அர்ஜுன் S/O ராஜலட்சுமி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 12,589 
 
 

என் அவசரத்துக்கு லாஸ் ஏஞ்சலீஸ் ‘ஃப்ரீ வே’ நகரவில்லை. 70 மைல் வேகத்தில் போக வேண்டிய பத்தாம் எண் ராஜபாட்டை நத்தையாக ஊர்ந்து, இன்னும் படுத்தியது. என் பிள்ளை அர்ஜுன் வழி மேல் விழி வைத்து எனக்காகக் காத்திருப்பான். அவனைவிட அவனைக் கண்காணிக்கும் ‘டே கேர்’ நிர்வாகப் பெண் சூஸன், சுடு நீரில் காலை வைத்தது போல் துடித்துக்கொண்டு இருப்பாள். பத்துப் பதினைந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்பவள், தானும் காலாகாலத்தில் வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு? ஒரு நாளைப் போல தினமும் கடைசியாக வருகிற அம்மா நான்தான்.

அர்ஜுன் சூஸனின் கையைப் பிடித்துக்கொண்டு வாசலிலேயே நின்றிருந்தான். நான் காரைப் பார்க் பண்ணாமல் சூஸன் எதிரே நிறுத்தி, ‘‘ஸாரி சூஸன்! வழக்கம் போல் வெள்ளிக்கிழமை மாலை டிராஃபிக்’’ என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அர்ஜுன் தானாகவே காரில் ஏறி உட்கார்ந்துகொண்டு ஸீட் பெல்ட் போட்டுக்கொண்டான்.

‘‘மாம்… ஏன் டெய்லி இவ்ளோ லேட்டா வரே? உனக்காக நான் எத்தனை நேரம் காத்திருக்கிறது? பசிக்குது. தூக்கம் வருது’’ என்று கோபமாக என்னைப் பார்த்தான் அர்ஜுன். எனக்கும்தான் பசி. மதியம் சாப்பிட்ட ஒரு சாண்ட்விச் எப்போதோ ஜீரணமாகிவிட்டது. அதோடு, வீட்டுக்குப் போனதும் செய்ய வேண்டிய வேலைகளை நினைக்கும் போதே என்னுள்ளும் கோபம் பொங்கியது. அதை இவனிடம் காட்டுவானேன்? ‘ஐ அம் ஸாரிடா செல்லம்… இன்னிக்கு அம்மா வேலையை விட்டுக் கிளம்பும்போதே நேரமா யிடுச்சு!’ என்றபடி காரைக் கிளப்பினேன்.

‘‘மாம்… என்னை பீட்ஸா ஹட் கூட்டிட்டுப் போறியா?’’ & ஆ-வலாகக் கேட்டான். ‘‘ம்ஹ§ம்! வீட்டில் உனக்குப் பிடிச்சதா ஏற்கெனவே பண்ணி வச்சிருக் கேன். ஒரு நாளைப் போல வெளியே சாப்பிட முடியுமா?’’ என்றேன்.

அவன் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான். ‘‘போ மாம்! டாடி நான் எது கேட்டாலும் வாங்கித் தருவார். நீ எப்பவும் இப்படித் தான். எது கேட்டாலும் கிடையாது, வேண்டாம்னு சொல்லிடுவே!’’ என்று முணுமுணுத்தான். நான் அதற்குப் பதில் சொல்லாமல், ‘‘நகத்தைக் கடிக்கா தேன்னு எத்தனை தடவை சொல்லி யிருக்கேன்? வாயிலே என்ன? சூயிங்கம் மெல்றியா? நாஸ்டி ஹாபிட்! எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கலை’’ என்று அவனைக் கடிந்துகொண்டேன்.

‘‘எப்பவும் உனக்கு என்னை ஏதாவது சொல்லித் திட்டாமல் இருக்க முடியாதே!’’ என்றவன், ‘‘மாம்! இன்னிக்கு வெள்ளிக் கிழமைதானே?’’ என்று கேட்டான்.

‘ஆமாம்’ என்று தலையாட்டி னேன். ‘‘ஹைய்யா! அப்போ நாளைக்கு டாடி என்னைக் கூட்டிக் கிட்டுப் போவார். நாங்க மெக்டொ னால்டில் லன்ச் சாப்பிடலாம்… எவ்வளவு நேரம் வேணா லும் டி.வி&யில் கார்ட் டூன்ஸ் பார்க்கலாம்…’’ அவன் உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனான். ‘டாடி’ என்ற தும் அவன் முகத்தில்தான் எத்தனைப் பிரகாசம்… நூறு வாட்ஸ் பல்ப் போட்ட மாதிரி!

புருஷத் துணை இல் லாமல் ஒரு குழந்தையை ஒரு பெண் தனியாக வளர்ப்பது அவ்வளவு சுலபமா என்ன? அம்மா வும் அப்பாவும் கண்ணில் விளக் கெண்ணெய் ஊற்றிக்கொண்டுதான் எனக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். ‘ஜெயராமனுக்கும் ராஜலட்சுமிக்கும் தசப் பொருத்தம்’ என்றார் ஜோசியர். விமரிசையான கல்யாணம். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, நண்பர் களும் உறவினர்களும் அட்சதை போட்டு வாழ்த்தி நடந்ததுதான். ஆனால், கலிஃபோர்னியாவுக்கு தனிக்குடித்தனம் வந்து அர்ஜுனும் பிறந்த பின், போன வருடம் எனக்குக் கிறிஸ்துமஸ் சமயத்தில் கிடைத்த மாபெரும் பரிசுதான் விவாகரத்து! தசப் பொருத்தம் இருப்பதாகச் சொன்ன ஜாதகம், எங்களுக்குள் மனப் பொருத்தம் இல்லை என்பதை மட்டும் சொல்லவே இல்லை.

அதனால், இன்றைய நாகரிக உலக வழிப்படி சண்டை சச்சரவுகள் இன்றி, ‘ம்யூச்சுவல் கன்சென்ட்’டில் பிரிந்துவிட்டோம். ‘அர்ஜுன் அம்மா விடம் வளர வேண்டும். அப்பா ஜெயராமன் வாரத்துக்கு ஒரு முறை அவனை 24 மணி நேரம் வைத்துக்கொள்ளலாம்’ என்று உத்தரவு போட்டி ருக்கிறார் ஜட்ஜ்.

நாளை சனிக் கிழமை. டாணென்று பத்து மணிக்கு ஜெயராமனின் கார் வந்துவிடும். அர்ஜுனை கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிட வைத்துக்கொண்டே அவனுக்குத் தேவையான வற்றை ஒரு பையில் போட்டேன்.

‘‘மாம்… டாடி எனக்கு பேஸ்பால், பேஸ்கெட் பால் எல்லாம் வாங்கித் தருவார். அப்புறம் கிறிஸ்துமஸ§க்கு என் னென்ன வீடியோ கேம்ஸ் வேணும்னு கேட்டிருக் கார்…’’ என்று அர்ஜுன் சொல்ல, ‘‘ஏற்கெனவே உன்கிட்ட நிறைய கேம்ஸ் இருக்கு அர்ஜுன்! அது போதும். டாடி ஒண்ணும் புதுசா வாங்கித் தர வேண்டாம். இப்பவே சதா கம்ப்யூட்டர் கேம்ஸ்தான். பள்ளிக்கூட புஸ்தகத்தைக் கண்ணால் பார்க்கிறதே அபூர்வமா இருக்கு. நோ மோர் கேம்ஸ்!’’ என்று கடுகடுத்தேன்.

‘‘போ மாம்! நான் எது கேட்டாலும் உன் பதில் ‘நோ’தான். பேசாம நான் டாடிகூடவே இருந்திருந்தா, எவ்வளவு நல்லா இருக்கும்?’’ என்று முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டான் அர்ஜுன். எனக்கும் அலுப்பும் கோபமும்தான் வந்தது.

வெளியே கார் சத்தம் கேட்டது. என் மகன் போட்டது போட்டபடி சாப்பாட்டு மேசையைவிட்டு எழுந்து வாசலுக்கு ஓடினான். ‘‘ஹாய் டாட்! இதோ, ஒரே நிமிஷம்… வந்துட்டேன்!’’ என்றவன் தன் பையைக் கூட எடுத்துக்கொள்ளாமல் அவசரமாக ஓடிப் போய் காரில் ஏறிக்கொண்டு விட்டான். நான் தினமும் அவனுடைய ‘டே கேரு’க்கு வரும்போது ஒரு தடவை கூட என்னைப் பார்க்க இத்தனை ஆர்வம் காட்டினதில்லையே!

ஜெய் காரைக் கிளப்பிக்கொண்டு போகிற வரை வாசலிலேயே நின்றிருந்தேன். வீட்டுக்குள் மறுபடி நுழைந்தபோது அலுப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. இது என்ன வாழ்க்கை? வாரத் துக்கு ஒரு தடவை மட்டுமே சந்திக்கும் ஜெயராமனிடம் அர்ஜுன் காட்டுகிற அன்புக்கு எதிரே என்னால் போட்டி போட முடியுமா? அவனுக்காகவே மற்ற நாட்களில் வாழ்கிற நான் ஏன் அவன் கண்களில் படுவதில்லை?

மறுநாள் ஞாயிறன்று 12 மணி சுமாருக்கு ஜெய் அர்ஜுனைக் கூட்டி வந்தான். வாசலில் கார் சத்தம் கேட்டதும், வெளியே வந்தேன். அர்ஜுன் என்னைப் பார்த்ததும் உற்சாகமாக, ‘மாம்… டாடி எனக்கு என்ன வாங்கிக் கொடுத் திருக்கார் பாரேன்…’ என்றான். ஜெய் காரை நிறுத்திவிட்டு பின்னால் டிரங்க்கிலிருந்து ஒரு பெரிய பெட்டியை எடுத்தான். வீட்டின் முன்னால் கார் நிறுத்தும் இடத்தில் கூடைப் பந்து விளையாடுவதற்கு தோதாக இரும்புக் கம்பம், பேஸ்கட் எல்லாம் கொண்டது என்று மேலே இருந்த படத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

‘‘வாரா வாரம் இப்படி ஏதாவது வாங்கித் தர்றதை முதல்ல நிறுத்து ஜெய்..!’’ என்றேன் இறுகிய குரலில். என்னுள் இருந்த கோபம் அவனுக்குப் புரிந்திருக்கும். என்னை ஒரு கணம் உற்று நோக்கியவன், ‘‘ஸாரி ராஜி! இனிமே உன்னைக் கேட்டுக்கிட்டுதான் எதுவும் அவனுக்கு வாங்கித் தருவேன். ஐ ப்ராமிஸ்..’’ என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றான்.

‘‘டாட்! மறந்துடாதீங்க. வெள்ளிக் கிழமை என் ஸ்கூலுக்கு நீங்க கட் டாயம் வரணும்!’’& என்று அவனை வழியனுப்பினான் அர்ஜுன்.

வெள்ளிக் கிழமை என்ன விசேஷம் பள்ளியில்?

‘‘பேரன்ட்ஸ் டே, மாம்! டாடி வரேன்னிருக்கார். நீயும் வரணும். சரியா?’’ என்றான் அர்ஜுன்.

‘‘சரி, பார்க்கலாம்!’’

வெள்ளிக் கிழமை, காலையில் பள்ளிக்கூடம் போகும்போது அர்ஜுன் தயங்கித் தயங்கி, ‘‘மாம்..!’’ என்றான்.

‘‘என்ன..?’’ என்றேன் காரைச் செலுத்திய படியே!

‘‘ஸாரிம்மா..! கோவிச் சுக்காதே. பூங்கொத்து ஒண்ணு வாங்கிட்டு வர ணும்னு டீச்சர் சொல்லி யிருக்காங்க. உன்கிட்டே நேத்தே சொல்ல மறந் துட்டேன். ப்ளீஸ்மா..! போற வழி யிலே ஒரு பூக்கடையில நிறுத்தி ஒண்ணு வாங்கிக்கலாம்!’’ என்றான். நான் அவனை முறைத்துப் பார்த் தேன். ஒன்றும் சொல்லவில்லை. என் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கண்டு தலை குனிந்துகொண்டான்.

அன்று மத்தியானம் என் சூபர்வைஸரிடம் சொல்லிவிட்டு, சீக்கிரமே கிளம்பிவிட்டேன். பள்ளிக்கூட ஆடிட்டோரியத்தில் பெற்றோர்கள் அனைவரும் கூடியிருந் தார்கள். ஜெயராமன் எனக்கு முன்னாடியே வந்திருந்ததால், முதல் வரிசையில் உட்கார்ந் திருந்தான். ஆனால், அவனுக்குப் பக்கத்தில் எனக்கு இடம் போட்டு வைக்கவில்லை. நான் மூன்றாவது வரிசையில் உட்கார்ந்தேன்.

நிகழ்ச்சி நிரலில் கொடுத்திருந்த மாதிரியே வரிசையாக நடந்தன. கடைசியாக பிரின்ஸிபல் எழுந்து, மைக் அருகே வந்தார். ‘இந்த வருட ‘பேரன்ட்ஸ் டே’யில் ஒவ்வொரு மாணவ, மாணவியும் தனக்குப் பிடித்த, எல்லா விதத் திலும் உதவுகிற ஒருத்த ருக்குப் பூங்கொத்து கொடுக்கப் போகிறார்கள்!’ என்று அறிவித்தார்.

அதையடுத்து மாணவ, மாணவிகள் பூங்கொத்துகளோடு தங்கள் பெற்றோரை நோக்கிச் சென்றார்கள். அர்ஜுன் முறை வந்தது. காலையில் நான் வாங்கிக் கொடுத்த மலர்க் கொத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஜெய்யை நோக்கி வேகமாகப் போனான் அர்ஜுன். எனக்கு ஆயாசமாக இருந்தது. அர்ஜுனுக்காகவேதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்; அவனுக்காகத்தான் நாள்தோறும் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறேன். ஆனால், நான் திட்டுவது மட்டும்தான் அவனுக்குத் தெரிகிறது. வாரத்துக்கு ஒருமுறை வந்து பாசம் பொழியும் அப்பா அவனுக்குப் பெரி சாகத் தெரிகிறார்!

ஆனால்… அர்ஜுன் ஜெய்யிடம் அந்த மலர்க் கொத்தைத் தரவில்லையே! குனிந்து அவர் காதில் ஏதோ சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி நேரே என்னிடம் வருகிறான். தன் கையில் இருந்த மலர்க் கொத்தை என்னிடம் நீட்டுகிறான்.

என் கண்கள் கசிகின்றன. நான் ஆச்சர்யத்தில் திளைத் துப் போகிறேன்.

‘‘மாம்..! யூ ஆர் தி கிரேட் டஸ்ட்! டாடியும் கிரேட் தான்… வருஷத்திலே ஒரு நாள் வர கிறிஸ்துமஸ் மாதிரி! ஆனா, மத்த முந் நூத்து அறுபத்து நாலு நாளும் நீதானே மாம், எனக்கு!’’ என்று சொல்லியபடியே என் கழுத்தைக் கட்டிக்கொண்டு, என் கன்னத் தில் முத்தமிட்டுவிட்டு, மேடைக்கு ஓடிவிட்டான்.

விழா முடிந்து கிளம்பியபோது, காரில், ‘‘சரி அர்ஜுன்… முதல்ல டாடியிடம்தானே போனே? என்ன சொன்னே அவர்கிட்டே?’ என்றேன்.

‘‘ஸாரி டாட்னு சொன்னேன்…’’ என்றான்.

பெண்களின் மனம் கடல் போல் ஆழமானது, புரியாதது என்பார்கள். குழந்தைகளின் மனதும் அப்படித் தான் என்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது!

வெளியான தேதி: 20 டிசம்பர் 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *