கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2021
பார்வையிட்டோர்: 5,292 
 
 

“அம்மா இன்னைக்கு என்ன சமையல், ரொம்ப பசிக்குதும்மா” என்று விசாரித்தவாறு மின்னலாய் சமையலறைக்குள் நுழைந்தான் முகிலன்.

மெலிந்த, உயரமான தோற்றம் முகிலனுக்கு. மாநிறம், காண்போரை சுண்டி இழுக்கும் சிறு புன்னகை அவன் முகத்தில் எப்போதும் பரவிக்கிடக்கும்.

அழகிய மண் பானையில் கம்பீரமாக கொதித்துக் கொண்டிருந்தது மீனாட்சி வைத்த சின்ன வெங்காயம் காரக்குழம்பு. அடுப்புக்குப் பக்கத்தில், வெண்டைக்காய் பொரியல் செய்ய வெண்டைக்காயை வெட்டிக் கொண்டிருந்தார் மீனாட்சி மௌனமாக.

“என்னம்மா, இன்னைக்கும் காரக்குழம்பா…? மீன், கோழி எதுவும் இல்லையாமா?” என்று தனது ஆதங்கத்தை வெளிக்காட்டினான் முகிலன்.

“வீட்ல என்ன இருக்கோ அதுதான் சமைக்க முடியும், உங்க அப்பாக்கு அடுத்த மாசம் ஆறாந்தேதிதான் சம்பளம் வரும். அது வரைக்கும் இருக்கற பணத்த வெச்சிதான் செலவு பார்க்கனும் முகிலா…” என்று மௌனத்தைக் கலைத்து படபடவென பேசி முடித்தாள் மீனாட்சி.

வேரெதுவும் பேச மனமில்லாமல், முகம் வாடிபோனவனாய்; மண் குடத்தில் குளிர்ந்து இருந்த நீரை ஒரு டம்லரில் எடுத்து மடமடவென அருந்தி; சமையலறையை விட்டு சிட்டாய் வெளியேறினான் முகிலன்.

சமையலறையில் நடந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த முகிலனின் தங்கை தாரிகா அண்ணனின் கோபம் கண்டு முகிலனின் அருகில் சென்றாள்.

“அண்ணா , கோபப்படாதீங்க, அம்மா, அப்பா பாவம் அண்ணா ; நமக்காக தானே அவுங்க இவ்வளோ கஷ்டப்பட்றாங்க. நம்ப ரெண்டு பேரும் நல்லா படிக்கனும், நினைச்ச வேலைக்குப் போகனும்னு, அப்பா கஷ்டப்பட்றாரு…” என்றாள் பக்குவமாக பதினான்கே வயது நிரம்பிய தாரிகா.

“நான் உன்கிட்ட எந்த அறிவுரையும் கேட்கல, என்ன தொந்தரவு செய்யாம போ” என்று எரிமலையாய் குமுறினான் முகிலன்.

சதாசிவம் ஒரு தனியார் தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக பணிப்புரிபவர். இரவு நேரத்தில் வாடகை கார் ஓட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். அவருக்கு சொத்து என்று சொல்லிக்கொள்ள மனைவி மீனாட்சி, பிள்ளைகள் முகிலன் மற்றும் தாரிகா; மேலும், ஒரு சிறிய வீடு மற்றும் ஒரு பழைய மோட்டார் வண்டி மட்டுமே.

உடன் படிக்கும் மற்ற நண்பர்களைப் போல் உடை உடுத்த முடியவில்லை, வெளியூர்களுக்குச் சுற்றுலாச் செல்ல முடியவில்லை, அடிக்கடி உணவகங்களில் உணவு உண்ண முடியவில்லை; இவைப் போன்ற ஆதங்கம்களை அவ்வப்போது முகிலனின் எண்ணங்களில் வந்து போவது உண்டு. அவற்றைப் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாதவனாக இருந்தாலும் சில சமயங்களில் அவன் அறியாமலேயே வெளிப்படும் கோபம் அவற்றை அறிவித்து விட்டுப் போய்விடுகின்றன.

முகிலனுக்கு நேர் எதிர் எண்ணம் கொண்டவள் தாரிகா. வீட்டின் வறுமையை நன்கு அறிந்தவள். தந்தையின் உழைப்பைப் போற்றுபவள். தாயின் அர்ப்பணிப்பை மதிப்பவள். தன் நிலையை வேறு யாருடனும் ஒப்பிடமாட்டாள். அம்மா சமைக்கும் உணவைத் தவிர்த்து வேறு எந்த உணவையும் சுவைக்க எண்ணம் கொள்ளமாட்டாள். அவள் உலகத்தில் அவள் ஓர் இளவரசியாக வாழ்ந்து கொண்டிருந்தாள் தாரிகா.

இருவரும் தங்கள் எண்ணங்களில் வேறுப்பட்டிருந்தாலும், படிப்பில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் கிடையாது. எதிர்காலத்தில் நாட்டின் சிறந்த இருதய டாக்டராக ஆக வேண்டும் என்பதில் முகிலனும், திறன் மிக்க ஒரு வழக்கறிஞராக ஆக வேண்டுமென்பதில் தாரிகாவும் தெளிவாக இருந்தனர். பல உத்திகளைக் கையாண்டு பள்ளிச் சோதனைகளில் தேர்ச்சிப் பெற்று வந்தனர்.

இருவரின் மேற்கல்விக்காக சிறிதும் ஓய்வில்லாமல் உழைக்கிறார் சதாசிவம். மீனாட்சி, முகிலன் மற்றும் தாரிகாவிற்காக காப்புறுதி திட்டம் போன்றவற்றை எடுத்துள்ளார். வங்கிக் கணக்கில் மூவருக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் சேர்த்து வருகிறார். இதன் விவரங்கள் அனைத்தும் மீனாட்சிக்கு மட்டுமே தெரியும். குடும்பத்திற்காகவே அனைத்தையும் செய்த சதாசிவம் தனக்கென்று எதுவும் செய்து கொள்ளவில்லை.

“தாரிகா சாப்டியா..? அண்ணா சாப்டானா..?” தட்டில் மீனாட்சி பரிமாறிய சாதத்தையும் சின்ன வெங்காய காரக்குழம்பையும் பிசைந்து கொண்டே தாரிகாவிடம் கேட்டார் சதாசிவம்.

“அ..அப்பா நா சாப்டேன் பா, ஆனா அண்ணன் தான் இன்னும் சாப்டல, அவுங்க ரூம்ல இருக்காங்கப்பா.., அ..அதும் கோபமா இருக்காங்கப்பா…” என்று தயங்கி சொல்லி முடித்தாள் தாரிகா.

“கோபமா இருக்கானா..? ஏன் மீனாட்சி, முகிலன ஏதும் திட்னியா..? என்று சாதத்தைப் பிசைவதை நிறுத்திவிட்டு மீனாட்சியை ஏறிட்டார் சதாசிவம்.

“நா எதும் சொல்லலைங்க…, அவனுக்கு இன்னைக்கு கோழி, மீன் சமைக்கலேன்னு கோபம், வீட்ல இருக்கறதுதானே சமைக்க முடியும்னு சொன்னேன் அதுக்கு கோபம் வந்திருச்சி..” என்று தான் சமைத்த வெண்டைக்காய் பொரியலைச் சதாசிவத்தின் தட்டில் பரிமாறியப்படியே பதிலளித்தார் மீனாட்சி.

“என்ன மீனாட்சி..? அவன் கேட்கறத செஞ்சி கொடுக்க வேண்டிதானே, ஏன் அவனைத் திட்ற..? என்று மீனாட்சியைப் பார்த்துக் கேட்டார் சதாசிவம்.

“மாசக் கடைசி, இருக்கிற பணம் கொஞ்சம் தான். நாளைக்கு நீங்க டாக்டர் வேற பார்க்கப் போகனும் மறந்தாச்சா..? என்றார் மீனாட்சி.

சில நாள்களாகவே சதாசிவத்திற்கு இருக்கும் இடுப்பு வலிக்கான மருத்துவ செலவைப் பற்றி தான் மீனாட்சி சதாசிவத்திற்கு நினைவுப்படுத்தினார். சதாசிவத்தின் உறவுக்காரப் பையன் டாக்டர் அரவிந்தன் நடத்தும் கிளினிக்கில் தன் இடுப்பு வலிக்கான சிகிச்சையைப் பெற்று வந்தார் சதாசிவம்.

“அது பிறகு பார்த்துக்கலாம்.. நீ போய் முகிலனுக்கு ரெண்டு ஆம்பலேட் போட்டுக் கொண்டு வா…” என்று தன் மனைவியைச் சமையலறைக்கு விரட்டினார் சதாசிவம்.

“மா, நீ போய் அண்ணன, நா கூட்பேனு வர சொல்லு..’ என்று தாரிக்காவைப் பணித்தார்.

“சரிங்க அப்பா.. நா போய் அண்ணாவ வர சொல்றேன்..” என்று கூறிவிட்டு முகிலனின் அறை நோக்கி நடந்தாள் தாரிகா.

“அப்பா வர சொன்னிங்கலா..?” என்று பசியால் வாடிய முகத்துடன் வந்த முகிலன் சதாசிவத்திடம் கேட்டான்.

“ஆ..ஆமாயா, இப்படி உட்காரு.. ஏன்பா இன்னும் சாப்டல…. அம்மா மேலேயும் என் மேலேயும் கோபமா..? என்று முகிலனைப் பார்த்துக் கேட்டார் சதாசிவம்.

“அப்படிலாம் ஒன்னும் இல்லைங்கப்பா..” என்று தரையைப் பார்த்துப் பதிலளித்தான் முகிலன்.

“கோபப்படாதையா.. நாளைக்கு உனக்குப் பிடிச்சது எல்லாம் வாங்கி தந்து அம்மாவைச் சமைக்கச் சொல்றேன்.. இன்னைக்கு இது சாப்பிடுயா” என்று மிக அன்புடன் கூறினார் சதாசிவம்.

சமையலறையிலிருந்து கம கம மிளகு வாசத்துடன்; இரண்டு ஆம்பலேட்டுகளுடன் வந்தார் மீனாட்சி.

“மீனாட்சி பையனுக்குச் சாப்பாடு பரிமாறு…! சாப்டுயா… நல்லாச் சாப்பிடு… மீனாட்சி நாளைக்கு நா காலையிலேயே சந்தைக்குப் போய் கோழி, மீன் எல்லாம் வாங்கிட்டு வரேன். பையன் என்ன கேட்கறானோ அது சமைச்சிக் கொடு..” என்றார் சதாசிவம் தன் தட்டில் இருக்கும் சாதத்தைச் சுவைத்தப்படி.

“நாளைக்கா…? நாளைக்கு நீங்க கிளினிக் போகனும்…! காலையில எட்டு மணிக்கு வர சொன்னாரு டாக்டர்… நீங்க சந்தைக்குப் போய்ட்டா டாக்டர் பார்க்க லேட் ஆகிடும்… அதும் இல்லாம நானும் துணைக்குக், கூட வரனும்னு இருக்கேன்… எல்லாம் சமைச்சிட்டு கிளம்ப நேரம் ஆயிடுமே…! என்று கடகடவென பேசி முடித்தார் மீனாட்சி.

“நான் எல்லாம் வாங்கி கொடுத்துட்டு டாக்டர் பார்க்க போறேன்… டாக்டர் அரவிந்த் தானே நான் போன் பண்ணி பேசிக்கிறேன் அதெல்லாம் பிரச்சனையில்லை… நான் தனியா போய்ட்டு வரேன் மீனாட்சி… நீ பிள்ளைகளைப் பாரு…” என்று தன் மனைவியைச் சமாதானம் செய்து சாப்பிட்டு முடித்து எழுந்தார் சதாசிவம்.

அங்கு நடப்பதைக் கண்டுக்கொள்ளாதவனாய் தன் உணவில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான் முகிலன்.

மறுநாள் சதாசிவம் சந்தைக்குச் சென்று சமையலுக்கான அனைத்துப் பொருள்களையும் வாங்கி வந்தார். தன் மனைவியிடம் கொடுத்து தன் பிள்ளைகளுக்குப் பிடித்த அனைத்தையும் சமைத்துக் கொடுக்கும்படி பணித்து விட்டு கிளினிக்கிற்கு தன் மோட்டார் வண்டியில் புறப்பட்டார். பதில் பேச மனமின்றி மௌனம் காத்தார் மீனாட்சி.

“மாமா…, லேப்ல இருந்து வந்த ரிப்போட் இப்போதான் பார்த்தேன்… மா….மாமா இது சாதாரண இடுப்பு வலி இல்ல…” என்று தயங்கி சதாசிவத்திடம் பேச ஆரம்பித்தார் டாக்டர் அரவிந்த்.

“ஆ…என்ன அரவிந்த் சொல்ற…சாதாரண இடுப்பு வலி இல்லனா… அ… அப்போ இது என்ன..?” என்று அதிர்ச்சியில் வினவினார் சதாசிவம்.

“மாமா… இது எலும்பு கேன்ஸ்சர் மாமா…ஸ்தேஜ் தரீ.. உங்களுக்கு வலி இடுப்புல ஸ்தாட் ஆயிருக்கு…” என்று டாக்டர் அரவிந்த் சொல்லி முடிப்பதற்குள் தாரை தாரையாக கண்களில் நீர் வழிய தொடங்கியது சதாசிவத்திற்கு.

“மாமா அழாதிங்க…! பிலீஸ்…! இந்தப் பிரச்சனைக்கு இங்க திரீக்மென் கொடுக்கறது கஷ்டம் மாமா… நா ஒரு டாக்டர் டீடேல் கொடுக்கறேன்… அங்க போய் அவர பாருங்க மாமா… அவர் அடுத்து என்ன செய்யலாம்னு சொல்வாரு…”என்று சொல்லி முடித்தார் டாக்டர்.

உலகமே ஸ்தம்பித்துப் போனவராய் நாற்காலியில் அமைர்ந்திருந்தார் சதாசிவம். மனைவி மீனாட்சி, முகிலம் மற்றும் தாரிகாவின் முகங்கள் அவர் கண் முன் வந்து நிழலாடின.

“மாமா…மாமா…” என்று டாக்டர் அரவிந்த் கூக்குரல் கேட்டு நிஜ சூழலுக்கு வந்தார் சதாசிவம்.

“மாமா….இந்த ரிப்போட்ட நான் சொல்ற டாக்டர் கிட்ட காட்டுங்க மாமா… சீக்கிரமா அவர போய் பாருங்க…” என்று கூறி ஒரு கோப்புறையைச் சதாசிவத்தின் கையில் கொடுத்தார் டாக்டர் அரவிந்த்.

தான் சற்றும் எதிர்பாராததை டாக்டர் கூறியதை எண்ணி மனம் உடைந்து போனார் சதாசிவம். தன் மனைவி பிள்ளைகளிடம் எப்படி இதனைச் சொல்வது; அவர்கள் எப்படி தாங்கிக் கொள்வார்கள் என்று தன் உடல் நிலையையும் மறந்து அவர்களைப் பற்றி யோசித்தார் சதாசிவம். இச்சிகிச்சைக்கு நிறைய செலவாகும். பணத்தை எப்படி தேடுவது போன்ற எண்ணங்கள் சதாசிவத்தை ஆட்கொண்டது. இறுதியாக, இதைப் பற்றித் தன் மனைவி மற்றும் குழந்தைகளிடம் எதுவும் சொல்லவேண்டாம் என்று முடிவு எடுத்தார்.

மனதளவில் தீயாய் கொதித்துக் கொண்டிருந்தாலும், வீடு திரும்பியதும் தனது குடும்பத்தினருடன் எப்போதும் போல சகஜமாக இருந்தார் சதாசிவம்.

தன் மனைவி சமைத்து வைத்திருந்த அறுசுவை உணவுகளைக் குடும்பமாக அமர்ந்து உண்டார். மேலும், உணவுகளைச் சுவைக்கும் முகிலனின் முகத்தில் பூரிப்பு ஆட்கொண்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனார் சதாசிவம். இரவு உணவை முடித்து, வெகுநேரம் ஆகியும் சதாசிவத்திற்கு உறக்கம் வரவில்லை . அவர் மனம் கிளினிக்கில் நடந்ததை அசைப்போட்டுக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை, மீனாட்சி எழுந்து; காலை உணவைத் தயார் செய்து சதாசிவத்தை எழுப்பினார். சில்லென்று இருந்த சதாசிவத்தின் கைகளைத் தொட்டதும் அதிர்ந்து போனார் மீனாட்சி. என்ன நடந்திருக்கும் என்று மீனாட்சி சுதாகரிப்பதற்குள் முகிலனும் தாராவும் கதறி அழ தொடங்கினர்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “அப்பா

  1. நல்ல கதை. இறப்பு இல்லாமல் தவிர்த்து இருக்கலாம்.

  2. ‘அப்பா’ ஓர் அருமையான கதை. ஓர் அன்பான தந்தையின் பாசத்தை உணர்த்துகிறது. கதாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *