கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,442 
 

(1965 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

மாதா கோயிலின் கோபுர மணி ‘கணீர் கணீர்’ என்று ஒலித்தது. கோயிலுக்கு வெளியே பட்டாஸ் வெடிகள் முழங்கின. பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். ஏமாந்த சிலரின் நெடுமூச்சு, பின்பனி காலத்துத் தைக்குளிரையும் வெப்பமாக்கிற்று. அலங்கரிக் கப்பட்ட பலிபீடத்திலே, மெழுகுவர்த்திகள் தம் சடலத்தை உருக்கித் தம்மைத் தியாகம் பண்ணிக் கொண்டு ஒளியை உமிழ்ந்தன. இத்தனை நிகழ்ச்சிகளுக்கிடையே மதகுருவானவர், செல்லன் என்ற லூயிஸின் கையைப் புதுமணப் பெண்ணின் கையோடு சேர்த்துப் பொருத்தி வைத்தார். கல்யாணச் சடங்கு முடிந்து விட்டது.

கண்ணாற் கண்டு இன்புற வேண்டிய செல்லனின் எதிர்கால வாழ்விற்காகக் கண்காணாத தெய்வத்தைச் சில நிமிடங்கள் மௌனமாகப் பிரார்த்தித்த பின்னர், நான் என் சிந்தனைகளை வழக்கம்போல மேயவிட்டேன். பூசை நடந்து கொண்டிருந்தது.

எங்கும் கல்யாண அவசரம். செல்லனின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் வைத்த பொருளை எடுக்கப் போகிறவர்களைப்போல வெளியே போவதும் உள்ளே வருவதும்…

அவர்கள் நடையிலே ஒரு அவசரம்… வேகம்… ஆனால் அந்த வேகத்தையும் மீறிக்கொண்டு அத்தனை ‘பேர் முகங்களிலும் ஒரு திருப்தி! அவர்கள் இந்தக் கல்யாணத்திற்காக ஆயிரம் பொய்கள் சொல்லியிருப் பினும், அத்தனை பொய்களின் பாவத்தையும் மறைக்கக் கூடிய ஒரு மன நிறைவு.

அவர்களின் பொலிவான முகங்களிலே மனித வாழ்க் கையின் குறிக்கோளே கல்யாணந்தான் என்று எழுதி ஒட்டியிருப்பது. போலத் தோன்றிற்று.. இலட்சிய பூர்த்தி யின் வெற்றியில், அவர்கள் வெறிபிடித்தவர்கள் போலவே போனார்கள்… வந்தார்கள்…

கோயிலின் தலைவாசல் தூணிலே சாய்ந்து நின்றபடி நான் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தேன்.

மோட்டாரின் முன்பக்கக் கண்ணாடியிற் பொருத்தப் பட்டிருக்கும் ‘ நீரழிப்பான் தண்டைப்போல, கிழக்கில் இளங்கதிர்கள் சூழ இருந்த பனிமூட்டத்தைத் துடைத்துக் கொண்டு வந்தன. சந்தனமூங் குங்குமமுங் கலந்த இள வெளில், கோயில் வெளி முற்றத்தில் எறிக்கையில், ‘பொருத்தமான: கல்யாண நேரந்தான்’ என்று எனக் குள்ளே எண்ணிக் கொண்டேன்.

திடீரென்று செல்லனின் சிற்றப்பா என் முன்னால் வந்து நின்றார். திடகாத்திரத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் மெல்லிய ‘சில்க்’ சட்டை, பெத்தாபுரம் பட்டு வேஷ்டி, தோளிலே சால்வை, முகத்திலே ஒரு பெருமிதம். தீட்சண்யமான அவர் கண்கள் வெற்றியின் வெறியை உமிழ்ந்து கொண்டிருக்கையில் அவைகளிலே ஒரு கலக்கம்….

எதையோ சொல்ல வேண்டும் என்று அவர் உதடுகள் துடிப்பதை நான் கண்டு கொண்டேன். நான் ஏதாவது, கேட்பேன் என்று அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் நானோ சாய்ந்தபடியே மரம்போல நின்றேன்.

“ஒரு வழியா முடிஞ்சுது மாஸ்டர்” என்றார் அவர். கண்கள் நீரைச் சொட்டின. ஆனந்தக் கண்ணீர்!

“என்ன முடிஞ்சுது” என்று கேட்டு, அவரைத் தரண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நான்’ நினைத்தபோது எனக்கே சிரிப்பு வந்தது. அவரின் செயற் கரிய செயலைப் பாராட்டு முகமாகத்தான் நான் புன் முறுவல் செய்தேன் என்று, அந்த அப்பாவி மனிதர் எண்ணியிருக்க வேண்டும்! அந்த நேரத்தில், அவரின் இளைய மகள் வந்து அவரை அழையாதிருந்தால், அம் மனிதர் தன் ‘வீரப்பிரதாபங்களை’ என்னிடம் அடுக்கியே இருப்பார்!

வயது வந்த ஒவ்வொருவரையும், கல்யாணஞ் செய்து கொள்ளும்படி ஏன் ஒவ்வொரு பெரியவரும். நெருக்குகிறார்கள்? பெற்றோருக்குத் தம் மக்களின் கல்யாணமே வாழ்க்கையின் முக்கியப் பிரச்சினையாகி விட்டதே. அது ஏன்?

கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்ட குழந்தை யாய்ச் சனசந்தடியிலிருந்து ஒதுங்கி, நானே வளர்த்து விட்ட கேள்விக் காட்டிற் சிக்கிக்கொண்டு, வழி தெரியா மல் திண்டாடிக் கொண்டிருந்தேன் நான்.

உள்ளே பூசையும் முடிந்து விட்டது. தம்பதிகள் இரு வரும், சுவாமியாரின் பதிவுப் புத்தகத்திற்கூடக் கைச்சாத் திட்டாய் விட்டது. இல்லாவிட்டால் ஊர்வலம் புறப்பட்டிருக்குமா?

2

பொருள் விளங்காத இலத்தீன் பெயர்களைத் தரித்துக் கொண்டிருந்தாலும், கல்யாணத்திற் கென்று ‘வெடிங் சூட்’ தைத்துக் கொண்டாலும், பெண்ணின் ‘வேல்’ என்ற உடைவாலைத் தரையில் விழாதபடி பத்துப் பன்னிரண்டு சிறுமிகள் தூக்கிக் கொண்டிருப்பினும், அக்கிராமத்தவர்கள் இன்னமும் தமிழர்களாகவே இருக் கிறார்கள் என்பதை ஊர்வலம் எடுத்துக் காட்டிற்று. தெருவின் இருகரையும் தென்னோலை, மாவிலைத் தோர ணங்கள், கோயிலின் தெருவாயிலேயே குலைவாழைகளை நாட்டி வைத்திருந்தார்கள். –

தெருவாயிலைக் கடந்து ஊர்வலம் சென்று கொண் டிருந்தது. ஊர்வலத்தின் முன்னால் நாதஸ்வரக்காரன் தாட்டைராக ஆலாபனையோடு நடந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால், ஊர்வலம் இரையை விழுங் கிய மலைப்பாம்பைப்போல மெதுவாக ஊர்ந்துகொண்டி’ ருந்தது. ஊர்வலத்தின் கடைக்கோடியில் நான் மௌன மாக நடந்து கொண்டிருந்தேன்.

வடக்குத் தெற்காக இரண்டு பர்லாங் தூரத்திற்கு, ‘மெயின்றோட்’ என்ற விலாசத்தைப் பெருமையாகத் தாங்கிக்கொண்டு, மேடும் பள்ளமுமாக ஓடும் அக் கிராமத்து கிரவல் ரோட்டின், இருபக்கமும் நெருங்கி நிரைத்திருக்கும், ஓட்டு வீடோ, ஓலை வீடோ எதுவாக இருந்தாலும், செல்லனுக்கு ஏதோ ஒரு வகையில் உற வாகத்தான் இருக்கும்! செல்லன் நாற்பதைத் தாண்டிய பிறகு கல்யாணஞ் செய்கிறான் என்றால், ஊர்-அதுவும் கிராமம்-சும்மா இருக்குமா? குசுகுசுப் பேச்சுக்களுக்கு மட்டுமல்ல உபசாரத்திற்கும் குறைச்சலில்லைதான்!

ஒவ்வொரு வீட்டுப் படையிலும் குத்து விளக்குகள்; பூரண கும்பங்கள். ஒவ்வொரு படலையிலும் ஊர்வலம் தரிக்க வேண்டியிருந்தது. தரித்த இடத்தில் புதுத் தம்பதி களுக்கு ஆராத்தி சுற்றித் திலகமிட்டு பின் எத்தனையோ அர்த்தமுள்ளதும் அர்த்தமற்றதுமான சடங்குகள்.

இப்படியே நடந்தால் தெருவில் அந்தத்திலிருக்கும் மணப்பந்தலை அடையப் பன்னிரண்டு மணியாகி விடும் என்று எண்ணமிடுகையில் முதுகுத்தோலை உரித்தெடுப், பதுபோலக் காலை வெயில் சுள்ளென்றடித்தது. வியர்த்துக் கொட்டும் முகத்தை நான் சால்வையினால் துடைத் துக்கொண்டே. நடந்தேன்.

மறுபடியும் நான்காம் படலையில் ஊர்வலம் நின்றது. ஆராத்திக்கு முகங்கொடுத்து நிற்கும் புதுத் தம்பதிகளை அர்த்தாகார வடிவில் வளைத்து, நெரிந்து. பழுங்கிக் கொண்டிருக்கும் சனக் கூட்டத்தைக், கௌரவப் படையினர் வியூகத்தைக் களைத்துக் கொண்டு ஊடுருவிச் சென்ற அபிமன்யுவைப்போலத் துளைத்துக்கொண்டு நான் முன்னேறினேன். எனக்கு ஒரு சபலம். செல்லன் நாற்பதாண்டுகள் கல்லுப்பிள்ளையாரைப்போல இருந்து விட்டு, அவனை அகாரணமாக நம்பிக்கொண்டிருந்த உள்ளூர்ப் பெண்கள் இரண்டொருவரை ஏமாற வைத்து விட்டு எங்கேயோ தூரந் தொலைவிலிருந்து ஒருத்தியைத் திடீரென்று கொண்டு வந்து இறக்கியிருக்கிறாள். அந்த பெண்ணிடம் என்னத்தைக் கண்டு மயங்கியிருப்பான். என்பதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.

பிடித்துக்கொண்டு வரப்பட்ட காட்டு யானையைப் பார்க்க விரும்பும் பட்டினச் சிறுவனின் வேட்கையோடு, நான் கூட்டத்தை இடித்து நகர்ந்து வழிவகுத்துக் கொண்டு முன்னேறினேன். எப்படியும் முன்னணிக்கு வர, முடியாமல் மூன்று தலைகளுக்கு மேலால் எட்டிப் பார்த்து போது…

மணப் பெண்ணை , அவள் முகத்தைப் பார்த்தபோது எனக்கேற்பட்ட உணர்ச்சி வெறுப்பா, ஏமாற்றமா, துக்கமா? எல்லாமே கலந்த ஓர் உணர்ச்சி, மனங்குன்றிப் போய்த் திருப்பிய முகத்தை மறுபடியும் அப்பெண்ணிற் பதித்து ….

மணப் பெண்… அவள் முகம்… நிறம்… நடை……

அதமஜாதிப் பெண்ணுக்குரிய அத்தனை இலட்சணங்ககளும் உருப்பெற்றதாய்…

தடித்த உதடுகள், பரந்த முகம், முன் விரிந்த மூக்கு, பெருத்த இடை, யானை நடை, கறுப்பு நிறம்….

ஐயோ! செல்லனுக்கு ஏன் இப்படிப் புத்தி போயிற்று? கூட்டத்தில் வாய்விட்டுக் குழறிவிடுவேனோ என்று எனக்கே பயமாக இருந்தது. எனினும் என் மனக் குமுறல் களை ஒருவாறு அடக்கிக்கொண்டு நடந்தேன்.

செல்லன் அழகன். மேலும் புருஷ லட்சணமான உத்தியோகமும் அவனுக்கு உண்டு. கிராமத்தில் எத் தனை யோ பெண்கள் – அவர்கள் நிச்சயமாக அவன் மனைவியை விட அழகிகள் –அவனுக்காகப் போட்டி போட்டிருக்கிறார்கள். இன்னமும் சிலர் நேற்றுவரை அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி யெல்லாம் இருக்க ஏன் இப்படி ஒருத்தியை…

“மாஸ்ரர்! நல்ல சீதனங் கிடைச்சிருக்கும்போல இருக்கு” என்றார் பக்கத்தில் வந்த ஒருவர். அவரும் என்னைப் போன்ற மனநிலையில் இருந்தாரோ!

“சச்சா, அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் விதி தம்பி விதி” என்று வெறுப்போடும் துக்கத்தோடும் பதில் சொன்னார் இன்னொரு முதியவர்.

‘சீதனங்கூட இல்லாமல் இந்தப் பெண்ணை … முதலிற் கேட்டவர் மேலே தொடாமற் பல்லைக் கடித்துக் கொண்டபோது நாதஸ்வர இசை நின்றது. ஊர்வலமும் நின்றது. மறுபடியும் ஆலத்தி… ஆலத்தி…

ஆலத்தியின் தீச்சுடர் என் நெஞ்சைச் சுட்டுப் பொசுக்குவதுபோல நான் துடித்தேன்.

3

ஊர்வலம் புறப்பட்டபோது, நாதஸ்வரக்காரன், ‘நாயகர் பட்சமடி எனக்கது ஆயிரம் லட்சமடி’ என்று முழக்கினான்.

எனக்குச் சிரிப்பு வந்தது நெற்றிக் கண் இருந்தால் அம் மணப் பெண்ணையும் நாதஸ்வரக்காரனையும் பொசுக்கியிருப்பேன். இல்லாததினால் சிந்தனைதான் நீண்டது.

‘அவளுக்கென்ன? கண் நிறைந்த கணவன் அவளுக்குக் கிடைத்து விட்டான்? ஆயிரம் என்ன? ஆயிர லட்சங்கள் கூடச் செல்லனைப் பற்றிய அளவில் அவளுக்குக் குறைவு தான்!’ முன்பின் தெரியாத அந்த அபலைப் பெண்ணை என் மனதாரத் திட்டிக்கொண்டு நான் நடந்தேன்.

செல்லனின் சிற்றப்பா என் அருகாமையில் இப்போது வந்தார். என்னிடம் ஏதாவது பேசாவிட்டால் அவருக்குத் தலைவெடித்து விடுமோ என்னவோ? அவர் உற்சாகத் தோடு பேசினார். “எல்லாத்துக்கும் காலமும் நேரமும் வரவேணும் மாஸ்ரர்.”

“இம்” என்றேன் நான் வெறுப்போடு. கல்யாண அவசரத்தில் அவர் கூட்டத்தில் மறைந்து விட்டார்..

ஆனால் அவர் சொன்ன ‘காலமும் நேரமும்’ என் மனத்தைக் கவ்விக்கொண்டு பூவைக் குடையும் புழுவாய் அரித்தது.

அந்தக் காலமும் நேரமும்… இருபது வருடங்களாக வந்துவிடாத அந்தக் ‘காலமும் நேரமும்’ இப்போது இத்தனை கோரத்திலா வரவேண்டும்? அதற்கு ஏதாவது அடிப்படைக் காரணம்…?

நான் யோசித்துக் கொண்டே நடக்கையில் என் அரு காமையில் ‘றெக்ஸ்’ வந்து கொண்டிருந்தான். அவன் செல்லனின் அலுவலக நண்பன். செல்லனைப் பற்றி அவ னுக்கு நன்றாகத் தெரியும். நான் அவனை விசாரித்தேன். அவன் சொன்னான்.

“செல்லனுக்குக் கொஞ்ச நாட்களாகவே மனம் சரி யில்லை. யாரையோ மனதில் எண்ணிக்கொண்டு, மற்றப் பெண்களையெல்லாந் தட்டிக் கழித்தான். அவன் நினைத் திருந்த பெண்ணும், மற்றவர்களும் கல்யாணச் சந்தையில் இவனை முந்திக்கொண்டதும் இனிமேல் தனக்குக் கல்யாணமே ஆகாதோ என்று பயந்து விட்டான். வயதும் போய் விட்டதல்லவா? அந்தப் பயத்தில் எப்படிப் பட்ட பெண்ணையாகிலும்…”

அதற்கு மேல் றெக்ஸ் பேசியது என் காதில் விழவில்லை. எனக்கு வேண்டியது அவ்வளவுதான் என்பதினாலோ …!

என் மனம் திரும்பவும் அரிக்கத் தொடங்கிற்று. “ஆம், கல்யாணம் செல்லனுக்கு இன்றியமையாத தாகிவிட்டதா? அழகையும், மென்மையையும் விரும்பும் இளவயதின் மெல்லிய நினைவான காதல் என்ற சொப் பனாவஸ்தை, அவனுள் திரிந்து உடலின் வேட்கையாகத் தசையின் பிடுங்கலாக மாறிவிட்டதா? அல்லது எவளோ ஒருத்தியிடமிருந்து பெறும் உடலின்பந்தான் கல்யாணத்தின் முக்கிய நோக்கம் என்று அவன் எண்ணிக் கொண்டானா? அந்த உடலின்பத்தை அழகற்றவளிடம் இருந்தும் பெறலாம் என்றெண்ணும் அபேதவா தியாகி விட்டானா?

நான் குழம்பிக் கொண்டே ஊர்வலத்தோடு நடந்தேன். நாதஸ்வரக்காரன் ‘ஊத்தைக் குழியிலே மண்ணை எடுத்து உதிரப் புனலிலே உண்டை சேர்த்து’ என்ற சித்தர் பாடலை உற்சாகத்தோடு இசைத்துக் கொண்டிருந்தான்.

4

இரண்டு மணித் தியாலங்களுக்கு மேல் ஊர்வலம் முடிந்து விட்டது. என் மனமும் ஒரு அளவிற்குத் தெளிவு பெற்று விட்டது.

தம்பதிகள் மண மேடையில் அமர்ந்தபோது, காதல் என்ற முலாம் பூசிய உறையைக் கிழித்தெறிந்த அபேத வாதியான என் நண்பனை, சீதனம் என்ற ஊன்று கோலை நம்பியிராத இலட்சியவாதியான செல்லனை என் மனமார வாழ்த்தினேன்.

– ‘தினகரன்’ தமிழ்விழா ஆண்டு மலர் 65

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *