அரவணைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 733 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவனுக்கு வயது இருபத்தைந்து இருக்கும். நல்ல வாளிப்பான உடலைமைப்புக்கு ஏற்ற சுருண்ட கேசம், சிவந்த நிறம்,எப்போதும் சிரிப்பை ஒட்டிக்கொண்டுள்ள வட்ட முகம். ஆனால் கண்களில் மட்டும் இனம் புரியாத சோகம். நடையிலே தளர்ச்சி… சிராங்கூன் சாலையில் வி. கே. கே. கல்யாணசுந்தரம் அண்ட் சன்ஸ் நிறுவன வாசலில் நின்று சாலையின் எதிர்ப்புறத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்களில் தெரிந்த சோகம், இப்போது சோர்வாகிக் கொண்டிருந்தது. சாயும் பொழுதில் வந்தபோதிலிருந்து எதிர்பார்த்து எதிர்பார்த்து அலுத்துப் போன அவனது தோற்றம் அதை வெளிப்படுத்தியது. கால்கள் சோர்ந்து போய் அவனாகவே சாலையைக் கடந்து எதிரே போய் அங்கே குழுமிக்கிடந்த மக்கள் கூட்டத்தில் கலந்தான். சில மணித்துளிகள் கடந்திருக்கும், யாரோ அவன் தோளைத் தொட்டு நிறுத்தினார்கள்; திரும்பிப்பார்த்தான்.

“யாரு… சேங்கர் வாத்தியாரா…! எப்படி இருக்கீங்க ஐயா…! நல்லா இருக்கீங்களா?”

ஆர்வமாய்க் கேட்டான். கண்களில் மகிழ்ச்சி துளிர்விட ஆரம்பித்தது. நடையிலும் ஒரு புதுவிதத் துள்ளல்…!

“வாங்கய்யா…. அப்படி உட்கார்ந்து பேசுவோம்… எவ்வளவோ நாளாச்சு உங்களப் பார்த்து… வீட்டுல அம்மா பாப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஓர் ஓரமாய்த் தரையில் அமர்ந்தான். அவரும் அவனுடன் அமர்ந்தார்.

“எப்படா இங்கே வந்தே…! ஊர்ல எல்லாம் சொகமா இருக்காங்களா? ஒங்கப்பன்…அவர்தான் என் சினேகிதன் இராஜபாளையம் ராமசாமி எப்படி இருக்கான்… ஒரு வார்த்தை கூட சொல்லாமப் போயிட்டான்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க… அங்கே அப்படி என்னடாப்பா அவனுக்கு அவசர வேலை…? எப்போ திரும்புவான்…?”

சேங்கர் வாத்தியார் சாவகாசமா உரிமையோடு அவனிடம் குசலம் விசாரிக்கலானார். அந்தத் தெரு விளக்கின் வெளிச்சம் நேரடியாக அவன் முகத்தில் படிந்து அவன் நீர் நிறைந்த கண்களை மின்ன வைத்தது. முகம் கூம்பத் தொடங்கியது. சேங்கர் வாத்தியார் பதறிப்போனார்.

“ஏண்டா… ஏன் அழறே ! நான் ஏதும் தப்பா கேட்டுட்டேனா… சின்ன பையனாட்டம் ஏண்டா அழறே! உன்னை அனுப்பிட்டு அவன் அங்கேயே படுத்துக்கிட்டானா… வரமாட்டேன்னு சொல்லிட்டானா?’

சேங்கர் வாத்தியார் அவனது தோளைப் பற்றிக் குலுக்கினார். அவன் குழந்தை போல் அழுகிறான். சிலநிமிடங்கள் அவனாக அழுது ஓயட்டும் என்று காத்திருந்தவர்…

“ஏம்பா… ஏன் அழறே! உங்கப்பன் உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டானா… அழாதே… அவன் போனா நீ அனாதையாகிடமாட்டே.. நானில்லையா உனக்கு…”

வாழ்க்கையில் மேடுபள்ளங்களை – நெளிவு சுழிவுகளைக் கண்டு பழுத்த பழம் அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டது. தாயின் மடியில் விழுந்த குழந்தைபோல் துயரம் மறைந்து நிமிர்ந்தான் அவன்.

“அப்பாவுக்கு எந்த சீக்கும் வரல… திடீர்னு நெஞ்சுவலின்னு சொல்லி ஆசுபத்திரிக்குத் தூக்கிக்கிட்டுப் போனாங்க… ஊசி போடப் போனவரு பொணமாத்தான் வந்தாரு… கேட்டதுக்கு மாரடைப்புன்னு சொன்னாங்க..”

அவன் சொல்லி முடித்தான். சேங்கர் வாத்தியார் தானாக எதையோ உணர்ந்து கொண்டதாய்…

“அது சரி இப்ப எதுக்கு நிக்கறே… யாரைப் பார்க்கப் போறே…! எங்கே தங்கி இருக்கே? என்று ஆறுதலாய்க் கேட்டார். அவன் தன் கைப்பையிலிருந்து சில காகிதங்களை எடுத்துக் கொடுத்தான். அந்த வெளிச்சம் படிக்கப் போதுமானதாக இல்லாததால் அவன் வாய்மொழியாக சொல்லச் சொன்னார். சில செய்திகளை அவன் சொன்னான். அவருக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அதே சமயம் அந்த இளைஞன் மேல் இனம்புரியாத கழிவிரக்கமும் தோன்றியது. அவனை அழைத்துக் கொண்டு சில மீட்டர் தூரம் நடந்து உணவகம் ஒன்றில் நுழைந்தார். அவனைக் கேட்காமலேயே அவனுக்கும் தனக்கும் உணவுக்குச் சொல்லிவிட்டு அவன் கொடுத்த காகிதங்களைப் படிக்க ஆரம்பித்தார். படிக்கப் படிக்க அவரின் நெற்றி சுருங்க ஆரம்பித்தது. வரிவரியாய்க் கோடுகள் நெளியத் தொடங்கின.

“ஏம்பா… நீ இங்கே போய்ப் பார்த்துட்டியா… என்ன சொன்னாங்க…?”

ஏதோ ஒரு சிறு அச்சத்தின் அழுத்தத்தில் அவனைக் கேட்கிறார்.

“பார்க்கத்தான் வந்தேன்…! அங்கே என்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்ன ஆளு இன்னும் வரலே… அதுக்காகத்தான் காத்திருக்கேன்… இது விஷயமா உங்களுக்கு ஏதும் விபரம் தெரிஞ்சா சொல்லுங்களேன்”

கையில் எடுத்த இட்லித் துண்டை வாயில் போடாமலேயே அவரைப் பார்த்தான். அவர் தலையை ஆட்டினார்.

“எல்லாம் நல்லாவே தெரியும்பா… இந்த வட்டாரத்திலேயே நாற்பது வருஷமா சுத்தித் திரியர எனக்குத் தெரியாமப் போவுமா என்ன…? எல்லாம் எனக்குத் தெரியும்…! நீ நல்லா சாப்பிடு… சாப்பிட்டு முடிச்சதும் என்னோட வா… எல்லா விஷயத்தையும் நான் உனக்கு விபரமா சொல்றேன்..”

வாத்தியார் அவன் தட்டில் இருந்த இட்லிக்குக் கொஞ்சம் கூடவே சாம்பாரை ஊற்றினார். “இன்னும் ஒன்னு சாப்பிடு, என்று வற்புறுத்திச் சாப்பிட வைத்தார் பின் அவனை அழைத்துக் கொண்டு நடந்தார். அருகே இருந்த கோயிலுக்குப் போனார்.முன்பக்கம் நின்றவாறே அம்பாளைத் தரிசனம் செய்துவிட்டு அவனிடம் திரும்பி..

“நீயும் கும்பிட்டுக்கோ… இனிமே அவதான் உனக்கு தெம்பையும் உறுதியையும் கொடுக்கணும். தன்னை நம்பின யாரையும் அவ தவிக்க விட்டது கிடையாது…” என்று சொல்லி விட்டு நடந்தார். அவனும் பின் தொடர்ந்தான்.

சாலையைக் கடந்து எதிரே வந்து கடையின் முன்னால் போய் நின்றார். உப்பு புளி முதல்… செய்தித் தாள் புத்தகம்… லேட்டஸ்ட் போன் கார்டு வரை விற்பனை செய்யப்படுகின்ற இடம் இது.நிற்க இடமில்லாமல் கூட்டம் நிரம்பி இருந்தது. அவனை அழைத்துக் கொண்டு உள்ளே போய் எதையோ தேடுவது போல் நடந்து திரும்பி வெளியே வந்தார். அவன் எதுவும் புரியாமல் அவரைத் தொடர்ந்து வந்து அவர் முகத்தையே பார்த்தான்.

வாத்தியார் அவன் தோளில் கை போட்டுக் கொண்டார்.

“தம்பி… இந்த இடந்தான் நீ தேடிவந்த இடம். இது தான் உங்கப்பன் வெச்சிருந்த மளிகைக்கடை… ஆனா இப்ப நீயோ உங்கப்பனோ சொந்தம் கொண்டாட முடியாது. ஏன்னா உங்கப்பன் இதை இந்தச் சீனன்கிட்டே கொடுத்துக் காசு வாங்கிக்கிட்டுப் போயிருக்கான். அவன் வாங்கின காசுக்குக் கடை இவனுக்கு உடைமை ஆயிடுச்சு… ! இதுமட்டுமில்லே; இதே மாதிரி நெறைய கடைங்க நம்ம ஆளுங்களுக்குச் சொந்தமான கடைங்கல்லாம் இப்ப சீனன்கிட்டேதான் இருக்கு…!”

அவர் சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தார். அவனோ சிலையாகி அங்கேயே நின்றான். கண்ணில் மாலை மாலையாய் நீர் வழிந்து கொண்டிருந்தது. உடம்பில் சிறு நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது. கண்மூடிக் கண் திறப்பதற்குள் அவன் தடால் என்று கீழே விழுந்தான். வீதி நிறைந்த மனிதர் கூட்டம் அவனைச் சுற்றிக் கொண்டது. சில நிமிடச் சலசலப்புக்குப் பின் ஆம்புலன்ஸ் வந்து அவனை மருத்துவமனைக்குக் கொண்டு போனது. மருத்துவர்கள் அவனைச் சோதித்து மருந்து கொடுத்து படுக்கச் சொல்லி விட்டுப் போனார்கள். வெட்டிப் போட்ட வாழைக் கன்றாய்த் துவண்டு கிடந்தான்.

அவனது நிலை கண்டு மனம் பதறிப்போன சேங்கர் வாத்தியார் மருத்துமனை தாதியரின் கவனிப்பில் அவனை விட்டுவிட்டு வீட்டுக்குப் போனார். வழிநெடுகிலும், இரவு பூராவும் அந்த இளைஞனின் நினைவும், அவனை இப்படி அனாதையாக்கி விட்டுப் போன அவனது அப்பனையுமே சுற்றிச்சுற்றி வந்தது.

என்னமாய்ச் சம்பாதித்தான் ராமசாமி. தஞ்சம்பகார் கப்பல் துறைமுகத்தில் எப்போதும் ஓய்வேயில்லாமல் உழைத்து எறும்பு போல் சேமிப்பான். அவன் சம்பாதித்தியத்தில் அவன் பேர் சொல்லிக் கொண்டிருந்த மளிகைக் கடைதான் இன்று சீனனின் புரொவிஷன் ஸ்டோராகி இருக்கிறது. உழைத்துச் சேர்த்த காலத்தில் உருப்படியாய் இந்த நாட்டிலேயே கால் ஊன்றி நிற்காமல்..

அக்கரைக்குப் பறந்து கொண்டிருந்தவன் அவன் பெற்ற பிள்ளையை இன்று ஆலாய்ப் பறக்க விட்டுட்டுப் போய் விட்டான் என்று மனதுக்குள்ளேயே உருகினார்.

காலையில் மருத்துவமனைக்குப் போனபோது …

அவன் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வாத்தியாரைப் பார்த்ததும் எழுந்து வந்தான்.

“என்னோட நெலமையைப் பார்த்திங்களாய்யா…! இந்த ஊர்ல நான் இனிமே பிச்சை எடுக்க வேண்டியதுதானா…? எனக்கு இப்படி ஒரு நெலமையை உண்டாக்கிட்டுப் போயிட்டாரே எங்கப்பா..”

குழந்தை மாதிரி தேம்பினான். எல்லாமே இழந்து விட்டது போன்ற உணர்ச்சிகளின் பாதிப்பு… வாத்தியார் அவனைத் தேற்றினார்.

“கவலைப்படாதேப்பா… நீ நெனைக்கிற மாதிரி எதுவும் உன்னை விட்டுப் போகல… உங்கப்பனை நம்பி நீ பொறக்கல… மொதல்ல அதை நீ உறுதி பண்ணிக்க… எந்தக் குருவிக் குஞ்சும் தாய் கட்டிய கூட்டிலேயே குடி இருக்கிறதில்ல… அதுக்கு ரெக்கை மெளச்சதும் தானா அது பறந்து போய் வாழ ஆரம்பிக்கும். அதைப் பார்த்து நீயும் வாழனும். இது உன்னோட தாய்நாடு… உங்கப்பன் அறிவு மழுங்கி உன்னைச் சமுத்திரம் கடந்த அந்த ஊர்ல கொண்டுபோய் தொலைக்கப் பார்த்தான். ஆனா கடவுள் உன்மேல கருணை காட்டி இங்கேயே கொண்டாந்து உட்டுட்டான்… முடியாது… தெரியாதுன்னு நெனைச்சு கவலைப்படாதே… உடம்பில இருக்கிற ரத்தம் பூராவும் இழந்தாலும், நம்பிக்கையை இழந்துடாதே… உன்னால் முடியும்பா… நிச்சயமா முடியும்”

அழுத்தமாய்ச் சொல்லி அவனைத் தட்டிக் கொடுக்கின்றார். திகைப்புடன் அவரையே பார்க்கிறான் அவன்.

“எந்தெந்த நாடுகளில் இருந்து வந்த இவுங்கல்லாம் வந்து இங்கே உழைக்கலியா… அந்நிய நாட்டு சனங்களுக்கு வாழ்க்கையைக் கொடுக்கிற இந்தப் புண்ணிய பூமி… உன்னை அனாதையா விட்டுவிடுமா என்ன? துணிஞ்சு நில்லு… நீயும் நிச்சயம் ஜெயிப்பே!”

கையில் ஓர் ஆப்பிளை எடுத்து அவனிடம் கொடுக்கிறார். இருண்டு கிடந்த முகத்தில் ஓர் அற்புதமான ஒளிக்கீற்று பரவுகிறது. அவரின் இரண்டு கைகளையும் சேர்த்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு முத்தமிடுகிறான். கண்கள் நட்சத்திரமாய் ஜொலிக்கின்றன. இதழ்களில் இளநகை பரவுகிறது. எழுந்து நின்று வாத்தியாரை வணங்குகிறான். அவரும் நம்பிக்கையோடு அவனை வாழ்த்துகிறார்.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *