“……பசிக்குப் பிச்கை கேட்க யாரிடமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு பெண்ணோ வெனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான்….”
– மெளனி
நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப்போகிறாள்; அதைவிட, கிணற்றைப் பழுது பார்க்கும் வேலைகளும் நடந்து கெண்டிருக்கின்றன. தொப்பிக் கட்டு ஆங்காங்கே சிதிலமாகி விட்டது. உட்சுவா¢லும் பூச்சுக்கள் சில இடங்களில் உதிர, ஆலங்கன்றுகளும் வேறும் சில பூண்டுகளும் முளை விட்டிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து பழுதுபார்க்க முனைந்து நிற்கிறாள் அண்ணி.
அண்ணியைத் தவிர இந்த வீட்டில் வேறுயார்தான் முனைப்புமிகக் கொண்டவர்களாயுள்ளனர். அண்ணாவுக்கோவெனில் கடைதான் உலகம். கடையையும் அண்ணியின் முகத்தையும் தவிர அவர் வேறெதையும் இப்போ ஏறிட்டுப் பார்ப்பது கிடையாது.
முன்னரெல்லாம், அண்ணா இரவு நேரங்களில் வானத்தைப் பார்த்தபடி நெடுநேரம் நிற்பார். அக்காலங்களில் அவரது நெஞ்சம் கசந்த நினைவுகளை மட்டுமே கொண்டிருந்தது. இருண்ட இரவுகளில் நட்சத்திரங்கள் கொண்டாட்டமாக கண் சிமிட்டுவதைப் பார்த்தபடி நிற்பார். அங்கே அம்மாவும் அப்பாவும் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்களாம். ஒரு நாளைக்கு வடக்குமூலையில் அவை தெரிவதைக் காண்பார். பிறகொரு நாளில் அவை சற்று இடம் பெயர்ந்து போயிருக்கும். அவை பிரகாசமாக மின்னும் அருகருகாக இருந்து கொண்டு அண்ணாவைப் பார்க்கும். வெகு நேரம் வரைக்கும் அண்ணாவுக்கு அவை சேதிகள் சொல்லும். அவரது கண்களில் நீர் திரளும்.
நிலவு பொழிகின்ற நாட்களில் அண்ணா மிகவும் மனவெழுச்சி கொண்டு காணப்படுவார். கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி முற்றத்திலோ அல்லது வானம் நிர்வாணமாகத் தெரியக்கூடிய இடத்திலோ நின்று மெது நடை போடுவார். அவரது கண்கள் உணர்ச்சி வேகத்தில் பளபளக்கும். அண்ணாவினது உணர்ச்சிகளை அந்த நாட்களில் புரிந்து கொண்டவர் எவரும் இலர். அவருக்கு நெருங்கிய சினேகிதர்களும் கிடையாது. அந்தக் காலத்தில் எல்லாம் அண்ணா தனக்குள்ளாகவே சில விவகாரங்களைச் சீரணிப்பதும் மீள அசைபோடுவதுமாக இருந்தார். அப்போ, அண்ணா முகத்தில் சிரிப்புத் தெரிவது அபூர்வம். யோசனை…. சதா குருட்டு யோசனைகளும், கண்களில் அடியாழத்திலிருந்து எட்டிப்பார்க்கும் துக்கக்குறியும்தான்.
அவருக்கு நிறையக் கற்பனைகள். துக்கம் வழிகின்ற கற்பனைகள் தாம் அரைவாசி வாழ்நாளில் இறந்துபோய் விடுவோமென அவர் உறுதியாக நம்பினார். அதை விரும்பக்கூடச் செய்தார். வாழ்க்கை அந்தளவுக்கு அவரை அடித்து வசக்கியிருந்தது. இழப்புக்களாலும், ஏமாற்றங்களினாலும், சத்திக்கு மீறிய செலவுகளாலும் சோர்ந்து போயிருந்தார். பாலனுக்கும், சுதாவுக்கும், சுமிக்கும் அவர் சோறு போடவேண்டியிருந்தது. படிக்க வைக்க வேண்டியிருந்தது, அவர்கள் ஏந்நேரமும் அவா¢டம் ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கத் தெரியவில்லை. முடியவுமில்லை. அவர்களுக்குப் பராயம் காணாது, சிறிசுகள், அப்படி அவர் எண்ணிக் கொண்டார்.
அண்ணியைப் போலொரு பெண்ணைத் தனக்குக் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கிட்டும் என அவர் எதிர்பார்க்கவேயில்லை. அது எப்படி நடந்தது?, என இன்றும் கூட அவர் ஆச்சா¢யப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். அண்ணி வந்த பிறகு அவரும் கூட ஆச்சா¢யப்படும் விதத்தில் மாறித்தான் போனார்.
உண்மையில் ஆரம்பத்தில் அவர் அண்ணியை வெறுத்தார். அவளைக் கண்டு பயந்தார். அவளது பிரகாசமான விழிகளைப் பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின் விழிகளைப் பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின் விழிகளில் கடும்கருமை நிறத்தனவல்ல, ஆயினும் அவளது வெண்விழிகள் வியப்பூட்டும் அளவுக்கு வெண்மையாக இருந்தன. கண்மணிகள் பெரிதாக இருந்தன. அவை எதிரேயிருப்பவரை ஊடுருவிப் பார்க்கும். அந்தப் பார்வை எவரையும் பணிய வைக்கும் ஆளுமை கொண்டது. அந்த ஆளுமை தான், பிறகு அண்ணாவுக்கு தொற்றியிருக்க வேண்டும். இல்லாவிடில், இந்தப் பத்து வருடங்களில் இவ்வளவு காரியங்களை ஒப்பேற்றியிருக்க முடியுமா?
அண்ணி கொடுத்த நகைகள் தான் இப்படிப் பல்கிப் பெருகி விட்டனவா என அண்ணாவுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவரால் ஆச்சா¢யப்பட மட்டுமே முடிகிறது.
கல்யாணமான புதிதில் ஒரு நாளிரவு; தனது நகைகளையும் தன்னையும் முழுமையாகக் கழற்றி அண்ணாவிடம் அவள் கொடுத்தாள். அன்றிலிருந்து அண்ணா புதுமனிதராகி விட்டார். அவரது துக்கரமாக சிந்தனைகள் குடியோடிப் போயின. அவர் வாழ விரும்பினார். உலக இன்பங்களை மிகுந்த வெறியுடன் காதலித்தார். அவரது மனதில் புதுத்தெம்பு பிறந்தது. கன்னங்கள் சற்றே மெழுகினாற் போல, தசைப் பிடிப்புள்ளவாகின. மேனி மினுங்கிற்று.
ஆனால், அண்ணி அதற்குப் பிறகு நகைகள் அணிவதைத் தவிர்த்து வந்தாள். இரண்டே வருடங்களில் அவள் கொடுத்ததை விட பத்துமங்கு நகைகள் செய்யுமளவுக்கு அண்ணா ‘பெரிய மனிதர்’ ஆகிவிட்டார். செய்து செய்யுமளவுக்கு அண்ணா ‘பெரிய மனிதர்’ ஆகிவிட்டார். செய்து கொடுக்கவும் செய்தார். ஆனால் அவள் அணிவதில்லை. இப்போதெல்லாம், காதுகளில் வெகு சாதாரணமான தோடுகளை மட்டும் அணிகிறாள். அதுவொன்றே அவளது கீர்த்தி வீசும் முகத்துக்கு வெகு சோவையை அளிக்கிறது. அவள் நெற்றியில் பெரிய வட்டமாக குங்குமம் குலங்கும். அது தான் அவளது உண்மையான ஆபரணம். அது மிகுந்த கவர்ச்சியை அளிக்கிறது. சிவந்து விழிக்கிறது. அந்தத் திலகத்தினால் அவள் அண்ணாவைச் சுண்டிச்சுண்டித் தன்பால் இழுத்தாள்.
கடை ஆரம்பித்த புதிதில் அண்ணாவுக்கு இருப்புக் கொள்ளாது. ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி, வீட்டுக்கு ஓடிஓடி வருவார். அண்ணியோ வெனில், குறும்புக் குறுஞ்சிரிப்புடன் திரும்ப ஓடஓட விரட்டுவாள்.
“இவ்வளவு காலமும் ‘ஙே…ஙே’ எண்டு மேகத்தைப் பார்த்து முழிச்சது போதாதா…ஓடுங்கோ, கடைக்கு ஓடுங்கோ….”
அண்ணா திரும்பிச் செல்வார். நடந்துதான் போவார். அதில் அவருக்கு பெரிய சுகம் தெரிந்தது. கடை கூப்பிடுதூரம்தான். பிறகு, கார் வாங்கிய பின்பும் வீட்டுக்கும் கடைக்கு மிடையே நடைதான். கார் வீட்டின் முன்புறம் அலங்காரமாக நிற்கும். அண்ணியை விடவும் இந்த ஜடங்கள் வீட்டுக்கு அணிகலனா, என்ன? எதிரில் வரும் காரின் பின்சீற்றிலிருந்து முகம் நிறைந்த சிரிப்பும், கும்பிடுகளும் எட்டிப்பார்க்கும். சைக்கிள்களோவெனில், ‘ஸ்லோ’ பண்ணி வந்தனம் தெரிவித்தபடி போகும். அவையெல்லாம் ‘தனக்கா, தனக்கா’ என அண்ணா ஆச்சா¢யப்படுவார்.
“அவளுக்கு, அவளுக்கு!” என முணுமுணுத்தபடி ஏறுநடை போடுவார். அவருக்கு இப்போ சாடையாகத் தொந்தி வைத்துவிட்டது. அண்ணிஅதில் அடிக்கடி செல்லமாகக் குத்துவாள்.
“செல்லவண்டி…கள்ளவண்டி…..” என்பாள்.
‘அவளால்…, அவளால்!” என்றபடி கடைவாசல்படியை அழுந்த மிதித்து ஏறுவார்.
எதிர்புறமிருந்து ‘ஜோன்சன்’ முதலாளி கண்களை மிகச் சிறப்பித்துக் காட்டும் கண்ணாடியினூடாக ஓரப்பார்வை பார்த்தபடி அண்ணாவை வம்புக்கிழுப்பார்.
“என்ன முதலாளி…வீட்டை போய் வாறியளோ….?”
எமகாதகன்; ஆள் சா¢யான ஜொலிப் பேர்வழி
“ஊம்…ஊம்” என அண்ணா முனகுவார்.
“தண்ணி விடாய் போலை..கெஹ்கெஹ்ஹே…விடாய்க்கும்! விடாய்க்கும்!! ஹி…ஹி…”
ஜோன்சன் முதலாளியின் பெரிய தொந்தி சிரிப்பால் தழுமபிக் குலுங்கும் அண்ணா மானசீகமாக ஜோன்சன் முதலாளியின் தொந்தியில் ஒரு குத்து விடுவார். பிறகு, எதிர்படுகிற பையனை காரண காரியமற்று விரட்டுவார்.
அண்ணா தான் ஓடிஓடி அண்ணியைப் பார்க்கப் போவார். அவள் கடைக்கு வருவது அபூர்வம். விரல் விட்டெண்ணக் கூடிய தடவைகளே வந்திருக்கிறாள். அந்நேரங்களில் கடை நிறைந்து விடும். றாக்கைகள், ஷோகேஸ்கள் எல்லாம் கொள்ளாமல் வழிவன போல இருக்கும். கடையில் கால்வைக்க இடம் பற்றாது என மொழியத் தோன்றும். ஒரு கோடி சூரியப் பிரகாசமுள்ள அரிய வஸ்து உள்ளே நுழைந்து விட்டதென, ஒரு வசீகரத் தோற்றம் கிடைக்கம், அண்ணி சிலநொடி நேரம்தான் நிற்பாள். அவள் நெடுநேரம் நிற்க வேண்டும், கல்லா மேசையடியில் உட்கார வேண்டும், என்பதில் அண்ணாவுக்கு நிறைய ஆசை. ஆனால் அவள் உட்கார்ந்தது கிடையாது, உடனேயே போய் விடுவாள். எல்லாமே வெறிச்§¡டி விட்டது போல ஆகிவிடும் கடைச் சிப்பந்திகள் வாட்டமுற்றது போலக் காசு எண்ணியெண்ணி மாளாது. சாம்பிராணியுடன் மிளகாயும், உப்பும் இட்டுப் புகைக்கும் போது மிளகாயின் காரநெடி உறைப்பதேயில்லை. ‘படபட’வென பொரிந்து வெடிக்கும்.
“இலட்சுமி கடாட்சம்…இலட்சுமி கடாட்சம்” என்கிறார்களே; அது இதுதான் போலும்!
எல்லோருக்கும் அண்ணி எதைக் கொடுத்தாள் என்று சொல்வது கடினம், பாலன், சுமி, சுதா எல்லாரும் அண்ணியைச் சார்ந்தவர்களாகி விட்டனர். கெளசல்யாவைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. அண்ணி நொந்து பெற்ற பெண்ணில்லையா அவள்? அண்ணாந்து அவர்கள் இப்போ தொந்தரவு படுத்துவது கிடையாது. அதிலும் இந்தச் சுதா- அண்ணி வந்த போது ஒரு சின்னப்பெண்ணைப் போன்று அவளைத் தொட்டுப் பார்த்து கையை இழுத்துக் கொண்டவள்- அண்ணியுடனேயே ஒட்டிக்கொண்டாள். அவளைப் பிரிந்தால் அண்ணியின் உடலிலிருந்து உதிரம் பெருகும் என்பதென அண்ணிக்கும் அவள் மீது விசேஷப்பற்றுதல்.
அந்த சுதா இனிப் போய்விடுவாள். இன்னும் ஒரேயரு நாள். அப்புறம் போய்விடுவாள். அண்ணியை விட்டுப் பிரிந்தே இராத சுதா பஸ் ஏறி….பிளேன் ஏறி, அவளுக்குரியவனிடம் போயே விடுவாள். ‘அவன்’ அண்ணிக்கு தூரத்து உறவுமுறையில் தம்பியாக வேண்டும். அவர்களுக்குள் முடிச்சுப் போட்டு வைத்தவளும் அண்ணி தான்.
முதுலில் சுதா பிணங்கினாள், பயந்தாள்.
“அந்த ஆள் வில்லன் மாதிரி இருக்கிறான்…” என்றாள்.
அண்ணி தேறுதல் சொன்னாள்.
“உங்கடை அண்ணா…. அப்ப, பெரிய முனிவர் மாதிரி இருந்தாரே!…இப்ப எப்பிடி? எனக்கு என்ன குறைவைச்சார்…. அதெல்லாம் சா¢வரும்….”
அப்படிச் சொல்கிற போது அண்ணியின் குரலில் ஒரு குறை இடறிற்று.
“எண்டாலும்…இந்த ஆம்பிள்ளை நம்பேலாதடி….சுதா” என்றாள் நைந்துபோன குரலில்.
அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே ‘ஏதோ’ உண்டு!
“இப்ப உப்பிடித்தான் சொல்லுவாய்…பிறகுபிறகு அண்ணியை பார்க்க நீ ஓடியா வரப்போறாய்…. எனக்குத் தெரியாதா பெட்டையைப் பற்றி….” என்று நையாண்டியாகக் குத்தவும் செய்தாள்.
சுமியையும் இப்படித்தான் தனியே பிரித்தணுப்பினாள். சுமியின் ‘விஷயம்’ அண்ணா காதில் விழுந்ததும், அவர் வானத்துக்கும் பூமிக்குமாகப் பாய்ந்தார். “யாரவன்?” என்று குதித்தார். “எங்கடை அந்தஸ்தென்ன….குலமென்ன, கோத்திரமென்ன” என்று சொல்ல முனைந்தார். அண்ணி வேறுயாருக்கும் கேட்காத வகையில் அண்ணாவை ஏதோ சொல்லிக் கடிந்தாள். அண்ணா தலையைக் குனிந்து கொண்டு கூனிக் குறுகி அப்பால் போனார். அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே ஏதோ ‘புகைச்சல்’ உள்ளதை மற்றவர்கள் கவனித்தது அப்போதுதான்.
சுமி மெளனமாய்ப் போனாள். ஆனால் அண்ணி அறிவாள், சுமிக்கு அண்ணாமீதும் அண்ணிமீதும் தாளாத பிரியம் உண்டென்பதை. சுமியின் சுபாவமே தனி. இல்லாவிடில் பூனை மாதிரி மெளனமாக இருந்துவிட்டு, “¨தா¢யமாகக் காதல் பண்ணினேன்’ கல்யாணம் பண்ணுவேன்” என அடம் பிடித்திருப்பாளா? எல்லோருடைய சுபாவமும் அண்ணிக்குத் தெரியும்.
பாலனைப் பற்றியும் அறிவாள். அவனுக்கும் ‘ஒரு இடம்’ பார்க்கச் சொல்லி எப்போதிருந்தோ அண்ணாவை நச்சா¢த்து வருகிறாள். பாலன் இப்போ அவர்களுடன் இல்லை. அவனுக்குச் சிறகு முளைத்துவிட்டது. அவனும் பறக்க வேண்டும் என அண்ணி மிக விரும்பினாள்.
கெளசிக்குட்டியைப் பற்றி அண்ணியின் கற்பனைகளும், திட்டங்களும் எண்ணியோ எழுதியோ அடங்காதவை. இப்போதிருந்தே கெளசிக்காக நிறைய சம்பத்துக்கள் சேர்க்கத் தொடங்கிவிட்டான்.
எல்லாவற்றையும் முனைப்புடன் நின்று கவனித்து வருகிறான். அண்ணாவுடனேயே அவள் எப்போதும் இருப்பாள். கிணறு பழுதுபார்க்கச் சொல்லி அவா¢டம் சொல்லிச் சொல்லி அலுத்து, கடைசியில் தானே முன்னின்று முடித்து விட்டாள். தொப்பிக் கட்டும், உட்சுவரும் ஆங்காங்கே புதிய பூச்சுக்களைக் காட்டி இளித்தன. இறைந்து விட்ட நீர்வளவெங்கும் ஓடித்தேங்கியதில் காற்று ஈரத்தையும் இலேசான சேற்று வாசனையையும் சுமந்து திரிகின்றது. தேங்கிய நீரில் நட்சத்திரங்களும், குறைநிலவும், வீட்டின் பிரகாசமான வெளிவிளக்குகளும் பிரதிபலித்துத் தெரிந்தன. அவற்றைப் பார்த்தபடியே எண்ணி சற்றே தூங்கிவிழுந்தாள். நேற்றிரவு தூக்கமில்லை. இன்னும் எப்படியோ?
சுதா நாளைக்குப் போகப்போகிறாள். தலைக்கு மேலே இன்னும் வேலைகள் காத்துக்கிடக்கின்றன. கூடவே பிரிவும் அண்ணியின் இதயத்தை தொட்டழுத்தியது.
2
விடிகாலையில் சுதா பயணமாகிறாள்.
சுமி வந்திருந்தாள். வேறும் பலர் வந்திருந்தார்கள். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் அண்ணாவைக் கண்டும் காணாமலே போனவர்கள் தான். இப்போதோவெனில், தமது சமூகத்தை அண்ணா காணாமல் விட்டுவிடுவாரோ என அச்சபடுவர்களாகக் காணப்பட்டனர். பெண்கள் அண்ணா பார்வையில் படும்படி நடமாடினர். ஒருத்தியோவெனில் கெளசிக்குட்டிக்கு முத்தம் கூடக் கொடுத்தாள். வல்லவன் வீட்டுப் பெண்ணல்லவா? ஆண்களெல்லாரும் அண்ணியைச் சூழ உட்கார்ந்து அரசியலும், விலைவாசியும் பேசினார்கள்.
அண்ணாவுக்கு நிறைய வேலைகள். அங்குமிங்குமாக ஓடியாடிக் கொண்டிருந்தான். கெளசிக்குட்டி அம்மாவின் சேலைத்தலப்பை பிடித்துக்கொண்டு பின்னாலேயே இழுபட்டது. அம்மா, பெரிய பெரிய பெட்டிகளில் விதவிதமான பளபளக்கும் சாறிகளும், தின்பண்டங்களம் திணித் திணிய அடுக்குவதைப் பார்த்து. சுதா அன்ரியை இழுத்து வைத்துக்கொண்டு அம்மா கொஞ்சலும் சிரிப்புமாக ஏதேதோ சொல்வதைக் கண்டது. ஆனால் சுதா அன்ரி அழுதாள். அம்மாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுதாள். அம்மாவும் கூடத்தான் கொஞ்சமாக அழுதாள். அம்மா முகத்தில் இட்ட பொட்டு கரைந்து வழிந்தது. ஏற்கனவே சிவந்த அம்மாவின் முகம் மேலும் சிவந்து போயிற்று. அதைத் துடைக்க நேரமில்லாமல் அம்மா குசினிக்கும், அறைகளுக்கும், ஹோலுக்குமாக ஓடித்திரிகிறாள்.
எல்லா விளக்குகளையும் ஏற்றியிருந்ததில் வீடெல்லாம் ஓரே பிரகாசமாக ஜொலித்தது. அந்த ஜொலிப்பில், கெளசிக்குட்டிக்கு கண்ணைச் சுற்றியது. சீக்கிரம் தூங்கிப் போனது. கெளசிக்குட்டிக்கு மீள விழிப்பு வந்தபோதும் வீடெல்லாம் வெளிச்சம். வாசலில் கார் தயாராக நின்றது. அப்பா பின்னுக்கு கைகளைக் கட்டியபடி வானத்தை அண்ணாந்து கொண்டிருந்தார். அம்மா நல்லபுடவை கட்டியிருந்தாள். பெரிதாகப் பொட்டு இட்டுக் கொண்டிருந்தாள். சுதா அன்ரி ‘ரிப்ரொப்’பாக ஆயத்தமாக நிற்கிறாள். அவளிடமிருந்து நல்ல வாசனை வீசியது. அவள் எதையோ எண்ணி ரகசியமாக சுகிப்பதைப்போல கன்னங்களுக்குள் கள்ளச்சிரிப்பொன்று ஓடியது.
ஆனால் சுதா அன்ரி புறப்படும் போது மிகவும் அழுதாள். வாய்விட்டே அழுதாள். அம்மாவும் அழுதாள். உம்முணா மூஞ்சியான சுமி அன்ரியும் அழுதாள். அப்பா வெறெங்கோ பார்த்தவராய்.
“சா¢தான்…வாங்கோடி….வாங்கோடி” என இலேசாக அதட்டினார்.
காருக்குள் ஒரே பிசுபிசுவென இருந்தது. சாலைகளில் இன்னும் இருள் விலகவில்லை. சுதா அன்ரி மேலும் கரைந்து கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் அவளுக்கு மாறிமாறி ஏதாவது சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். அவை எல்லாம் பெரியவர்களின் விஷயங்கள். அவற்றில் கெளசிக்குட்டி தலைபோடாது. அம்மா அப்படிச் சொல்லித் தந்திருக்கிறாள்.
கடைசியாக பஸ் புறப்பட்ட போது சுதா அன்ரியும், அம்மாவும் வெட்கம் கெட்டவர்களாய் சத்தமிட்டு அழுதார்கள். அப்பாகூட அழுதார். சுதா அன்ரி பாதியுடம்பை வெளியே நீட்டியபடி கைகளை ஆட்டியபடி போனாள்.
திரும்ப வரும்போது சுமி அன்ரியை வீட்டில் இறக்கி விட்டு வந்தார்கள்.
மெல்ல மெல்ல மிகவும் சோம்பலாக அன்றைய காலை விடிந்தது.
வீடெல்லாம் ‘ஓ’ என்ற ஒரு மெளனம். வெறுமை.
கடையில் அண்ணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. சுதாவைப் பற்றிய ஞாபகங்கள் மீண்டு மீண்டும் மேலெழுந்தன. சுதா அவருக்கு கடைசித் தங்கை. அவளுடனான பிரியமான சில நினைவுகள் அவருக்கு உண்டு. பழைய நாட்களில் சுதாவைப் பற்றிய கவலைகளும் நிறைய இருந்தன. அவளது அழகுக்கும், சுட்டித்தனத்துக்கும், கெட்டித்தனத்துக்கும் ஏற்ற ஒருவனைத் தேடிப்பிடித்து தம் அதைத் தான் எவ்வளவு சுலபமாக நிறைவேற்றியிருக்கிறள்!
அவருக்கு அண்ணியைப் பார்க்கவேண்டு, அவளுடன் சிறிது நேரத்தைக் கழிக்கவேண்டும் போல இருந்தது.
“அட…தம்பியவன…..நான் வீட்டுப்பக்கம் ஒருக்காப் போயிட்டுவாறான்….பாத்துக்கொள்ளுங்கோ…நான் வரச்சுணங்கினா சாவியைக் கொண்டந்து தந்திட்டுப் போங்கோ…”
அண்ணா நடக்க ஆரம்பித்தார். எதிர்புறமிருந்து ஜோன்சன் முதலாளி அடுக்கிக்கிடந்த மூடைகளினூடாக எட்டிப்பார்த்தார். அவரது தலைக்கு நேரே பின்புறம் சுவா¢ல் “சிவமயம், இலாபம்” என ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருப்பது தெரிந்தது.
“வீட்டுக்கா?….”
“ஓம்…”என அண்ணா மெல்ல முனகினார்.
“தங்கச்சி போயிட்டாவோ?”
தலையை ஆட்டினார்.
“எல்லாம் காலா காலத்திலை நடக்கவேண்டியது தானே…. சந்தோசம்…”
“……”
“தம்பி …..உம்மடை வீட்டிலை லச்சுமி குடியிருக்கு…அது வந்த பிறகு தான் நீர் மனிசனா வந்தீர்….”
அண்ணா அசட்டுச் சிரிப்புடன் நின்றார்.
“அப்ப நான் நிற்கிறன்….”
“சா¢” என்றாவது அண்ணா மேலே நடந்தார்.
அண்ணி வழக்கத்துக்கு மாறாக எதையோ பறிகொடுத்தவள் போலச் சோகித்துக் காணப்பட்டாள். அண்ணா மெதுவாக அவளருகில் போய் அமர்ந்தார். அண்ணி அவருக்கு வழக்கம் போல பணிவிடை செய்ய முந்தவில்லை. தன் பாட்டில் எங்கோ கவனமாக தலையை நீவி விட்டுக்கொண்டிருந்தாள்.
“என்னப்பா…அவ்வளவு யோசினை….”
“ப்ச்…ஒண்டுமில்லை….” என்றாள் அசிரத்தையாக.
“சுதாவை நினைச்சியா?….
“ஏன் அவளை நினைக்க வேணும்….போக வேண்டியவள் தானே….போவிட்டாள்….”
“அப்ப….என்ன யோசினை”
“கட்டாயம் உங்களுக்குச் சொல்ல வேணுமா?”
“எனக்கு, என்னவோ என்னட்டையிருந்து கழண்டு போனது மாதிரிக்கு…” என்று தயக்கத்துடன் இழுத்தார்.
“கழட்டி எவளட்டைக் குடுத்தனீங்கள்?”
அண்ணாருக்கு ஆச்சா¢யமாக இருந்தது. அண்ணி ஒரு போதும் சு¡£ர் எனத் தைக்கும்படி இவ்வாறு கதைத்தவளல்ல.
“சுமி போனாள்… சுதா போகிறாள்….பாலனும் ஒருத்திக்குப் பின்னாலை போவான்… கெளசியும் போகும்….”
“போகட்டும்!”
“பிறகு எனக்கு ஆரடி இருக்கிறது….”
“ஏன் நீங்களும் உங்கடை ‘அவளட்டை’ போங்கோவன்!”
“என்ன?!”
“உங்கடை “அவளட்டை”
அண்ணா அதிர்ந்தார். இதைப்பற்றி அண்ணிக்கு இலேசாகத் தெரியும் என அண்ணா அறிவார். ஆனாலும் இத்தனை காலத்துக்குப் பிறகு இதை வெளிப்படையாக கேட்பாள் என அவர் எண்ணியதில்லை. அண்ணியும் கூட அதை விரும்பவில்லை. அப்படிக் கேட்பதனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள அவள் தயங்கினாள் போலும். ஆனால் இன்று அண்ணியின் மனம் மிகப்பேதலித்திருந்தது. பெண்களின் மனங்களே இப்படித்தானோ என்னவோ. கோடை காலத்து மழை மாதிரி!
“ஏன் அவளை ஏமாத்தின்னீங்கள்?”
“……..”
“அதுக்குப் பிறகும் தொடர்பிருக்கா?”
“……..”
“இப்பவும் காணிறனீங்களா?”
“……..”
“செலவுக்கு ஏதாவது குடுக்கிறனீங்களா?”
அண்ணா விக்கித்துப் போயிருந்தார்.
“ஏன் ஏமாத்தின்னீங்கள்….என்ரை காசுக்காகவா?”
அண்ணா பற்களை நெறுமினார். கதிரையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தார்.
“சொல்லுங்கோ….என்னுடைய காசுக்காகத் தானே என்னைக் கட்டின்னீங்கள்…அவளில்லை தானே உங்களுக்கு ஆசை…ஆம்பிளையை நம்பக்கூடாது….
“அப்பிடி…எத்தனை ஆம்பிளையளோட உனக்குப் பளக்கம்” என அண்ணா திரும்பச் சாடினார்.
“என்னையும் உங்களைப் போல நினைச்சியளோ?” எனச் சீறுனாள். அந்தக் குரலில் தொனித்த உக்கிரம் அண்ணாவை அவளை ஏறிவிட்டுப் பார்க்க வைத்தது. அண்ணியின் அழகிய விழிகள் பெரு வெறுப்பை உமிழ்ந்தன. முகத்தில் ஒரு அருவருத்தபாவம் தொக்கி நின்றது.
“போங்கோ…உங்கடை அவளட்டைப் போங்கோ…உங்களுக்கு அவளிருக்கிறதன்….”
அண்ணாவின் கோபம், இயலாமை. அவமானம் எல்லாம் ஒன்றாய்த் திரண்டன. கைகள் முறுக்கேறின. கைகளை மடக்கி அண்ணியின் தாடையில் ஒரு அடி கொடுத்தார். அது தான் அண்ணி அண்ணாவின் கோபத்தை ஸ்பா¢சிக்கும் முதல் தடவை.
அண்ணியின் பெரிய ஆளும் திறன் படைத்த விழிகள் கலங்கின. நீண்ட இமை மயிர்கள் சடுதியாக நனைந்து, ஒரு பெரிய கண்ணீர்த்துளி பளபளவென மின்னியது. ‘சொட்’டெனச் சிந்தித் தெறித்தது. அவன் பெறுமதி அளவிடற்கா¢யது. அதில் ஒரு பெண்ணின் தன்மானமும், காதலும் பொதிந்திருக்கிறது.
அண்ணா வெறுப்புடன் எழுந்து அப்பால் போனார். கட்டிலில் சாய்ந்து கைகளைத் தூக்கி முகத்தில் போட்டு மூடிக் கொண்டார். அண்ணி அப்படியே உறைந்தாள். அவள் தொடர்ந்து அழமாட்டாள். ஆளுமையும் மனவுறுதியும் மிக்கவர்கள் அப்படித்தான்!
பிறகு
கெளசி பள்ளிக் கூடத்தால் ஒட்டமாக ஓடிவந்தது. அம்மா அதற்கு சாப்பாடு கொடுக்கவில்லை. உடம்பைக் கழுவி தலை சீவிச் சிங்காரித்து கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுக்கவில்லை. கெளசி அப்பாவிடம் ஓடிற்று. பிறகு அம்மாவிடம் ஓடி அவளது கன்னத்தைத் தாங்கித் தன்புறம் திரும்ப முனைந்து தோற்றது. அம்மா உயிரற்றவள் போல இருந்தாள். கெளசி புரியமையுடனும் பசியுடனும் அங்குமிங்கும் அலைந்து திரிந்தது.
அப்புறம், வெகுவேகமாக மாலை மங்கி இருள் சூழ்ந்தது. அம்மாவும் அப்படியே, அப்பாவும் அப்படியே! கெளசி கதிரைகளில் ஏறி நின்று விளக்குகளைப் போட்டது, அம்மா ஒரு பெரு மூச்சுடன் எழுந்து உள்ளே போனாள். அப்பாவும் கைகளை முகத்திலிருந்து எடுத்துவிட்டு சிடுசிடு மூஞ்சியுடன் போய் கிணற்றுக் கட்டில் உட்கார்ந்து கொண்டு வானத்தை நோக்கி நிமிர்ந்தார்.
பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழுந்து சிதறும் சலங்கைச் சத்தம் ‘சளசள’ எனக் கேட்கவாரம்பித்தது. சோப்பின் நல்லன் வாசனை வீடெங்கும் வீசிற்று. அந்த வாசனையுடன், கெளசி அகப்பட்ட இடத்தில் விழுந்து தூங்கிப் போயிற்று.
அண்ணி நிறைய நீராடினாள். ஈரம் சொட்டும் கூந்தலை நெடுநேரம் வரை உலவியபடி உலர்த்தினாள். பிறகு திலகமிட்டுக் கொண்டாள். அதுதான் அவளது உண்மையான ஆபரணம். அண்ணாவை சுண்டி இழுக்க வல்லது. பிறகு அலுமாரியைத் திறந்து அண்ணாவுக்கு பிடித்த அரக்கப்பச்சை வர்ணச்சேலையை எடுத்தாள். அதிலிருந்து வீசும் சுகமான வாசனையை நுகர்ந்தபடி அதை உடுத்த ஆரம்பித்தாள்.
அண்ணாவோ வெனில், கிணற்றுக்கட்டில் உட்கார்ந்தபடியே வானத்தில் மூலை முடுக்குகளிலெல்லாம் அவரது பிரியமான நட்சத்திரங்களைத் தேடினார். அவற்றைக் காணவில்லை நிலவு வரவும் இன்னும் சற்ற நேரமிருந்தது. ஒளியற்ற நட்சத்திரங்கள் வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மெல்ல மின்னி பலகீனமாக முனகின. மோனமான மெல்லிய இருள் எங்கும் வியாபித்திருந்தது. நடமாடித்திரிய மனமற்றுப் போன காற்று முடவனைப் போல தழ்ந்தது. வெல்ல மெல்ல ஒரு பெண்ணின் இனிய போதையூட்டும் வாசனையை அது. பெற்றுக் கொண்டு இனிய போதையூட்டும் வாசனையை அது. பெற்றக் கொண்டு அண்ணாவை நோக்கிச் சென்றது. அண்ணாவின் நாசியில் அதை தேய்த்தது. அண்ணாவின் கழுத்தைச் சுற்றி இரு மென்கரங்கள் மாலையென விழுந்தன. அவை ஈரலிப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருந்தன. அதே சமயம் மெல்ல நடுங்கின. அண்ணாவை மெல்ல தம்முன்வளைக்க முயன்றன.
பிறகு….
“உங்களுக்கு …நானிருக்கிறேன்…” என மிகத் தவிப்புடனும், அடக்க முடியாமல் பீரிட்டெழும் அன்புடனும் ஒரு மிருதுவான பெண்குரல் அபயமளித்ததைக் கேட்டவுடன், காற்று அவ்விடத்தை விட்டு நாகா£கமாக நழுவிற்று.
அண்ணா திரும்பிப் பார்த்தார். அந்த இருளிலும் ஜொலிக்கும் இரு விழிகளைக் கண்டார். அவை அண்ணாவை மன்னித்த சேதியை இதமாகத் தெரிவித்தன.
அவள் மீண்டும் தன்புறம் அவரை இழுத்தாள்.
அப்புறம்;
அன்றிரவு அண்ணியால் தூங்க முடியவில்லை. அண்ணாவுக்கும் தூக்கம் வரவில்லை.
– மோகவாசல் – ரஞ்சகுமாரின் சிறுகதைகள் (நன்றி: http://www.projectmadurai.org/)
– மோகவாசல், முதற் பதிப்பு: ஏப்ரல் 1995, தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.