எழு மாத கர்பத்துடன் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த தோழி நந்தினியை கண்களில் நீருடன் பார்த்தாள் சுஜி.
நந்தினியின் ஒரே உறவான, அவளது அம்மா லதாவின் உயிர் பிரிந்து உடல் கூடத்தில் கிடத்தப்பட்டு இருந்தது. உறவினர் கூட்டம் அழுது ஓய்ந்தது.
தாயின் முகத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்த நந்தினியின் கண்களில் சோர்வும், இன்னும் ஏதோ ஒன்றும். தோழியை பார்த்த சுஜிக்கு அழுகை மேலும் வெடித்தது.
முகம் தெரியாதவருக்காக கூட இலகும் நந்தினி , இறுகி பொய் அமர்ந்திருக்க காரணம் இருந்தது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை, பி.பி என்று வியாதிகளின் அவஸ்தை லதாவை பாதி கொன்றது. எந்நேரமும் மருந்தும், ஊசியுமான வாழ்க்கை தான். அவ்வப்போது கால்களில் அறுவை சிகிச்சை. எத்தனை தான் உடம்பு தாங்கும்? கடைசி ஆறு மாத காலமாக கிட்னி பெயிலியர் என்று dialysis வேறு.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை…. என் தாய் என்னுடன் இருந்தால் போதும் என்று நந்தினி கஷ்டப்பட்டது கொஞ்ச நஞ்சம் அல்ல. இதற்காக தன கணவனை பிரியும் நிலை வந்தும் அவள் கலங்க வில்லை. ஒரு கணம் கூட தன் வாழ்வு தான் முக்கியம் என சுயநலமாய் நினைக்கவும் இல்லை. என்ன செய்து என்ன? பத்து நாளாய் கோமாவில் இருந்து … இதோ லதாவின் உயிர் பிரிந்து விட்டது….
தோழியின் கஷ்டத்தை முழுதும் அறிந்த சுஜி, ‘கடவுளே உனக்கு கண் இல்லையா? ஏன் இப்படி சோதிக்கிறாய்? என் தோழி எவ்வளவு தான் தாங்குவாள்?’ என மனதுள் சபித்தாள். உறவினர் கூட்டம் நந்தினியிடம் சென்றது,
‘அழுதிடுமா…… மனசுலையே வெச்சிட்டு இருக்காதம்மா….. அம்மாவ இப்போ எடுத்திடுவாங்க… வாமா…’
மெல்ல எழுந்து தாயின் அருகில் சென்றாள் நந்தினி. அம்மா அவளது கட்டிலில் படுக்கவைக்கப்பட்டு இருந்தாள். அம்மாவின் முகம் எவ்வளவு அழகாய் இருக்கிறது. இனி கசப்பான மருந்துகள் இல்லை… உடலை போத்தல் ஆக்கும் ஊசி இல்லை….. அமைதியும் அழகுமாய் ஜொலிக்கும் அம்மாவின் முகம் அவள் நெஞ்சில் அப்படியே நிலைத்தது.
மெல்ல குனிந்து அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். ‘ அம்மா இது வரை நீ கஷ்டப்பட்டது போதும்….. என் சுயநலத்துக்காக உன்னை உயிருடன் இருக்க வைத்து வதைத்து விட்டேன் நான். நீ அப்பாவிடமே சென்று விடு….. அவர் உன்னை சந்தோசமாய் இருக்க செய்வார்…..’ மனதுள் அம்மாவிடம் பேசினாள் நந்தினி.
‘ச்ச என்ன ஒரு கல் மனசு …. அழவே இல்லையே ……’
உறவினர் கூட்டம் முன்னே விட்டு பின்னே பேசியது.சினந்த சுஜி, தன் தோழியை பார்த்தாள், நந்தினி முகத்தில் தெரிந்த அமைதி அவளையும் அமைதி கொள்ள செய்தது.
இரண்டு வருடங்கள் விரைந்தோடி சென்றன…..
சுஜி தன் தோழி நந்தினியின் வீட்டிற்கு சென்றாள்.
‘அம்மா ……. aunty…..’ ஓடி வந்த மகன் கண்ணனை வாரி அணைத்து கொண்டாள் நந்தினி. ‘என் செல்ல அம்மா….’ அன்புடன் முத்தமிட்டான் கண்ணன். அவனது பட்டு போன்ற கன்னத்தில் முத்தமிட்டாள் நந்தினி.
‘சுஜி இதோ பாரு, இவன் தான் என் அம்மா’ என கண்களில் நீருடன் சொன்ன தோழியை பார்த்த சுஜியின் கண்களும் கலங்கின.
மனிதர்கள் இறக்கலாம்……. இறந்தும் மண்ணில் பிறக்கலாம்……..