அப்பாவின் கடைசி ஆசை

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 8,600 
 
 

இரவு இரண்டு மணிக்கு ராகுலை தூக்கத்திலிருந்து எழுப்பி, “அப்பா இஸ் நோ மோர்” என்று அவன் மனைவி ஜனனி மொபைலில் சொன்னாள். மாரடைப்பினால் இறந்துவிட்டார் என்றாள். ராகுல் பதட்டப் படவில்லை. ஒரே மகனான அவன் அப்பாவின் தகனத்திற்கு பெங்களூர் உடனே செல்ல வேண்டும். தன் லாப்டாப்பைத் திறந்து மும்பையிலிருந்து பெங்களூருக்கு அடுத்த விமானம் எத்தனை மணிக்கு என்று நிதானமாகப் பார்த்தான்.

யாருடைய மரணத்திற்காகவும் எவரும் அழக்கூடாது என அப்பா வீட்டில் எல்லோரையும் தாயார் படுத்தி வைத்திருந்தார். இறப்பு என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அதனால் உடனே இயல்பு வாழ்க்கைக்கு அனைவரும் திரும்பி விட வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

காலை ஆறு மணி ப்ளைட்டில் ராகுல் டிக்கெட் போட்டுக் கொண்டான். மணி தற்போது மூன்று. நான்கு மணிக்கே கிளம்பினால்தான் ஐந்து மணிக்கு ஏர்போர்ட்டில் இருக்க முடியும். ஜனனிக்கும், அம்மாவுக்கும் ஆறு மணி ப்ளைட்டில் வருவதாகச் சொன்னான். பாத்ரூம் சென்று பல் துலக்கி ஷவரைத் திறந்து குளித்தான். டீ போட்டுக் குடித்துவிட்டு, ஏர்போர்ட் செல்ல ஓலா கார் தன் மொபைலில் ஏற்பாடு செய்துவிட்டு, ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.

அப்பாவுக்கு வயது 63. ஆனால் பார்ப்பதற்கு 45 வயது போல் தன்னை வைத்துக் கொண்டிருந்தார். . நல்ல உடல் நலத்துடந்தான் இருந்தார். இப்ப திடீர்னு மாரடைப்பில்….சே அவர் தன்னை ஒரு நல்ல நண்பனாக நடத்தியதை ராகுல் பெருமையுடன் நினைத்துக் கொண்டான்.

அப்பா ரொம்ப வித்தியாசமானவர். தனி மனித சுதந்திரத்தை மிகவும் மதிப்பவர். எப்பவும் சிரித்துக்கொண்டே இருப்பார். நிறைய ஜோக் அடிப்பார். எதற்கும் கோபப்படாமல், அமைதியாக, அதிர்ந்து பேசாது அனைவரிடமும் பண்புடன் நடந்து கொள்வார்.

ஒரு ஸ்டெனோவாக தன் வாழ்க்கையைத் துவங்கி சீனியர் வைஸ்-பிரசிடெண்டாக ரிடையர்ட் ஆனார். அதன் பிறகு அவ்வப்போது சிறுகதைகள் எழுதினார். இரண்டு மூன்று தமிழ் சீரியல்களில் நடித்தார்.

அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சாஸ்திரங்கள், சடங்குகள், பூஜைகள் என எதையும் தன்னிடம் அண்டவிட மாட்டார். பூணூல் போட்டுக்கொள்ள மாட்டார். அவருடைய அம்மா அப்பாவுக்கு திவசம் பண்ண மாட்டார். அடுத்தவர்களின் கடவுள் நம்பிக்கை தன் வசதியிலும், சுகத்திலும் தலையிடாதவாறு பார்த்துக் கொள்வார். ரிடையர்ட் ஆன பிறகு வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம், டி.வி, நியூஸ் பேப்பர், பத்திரிக்கைகள் என்று தன் வசதிகள்தான் அவருக்குப் பிரதானம். அம்மா அவரை மிகவும் புரிந்துகொண்டு குறிப்பறிந்து நடந்து கொள்வாள்.

ரிடையர்ட் ஆன பிறகும், அப்பா எப்பவும் தன்னை அழகாக வைத்துக் கொண்டார். தினமும் மழ மழவென முகச் சவரம் செய்துகொண்டு, டவ் சோப்பு போட்டு மணக்க மணக்க குளித்துவிட்டு, பவுடரை அள்ளிப் பூசிக்கொண்டு எப்போதும் ஒரு வாசனையுடன் இருப்பார். அப்பா நல்ல கலர். தான் ரொம்ப அழகு என்கிற நினைப்பு வேறு.

மிகவும் ரசனையுள்ளவர். வாரத்திற்கு ஒரு முறை நகங்களை சீராக வெட்டிக்கொள்வார். நேர்த்தியாக உடையணிவார். அடிக்கடி தன்னிடமுள்ள நான்காக மடிக்கப்பட்ட வெள்ளை நிற கர்சீப்பினால் முகத்தை ஒற்றிக் கொள்வார். தினமும் ஷூவுக்கு பாலீஷ் போட்டு, சட்டையின் நிறத்திலேயே சாக்ஸும் அணிந்து கொள்வார். அப்பாவின் கம்பீரமே தனியானது.

சின்ன வயதிலிருந்தே தான் எப்போதும் அழகாக இருக்க மெனக்கிடுவாராம். இதை அவரே பல முறை ராகுலிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்பாவுக்கு நிறைய பெண் நண்பர்கள். இறக்கும் வரை அவர்களுடன் வாட்ஸ் அப், வைபர், ஈ மெயில் என்று தொடர்பில் இருந்தார். இது குறித்து அம்மா அடிக்கடி அப்பாவைக் கிண்டல் பண்ணுவாள். அப்பாவைக் கேட்டால், “பெண்கள் ரொம்ப மேன்மையானவர்கள் அதே சமயம் மென்மையானவர்கள்…அவர்களின் நட்பு ஒரு ஏகாந்தம்…உங்களுக்கெல்லாம் அது புரியாது” என்பார்.

ஆட்டோமேடிக் காரை ஓட்டிக்கொண்டு அவர்களைப் பார்க்க அடிக்கடி பப் கிளம்பிச் சென்று விடுவார். .

‘அப்பாவுக்கு அவர்களிடம் நட்பையும் மீறின ஒரு புரிதல் இருக்கமோ’ என்கிற சந்தேகம் ராகுலுக்கு அடிக்கடி வரும். அந்த சந்தேகத்தினால் அவனுக்கு கோபம் வராது, மாறாக இவ்வளவு ரசனையுள்ள அப்பாவின் செயல்பாடு தனிமையில் அவர்களுடன் எப்படி இருக்கும் என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொள்வான்.

ராகுல் வீடு வந்து சேரும்போது பத்து மணியாகிவிட்டது. வெய்யில் சுள்ளென அடித்தது. வீட்டின் வாசலில் மூங்கிலினால் பாடை கட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு மண் சட்டியிலிருந்து புகை வந்துகொண்டிருந்தது. உள்ளே மூன்று சாஸ்திரிகள் அப்பாவுக்கான காரியம் பண்ண ராகுலுக்காக தயார் நிலையில் இருந்தார்கள்.

உள்ளே கூடத்தில் அப்பா தரையில் கிடத்தப் பட்டிருந்தார். தலை மாட்டில் ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவர் மூக்கில் பஞ்சடைக்கப்பட்டு கால்களின் பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப் பட்டிருந்தன.

ராகுலின் அம்மா அவனை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள். இரண்டு மாமாக்கள், இரண்டு அத்தைகள் சென்னையிலிருந்து வந்திருந்தனர். அவர்களும் அழ ஆரம்பித்தார்கள். “இட் ஹாப்பன்ஸ்…டோன்ட் க்ரை” என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான்.

அவன் பின்னாலேயே ஜனனி வந்தாள்.

“போன வாரம் அப்பா உங்களிடம் இந்தக் கவரை குடுக்கச் சொன்னார்” என்று ஒரு கவரைக் கொடுத்தாள்.

“என்னது அப்பா சொன்னாரா” என்று அந்தக் கவரை வாங்கி அவசரமாகப் பிரித்தான். உள்ளே ஒரு கடிதம்.

“என் அன்புச் செல்ல மகன் ராகுலுக்கு,

இதை நீ படிக்கும்போது நான் இருக்க மாட்டேன். இதுவரையில் நீ ஆசைப்பட்டதை நான் நிறைவேற்றியுள்ளேன். ஜனனியுடன் உன் திருமணம் அதில் ஒன்று. இப்ப என்னுடைய ஒரே ஒரு கடைசி ஆசையை நீ நிறைவேற்றுவாயா?

நான் சென்ற மாதம் நம் வீட்டிற்கு அருகிலுள்ள எம்.எஸ்.ராமையா மெடிகல் கல்லூரிக்குச் சென்று, அந்தக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக என் உடலை எழுதிக் கொடுத்து விட்டேன். என் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் 1711. அவர்களின் கான்டாக்ட் நம்பர்: 23518669.

நீ உடனே அவர்களுக்கு போன் பண்ணி என் உடலை அவர்களிடம் ஒப்படைத்து விடு. எந்தக் கிரியைகளும் எனக்காகச் செய்து விடாதே. என் கடைசி ஆசையை நிறைவேற்று மை டியர்.

என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய பொக்கிஷம் உன் அம்மா. அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொள். உறவினர்கள் அவளிடம் பத்தாம் நாள் அது இது என்று சொல்லி அவளை தாலி அறுக்கச் செய்து, வளையல்களை உடைத்து….. போன்ற அசிங்கங்களை நிறைவேற்ற அனுமதித்து விடாதே. அம்மா எப்போதும்போல் கழுத்தில் தாலியுடன், நெற்றியில் குங்குமத்துடன், தீற்றலான வீபூதியுடன், கலர் புடவைகளுடன், அதே புன்னகையுடன் காட்சி தர வேண்டும். செய்வாயா?

ஜனனியைப் பார்த்துக்கொள். அவள் ஒரு குழந்தை.

அன்பு அப்பா

ராகுலுக்கு கண்களில் நீர் முட்டியது. அழக் கூடாது, அப்பா சொன்னது. உடனே மெடிகல் காலேஜ் போன் பண்ணி விவரத்தை சொன்னான்.

கீழே இறங்கி கூடத்திற்கு வந்தான்.

அப்பாவின் இறப்பு செய்தி கேட்டு ஏராளமானோர் கூடி விட்டனர்.

ஒரு சாஸ்திரி அவனிடம் அதட்டலாக “சீக்கிரம் குளிச்சிட்டு வந்து எட்டு முழ வேஷ்டியில் பஞ்சகச்சம் கட்டிண்டு வாங்கோ….மள மளன்னு காரியம் பண்ணனும்” என்றார்.

“ஒரு காரியமும் பண்ண வேண்டாம்…. அப்பாவை எடுக்க இப்ப ஆம்புலன்ஸ் வரும்.”

ராகுலின் பெரிய மாமா, “அப்பா ஆத்மா சாந்தியடைய வேண்டாமா? நம் வைதீகப்படி ஈமச் சடங்குகள் பண்றதுதான் அப்பாவுக்கு மரியாதை” என்றார்.

ராகுல் பிடிவாதத்துடன், “ப்ளீஸ் மாமா…அப்பாவின் கடைசி ஆசையைத்தான் நான் இப்ப நிறைவேற்றுகிறேன்…புரிஞ்சுக்குங்க” என்றான்.

மூன்று சாஸ்திரிகளிடமும், “உங்க சிரமத்திற்கு மன்னிக்கணும்…இன்றைய காரியத்துக்கு உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டுமோ, அதை நான் தந்து விடுகிறேன்” என்றான்.

தன் பர்ஸிலிருந்து ஐநூறு ரூபாய் தாள்கள் ஆறு உருவி எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தான். வாசலில் இருந்த பாடையும், நெருப்புச் சட்டியும் அகற்றப் பட்டன,

பன்னிரண்டு மணிக்கு வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. உடனே அங்கு ஒரு அமானுஷ்யமான அமைதி நிலவியது.

ஆம்புலன்சிலிருந்து இறங்கிய நான்கு பேர் ஒரு பெரிய பள பளப்பான அலுமினியப் பெட்டியை வீட்டிற்குள் கொண்டுவந்து அதைத் திறந்தனர். உள்ளேயிருந்த பெரிய பாலிதீன் கவரைப் பிரித்தனர்.

அப்பாவின் உடலை அதற்குள் கவனமாகத் திணித்து ஜிப்பை சர்ரென்று இழுத்து மூடினர். பத்திரமாக அலுமினியப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினர்.

சடலத்தைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியாக சில பேப்பர்களில் சீல் வைத்து ஒப்பமிட்டு ராகுலிடம் கொடுத்தனர்.

ஆம்புலன்ஸில் அலுமினியப் பெட்டியை ஏற்றிக்கொண்டு கதவை அடித்துச் சாத்தினர்.

ராகுல் வீட்டு வாசலுக்கு வந்து ஆம்புலன்ஸ் தெரு முனை திரும்பும் வரை சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு வீட்டினுள் வந்து “அப்பா” என்று பெருங்குரலெடுத்து வெடித்து அழுதான்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “அப்பாவின் கடைசி ஆசை

  1. ஒரு நல்ல சிறுகதைக்கு இலக்கணம் அதைப் படித்தவுடன் பத்து நிமிடங்கள் அதன் தாக்கம் நம்மிடையே இருக்க வேண்டும். ஆனால் பத்து மணிநேரத்திற்கும் மேலாக இந்தக் கதை என்னை ஆக்கிரமித்தது. ஒரு சிறந்த படைப்பை நல்கியதற்காக திரு.எஸ்.கண்ணனுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஆம்பூரிலிருந்து சபிராஸ் மொகமது

  2. Very beautiful story and the son is very fortunate to have such a kind of loving father. He has fulfilled the last wishes
    of his father by sent his body to medical college for medical students practical studies through ambulance and cried after it.It really touched not only my heart but for everyone who read this story.Hats off Mr .S Kannan.

  3. கதையின் மையக்கருத்து எனக்கு மிகவும் பிடித்தது.

    வாழ்க்கை எளிய யதார்த்தங்களால் ஆனது. அதை உணர்ந்து வாழ்ந்தால் வாழ்வு ஆனந்தமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *