ஒரு அசட்டுத் துணிச்சலில் கல்பனாவைச் சந்திக்கக் கிளம்பிய சுரேந்தர் அவளது வீட்டு வாசற்படியை மிதித்தபோது…..’ திரும்பிவிடலாமா.. ? ‘ என்று தயங்கினான்.
பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல படியேறினான்.
தன்னுடைய வரவு…. இந்த வீட்டில் எந்த மாதியான உணர்வை ஏற்படுத்தும் என்பது சுரேந்தரால் ஊகிக்க முடியவில்லை.
குழப்பத்துடன் அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவு திறந்தது .
ஆச்சரியம் ! கல்பனாதான் திறந்தாள் .!!
ஆளைப் பார்த்ததும்…… லேசாக அதிர்ந்தாள் .
‘ இவர் எதற்கு வந்தார்..? ‘ படீரென்று முகத்தில் கலவரம் . குப்பென்று வியர்த்தது.
ஆனாலும் சமாளித்து….
” வா….. வாங்க…” – கொஞ்சமாய் அச்சம், நடுக்கம் , தட்டுத்தடுமாறி அழைத்தாள் .
சுரேந்தர் எந்தவித தயக்கம் , பின் வாங்கலுமில்லாமல் வீட்டினுள் சென்றான். அவள் சுட்டிக்காட்டும் முன் சோபாவில் அமர்ந்தான்.
கல்பனாவின் தவிப்பு , தடுமாற்றம் அவனுக்குள் சிரிப்பை ஏற்படுத்தியது .
” எப்படி இருக்கீங்க கல்பனா…? ” இயல்பாய்க் கேட்டு அவர்களுக்குள் இருந்த இறுக்கத்தை உடைத்தான் .
கல்பனா கண்களில் இன்னும் மிரட்சி நீங்கவில்லை.
” என்னைப் பார்த்து ரொம்ப மிரண்டு போய் இருக்கிறாப்போல தெரியுது . சத்தியமா நான் எந்தவிதமான உள் நோக்கத்தோடும் வரலை. நம்பு கல்பு ! ‘ என்று தன் மனத்தைத் திறந்து காட்டினான்
‘ கல்பு ! ‘ என்ற வார்த்தை அவளுக்குள் கசப்பு , சங்கடத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.!
” என்னை கல்புன்னு கூப்பிடாதீங்க. அப்படிக் அழைக்குறதுக்கு இப்போ என் கணவர் இருக்கார். ” சொன்னாள் .
” உங்களை அப்படிக் கூப்பிடணும்ன்னு கூப்பிடல . பழக்கதோசம்… அப்படி வார்த்தைகள் வந்து விழுந்துடுச்சி . மன்னிச்சுக்கோ ” சுரேந்தர் நிஜமாகவே வருத்தப்பட்டான்.
இந்த வருத்தம் கல்பனாவிற்கு அவன் மீது நிம்பிக்கையை ஏற்படுத்தியது.
இப்போதுதான் அவனை நிமிர்ந்து முழுமையாகப் பார்த்தாள் .
” உங்களைத் திடுதிப்புன்னு பார்த்ததும் எனக்கு ஒன்னுமே புரியல. அதான்….. ” இவளும் தன் செய்கைக்கு வருத்தத்தப்பட்டாள் .
” எதிர்பாராதது. இருக்கத்தானே செய்யும்…! ” ஆமோதித்தான் .
” வராத விருந்தாளி வந்திருக்கீங்க . உங்களுக்குத் பிடிச்ச மாங்கோ ஜூஸ் இருக்கு.” சொல்லி இவன் அனுமதி பெறாமலே அருகிலுள்ள குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து எடுத்து வந்து நீட்டி உபசரித்து அவன் எதிரில் அமர்ந்தாள் கல்பனா .
சுரேந்தர் ஜூஸை உறிஞ்சியபடி அவளைப் பார்த்தான்.
” என்ன அப்படிப் பார்க்குறீங்க…? ”
” இப்ப கொஞ்சம் சதை போட்டிருக்காப் போல இருக்கு…”
” ஆமாம்…” தலையாட்டினாள்.
” அதாவது…. முன்னைவிட இப்போ சந்தோசமா இருக்கீங்க. சரியா..? ”
சரி , இல்லை எது சொன்னாலும் தவறாகத் தோன்றும் ! இவளுக்குத் தெரிந்தது. சங்கடமாக நெளிந்தாள்.
பிரிந்துகொண்ட சுரேந்தர்…
” மன்னிக்கணும். நான் இக்கட்டான கேள்வி கேட்டு உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திட்டேன். ” என்றான் .
” ………………………”
” எங்கே உங்க கணவர்..? ” கேட்டு உள்ளே பார்த்தான்.
” வெளியில போனார்…”’ என்று சொல்லி வாசலைப் பார்த்த கல்பனா…
” இதோ வர்றார் …! ” சொல்லி பரபரப்பாக எழுந்தாள்.
” ஏன் பதர்றீங்க…? ”
” உங்களைப் பார்த்ததும் ஏதாவது நினைச்சார்ன்னா..? ” குரல் நடுங்கியது.
‘ இது பெண்களுக்கான இயல்பு ‘ – நினைத்துக்கொண்ட சுரேந்தர் வாசலைப் பார்த்தான்
கல்பனா கணவன் மகேஷ் தூரத்தில் வந்து கொண்டிருந்தான்.
இவனைப் பார்த்ததும்……
‘ மீண்டும் துளிர்ப்போ..?! ‘ – என்று மகேஷ் சந்தேகப்படலாம். அதனால் உள்ளுக்குள் ஆத்திரம் வரலாம். குறைந்த பட்சம் சிறு நெருடலாவது இது சம்பந்தமாக ஏற்படலாம். ! கல்பனாவிற்குள் தோன்ற.. கையைப் பிசைந்தாள்.
ஆனால் ஆச்சரியம். இது எதுவுமே நடக்கவில்லை.
வீட்டினுள் நுழைந்த மகேஷ் சுரேந்தரை அடையாளம் கண்டு கொண்டதும்.. ” வாவ்..! ” என்று வாயைப் பிளந்து ஆச்சரியப்பட்டான் .
வெகு இயல்பாக மனைவி அருகி போய் அமர்ந்தான் .
அவர்களின் நெருக்கம் சுரேந்தரை லேசாக இம்சித்தது.
” கல்பனாவைப் பார்க்க வந்தீங்களா..? ” மகேஷ் இவனைப் பார்த்து கலகலப்பாகக் கேட்டான் .
” இல்லை. உங்களையும்தான்… ”
” கலியாணம் பண்ணிட்டீங்களா..? ”
” இன்னும் இல்ல… ”
” ஏன்…? ”
” தோணல..”
” இப்படியே இருக்கப் போறீங்களா..? ” – கல்பனா.
” இருக்கலாம். ! ”
” இருக்கலாம்ன்னா..? ! ”
” காலம்தான் பதில் சொல்லணும்..”
” இன்னும் உங்க அம்மவோடதான் இருக்கீங்களா..? ” – கல்பனா.
” ஆமாம் ” சொல்லி மணியைப் பார்த்த சுரேந்தர்…
” நேரமாகிடுச்சி நா கிளம்பறேன் ” எழுந்தான்.
” இருங்க. சாப்பிட்டுட்டுப் போகலாம்..” என்றாள் கல்பனா.
” இல்ல. அம்மா எனக்காக சாப்பிடாம காத்துக்கிட்டு இருப்பாங்க..”
” சரி . அடிக்கடி வாங்க சுரேந்தர். நாம நண்பர்களா இருப்போம். ” என்றான் மகேஷ் .
‘ இது சாத்தியப்படுமா..? ஒரு நேரம் இல்லையென்றாலும் ஒரு நேரம் நெருடாதா..’ இவனுக்கு தோன்றியது.
” சாத்தியப்படும்மன்னு யோசனைப் பண்றீங்களா… ? விவாகரத்து செய்து கொண்டவர்களெல்லாம் எதிரிகள் கிடையாது சுரேந்தர். அப்படி நீங்க நினைச்சிருந்தீங்கன்னா கல்பனாவைப் பார்க்க வந்திருக்க மாட்டீங்க. கல்பனாக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம் தோன்றி இருந்ததுன்னா அவள் உங்களை பார்த்ததும் கதவை சாத்தி இருப்பாள். உள்ளே அழைச்சி பேசி இருக்க மாட்டாள் . நான் உங்க ரெண்டு பேரையும் சந்தேகப்பட்டிருந்தேன்னா இப்படி கலகலப்பாய் பேசமாட்டேன் . விவாகரத்து செய்தவர்களெல்லாம் சண்டை போட்டு பண்ணி இருப்பாங்க. அதே வன்மத்துல கடைசிவரை இருப்பாங்கன்னு மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் இருக்கு. அப்படியான எண்ணத்தை நம்ம மாதிரி படிச்சவங்க முறியடிக்கணும். நாம இப்படியே என்னைக்கும் நண்பர்களா இருப்போம் . ” என்று மகேஷ் கூற …
சுரேந்தர் தன் முன்னாள் மனைவிடமும் அவளின் இந்நாள் கணவரிடமும் விடைபெற்று வெளியே நடந்தான்.
கல்பனாவை தோழியாகவும் மகேஷை தோழனாகவு ம் நினைத்துப் பார்க்க சுரேந்தருக்கு மனம் சந்தோசமாக இருந்தது.