இரண்டு தங்கைகள், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எனப் பெரிய குடும்பம். மூத்த பெண் நான்தான் குடும்பத்தைத் தாங்கும் தூண் என்பார் அப்பா.
காலை ஏழரை மணிக்குக் கிளம்பி இரண்டு பஸ்கள், மின் ரயில் மாறி இடி ராஜாக்களின் உரசல்களுக்குத் தப்பி அலுவலகம் சேர்ந்தால் சில ஆண் அலுவலர்களின் கிண்டல், டார்ச்சர். உள்ளுக்குள் அழுது, வெளியில் சிரித்து நடித்து, மாங்கு மாங்கென்று வேலை செய்து, இரவு மீண்டும் அதே பஸ், மின் ரயில் என வீட்டுக்குப் போய்ச் சேரும்போது பதினோரு மணிக்குக் குறையாது.
அலுப்பும் வெறுப்பும் மேலிடும். அம்மா தட்டில் போடும் சாப்பாடு உள்ளே இறங்காது.
அன்று… வழக்கம்போல் சாப்பாடு பிடிக்கவில்லை.
‘‘போதும்மா’’ என்று எழ முற்பட்டேன். காதிலேயே வாங்காத அம்மா, மீண்டும் தட்டை நிரப்பினார். எனக்கு வந்ததே கோபம்….
‘‘வேணாம்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்… நீ போட்டுக்கிட்டே இருக்கியே!’’ – சத்தமாகக் கத்தி, தட்டை தூரத் தள்ளினேன்.
அருகிலிருந்த அப்பா மெல்லச் சொன்னார்…
‘‘வேணாம்னு சொன்னதும் திரும்பிப் போயிட அவ ஓட்டல் சர்வரா என்ன?’’ அம்மா பாசத்தோடு என்னைப் பார்த்தார்.
இன்னொருமுறை அம்மாவிடம் கேட்டுச் சாப்பிட வேண்டும் போலிருந்தது இப்போது.
– ஹேமலதா (டிசம்பர் 2016)