அருக்காணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 3,449 
 

சைக்கிளை வீட்டருகே நிறுத்திவிட்டு வெளியே கால் கழுவினார் அவர்.. அவருடைய தினசரி பழக்கம் அது.. அந்த ஆடு அவரைப் பார்த்து திரும்பியது.. இரண்டு நாளைக்கு முன்னாடிதான் வாங்கி வந்திருந்தார்.. இரண்டு மாதம் கழித்து விற்றுவிடுவார்.. இதை விற்பதா இல்லை வளர்ப்பதா என்று இப்போதே கணக்கு போட ஆரம்பித்து விட்டார்.. காரணம் அது பெட்டை ஆடு.. குட்டிக்கு விட்டால் விருத்தி ஆகும்.. அவருக்கு பட்டியில் ஆடுகள் இருக்க வேண்டும்.. இப்போது இது மட்டும்தான் இருக்கிறது..

“என்னா..?” என்றார்..

அது கழுத்தை வளைத்து சாப்பிட ஆரம்பித்தது.. சைக்கிள் மீது கையை வைத்து அவருடைய மகள் “இங்க பாரு சைக்கிள..” என்று குழந்தைக்கு காட்டி பெல்லை அடித்தாள்..

“டிரிங்.. டிரிங்… டிக்..டிக்..”

“என்னப்பா அடிக்க மாட்டெங்குது..” என்றபோது அந்த இரண்டு வயது குழந்தை சிரித்தது இவரை பார்த்தது.. பிரபாகர் வெளியே வந்து “அம்மாவுக்கு பால் வாங்கி வரச்சொன்னேனே.. எங்கப்பா..?” என்றான்..

“அட்டா.. மறந்துட்டேனே.. இதா போறேன்..”

“அப்படியே ஏதாவது ஒரு காயி.. சீக்கிரம் வாப்பா.. தள்ளிட்டு போகாத.. ஏறி உக்காந்துட்டு மிதி..” திரும்ப தங்கையிடம் “ நீ வா .. குளிச்சுரு.. மாமா எப்போ வர்றேன்னு சொன்னாரு..?”

“பத்து மணிக்கு மேல..”

“அம்மாவ ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனும்.. நீங்க கெளம்பறதுக்குள்ள அம்மாவ கூட்டிட்டு மாமா வண்டியில போயிட்டு வந்திடறேன்.. சிக்கன் எடுத்துக்கலாமா..?” என்றவன் சைக்கிளோடு கிளம்பிய அவரைப் பார்த்து..”அப்பா.. அப்படியே சிக்கன் வாங்கிடு ரண்டு கிலோ.. “

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லையே.?.”

“அது கெடக்குது.. தங்கச்சி இன்னிக்கு கெளம்பறா.. சாப்பிட்டு அனுப்பிச்சு வைக்கலாம்.. பிராயிலர் வேணாம்.. நாட்டி வாங்கிக்கோ.. பாய்க்கிட்ட சொல்லிடு.. நான் வந்து பணம் தர்றேன்னு..”கொஞ்சம் சத்தமாக.. “சைக்கிள தள்ளிட்டு போகாதப்பா..”

“சரி.. சரி.” அவன் முன்னாடி சைக்கிளில் ஏறி உட்கார்ந்த மாதிரி முயற்சி செய்து மறுபடியும் நடக்க ஆரம்பித்தார்.. அவருடைய மகள் சிரித்தாள்..”அப்பா இப்படித்தான்..” என்றாள் குழந்தையிடம்..

அவர் அந்த தெரு மறைந்து ஆலமர வீதி வந்த பிறகு “அப்பாடா.. “ என்றிருந்தது.. ஒரு வருத்தம்.. மகள் இன்றைக்கு போகிறாள்..ஏறக்குறைய ஒரு மாதமாக இங்குதான் இருக்கிறாள்.. குழந்தை பெற்ற பிறகு மூன்றாவது முறையாக வந்திருக்கிறாள்.. ரொம்ப தூரத்தில் இல்லை.. பக்கத்தில் நான்கு தெரு தள்ளி முனுசாமி தெருவில்.. ஆனால் தூரத்தில் இருக்கிற மாதிரிதான் சந்திப்புகள் இருக்கும்..

அவர் ஆலமரத்தின் அடியில் அந்த கல் திண்ணையில் உட்கார்ந்தார்.. மரத்தை சுற்றிலும் திண்ணை.. ஒரு நகருக்குறிய அடையாளத்துடன் இருக்கும் அந்த ஊருக்கு இந்த ஆல மர வீதி பிரசித்தம்.. பக்கத்தில் ஒரு மேடு,. பாறை.. பிறகு சமதளம்.. மறுபடியும் பாறை.. ஒரு சின்ன கோவில்.. அருக்காணி கோவில்.. பெரும்பாலும் ஆண்கள் போகமாட்டார்கள்.. ஒரு தூண்.. அதை தாண்டி அடுப்பு சட்டி மாதிரி மூன்று பலகை கற்களுடன் இருக்கும் கோவில்.. உள்ளே கை நீளத்தில் ஒரு களிமண் சிலை.. புடவை கட்டி தலை முடியை விரித்து ஒரு கையை மேலே தூக்கி.. “கண்ணகி செலையா..?” என்று கேட்பார்கள்..

“இல்லீங்க.. அங்க எங்க சிலம்பம் இருக்குது.?.”

“பின்ன..?”

“அருக்கானி சிலை”

“அப்படி ஒரு சாமியா..?”

“இல்லீங்க. சாமியில்ல.. சாமி மாதிரி..”

“புரியல..”

“எறநூறு வருசத்துக்கு முன்னாடி இந்த வூருக்கு ஒரு பொண்ணும் பையனும் வந்திருக்காங்க..”

“எறநூறு வருசத்துக்கு முன்னாடியா..?”

“ஆமாங்க.. அப்ப இந்த ஊரு பெரும்பாலும் காடுங்கதான்.. பொண்ணு அழகு..அது பேருதான் அருக்காணி.. பக்கத்துல மலையோரம் இருக்கற ரண்டுப்பேரு ராத்திரியில வந்து பொண்ண தூக்கியிருக்காங்க..”

“அப்பறம்..?”

“பையன் உடுவானா..?..கத்திய தூக்கியிருக்கான்..”

“ம்..ம்..”

“அதுக்குள்ள அவங்க ரண்டுப்பேரும் அதே கத்தியால அவனைய போட்டுத்தள்ளிட்டு இவளை கதற..கதற..”

“அடடா..”

“பொண்ணு விடலைங்க.. பூமாதேவி அளவுக்கு கோபம் வந்துருச்சு.. நகத்தால ஒருத்தனோட கண்ணை புடுங்கி எறிஞ்சா.. “

“ஆகா.. என்னாங்க.. கட்டுக்கதையில்லையே..?”

“பொண்ணுங்களுக்கு கோவம் வந்தா இதெல்லாம் நடக்குமுங்க..”

“ம்.. அப்பறம்..?”

“இன்னொருத்தன தொண்டைய புடுச்சு கடிச்சு ரத்தம் பாத்துட்டா.. அவங்களுக்கு வெறி வந்துருச்சு.. அவ ஓட ஆரம்பிச்சா.. தொறத்தினாங்க.. அந்த கோயிலு இருக்குது பாருங்க.. அங்க வந்து நின்னுக்கிட்டு உங்கள நான் பழி வாங்காம விடமாட்டேன்னுட்டு அந்தாப்ல இருக்கு பாருங்க பெரிய பள்ளம்.. “

“ஆமா.. வெறும் மரங்கதான் தெரியுது.. “

“அதுல விழுந்திருச்சுங்க.. இதெல்லாம் முனுசாமி சொன்னதுங்க”

“யாரு முனுசாமி..?”

“அப்ப இருந்தவரு.. எங்களுக்கெல்லாம் பாட்டனுக்கு பாட்டன்.. “

“அப்பறம்..?”

“அவங்க ரண்டு பேரும் கொஞ்ச நாளு கழிச்சு ரத்தம் கக்கி செத்துட்டாங்களாம்.. அப்பதான் அந்த பொண்ண பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சாங்க.. திடீருன்னு கோவிலு உண்டாச்சு.. கல்லுல அருக்காணின்னு கீறல் இருந்தது.. அருக்காணி கோயிலுன்னு பேரு வச்சுட்டாங்க.. புருசனை இழந்து போராடி பழி வாங்கற கோவத்தோட தன்னைத் தானே பலி கொடுத்துக்கிட்டதால ஆம்பளைங்க அந்தப்பக்கம் போகமாட்டாங்க..”

“யாரு போவாங்க..?”

“பொம்பளைங்க மட்டும்.. என்னையும் என் குடும்பத்தையும் வாழ வை தாயின்னு போய் வேண்டிக்குவாங்க.. வேண்டிக்கிட்ட மாதிரி நல்லது நடக்குதுன்னு ரத்த காணிக்க கொடுப்பாங்க.. அங்க போயிப்பாருங்க.. மண்ணெல்லாம் ஒரு ரத்தமா இருக்கும்.. “

“ரத்த பூமிதான்..” முணுமுணுத்துக் கொண்டார் அவர்.. அவருக்கு இங்கே உட்காருவது பிடிக்கும்.. ஆனால் பேசுவது பிடிக்காது.. இங்கே உட்காருகிறவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்.. காகங்களுக்கு தொந்திரவாக இருக்கும்போது மரக்கிளைகளில் பட..பட.. வென்று சத்தும் கேட்கும்.. பேச்சு நிற்காது.. சில சமயம் படுத்துக்கொள்வார்கள்.. பீடி அடிப்பார்கள்.. அங்கங்கே தாயக்கோடுகள் இருக்கிறது.. சத்தமாக பந்தயம் வைத்து சில்லரையாக கத்துவார்கள்.. காகங்களோடு இருந்து கிளிகளும் பறந்துவிடும்.. அவ்வபோது சிவப்பு நிறத்தில் விரல் நீளத்தில் ஒன்றிரண்டு காட்டுக்குருவிகள் பாறை பக்கமிருந்து வரும்.. அதெல்லாம் இப்போது வருவதில்லை.. அதனுடைய குரலுக்காக இவர் கண்களை மூடி பல நாள் அனுபவித்திருக்கிறார்…

“க்விக்…கிக்..கிக்..கிக்…க்விக்…..”

இப்பொது காகங்களின் குரல்கள் மட்டும்தான் கேட்கிறது.. அப்படியே வெள்ளையும் கருப்பும் கலந்து போட்டுவிடுகிறது.. திண்ணையை சுற்றிலும் வெள்ளை வெள்ளையாக படிந்திருக்கிறது.. மற்றவர்கள் உட்கார்ந்து.. உட்கார்ந்து தேய்ந்து மறுபடியும் போட்டு.. மறுபடியும் தேய்ந்து..

“கா..கா..கா…”“

கண்களை மூடிக்கொண்டார்.. அந்த சத்தம் அவருக்கு பிடிக்காது.. ஆனால் தன்னிச்சையாக மூடினார்.. ஏதோ பழக்கப்பட்ட ஒரு சத்தம்.. பறவையின் குரல் இல்லை.. அந்த சத்தம் அவரை கடந்து போனது.. பக்கத்திலிருந்த சைக்கிளை பிரியமாக தடவிக்கொண்டிருந்தவர் கண் விழித்து பார்த்தார்.. அந்த டூ வீலரின் பின்புறம் தெரிந்தது..

மருமகன்..

கறி.. பாய் கடை..

சட்டென்று எழுந்தார்.. சைக்கிளை தள்ளியபோது ஏதோ ஒன்று அவரை புன்னகைக்க வைத்தது.. தமக்கு தாமே தலையாட்டிக் கொண்டார்.. சைக்கிளின் சீட்டை தடவிக்கொடுத்தார்.. உற்சாகமாக கொஞ்சம் வேகமாக அதை தள்ளினார்.. அந்த உரக்கடை வந்தபோது “தீவனப்பயிறு கெடைக்குமா?”

“சாயந்தரம் வரும்.. நாலு மணிக்கு மேல வாங்க..”

“இளசா வேணும்.. “

“அஞ்சுருபா சேந்து கொடுங்க.. ஆட்டுக்குதானே?”

“ஆமா..”

“வெட்டுக்கா.. வியாபாரத்துக்கா..?”

“வளக்கறதுக்கு..”

***

பிரபாகர் அப்பாவை தனியாக கூட்டிக்கொண்டு போனான்.. “எவ்வளவு ஆச்சுப்பா கறிக்கு..?”

“கிலோ நானூறு.. ஒரிஜினல் நாட்டின்னான்,, பாத்தா அப்படி தெரியல.”

“பாயி ஏமாத்தமாட்டாருப்பா..”

“எனக்கு சந்தேகமா இருந்துச்சு.. ஒன்ற கிலோ குடுன்னு வாங்கிட்டு வந்திட்டேன்..”

“பணம் கொடுத்துட்டீங்களா..?”

“நீ கொடுக்கறேன்னுதானே சொன்னே.. போன வாரம் அந்த ஆட்ட வித்த காசுல ஆயிரம்தான் இருக்குது.. மகளுக்கு ஏதாவது செய்யலாமுன்னு வச்சிருக்கேன்.. அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லையே.. ஆஸ்பிட்டலு செலவுக்கு வேணுமில்ல..”

“சரி .. அந்த பணத்த கொடு..”

“எதுக்கு..?”

“அம்மா செலவுக்குதான்.. மாமா வண்டியில கூட்டிக்கிட்டு போயிட்டு வந்திடறேன்.. இல்லன்னா யார்கிட்டேயாவது கேட்டு வாங்கிட்டு போனும்.. இப்ப பணம் இல்லை.. ரண்டு நாளு கழிச்சு கொடுத்திடறேன்..”

“இல்லை..” என்றார்.. “அந்த பாயிக்கிட்டே ஏற்கனவே முன்னூரு ரூபா பாக்கியிருக்காமே..?”

“அதெல்லாம் வெளி செலவுக்கு வாங்கனது.. நான் கொடுத்துக்கிறேன்.. அவங்க சாப்பிடறதுக்குள்ள வந்திடறேம்பா..”

“இல்ல. .முடியாது..”

“சரி.. உங்க இஷ்டம்..” என்று உள்ளே போய்விட்டான்.. இவர் முனகினார்..”பெயிண்ட் வேலைக்கு போறான்.. ஒத்த பைசாவ ஊட்டுக்கு தர்றதலை.. எங்கிட்ட வந்து கேக்கறான்.. எம் பொண்டாட்டிய பாத்துக்கறதுக்கு எனக்குத் தெரியாதா..?” அருகிலிருந்து ஆட்டின் பக்கம் நகர்ந்தார்.. கறி வாசனை வந்தது.. அது நாட்டுக்கோழியே இல்லை.. அவருக்கு தெரியும்.. கால்.. மூக்கு.. இறக்கையை வைத்து கண்டுபிடித்து விடுவார்..

ஆலமரத்துப் பக்கம் ஒரு ஆள் சொல்லுவார்.. “நாட்டுக்கோழியெல்லாம் அந்தக்காலம்.. ஹைப்ரட் வார்த்தை தெரியுமில்ல.. தக்காளி.. கத்தரியில வெத இருக்கா.. விவசாய மறுமலர்ச்சியாம்.. கோழியிலேயும் அந்த மாதிரிதான்.. நாட்டி வேணுமுன்னா நாம தேடனும்.. “

“பாயி.. இது நாட்டி இல்லைய்யா..”

“இல்லன்னா வச்சிருங்க..”

“என்னய்யா அப்படி பேசற..?”

“எனக்கு வியாபாரம் கெடுதுல்ல..” பாய்க்கு வார்த்தைகள் சரளமாக வரும்.. முப்பது ஆண்டுகால தொழில்.. வெறும் பனியன்தான் எப்பவும்.. “ஆட்டு தொழில விட்டுட்டியாமே..?”

“ஆமாப்பா.. முடியல.. ஓட்டிட்டு போனும்.. வெயிலு தாங்கல.. ஆனா அதுதான் எனக்கு ஒரு வீடு கட்ட காரணமா இருந்தது.. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவச்சேன்.. ஒரு எடம் வாங்கினேன்.. பையன காலேஜூக்கு அனுப்பிச்சேன்.. “

“எங்க .. படிச்ச மாதிரி தெரியலியே,,?”

“அதெல்லாம் பேசவேணாம்.. படிப்பு அவனுக்கு தூரம்,. நான்தான் தப்பு பண்ணிட்டேன்.. ரண்டு வருசத்துக்கு முன்னாடி அவனுக்கு ஒரு பொண்ணு வந்தது.. நல்ல இடம்.. நான்தான் தட்டி கழிச்சுட்டேன்..”

“ஆடுதான் வளத்திருக்குது உங்கள.. விட்டுடாதீங்க அந்த தொழில.. இல்லன்னா வாங்க… பாப்பாரப்பட்டி சந்தைல ஆடுங்கள கை மாத்தி விடலாம்.. வாரத்துக்கு ஒரு நாளு போனா போதும்.. கைல ஆயிரம் நிக்கும்.. எப்புடி..?”

“இப்பவெல்லாம் வெளிய அதிகமா போறதில்ல..”

“ஏன்..?”

“பொண்டாட்டிக்கு அடிக்கடி ஒடம்புக்கு ஆகாம போயிடுது..”

“நல்லா பாத்துக்கோங்க.. பையன் அத பத்தி சொல்லலையே.” வழியனுப்பும் போது பாய் “அப்பப்ப வாங்க .. ஆட்ட பத்தி பேசுவோம்..” என்றார்.. இவருக்கு ஏனோ சைக்கிள் ஞாபகம் வந்தது.. தள்ளிக்கொண்டே போவதில் எப்போது பிரியம் ஆரம்பித்தது என்று தெரியவில்லை.. “தள்ளு வண்டி..” என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள்.. ஆலமரத்துப் பக்கம் போகும்போது “தள்ளு வண்டி..” வார்த்தை காதில் விழும்.. அவருக்கு அது சந்தோழமாக இருந்தது.. கூட வழித்துணை மாதிரி.. இப்போதும் அதை ஒரு முறை பார்த்துக்கொண்டார்.. அதனுடன் அவரை அறியாமல் பேசியிருக்கிறார்..

“உனக்கு ஏதாவது பேரு வைக்கட்டுமா..?”

“வலிக்குதா..?”

“இதா.. பக்கம்தான் போறோம்..”

“வெயிலு அதிகமா இருக்கா..?”

இப்போது கூட பேசினார்.. “உனக்கு இந்த ஆட்டுக்குட்டிய புடிச்சிருக்குதா..?”

“புடிச்சுதுன்னா கல்யாணம் கட்டி வப்பீங்களா ரண்டுத்துக்கும்..” ஒரே சிரிப்பாக மகள் அருகில் வந்தாள்.. பேரனை அவரிடம் நீட்ட அது போகமாட்டேன் என்பது போல தலையாட்டி “ம்..ம்..மம்..ம்..” என்று அம்மாவிடமே தாவியது..

“அம்மா என்னம்மா செய்யறாங்க..?”

“பொரண்டு..பொரண்டு படுக்கறாங்கப்பா.. அண்ணன் மாமாவோட டிவி பாக்கறான்.. அடுப்படியில் வேல இருக்கு.. மத்தியானத்துக்க மேல கெளம்பிடுவோம்.. சீக்கிரம் செஞ்சுடலாமுன்னா..இவன் விடமாட்டெங்கிறான்..”

“அம்மாவ தொட்டுப் பாத்தியா..?”

“இல்லப்பா.. அதெல்லாம் ஒன்னுமில்ல..” அவள் குழந்தையுடன் திரும்ப உள்ளே போகும்போது இவரும் பின்னாடியே போனார்.. மகன்.. மருமகன்.. டிவி சத்தம்.. என்று தாண்டி அந்த நெல்லு மூட்டைகள் இருந்த அறைக்கு போனார்.. கட்டிலில் அவர் மனைவி எங்கோ கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்..

“ஏம்மா.. என்னம்மா செய்யுது..?” அவள் தலையை வருடினார்.. முகத்தை தன் பக்கம் திருப்பி..”ஒடம்பு நல்லாத்தானே இருக்குது.. உள்ளுக்குள்ள ஏதாவது செய்யுதா..?”

“கறி சாப்புடனமுன்னு ஆசையா இருக்கு..”

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..”

“பேரப்பையன தூக்கி கொஞ்சலாமுன்னா கிட்டவே வரமாட்டெங்கிறான்..”

“பயம்தான்… எல்லாம் சரியாயிடும்..”

“எனக்கு ஒரு யோசன?”

“என்னா..?”

“ஒரு முற அருக்காணி கோயிலுக்கு போயிட்டு வரனமுன்னு.,” என்று அவர் முகத்தை பார்த்தாள்.. அருக்காணி கோவிலை அவளுக்கு பிடிக்காது.. காரணம் பயம்.. ““அது சாமியில்ல..பேயி..” ஆரம்பத்தில் பயத்துடன் சொன்னது இது..

“குடும்பத்துல கஷ்டம்னா பொம்பளைங்க அங்கதான் போவாங்க..”

“நான் போகமாட்டேன்..”

“அது உன்னிஷ்டம்..”

“ரத்த காவு கொடுக்கலைன்னா கனவுல வருவாளாமே..?”

“சாமின்னு கும்படறத்துக்கு இந்தம்மாவ கும்புடலாம்.. புருசன் மேல அன்பா இருந்தவ.. கோவக்காரி.. தைரியசாலி.. சொன்ன மாதிரி அந்த ரண்டு பேரையும் பழி,வாங்கினவ..”

“அதுக்குதான் சொல்லறேன்.. அது பேயின்னு..”

“இதெல்லாம் கதைதான்.. அந்தம்மாவோட உக்கிரம்தான் அந்தக்கதைய சாமிக்கதையா மாத்தியிருக்குது.. சாமின்னு எதுவுமில்ல.. ஆனா அருக்கானி கதை உண்மையா இருக்கலாம்.. “

“ஆரம்பிச்சுட்டீங்க உங்க சாமியில்லாத புராணத்த..” என்று சிரிப்பாள்..இப்போது இவரின் கண்களை பார்த்து ..”ரண்டு வருசமா உடம்பு வலி.. மயக்கம்.. பேருக்கு சாப்பாடு..ன்னு இருக்கேன்.. டாக்டரு ரெஸ்ட் எடுங்க.. உங்களுக்கு ஒன்னுமில்லன்னு சொல்றாரு.. வியாதி இல்லாம எப்படி இப்படி படுத்துக்கெடப்பேன்.. ?”

“டாக்டரு ஏதாவமு மனக்கவலையா இருக்கலாமுன்னு சொல்றாரு..”

“அப்படியும் தெரியல.. “

“பின்னாடி தெரியலாம்..”

“இல்லீங்க..நல்லா கவனிங்க என்னை..” அவரை நேரடியாக பார்த்து..”என்னைய அங்க கூட்டிட்டு போங்க.. அங்க போகனமுன்னு பத்து நாளா நினைச்சுக்கறேன்..”

“போலாம்.. நீ நடக்கனுமே..?”

“போலாம் நிதானமா.. எனக்கு என்னோட ஒடம்பை பத்தி புரியல.. பயமா இருக்குது.. பையனுக்கு வேற கல்யாணம் பண்ணனும்.. “

“எல்லாம் பண்ணிக்கலாம்..அதுதான் கவலையா..?.. டாக்டரு தலைய சொறியறாரு.. வீட்ல ஏதாவது பிரச்சனையான்னு கேக்கறாரு.. பொண்டாட்டி கூட சண்ட போடறீங்களான்னு கேக்கறாரு.. “அடிக்கடி சினிமாவுக்கு கூட்டிட்டு போங்கன்னு சொல்றாரு.. புடிச்ச சாப்பாட்ட வாங்கி கொடுக்க சொல்றாரு..அவங்களுக்கு என்னதான் புடிக்குமுன்னு கேக்கறாரு.. ஒன்னு செய்யலாமா..?”

“என்னாது..?”

“வா போலாம்..” கைத்தாங்கலாக மனைவியை பிடித்துக்கொண்டு வெளியே வந்தபோது பிரபாகர் மட்டும் இருந்தான்.. கையில் குழந்தை.. “ழ்ழழ….ழ்ழழ..பிபி.ழ்ழழ” என்றது.. பாட்டியை பார்த்து சிரித்து இரண்டு கைகளையும் நீட்டி இவள் வாங்க முயன்ற மறுபடியும் பிரபாகரிடம் ஒட்டிக்கொண்டு திரும்பிப்பார்த்து சிரித்தது..

“இரும்மா மாமா சாப்புட்டு வரட்டும்.. வண்டில போயிடலாம்.. டாக்டரு இன்னும் வரலையாம்.. இப்பதான் போன் பண்ணேன்..” எழுந்து அம்மாவை இன்னொரு பக்கம் பிடித்துக்கொண்டு..”இனிமே உங்க வீட்ல காசு கேக்கமாட்டேன்..”

அவள் சிரித்து..”அதென்ன உங்க வீடு..?” குழந்தையின் கன்னத்தை தட்டி..”நீயும் போயி சாப்புடு..”

இவர்..”பணம் கேட்டான்.. இல்லைன்னுட்டேன்.. மருந்து செலவுக்கு வேணுமில்ல..”

“இனிமே கேக்கமாட்டேன்.. நாலு நாளா வேலயில்ல.. அதுக்குதான் கேட்டேன்.. கறிக்கு நான்தானே காசு கொடுக்கறேன்னு சொன்னேன்…”

அவர்..”எங்க கொடுத்த?.. பாயி பழசே பாக்கி இருக்குதுங்கறாரு” என்றபோது அவள் குறுக்கிட்டு “அவனைய நம்பாதீங்க.. சீட்டு போடறான்.. எங்கேயோ பைனான்ஸ்ல வட்டிக்கு கொடுத்திருக்கானாம்.. பணம் வச்சிருக்கான்.. கல்யாணத்துக்கு ரெடியாயிட்டான்.. பொண்ணு பாத்துட்டியாடா சொந்தமா..?” என்றபோது வெட்கத்துடன் சிரித்தான்..

வாசலை தாண்டியபோது மகளும் வந்து சேர்ந்துக்கொண்டாள்.. “இனிமே நான் வந்தா கறியெல்லாம் எடுக்காதப்பா..” என்று கடுகடுத்தாள்.. அவளுக்கு அது பிடிக்கவில்லை என்பது முகத்தில் தெரிந்தது..”அம்மா களிக்கு கறிக்கொழம்பு நல்லா சாப்பிடும்.. இப்ப விட்டிட்டு நாம சாப்பிடறோம்.. டாக்டரு என்னதாம்மா சொல்றாரு..?”

“உடம்புல பிரச்சனை இல்லங்கிறாரு..”

அவர்..”நீ போயி அவர கவனிம்மா..கறிய நல்லா எடுத்துப்போடு” சைக்கிள் அருகே போகும்போது..”சைக்கிளு எதுக்கு..?” என்றான் பிரபாகரன்..

“அம்மாவை தள்ளிட்டு போக..”

***

சைக்கிளை அவர் தள்ளினார்.. பின்னாடி கேரியரில் அவர் மனைவி.. வீட்டுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தார்கள்.. ஒரு ஆள் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனான்.. நான்கு வீடு தள்ளி அந்த பழக்கப்பட்டவள்..”என்னாம்மா.. சின்ன வயசு ஞாபகமா..?” என்று சிரித்தாள்..

இவள்..”நான் எறங்கிறட்டுமா..?” என்றாள்.. கேரியரில் அவள் உட்கார்ந்து பழக்கப்படாதவள் அல்ல.. உட்கார்ந்து சீட்டின் பின்னால் பிடித்துக்கொண்டு அவருடைய முதுகில் வியர்வையை ரசித்தபடி பயணப்பட்டவள் அவள்.. பத்து..பதினைந்து கிலோ மீட்டரெல்லாம் போய் வந்திருக்கிறார்கள்.. அந்த சைக்கிளின் சத்தம்.. குணம்.. நிறம்.. சக்தி.. எல்லாமே அவளுக்கு பழகிவிட்டது.. “முன்னாடி காத்து எறங்கற மாதிரி தெரியுது..” என்று பார்த்தே சொல்லுவாள்.. பின்னாடி மூட்டையை வைக்கும்போது “இதுக்கு தாராளமா தாங்கும்..” என்பாள்.. இவர் சீட்டுக்கவர்.. ஹெட்லைட் கவர்.. என்று அலங்கரிக்கும்போது கழுவி விடுவாள்.. அடுத்த தெருவில் ஒரு சைக்கிள் திருடுபோய்விட்டது என்று தெரிந்து அவ்வபோது வீட்டுக்கு வெளியில் சைக்கிள் இருக்கிறதா என்று எட்டிப்பார்ப்பாள்..

“அதுதான் பூட்டியிருக்கோமே.. எதுக்கு பாக்கறே..?”

“ம்.. அப்படியே தூக்கிட்டு போயிட்டாங்கன்னா..” என்று ஒரு சங்கிலியை வாங்கி சீட்டிக்கு கீழே வளைத்து ஆட்டுப்பட்டி பக்கம் ஒரு தூணோடு சேர்த்து பூட்டு போட்டாள்.. இரவில் ஆடு கத்தும்போது “சைக்கிள் இருக்குதா பாருங்க..” என்பாள்.. அவர் ஒரு முறை வேடிக்கையாக “சைக்கிளுக்கு தமிழ்ல என்னான்னு சொல்லு..?”

“சைக்கிளு”

“இல்ல.. அது இங்கிலீஸ்..”

“என்னடா பிரபாகரு..?”

“அவன கேக்காத..”

“நீங்களே சொல்லுங்க..”

“மிதிவண்டி..”

“மிதிவண்டியா..?” சொல்லிப்பார்த்து..” சைக்கிளு.. மிதிவண்டி.. சைக்கிளு.. மிதிவண்டி.. நான் சைக்கிளுன்னே சொல்லிக்கறேன்..”

“நானும் அப்படித்தானே சொல்லறேன்.. பழக்கமாயிடுச்சு.. பசங்க மம்மின்னு சொல்லற மாதிரி.. இங்கிலீஸ் நிறைய உள்ளாற வந்திருச்சு.. பஸ்ஸூ.. பைப்பு.. சேரு.. போட்டோ.. ஆட்டோ.. காபி.. டீ.. கிளாஸ்.. சிட்டி.. இப்படி போகுது.. அத விடு.. மெட்ராஸ்ல ஒரு பையன கூப்புட்டு கம்பு,, ராகி.. இதப்பத்தி சொல்லுன்னாங்களாம்.. அதெல்லாம் எந்த ஊருன்னு திருப்பி கேட்டானாம்.. இன்னிக்கு கம்பங்கஞ்சி உண்டா..?” அவர் கம்பங்கஞ்சி இல்லாமல் இருந்ததில்லை.. அந்த வாசனைக்கு அடிமை.. இப்போது சொன்னார்..

“கம்பங்கஞ்சி போச்சு.. ஆடு போச்சு..” லாவகமாக சைக்கிளின் முன்புறம் .. பின்புறம் என பிடித்தபடி தள்ளினார்.. அவளுக்கு முகத்தில் வெட்கம் பரவி உதடுகளில் தெரிந்தது.. “வெக்கமா இருக்குதுங்க..” என்றாள்..

அந்த ஆலமரம் வந்தபோது காகங்களை காட்டினார்.. இரண்டு பேர் தாயம் விளையாடுவதை நிறுத்தி மறுபடி தொடர்ந்தார்கள்.. மரத்தை ஒட்டி இடதுபுறம் பிரியும் சிறிய சந்து.. உள்ளே நுழைந்து அந்த சிமெண்ட் தொட்டியை தாண்டி வலதுபுறம் திரும்பியபோது அந்த பாறை தெரிந்தது.. ஒரு மேடு தாண்டும்போது வீடுகள் பின்தங்கி சோளம் விளைந்திருந்த ஒற்றையடி பாதையில் லேசாக மூச்சு வாங்கினார்.. பின்னால் சைக்கிள் இழுத்து ஒரு பக்கமாக சரிய முயன்றபோது நிறுத்தி மறுபடியும் தள்ளினார்.. நான்கு பையன்கள் எதிரில் தாண்டி நடக்கும்போது “நாங்க தள்ளட்டுமா..?” என்று கேட்டபடியே சிரித்துக்கொண்டு போனார்கள்.. அந்த பாதை இடதுபுறம் திரும்பி புதர்களாக பிரிந்து ஒரு பெரிய மாட்டுக் கொட்டாயை தாண்டி மீண்டும் இடதுபுறம் பிரிந்தபோது அந்த பாறை முன்புறம் உயரமாக நின்றது..

பாதை வளைந்து சென்று எதிரில் அந்த கோவில்.. உள்ளே அந்த குட்டி சிலை.. சுற்றிலும் அனல் காற்றுடன் இருந்த வெற்றிடம்.. பின்னால் மரங்களின் அடர்த்தியில் அந்த பள்ளம்.. சரிவில் காய்ந்த இலைகள்.. மரங்களின் கிளைகளில் பறவைகள் தெரியாமல் ஆனால் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது..

சைக்கிளை நிறுத்தினார்.. அவள் மெல்ல இறங்கினாள்.. அவருடைய முதுகை தடவினாள்..”வியர்வை.. எத்தனை நாளாச்சு இப்படி வந்து..”

“நாள் இல்லை.. வருசம்..ஏன் அப்படி பாக்கற..?”

“பயமா இருக்குது..” நெருங்கி முன்புறம் குனிந்து பார்த்தாள்.. அந்த காட்டுக்குருவியின் சத்தம்.. “க்விக்..க்விக்….க்க்க…க்விக்..”..

எங்கிருந்தோ “ஓஓஓஓ..ஓஓஓஓ…..ஓஓஓஓஓ…” சத்தம்.. தூரத்தில் உளி அடிக்கும் ஓசை.. தரையில் ஒரு எறும்பு வரிசை போனது.. காய்ந்து உடலை இழந்து காற்றில் ஆடும் பட்டாம்பூச்சி இறகு.. மண் தரையில் ரத்தம் காய்ந்து உதிரி உதிரியாக எல்லா இடத்திலும் பரவி.. அருகில் ஒரு சின்ன பாறையில் நிறைய பெயர்கள்.. கரித்துண்டில் இரண்டு கண்கள் மட்டும் வரைந்து..”நாம் போயிடலாமா.? பயமா இருக்குது..”

“நீதானே போலாமுன்னு சொன்ன.?.”

“சொன்னேன்.. அதென்ன ஒஒஒஒ..ன்னு சத்தம்..?”

“அது கீழ பள்ளத்து பக்கம் ஆடு மேய்க்கறவங்க கத்தறது.. மரங்களுக்கு நடுவுல வரும்போது மாறி வரும்.. காத்தடிக்கும்போது இன்னும் வேற மாதிரி கேக்கும்..” அவளை சற்று தள்ளி தரையோடு படர்ந்திருந்த பச்சை புற்களின் அருகே உட்கார வைத்தார்.. அருகில் உட்கார்ந்தார்.. அவள் மீண்டும் அந்த அருக்காணி சிலையை பார்ப்பதை கவனித்தார்..

“இங்க பாரு.. இந்த எடம் எவ்வளவு அழகா இருக்குது பாரு.. தனிமை.. குருவிங்க.. அந்த குருவிங்கள பாத்துட்டே இருக்கலாம்.. கருப்பல.. கருஞ்செவப்புல.. மஞ்சள் கலர்ல.. மழை பெய்யும்போது இந்த சரிவுல தண்ணி இறங்கறது அவ்வளவு அழகா இருக்கும்.. சில சமயம் கொத்து கொத்தா பட்டாம்பூச்சிங்க பறக்கும்.. இங்க நீலமும் கருப்பும் கலந்து பட்டாம்பூச்சிங்க அதிகம்.. அங்க பாரு.. அங்க ஒரு மரம் தெரியுதில்ல.. சரிவுல.. அங்க ஒரு மரம்கொத்தி இருக்குது.. மரத்த கொத்திட்டே இருக்கும்.. பக்கத்துல ஒரு நா போயி பாத்தேன்.. மரம் பூரா ஓட்ட.. டொக்..டொக்..டொக்.. இந்தப் பள்ளம் இருக்குது பாரு.. எழுபது..எம்பது அடி இருக்குமா..கீழ காடு.. மரங்க.. விடிகாலைல வந்து பாத்தா மஞ்சா கலர்ல பூவுங்க.. எங்க பாத்தாலும் அதே நெறம்.. பத்து மணிக்கு மேல அப்படி தெரியாது.. எல்லாம் இயற்கை.. அதுக்காகவே இங்க வருவேன்.. “அருக்காணின்னு ஒருத்தி இல்ல.. கலவப்படாத..”

“என்ன சொல்லறீங்க..?”

“அதெல்லாம் காது வழிக்கதை.. திரிச்சு.. திருச்சு இப்படி வந்திருக்குது.. அந்த பள்ளத்த பாத்தியா..?”

“ஆமா..?”

“செங்குத்தா இல்ல.. சரிவா இருக்குது.. அருக்காணி குதிச்சிருந்தா செத்திருக்க முடியாது..”

“அதனால..?”

“அவ ஒரு கற்பனை..”

“அப்படி சொல்லாதீங்க.. பாவம்.. சின்ன வயசுலேயே எப்படிப்பட்ட கொடுமை..”

“அவள பேயின்னு சொல்லிட்டு இப்ப பாவமா..?”

“இப்ப தோணலை.. பரிதாபமா வருது அவ மேல..”

“எனக்கு கூட அப்படி தோணும் சில சமயம்.. “

“இங்க ஆம்பளைங்க வரமாட்டாங்களே.. நீங்க எப்படி..?”

“வருவேன்.. அப்பப்ப..”

“பயமில்லையா..?”

“இல்ல.. இப்பதான் .. ஒரு ஆறு மாசமா..?”

“ஏன்..?”

“எம் பொண்டாட்டிக்கு ஒடம்பு சரியாகனுமில்ல.. கும்பிட்டுக்கிட்டேன்..”

அவள் அவரையே பார்த்து..”அருக்கானிய கற்பனைன்னு சொன்னீங்களே..?”

“இருந்துட்டு போட்டுமே.. ஒடம்பு சரியான போதாதா.. கனவுல வந்து உம்பொண்டாட்டிக்கு உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்குது.. பையன்தான் பிரச்சனைன்னு சொன்னா..”

அவள் சிரித்து..”எப்படி இருந்தா..?”

“இந்த செலதான்.. “

மீண்டும் சிரித்து..”பிரபாகரன் எதுவும் பிரச்சனை இல்ல.. சொல்லத் தெரியல.. எனக்கு இங்க தனியா இருக்கனும்.. கீழ அந்த முறுக்கு கடைக்கிட்ட இருக்கீங்களா..?.. இங்க ரத்தம் ரத்தமா இருக்குது.. தள்ளி விடறேன்.. அந்த கண்கள அழிக்கனும்.. அந்த அருக்காணி ஒரு கொழந்த.. அவள காளி மாதிரி திரிக்கக்கூடாது..எனக்கு ஒரு கரித்துண்டு எடுத்துக்கொடுங்க..”

“எதுக்கு..?”

“ஒரு அழகான பொண்ணு மாதிரி வரைஞ்சு இதுதான் அருக்காணின்னு எழுதப்போறேன்..”

***

வீட்டுக்கு வரும்போது பிரபாகர் கோவத்துடன் இருந்தான்.. அவரிடம் பேசவில்லை.. மகளோ மருமகனோ இல்லை.. ஆடு கத்தியது.. அவர் தண்ணீர் வைத்தார்.. அவள் ஆட்டின் அருகில் உட்கார்ந்து அதை தடவிக்கொடுத்து.. “நடந்தே வந்துட்டேன்.. தெம்பா இருக்குது..” என்றாள்..

“என்னால கூட நம்ப முடியல.. இனிமே அடிக்கடி போயிடுவோம்.. “

“ஆட்டையும் கூட்டிக்கிட்டு போயிடலாம்.. நீங்க ஆடு மேயுங்க.. நான் அருக்காணி மண்ணுல ரத்தத்தை சுத்தம் பண்ணறேன்..”

பிரபாகர் அவளிடம்..”மாமா போயிடுச்சு..”

“நல்லா சாப்புட்டாறா..?”

“ம்..ம்.. தங்கச்சி அழுதுக்கிட்டே போயிடுச்சு..”

“ஏன்..?”

“நீ கறி சாப்புட முடியாதே.. அதுக்குதான்..”

“அதுக்கு ஏன் எடுத்தீங்க..?”

“எடுக்கலைன்னா எப்படி..? மாமா அதையெல்லாம் பாப்பாரு இல்ல..”

“அது அவருக்கா தெரியனும்.. சரி..சரி.. நான் சீக்கா கெடக்கறேன்னு சாப்பாட்ல கொற வைக்கக்கூடாது.. நீ செஞ்சது சரிதான்..”

“அப்பறம்.. மாமா வந்து.. “ தயங்கினான்.. அவர் ஆட்டின் முகத்தை தடவினார்.. அவள் ஆட்டின் முதுகை வருடி..”என்னா..?”

“கொழந்தைக்கு காது குத்தனுமாம்.. “

“சரி..”

“ஆடு வேணுமாம்.. இத கொடுத்துட சொன்னாரு.. பணம் கொடுத்தர்றேன்னு சொன்னாரு..” என்றதும் அவர் பட்டென்று..”பேரப்புள்ளைக்கு காது குத்த ஆட்டுக்கு பணம் வாங்கமாட்டாங்கன்னு அவருக்கு தெரியும்.. அப்பறம் எதுக்கு பணத்தை பத்தி பேசறது..?.. எங்கள சோதிக்கவா..?”

“அவர பத்திதான் தெரியுமில்ல.. விடுங்க..” அவள் திரும்பி அவனிடம்..”அவருக்கு போன் போட்டு சொல்லு.. அருக்காணி கோயிலுக்கு ஆட்ட நேந்துட்டாங்கன்னு..”

“எப்ப..?”

அவர்.. “ஆமா.. உங்கம்மா உடம்பு குணமாகனமுன்னு.. “

“தங்கச்சி பாவம்மா..”

“நாம இன்னும் முடிவு சொல்லல இல்ல..”

“அதுக்கு..?”

“அவருக்கு நெறைய செஞ்சாச்சு.. பேரனுக்கு மோதரம் செஞ்சு போடலாம்.. ஆடு வேணுமுன்னா அவரோட பணத்துல வாங்கிக்கொடுத்துடலாம்.. “

இல்ல.. நானெ வாங்கிக்கொடுத்துடறேன்..” என்றான் பிரபாகரன்.. “தங்கச்சி கொழந்தைக்கு இதுகூட செய்யலைன்னா எப்படி..? அவரு பணத்துல வாங்கறதெல்லாம் நடக்கற விழயமா..?”

“பையன் தெளிவாத்தான் இருக்கான்..” என்றவர் அவன் அங்கிருந்து போனப்பிறகு “நான் ஆட்டை கோவிலுக்கு விட்டுட்டேன்னு சொல்லவே இல்லையே.?.”

“நான்தான் சொன்னேன்..”

“அப்ப இது பலியாடா..?” அந்த ஆட்டை தன் பக்கமாக திருப்பி “வளக்கலாமுன்னு பாத்தேன்.. “

“வளக்கத்தான் போறோம்.. “

“அப்ப கோயிலுக்கு நேந்துக்கிட்டேன்னு சொன்னது..?”

“பொய்யி..”

“அப்படி பொய் சொல்லக்கூடாது..”

“ரத்தம் வேணாமுன்னா பொய் சொல்லலாம்.. உங்களுக்கு சைக்கிளு.. எனக்கு ஆடு.. எனக்கு ஏதோ பிரச்சனைன்னு பேசிக்கிட்டோம் இல்லையா..?”

“ஆமா..”

“கண்டுபுடுச்சுட்டேன்.. எதை இழந்தேன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.. டாக்டரு கேட்டாருன்னு சொன்னீங்களே.. எது உங்க பொண்டாட்டிக்கு ரொம்ப புடிக்குமுன்னு..?”

“ஆமாமா..” அவர் பிரகாசத்துடன் “என்ன..என்ன..?”

“இந்த ஆடுங்கள..”

“புரியல..”

“எனக்கு புரியுது.. ஒரு ரண்டு வருசமா நீங்க ஆடுங்கள வளக்கறதுல.. ஒன்னு ரண்டு வாங்கிட்டு வந்து ரண்டு மூணு மாசத்துல வித்துடுவீங்க.. ஆட்டை கவனிச்சுக்கிட்டது நானு.. வளத்தது நானு.. அதுங்க குட்டி போடும்போது பக்கத்துல இருந்து பாத்துக்கிட்டது நானு.. அதுக்கு முன்னாடி கும்பல் கும்பலா ஆடுங்க இருக்கும்போது அதுங்க என் காலை சுத்தி சுத்தி வரும்.. பலிக்கோ விக்கறதுக்கோ போகும்போது உள்ளுக்குள்ள அதை தாங்கறதுக்கு கஷ்டப்படுவேன்.. ஆனா அடுத்து இன்னொரு கூட்டம் சேரும்போது அது சரியாயிடும்.. நாம வளத்த ஆடுங்கள்ள ஒன்னு கூட வீட்டுக்குன்னு வெட்ட வேணாமுன்னு நான் சொன்னதுக்கு காரணம் அதுதான்.. நீங்க சைக்கிள் கூட பேசுவீங்க.. நான் ஆடுங்க கூட பேசுவேன்.. குட்டிங்க என் மடியில படுத்துக்கும்.. பெருசுங்கெல்லாம் என்னைய வந்து செல்லமா முட்டும்.. இப்ப பட்டி காலியா இருக்குது.. எந்த சத்தமும் இல்லாம.. இது தனியா கத்தறது சகிக்கல.. ஒரு ஜோடி சேத்துங்க.. அப்படியே இருந்துட்டு போட்டும்.. குட்டிங்கள பாக்கனும்.. பின்னாடி வித்துட்டு போங்க.. ஆனா வெட்டுக்கு அனுப்பாதீங்க.. இல்லன்னா இங்கேயே இருந்து சாகட்டும்.. அதனாலதான் எனக்கு அருக்காணிய புடிக்கல.. ரத்த வாசனை..” என்றவளை விநோதமாக பார்த்தார்..

“இத நம்ப முடியல.. இதுதான் உண்மைன்னா எப்படி.. எப்போ தோணுச்சு..?”

“எப்போவா..?.. இப்பதான்.. காது குத்துக்கு மாமா ஆட்ட கேக்கறாங்கன்னு பிரபாகர் சொன்னப்ப.. என்னைய அறியாம அருக்காணிய காரணமா வச்சு தடுத்துட்டேன். “

“ஆனா ஆட்ட பலி கொடுக்கலைன்னா அருக்காணி கோவிச்சுக்குவாளே..?”

“அதுதான் சொன்னீங்களே.. அருக்காணி கற்பனைன்னு.. நான் அவளை குழந்தை மாதிரி போட்டு கரியால கோடு கோடா வரைஞ்சுட்டு வந்திருக்கேன்..”

“நீ என்னோட திருப்திக்காக என்னவோ சொல்ற..”

“சைக்கிள விட்டுட்டு தனியா போவீங்களா..?”

“ரொம்ப கஷ்டம்..”

“அது மாதிரிதான்..”

“ஒடம்பு சரியாயிடுமா..?”

“ஆயிடுச்சு..” என்று அந்த ஆட்டை கட்டிக்கொண்டாள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *