கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 6,861 
 
 

அதிகாலை நான்கு மணி. அழைப்பு மணி அலறியது. இரவில் தூங்குவதற்கு எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் சற்று ஆழ்ந்து தூங்கும் நேரம் இது. எரிச்சல் வந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்? ஒருவேளை பிரமையாகக் கூட இருக்கலாம். தொடர்ந்து தூங்கி விடலாமா என யோசிக்கும் போது மீண்டும் மணி அடித்தது. இம்முறை தொடர்ந்து இரண்டு மூன்று முறை அடித்து. அவசரம் என்று சொல்லியது.

படுக்கையறையிலிருந்து வெளியேறி தாழ்வாரத்தில் நடந்து வரவேற்பறையைக் கடந்து வாசல் கதவை நோக்கிச் சென்றேன்.

அதிகாலையில் தொலைபேசியோ, வீட்டு அழைப்பு மணியோ அடித்தால் யாருக்கோ நிச்சயம் அவசரமாகத்தான் இருக்கும். எரிச்சல்கள் எல்லாம் மறைந்து கவலையுடனும், பரபரப்புடனும் கதவைத் திறந்தேன்.

பக்கத்து பிளாட்டில் வசிக்கும் அபர்ணா. சிறிய கால்சட்டையும் மேலே தொளதொளவென்று ஒரு டீ சர்ட்டும் அணிந்திருந்தாள்.

“என்னாச்சு? இந்த நேரத்துல?”

“கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா? பாவாக்கு என்னவோ ஆச்சு”.

கதவை சும்மா மூடிவிட்டு விரைந்தேன். இங்குக் குடி வந்து அய்ந்து ஆண்டுகள் ஆன போதிலும் இதுவரை நான் அவர்கள் வீட்டிற்குள் சென்றதில்லை. வீட்டின் அமைப்புகள் ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டதால் எனக்குப் புதிதாக ஒரு வீட்டிற்குள் செல்கிறோம் என்ற உணர்வு ஏற்படவில்லை. படுக்கையறை கலை அம்சத்துடன் நேர்த்தியாக இருந்தது. நான் என்னுடைய படுக்கை அறையை நினைத்துக் கொள்ள ஆரம்பிக்கும் போது,

“பாவா, பாவா எழுந்திருங்க. புரொஃபெசர் சார் வந்திருக்காரு”.

கட்டிலில் மல்லாக்காய் கிடந்தார். முதல் பார்வையிலேயே விளங்கிவிட்டது. ஏதோ தப்பாகத் தெரிந்தது. தொடுவதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டே மெதுவாக அவர் கையின் மீது என் கையை வைத்து மெதுவாக உலுக்கினேன். கை சில்லென்று இருந்தது. மார்பில் கை வைத்தேன். துடிப்பு இருக்கிறதா இல்லையா என்பதைச் சரி வர யூகிக்க முடியவில்லை.

“ஹாஸ்பிடலுக்கு போவோம்” என்றேன்.

ஆம்புலன்சஸை அழைத்தேன். முதல் மணி அடிக்கும்போது எடுத்து விட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். இடத்தையும் சொன்னேன். அய்ந்து நிமிடத்தில் வந்து விடுவதாகச் சொன்னார்கள்.இன்டர்காமில் காவலாளியை அழைத்தேன். அடித்துக் கொண்டே இருந்தது. பேருக்குத்தான் இரவு காவலாளி. தூங்குகிறான் போலும். சிறிது நேரம் கழித்துத்தான் எடுத்தான்.

“ஆப் கோன் போல் ரஹான் ஹை” என்றான் இந்தியில்.

இத்தனை வருஷம் இங்க இருக்கிறான். இரண்டு வார்த்தை தமிழ் வரல. கோபத்தை அடக்கிக் கொண்டு

“பி பிளாக்…3வது மாடி சி ஃபிளாட்ல அவசரம். ஆஸ்பத்திரி போகணும். கொஞ்ச நேரத்துல ஆம்புலன்ஸ் வரும் கேட்ல தயாரா இருக்க சொல்லு.”

“ஒகே சாப்” என்று பரபரப்பை கூட்டிக்கொண்டு பதில் சொன்னான்.

நகத்தைக் கடித்துக்கொண்டு மிரட்சியுடன் என்னைப் பார்த்தாள்.

“கவலைப்படாதீங்க. அஞ்சு நிமிஷத்துல ஹாஸ்பிடல்க்கு போயிடலாம்”.

“பாவாக்கு ஒன்னும் ஆகி இருக்காது இல்ல…” கண்ணீர் தளும்பக் கேட்டாள்.

ஒன்னும் இருக்காதுங்க. வீட்ட பூட்டிட்டு வந்துடறேன்”. கதவை நோக்கி நகர்ந்தேன்.

தாழ்வாரத்தின் மூலையிலிருந்த லிஃப்டின் மேலே பார்வை சென்றது. “0” என்று இருந்தது. என் வீட்டுக்குள் சென்று டி-ஷர்டை கழற்றிவிட்டு சட்டை அணிந்து கொண்டேன். ஷார்ட்சை களைத்துவிட்டு ஜீன்ஸ்க்குள் நுழைந்தேன். எதற்கும் இருக்கட்டுமென்று பர்சை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். மறக்காமல் கார் சாவியை எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டிக்கொண்டு லிஃப்ட் பக்கம் திரும்பினேன். 0…1…2…3 என்று மாறி இப்போது கதவு திறந்தது. மூன்று பேர் ஸ்ட்ரெச்சரோடு வந்தார்கள்.

“என்ன சார் ஆச்சு ?”

“தெரியல. பேச்சு மூச்சு இல்லை ஆஸ்பத்திரிக்கு போகனும்”.

உள்ளே விரைந்தோம் .ராய் உடல் முன்னைவிட விரைப்பாகத் தோன்றியது. சன்னமாகச் சிரிப்பது போலத் தெரிந்தது. அவர்களில் ஒருவன் பரிசோதித்தான். நாடிகளைப் பிடித்து பார்த்தான். ஸ்டெதஸ்கோப்பை எடுத்து காதுகளில் பொருத்திக்கொண்டு மறுமுனையை மார்பில் அழுத்தினான். நிமிர்ந்து, .மற்ற இருவரையும் பார்த்து உதட்டைப் பிதுக்கினான்.

என்னைப் பார்த்து “சாரி சார். ரொம்ப நேரமாயிடுச்சு”

“சிபிஆர் செய்ய முடியுமா” என்று கேட்டேன்

“பயனிருக்காது”.

“ரவி ட்ரை பண்ணு’. அவர்களில் ஒருவன்.

செயற்கை சுவாசம் கொடுக்க முயற்சித்தார்கள். அவன் எதற்கும் மசியாமல் கட்டை போல இருந்தான்.

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு ” டூ லேட்” என்றனர்.

அபர்ணா “ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போகலாம்” என்றாள்.

“சாரி மேடம். சார் இறந்து போய் ரொம்ப நேரமாச்சு”

அடிவயிற்றிலிருந்து வெடித்துக் கதறினாள். அமைதியில் ஆழ்ந்திருந்த அந்த குடியிருப்பு பகுதி அலறிக் கொண்டு விழித்தது.

கொஞ்சம் கொஞ்சமாக, கூட்டம் சேரத் தொடங்கியது. குடியிருப்போர் நலச் சங்கத்தின் பிரதிநிதிகள் வரத்தொடங்கினர். அடுத்து என்ன செய்வது என்று ஆளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். அவள் இப்போது ஒரு மூலையில் உட்கார்ந்து அரற்றிக் கொண்டிருந்தாள்.

ராய்க்கு பெற்றோர்கள் இல்லை. உடன்பிறந்த சகோதரியொருவர் கொல்கத்தாவில் இருக்கிறார். அவருக்குத் தகவல் சொல்லப்பட்டது. சகோதரி வந்தபிறகு மாலை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. நான் அன்று கல்லூரிக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்திருந்தேன்.

மறுநாள் வழக்கம்போல கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றேன். பிற்பகல் 3 மணிக்கு தொலைபேசி அழைத்தது, ராயினுடைய எண்ணிலிருந்து,

எடுத்து

“ஹலோ” என்றேன்

“ப்ரொஃபஸர் நான் அபர்ணா பேசுகிறேன்”.

“சொல்லுங்க” என்றேன்

“நான் உங்களோடு பேசணும்”.

“இப்பவா?”

“ம்”.

“இப்ப எனக்கு கிளாஸ் இருக்கு. அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவேன். பேசலாமா”

“ம். சரி”.

மாலை அபர்ணாவை அவள் ஃபிளாட்டில் சந்தித்தேன்.

அவள் பதற்றத்துடன் இருந்தாள்.

“சொல்லுங்க” என்றேன்.

“பாவாவோட அக்கா பிரச்சினை பண்றாங்க”.

“என்னவாம்?”

“தம்பியோட வீடு அவங்களுதான். நான் காலி பண்ணனுமாம்”.

“ராய்க்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகலையா?”

“இல்ல. பலமுறை செஞ்சுக்கலாம்னு பேசிக்கிட்டோம்.

ஆனா ஏதோ ஒரு காரணத்தினால தள்ளிப் போய்க்கிட்டே இருந்தது. இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல” அழுதாள்.

“லிவிங் டுகெததர்ன்னு சொல்லலாமா?”

“எனக்கு அதெல்லாம் ஒன்னும் தெரியாது. எனக்கு எல்லாமே அவர்தான்”.

“உங்களுக்கு ராய் எப்படி பழக்கம்?”

“ராய் எங்களோட ஃபேமிலி ஃபிரண்ட்.. திருச்சிக்கு பிசினஸ் விஷயமா வரும்போதெல்லாம் எங்க வீட்டில்தான் தங்குவார்”.

“ம்”.

“என் அப்பா, அம்மா, அண்ணன் மூணு பேரும் ஒரு கார் விபத்துல செத்துப் போயிட்டாங்க. சொந்தகாரங்கன்னு சொல்லிக்க யாருமே இல்லை. ராய் சார் தான் இங்கே கூட்டிட்டு வந்தாங்க. அதிலிருந்து எனக்கு எல்லாமே அவர்தான்னு ஆயிடுச்சு”.

“திருமணம் பண்ணிக்காம இணைஞ்சு வாழறதுல இருக்கிற பிரச்சனைகள்ல இதுவும் ஒன்னு. சொத்து ஒருத்தர் பேர்ல மட்டும் இருந்தா, ஒருவேளை அவர் இறந்து போனா, இன்னொருத்தருக்குக் சல்லிக்காசு கிடைக்காது. சொத்து வாரிசு தாரர்களுக்குத் தான் போய்ச் சேரும்.அப்பா அம்மா சகோதர சகோதரிகள்னு யாருக்காவது. போகும். ஒருவேளை அப்படி யாருமே இல்லன்னா யாராவது தூரத்துச் சொந்தத்துக்குப் போகுமே தவிரக் கூடவே சுக துக்கத்துல அல்லும் பகலும் இணைஞ்சு வாழறவருக்கு கிடைக்காது. ஒன்னு, அவங்க முறைப்படி திருமணம் செஞ்சிருக்கனும். இல்லைனா சொத்தை ரெண்டு பேரோட பெயர்களிலே வாங்கி இருக்கணும். இது எதுவுமே இல்லன்னா உயிலாவது எழுதி இருக்கனும்”.

“ராய் சார் இரண்டு எப்.டி. க்கு என்னை வாரிசாக வங்கியில நியமிச்சிருக்கிறார்”.

“அதில் உறவு, மனைவின்னு போட்டிருக்கா?”

“இல்லையே”.

“ம்”.

“நாங்க ரெண்டு பேரும் இங்க கணவன் மனைவி போல இந்த ஃபளாட்டிலே பத்து வருஷமா தங்கி இருக்கிறோம்”.

“ஆனால் சட்டப்படி நீங்க ரெண்டு பேருமே கணவன் மனைவி இல்லையே”.

“நான் இப்ப சட்டப்படி ஏதாவது செய்ய முடியுமா?”

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவள் மீது பரிதாபம் வந்தது.

“ராயோட அக்கா இப்ப எங்க இருக்காங்க?”

“அவங்க ஒரு வாரத்துக்கு கெஸ்ட்ஹவுஸ்ல தங்கி இருப்பாங்களாம். என்னை உடனே காலி பண்ண சொல்றாங்க.எனக்கு யாருமே இல்ல. நீங்க எல்லாம் சேர்ந்துதான் எனக்கு உதவி பண்ணனும்”.

என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தேன்.

“இந்த குடியிருப்பில் இருக்கற நீங்க எல்லாம் ராய் மேலை எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். நீங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து எனக்கு உதவ முடியும்”.

“எப்படி உதவறதுன்னு எனக்கு தெரியல”.

“அவங்க குடும்பத்தோட வசதியா கொல்கத்தால வாழ்ந்துட்டு இருக்கறாங்க. அவங்கள பொறுத்த வரைக்கும் இந்த வீடுங்கறது ஒரு கூடுதலான சொத்துதான்”.

“அத சொன்னா, ஒத்துக்குவாங்களா?”

“நீங்க நாலஞ்சு பேர் சேர்ந்து அவங்க கிட்ட பேசலாம் தானே”.

“சரி நான் யோசிக்கிறேன்”.

“அசோஷியேஷன் செக்ரெட்டரி ரிங்கு மேடம் லாயர் தானே. அவங்க நெனச்சா எதுவும் பண்ண முடியாதா?”

அவளுடைய வெகுளித்தனத்தை நினைத்துச் சிரிப்பதா அழுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் ரிங்குவிற்கு அபர்ணாவை சுத்தமாகப் பிடிக்காது. என்னோடு அபர்ணாவை பற்றிப் பேசும்போதெல்லாம். எப்படி இதுபோன்ற தகாத ஆட்களை உன் ஃப்ளாட்டுக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு சமாளிக்கிறாய்” என்பார்.

ரிங்கு சொந்த ஊருக்குப் போயிருக்கிறார். ராய் இறப்பைப் பற்றி வாட்ஸ் அப்பில் செய்தி போட்ட போது கூட ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் ‘ஆழ்ந்த இரங்கல்’ என்று எளிமையாக முடித்துக் கொண்டார்.

நிச்சயமாக அபர்ணாவை விரட்டுவதில் குறியாக இருப்பார். போதாததற்கு வழக்கறிஞர். என்பதால் எந்த விஷயத்திற்குமே லா பாயின்ட்தான். குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள், வேலை செய்யும் ஆட்கள் எல்லோருக்குமே அவர் ஒரு சிம்ம சொப்பனம். ஆகவே ரிங்குவிடம் அனைவரும் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருப்பார்கள்.

“ஏதாவது சாப்பிட்டீங்களா அபர்ணா?”

“இல்ல. சாப்பிடவே தோன மாட்டேங்குது”.

நான் எனது வீட்டிலிருந்து நறுக்கி வைத்திருந்த ஆப்பிளையும், குவளை பாலையும் கொண்டு வந்து கொடுத்தேன்.

இரண்டு ஆப்பிள் துண்டுகளை மட்டும் எடுத்துச் சாப்பிட்டு விட்டு பாலை முழுவதுமாக குடித்துவிட்டு “தேங்க்ஸ்” என்றார்.

பிரபல கல்லூரியொன்றில் கணித பேராசிரியராக வேலை செய்கிறேன். எனக்கு குடும்பம் இல்லை. தனி ஆள். யாருடைய வம்பு தும்புக்கும் போவதில்லை. நான் உண்டு என் வேலை உண்டு என்று அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பவன். இருந்தாலும் அனைவரும் எனக்கு நண்பர்கள். யார் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கூறினாலும் கேட்டுக் கொள்வேன். எனக்கென்று யாரைப்பற்றியும் தனிப்பட்ட கருத்துக்கள் கிடையாது.

குடியிருப்பு பகுதியில் ராய்க்கு அப்படி ஒன்றும் நல்ல பெயரிருந்ததில்லை. பணம் கைமாறாக வாங்கினால் திருப்பி கொடுக்க மாட்டார் என்கிற குற்றச்சாட்டினை சிலர் வைத்திருந்தனர். எனக்கு அத்தகைய அனுபவங்கள் இல்லை. எப்போதாவது விஸ்கி பாட்டில் இருக்கிறதா என்று கேட்பார், நான் குடிப்பதில்லை என்று தெரிந்திருந்தாலும் கூட.

அபர்ணா மட்டும் அவ்வப்போது வந்து தயிர், காபித்தூள் என அவசரத்திற்கு வாங்கி செல்வார். நான் அதைக் கடனாகக் கருதியதில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் இதுபோன்ற சிறுசிறு பரிமாற்றங்கள் உறவுப் பாலத்தை உறுதிப்படுத்தும் என்பது என்னுடைய நம்பிக்கை.

ஆனாலும் எல்லோரும் ஒரே மாதிரியான பார்வையைக் கொண்டு இருப்பதில்லையே. அதுமட்டுமில்லாமல் தன்னைவிட வயதில் குறைந்த அபர்ணாவை வீட்டில் வைத்து கூத்து அடிக்கிறானென்று பெண்களுக்கு ராய் மீது கடும் கோபம். பல பெண்மணிகள் அபர்ணாவை பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள்.

மறுநாள் கல்லூரி போவதற்கு முன்னால் நலச்சங்கத்தின் தலைவர் அறிவுமதியை போய் பார்த்தேன்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அவர் எதிர்வரும் சனிக்கிழமை மாலை நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. செயலாளரும் அதற்குள் ஊரிலிருந்து வந்து விடுவார். அந்தக் கூட்டத்தின் இறுதியில் இது குறித்துப் பேசுவோம் என்றார்.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அசோசியேஷன் கூட்டம் மொட்டைமாடியில் நடைபெற்றது. எப்போதும் போல உப்புச்சப்பில்லாத விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக நான் இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. அபர்ணாவிற்காக கலந்து கொண்டேன்.

கூட்டம் முடிவடையும் நேரத்தில் வேறு ஏதாவது விஷயங்கள் பேச வேண்டுமா என்று அறிவுமதி கேட்டபோது நான் அவரை ஏறிட்டுப் பார்த்தேன்.

“கூட்டத்தை நிறைவு செய்கிறேன். அப்பறம் இந்த அபர்ணா விஷயமாக முக்கியமான ஒன்று பேச வேண்டும். எல்லோரும் கொஞ்ச நேரம் இருந்தால் சௌகரியமாக இருக்கும்” என்றார்

ரிங்கு சடக்கென்று எழுந்து, “நீங்கள் பேசுங்கள், எனக்கு ஒரு முக்கியமான கால் இருக்கிறது'” என்று கிளம்பினார்.

“வழக்கறிஞராகிய நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று தலைவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவர் போய்விட்டார்.

ராயின் எதிர்பாராத மரணமும்‌ அபர்ணாவின் துயர நிலையும் விவாதிக்கப்பட்டது. ராயின் சகோதரியைச் சந்தித்து, ‘வீட்டுக்கு வேண்டுமானாலும் அவர் உரிமையாளராக இருக்கட்டும். அபர்ணா சிறிது காலத்திற்கு இங்குத் தங்கி இருக்க வழி வகுக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுப்போம் என்று தீர்மானித்தோம்

“நாளை காலையில் அந்த அம்மாவைச் சந்திப்போம். பேராசிரியர் அவர்கள் இதை முன்னெடுக்கட்டும்” என்று தலைவர் குறிப்பிட்டார்.

ரிங்குவின் செயல் வருத்தம் அளித்தது. எரிச்சல் மூட்டியது. சே என்ன மனுஷி இவள். மனது கேட்கவில்லை.

கூட்டம் முடிந்ததும், என் வீட்டிற்குச் செல்லாமல் நேராக ரிங்குவின் வீட்டுக்குச் சென்றேன்.

ஏதோ எதிர்பார்த்திருந்தது போல,

“வருக வருக பேராசிரியரே. என்ன ஆச்சரியம். காற்று இந்த பக்கம் அடிச்சிருக்கு”

அன்பின் வெளிப்பாடா அல்லது ஏளனமா என்று விளங்கிக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

“ரிங்கு, ராய் போய் விட்டார். பாவம் அந்த பெண் அபர்ணா. நம்மோடு பல ஆண்டுகளாக இங்கு வசிக்கிறார். அனாதையாகிவிட்ட அவருக்கு நாம் ஏதேனும் ஆதரவு தர வேண்டும்”.

“எப்படி?”

“நாம கொஞ்ச பேரு போய் ராயோட சகோதரியைச் சந்தித்தால் நன்றாக இருக்கும்”.

“எதுக்கு சந்திக்கனும்?”

எனக்குக் கோபம் தலைக்கேறியது. பல்லைக் கடித்துக்கொண்டு, ” அந்த பொண்ணு மேல தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கலாம். இப்படிப்பட்ட துயரமான சூழ்நிலையில், இத்தனை நாள் நம்ம கூட வாழ்ந்துகிட்டு இருக்கிற அந்த பெண்கிட்டே கொஞ்சம் மனுஷ தன்மையைக் காட்டனுமில்ல” என்று காட்டமாகச் சொன்னேன்.

“கூல் புரொஃபசர். என்ன ஆச்சு? நீங்க எப்பவுமே கோபப்பட்டுப் பேசி பார்த்ததே இல்லையே”.

“இல்லைங்க மேடம். நாம ஏதாவது கண்டிப்பா செய்யணும்”.

“என்ன நடக்குனுமோ அது சரியாகவே நடந்திருக்கு. ரிலாக்ஸ்”.

“என்ன நடந்து இருக்கு‌ மேடம்?”

“மூணு மாசத்துக்கு முன்னால ஒரு நாள் காலையில என்னோட சேம்பருக்கு ராய் வந்திருந்தாரு”.

நான் ஆச்சரியத்தோடு ரிங்குவை பார்த்தேன்.

தனக்கு இதய நோய் இருப்பதாகவும் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால அபர்ணாவுக்கு ஏதாவது செய்யணும்னு‌ சொன்னாரு.

“பேசாம கல்யாணம் பண்ணிக்கங்க” என்று சொன்னேன்.

“அது வேண்டாங்க. எனக்கு ஏதாவது ஆகி விட்டால் அவ வாழ்க்கை வீணாகிடும்.. வேற என்ன பண்ணட்டும்” என்று கேட்டார்.

“ஒன்னு வீட்ட இப்பவே அவ பேர்ல செட்டில் பண்ணிடலாம். இல்ல உயில் எழுதலாம். என்னை கேட்டா உயில் எழுதுவது தான் சரியானது” என்றேன்.

ராய் அதற்கு உடன்பட்டு, “நீங்களே தயார் பண்ணுங்க” என்றார்.

ரிங்கு பேச பேச நான் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன்.

“ராய் தன்னுடைய உயிலில் இந்த வீட்டையும் தன்னிடம் இருக்கின்ற சேமிப்பு பணத்தில் ஒரு பகுதியை அபர்ணாவுக்கும் இன்னொரு பகுதியை அனாதை விடுதி ஒன்றுக்கும் எழுதியுள்ளார். உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை அபர்ணாவிடம் முறைப்படி படித்துக் காட்டிவிட்டு புரோஃபெட் பண்ணலாம் என்று இருக்கிறேன்.

வேற ஏதாவது சொல்லனுமா?”

“இல்லை” என்றேன். கிளம்பினேன்.

கதவருகே வந்தவுடன், திரும்பி “தேங்ஸ்” என்றேன்.

“யு ஆர் வெல்கம்” இரு கண்களையும் சிமிட்டி புன்னகைத்தாள்.

எவ்வளவோ சிக்கலான கணக்குகளை எளிதாகப் புரிந்து கொண்ட எனக்கு இந்த பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *