அப்பாவும், நடேசனும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,863 
 

‘நடேசா, சௌக்கியமா இருக்கியா ? இங்க நானும், உங்கம்மா, தங்கைகளும் சௌக்கியம், நம்ம பட்டுக்கோட்டை பெரியப்பா ஒரு வாரமா இங்கே வந்து தங்கியிருந்துட்டு போன புதனுக்குதான் கிளம்பினாங்க, அவங்களும் உன்னை ரொம்ப விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க, உன் சிநேகிதப்பய பரமசிவனுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம், அவங்க அப்பாவும், அம்மாவும் வந்து பத்திரிக்கை கொடுத்துட்டுப் போயிருக்காங்க, அவனும் நேத்தி சாயங்காலம் நேர்லவந்து உன்னை அவசியம் வரச்சொல்லி கடிதாசி எழுதணும்ன்னு என்னைக் கேட்டுகிட்டுப் போனான், அதனால நீ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் கிளம்பி ஊருக்கு வந்து சேரவேண்டியது, அப்படியே நம்ம ராவுத்தர் பாய் கடையில உனக்கு ஒரு நல்ல வேலைக்கும் சொல்லியிருக்கேன், முன்போல இல்லை, இந்த தடவை கட்டாயம் அமைஞ்சிரும்போலிருக்கு – எல்லாத்துக்கும் பதில் எழுதவேண்டாம், புறப்பட்டு வா, நேர்ல பேசிக்கிடுவோம், அவ்ளோதான் விஷயம் – இப்படிக்கு அப்பா’

நடேசன் அப்பாவின் கடிதம் கையில் படபடக்க விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தான். அப்பாவின் கடிதங்கள் அவர் பேசுவதைப்போலவே இருக்கும். பதினைந்து பைசா தபால் கார்டுக்குள் எத்தனை விஷயங்களை நுணுக்கிவிடமுடியுமோ அத்தனையையும் அடக்கிவிடுவதுபோன்ற எறும்பு எழுத்துக்களில் நேரில் சந்திக்கிறபோது எப்படிப் பேசுவாரோ, அப்படியே எழுதிக்கொண்டுபோவார், பேச்சினிடையே இடைப்படுகிற ‘வந்து’, ‘போயி’ என்பதுபோன்ற பொருளற்ற அசைச்சொற்கள்கூட, அவர் கடிதங்களில் அவ்வப்போது தென்படும். அவருடைய கடிதங்களை வாசிக்கும்போது, அவரே அவனது கழுத்துக்குப்பின்னால் தலையை முட்டிக்கொண்டு அவனோடு கூடவே படிப்பதுபோன்ற பிரம்மைகூட உண்டாகும்.

நடேசன் சலிப்போடு அந்தக் கடிதத்தை இன்னொருமுறை படித்தான். பரமசிவனுக்குக் கல்யாணம் என்பது சந்தோஷமான விஷயம்தான், ஆனால் அதற்காக ஊருக்குப் போகவேண்டுமா என்றிருந்தது. ஒரு நல்ல வேலை இல்லாமல் அந்த ஊர் மண்ணை மிதிக்கிறதில்லை என்று மானசீகமாய்ச் செய்த சபதம் உடைந்துபோகுமோ என்று பயந்தான் அவன். ராவுத்தர் பாய் கடையில் அவனுக்கு வேலை பார்த்திருக்கிறதாய் அப்பா சொல்வதையும் அத்தனை உறுதியாய் நம்புவதற்கில்லை, மிகை நம்பிக்கைகள் தருவதற்கும், அவை அவன் கண்முன்னே தூள்தூளாய் உடைந்து சிதறும்போது அலட்டிக்கொள்ளாமல், ‘அடுத்தவாட்டி ஷ்யூரிட்டியா கெடச்சிடும்யா, ஏன் கவலைப்படறே ?’ என்று வருத்தமில்லாமல் ஒரேமாதிரி பேசுவதற்கும் அப்பாவைப்போல் வராது. ஏமாற்றங்களுக்கும், குருட்டு நம்பிக்கைக்கும் அவர் பழகிப்போயிருக்கலாம், அவனால் அவற்றைக் கொஞ்சமும் தாளமுடிவதில்லை.

அப்பாவையும் குற்றம் சொல்வதற்கில்லைதான், வாழ்நாள்முழுக்க அவர் வேலை என்று யாரிடமும் போய் நின்றதில்லை, கேட்டதில்லை, ஒரு துரும்பை நகர்த்திப்போடுகிற வேலைகூட அவராகச் செய்ததில்லை, பரம்பரைச் சொத்து, மற்றும் வசதியான அம்மாவை மணந்துகொண்ட உறம்பரைச் சொத்து ஆகியவற்றைக் கட்டி மேய்க்கிற வலுவான பணக்காரராகவே அவர் பெரும்பாலான பால்யத்தைக் கழித்திருந்தார்.

கன்னங்கள் இரண்டையும் மறைப்பதுபோல் இரண்டு பெரிய கறுப்புப் பொட்டுகள், அவற்றை மேலுதட்டோடு இணைக்கும் தடிமனான இரு கம்பளிப்பூச்சிகள் என்று அப்பாவின் முகத்தின் பெரும்பகுதியை அவரது மீசையின் கம்பீரம் ஆக்கிரமித்திருக்கும், எப்போதும் பளபளப்பான உசத்தி சட்டைகள்தான் அணிவார், அவற்றின் முதல் சில பட்டன்களை அவர் எந்தக் காலத்திலும் உபயோகித்ததில்லை. சுருள்சுருளாய் நெஞ்சுமுடிக் காட்டினிடையே கனமான தங்கச் சங்கிலியின் முனைப் புலிநகம் தொலைந்துபோகும்படி எப்போதும் திறந்த மனதுடன்தான் இருப்பார். கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு அவருக்குச் சொந்தமான வயலில் நாள்முழுக்க நடைபயின்றுகொண்டிருப்பார், களைப்புத் தட்டுகையில் அதட்டுவதற்கு யாராவது தட்டுப்படுவார்கள், ‘யார் வீட்டுச் சொத்துய்யா ?’ என்று அவர்களிடம் கர்வம்பேசி தனது ஆஸ்திக் கணக்கை ஸ்தாபித்துக்கொண்டிருப்பார், பெரிய பெண்கள் மூவரின் திருமணச் செலவுகளுக்காக சோறுபோடும் வயலை விற்றுவிட நேர்ந்தபிறகு, இப்போது வீட்டுக்குள்ளேயே நடைபயில்கிறார், வீட்டிலிருக்கிறவர்களையே அதட்டுகிறார் – அவ்வளவே வித்தியாசம், மற்றபடி அப்பா உழைப்பாளியாகவும் இருந்ததில்லை, நிர்வாகியாகவும் இருந்ததில்லை – பணக்காரராகத்தான் இருந்தார் – ‘இருந்தார்’ என்பதே இதில் முக்கியம், ‘இருக்கிறார்’ இல்லை – அதுவே நடேசன் இப்போது படும் சிரமங்களுக்கெல்லாம் பெருமளவு காரணம்.

‘உத்யோகம் புருஷ லட்சணம்’ என்று யாரோ சொன்னதை ‘புத்ரயோகம் புருஷ லட்சணம்’ என்று தப்பாய்ப் புரிந்துகொண்டதுபோல, அப்பாவுக்கு மொத்தமாய் எட்டு புத்ரர்களும், புத்ரிக்களும். நடேசன்தான் மூத்தவன், அதன்பிறகு யாரோ முனிவர் சபித்ததுபோல் வரிசையாய் ஆறு பெண்குழந்தைகள், கடைசியாய் நீண்ட ரயிலின் இறுதிப் பெட்டிபோல சின்னஞ்சிறுவன் ஒருத்தன். இவரால் பூமிக்கு உண்டாகிற பாரம் பொறுக்கமுடியாமல் ஆண்டவனே ஒருநாள் அதைத் தடைசெய்துவிட்டபிறகுதான் அப்பா ஓய்ந்தார்.

ஐந்து பெண்கள் பெற்றாலே அரசனும் ஆண்டி ஆகக்கூடும் என்று சொல்வார்கள், கிட்டத்தட்ட அரச போகத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாரே ஒழிய, அப்பா உண்மையில் அரசரில்லை, ஆகவே ஆண்டிக்கோலம் மிக விரைவில் அவரைத் தேடிவரப் பரபரத்தது. அவ்வூர் வழக்கப்படி பதினேழிலும், பதினெட்டிலுமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் செய்விக்க ஆரம்பித்த அப்பா, மிக விரைவில் தனது நீண்டநாள் சொத்துக்கள் யாவும் ஒவ்வொன்றாய் தன் கையை விட்டுப்போகக் கண்டார், ஒரு கட்டத்தில் மீதமிருப்பது பூர்வீக வீடு ஒன்றுதான் என்கிற நிலைமை வந்தபிறகு, இன்றைக்கோ, நாளைக்கோ என்றிருக்கிற மற்ற மூன்று பெண்களின் திருமணத்துக்காகவும், வீட்டில் தொடர்ந்து அடுப்பெரிவதற்காகவுமாவது அவர் நடேசனை நம்பியிருக்கவேண்டிய நிலைமை வந்தது. அவனது வேலைக்காக அவர் தீவீரமாய் முயல ஆரம்பித்தது அப்போதுதான்.

படிப்பு வாசனையே இல்லாத குடும்பத்தில் பிறந்த, வளர்ந்தவனாகிய நடேசன்மட்டும் இன்னொரு அப்துல் கலாமாகவோ, அம்பேத்காராகவோ வரவேண்டும் என்று அவன் அப்பா எதிர்பார்த்தது, அதுவும் இத்தனை தாமதமாய் எதிர்பார்த்தது சற்றேனும் நியாயமில்லை. அவன் தன் குலவழக்கப்படி நண்பர்களோடு ஊர் சுற்றுவதும், ஆற்றங்கரையில் பகிரங்கமாய் மீன் பிடிப்பதும், ரகசியமாய் பீடி பிடிப்பதுமாய், ஒழிந்த நேரத்தில் அவ்வப்போது பள்ளிக்கும் போய்வருவதுமாய் தன் இளமைக் காலத்தைக் கழித்தான். ஒவ்வொரு வகுப்பையும் தட்டுத்தடுமாறி எப்படியோ பாஸ் செய்துவிட்டான் என்றாலும், அவன் வாங்கிய மதிப்பெண்கள் வறுமைக்கோட்டின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு தொங்குகிற வறியவன்போல் பார்டர் மார்க் எல்லையை இறுகப் பற்றினபடி பரிதாபமாய் விழித்ததால், ப்ளஸ் டூவரை சிரமமில்லாது ஓடிய வண்டி, அதன்பிறகு திசை தெரியாமல் திகைத்து நின்றுவிட்டது. அப்பாவின் சிபாரிசில் பக்கத்து ஊர்க் கல்லூரியில் இடம்பிடித்தான், படித்தான், நாளொரு ஆப்ஸென்ட்டும், பொழுதொரு அரியர்ஸ¤மாய் மூன்றுமுதல் நான்கு வருடங்கள்வரை இனிதே கழித்து, ஒரு சுமாரான டிகிரிக் காகிதத்தோடு வெளியேவந்தான்.

உலகெங்கும் பணக்கார வீட்டுக் குழந்தைகள் வளர்வதில் ஒன்றுக்கொன்று பெரிதான வித்தியாசமிருப்பதில்லை. நடேசனும் இதர பணம் படைத்த குடும்பப் பிள்ளைகள்போலவே, தான் வேலைக்குப்போகவேண்டிய அவசியமே என்றைக்கும் வரப்போவதில்லை என்கிற உறுதியான எண்ணத்தோடுதான் படித்தான். கம்பீரச் சிரிப்பும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத அலட்டல் பேச்சுமாய் நித்தம் ஊரை அளந்துவந்த தகப்பனாரின் சொத்துக்களைப் பார்த்துக்கொண்டு உள்ளூர் இளைஞர் சங்கத்தின் செயல்தலைவனாகவோ, அதிர்ஷ்டமடித்தால் கிராமசபை கவுன்சிலர் அல்லது எம். எல். ஏ-வாகவோ பிற்காலப் பிழைப்பை சௌகர்யமாய் ஓட்டிவிடலாம் என்கிற கனவுகள்சகிதம் அவன் கவனமில்லாமல் படித்தான், வளர்ந்தான், கெட்டான்.

ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி என்று தன்னை எண்ணிக்கொண்டிருந்தவனின் நினைப்பில் திடீரென்று ஒருநாள் மண்ணும், கல்லும், முள்ளும் விழுந்தது, படிப்பை முடித்து நெடுநாளாகியும் தனக்கென ஒரு வேலையைத் தேடிக்கொள்ளாததற்காக அவனது அப்பா அவனைத் தீவீரமாய்த் திட்ட ஆரம்பித்தபோதுதான் அவன் தன்னையும், தனது சுற்றுப்புறத்தையும் ஒருமுறை சரியாய்ப் பார்த்துக்கொண்டான், அப்பா உண்டாக்கி வைத்திருந்த பிரம்மையின்படி தான் ஊறிக்கொண்டிருந்தது பன்னீர்க் குளமில்லை என்பதும், தனது பண்ணைக்கு, தான் ஒரு உழைக்கும் மாடாகவே தற்போது அவசியப்படுவதும் அவனுக்குப் புரிந்தது. வானத்திலிருந்து பூமிக்கு அபத்திரமாய், அநியாயமாய் வீசி எறியப்பட்ட அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாமல் வாழ்க்கையையே வெறுத்துப்போனான் அவன். அந்த பளுவிலிருந்து இனிமேல் வெளிவருவதும் சாத்தியமில்லை என்கிற இன்னொரு நிதர்சன அடி அவன்மேல் விழுந்து அவனை பூமியோடு நசுக்கித் தேய்த்தது.

அப்பா எப்போதும் பிறர்மேல் காட்டிவந்த ஆதிக்கத்தையெல்லாம் மொத்தமாய் அவன்பக்கம் திருப்ப ஆரம்பித்தார், காலை எட்டரை மணிவரை தூங்கிக்கொண்டிருந்த பழக்கத்தில் முதல் இடி விழுந்தது, ‘நானே அஞ்சரைக்கு எழுந்துடறேன், உனக்கென்னடா அத்தனை தூக்கம் ?’ என்று ஒருநாள் அவன் உச்சந்தலையில் அவர் தட்டியெழுப்பினார், உச்சந்தலைத் தட்டல் மெல்ல முதுகு தட்டலாகி, பின்பக்கத்தில் உதைத்து எழுப்புவதுபோன்ற பாவனையாகவும் மாறியது, காலையில் துவங்குகிற அர்ச்சனை நாள்முழுக்கத் தொடரும் – ‘முட்டாப்பய மவனே, சீக்கிரமே எழுந்திரிச்சு நாலு எடத்துக்குப்போய் நல்ல வேலையா ஒண்ணைத் தேடிக்கிற வழியைப் பாருடா’ என்றோ, ‘இன்னும் எத்தனை நாளைக்கு உனக்கு நான் தண்டச்சோறு போடமுடியும் ?’ என்றோ விஷம் நிரம்பிய வார்த்தைகளை அவர் அன்றாடம் கொட்ட ஆரம்பித்ததில் நடேசனின் தூக்கம் கெட்டதோடு, நிம்மதியும் கெட்டது.

இந்த விஷயத்தில் வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ, யாரும் நடேசனுக்கு ஆதரவாய்ப் பேசமுடியவில்லை. சாதாரணமாகவே அப்பா யாருடைய ஆலோசனையையோ, சிபாரிசையோ மதிக்கிறவரில்லை. உண்மையில், யாராவது ஒன்று சொன்னால் அதற்கு நேர்மாறாய்ச் செய்வதையே தனக்குக் கிடைக்கிற மரியாதையாய் அவர் கருதிவந்தார். நாலு பேர் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் எல்லோரும் காவிரிப் பிரச்சனையில் கர்நாடகா செய்வது அநியாயம் என்று ஒருமனதாய் கருத்துத் தெரிவித்தால், அப்பாவுக்கு அவசியம் அவர்களிடையில் புகுந்தாகவேண்டும், ‘அப்படிச் சொல்லிடமுடியாதுங்கறேன்’ என்று ஆரம்பித்து, அவர் கனவிலும் எட்டிப்பார்த்திராத கர்நாடகக் காவேரியில் தற்போதைக்கு கன்னடர்களுக்குப் போதுமான அளவு தண்நீரே இல்லை என்று திணறாத குரலில் சத்தியம் செய்தாகவேண்டும். யாரேனும் ஒருவரின் உறவுக்காரப்பையன் விசாகப் பட்டினத்தில் நல்ல வேலையில் சேர்ந்திருப்பதாய்த் தகவல் வந்தால், ‘இதென்ன பெரிசு ? என் சகலையோட சித்தப்பா மவன் டெல்லியில பத்து வருஷமா ஆ·பீஸரா குப்பை கொட்டறான், போனவாட்டிகூட லீவ்ல வரும்போது எனக்கு ரெண்டு சால்வை வாங்கிட்டு வந்தானே’ என்று இல்லாத உறவொன்றை உடனடியாய் சிருஷ்டித்து பெருமை தேடிக்கொள்வார் அவர், அவரைப் பொறுத்தவரையில் அவைகளெல்லாம் பொய்கள் இல்லை, அவரது சமூக மரியாதைக்காக அவர் உபயோகிக்கும் கருவிகள். சொல்லும் விதத்திலேயே அவர் எல்லாம் அறிந்தவர் என்பதுபோலும், அவர் சொல்பவை அத்தனையும் கல்வெட்டுகளாய்ப் பதித்து வைக்கத்தக்க முக்காலமும் பொருந்தும் சத்தியங்கள் என்றும் கேட்கிறவர் பிரம்மிக்கும்படி அவரது தெளிவும், போகிறபோக்கில் அலட்சியமாய்த் தகவல்களை வீசுகிற பாவனையும் இருக்கும்.

சுற்றியிருக்கும் எல்லோரும் தனக்கு நிரந்தரமாய் சாமரம் வீசுவதற்கென்றே பிறந்தவர்கள் என்பதுபோன்ற கணிப்பில் அன்றாடம் உலவிவந்த அப்பா, யாருடைய பேச்சையும் கேட்கத் தயாரில்லை. நடேசனின் தற்போதைய நிலைமையை நினைத்து மிகவும் வருத்தப்பட்ட அவனது அம்மாவால்கூட இந்த பிரச்சனையில் அவனுக்கு உதவமுடியாமல் போனது. நடேசனின் அப்பா எந்த அளவு அலட்டலானவரோ, அதே அளவு அப்பிராணியானவர் அவனது அம்மா. அவரது பேச்சை அப்பா சில்லறைக் காசுகளாகவே மதிப்பது வழக்கம். உண்மையில் ஆண்டவன் அப்படிப்பட்ட எதிர் ஜோடிகளாகத்தான் தேடித்தேடி செய்கிறான் என்று நடேசனுக்கு எப்போதும் தோன்றும், பேச்சுக்குப் பேச்சு எதிர்ப்பேசியே பழக்கப்பட்ட அவனது சுந்தரி அக்காவுக்கு வாயைத் திறக்கவே யோசிக்கிற குமரேசன் மாமா வந்து வாய்த்தபோது அவனது கருத்து இன்னும் உறுதிப்பட்டது. என்ன அமைந்தென்ன, என்ன நடந்தென்ன, இப்போது யாரும் அவன்பக்கம் பேசுவதற்கில்லை.

நடந்தவற்றை, நடப்பவற்றை, இனி நடக்கப்போகிறவையையெல்லாம் நினைக்கும்போது நடேசனுக்குப் பெரும் ஆயாசமாயிருந்தது. ஒரு நாள்கூட அவன் படுக்கைக் காப்பியின்றி உலகத்தைப் பார்த்ததில்லை, இப்போது தினமும் காலை சீக்கிரமே எழுந்து, பல் தேய்த்து, வேலை தேடும் விஷயமாய் அன்றைக்கு யார் யாரையெல்லாம் பார்க்கப்போகிறான் என்கிற பட்டியலை அப்பாவிடம் ஒப்புவித்து, அவரது குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் சரியானபடி பதில் சொல்லியானபிறகுதான் பச்சைத் தண்நீரே பல்லில் படலாம் என்று கண்டிப்பான உத்தரவாகியிருந்தது. காப்பி குடித்ததும் உடனடியாய்க் குளித்து, அப்பாவின் அறிவுரை கலந்த திட்டல்களை சகித்தபடி சாப்பிட்டு, இருப்பதில் நல்ல உடுப்பாய் மாட்டிக்கொண்டு, கையில் ·பைல் சகிதம் அவன் வெளியே கிளம்பியாகவேண்டும்.

மேற்கத்திய ஆடைகளெல்லாம் அணிவது சரிதானா என்று பாதி ஆர்வமாய், மீதி கூச்சமும், பயமுமாய் யோசிக்கிற வெட்கப்பெண்போல கிராமத்தனத்தின் விளிம்பில் இருந்துகொண்டு, நகரமாகலாமா, வேண்டாமா என்று யோசனையாய் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது அவர்களின் சின்ன ஊர், அங்கே நடேசனின் படிப்புக்கேற்ற (??) வேலை சிற்சில இடங்களிலேயே சாத்தியமானதாய் இருந்தது. ஆகவே அவன் உள்ளூருக்கும், வெளியூருக்குமாய் நிறைய அலையவேண்டியிருந்தது. தேவையான டவுன் பஸ் கட்டணம், மதிய சாப்பாடு, ஒரே ஒரு டீ ஆகியவற்றுக்கான பணத்தைமட்டும் எண்ணி அவன் கையில் தந்திருப்பார் அப்பா, டீ-க்கு பதிலாக காப்பி குடிக்கக்கூட ஆயிரம்முறை யோசித்து அப்பாவிடம் கெஞ்சநேர்ந்த தனது நிலைமை அவனுக்கு மிகவும் அவமானகரமாயிருந்தது, அவன் இருந்த வாழ்வென்ன, இப்போது இருப்பதென்ன ? தனக்குச் சொந்தமான பரம்பரைச் சொத்துகளையெல்லாம் தன் அப்பா அலட்டலாய் செலவு செய்து தீர்த்துவிட்டு, அதற்கு தண்டனையாய் இப்போது தன்னைக் கொடுமைப்படுத்துகிறார் என்பதுபோன்ற விரோதத்தோடு அவரைப் பார்க்க ஆரம்பித்தான் நடேசன்.

இந்தப் பிரச்சனைகளெல்லாம் சின்னஞ் சிறியவை. அவன் வேலை தேடிப்போன பகுதிகளில் அவனுக்கு நேர்ந்த அனுபவங்களையும், அவமானங்களையும் பட்டியலிட்டால் இந்தக் கதையை அச்சிடுகிற காகிதம் தொப்பலாய் நனைந்துபோகும். உலகத்திலேயே மிகக் கஷ்டமான விஷயம் ஒரே குச்சியில் சிகரெட் (முன்பு பீடி) பற்றவைப்பதுதான் என்று இத்தனை நாளாய் எண்ணிக்கொண்டிருந்த நடேசன், அந்த நினைப்பையே மாற்றிக்கொள்ள நேர்கிற அளவுக்கு வேலை கிடைப்பது பாலைவனத்தில் பால் பூத்-தைத் தேடுவதுபோன்ற காரியமாய் இருந்தது. பாதி இடங்களில் ‘வேலை காலி இல்லை’ என்கிற போர்டுகளும், மீதி இடங்களில் அவன் படிப்பு அதிகம் அல்லது குறைவு என்றெண்ணி நிராகரிப்பவர்களுமாய் உலகம் இரக்கமற்ற முதலாளிகளால் நிறைந்திருந்தது. சிலர் அவனை உட்காரவைத்து ஒன்றரை மணி நேரம் சரமாரியாய்க் கேள்விகள் கேட்டு ‘அவ்வளவா திருப்தியில்லை தம்பி’ என்று தாடையைச் சொறிந்தபடி நிராகரித்தபோது அவனுக்கு அவர்களையெல்லாம் மொத்தமாய் நிற்கவைத்துக் கொளுத்தவேண்டும்போல் தோன்றியது, கணக்கப்பிள்ளை வேலைக்கும் கஜகிஸ்தான் அதிபரின் பெயர் தெரிந்துவைத்திருப்பதற்கும் என்ன சம்பந்தம் ?

இந்த ஏமாற்றங்களின் தொடர்ச்சியாய், ஒவ்வொரு தினத்தின் மாலை அல்லது இரவும் நடேசனுக்கு அவன் அப்பாவின் வசவுகளோடு நரகமாய்க் கழிந்தது. அன்றைய தினம் அவன் எத்தனை பேரைப் பார்த்தான், என்னவெல்லாம் நடந்தது என்று அக்கறையாய்க் கேட்டுத் தெரிந்துகொண்டு, ‘இத்தனை நாளா அலையறே, ஒரு வேலை பார்த்துக்க சாமர்த்தியமில்லையே உனக்கு’ என்று சாத்வீகமாய்த் தொடங்குகிற அப்பா, அவனது வயதில் அவர் எத்தனை சூட்சுமமாய் இருந்தார், வாழ்நாள் முழுதும் ஒருவரிடமும் கைகட்டி நிற்கவில்லை என்றாலும் உலகத்திலிருக்கிற அத்தனை வேலைகளுக்கும் அவர் தன்னைத் தகுதியாக்கிக்கொண்டிருந்தமை போன்ற சுயபுராணங்களை எடுத்துச் சொல்லி அவனது தற்போதைய இயலாமையை அவனுக்குள்ளிருந்து இழுத்து வெளியே நிறுத்திவைத்து நடுக்கூடத்தில் சாட்டையால் அடிப்பார், தூணைப் பிடித்துக்கொண்டு அம்மாவும், தங்கைகளும் அவனையே மிரண்ட விழிகளோடு பார்த்துக்கொண்டிருக்க, நடேசன் குனிந்த தலை நிமிராமல் அத்தனையையும் சகித்துக்கொண்டாகவேண்டும், இல்லையென்றால் ராச்சாப்பாடு உறுதியில்லை.

இத்தனை பேசுகிறாரே, அவரே அவனுக்கு ஒரு வேலையைப் பார்த்துத்தர முடியாதா என்று ஒவ்வொருமுறையும் நடேசனுக்குத் தோன்றும், ஆனாலும் அப்பா ஊரில் தனக்கிருக்கிற மரியாதையை, யாரிடமோ அவனுக்காக சிபாரிசுக்குச்சென்று நிற்பதால் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதும் அவனுக்குப் புலனாகியிருந்தது. அதுமட்டுமில்லை, அப்பா உள்ளூர நினைத்துப் பெருமைகொண்டிருக்கும் ஊர் மரியாதையும், கம்பீரமும், இன்னபிறவும் எந்த அளவு காசுக்காகும் என்று அவனுக்கும் புரியவில்லை, அப்பாவுக்கும் தெரியவில்லை. கடைவீதிப்பக்கம் போகும்போதெல்லாம் அப்பாவை மரியாதையோடு கை கூப்புகிற அரிசி மண்டிக்காரரிடம், ‘என் மகனுக்கு ஒரு வேலை போட்டுக்கொடு’ என்று இரந்துகேட்டால் அவரது எதிர்வினை எப்படியிருக்கும் ? அதை சோதித்துப்பார்க்க அப்பா தயாரில்லை, ஆகாயக் கோட்டைகளாகவே இருப்பினும் அவற்றை கடப்பாரையால் குத்தி வலுப்பார்க்க யாருக்கும் துணிச்சலிருப்பதில்லைதான்.

இவ்வாறாய் பெரும் சிரமங்களிடையே நாட்கள் கழிய, நீண்ட யோசனைக்குப்பின் நடேசன் ஒரு முடிவுக்கு வந்தான் – உள்ளூரில் சம்பளம் தருகிற வேலைகள் இல்லை, அப்படியே இருந்தாலும் அவற்றில் ஒன்றை அவனுக்குத் தருவதற்கு முதலாளிகளுக்கோ, ஆண்டவனுக்கோகூட இஷ்டமில்லை. ஆகவே அப்பாவிடம் கொஞ்சமாய்க் காசு வாங்கிக்கொண்டு வேறொரு பெரிய ஊருக்குச் சென்று, செலவுகளை சிரமப்பட்டு குறைத்துக்கொண்டு, இருக்கிற பணம் தீரும்வரை அங்கிருக்கிற நிறுவனங்களில் அவனது அதிர்ஷ்டத்தைச் சோதித்துப்பார்ப்பது, அதுவும் அவனுக்கு வாய்க்கவில்லையென்றால், அடுத்த ஊர், மீண்டும் தேடல், எது எப்படியானாலும் ஒரு நல்ல வேலையை சம்பாதித்துக்கொள்ளாமல் இந்த ஊருக்குத் திரும்பி வருவதில்லை, அது மூட்டை தூக்குகிற உத்யோகமாய் இருந்தாலும் பரவாயில்லை, வீட்டுச் செலவுகளுக்கும், தங்கைகளின் திருமண நிதிக்கான சேமிப்புக்கும் போதுமான அளவு சம்பளம் வருகிற வேலையாய் வேண்டும் – அது கிடைக்கிறவரை இந்த அப்பாவின் முகத்தில் விழிக்கிறதில்லை என்று உள்ளுக்குள் உறுதிபண்ணிக்கொண்டான். அவனுடைய யோசனைக்கு அப்பாவும் அதிசயமாய் சம்மதித்துவிட, திருப்பூரிலிருந்த சிநேகிதன் சரவணனுக்கு ஒரு கடிதம் போட்டுவிட்டு, அதற்கான பதிலுக்குக்கூட காத்திராமல் அவன் ரயிலேறிவிட்டான்.

சின்னக் கிணற்றிலிருந்து பரந்த உலகத்துக்குள் எகிறிக் குதித்துவிட்ட தவளையைப்போல அந்தப் பெரிய ஊர் தந்த பிரம்மிப்பிலிருந்து மீண்டு வருவதற்கே நடேசனுக்குப் பல நாட்களானது. தெருவுக்குத் தெரு பனியன் கம்பெனிகளாய் நிறைந்துகிடந்த திருப்பூரிலும் அவனுக்கான வேலை கிடைப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள்தான், சரவணனும், அவன் நண்பர்களும் இருந்த சின்னஞ்சிறு அறையில் ஒரு ஓரமாய்த் தங்கிக்கொண்டு, வாழ்க்கையில் முதல் தடவையாய் தரையில் ஜமுக்காளம் விரித்துப் படுத்துக்கொண்டு, கையில் சான்றிதழ்களோடு உள்ளாடை ஏற்றுமதி நிறுவனங்களை ஒவ்வொன்றாய் உலா வரஆரம்பித்தான் நடேசன். வாடிக்கையான ஏமாற்றங்களும், நிராகரிப்புகளும் அங்கேயும் அவனை விடாமல் தொடர்ந்தன.
போதாக்குறைக்கு அருமையான வேலையில், கை நிறைய சம்பளத்தோடு அமர்ந்திருந்த சரவணனும், அவன் நண்பர்களும் செய்கிற தாராளமான செலவுகள் நடேசனை அன்றாடம் கேலி செய்து சிரித்தன. அவர்களோடு தங்கிக்கொண்டு, அவர்கள் பெரிய இடங்களுக்கு சாப்பிடப் போகும்போதோ, ஐம்பது, நூறு என்று செலவு பண்ணிக்கொண்டு சினிமாவுக்குப் போகும்போதோ, போரடித்தால் லவ்டேல், ஊட்டி என்று ஜாலியாய் டூர் கிளம்பிப்போகும்போதோ அவற்றில் கலந்துகொள்ள முடியாமல் தவித்துப்போனான் அவன், வேலை கிடைக்காத வருத்தத்தோடு, இந்தத் தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்துகொண்டுவிட, முதல்தடவையாய் பள்ளியிலும், கல்லூரியிலும் இன்னும் ஊன்றிப் படித்திருக்கலாமோ என்று முகத்திரண்டு புண்களோடு சூர்ய நமஸ்காரம் செய்தான் அவன். முன்பு அவன் தத்தாரியாய்த் திரிந்ததற்கும், இப்போது திடீரென்று முளைத்த பெரிய பொறுப்புகளின் கனத்தைத் தாளமுடியாது துடிப்பதற்கும் – எல்லாவற்றுக்கும் அப்பாதான் காரணம் என்று நினைக்கும்போது அவர்மேல் அளவற்ற குரோதம் உண்டானது அவனுக்கு.

அவன் கடிதம் எழுதவில்லை என்றாலும், அப்பா அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தார், அவற்றிலும் ஒரு அன்பான, பாசமான வார்த்தை கிடையாது – ‘உன்கிட்டேயிருந்து கடுதாசியே வரல்லைன்னு உங்கம்மா ரொம்ப ஙொஙொணக்கிறா, நான்தான் சொன்னேன் – அவனுக்கு வேலை கிடைச்சா தானா எழுதுவான், பட்டணம் போயும் நொண்டிக்கால் மகாராஜாவுக்கு ஏதும் ராஜ்ஜியம் அமையலை, அதான் எழுதாம கெடக்கான்-னு, என்ன சரிதானே ?’ என்பதுபோன்ற குத்தும் வார்த்தைகளும், ‘எப்பதான் உனக்குப் பொறுப்பு வந்து, வேலை கிடைச்சு, நம்ம குடும்பத்துக்கு நல்லது கெட்டதைப் பண்ணப்போறியோ’ ரகமான சலிப்புப் போர்வை போர்த்திய மிரட்டல்களும்தான் அவரது அத்தனைக் கடிதங்களின் சுருக்கமும். தனது வெற்று கௌரவத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் உலகத்தின்முன் தன் மகனை அடகுவைத்துவிட்ட கையாலாகாத்தனம், திடீரென்று அம்பலத்தில் தள்ளப்பட்டும், அவன் தன்னாலானதை முயல்கிறான் என்று நன்றாகத் தெரிந்தும்கூட, அவனை ஊக்கப்படுத்தத் தெரியாமல், ‘என்ன பெரிசா நடந்துட்டே, இன்னும் சீக்கிரம், இன்னும் சீக்கிரம்’ என்று கையில் பேனா ஊசியை வைத்துக்கொண்டு முரட்டுத்தனமாய் அவன் முதுகைக் குத்திக் குத்தி முன்னே தள்ளப்பார்க்கிற மனிதத்தன்மையற்ற சுயநலம். அந்தத் திட்டல்களும், சீண்டல்களும்தான் நடேசனைத் தூண்டிவிட்டு இன்னும் அதிக முனைப்போடு உழைக்கச் செய்தது என்றாலும், ரணமாகிக்கிடக்கிற முதுகின் வலி அவனைத்தவிர யாருக்கும் தெரியவில்லை.

இந்தமுறைதான் அப்பாவிடமிருந்து திட்டலில்லாத கடிதம் ஒன்று வந்திருக்கிறது. பரமசிவனுக்குக் கல்யாணம் – ராவுத்தர் கடையில் அப்பா அவனுக்காக பார்த்திருக்கிற ‘நல்ல’ வேலையில்கூட நடேசனுக்குச் சுவாரஸ்யமில்லை, அல்லது நம்பிக்கையில்லை – ஆனால் பரமசிவன் கல்யாணத்தை அவசியம் பார்த்தாகவேண்டும் என்கிற ஆசை இருந்தது, அவன் கட்டிக்கொள்ளப்போகிற தேவி-யும் அவர்களோடு ஓடியாடிய சிநேகிதிதான் – பரமசிவனின் முறைப்பெண் அவள், பள்ளி நாட்களின் விடுமுறைக்கால சந்தோஷங்களை ஒன்றாய்க் கலந்து பகிர்ந்துகொண்ட பசுமை நிறைந்த நினைவுகளுக்காகவாவது அவர்களின் திருமணத்துக்குப் போய்வரலாம்.

********

அதிகாலையில் நடேசன் வீட்டுக்கு வந்தபோது அப்பா எப்போதும்போல் திண்ணையில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து தினத்தந்தி பார்த்துக்கொண்டிருந்தார், அவனை நிமிர்ந்து கவனித்து எதற்காகவோ மீசையை ஒருமுறை முறுக்கியபடி, ‘வாடா மஹாராஜா’ என்றபோதுகூட அவரிடத்தில் கள்ளமில்லாத சிரிப்புதான், கேலி தெரியவில்லை என்பதை அவன் நம்பாமல் பார்த்தான். நல்ல வேலை அமையும்வரை அப்பா முகத்தில் விழிப்பதில்லை என்று செய்திருந்த சபதம் காரணமில்லாமல் நினைவுக்கு வந்தது. ஏதும் பேசாமல் உள்ளேபோனான், அம்மாவின் உச்சி முகரல், விசாரிப்புகளை ஏற்றுக்கொண்டு, குளித்துவிட்டு உள்ளே வந்தபோது கூடத்தில் இலை போட்டு இட்லிகளோடு உட்கார்ந்திருந்தார் அப்பா, ‘உட்காருடா சாப்பிடலாம்’

அவன் மீத ஈரத்தைத் துவட்டினபடி அவரருகில் சம்மணமிட்டு அமர்ந்தான், இரண்டாவது இட்லித் துணுக்கை வாயில் இடுவதற்குள் அப்பா ஏதாவது கேட்பார் என்று எதிர்பார்த்தான், அதேபோல் அவரும், ‘என்னப்பா, திருப்பூர்ல எதுனா நல்ல சேதி உண்டா ?’ என்று ஆரம்பித்தார். அவன் வாயிலிட்டதை நிதானமாய் விழுங்கிமுடித்துவிட்டு, ‘பார்த்துட்டிருக்கேன்பா’ என்றான்.
அப்பாவின் ஆர்ப்பாட்டமான சிரிப்பு இப்போதும் எழுந்தது, ‘நான்தான் சொன்னேனேடீ, நானாப் பார்த்து எதுனா செஞ்சாதான் உண்டு இவனுக்கு, சொந்தக் கால்ல நின்னு தேடிக்கிறேன்னு சும்மா சவால் விட்டா ஆச்சா ?’ என்றார் அம்மாவைத் திரும்பிப்பார்த்து.
அதுவரை சாப்பிட்ட எல்லாம் சட்டென்று அவன் தொண்டையில் சிக்கி நின்றுவிட்டதுபோலிருந்தது நடேசனுக்கு. இந்த வீடும், உலகமும், மனிதர்களும் அப்படியே மறைந்துபோய் தன்னந்தனியனாய் ஆகிவிடமாட்டோமா என்று மிக ஏங்கினான் அவன். தனக்குள்ளே கூனிக் குறுகிக்கொண்டதில் அவனே ஒரு வெற்றுப் புள்ளியாகி மறைந்துவிட்டதுபோன்ற பிரம்மையில் இதயம் தேம்பிக் கதறியது.

‘சரி சரி, சாப்டுட்டுக் கிளம்பு, ராவுத்தர் பாயைப் பார்த்துட்டு வந்துடுவோம்’ என்று ஏதும் நடக்காததுபோல் அப்பா சொன்னபோது அவன் மெல்லமாய்த் தலையசைத்தான். எத்தனை முயன்றும் கண்ணோரத்தில் சூடான நீர்த்துளியைத் தவிர்க்கமுடியவில்லை.

*******

அவர்கள் ராவுத்தர் பாயின்முன்னே அமர்ந்திருந்தார்கள். அவர் அவனது காகிதங்களை ஆர்வமில்லாமல் புரட்டிக்கொண்டிருக்க, நடேசனுக்கு முள்ளின்மேல் அமர்ந்திருப்பதைபோன்ற உணர்ச்சி, இதுவரை எத்தனையோ பேர் வேண்டுதல்போல முறைவைத்துக்கொண்டு நிராகரித்த காகிதங்கள், நிராகரித்த நடேசன். இந்த ராவுத்தர் பாயைமட்டும் அவைகள் கவர்ந்துவிடுமா ? உள்ளூரில் பட்ட அவமானம் போதும் என்றுதானே கண்காணாத திருப்பூருக்கு ஓடியது ? பரமசிவனின் கல்யாணத்துக்கு ஆசைப்படப்போய் மீண்டும் இப்படியொரு வலையில் சிக்கிக்கொள்ள நேர்ந்ததே என்று அவனுக்குப் பெரும் ஆதங்கமாய் இருந்தது, உணர்ச்சிகளற்ற வெண் தாடி ராவுத்தரின் முகத்தைத் தீவீரமாய் வெறித்துப்பார்த்தான் அவன், ‘வெற்று நாடகமெல்லாம் போதும் கிழவா, ஏன் தயங்குகிறாய் ? இந்தப் பையன் எனக்குத் திருப்தியில்லை என்று வெளிப்படையாய்ச் சொல்லிவிடு, சீக்கிரமாய்ச் சொல்லிவிடு, முகத்தில் கதவைச் சாத்தி என்னை வெளியே துரத்திவிடு, அப்படிச் செய்தால் நான் கவலைப்படுவேனோ என்றெல்லாம் பாவபுண்ணியம் பார்க்காதே, அதெல்லாம் எனக்கு மரத்துப்போய் ரொம்ப நாளாகிவிட்டது, என்னை முதலில் வெளியே துரத்து, நான் ஒரு சிகரெட் குடித்துவிட்டு என் சிநேகிதன் கல்யாணத்துக்குப் போய்ச்சேர்கிறேன்’

அவன் எதிர்பாராத கணத்தில் ராவுத்தர் சட்டென கோப்பிலிருந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தார், மெல்லமாய்த் தாடியோரத்தில் ஒருமுறை தடவிக்கொண்டவர் அப்பாவையும் பார்த்தார், லேசாய்த் தலைசாய்த்தபடி, ‘முதல்ல நம்ம கம்பெனியில எதும் வேலை காலியிருக்கா-ன்னு கேட்கணும் சார்’ என்றார். அதற்குமேல் பேசத் தயங்கினவர்போல் மேஜை மேலிருந்த உலக வடிவ பேப்பர் வெயிட்டைக் கையிலெடுத்துச் சுழற்றினார். வந்ததிலிருந்து நிறுத்தாமல் நடேசனைப்பற்றி இல்லாத பெருமைகள் பேசிக்கொண்டிருந்த அப்பாவும் திடீரென்று மௌனமாகிவிட்டதுபோலிருந்தது. முழு விருப்பமில்லாமல் ராவுத்தர் பாயின் மில்லுக்கு அழைத்து வரப்பட்டபோதே நடேசன் பேச்சை மறந்திருந்தான்.

சில நிமிடங்கள்பொறுத்து அப்பாவின் செருமலோடு அவ்வறையின் நிசப்தம் கலைந்தது. ‘ராவுத்தர் பாய்’ என்று ஒருமுறை சம்பிரதாயமாய் அழைத்த அப்பாவுக்கு அதற்குமேல் சொல்ல நினைத்தவை யாவும் மறந்ததுபோலிருந்தது. சற்றே தலையைக் குனிந்தவர் இன்னும் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டபின் மறுபடி பேசினார், அவரது வழக்கமான வேகமும், தெம்புமற்ற சவலைக் குரல், திக்கித் திணறி வெளிவருகிற வார்த்தைகள் – ‘நீங்கதான் கொஞ்சம் பார்த்து உதவணும் பாய், என் பயலும் என்னைமாதிரி பொறுப்பில்லாம ஊரைச் சுத்திகிட்டுத் திரிவானோ-ன்னு பயப்படாதீங்க, அவன் அவங்க அம்மா வளர்ப்பு, எந்த வேலை கொடுத்தாலும் கச்சிதமாச் செய்வான்’, அந்த இடத்தில் அடைத்துக்கொண்டதுபோல் அப்பாவின் குரல் நின்றுபோனது.

நடேசன் நம்பமுடியாத ஆச்சரியத்தோடு அப்பாவைத் திரும்பிப்பார்த்தான், தரைநோக்கிக் கவிழ்ந்தநிலையில் அவரது தலை பெரியதொரு வட்டம்போல் தென்பட்டது, அவரது கம்பீரமெல்லாம் சுருங்கிப்போய் அந்த பூஜ்ஜியத்துக்குள் ஒளிந்திருக்க, இருட்டான எதிர்காலத்தின் கவலைகளோடு, வாழ்க்கையிடம் பெரிதும் தோல்வியுற்ற ஒரு மனிதர்போல் தலைகுனிந்திருந்த அப்பாவைப் பார்க்க அவனுக்கு ரொம்பவே பாவமாயிருந்தது.

– என். சொக்கன் [nchokkan@gmail.com] (மே 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *