அழையா விருந்தாளிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 6,787 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அனுஜா 

வயது பதினெட்டு. சரியாகச் சொன்னால் பதினெட்டு வயதும் எட்டு மாதங்களும். அப்போ பதின்மூன்று வயது இருக்கும்.

வெட்டி முறிக்கும் சில நினைவுகள்.

தெரு முனையில் ஏதோ சத்தம் கேட்கும். அவிழ்த்துவிட்ட மாடுகளின் குளம்பு ஒலிகள் போல. துயில் கலையும் விடியல். விடிந்தும் விடியாததுமான புலரிப் பொழுதின் துலக்கம். தீப்பந்தாக சூரியன்.

இனி என்ன? பள்ளிக்கூடம் விடுதலை என்றால் விளையாட்டுத் தான். ஒளித்துப் பிடித்து விளையாடுவோம். ஆத்துப் பரக்க நிலத்திலே கால்கள் புழுதிபடிய, பட்டும் படாதவாறு பாய்ந்து கொண்டு, செருப்பும் இல்லாமல். கௌசல்யா, பத்மநாதன், பிரதீபன், முரளிதரன். சிலவேளைகளில் பிரதீபனின் தம்பி தங்கையும் வருவார்கள். கௌசல்யா, பத்மநாதனின் சொந்தத் தங்கைச்சி. இவர்களில் முரளியின் வீட்டைத் தவிர எல்லாருடைய வீடுகளும் ஒரே ஒழுங்கைக்குள் இருந்தன. ஒரு வீட்டிற்குள் புகுந்தால் மற்ற வீடுகளுக்கும் போகலாம்.

எங்கள் ஒழுங்கை தொடங்கு மிடத்தில் ஒரு வாசிகசாலை. ஒழுங்கையுடன் வழி நெடுகிலும் சரசமாடிக் கொண்டே வரும் நீரோடும் வாய்க்கால். இந்த வாய்க்கால் அப்படியே அங்குமிங்குமாய் ஓடிப்போய் பிரதானவீதிக்கு அருகாகப் போகும் ‘வழுக்கை ஆற்றுடன்’ முடிவடையும். குண்டும் குழியுமான பிரதான வீதியில் எப்போதாவது பஸ் ஓடும். எப்பொழுதும் குதித்துக் குதித்து ஓடுவதால் அதுவும் ‘காதல் வாகனம் தான். பின்னால் ஒழுங்கை முடியு முடியு மிடத்தில் புகையிரதம் போகும் தண்டவாளம். புகையிரதத்தின் சத்தம் கேட்டு கன நாட்கள். வாசிகசாலைக்கு பக்கத்தில் மாடமாளிகை போல மதில் சுற்றிய ஒரு வீடு. அந்த வீட்டில், எண்பத்தி மூண்டுக் கலவரத்தோடை கொழும்பிலை யிருந்து வந்த ஒரு குடும்பம். ஊரோடு ஒட்டாமல் தனியாக இருப்பவர்கள் அவர்கள் மட்டும்தான். நாங்கள் தெருவால்
போது எங்களையொத்த வயதுடைய பெண்ணொருத்தி மதிலுக்குள்ளால் எட்டிப் பார்ப்பாள். சிரிக்கமாட்டாள். சிடுமூஞ்சி போலும். ‘ங்கா ங்கா’ என்று அவளது அம்மா போடும் சத்தம் சிலவேளை கேட்கும்.

படுத்திருந்த பாயைச் சுருட்டி ஒருபுறம் ஒதுக்கிவிட்டு கண்களைக் கசக்கிக் கொள்வேன். குழந்தைப் பருவம், தாழ்ப்பாள்கள் இல்லாத சாம்ராச்சியம். எல்லோருக்கும் இனிமையானது தான்.

மழைக்காலம். ஓடை நிறையத் தண்ணீர் வரும். கப்பல் விளையாட்டு. மணலிற்குள் பாதங்களைப் புதைத்து ஒருவர் காலை ஒருவர் சுரண்டுவோம். மணல் வீடு கட்டுவோம். ‘எவடம்? எவடம்?’ ‘புளியடி! புளியடி!’. அப்புறம் நண்டூருது நரியூருது, சடுகுடு விளையாட்டு, கண்ணாமூச்சி விளையாட்டு.

விளையாட்டு. ஒரே விளையாட்டு.

வானத்தின் முகட்டிலிருந்து அதலபாதாளத்திற்கு சூரியன் கிடுகிடுவென்று போகும். வெளியே பால் நிலவு வானத்தை ஆட்டிப் படைக்கும். விளையாட்டு. ஒரே விளையாட்டு. ‘ஹைட் அண்ட் ஸீக்’

இப்போ பிரதீபனின் ‘ரேண்’. நான் வீட்டின் ஒருகோடியில் நிற்க, மறுகோடிக்கு பிரதீபன் வர சடுகுடு ஓடி குடல் தெறிக்க ஓட்டம். வீட்டுக்குள்ளே ஒல்லாந்தர் காலத்து வாங்கு ஒட்டகம் மாதிரி நெடுத்திருக்கும். அதுக்குக் கீழே எழும்பியும் நிற்கலாம். அவ்வளவு உயரம். கீழே புசுபுசுவென்று புகுந்து கொள்ள, உள்ளே நாதன் அண்ணை. பத்மநாதனை, நாதன் அண்ணை எண்டுதான் கூப்பிடுவன். நான் ஏழாம்வகுப்பு, நாதன் அண்ணை பத்து.

மூச்சுவிடாமல், சத்தமில்லாமல், பதுங்கிக் கொண்டு இருவருமாக நெடுநேரம் ஒருவருக்கும் தெரியாமல்.

பிரதீபனால் இன்னமும் எங்களைப் பிடிக்க முடிய வில்லை. வாங்கிற்கு மேலே இரண்டு உருவங்கள் வந்தமர்ந்தன. கால்கள் நிலத்திலே முட்டாமல் ஊஞ்சலாடின. முதலாவது உருவம்,

“உன்ர நாதனுக்கு என்ரை பெட்டை அனுஜா நலல பொருத்தம் என்ன? பாத்தியே! உங்கை முன்னுக்கு ஓடிப்பிடிச்சு விளையாடினம்”.

“ஓ! எனக்கும் ஆசைதான். உங்கட வீட்டிலை சம்பந்தம் வைச்சுக் கொள்ள வேணுமெண்டு. அனுஜா அவனு கெண்டுதானே பிறந்தவள்” இது மற்ற உருவம்.

அந்தக் கணத்தில் அம்மா சொன்னது எனக்கொன்றும் பெரிசாகப் படவில்லை. ஆனாலும் ஏதோ சூட்சுமமான வசனங்கள் தான்.

நாதன் அண்ணை – அவன்தான் முதன் முதலில் என்னை அப்பிடிப் பார்த்தான். எனக்கு அவன் அப்படிப் பார்த்தது ஏதோ செய்தது. முதன் முதலாக என் மனக்கிடங்கில் ஏதோ ஒன்று ஊறியது. கூசித் தலை குனிந்தேன். கீழே அவன் கால்களிற்குள் ஏதோ சரசரத்தது. கூச்சம் கால்களைக் குடைய, உடல் ஒருமுறை சிலிர்த்து நடுங்கியது. நா வறண்டது. நிசப்தம். பழைய கிழிந்த கடதாசித் துண்டொன்று அவன் காலிற்குள் நெருடி மீண்டும் படபடத்தது.

நாதனின் மூச்சு இரைந்து, வெப்பித்த சுவாசம் என் தலை மேல் முட்டியது. நிமிர! நீண்ட சுருள் சுருளான கேசம், பிறை போன்ற இமைகள். வியர்வைகள் துளிர்த்திருக்கும் நெற்றி, ‘பிம்பிள்ஸ்’ இல்லாத மினுமினுக்கும் முகம். சிலரை ஏனோ தெரியவில்லை, முதற் பார்வையிலேயே பிடித்து விடுகின்றது. அவனை விழுங்கிக் கொண்டேன். கண்களை இறுக மூடி தவம் கிடக்கும் பாவனையில். நெடுநேரம் அவனும் என்னைப் பார்த்தபடி இருந்தான்.

திடீரெனத் திகைத்து, ஒருவர் பின் ஒருவராக வளைக் குள்ளிருந்து எலிகள் அவசரமாய் வெளியேறுவது போல எந்தவொரு அசுமாத்தமும் இல்லாமல் வெளியேறினோம். அந்த நிகழ்வின் பின்பு, நாதன் என்னை ஒளிந்து ஒளித்துப் பார்க்கத் தொடங்கினான்.

‘ஏ.எல்.எக்ஸாம்’ வருகின்ற படியால் பிரதீபன், நாதன், கங்கா எல்லாரும் மும்மரமாகப் படிக்கத் தொடங்கினார்கள். ரியூசனுக்கும் போனார்கள். நாதனுக்கு எக்ஸாம் ‘றிசல்ட்’ அவ்வளவு நன்றாக அமையவில்லை. மாடமாளிகையில் இருக்கும் கங்காவிற்கும் பிரதீபனுக்கும் நல்ல ‘றிசல்ட்’ நாதன் இரண்டாம் முறை பரீட்சை எடுப்பதற்காக கிளிநொச்சி போகப் போவதாகப் பேச்சு. கிளிநொச்சியில் குறைந்த புள்ளிகளுடன் பல்கலைக்கழகத்துக்குப் போகலாம்.

“அம்மா, ஆரோ வருகினம்” என்று சொல்லிக் கொண்டே ஓடி ஒளிந்து கொண்டேன்.

“ஆரோவாம் ஆரோ! நாதன்தான்” என்று ஜன்னல் சீலையை விலக்கி அம்மா சொன்னா.

“கவனமாகப் படி. கெட்ட பழக்கங்கள் பழகாதை. எங்களை மறந்து போகாமல் லீவுக்கு வரேக்கை எப்போதையும் போல் வா”

“சரி மாமி”

போகும்போது எல்லாரிற்கும் பயணம் சொன்னான் நாதன். எனக்கு மட்டும் இல்லை. சும்மா ஒருக்காப் பார்த்து விட்டுப் போனான். அந்தச் ‘சும்மா’ என்ற குண்டுச் சட்டிக்குள் என் மனக் குதிரை அலைந்தது. சிந்தனைச் சிலந்தி வலையைப் பின்னியது. அவனுக்கு என்னைப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, எனக்கு இப்ப அவனைப் பிடித்திருக்கின்றது. பதின்மூன்று என்ற அந்த ‘உதவாக்கரை’ எண்ணில் இருந்து முளைக்கும் ‘டீன் ஏஜ்’ நினைவுகள். ஊமை நினைவுகள்.

நாதன் கிளிநொச்சிக்குப் போய் விட்டான்.பிரதீபனும் கங்காவும் கொழும்புப் பல்கலைக் கழகத்தில். இப்பொழுதெல்லாம் விளையாட்டுக் குறைந்து விட்டது. விளையாட ஆக்கள் இருந்தால் தானே!

நீ-ண்-ட-தொரு இடைவெளி. அந்த இடைவெளிக்குள் எங்களுக்குள் ஒன்றும் நடக்கவில்லை. நாட்டினில் நிறைய மாற்றங்கள். இந்திய விமானங்கள் உணவுப் பொட்டலங்களை வடபகுதியில் போட்டன. எண்பத்தி ஏழு யூலை மாதத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கு மிடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று வந்தது. இந்திய அமைதிப்படை நாடெங்கும் நிலை கொண்டிருந்தது.

“என்ன! எந்த நேரம் பாத்தாலும் கனவு கண்டு கொண்டு இருக்கிறாய். நான் கேட்டதுக்கு என்ன முடிவு எடுத்திருக்கிறாய்?” அம்மா ஆக்ரோஷமாக என முதுகை பிடித்து உலுப்பினாள்.சிறகொடிந்த பறவையாக என் நினைவுகள் வெட்டி முறிக்கப்பட்டன.

நான் என்ன செய்வேன்? நாதன் நீ எங்கே?

கங்கா 

என்னோடை ஏதோ கதைக்க வேணுமாம். பிரதீபன் சொல்லி விட்டிருந்தான். அவன் இப்பொழுது கொழும்பில் வேலை செய்கின்றான். இப்ப லீவுக்கு வந்து நிற்கின்றான். அப்பிடி என்ன கதை என்னுடன் கதைப்பதற்கு? நேரில் கதைப்பதற்கு தைரிய மில்லாதவர்களுடன் என்ன ன்ன கதை!

“எடி பிள்ளை இண்டைக்கு வேலைக்குப் போக வில்லையோ?” இது அம்மா.

“இருக்கு அம்மா போக வேணும். பலாலிக் காம்பிலை இலங்கை இராணுவத்தின்ர காவலில் இருந்த விடுதலைப் புலிகள் பத்துப் பேர் மட்டிலை சைனைட் சாப்பிட்டு தற்கொலை செய்திட்டினமாம். ஏதாவது பிரச்சினையள் வருமோ தெரியேல்ல. அதுதான் யோசிக்கிறன்.”

“நான் ஒருக்காப் போய் கௌசல்யா வீட்டிலை விசாரிச்சுக் கொண்டு வாறன்” என்றபடி அம்மா புறப்பட்டாள். இப்ப அம்மாவும் அப்பாவும் முன்பு போல இல்லாமல் எல்லாருடனும் பழகத் தொடங்கி விட்டார்கள். கொழும்பு நாகரீகத்தை ஒரு பக்கமாக மூட்டை கட்டிவிட்டார்கள்.

எமது ஒழுங்கையும் சந்திக்கு மிடத்தில் கடந்த மூன்று மாதங்களிற்கு முன்பதாக புதிதாக முளைத்திருந்தது ஒரு ஆமிக்காம்ப் அதாலை இப்ப எதுக்கெடுத்தாலும் சுத்தித்தான் போக வேணும், வடக்குப் புறமாகப் புறப்படும் சைக்கிள், வித்தை காட்டி மேற்குப் புறமாக நெடுந்தூரம் செல்லும். பின் பாலத்தை நடுங்கிக் கடந்து, திரும்பவும் வடக்குப் புறமாக, அந்தக் கட்டடம் புழுதிப் புகையுடன் கூரையை முகம் காட்டும். எப்ப பார்த்தாலும் சிம்னிக்குள்ளால்’ புக்குப் புக்கு என்று புகை தள்ளும். கட்டடத்தைச் சுற்றி பன்றிகள் நாலைந்து முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, அங்குமிங்குமாக எதையோ தேடி உலாவும். இந்தப் பன்றிகளுக்கு என்ன சோகமோ எப்ப பாத்தாலும் முகத்தைத் தொங்கப் போட்டபடி?

‘என்னுடன் ஏதோ கதைக்க வேண்டுமாம்! பல்கலைக் கழகத்தில் படிக்கு மட்டும் என்னுடன் ஒரு பேச்சில்லை. இப்ப கதைக்க வேண்டுமாம். சுற்றிச் சுற்றி எங்கை போனாலும் பின்னாலே வருகின்றான். பன்றியள் போல முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு ‘உம்மாண்டி’ மாதிரி. அவனைப் பார்த்துக் கொண்டிருக்கப் பிடிக்கிறது தான். ஆனால் ‘டாவடிக்கும் எண்ணம் ஒன்றும் கிடையாது. கட்டாயம் காய்’ வெட்டி விடவேண்டும்.

சொல்லி மூன்று நாட்களாகிவிட்டன. இன்னும் கதைக்க வில்லை. இந்த ஆண்களே இப்படித் தான். சொல்வது ஒன்று. செய்வது இன்னொன்று. எப்படியாம் பெண்களுக்குத் துணிவு வரும். ஒரு வேலை கொழும்புப் பெண்களுக்குத் தைரியம் அதிகமோ? நித்தமும் காண்கின்றோம். சந்திக்கின்றோம். கதைக்கப்பட வேண்டிய கதைகள் தவம் கிடைக்கின்றன.

நான் முதன் முதலாக இந்த ஊருக்கு வந்த போது எல்லாரும் நாகரீகம் இல்லாதவர்கள் போலத்தான் தெரிந்தார்கள். அவர்கள் காட்டும் அன்பும் பண்பும் என்னை வியப்பில் ஆழ்த்தின.

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரத்தான் செய்கிறது. இந்த அம்மியும் இப்போது கொஞ்சம் நகர்ந்து தான் விட்டது.

முதலில் அவனாக வந்து என்னை ஏதாவது கேட்க வேண்டும். நான் ‘உம்’ கொட்ட வேண்டும். ‘இன்ரறெஸ்ற்’ இல்லாத மாதிரி நடிக்க வேண்டும். நாலைந்து நாள் கழித்து திரும்பவும் கதைக்க வருவான். இப்படியே இழுத்தடிக்க ஓர் ஆசை. இப்படித் தான் வாழ்க்கையிலை ஒவ்வொருத்தரும் இரகசியமாக இருப்பார்களோ?

இப்படி அவனும் கதைக்காமல், நானும் கதைக்காமல் இருந்தால் யார் மௌனத்தைக் கலைப்பது?

வீதிகள் பனிப் புகாரினுள். தெரு சற்றே வெறிச்சோடியது போல். இரண்டு போர் வீரர்கள் சைக்கிளில் சவாரி செய்து, புகையிரதப் பாதைக்குப் பக்கமாகப் போகும் குறுகலான பாதையில் விரைந்தார்கள். தொழிற்சாலையின் இரண்டாவது ‘கேற்’றினால் தான் நான் போக வேண்டும். அங்கே என்ன திரள் திரளாக சனக் கூட்டம்? ‘கேற்’றை மூடியபடி தெருவுக்குக் குறுக்காக கூட்டம் கூட்டமாக வேலை செய்பவர்கள்.

உள்ளே சென்று எட்டிப் பார்த்தேன். வெள்ளைத் துணியினால் போர்த்த படி இரண்டு உருவங்கள் அசைவற்றுக் கிடந்தன. பொட்டாக தலையிலிருந்து வழிந்து உறைந்து போயிருந்தது இரத்தம். ஒருவர் இருவராக அதைத் திறந்து பார்ப்பதும், பின் வியப்புடன் மூடுவதுமாக இருந்தார்கள். மெதுவாக சென்று நானும் திறந்து பார்த்தேன். நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து தொழிற்சாலைக்கு வந்திருந்த தொழிற்சாலை மனேஜரினதும் மற்றும் ஓர் உயர் அதிகாரி யினுமுடைய சடலங்கள் அவை.

கரையாக வந்து ஒதுங்கி நின்றேன். உடம்பு இலேசாக நடுங்கியது: பலாலி இராணுவ முகாமில் இறந்தவர்களைப் பற்றி எல்லாரும் குசுகுசுத்தபடி இருந்தார்கள் ‘பத்துப் பேர்கள்! பத்துப் பேர்கள்!!’ என்று ஒருவன் ஆவேசமாக முழங்கினான்.

என் கைகளை யாரோ பிடித்து இழுப்பது போன்றிருந்தது. திரும்பிப் பார்த்தேன். பிரதீபன்?

பத்மநாதன் 

எனக்குப் படிப்புச் சரிவரவில்லை. குடும்ப நிலமை காரணமாக கிளிநொச்சியிலேயே தங்கி வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். தங்கைச்சி தான் பாவம். எல்லாப் பொறுப்புகளும் அவளிடந் தான். அவள் பிறந்த போதுதான் அம்மாவிற்கு நடக்க முடியாமல் போனது. பிரசவத்தில் அவள் இடுப்பிற்குக் கீழே உணர்ச்சிகள் இல்லாமல் செயலிழந்து போனாள். நான் இருக்கு மட்டும், அப்பாவும் நானும் அம்மாவைத் தூக்கிக் கொண்டு எல்லா இடமும் செல்வோம். இப்போது எல்லாமே தங்கைச்சி கொளசல்யா தான். அடிக்கடி கவலைப்பட்டுக் கடிதம் போடுவாள்.

போன கிழமை கங்கா மூளைக் காய்ச்சலினால் இறந்து விட்டதாக செய்தி வந்தது. ஊரிலிருந்து நண்பன் முரளி அறிவித்திருந்தான். அப்போது நான் ‘றெயினிங்கில்’ இருந்தேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் ‘இந்த றெயினிங். நான் ‘றெயினிங்’ போய் வருவது ஒருவருக்கும் தெரியாது. ரகசியமாக வைத்திருந்தேன்.

கங்கா இறந்து விட்டாள். நான் உறைந்து போனேன். பிரதீபனுக்கு எப்படி இருந்திருக்கும்? பிரதீபனும் அவளும் ஒருவரை ஒருவர் விரும்பியது ஊரில் அனேகமாக ஒருத்தருக்கும் தெரியாது.

இரவு ஏழுமணி மங்கு பொழுது. பிரதீபன்  கொழும்பிலிருந்து நேரே எனது வீட்டிற்கு வந்திருந்தான். இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளிற்கும் முறுகல்நிலை தோன்றி மோதுதல்கள் வெடித்திருந்ததால், அவனுக்கும் செய்தி பிந்தியே கிடைத்திருந்தது.

“பிரதீபன் வீட்டுக்குப் போகேல்லையோ?”

“இல்லை. இனி என்னத்துக்கு?”

“என்ன நடந்தது?”

“மூளைக்காய்ச்சல். பிரேதமும் எடுத்தாச்சாம்.”

பிரதீபனின் தாயார், ஏன் இதைப்பற்றி அவனுக்கு அறிவிக்க வில்லை? அவளுக்கு இந்த விஷயம் ஓரளவிற்குத் அறிவிக்க வல்லேருந்துது தெரிந்து தான் இருந்தது. குறைந்தது வைத்தியசாலையில் இருக்கும் போதாவது அறிவித்திருக்கலாம். கடைசியாக வாவது ஒருமுறை பிரதீபன் வந்து அவளைப் பார்த்திருப்பான். பிரதீபனின் அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு இந்தக் கொழும்பு வீட்டாருடன் அவ்வளவு பிடிப்பில்லை.

பிரதீபன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். திகைப்பில் கரைந்தன சில நிமிடங்கள். முகத்தில் ஏமாற்றமும் விரக்தியும். திடீரென எனது கைகளைப் பிடித்தபடியே வா ஊருக்குப் போவம்” என்றான். நானும் ஊருக்குப் போய் ஏழெட்டு மாதங்கள் இருக்கும். வேலைக்கு ‘லீவுக் கடிதம்’ எழுதிக் கொடுத்துவிட்டு, ‘காம்பில்’ போய் ஒரு சொல்லுச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

வழியில் துப்பாக்கி ஏந்திய இரண்டு வீரர்கள் எனக்குக் கை காட்டினார்கள். பிரதீபன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தான். ‘மோட்டார் பைக்’கை ஸ்ராட் செய்தேன். அது ஊரை நோக்கி வேகமாகப் பறந்தது. நாலைந்து வருடத்துக்கு  முந்திய எனது சிறு பிராயத்து நினைவுகள் குமிழியிட்டன.

‘ஸ்ரீம்’ எஞ்சின் பெட்டிகளை இணைக்கும். புகைவண்டி புறப்படும். தென்னை மரங்களுக்குள்ளால் நுழைந்து தோட்ட வெளிக் குள்ளால் விழுந்து சிறுவர் பட்டாளம் ஓடும். வாய்க்காலிற்குப் போவோம். ‘சளக்குப் புளக்கென்று’ நடப்போம். தூண்டில் கோல்களை வீசி யெறிந்து மீன் பிடிப்போம். தத்திப் பாயும் தவளைகள். கொழுத்த நண்டுகள் வளைக்குள் இராது வெளியே உலாப் போகும்.

‘நண்டு கொழுத்தால் வளைக்குள் இராது’ பாடிப்பாடி பாவாடையையும் ஒற்றைக்கையால் செருகிச் கொண்டு கலைப்பாள் அனுஜா. அவை ஓடி ஒளிந்து கொள்ளும். நாக்கை நீட்டி உருட்டி அழகு காட்டுவாள். ஓடி ஒளிந்த பொந்துகளின் முன்னால் முழங்காலிட்டுக் குந்துவாள் கௌசல்யா.

இடையே இருவரும் கதைக்க வில்லை. வழி நெடுக முழத்துக்கு முழம் இந்தியக் ‘காம்’புகள். கட்டையாக ஒரு கூட்டம். நெட்டையாக இன்னொன்று. குல்லாயுடன் ஒன்று, தாடியுடன் இன்னொன்று. ஒவ்வொரு ‘காம்’புக்கு முன்னாலும் அரண் அமைத்து ‘செக்கிங்’. சிப்பாய்களுக்கு எங்களைப் பார்க்கும் போது தங்களுடைய பிள்ளைகளின் ஞாபகமும் எழலாம்.

இருட்டி விட்டது. வழியில் கணபதிமாமா எங்கேயோ குடிச்சுப் போட்டு, பாடிக்கொண்டு எதிர்ப்புறமாக வந்தார். சைக்கிள் அவருடன் கூடவே இழுபட்டுக் கொண்டு தரை வழியே போனது. “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் நரகத்தில்.’ ‘ஒரு நாளைக்கு உந்த மனிசன் ஆமியிட்ட சூடு வாங்கிச் சாகப் போகுது’ நான் சொன்னேன். பிரதீபனுக்குத் தவறணை பொறி தட்டியது. தவறணையில் ‘அரிக்கன் விளக்கு’ ஒன்று தொங்கியபடி சிரித்தது. படலைத் தகரத்தில் ‘இல.5, கந்தப்பு பொன்னி தவறணை, நாய் கடிக்கும் கவனம்’. குதித்து இறங்கிக் கொண்டான் பிரதீபன். அவசரப்பட்டுப் படலையைத் திறக்க, படலையைத் தள்ளிக் கொண்டு பென்ஸ், டோயோட்டா, அம்பாஸடர், பியட் கார்கள் எல்லாம் வெளியே வந்தன. கைகளை ‘ஸ்டியறிங்’ ஆக வளைத்துக் கொண்டு ‘டுர்… ர் ‘ சத்தத்துடன் வெளியே ஊர்வலமாக வந்த அவை ‘சடின்’ பிரேக் போட்டு பின் உள்ளே சென்று வேகமாக மறைந்தன. பெடியனும் பெட்டையுமாக ஒரு ஏழெட்டு இருக்கலாம். அதில் கந்தப்புவின் அச்சுகள் எத்தினையோ பொன்னிக்குத் தான் தெரியும்.

கடிவாளத்தைத் திசை திருப்ப நினைத்தேன். முடியவில்லை. புலன்கள் தறி கெட்டுப் பாய்ந்தன. நான் எதை எதையோ நினைத்துச் சொல்ல, அவன் எதை எதையோ நினைத்து அழுதான். “இண்டைக்கு மாத்திரம்.”

ஓசை அடங்கும் நேரத்தில் நாலு காலிலே ஊர்ந்து வெளியே வந்தான் பிரதீபன். சைக்கிளில் தூக்கி இருத்தி சைக்கிளும் நானுமாகச் சரிந்தோம். வழியில் இரண்டு பெட்டை நாய்கள் ஒன்றை யொன்று பார்த்து முழுசிக் கொண்டன. இதுதான் தருணம் எனக் குறுக்கே பாய, சைக்கிளோடு இருவரும் விழுந்து! இந்தப் பெட்டை நாய்களே இப்பிடித்தான். தேவை யில்லாமல் இடையில் வந்து விழுந்து விடும் என்றான் பிரதீபன்.

வீட்டிற்குள் எட்டிப் பார்த்தேன். ஒருவரு மில்லை. சுவாமிப்பட அறைக்குள் அப்பாவின் தேவாரம். அப்பரின் பாசுரம்.

“கைப்போது மலர்தூவி காதலித்து வானோர்கள்

முப்போதும் முடிசாய்த்து தொழ நின்ற முதல்வனை.

அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி

எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே”

கட்டிலில் அம்மா படுத்திருந்தாள். நீண்ட நாட்களின் பின்பு என்னைக் கண்டதில் அம்மாவுக்கு கொள்ளை மகிழ்ச்சி. கௌசல்யா, அனுஜா வீட்டிற்குப் படிக்கப் போய்விட்டாள் என்று அம்மா சொன்னா.

விஷயத்தைச் சொன்னேன். பிரளயந்தான். பிரதீபனைக் கொண்டு போய் அவனது வீட்டில் விடும்படி அம்மா வற்புறுத்தினா. அதுதான் நல்லது என்று எனக்கும் பட்டது. அவன் போகமாட்டேன் என அடம் பிடித்தான். அப்பாவும் அவனுக்குச் ‘சப்போட்’டாக இருந்தார்.

இரவு முழுவதும் ஒரே விகசிப்பு. சின்னச் சின்ன விசும்பல்கள். நேரம் கழித்தே தங்கைச்சி வீட்டிற்கு வந்தாள். நானும் பிரதீபனும் படுத்திருந்த அறையை அடிக்கடி எட்டி எட்டிப் பார்த்தாள். குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து நடந்து திரிந்தாள். ஏதோ என்னுடன் கதைக்க விரும்புகின்றாள் எனப் புரிந்து கொண்டேன்.

அடுத்த நாள் காலை, விடியலுக்கு முன்பாகப் பிரதீபனை எழுப்பி ஆறுதல் சொல்லி கொழும்பிற்கு அனுப்பி வைத்தார் என் அப்பா. ஊரில் பிரதீபன் வந்து போன சுவடு தெரியாமலே கொழும்பிற்குப் போய்விட்டான். ‘ஸ்ரேசனுக்குப்’ போய் விட்டு மீண்டும் படுத்துக் கொண்டேன்.

நேரம் கழித்துத்தான் எழும்பக் கூடியதாய் இருந்தது. தங்கைச்சி காலைக் காலைச் சுரண்டி எழுப்பினாள்.

“அண்ணா, அனுஜா உங்களை அவசரம் சந்திக்கட்டாம்.”

பிரதீபன் 

அவள் என் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைக்கும் புது மலர். ‘ஷார்ட் அண்ட் ஸ்வீட் நேம்.’ இப்போதைக்குப் பெயர் வேண்டாமே!

அம்மாதான் இந்த ‘ஐடியா’வை முதன் முதலில் எனக்குச் சொன்னாள். வாத்தியார் மூளையல்லவா? அம்மா இந்த விசயத்திற்கு எப்போதே அடி கோலியிருக்க வேண்டும். அம்மாவிற்கு ஏனோ தெரியவில்லை, இந்தக் கொழும்பு வீட்டாரை அடியோடு பிடிக்கவில்லை. காத்திருந்து வலையை வீசிவிட்டாள்.

தலைவாரி வகிடு எடுத்து இரட்டைப் பின்னல். அகன்ற விழிகள். மெல்லிய குவிந்த உதடுகள். கன்னக் கதுப்பில் மெலிதாக பூனை மயிராட்டம் ஆண்பிள்ளையாட்டம் ‘ஷேர்ட்’. இடுப்பில் பரபரத்துக் கொண்டு வழிந்தோடும் ‘ஸ்கர்ட்’ – அதிலே ‘டாட்டா’ காட்டும் கைக்குட்டை அந்தக் கால்கள் – அந்த ‘ஹை – ஹீல்’. ‘ஜல் ஜல்’ கொலுசு. வசீகரக் காந்த வளைவுகள். இவை பளிச்சென்ற அவளின் பொக்கிசங்கள். ரகசிய வார்ப்புகள் – தோண்டத் தோண்டக் கவிதைகள்.

நினைத்தவுடன் உள்ளத்தை ஊஞ்சலாட்டமாக்கும். மனம் நிறைய சந்தோசம் அத்து மீறி உலாவும். மறுகணம் நினைவை இன்னொரு நினைவு விழுங்கும். மனதிற்குள் கங்கா! எதை எதையோ, யார் யாருடனோ ஒப்பிட்டுப் பார்க்கும் தூண்டல். கங்கா அப்படி ஒன்றும் அழகல்லத் தான். ஆனாலும் படிப்பில் படு சுட்டி. நுனி நாக்கில் ‘இங்கிலிஸ்’ தவழ்ந்து விளையாடும்.

எல்லோரையும் திகைக்க வைத்து, கதற வைத்து விட்டுப் போய் விட்டாள் அவள். அவளின் நினைவுகள் ஊமை அடிகளாக இன்னமும் விட்டு விட்டு வலிக்கின்றதே!

நடந்து முடிந்தவை முடிந்தவைகள் தான். வீணான கற்பனைகள் – வேண்டாத சலனங்கள். இப்பொழு தெல்லாம் மனம், ஒரு நினைவில் இருந்து இன்னொன்றுக்குத் தாவி -பின் இரண்டிலுமே மிதந்து – திரும்பத் திரும்ப – இன்னதென்று விளங்காமல் தவிக்கிறது. இரவு முழுவதும் இதே ‘செக்கு மாட்டு’ வளையங்கள். மழைக்கு முந்தின மூட்டம் மாதிரி மனசிலே புழுக்கம்.

காலத்துடன் நினைவுகள் ஒதுங்கிக் கொள்கின்றன. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. புதிய கனவுகள் பூத்துச் சொரிகின்றன. புதிய கனவு ‘அனுஜா!’

முன்பொரு காலத்தில், விழுந்தும் எழுந்தும் ஒன்றாக விளையாடிய பருவத்தில், நாதனும் அனுஜாவும் ஒருவரை ஒருவர் விரும்பித்தான் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அப்படியிருக்கச் சாத்திய மில்லை. நாதன் இப்பொழுது மறைந்து வாழ்கின்றான்.

நான் கொழும்பிலிருந்து வேலை மாற்றலாகி ஊருக்கு வந்தபின் என்னையும் பார்க்கத்தான் செய்கின்றாள்.

வேலைக்குப் போக வேணும். அவளும் பஸ்சினில் வருவாள். மொட்டாக பருவ மொட்டாக அழகு விரித்து வந்திருப்பாள். திரும்பிப் பார்க்கின்றேன். ‘குட்மோர்ணிங்’ அவளின் சின்னச் சின்ன அசைவுகளை யெல்லாம் கண்கள் பார்க்கத் தூண்டும்.

மாலை வரும். அனேகமாக ஒன்றாகத் தான் திரும்பி வருவோம். சூரியன் மறைவான். அவளும் மறைவாள். மறையும். பின் உதயமாகும். ஒவ்வொரு நாளும்,

ஒரு மகத்தான மாறுதல். பழைய துன்ப நினைவுகளுக்கு ஆப்பு. நான் அவளுடன் தனிமையாகக் கதைக்க வேண்டும்.

எப்படியோ ஒரு நாளைக்காவது கதைத்து விட வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் கடைசி தொட்டம் தொட்டமாக ஆடு குழை தின்கிற மாதிரியாவது.

நாளைய நடப்புகளை நினைத்து மனம் பேய்த் தனமாகக் குதித்துக் கும்மாளமிட வேலை முடிந்து வீடு வருகின்றேன். மர்மம் கொண்டு காத்திருக்கின்றான் நாதன். எட்டு மாதங்களின் பின்பு சந்தித்துக் கொள்கிறோம். கங்கா இறந்ததன் பின்பு அவனை நான் காணவில்லை. எந்தக் காடு மேடு எல்லாம் அலைந்தானோ?

‘வெளியே வா!’ என்கின்றான். என்னுடன் ஏதோ கதைக்க வேண்டுமாம். இரகசியமாம். அதன் பிறகுதான் ‘குண்டைத்’ தூக்கிப் போட்டான். அனுஜாவாம் – அஜந்தா ஓவியமாம். சிறு வயதிலிருந்தே ஒருவரை ஒருவர் விரும்புகின்றோமாம்.

“பிரதீபன் உங்கடை நிலமை எனக்கு விளங்குது. கங்காவின்ர நினைப்பு. நல்ல ஹொஸ்பிட்டல் இல்லை. இருந்தாலும் போவதற்கு வழியில்லை. வழி நெடுகப் பிரச்சினைகள். இந்த நாடு உருப்பட்டிருந்தால் கங்கா மரணத்தை வென்றிருப்பாள். சின்ன வயதிலேயே பெரிய முடிவு.பிரதீபன் நான் ஒண்டு சொல்லட்டுமா?”

“ம்”

“உங்களுக்கும் என்று ஒருத்தி, அழகாய் நல்லவளாய் எங்கோ வாழ்ந்து கொண்டுதான் இருப்பாள். அனுஜா மட்டும் உன்னை விரும்பவில்லை. அதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்.’

புலம்புகின்றான் நாதன். நெடு நேரம் கதைத்தோம்.நிலவு இறங்கும் வரை கதைத்தோம். கதை – சச்சரவு – இழுபறி. கடைசியில் சிறுவயது நட்புச் சிதறுண்டது.

ம்! அவனது கவலை அவனுக்கு. ‘தன்னுடையவள்’ என்கின்றான். ‘இனியும் தொடர்ந்தால், நடக்கிறதே வேறை’ என்று எச்சரிக்கை செய்துவிட்டு, இருளினுள் மறைந்து போனான் கழுத்திலே தொங்கிய ‘குப்பி’ என் கவனத்தை அவன்பால் ஈர்த்தது. முன்பைப்போல் நோஞ்சான் அல்ல அவன். முறுக்கேறியிருந்தது அவன் உடல்.

‘முதற் படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்தது! தோல்வியில் முடிவடைந்தது!!’ அழுத்தி இழுத்து அட்சரம் கூட்டும் தம்பி. சரித்திரம் படிக்கும் தம்பி. ‘இரண்டாவது படையெடுப்பு?

இப்பொழுது எதற்கெடுத்தாலும் கோபம் ‘பொத்துக்’ கொண்டு வருகின்றது. எனக்குள் இருந்து கொண்டு இன்னொரு உருவம் என்னை ஆட்டிப் படைக்கின்றது. அது எழுந்து கொள்கின்றது. தம்பியின் முதுகினில் இரண்டு ‘பளார்’ என்று போடுகின்றது. ‘தரித்திரம்’ பிடித்ததோ என நினத்து மூலைக்குள் ஓடும் தம்பி. சரித்திரம் படிக்கும் தம்பி. மூலைக்குள் இருந்து குசினிக்குள் ஓடும் தங்கை. வயதுக்கு வந்த தங்கை.

இங்கே அவன் எச்சரிக்கை செய்துவிட்டுப் போகின்றான். இரவோடு இரவாகவே நாதன் போய்விட்டான். நாதன் வந்து போனதை அம்மாவிடம் சொன்னேன். அம்மா அதில் அக்கறை காட்டவில்லை. ‘அனுஜாவைத் திருமணம் செய்ய உனக்கு விருப்பம்தானே!’ என்று மறுபடியும் கேட்டபடி இருந்தாள். ‘அனுஜாவிற்கு விருப்பமா?” என்று நான் கேட்டேன். ‘உப்பிடித்தான், உந்தப் பெம்பிளைப்பிள்ளையள் எல்லாம் இரண்டு மூண்டு நாள் அடம் பிடிப்பினம். பிறகு திருமணம் செய்துவிட்டால் சரியாகிப் போய் விடும். பிள்ளை குட்டியள் எண்டு பெத்துத் தள்ளுவினம். அனுஜாவும் அப்பிடித்தான்’ என்கின்றா. ‘நாதன்ர அம்மாக்குச் சுகமில்லை. பிள்ளை, தாயைத்தான் முதலிலை பாக்க வேணும். பாக்கேல்லை. நாட்டைப் பாக்கவெண்டு புறப்பட்டான். கடைசி அதையும் செய்யேல்லை’ என்று தத்துவமும் உதிர்த்தாள்.

தெரு முனையில் ஏதோ சத்தம். கனத்த ‘பூட்ஸ்’ ஒலிகள் போல. இப்பொழு தெல்லாம் சூரியன் உதையமாவதற்கு முன்பே, துப்பாக்கி முனையின் சனியன்கள் உதயமாகி கண்களை உறுத்துகின்றன.

மூன்று பொழுதுகள் வந்து போயின. முதலாவது, இரண்டாவது படையெடுப்புகளை சரித்திரத்துள் ‘நகல்’ பார்த்துக் கொண்டிருந்த தம்பி படிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டு நேற்றுடன் ‘அசல்’ பார்க்கப் புறப்பட்டு விட்டான். தாயென்றும் நாடென்றும் தத்துவம் பேசிய அம்மா அடங்கிப் போனாள். ஆனாலும் அனுஜாவின் விஷயத்தில் இறுக்கமாகவே நின்றாள். தாலியைத் தானே கட்டிவிடுவாள் போல.

விடிந்தால் எழுத்து. அனுஜாவை வீட்டில் காணவில்லை என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. அம்மா ஒவ்வொரு வீடாக புகுந்து தேடுதல் செய்தாள். அப்பாவிற்கு திலெல்லாம் உடன்பாடில்லை. கடைசியில் நாதனின் வீட்டிலேயே அடைக்கலம் புகுந்திருந்ததைக் கண்டு பிடித்தாள். கடைசி நேர மந்திரங்கள் அவளின் காதில் ஓதப்பட்டன. நடைப்பிணமாக அவளின் வீட்டிற்குக் கூட்டிவரப்பட்டாள். இன்னமும் பயமாகத்தான் இருக்கிறது. கடைசி நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

அரை மணி நேரத்தின் பின்பு, அனுஜாவின் வீட்டில் ஏதேதோ சத்தங்கள் கேட்டன. யார் யாரோ வாக்குவாதப்படும் ஓசை. பாத்திரங்கள் உருண்டன. வாசலில் ‘மோட்டார் பைக்’ இன் கடகட சத்தம். நாதன் வந்திருந்தான். நான் வீட்டினுள் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கின்றேன். அப்பா தெரு முனைக்குச் செல்கின்றார். நான் இல்லை என்று அப்பா சொல்லியிருக்க வேணும். யார் கேட்டாலும் நான் ‘ரவுணுக்குப்’ போய்விட்டதாகச் சொல்லும்படி அப்பாவிடம் சொல்லியிருந்தேன்.

கொஞ்ச நேரம் தலையைக் குனிந்தபடி நாதன் நின்றான். பின் கவலை இல்லாத சீவன் போல ஆஜானுபாகுவாக ஏறி அமர்ந்து கொண்டான். ‘மோட்டார் பைக்’ இனை ‘ஸ்ராட்’ செய்தான். என்ன ஓட்டம். எங்கை கொண்டு போய் மோதப் போகின்றானோ? ‘ரவுணுக்கு’த்தான் போவான். பிறகு எப்பிடியும் திரும்பி வருவான்.

ஓசை எழுப்பி தேய்ந்து மறையும் ‘மோட்டார் பைக்’கின் ஒலி

அது என்ன தூரத்தே ‘லப் டப்’ என்ற சத்தம். பின் ‘கிடுகிடு’ என்று அதிரல். ‘அம்மா…வ்’

இருளிற்குள் யாரோ ஓடி வரும் சத்தம். தூரத்தே கணபதி மாமா கூக்குரலிட்டபடி ஓடி வந்தார். “ஓடி வாருங்கோ! ஆராவது ஓடி வாருங்கோ!! நாதனையல்லே பாழ்படுவான்கள் சுட்டுப் போட்டான்கள். மறிக்க மறிக்க ஓடியிருக்கின்றான். ஸ்பொட்டிலேயே….”

என்னால் ஒண்டும் செய்ய முடியவில்லை. ‘ரோச் லைட்’டையும் தூக்கிக் கொண்டு வயது போன எலும்புக்கூடு போல, மூப்புருவம் கொண்டு படலையை நோக்கி நடக்கின்றது உடல் அங்குமிங்கும் பார்த்துவிட்டு செய்வதறியாது தெரு நோக்கி ஓடுகின்றேன் அம்மாவும் தங்கையும் ஓடி வந்து என்னை இழுத்துப் பிடிக்கின்றனர்.

“இப்ப போகாதை, தம்பி இப்ப போகாதையடா.

தூரத்தே முனகல் சத்தம் இப்பவும் கேட்கின்றது. அம்மாவும் நானுமாக இழுபறிப் பட்டோம். வீட்டைக் கடந்து யாரோ ஓடும் சத்தம். ‘ரோச் லைட்’டின் வெளிச்சம் எங்கும் பொட்டாகப் பரவி பயம் காட்டியது. கடைசியில் அந்த வெளிச்சம் அப்படியே போய், ஓடிச் செல்லும் அனுஜாவின் முகத்தில் விழுந்தது. அவள் கண்களிலிருந்து பொல பொலவென ‘நயாகரா’ நீர்வீழ்ச்சி வழிந் தோடியதைக் கண்டேன்.

தங்கையின் பிடி என்னை விட்டு நழுவிச் செல்கின்றது. ஓடிப் போய் அனுஜாவைப் பற்றிக் கொண்டாள். அனுஜா மீது கொண்டிருந்த வெறி என்னுள் இப்போது அடங்கிப் போயிருந்தது. தூரத்தே முனகல் சத்தமும்.

– உள்ளம், வைகாசி, ஆனி 1989

– எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 2007, அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம், அவுஸ்திரேலியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *