திரத்தோடு கிழேத் தள்ளிவிடவும் அவனின்அப்பத்தா ஓடி வரவும் அவன் அழவும் சரியாக இருந்தது. சுவற்றில் தலை மோதி சுருண்டு விழுந்தாள் மைனா. இந்த களேபரத்தில் தூங்கிக்கொண்டிருந்த அவனின் வாய்பேசமுடியாத மூன்று வயது தம்பியும் அழுதுகொண்டே எழுந்து வந்துவிட்டான்.

‘மைனா… மைனா … அம்மாடி மைனா …’அப்பத்தா அழைத்துப்பார்த்தாள். தண்ணீரை முகத்தில் அடித்துப் பார்த்தாள். ஆனால் மைனாவிடம் எந்த அசைவுமில்லை. மீண்டும் கண்திறக்கவும் இல்லை. ராயப்பன் அங்கேயே தள்ளாடி விழுந்து கிடந்தான். அப்பத்தாவும் அவனும் மட்டும் அழுது கொண்டிருந்தனர். சுமார் ஒரு மணிநேரம் கழித்து, ராயப்பன் போதை தெளிந்து எழுந்தான்.

‘டேய் பாவி பயலே … இப்படி பண்ணிபுட்டியே…. மைனா செத்துபுட்டா டா …. இப்ப என்ன பண்றது ?’அப்பத்தா அழுதுகொண்டே கேட்க குடிகார ராயப்பன் கிட்ட வந்து மைனாவின் கையைத்தொட்டு பார்த்துவிட்டு லேசாக அதிர்ந்து போனான். அவளின் உடல் சில்லிட்டிருந்தது.

‘டேய் பாவி … தப்பு பண்ணிபுட்டியே குடிகார பாவி. நீ பண்ணுன பாவத்துல இந்த மவராசி போய்ட்டா … இந்த புள்ளைங்கள காப்பாத்தியாவணும். நீ பாட்டுக்கு செயிலுக்குப் போய்ட்டியேண்ணா இந்த புள்ளைங்க ரெண்டும் அனாதையாப் போயிடும். அதனால நா சொல்றபடி செய். அவள தூக்கி அந்த பேன்ல கழுத்துல கவுத்த மாட்டி தொங்கவுடு. தற்கொல பண்ணிகிட்டான்னு சொல்லிடுவோம்.’அழுதுகொண்டே ஐடியா சொன்னாள் அப்பத்தா. ராயப்பன் ஏதோ யோசித்தபடி மைனாவை தூக்கில் தொங்கவிட்டான். அப்பத்தா வைத்த ஒப்பாரியில் சற்று நேரத்தில் ஊர் மக்கள் கூடிவிட்டார்கள். அப்பத்தா அழுது புரண்டு பாதி உண்மையாகவும் பாதி நடித்துக் கொண்டுமிருந்தாள்.

‘என்னாச்சு ராயப்பா…’கேட்டபடியே உள்ளே வந்தார் ஊர் பெரிய பண்ணாடி.

‘நா என்னான்னு சொல்லுவேன் … முந்தாநேத்து ராத்திரி இவளை சாமியார் தோப்பு பக்கத்தில ஒருத்தன் கூட பாத்தேன். என்னடி இதல்லாம் னு கேட்டேன் அதுக்காக பாவி இப்பிடி பண்ணிக்கிட்டா..’

அந்த புதுபொய்யை கேட்டு அப்பத்தா அதிர்ந்து போனாலும் அமைதியாகவே இருந்தாள். அவள் அப்படி இருந்ததிற்கு மகன் பாசமோ அல்லது பேரப்பிள்ளைகளின் எதிர்காலமோ காரணமாக இருந்திருக்கலாம். அஞ்சாறு வயது சிறுவனாக இருந்த அவனுக்கு ராயப்பன் என்றழைக்கப்படும் அந்த மனிதர் பண்ணாடியிடம் சொன்னதன் அர்த்தம் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்தது.

‘நா அப்பவே நெனச்சேன்டி … இப்புடி ஏதாவது நடக்குமுன்னு. அவ கலருக்கும், அழவுக்கும் இந்த கருவாப்பயல புடிக்கல போல …. அதான் இன்னொருத்தன தேடி இருக்கா’ஒரு கிழவி சொல்ல..

‘ஆமாண்டி டிப்பு டாப்பா அவ சீவி சிங்காரிச்சுக்கிட்டு போவா … இவன் குடுச்சிட்டு கிடப்பான் … அதான் தனக்கு புடிச்சவனா தேடிகிட்டாப்போல. சொதந்திரமா ஊர் சுத்திட்டு மாட்டிகிட்டதும் வேற வழியில்லாம கயித்துல தொங்கிட்டாப் போல …’இன்னொரு கிழவி தன் பங்கிற்கு பழி போட்டாள்.

ஏதும் பேசிவிடுவானோ என்ற பதற்றத்தில் அவனை கையைப் பிடித்துத் தோட்டத்துப் பக்கம் இழுத்துக்கொண்டு போன அப்பத்தா “இதோ பார் ராசா … சூச…ஏன் செல்லம் … ஏன் கண்ணு … யார்கிட்டயும் எதுவும் சொல்லிராத டா கண்ணு … ஒங்கப்பன் ஒரு குடிகாரன், அவனை விட்டா நமக்கு வேற வழி இல்ல. உங்கள காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலடா … ராயப்பன் என்னென்னமோ சொல்றான். அவன் சொன்னது ஒனக்கு புரியுதா, புரியலையான்னு எனக்கு தெரியல. அதல்லாம் ஒன்னும் மனசுல வச்சுக்காதடா எங் கண்ணு. நீ ஏதாவது பேசுனா அப்பறம் போலீசு வரும், ஓன் அப்பன புடிச்சிகிட்டு போய்டும். எங்கண்ணு இல்ல … யார்கிட்டயும் ஒன்னும் சொல்லாதடா..’

அன்று ஊமையானவன் தான் இன்று வரை அந்த குடும்பத்துடன் சம்பந்தப்பட்டவர்களிடம் அவன் பேசியதே இல்லை. அவனின் அம்மா மைனாவதியின் இறப்பிற்கு பின் அப்பத்தா எத்தனையோ முறை முயன்றும் அவன் அவளிடம் பேசவே இல்லை. ராயப்பனின் முகத்தைக்கூட அவன் பார்ப்பதில்லை. அவனின் இந்த செயல் அவர்கள் இருவருக்கும் சற்று பதற்றத்தைக் கொடுத்தாலும் வெளியில் காட்டிக்கொண்டதில்லை.

மைனாவதி இறந்து நான்கு மாதங்களுக்குள் அவனின் தம்பி, அந்த ஊமை பையனும் இறந்து போனான். அப்பத்தா நல்ல படியாக கவனித்துக்கொண்டாலும் ஊமை பையனுக்கு அம்மா ஞாபகம் மறக்கவே இல்லை, எப்போதும் மா … மா … என்று கேட்டுக்கொண்டே இருப்பான். அந்த நினைவிலேயே அவன் போய் சேர்ந்துவிட்டான். அவன் இறந்த அன்று கூட ராயப்பன் குடித்துவிட்டு நிதானமில்லாமல்தான் கிடந்தான்.

கொஞ்சகாலம் அப்படியும் இப்படியுமாக கழிந்தது. அவன் யாருடனும் சகஜமாக பேசுவதில்லை, சிரித்து விளையாடுவது இல்லை. எப்போதும் இறுகிய முகத்துடனேயே தான் இருந்தான். அந்த சிறுவனின் மௌனம் மிகவும் கனத்ததாக இருந்தது. அப்பத்தா நெறைய தடவை அவனிடம் பேசமுயற்சி செய்திருக்கிறாள், அழுது பார்த்திருக்கிறாள், கெஞ்சிப் பார்த்திருக்கிறாள். ஆனால் அவனிடம் எதுவும் எடுபடவில்லை. அவன் மௌனம் அப்படியே இருந்தது அப்பத்தாவுக்கு மிகவும் கவலை அளித்தது.

விவரம் தெரியாத வயதிலும் சரி விவரம் தெரிந்த பின்னும் சரி, அவன் பொதுவாகவே அப்பாவை வெறுத்தான், ராயப்பன் குடிகாரன் என்பது மட்டும் அதற்கு கரணம் அல்ல, அவன் எதிர்பார்க்கிற ஏதோ ஒரு முக்கியமான ஒன்று ராயப்பனிடம் இல்லை என்பது தான் முதன்மை காரணமாக இருந்தது, மைனாவதி இறக்கும் வரை. அவளது இறப்பு, அதில் அவர்கள் சொன்ன பொய்கள் எல்லாமாய் சேர்ந்து அப்பத்தாவையும் அப்பா என்றழைக்கப்பட்ட அந்த ராயப்பனையும் அவனிடம் இருந்து வெகு தூரத்தில் நிறுத்தி இருந்தது.

அப்பத்தா ஒருநாள் அவனை ஒரு கிறிஸ்டியன் மிசன் ஆசிரமத்தில் சேர்த்துவிட்டாள். தன் மகன் குடிகாரன் பொறுப்பற்றவன் என்றும், தனக்கு வயதாகிவிட்டது, இன்னும் எத்தனை நாட்கள் தான் உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை என்றும் காரணம் சொன்னாள். பாதர் தான் அதற்கு உதவி செய்தார். இப்படித்தான் அவன் அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

அந்த ஆசிரமத்தில் சேர்ந்து ஆறேழு மாதங்களிருக்கும், ஒரு நாள் அப்பத்தா இறந்து போனதாய் செய்தி வந்தது. பாதர் வந்து அவனை கூட்டிக்கொண்டு போனார். கடைசிவரை தான் அப்பத்தாவுடன் பேசவேயில்லையே என்ற வருத்தம் அவனுக்கு இருக்கவில்லை. அப்பத்தா உடம்பை பார்த்தவன் எந்தவித உணர்ச்சியும் இன்றி அப்படியே நின்றிருந்தான். தந்தை என்றழைக்கப்பட்ட ராயப்பனை, அவன் முகத்தை பார்க்கவேயில்லை. நல்லவேளை அன்று ராயப்பன் நிதானத்தில் இருந்தான். சடங்குகள் முடிந்தவுடன் பாதர் மீண்டும் அவனை ஆசிரமத்தில் கொண்டுபோய் விட்டார்.

வெகுநேரம் ஆகியிருந்தது, மெதுவாக நிகழ்காலத்திற்கு வந்த அவன் மீண்டும் ஒருமுறை மைனாவதியின் கல்லறையை வணங்கிவிட்டு மெதுவாக எழுந்தான். இப்போது கொஞ்சம் மனம் தெளிவடைந்திருந்தது. மெல்ல சர்ச்சை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பது சர்ச்சில் இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் தான் நினைவுக்கு வந்தது. ரொம்ப வருஷங்களாக வெளியூரில் இருந்ததால் அவன் அந்த ஊருக்கு முற்றிலும் அந்நியப்பட்டுப்போயிருந்தான் என்பது வருவோர் போவோர் அவனை அடையாளம் காணாததில் இருந்தே புரிந்தது.

பிரேயர் முடிந்து எல்லோரும் களைந்து செல்லும் வரை பொறுமையாய் காத்திருந்த அவன் மெதுவாக உள்ளே சென்று பாதரை பார்த்தான்.

‘என்னப்பா சூச சௌக்கியமா ?’என்று கேட்டார் பாதர்.

‘இருக்கேன் பாதர், எல்லாம் நீங்கப்போட்ட பிச்ச பாதர்’

‘ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்ல. காட் பிளஸ் யு மை சைல்டு’.

‘என்கிட்டே ஏதோ பேசணுமுன்னு போன்ல சொன்னீங்க … அதான் பாத்துட்டு போவலாமுன்னு வந்தன்’.

‘அம்மாவுக்கு இன்னைக்கி நெனைவு நாளுள்ள… கல்லறைக்கிப் போனியா…’

‘எங்கம்மா இறந்த நாள இந்த ஒலகத்துல நினைவுல வச்சிருக்க ரெண்டு பேரு நீங்களும் நானும் மட்டுந்தான்’…

‘ஒங்க அம்மா ரொம்ப நல்லவ, பாவம் ! அவங்கள கர்த்தரு ரொம்ப சீக்கிரமாவே கூட்டிக்கிட்டாரு’.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், ஒங்கப்பா ராயப்பனுக்கு கொஞ்ச நாளா ஒடம்பு சரியில்ல. ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்கமாட்டார். போன வாரம் போய்ப்பாத்துட்டு வந்தன். கடைசியா ஒன்ன பாக்கணும்னு பிரியப்படுறார். ஒரு எட்டு போய் பாத்துட்டுப் போய்டேன்…’

அவன் ஏதும் பேசவில்லை, பேசவும் விரும்பவில்லை என்பதுபோல் அவனது உடல்மொழி இருந்தது. அப்பா என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாத மனிதரை அப்பா என்கிறாரே பாதர் … மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

‘கோபதாபகங்கள வுட்டுட்டு போய் பாரு..என்ன..’

‘பாதர் ஒங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல… என்னால அவரை எல்லாம் ஒரு மனுஷனாவே ஏத்துக்க முடியல. எந்த பொறுப்புமில்லாத தன் பொண்டாட்டியையே கொன்ன, வேசின்னு சொன்ன ஒரு மனுஷன என்னால ஏத்துக்கவும் முடியல, மன்னிக்கவும் முடியல. என்னப்பத்தி நேத்துவரைக்கும் கவலைப்படாத ஒரு ஜென்மத்த நா பாத்து என்ன ஆவப்போவுது பாதர்.’

‘இல்ல.. இல்லல்ல… நீ போய் பாக்கணும். சாவ போறவங்கள்ட்ட என்ன வெறுப்பு, விரோதம் வேண்டிகெடக்கு. எதையும் மனசுல வசிக்காத.. போய் பாத்துட்டு ஊருக்குப் போ. ஏதாவது ஒன்னுன்னு செய்தி வந்தா கடைசி காரியம் பண்ண கண்டிப்பா வந்து சேரு.. என்ன புரிஞ்சுதா..’

அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு நடக்க தொடங்கியவன் நேராக பஸ்ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தான். ஒரு முடிவு எடுத்தவனாய் வில்லியனுர் பஸ்ஸில் ஏறாமல் வேலூர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். அவன் முடிவெடுத்த்துவிட்டான் தான் வில்லியனுரில் இருந்தால் திரும்பவும் பாதர் வந்து கூப்பிடுவார், ஒரே ரத்தம், உன் அப்பன் என்றெல்லாம் சொல்லி கட்டாயப்படுத்துவார். மீண்டும் ஒருமுறை தனக்கு விருப்பமில்லாத காரியத்தை செய்ய அவன் தயாராய் இல்லை. பஸ் புறப்பட்டது, இப்போது அவன் முகம் லேசாக தளர்ந்திருந்தது…

Print Friendly, PDF & Email

2 thoughts on “அவன் அப்படித்தான்…

  1. அவனின் என்ற வார்த்தை `அவனுடைய’ என்றிருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *