அபூபக்கர் டைலர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 7,514 
 
 

அதிகாலை சிறு மழைத்துளிகளோடு சுபஹ் சொழுகைக்கான பாங்கும் ஒலித்தது. கையில் ஒரு தடியோடு தட்டுத்தடுமாறி பள்ளிவாயல் கேட்டில் ஒரு கையை வைத்து உள்ளே நுழைந்தார் அபூபக்கர் டைலர்.

மோதினார் மைக்கில் பாங்கை சொல்லிவிட்டு திரும்பி பார்த்தார். எப்பவும்போன்றே, அபூபக்கர் டைலர் மட்டும் முதல் ஆளாக உற்கார்ந்துருந்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் டைலர்”

“அலைக்குமுஸலாம்…” என்று கூறிக்கொண்டே சுன்னத் தொழுவதற்காக எழுந்துகொண்டார் டைலர்.

தள்ளாடும் வயதிலும் ஒரு சுபஹ் தொழுகையையும் தவறவிடாத மனிதர்தான் அபூபக்கர் டைலர்!. அவருக்கு பிள்ளைகள் என்று யாரும் கிடையாது . நீண்ட வருடம் கழித்து பிறந்த ஒரு மகனும், இரண்டு வயதாக இருந்தபோதே, திடிரெனா ஒருநாள் எதிர்பாராமல் மரணித்துவிட்டான். அதன்பிறகு அவருக்கு குழந்தை பாக்கியம் என்பது முற்றாக இல்லாமல் போய்விட்டது. அன்று தொட்டு, தன் மனைவியை குழந்தையாட்டம் கவணிக்க தொடங்கியவர்தான். கிட்டத்தட்ட எண்பது வயதாகியும் மனைவி மீது அலாதியான காதல் கொண்டே வாழ்கிறார். அதற்கும் எள்ளவும் குறையாமல் அபூபக்கர் மீது, அவரது மனைவியான ரகுமத்தும்மாவின் அன்புக்கும் மரியாதைக்கும் குறைவே இருந்ததில்லை.

அபூபக்கர் டைலரின் இளமைக்காலம்; ‘ஒரு தையல் மெஷினும், தானும்’ என்றதாகி, அவருடைய பிழைப்பும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அவரிடம் உடுப்புகள் தைக்கதாவர்கள் ஊரில் யாருமே இருக்கமுடியாது என்றிருந்தது ஒரு காலம் அது. அந்த அளவிற்கு அவர் பிரபலமான டைலரும்கூட.

யாரிடமும் அதிகமான கூலிகளை அறவிடமாட்டார்!. தனக்கும், மனைவிக்கும் ஒருவேளை சாப்பாடு கிடைத்தாலே போதும் என்றேதான் தன் தொழிலை நடத்தி வந்தார். பெருநாள் காலங்களில், ஏழை – எளியவர்களுக்கு இலவசமாக உடுப்புகளை தைத்து கொடுப்பதும் அவருடைய நல்ல பண்புகளில் ஒன்றாகியிருந்தது . அதிலொரு அளவுகடந்த மகிழ்ச்சியும் அவருக்கு கிடைத்தது.

வயதும் ஏற ஏற, டைலருக்கு கண் பார்வையும் படிப்படியாக குறைய துவங்கியது. ஊசியில் நூளை கோர்த்து தைப்பதற்குள் ‘வேண்டாம்’னு வெறுத்தே போய்விடுவார் மனுஷன். அதனாலோ என்னவோ, மக்களும் அதிகாமாக அவரிடம் முன்புபோன்று வருவதில்லை. இது ஒருபுறம் என்றால், தெருவுக்கு ஒரு டைலர் கடையென புதுசு புதுசா ஒவ்வொருத்தராக திறந்து தொழில் பார்க்கவும் தொடங்கிவிட்டார்கள் என்றாகிவிட்டது!. அத்தோடு ஒன்றிரண்டு வயோதிபர்கள் மட்டுமே கிழிந்த துணிகளை ஒட்டுப்போடுவதற்காக மட்டும் அள்ளிக்கொண்டு வருவது வாடிக்கையாகி போனது.

“காலம் எப்படியாப்பட்டது!” என தன் வயோதிப வயதில் நன்றாக புரிந்து கொண்டார் அபூபக்கர். ‘கிடைப்பதை கொண்டு உலை வைப்பதற்கே பத்தாது! ‘என்றாகிப்போனது. இதற்கிடையில் மனைவிக்கு ஆஸ்மா வியாதி வேறு. பல வருடங்களாக தையல் மெஷினோடு மாரடித்ததில், தனக்கும் மூட்டுவலி என்றவொரு பரிசு!. உப்புசப்பற்ற மருத்துவ செலவுக்காக வேண்டியே இப்போதெல்லாம் தன் குடிசைக்கு வெளியே தையல் மெஷினோடு மல்லுக்கட்ட தொடங்கினார் அபூபக்கர்!.

மனைவியும் ஒத்தாசைக்காக கூடவே அவர் அருகே வந்து உற்கார்ந்துகொள்வார். பாங்கு சத்தம் கேட்டாலே போதும் “கவனமா பாத்துக்கோ மன” என செல்லமாக கூறிவிட்டே பள்ளிக்கு செல்வது வழக்கம். அந்த கொஞ்சல் மட்டுமே தங்களது முதுமையில் இலபமான இன்பமாக எஞ்சி இருந்தது.

அப்படித்தான் ஒருநாள் அஷர் தொழுகைக்கான பாங்கும் ஒலித்தது. மனைவியை அழைத்தவர், தையல் மெஷினுக்கு காவல் வைத்துவிட்டு “பார்த்து மன… மெஷினோடு இந்த குமறையும், திருடன் எவனாவது வந்து தூக்கிட்டுப்போயிடப் போறான்…” என என்றும் இல்லாதவாறு மனைவியோடு அதிகமாக கிண்டல் பண்ணிக்கொண்டார்.

அதற்கு, மனைவி ரகுமத்தும்மாவும் “பயப்படாதிங்க டைலர்…மெஷின் போனாலும் நான் டைலரை விட்டு ஓடிடமாட்டேன்…” என பொக்கை வாய் புன்னகையுடன் சிரித்துக்கொண்டே பதில் கூறினார். அதை கேட்டதுமே தடியை ஊண்டி ஊண்டி பள்ளிவரை சென்றும், அதை நினைத்து நினைத்து சிரித்தவண்ணமே இருந்தார் அபூபக்கர்.

தொழுகை முடிந்து வீடு திரும்பி வந்து பார்த்தார் அபூபக்கர். தையல் மெஷினோடு சரிந்து சாய்ந்திருந்தார் தன் மனைவி ரகுமத்தும்மா. மெதுவாக மனைவியின் தோலில் தட்டிவிட்டார். பேச்சுமூச்சு ஒன்றும் இல்லை என்றானது. தன் இல்லற வாழ்க்கையில் ஒருநாளில் கூட தன் மனைவியின் பெயரை உச்சரித்து அழைக்காத டைலர், முதன் முதலில் கணத்த குரலில் “ரகுமத்தும்மா…” என கூப்பிட்டார்…

புரிந்து கொண்டார் அபூபக்கர்!. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. தடியை மெதுவாக வைத்துவிட்டு மனைவியை கட்டி அனைத்து சுற்றுமுற்றம் பார்த்துக்கொண்டே குழந்தைபோல் விம்மி விம்மி தேம்பி அழத் தொடங்கினார்…

ஊர்மக்கள் எல்லோரும் கேள்விப்பட்டு அந்த இடத்திலயே ஒன்று கூடிவிட்டனர். தடபுடலாக ரகுமத்தும்மாவின் ஜனாசா நல்லடக்கத்துக்கம் செய்துவிட்டு காரியமும் முடிந்தது. நல்லிரவானதும், ஊர்மக்களும் மெல்ல மெல்ல களைந்தும் சென்றுவிட்டனர். அபூபக்கர் மட்டும் குடிசையின் வெளியே தனிமையில் தையல் மெஷினோடு உற்கார்ந்துருந்தார்.

‘தனக்கென்று இருந்த அந்த ஒரு ஜீவனும் மறைந்தவிட்டது!.’ என நினைத்துக்கொண்டே தையல் மெஷினில் தன் இரண்டு கைகளையும் வைத்தபடியே, நிலவின் ஒளியில் ஏதோவொரு யோசனையில் மூழ்கியிருந்தார் அபூபக்கர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடிரென்று ஒரு வெள்ளைக் காகிதத்தையும், பேனாவையும் எடுத்தவர், கைகள் நடுங்க கடகடவென எழுதி முடித்தார் .

பின்னர் எழுதிய காகிதத்தை , தையல் மெஷினோடுருந்த லாட்ஜில் வைத்து திணித்துவிட்டு லாட்ஜை அடைத்துவிட்டார். மறுபடியும் அபூபக்கருக்கு ஏதோ யோசனை தோன்றவும், லாட்ஜை திறந்து அந்த காகிதத்தை எடுத்து தன் ஜுப்பா பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். தடியை தரையில் ஊண்டிக்கொண்டே மெதுவாக எழுந்த அபூபக்கர், சுபஹ்
தொழுவதற்காக பள்ளியை நோக்கி புறப்பட்டுச் சென்றார் .

பாங்கை சொல்லிவிட்டு ‘இன்னைக்கு மைத்துவேற, அபூபக்கர் வந்துருக்காரோ என்னவோ…!?’ என நினைத்துவிட்டு பின்னாடி திரும்பி பார்த்தார் மோதினார். வழமைக்கு மாறாக சுன்னத் தொழுகையை பாங்கோசையோடு தொழுதபடி ஷஜதாவில் இருந்தார் அபூபக்கர்.

சுபஹ் தொழுகையை நிறைவேற்றுவதற்காக, இமாம் தொடக்கம் ஒவ்வொருத்தராக பள்ளியில் நுழையத் தொடங்கினார்கள். இகாமத்தும் கூறலனாது. ஆனால் நீண்டநேரமாக ஷஜதாவில் குணிந்துருந்த அபூபக்கர் மட்டும் எழுந்திருக்கவே இல்லை!.

எல்லோருமாக தொழுதுவிட்டு வேகமாக அபூபக்கரை நோக்கி ஓடோடி வந்தார்கள். அபூபக்கர் டைலரை நிமிர்த்தி வளர்த்தினார்கள். ” அல்லாஹ்வின் சன்னிதானத்திலே ஷஜதாவில் மரணத்தை தழுவியிருந்தார் மனுஷன்…!”

அபூபக்கர் டைலரின் ஜுப்பா பாக்கெட்டில் ஏதோ ஒரு காகிதம் தென்பட்டதும் அதை வெளியில் எடுத்து பிரித்து பார்த்தார் மோதினார். அதில்

“நான் வாழும் குடிசை நிலமானது, என் மரணத்துக்கு பின் நான் நேசித்த இறை இல்லமான இந்த பள்ளிவாயலுக்கே சொந்தமாகும். இதை நான் மனப்பூர்வமாகவும், சுய சிந்தனையோடும் எழுதி கொடுக்கிறேன். இப்படிக்கு ‘அபூபக்கர் டைலர்'” என எழுதி கையொப்பம் இடப்பட்டிருந்தது.

ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு முகத்தை பார்த்துவிட்டு “ஆகவேண்டியதை இனி பார்ப்போம்” என பள்ளியின் நிருவாகத்தினராக ஒன்று கூடி, அபூபக்கர் டைலருடைய ஜனாசாவை நல்லடக்கம் செய்வதற்கான வேலையில் மூழ்கினார்கள்.

சில வருடங்களுக்கு பின்னர்… அபூபக்கர் டைலரும், அவரது மனைவியும் குடியிருந்த குடிசை பகுதியில், பள்ளிவாயல் ஜமாஅத்தார் கடைத்தொகுதி கட்டிங்களை கட்டிவிட்டு வாடகைக்கு இட்டுருந்தனர்.
அந்த கட்டிடத்துக்கு ‘அபூபக்கர் – சேகும்மா கொம்பலக்ஸ்’ என பெரிதாக கொட்டை எழுத்தில் பெயரும் சூட்டியிருத்தார்கள்.

பள்ளிவாயலின் காரியாலயத்தில் ஒரு அறையில் தையல் மெஷின் ஒன்றுமட்டும் காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது.
அபூபக்கர் சேகும்மாவின் குழந்தை, மற்றும் உறவு என்றால் அது மட்டுமே.

அறையின் ஜன்னல் வழியாக ஊடுருவி வந்த காற்றினால் – அதன் சக்கரங்கள் “கடக்கு…கடக்கு…” என்ற சத்தத்துடன் ஆடியாடி “தான் யாருமற்ற அனாதை என தனிமையில் பேசிக்கொண்டே இருந்தது அந்த இயந்திர குழந்தை…!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *