கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 3,551 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘தையும் மாசியும் வையகத்துறங்கு’ என்ற வாக்கியம் ஆரம்பப் பாடசாலைக்குத் தானும் சென்றிராத அப்துல்லாவிற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், ஊருக்குள்ளே இருக்கும் தன்குச்சிலே, வழுதி கூடலிற் தங்கிய சத்திமுற்றப்புலவரைப் போலக் கையையும் காலையும் முடக்கிக் கொண்டு போர்த்துக் கிடந்தால் இதமாக இருக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவனால் அப்படிப்படுத்துறங்க முடியுமா?

‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற தத்துவத்தைக் கொள்கையளவிற் கூடக் கேள்விப்பட்டிராத ‘புண்ணிய பூமி’ அந்தப் பிரதேசம். அந்தப் பிரதேசத்திலே கண்காணாத போடியாரான கோணேசர் ஆக்ரமித்துக் கொண்டு விட்ட பெரும்பங்கைக் கழித்தால், மீதியெல்லாம் தெய்வத்தின் பிரதிநிதிகளான கோயில் வண்ணக்கு கட்கும் மற்றையோருக்கும் அடக்கம். எல்லாம் சேர்த்து ‘மானம் பார்த்த’ பூமிதான். இந்தப்பூமியின் ஒரு கண்டத்தைத்தான் வருடாவருடம் வாரத்துக்கு எடுத்து வேளாண்மை செய்து வந்தான் அப்துல்லா.

கச்சான் காற்றுச் செத்துச் செத்து வீசி, மதியம் திரும்புகையில் வாடையாகி அசையுமல்லவா? அந்த நாட்களிலே அதாவது ஆவணி புரட்டாசி மாதங்களிலேயே அப்துல்லாவுக்கு வயலில் வேலை தொடங்கிவிடும். பாளம் பாளமாய் வெடித்துக், கல்லாய்க் கலட்டியாய்க்கிடக்கும் அந்த வயலில், முதல் மழை விழுந்தவுடனேயே அப்துல்லா, வீட்டு மூலைக்குள்ளே மண்சுவரோடு சார்த்திவைக்கப் பட்டிருக்கும் கலப்பையை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டு வயலுக்குப் போய்விடுவான். மழை பெய்து பொருமிக்கிடக்கும் நிலத்திலே கலப்பையின் கொழுவை ஊன்றியதும், மாடுகள் உன்னி இழுக்கையில், ஒன்றில் மண் பாளம் பாளமாக வெடித்துப் புரளும். அல்லது கொழுவுக்கு மேலே நுகத்தடியும் ஏரும் பொருந்துமிடம் ‘படீர்’ என்று தெறிக்கும். இத்தனை கஷ்டத்திற்குமிடையில் ‘ஆடி அரையாறு ஆவணி பேராறு’ என்ற பழமொழி பொய்த்துப் போய் மழையே பெய்யாமற் போய்விடும். அப்போதெல்லாம் ‘தலையுழவு’ எடுத்துக் கொள்ளவில்லையே என்று எண்ணுகையில் அப்துல்லாவின் அடிவயிறு காய்ந்து கிடக்கும் நிலத்தைப் போலவே நெருப்பாய் எரியும்.

இந்த வருடம் அப்துல்லாவிற்கு அந்தச் சங்கடம் தோன்றவில்லை. ஆவணி மாதம் நல்ல மழையே பெய்தது. தலையுழவிலேயே நிலம் புழுதியாகவும் போய் விட்டது.

உழவு மழை முடிந்து, புரட்டாசி மாதக் கடைசியிற் பெய்த தலை மாரியின் போது, அப்துல்லா நிலத்தை மாடுவிட்டு நன்றாகச் சேறாக்கிப், பரம்படித்து ஐப்பசி மாத முற்பகுதியில் வயலெல்லாம் பயிரேற்றிவிட்டான். பருவமழை சௌகரியமாக அமைந்ததைக் கண்டு அப்துல்லா மட்டுமல்ல, எங்களூர் உழவர்கள் எல்லோருமே பூரித்துப் போனார்கள்.

கார் முடிந்தது. கூதிர் போயிற்று. கண்ணுக் கெட்டாத் தொலைவிற்குப் பரந்து கிடக்கும் அந்த வயல் வெளியின் மரகதப்பசுமையில் அப்துல்லாவின் கண்ணும் மனமுங்குளிர்ந்தன. வாலைக்கு மரி போலத்திமுதிமு என்று வளர்ந்த பயிரின் நெஞ்சம் விம்மிப், பூவாய், பூ நிறைந்த குடலையாய்ப் பாளையாய்க், காலிற் சதங்கையைக் கட்டிக் கொண்டு ஆடத் தயாராகி நிற்கும் நர்த்தகியைப் போலக் கம்பீரப் பார்வை பார்க்கையில் பனி காலத் தொடங்கி விட்டது.

அப்துல்லாவிற்கு அதற்கு மேல் வீட்டிலே தங்கியி ருக்க முடியவில்லை. நாளுக்கு நாட், பூவும் பிஞ்சுமாகிக் கொண்டுவரும் தன் பயிரைக் காவல் காப்பதற்காகத் தன் மனைவியை, குழந்தைகளை – வீட்டையே-விட்டுத் தொலை தூரத்திற் தன்னந் தனியனாகிக் கொண்டிருந்தான். எப்போதாவது காலையில் வீட்டிற்குப் போய், சாப்பாட்டிற்கு ஏதாவது எடுத்துக்கொண்டு இருட்டுமுன் வயலுக்குத் திரும்பி விட வேண்டும். வீட்டோடு அவன் வைத்துக் கொண்டிருந்த தொடர்பெல்லாம் இது தான்.

மாசி மாதம் பிறந்து விட்டது. பச்சைப் பசேலென்றிருந்த பயிரின் தாள்கள் நிறம் மாறிவிட்டன. பூவாய்ப்பிஞ்சாய் இருந்த கதிர்களிற் பாலாக இருந்த அன்னம் பருக்கையாக முற்றிக் காற்றிற் கலகலத்துத் தலை வணங்கி நின்றது. அந்த நிலையில் அப்துல்லா இரண்டு வார மாக வீட்டிற்குப் போகவேயில்லை. வயல் வெளிய ன் ஒரு கரையில், காட்டோரமாக அவன் ‘கண்டம்’ இருந்ததால் காவலும் அதிகமாகவே தேவைப்பட்டது.

அன்றிரவு, அப்துல்லா தன் குடிலில், முட்டிக் கால் கட்டிக்கொண்டு, நாடியை முழங்கால்களில் வைத்தபடி குந்திக் கொண்டிருந்தான். அமாவாசை இருட்டு. அந்த கார இருளின் மத்தியில், வெறிச் சோடிக்கிடக்கும் வயலின் மேற்பரப்பில் அந்தக் காவற் குடில், கருநீலமாகப் பரந்து கிடக்கும் ஆழியில் வட்டப்பாய் விரித்து நிற்கும் சின்னஞ் சிறிய படகைப் போல் நின்றது. காளான் குடையைப் போல் விரிந்து குவிந்து நிற்கும் அக்குடிலின் வட்டக் கூரையின் கீழே பரப்பிக் கட்டியிருந்த வரிச்சுத் தடிகளின் மேலே, இரண்டு தென்னங்கீற்றுக்கள் எதிர் எதிராகப் போடப்பட்டிருந்தன. அக்கீற்றுக்களின் மேல், உடம்பிற் குளிர் தாவாது என்ற நம்பிக்கை யோடு சாக்கு ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அதன் வட கரையில் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த இன்னொரு சாக்கு, தலையணை என்ற பெயரைப் பெற்றுக் கொண்டு மரியாதையாக இருந்தது. படுக்கையின் கீழே அரை முழப்பதிவில், கையெட்டக் கூடிய இன்னோர் தட் டியில் களிமண் பரப்பப்பட்டு அதிலே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

குளிரிலே காலைக் கட்டிக்கொண்டிருந்த அப்துல்லா குனிந்து சாம்பர் பூத்துக் கிடத்த நெருப்பை மூட்டினான். ‘சொய்’ என்ற அரவத்தோடு கொட்டும் பனியின் சலசலப்பை மீறிக்கொண்டு விறகுகள் சட சட வென்று எரி ந்தன. அப்துல்லாவின் குளிரை எங்களாலும் அடக்க முடியவில்லையே என்று வானை நோக்கி முறையிடுவது போலத் தீயின் செந்நாக்குகள் ஆடி அசைந்து மேல் நோக்கிக் கொண்டிருந்தன.

அப்துல்லா தன் இரு கைகளையும் சுவாலையருகிற் பிடித்துக் காய்ச்சிச் சூடேற்றி, சூடேறிய தன் கைகளா ல், உடல் முழுவதையும் தடவிக் கொடுத்தான். உடம்பிலே சிறிது தெம்பு வந்ததும், தலையணை என்ற பெயரைத் தரித்துக் கொண்டிருக்கும் சாக்கின் கீழே கையை விட்டுப் புகையிலையை எடுத்தான். பனியிற் தண்ணீராகிக் கிடந்த அப்புகையிலையை நெருப்பிலே வாட்டி, ஏற்கனவே நீரில் அவித்து, விரல் நீளத்திற்கு வெட்டி வெட்டி வைக்கப்பட்டிருந்த தென்னங்குருத்துக்களில் ஒன்றையும் எடுத்து நடு ஈர்க்கைக் கிழித்துப் புகையிலையை ஓலையிலே வைத்து ‘றோக்கை’ சுற்றினான் (றோக்கை தமிழ்ச் சொல்லோ என்னவோ எனக்குத் தெரியாது பாஷா பண்டிதர்கள் அதிலே முட்டி மோதித்தலையை உடைத்துக் கொள்ளலாம்). சுற்றின ‘றோக்கை’யை வாயிலே வைத்து ஒரு இழுப்பு இழுத்த போது அவனுக்குக் குளிரின் நடுக்கம் குறைவது போற் தோன்றிற்று. வாய் வழியே உள்ளே சென்று, மூக்கால் வெளிப்பட்ட கொட்டியாபுரத்துப் புகையின் கமறல் அவனுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த உற்சாகத்தில் நாற்பது வயதுக்கு மேல், மூன்று பிள்ளைகட்குத் தந்தையாகி விட்ட அவன் மனத்திற் சிருங்கார நினைவுகள் கூடத் தலை தூக்கின. இந்தக் குளிரில் அவன் மனைவியின் மெல்லிய இதமான ஸ்பரிசம் இருந்தால்….

அந்த எண்ணத்தில் அப்துல்லாவின் நாவில் யாரோ மட்டக்களப்பு எழுத்தறியாக் கவிஞன் பாடிய கவி ஒன்று வந்தது . அப்துல்லா பாடினான்:

கதிரு குடலை மச்சாள்
காய்வணக்கம் ஈக் கறுப்பு
பண்டி நெருக்கம் – கிளியார்
பாக்க வரக்கூடுதில்ல

அவன் பாடிய பாட்டு அந்தப்பரந்த வயல் வெளியின் அந்தகார இருளிற் தேய்ந்து மடிந்தது. அப்பாட்டிற்கு எதிர்க்குரலாக எங்கோ ஒரு மரத்திலிருந்து கூகைகள் உறுமிய சப்தத்தான் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு பாட்டம் பாடி முடித்ததும், அப்துல்லா கீழே ‘தீவறை’யிற் கிடந்த நீண்ட கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொண்டு, வேலியோரமாக வயல் வரப்பின் மீது நடக்கத் தொடங்கினான். காலடியைத் தெளிவிப்பதற்காகக் கையில் வைத்திருந்த கொள்ளிக் கட்டையை வீசிய போது உண்டான தீயின் சுவாலை, அந்தகார இருளின் சடலத்தைக் கத்தியாற் கீறிக் கீறிக் கிழிப்பது போல இருந்தது. அப்துல்லா ‘ஹாய் ஹுய்’ என்று பெருஞ்சப்தமிட்டுக் கொண்டே வயல் வரப்புகளில் நடந்தான்.

வரம்பிலே தலைசாய்த்துக் கிடந்த நெற்கதிர்களும் தாள்களும் பனியிலே சிதம்பிக் கிடந்த அவன் கால்களை மெல்லிய கூரான கத்தியைப் போலக் கீறிக் கிழித்தன. பாதங்களின் கீழே தத்தைக் கூடுகள் நற நற வென்று நொறுங்கின. அப்துல்லா தன் பழைய சாரத்தாற் தலையில் முக்காடிட்டு உடல் முழுவதையும் போர்த்தபடி நடந்து கொண்டிருந்தான்!

பாவம்! இந்த வருஷம் மக்கத்துக்குப் போய்வந்த ஹாஜிமார், வைத்திருந்ததைப் போல அவனுக்கும் ஒரு மரினாக் கம்பளி வாங்க ஆசையாகத் தானிருந்தது. அந்த ஹாஜிமாரைப் பார்த்து, அப்துல்லாவைப் போன்ற எத்தனையோ உழவர்கள் பனிக்காலத்திற்காகக் கம்பளி வாங்கித்தான் இருந்தார்கள். ஆனால் அப்துல்லாவிடம் கம்பளி வாங்கிக் கொள்ளக் காசு மிஞ்சவில்லை. போனாற் போகிறது. இந்த வெள்ளாமை வெட்டியதும் வாங்கிக் கொள்ளலாம்…. அது மட்டுமா? இந்த வருஷத்தைப் போல என்றைக்குமே அவன் வயல் செழுமையாக இருக்கவில்லை. பயிர் ஒவ்வொன்றும் கரும்பு போலப் பெருத்து ஈர்ப் பீச்சியது போலக் குலை தள்ளித் தலை சாய்த்து ……..

இன்னும் ஒரு கிழமை. அட்டமி நவமி கழித்து விட்டாற் கத்தியைப் போட்டு விடலாம். எப்படியும் இம் முறை நாற்பது நாற்பத்தைந்து ‘அவணம்’ காணும் மாட்டு விசக்களை, விதை நெல்லு, வெட்டுக்கூலி, சில்லறைக் கடன், தரைவாரம் எல்லாம் போனால் எப்படியும் ஏழு, எட்டு அவணம் மிஞ்சும். இப்போது தான் அவணம் நூற்றி இருபத்தைஞ்சு ரூபாய் விற்கிறதே. உடனேயே விற்றுவிட்டு மூத்த மகள் சுபைதாவின் நிக்காஹ்)வை நடத்திவிட வேண்டும். செலவோடு செலவாக இம்முறையே இளைய மகன் காசிமுடைய சுன்னத்தையும் நடத்தி விடவேண்டும்…….

இன்ப நினைவுகளில் மிதந்தவனாக வயல் வரப்புகளில் நடந்து கொண்டிருந்த அப்துல்லாவிற்குக் குளிரே தெரியவில்லை. வளைந்து கொண்டு குடிலுக்கே திரும்பி வந்த போது தான் அவனுக்குத் தன் நினைவு வந்தது.

குடிலில் ஏறி மறுபடியும் நெருப்பிற் கால்களைக் காய்ச்சினான் அப்துல்லா, ‘றோக்கை’ சுற்றிக் குடித்துக் கொண்டிருந்தபோது அப்படியே நித்திரையாகி விட்டான்.

***

வடிந்தது. மூடுபனியின் வெண்திரையைக் கிழித்துக் கொண்டு ஈட்டிகளாய்ப்பாயும் காலைக்கிரணங்களின் ஒளியில் வயல் முழுவதும் பொற்கதிர்களாக மின்னின. ஆழ்ந்த நித்திரையில் இருந்த அப்துல்லா, “அப்துல்லா அப்துல்லா” என்று தன்னை யாரோ கனவிற் கூப்பிடுவது போன்ற உணர்வோடு கண்களை விழித்துப் பார்த்தான்.

அவன் முன்னால் நின்ற அடுத்த வயற்காரக் கிழவன் வேலாயுதம் “படுபாவி, ஆண்டவன் தந்ததையும் இப்படிக் கொள்ளை குடுத்திற்றியே” என்றான் பரிதாபகரமாக.

அப்துல்லா குடிலில் இருந்தவாறே தன் வயலைப் பார்த்தான். அங்கே…. ஐயோ! நான் எதை எழுத? கரும்பாய்ப் பெருத்து, ஈர்ப்பீச்சியது போலக் காய்த்துக் கனத்தாற் தலை சாய்த்து நின்ற அப்துல்லவின் பயிர், ஒரு மந்தை காட்டுப் பன்றிகளால் உழக்கப்பட்டுப் புதிதாய் உழப்பட்ட தரையாய், நெருப்புப் பிடித்த காடாய்……. ஐயோ !

அடிவயிறு நெருப்புப் பிடித்து எரிந்த அப்துல்லா தலையிற் கைகளை வைத்துக் கொண்டு “அல்லா” என்று கூவினான்.

அவன் கூக்குரல் அல்லாவிற்குக் கேட்டதோ என்னவோ எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் வேதாந்த சித்தாந்த ரகஸ்யங்களைக் கரை கண்ட வித்தகனல்ல. வெறுங்கதாசிரியன்!

– ஈழகேசரி-4-4-54

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

வ. அ. இராசரத்தினம் (சூன் 5, 1925 - பெப்ரவரி 22, 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். திருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *