அவனும் அவளும்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,421 
 
 

“என்ன சொல்றீங்க வெங்கி? கல்யாணத்துக்கப்புறம் உங்க அக்கா நம்ம கூடதான் இருப்பாங்களா?” கப்பசீனோவை சுவைத்தபடி கேட்டாள் பப்பி.

“ஆமாம் பப்பி, அவளுக்கும் இந்த வயசுல வேற போக்கிடம் கிடையாது, நானும் கைவிட்டுட்டா பாவம், எங்கே போவா?”

“இதெல்லாம் சுத்த நான்சென்ஸ், காலத்துக்கும் அவங்க உங்ககூடவே உட்கார்ந்து தின்னு அழிக்கப்போறாங்களா?”

“அப்படிச் சொல்லாதே பப்பி, அவளுக்குப் பாவம் குழந்தைகங்க கிடையாது, புருஷனும் போயிட்டான் இனி நாமதானே ஆதரவு?”

“எக்ஸ்க்யூஸ் மீ, ‘நாம’ன்னு உங்க வம்பில என்னையும் சேர்க்காதீங்க. நமக்குக் கல்யாணம் ஆகறவரைக்கும் எல்லாம் உங்க இஷ்டம், அதுக்கப்புறம் நோ வே”

“ஏன் பப்பி இப்படிப் பிடிவாதம் பிடிக்கறே?” கெஞ்சலாகக் கேட்டான் வெங்கி.

“பின்னே? உங்களைக் கல்யாணம் பண்ணிகிட்டா மாமியார், மாமனார் தொல்லை இருக்காது, வீட்ல சண்டை இல்லாம நிம்மதியாப் பொழுதை ஓட்டலாம்ன்னு பார்த்தா, திடீர்ன்னு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறீங்களே ? நான் இதுக்கு நிச்சயமா ஒத்துக்கமாட்டேன்.”

“…”

“என்ன சத்தத்தையே காணோம்? அப்படி அவங்களை எங்கே விடறதுன்னு தெரியலைனா ஊர்ல எவ்வளவோ ஹோம் இருக்கு, எங்கேயாவது கொண்டு போய்ச் சேர்த்துக்கோங்க. ஆனா என் ஹோம்ல அவங்களுக்கு இடம் கிடையாது, சொல்லிட்டேன்!”

“ஹூம் .. விசாரிச்சுப் பார்க்கறேன்”, “ஆமா, உங்க அம்மாகிட்டே நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கிட்டியா?”

“உங்களைதான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்னு விஷயத்தைமட்டும் சொன்னேன். அவங்க சம்மதத்தை யாரு கேட்டா? அவங்க பழைய பஞ்சாங்கம், இந்தக் காதல், கத்தரிக்காய்ல்லாம் பிடிக்காது”

“சரி அப்போ உன் சைடும் பிரச்சனை கிடையாது, அடுத்து நம்ம கல்யாணம்தான்” உற்சாகமானான் வெங்கி.

“ஆனா, அதுக்குமுன்னாடி நான் சொன்னபடி உங்க அக்காவை …”

“ஓகே.. ஓகே..”

“இப்போ ஓகே ஓகேன்னு சொல்லிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் மாத்திப் பேசக்கூடாது.”

“உன்கிட்ட பொய் சொல்லுவேனாடா பப்பிமா..”

“இந்தக் கொஞ்சலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.. சரி வாங்க லேட் ஆகுது கிளம்பலாம்.”

“மகராணி உத்தரவு”

சென்ற வருடம் தங்கள் துணைகளை இழந்த 63 வயது வெங்கட்டும் 61 வயது பத்மினியும் ஹோட்டலை விட்டு வெளியேறினார்கள்.

– கணேஷ் சந்திரா [ganesh@tamiloviam.com] (செப்டெம்பர் 2009)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *