சாயங்காலம் நான்கரை மணி இருக்கும், வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு தலைவாரிக் கொண்டிருந்தாள் யாழினி நாச்சியார். பவுடர், லிப்ஸ்டிக் என அழகுக் குறிப்புகளில் இடம்பெறும் அத்தனை பொருட்களையும், அவளது முகம் வாங்கிக் கொண்டிருந்தது. எழுந்து நடக்க முடியாமல் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு, ” அடியே வாடி இங்கே என அழைத்தாள் அவளது தாயார் கணக்கம்மாள்.
“நிம்மதியா இருக்க விடுறாளுகளா” என ஒருமையில் வைதபடியே எழுந்து உள்ளே போனாள். ” அடியே வாசப்படியே கதின்னு உட்காந்துக்கிட்டு, என்னடி சவச்சவன்னு இருக்கே’ என்றபடி, வயலுக்கு போயி காபியைக் கொடுத்திட்டு வா” என தூக்குவாளி, பலகாரப்பொட்டலங்களை கொடுத்து யாழினியைக் கழுதையாக்கிய பெரிய தாயார் பாகம்மாள், கொல்லைப்புறத்தில் நடந்தாள். வயற்காட்டை நோக்கி நடந்து சென்றாள் யாழினி நாச்சியார். உழச் சென்ற தாய்மாமன் சுருட்டு சுப்பையா, ஏரை நிறுத்திவிட்டு, வரப்புமேல் வாயிலும், மூக்கிலும் வெண்புகையை ஊதி புகை போக்கி சுப்பையாவாக நின்று கொண்டிருந்தான். கிழக்கே வரப்பு வெட்டிக் கொண்டிருந்த பழம்பதிராயன்,, ” அண்ணெ பெறகு சாப்டுவாரு, இங்கே கொண்டா’ என்றான்.
பலகாரப் பதார்த்தங்களை மாமன்களுக்குப் படைத்து முடித்த யாழினி நாச்சி, வெறும் தூக்குவாளியுடன், ததூ..த்தூ என்று எச்சிலை துப்பிவாறு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது பேண்ட் சட்டையுடன் குறுக்கே நடந்து வந்த இளைஞனை, எதிரே சந்தித்த யாழினி, ‘வயக்காட்லெ ஆபிஷரா’ என் விழிகளை வியப்பில் விரித்தாள். எதிரே வந்த இளைஞனும் ‘ இங்கேயும் இப்டியொரு பொண்ணா என்ற பிரமிப்பில், அவள் அழகை அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டிருந்தான். வீங்கித் துருத்திய நாசி அவலட்சணமாக இருந்தாலும், அவளது சிவப்பில் வரம்பு கட்டிய இதழ்களும், நிமிர்ந்த நெஞ்சு என படைப்பாளர்களின் வர்ணனையை ஒத்த கூரிட்டு நின்ற மார்பகமும், அவனை பேச்சின்றி மூர்ச்சையாக்கி நிறுத்தியிருந்தது.
நீண்ட அவதானிப்புகளுக்குப் பிறகு வீட்டுக்குச் செல்ல எத்தனித்த யாழினி, ” நீங்க எந்த ஊரு?” என்ற நாணக் கமறலுடன் அந்த இளைஞனின் முகத்தை கரகரத்த குரலோடு பார்த்தாள்.
“நா கீக்குடிதான், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… நீங்க எபடி இங்கெ வந்தீங்க..”
“நா இந்த ஊருதான். என்னோட நேரம் இங்கெ கெடந்து சசீப்படறேன். நீங்களும் நல்லாத்தான் இருக்கீங்க, நீங்க ஏன், இந்தக் குழாயோட வயவரப்புக்கு வந்தீங்க என்றாள்
“நா கீக்குடிதான், பை…பை என்ற அந்த இளைஞன், உங்களெ இனிமே பாக்க முடியுமா..?” என்றான்
“உங்க ஆசை அதுவா இருந்தா, இதே நேரத்துக்கு இங்கெ வந்திடுங்க” என்று சொல்லிவிட்டு, இதழ்கள் சுழிக்க புன்முறுவலுடன் விடை பெற்றார்கள் அவர்கள் மனதிற்குள் புரண்ட இனிமையான சந்திப்பு, அவர்களை உள்ளும் புறமும் இன்பக்கடல் தீண்டிக் கொண்டிருந்த்து.அதேநேரம் வெறிச்சோடிய வரப்பில், யாருமற்ற சூன்யத்தை ஈசல் பறந்து நிரப்பியது. நாள்தோறும் நடந்த சந்திப்பு, குசல விசாரிப்புகள், காதலாகப் பரிமாணம் பெற்றது. இதில் நாட்கள் எண்ணிக்கையைக் கடந்து வாரங்களாக, வருடங்களாக வளர்ந்தது. எண்ண இயலாத இந்த சந்திப்புகள் முற்றி, தனிமையில் தழுவி ஆலிங்கணம் செய்த, இன்பக் குழைவுகள், ரம்பை, மேனகையின் லயிப்புகளைக் கடந்ததாக உணர்ந்தாள் யாழினி நாச்சியார்.
நேரம், காலம் என்ற எந்த வரம்பும் இ லலாமல், ஒப்பனைப் பொம்மையாக சுற்றி வந்த யாழினிக்கு, ஒரு அதிர்ச்சி காற்றுவாக்கில் காதில் வந்து விழுந்தது. காலகாலமா இன்பத்தில் திளைக்க கற்பனை செய்து வந்தவளுக்கு, இது ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது. . பழம்பதிராயர் மகனுக்கு, யாழினி நாச்சியாரைப் பேசி முடித்தார்கள். இதிலிருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தாள். ஏனென்றால் வீட்டில் இருந்த அவளுடைய அண்ணனும் அக்கா கணவரும், பக்கா பகுத்தறிவாளர்கள். காதலுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று எண்ணியிருந்தாள். ஆனால் அவர்களின் பாட்ஷா, குடும்பத்தில் பலிக்கவில்லை.
“நல்ல மாப்ளேனா அவ விரும்புனபடி பண்ணிட வே்டியதுதானே” என்றான் அக்கா கணவன்.
“நீங்க விரும்புனபடி நடந்திருந்தா, இந்த மூஞ்சியவிட நொள்ளை மூஞ்சிதா வாச்சிருக்கும்” என, யாழினியின் அக்காவைக் காட்டி மாமியார் பூசி மெழுகினாள்.
“இதுக்கு அது வாச்சிருந்தா தங்கமா போயிடுக்கும்” என்று, பல்லைக் கடித்துக் கொண்டு நகர்ந்தான் அக்கா கணவன், . திருமணம் நடந்தது. கட்டியதாலியைத் தடுக்க இயலாமல் இன்னொருவனிடம் இன்ப லயிப்புகளால் ஆட்கொள்ளப்பட்டாள் யாழினி. காலங்களில் உருண்டோட . இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இளைய பெண் குழந்தை காலமான நிலையில், மூத்தவள் பூப்பெய்தினாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. மணமுடித்த இரண்டாவது வருடத்தில் விவாகரத்துக். கேட்டாள்.
இதில் பல பஞ்சாயத்துகள் நடந்தும், கணவன், மனைவியின் மனதை ஒட்ட வைக்க முடியவில்லை. உடைந்த முட்டையை ஒட்ட வைக்க இயலாதது போன்று ஆகிவிட்டது இந்த விவகாரம்..
“என்னோட வாழ்க்கை தொடங்கும் போது, இந்த மாதிரி கொழப்பம் நடந்துச்சு.. இவளுக்கு கல்லாணமாகி ரெண்டு வருசத்துக்குப் பிறகு நடந்திருக்கு” என்றாள் யாழனி. “சரி அதுக்கென்ன” என பட்டும்படாமல் சின்னமா மகனிடமிருந்து பதில் வந்தது.. “என்ன, இப்டி வச்சுக்கோ தொடைச்சுக்கோங்கிறது மாதிரி பேசுறே, ஒம்மகளுக்கு நீ பண்ண வித்தையச் சொல்லித் தந்திருக்கலாம்ல” என்றாள், யாழினி நாச்சியார்.
பிடிக்காத ஒருவனிடம் பிரிந்து வாழ நினைக்கும் பெண்ணின் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் பகுத்தறிவு யதேச்சையாக வெற்றி பெற்றது. ஏனென்றாள் பகுத்தறிவுவாதிகளாக இருந்த அண்ணனும், அக்கா கணவனும் எதுவும் செய்யவில்லை. குடும்பமே கூடி எடுத்த முடிவு இது.
யாழினி நாச்சியாரின் சொந்த கிராமத்திலிருந்த, இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள, ஒரு நகரத்தில் திருமணம் நடந்தது. இந்த விவகாரத்தில் எந்த முயற்சியும் எடுக்காத, அக்கா கணவன், அட்சதையை தூவினான். அவனால் படாதபாடுபட்ட பகுத்தறிவு கொள்கை, யதேச்சையாக வென்றிருந்தது. ஆனால் அவனும், யாழினியின் சிறிய தாயார் மகனும் தோற்றார்கள். அட்சதையை வேறு தூவி கொள்கைக்குப் பங்கம் இளைத்தவர்களாக நின்றார்கள். அவர்களால் செய்ய முடிந்த ஒன்று, பேஸ்புக்கில் திருமணப் புகைப்படத்தைப் பதிவேற்றி, புரட்சித் திருமணம் என்று எழுதியிருந்தார்கள். இப்போது தேமே என்று லாயக்கற்றுப் போன பகுத்தறிவாளர்களிடம் , தொழில்நுட்பம் சிக்கியுள்ளது. என்ன ஆகப்போகிறதோ பார்க்கலாம்.
மகளுடைய இரண்டாவது திருமணம், திருப்தியைத் தந்தாலும், தனனைப் போல வாழ்க்கையில் தடுமாறி விடுவாளோ என்ற, அவநம்பிக்கை அவளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இப்போது அவள் மீதோ, மகள் மீதோ சந்தேகம் இல்லை. படிக்கும் போது பாடத்தில் இடம்பெற்ற மரபணுதான் அவநம்பிக்கை கவலை எல்லாம். . இவளுக்கு கவலைக்கும், அவநம்பிக்கைக்கும் அண்ணனையும், அக்கா கணவரையும் நம்பி பிரயோஜனம் இல்லைதான். அதனால் கவலையில் வெந்து வெதும்பிக் கொண்டிருக்கிறார் யாழினி நாச்சியார். அவளுடைய உருவமும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது.