அற்றைக்கூலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 7,659 
 
 

“வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்துட்டு “காண்ட மிருகமினு” ஏன் பெயர் வச்சுகிறோமே தெரியலை.” கோவம் மண்டைக்கு மேல் ஏறி நின்றது. தன் மகனை நொந்துக்கொண்டார் கோபால். பிள்ளைகள் என்ற பெயரில் பெரும் “தொல்லை” களை பெற்றுவிட்டோமா?

“இந்த காலத்து பிள்ளைங்கள நினைச்சா மனசு பதறுது. இதுல அப்பன குறை சொல்றதா இல்லை ஆத்தாளை குறை சொல்றதா? எவ்வளவு சொன்னாலும் நம்ப காதுல பூவ சுத்திடுறானுங்க. முட்டாப்பசங்க” வானத்தை அண்ணாந்து பார்த்து,வாயை கொப்பளித்து துப்பினார்.

“வேல வெட்டி இல்லாம ஊர சுத்திக்கிட்டு இருந்தா ஒரு நல்லது நடக்குமா? காலையில குருவிங்க கூட நேரா நேரத்துல எழுந்து அது அதுங்க வேலைப்பார்க்குதுங்க. ஆடு மாடுங்க கூட காலா காலத்துல அதுங்க வேலைய ஒழுங்கா செய்துங்க. இவனுக்கு என்ன கேடு வந்துச்சு இப்படி இழுத்து போர்த்திக்கிட்டு தூங்குனா எங்க உருப்படறது?”

இவனுக்கு பிறகு ரெண்டு தங்கச்சிங்க இருக்கு. அதுங்கள கரை சேர்க்கவேணாமா? கோபாலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பிள்ளைகள் பெரியவர்களாக ஆனவுடன் தனது கஷ்டங்கள் எல்லாம் பனிப்போல மறைந்து போகும் என்று நினைத்தாரே. அது இப்படியா ஆகனும்? மனமோ மகுடி ஊதியது..

தன் இரண்டாவது பெண் பிள்ளையின் மேல் படிப்புக்கு முதலாளியிடம் கொஞ்சம் பணம் கேட்டிருந்தார். அவர் என்ன சொல்லுவாரோ? முதல் பிள்ளையின் திருமண செலவுக்கு இன்னும் கூட ஒரு ஐயாயிரம் நிலுவையில் இருக்கிறது, அதை எப்போ அடைக்க முடியுமோ தெரியவில்லை.

சோம்பேறி ஆண் பிள்ளையை பெற்ற தனக்கு இன்னும் வேணும் என்று நினைத்துகொண்டார். தன் பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்காமல் போனது தன் தப்புதான். இனி எவன் தன் பேச்சை கேட்பது இல்லை. வாழ்க்கையை இப்படியோ ஓட்டி முடித்தால் சரி என்று நினைத்து, தனது மோட்டார் வண்டியை ஸ்டார்ட் செய்தார். பழைய ஓண்டா செவண்டி புரு.. புரு… என்று சத்தமிட்டு நகர்ந்தது.

மாடாய் வேலை செய்த மூன்றாம் தலைமுறை சஞ்சிக் கூலியாய் தோட்டத்தில் இருந்து துரத்திவிடப்பட்டதில் பட்டணத்திற்கு வந்து, ஏதோ இந்த புறம் போக்கு நிலத்தில் கையில் இருந்த கொஞ்சம் பணத்தில் வீட்டை கட்ட முடிந்தது.

வெய்யில் மண்டையை பிளந்துக்கொண்டிருந்தது.தான் வைத்திருந்த சிறிய துண்டில் முகத்தில் வடிந்துக் கொண்டிருந்த வேர்வையை துளிகளை துடைத்துக்கொண்டார். துரு பிடித்த இரும்புகள் மலைப்போல் குவிந்து கிடந்தன. பெரிய பெரிய இரும்புகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப்போடும் “கட்டிங்” வேலைதான் கோபால் செய்யும் முக்கிய பணி என்றாலும் அவரது வேலையை போலவே அவர் மனமும் துருபிடிந்த இரும்புத் துண்டு அரித்துக்கொண்டிந்தன.

அந்த இரும்பு ஆலை, பெரும் குழாய்களை தயாரிக்கும் சீனரின் தொழில் சாலை. அரசாங்க குத்தகையை எடுத்து இருப்பு கம்பிகள் மற்று குழாய்களை தயாரித்து ஏற்றுமதி செய்யும் ஒரு குத்தகை நிறுவனத்தில்தான் அற்றைக் கூலியாய் கோபால் வேலை பார்க்கிறார்.

நெருப்பு குழம்புகள் சமயங்களில் தெறித்து விழும். சட்டையிலும் சமயங்களில் சப்பாத்துக்குள்ளும் விழும். பையன்கள் சாப்பாத்தை உதறி நொண்டி நொண்டி ஓடுவது நமக்கே அச்சத்தை தரும், அந்த நெருப்பு குழம்புகள் சில சமயங்களில் பெரிய விபத்துக்களுக்கும் காரணமாகி விடுவதுண்டு.

கோபால் வெட்டிப்போடும் இரும்பு துண்டுகள் தான் அந்த கொதிக்கும் நெருப்பாலையில் போட்டு இரும்பு குழம்பாக்கி பெரும் குழாய்களை செய்வார்கள். ஒரு சமயல்காரனின் கைவண்ணத்தில் எப்படி நல்ல உணவு மணக்கிறதோ அப்படிதான் அந்த தொழில் கூடத்திலும் நெருப்பு குழம்பில் இரும்புகள் வெளிவருவதும்.

அங்கு வேலை செய்யும் நம் இளைஞர்களை நினைத்தால் பகீர் என்கிறது. அழுக்கு படிந்த அங்கங்கு நெருப்புக் குழம்புகள் தெறித்து ஓட்டை விழுந்த சட்டையோடு சிலுவார்களுடன் ஓடி ஆடி வேலை செய்யும் அவர்களின் கஷ்டங்கள் நினைத்தால் ……பெரும் மூச்சு ஒன்று பதிலாக வெளிப்பட்டது.

வேகாத வெயிலில் வேலை செய்து கஷ்டப்பட்டாலும் ஏதோ நாலு காசுப் பார்த்து குடும்பத்தை கட்டிக்காப்பதால் அவருக்கு கஷ்டம்,என்றெல்லாம் பெரிதாக ஒன்று தெரிவதில்லை. தன்னோடு தோட்டத்தை விட்டு வெளியேறிய குப்புசாமி மாரிமுத்து எல்லாம் பட்டை தண்ணி அடித்து மான அவமானங்களை பொருட்படுத்தாமல் கம்பனியில் “காட்” வேலையில் “பஞ்சரான வண்டிபோல்” கிடக்கும் போது, தான் மட்டும் குடும்ப நலன் கருதி சம்பளம் கூட வரும் ஊழியம் செய்வதில் மனம் சற்று இலகுவாகிவிட்டிருந்தது. ஆனால் எவ்வளவுதான் உழைத்தாலும் வாங்கும் சம்பளம் யானைக்கு அவல் பொறிகள் போலதான்.இறுதியில் ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது.

தன் மேளாளரின் சிபாரிசில் மகன் ஜெயந்தனுக்கும் ஒரு வேலை கேட்டிருந்தார் முதலாளியிடம், கூனி குறுகி கேட்ட வேலை அது…. இவனோ வெட்டியாய் படுத்து தூங்கி உடம்பை வளர்க்கிறான், இரவில் ஊர் சுற்றி பகலிலே தூங்குவதுதான் அவனின் வேலையாய் இருக்கிறது. ஏதோ அங்கு உள்ள ரவுடி பையன்களிடம் வேறு வம்பு வழக்கென்று கேள்விப்பட்டார்.

அந்த மேளாளரிடம் எவ்வளவு ஏச்சும் பேச்சும் வாங்கியிருப்பார் கோபால்! இந்த காலத்தில் நம்வர்களுக்கு வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. அதிலே கிடைக்கும் வேலையை ஏற்காமல் தன் மகன் செய்யும் சேட்டையை நினைத்தால் தலைச் சுற்றி போய்விடுகிறது.

உச்சிவெய்யில் இன்று கோபால் மேல் படர்ந்து எரிமழையாய் பொங்கியது! அங்கு உள்ள பெரிய பாய்லர் அடுப்பில் கொதிக்கும் இரும்பை போன்று உஷ்ணத்தை உள்வாங்கியது அவர் உடல். ஒரு மொடக்கு தண்ணீர் அவரின் தொண்டைக் குழியில் இறங்கியது. முகமோ வேர்வை முத்துக்களை கொட்டி தீர்த்தது.

தன் முதுகுக்கு பின் ஒரு நிழல் படர்வதை ஏறிட்டு பார்த்தார். யாரை பார்க்க கூடாது என்று நினைத்தாரோ அதே மேளாளர்தான், இரும்பு துண்டுகளை வெட்டுவதை நிறுத்தி அவரை ஏரேடுத்து பார்த்தார்.

“என்ன மேன்!. உன் பையன வேலைக்கு சேக்கனும்னு சொன்ன. இன்னும் ஏன் கூட்டிட்டு வரல…?”.

“அது சார் வந்து,,, நானும் சொல்லிக்கிட்டு இருக்கிறேன்……. அவன் வர மாட்டேங்கறான்”. மண்டையை சொறிந்துக்கொண்டு சொன்னார் கோபால். நாக்கு உளறியது,

“வாட் நான்சன்ஸ்”

“இதுக்குதான் மேன்! நம்ப ஆளுங்களுக்கு சிபாரிசு செய்யறது இல்ல. சொன்ன படி நடந்துக்க மாட்டிங்க. நீ ரொம்ப நாளு இந்த கம்பனியில் வேலை செய்யறதனாலேதானே உனக்கு சிபாரிசு செஞ்சேன்”. ஆங்கிலமும் தமிழும் கலந்து வெளியே வந்து விழுந்தது.

“சீன முதலாளி கேட்டா எங்க மேன் மூஞ்ச வைச்சிக்கிறது.” என்று சொல்லி தலையை ஆட்டினார்..

“சார் எனக்கு இன்னும் கொஞ்சம் டயம் கொடுங்க சார்!. எப்படியாவது இழுத்துட்டு வந்துடுறேன்”, என்று அவர் முகத்தை பார்க்காமலே சொன்னார்.

மனமோ தத்தளித்தது, வரும் வழியில் “மின்சார கேபள்கள்” செல்லும் பாதையில் பொட்டல் நிலத்தில் அன்னிய குடியேறிகளான பங்களாதேசிகள் பயிர் செய்த காய்கறிகள் பச்சை பசெல் என்று மிகவும் செழிப்பாக இருந்தது,

எங்கிருந்தோ இங்கு வந்து சிறு முதலாளிகளாக உருமாறி இருக்கும் பங்களாதேசிகளே தைரியமாக செயல்படும் போது நம்மால் முடியாதா என்ன? ஏன் இந்த பயம்? நாமும் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஒரு வியாபாரியாக முடியாதா என்ற சிந்தனை ஓடியது. நாளை, முதல் வேலையாக தன் மகனை அழைத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு சென்று அவன் பெயரிலேயே நிலத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

அன்று இரவு வேகமாக வந்த மோட்டர் வண்டி அவர் வீட்டு முன் வந்து நின்றது. அவரின் மகன் தலைதெறிக்க அவர் வீட்டின் வாசல் பக்கம் ஓடினான், அதை தொடர்ந்து சற்று நேரத்தில் சில மோட்டர் வண்டியில் வந்த சிலர் அவனை துரத்திக்கொண்டு வீட்டின் உள்ளே ஓடினர். கோபால் வீட்டின் உள்ளவர்களின் அலரல் சத்தம் எங்கும் எதிரொலித்தது.

வந்தவர்களில் ஒருவன் வெளியே வந்து “மச்சான் போட்டுட்டேன், அவன் செத்தான்” என்று சொல்லிக்கொண்டு மோட்டார் வண்டியை கிளப்பி அங்கிருந்து செல்லவும் கோபால் வரவும் சரியாக இருந்தது.

வீட்டின் முன் புறம் கூடி இருந்த கூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபால், என்ன ஏது என்று சுதாகரிக்கும் முன் அவரின் மூத்த மகள் ஓடி வந்து “அண்ணண வெட்டிட்டானுங்க அப்பா!” என்று அலறினாள்.

எதையும் யோசிப்பதற்கு நேரம் இல்லை வெட்டுப்பட்ட தன் மகனை வாரி அணைத்துக் கொண்டு தன் நண்பரின் வண்டியில் ஏற்றி பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நல்ல வேளை அவன் உயிருக்கு பாதிப்பில்லை உடலில் பட்ட ஆழமான வெட்டு காயம் இன்னும் சில மாதங்களில் ஆறிவிடுமா? இல்லை ஆண்டுக் கணக்கில் ஆகுமா? தெரியவில்லை! ஆனால் பையனை நினைத்து வருந்தும் கோபால் மனதில் படிந்த வடு எப்பொழுது மாறும்?!

சில திங்கள் கழித்து அவர் நினைத்தது போல் மின்சார வாரியத்தில் இருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது.

“மின்சார வாரியம் உங்களின் வேண்டுகோளை ஏற்று விவசாய நிலத்தை குத்தகைக்கு வழங்குகிறோம் என்று எழுதி இருந்தது.

ரவுடிக் கும்பலால் வெட்டப்பட்டதில், உயிர் போகவிட்டாலும், உயிருள்ள பிணமாய் படுக்கையே இனி கதியென்று போன பிள்ளையின் பெயரில் வந்த அந்த கடிதத்தை முகத்தோடு சேர்த்தனைத்தபடி நெஞ்சில் அடித்துக் கொள்கிறார் கோபால் இனி, அந்த நிலத்திற்கும் அவரது வேர்வை துளிகள் ஈரமாய் இறங்குமோ…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *