அப்பாவின் சைக்கிளை இந்த ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக விற்றுவிடுவது எனத் தீர்மானித்துவிட்டேன். ‘விற்றுவிடுவது’ என்று சொல்வதைவிட, ‘தள்ளிவிடுவது’ என்ற வார்த்தையே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இடப் பிரச்னை முக்கியக் காரணம். நான் பைக் வாங்கியதிலிருந்தே அந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. வீட்டுச் சொந்தக்காரர் மிகவும் கண்டிப்பானவர். பைக்கோ, சைக்கிளோ… ஒரு குடித்தனக்காரர் ஒரு வண்டிக்கு மேல் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது அவரது சட்டம்.
‘‘பைக்கை கேட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, சைக்கிளை உள்ளே நிறுத்திக்குங்க. இல்லேன்னா, சைக்கிளை உங்க வீட்டுக்கு உள்ளேயே வெச்சுக்கங்க. வழியில நிறுத்தாதீங்க. போற வர்றவங்களுக்கு இடைஞ்சல். எல்லாருக்கும் ஒரு சட்டம்தான்!’’
கிரைண்டரை இன்னும் மூலைக்கு நகர்த்தி, அங்கே வைத்திருந்த வாட்டர் ஃபில்டரை அடுப்பு மேடையில் ஏற்றி, அங்கே இருந்த சின்னச் சின்னப் பாத்திரங்களை, சுவரில் ஒரு மர மேடையைப் புதிதாக உருவாக்கி, அதில் அடுக்கி… மேலும் சிலபல இட மாற்றங்களுக்குப் பிறகு, ஒருவழியாக சைக்கிளுக்கு இடம் கிடைத்தது.
காலையில் எழுந்ததும் என் முதல் வேலை, சைக்கிளை வெளியே கொண்டு நிறுத்துவதுதான். இப்படிச் சில வருடங்கள் ஓடின.
அப்பாவுக்குத் தன் சைக்கிள் தேர் போல! சிறு வயதில் கவனித்து இருக்கிறேன்… வாரம் தவறாமல் ஒரு மணி நேரம் செலவழித்துப் பளபளவென்று அதைத் துடைத்து, எண்ணெய் விடுவார்.
அப்பாவுடன் இந்த சைக்கிளில் பயணித்த நாட்களும் மறக்க முடியாதவை. கடை வீதி, பள்ளிக்கூடம், அத்தை வீடு, சினிமா தியேட்டர்… என அப்பாவின் சைக்கிள் கேரியரில் அமர்ந்து நான் போகாத இடமில்லை.
நான் கொஞ்சம் வளர்ந்த பின்பு, அப்பாவின் சைக்கிள் இருந்தும், வாடகை சைக் கிளில்தான் ஓட்டக் கற்றுக்கொண்டேன். வாரா வாரம் சைக்கிள் வாடகைக்காக அப்பாவிடம் காசு கேட்டு நிற்பேன். மறுக் காமல் கொடுப்பார்.
நன்றாக சைக்கிள் ஓட்டப் பழகிய பின், அப்பா தன் சைக்கிளை எனக்கு ஓட்டத் தந்தார். அரைப் பெடல், முக் கால் பெடலில் ஓட்டிச் செல் வேன். தெருமுனையில் இருக்கும் கடைக்குச் சென்று தீப்பெட்டி வாங்கி வரச் சொன்னாலும், இந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு பறப்பேன்.
நாங்கள் இந்த வீட்டுக்கு வந்தபோது, சைக்கிள் மட்டும்தான் இருந்தது. நான் கல்லூரிக்குப் பேருந்தில்தான் சென்று வந்தேன்.
நான் வேலைக்குச் செல்லத் தொடங்கிய பிறகுதான், தவணையில் பைக் வாங்கினேன். அப்பாவைப் பின்னால் உட்காரவைத்துக் கொண்டு, ஆசையாக ஒரு ரவுண்டு வந்த போது, அப்பாவின் சைக்கிளில் நான் அமர்ந்து, பயத்துடன் அப்பாவின் இடுப்பைக் கட்டிக்கொண்ட காட்சி நினைவுக்கு வந்தது.
இப்போது அப்பா பணியி லிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். நூலகம், கோயில், கடை வீதி என்று எங்கு செல்வதாக இருந் தாலும், நடந்தேதான் செல்கிறார். சைக்கிள் வெறுமே இடத்தை அடைத்துக்கொண்டு இருக் கிறது.
‘‘அப்பா! சைக்கிள் சும்மா தானே இருக்கு. வித்துடலாமே?’’ என்று ஒரு நாள் சொன்னேன்.
‘‘ம்… விற்கலாம்தான்! ஆனா, பழைய சைக்கிள் என்ன பெரிய விலை போகும்?’’
‘‘வர்ற வரைக்கும் வரட்டு மேப்பா! நமக்கு இடம் காலியானா சரி! தேசிங்கு கடையில வேணா கேட்டுப் பார்க் கட்டுமா?’’
‘‘ம்…கேளு’’ என்றார்.
தேசிங்கு வாடகை சைக்கிள் கடையில் விலை விசாரித்தேன்.
‘‘பழைய சைக்கிள் சார், மிஞ்சிமிஞ்சிப் போனா இரு நூறு ரூபா தரலாம்!’’ என்றான்.
‘‘என்னது… இருநூறா? பார்த்துச் சொல்லுப்பா!’’ என்றேன்.
‘‘அதுவே அதிகம் சார்! ரொம்பப் பழைய வண்டி. இப்பல்லாம் சைக்கிளை யார் சார் செகண்ட் ஹாண்ட்ல வாங்கறாங்க?’’ என்றான்.
விலை மிகவும் அநியாயமாகத் தோன்றியதால், கொஞ்ச நாளைக்குப் பேசாமல் விட்டுவைத்தேன். தினமும் வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம், சைக்கிள் பார்வையில் பட்டு உறுத்திக்கொண்டே இருந்தது.
என் மகள் அதன் மீது உட்கார்ந்துகொண்டுதான் சாப்பிடுவேன் என அடம்பிடிப்பாள். சாப்பிடும் போது சும்மா இல்லாமல் உடலை எக்கி, ‘ஹேண்டில் பாரை’ப் பிடிக்க முயற்சிப்பாள். அப்படியும் இப்படியும் அசைவாள்.
விழுந்துகிழுந்து தொலைத்தால் என்ன ஆவது என்று கவலையாக இருக்கும். அதனால், வந்தது வரட்டும் எனத் தீர்மானித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று சைக்கிளைக் கொண்டு போய் தேசிங்கு கடையில் நிறுத்தி, ‘‘முன்னூறாவது கொடுங்க!’’ என்றேன்.
‘‘நீங்க வேற! இருநூறுக்கே யார் வாங்குவாங்கன்னு நான் யோசனை பண்ணிட்டிருக்கேன்’’ என்று, இரண்டு நூறு ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்டினான்.
பணத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டை அடைந்தவன், அதை அப்படியே அப்பாவிடம் கொண்டுபோய் நீட்டினேன்.
‘‘என்கிட்டே எதுக்குடா கொடுக்கிறே? மாசக் கடைசி. அம்மாகிட்டே கொடு. வீட்டுச் செலவுக்காகும்’’ என்றார்.
‘‘வேண்டாம்ப்பா! உங்க கைச் செலவுக்கு வெச்சுக்கங்க’’ என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, சற்று நேரத்தில் நண்பனைப் பார்ப்பதற்காகக் கிளம்பிவிட்டேன்.
பேசி முடித்து, மூன்று மணிநேரம் கழித்து வீடு திரும்பியபோது, தாத்தா வையும் பேத்தியையும் காணவில்லை.
‘‘எங்கே போனாங்க?’’ என்று கேட்டேன்.
‘‘தெரியலை. மத்தியானம் சைக்கிள் மேல உட்கார்ந்து சாப்பிடணும்னு உங்க பொண்ணு ஒரே அடம். சைக்கிள் இல்லடி, வித்தாச்சுன்னா கேட்கவே மாட்டேங்கறா. மாமாதான் சமா தானம் பண்ணிச் சாப்பிடவெச் சார். இப்பத்தான் எங்கேயோ கூட்டிட்டுப் போயிருக்கார்’’ என்றாள் மனைவி.
அவள் சொல்லி வாய் மூடவில்லை… ‘தபதப’வென உள்ளே ஓடி வந்தாள் மகள். முகத்தில் அப்படியரு மகிழ்ச்சி! ‘‘அப்பா! தாத்தா எனக்குப் புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தாரே!’’ என்று சந்தோஷக் கூச்சலிட்டாள். பின்னாடியே நுழைந்த அப்பா, அந்த புத்தம் புதிய மூன்று சக்கர சைக்கி ளைத் தரையில் வைக்க, ஓடிப்போய் துள்ளலுடன் ஏறிக்கொண்டாள்.
‘‘இனிமே நான் இதை ஓட்டிக் கிட்டேதான் சாப்பிடுவேன்’’ என்றாள்.
‘‘என்னப்பா இது… இதை எதுக்கு இப்போ வாங்கினீங்க? வளர்ற பொண்ணு. ஒரு வருஷம் ஓட்டினா அதிசயம்! அப்புறம் இது மூலையில இடத்தை அடைச்சுக்கிட்டு நிக்கப் போகுது. வேஸ்ட்!?’’ என்றேன்.
அப்பா சில நொடிகள் மௌனமாக இருந்துவிட்டுப் பிறகு நிதானமாகச் சொன்னார்… ‘‘அப்படிப் பார்க்கப் போனா எல்லாமே விரயம் தாம்ப்பா! ஒருபொருள் உபயோகம் ஆகுற காலகட்டத்தைவிட, அது சும்மா இருக்கிற கட்டத்துலதான் நம்ம மனசு அதை அதிகம் கவனிக் குது. அது பொருளோட தப்பில்லை. நம்ம பார்வையோட தப்பு!’’
தணிந்த குரலில் சொல்லிவிட்டு அப்பா நகர்ந்துவிட, எனக்கு ஏனோ அவரைத் திரும்பிப் பார்க்கத் தயக்கமும் கூச்சமுமாக இருந்தது.
– வெளியான தேதி: 08 நவம்பர் 2006