அறுந்த கயிறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 1,845 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் நன்றாக இந்த உலகத்தையே மறந்து தூங்கிக் கொண்டிருந்தான். தூக்கம் ஒரு குட்டி மரணம் என்பார் கள் வேதாந்திகள். ஆனால் தூக்கம் காதலியின் இதழ் தரும் இன்பம் என்பது கந்தசாமியைப் போன்ற தொழி லாளிகளால் தான் புரிந்து கொள்ள முடியும் காலமெல் லாம் கடமை செய்து குற்றுயிராய் வாழ வேண்டுமென்று அவன் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ என்னவோ? ஆனால் இன்றைய உலகத்தில் இதற்கு மேல் வேறெதுவும் செய்ய முடியவில்லை .

அவனைப் பெற்றவர்களின் வாழ்க்கையைக் கண்டு இந்த உலகமோ அல்லது மனித சமூகமோ கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் வீட்டுக்கு வீடுகஷ்டமும் கவலை யும் தான் நிலைத்திருந்தது. இவைகளையெல்லாம் தாங்கும் சுமைதாங்கிதானே மனிதன் என்ற ஜந்து. என்றாலும் அடியோடு நம்பிக்கையற்றுப் போகாமல் இருப்பதற்காகக் களிமண் சுவரிலே சுண்ணாம்பு பூசியது போன்று உடலிலே கொஞ்சம் இருதயம் ஒட்டியவர்கள் அவனைப் போன்றவர் களைப் பார்த்துக் கொஞ்சம் பரிதாபமாகப் பேசுவது முண்டு. ..உம்! அதற்கென்ன செய்வது எல்லாம் உன் தலைவிதி” என்று சொல்வதோடு அவர்கள் கடமையும் தீர்ந்து விடும்.

எது எப்படியிருந்தாலும் அவன் இந்த உலகத்தில் நட மாடிக் கொண்டுதான் இருக்கிறான் துணைக்கு ஒரு மனைவியும் கூட. உலகத்தில் மனைவியென்ற அந்தப் பற்றுக் கோடும் இல்லையென்றால் கந்தசாமியைப் போன்றவர்களின் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க என்ன தான் இருக்க முடியும்?

கந்தசாமி கூட்டுறவுப் பண்டகசாலையில் மூட்டை தூக்கும் கூலியாள், மாதம் அறுபது ரூபாய்கள் தாம் சம்பளம், இந்த அறுபது ரூபாய்களை வைத்துக் கொண்டு தான் அவன் தன் வாழ்க்கைச் சகடத்தை ஓட்ட வேண்டும். தொழிலாளி என்றால் அவனையும் ஒரு மனி தனாகச் சிலர் மதிக்கவில்லையே என்று ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! ஆனால் யாருக்கும் தெரியாமல் மணி மேகலையின் கையில் இருந்த அமுத சுரபியாகி விட்டானே என்பது தான் ஆச்சரியம் அறுபது ரூபாயில் தொழிலாளி வாழவேண்டுமென்றால் அவன் அமுத சுரபியாகத்தானே இருக்க வேண்டும்.

மலைகளையெல்லாம் மண்ணாக்கி விட்டோம். அடுப் படிப் பூனைக்கு மணி கட்டி விட்டோம். என்றெல்லாம் அரசியல் பேசுகிறார்களே! அவர்கள் கண்முன்னால் கதி யற்றுக் கிடக்கும் இந்த மனிதர்கள் வாழ்க்கையைச் செப்ப னிடத் தவறியது இந்த நாட்டுக்கு ஒரு பெரிய நஷ்டம். என்று அரசியல் பொருளாதார சிந்தனைகள் அவன் மூலை யில் எப்பொழுதும் குறுக்கிட்டது கிடையாது. எலும் பொடிய வேலை செய்யும் எந்தத் தொழிலாளி தான் இவை களைப் பற்றிச் சிந்திப்பான்! இத்தகைய இருக்கமான வாழ்க்கையிலே ஏற்படும் மனப் புழுக்கத்தை மறக்கத் தூக்கம் ஒரு நல்ல கருவிதான். எனவே கந்தசாமி எல்லா வற்றையும் மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

காலை நேரம் கந்தசாமியின் மனைவி அடுப்புடன் சண்டை கோட்டுக் கொண்டிருந்தாள். புகை அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. புகை புருஷனாக முடியுமா’ தலையை மறுபக்கம் சாய்த்துக் கொண்டு அடுப்பை ஊதினாள் அவள். அடுப்பென்ன குபீர் என்று தீப்பிடிக்கும் பெட்ரோல் பம்பா? எந்தப் பெற்றோராக இருந்தாலும் அந்த அடுப்புக்குள் இருக்கும் பச்சை மட்டைக்குத் தீ மூட்ட முடியாது ; இந்த நிலையில் மணி எட்டடித்து விட்டது. மணியடிக்கும் சத்தம் கேட்டுக் கந்தசாமியின் படுக்கைக்கு ஓடினான் அவன். அவன் இன்னும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

“என்னப்பா! எழும்புங்க நேரமாச்சுது!” என்றாள் அவள்.

“என்னத்துக்கு நேரமாச்சு?” என்று முணுமுணுத்தான் அவன்.

“வேலைக்குப் போகல்லியா’ நீங்க!”

“இண்டைக்கு வேலையில்லை” என்று சொல்லிக் கொண்டே புரண்டு படுத்தான் அவன்.

“ஏன் வேலையில்ல?”

அவளுடைய இந்தக் கேள்வி அவனுக்குப் பெரும் தொல்லையாக இருந்தது. “என்னத் தொந்தரவு செய்யாமப் போ!” என்றான் அவன்.

அவனுடைய இந்த மெல்லிய கோபம் அவளுக்குச் சிரிப்பைத்தான் உண்டாக்கியது, சிரித்துக் கொண்டே அவன் பக்கத்தில் உட்கார்ந்து, அவனுடைய உடம்பைப் பிடித்து விட்டுக் கொண்டே கேட்டாள்.

“சுதந்திர மெண்டா என்ன?”

“உனக்குத் தெரியாதா?”

“உம் உ…ம்!”

“அப்படியெண்டா நீ அதெ தெரிஞ்சு கொள்ளாத”

“ஏன்”

“ஏனா அதத் தெரிஞ்சதுனால இந்த நாலு அஞ்சு வருசமா எவ்வளவு கஷ்டப் படுறன் தெரியுமா?”

“அப்படிப் பொல்லாததா அது?”

“இல்லையில்ல. பொல்லாததாக ஆக்கியிருக்கிறாங்க நம்மவங்க” ஊ…ம்! அதப்பத்தி இப்ப என்ன? இண்டக்கி வயித்துக்கு என்ன சாப்பாடு?”

“பழஞ்சோறும் தீயக்கறியும்”

“என்ன! இண்டக்கும் பழய சோறா?”

“நானென்ன செய்ய? இடியப்பமும் அப்பமும் தின்ன ஒங்கட ஒடம்பு நெய்யாலயா படச்சிருக்கு? அப் மாடி! எழும்புங்க, எழும்புங்க. அடுப்பில கறிய வெச்சிட்டு வந்தன்.”

அவள் எழுந்தாள். அவன், அவள் சேலையைப் பிடித்து இழுத்தான்! அவள் அவன் விலாவில் கூச்சங்காட்டி விட்டு ஓடினாள். அவனும் படுக்கையை விட்டு எழுந்திருந்தான்.

“நாட்டுக்கு சுதந்திரம் நம்மட ஊட்டுல பழஞ்சோறு! சுதந்திர மெண்டா ; சுடுசோறும் பழஞ் சோறாகி விடுமோ?”

“என்ன செய்றீங்க? முகத்தக் கழுவாம?” – என்று கத்தினாள் அவள்.

சிந்தனையை விட்டுக் கிணற்றடிக்குச் சென்றான் அவன். வேப்பங்குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்த கந்தசாமி யின் உள்ளம் பலதையும் பத்தையும் எண்ணிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தெருவிலே பிச்சைக்காரன் பாடும் பாட்டு அவள் காதில் வந்து விழுந்தது.

“நாடு சுதந்திரம் பெற்றதுண்டு என்றால்
நாட்டவரெல்லாம் தேச மன்னரென்றால்
ஓடேந்திப் பிச்சைக்குத் திரிந்தலைந்தும்
உணவின்றி வாடும் நிலை வந்ததேனோ!”

அந்தப் பரதேசிப் பாடலில் இருந்த கேள்வியோடும் அவ னும் ஒரு கேள்வியைப் போட்டுப் பார்த்துக் கொண்டான்.

“பிச்சை எடுக்கிற மனிதன் வாழுகிற தேசம் சுதந்திர தேசமாகுமா?”

அவன் மனைவி திரும்பவும் அவனை அழைத்தாள், மனைவியின் அழைப்புக் குரல் கேட்டதும் தண்ணீர் அள்ளு வதற்காக கயிற்று வாளியைக் கிணற்றுக்குள் போட்டு சுண்டினான். கபக்” என்ற சத்தத்துடன் வாளி நிரம்பிக் கொண்டது. தண்ணீர் வாளியை வெளியே எடுப்பதற்கு முனைந்த கந்தசாமியின் காதில் திரும்பவும் அந்தப்பிச்சைக் காரன் பாடல் வந்து விழுந்தது.

“தாழ்வுயர்வு பேதமின்றி உலகமெல்லாம்
சமத்துவமாய்ப் படைத்தளித்தான்
இறைவ னென்றால்
கூழுக்கும் வகையின்றிப் பசியால் வாடிக்
குற்றுயிராய் ஏழை மக்கள் குமைவதேனோ?”

இரண்டாவது பாடலும் அவன் உள்ளத்தைத் தொட் டது. ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே தண்ணீர் வாளியை வெளியே எடுக்க முயன்றான் ‘பட்” கயிறு அறுந்து விட்டது! கயிற்றின் பிடியில் இருந்து விடுபட்ட வாளி கிணற்றைச் சிறைச்சாலையாக்கிக் கொண்டது அறுந்த கயிறு அவன் கையில் இருந்தது. அது எத்தனையோ தத்து வங்களை அவனுக்குப் போதித்தது.

விடுதலையின் முடிவையும், மனிதனின் பலவீனத்தை யும் கூடத்தான்.

– 1952, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *