அன்றாடக் காய்ச்சிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 7,626 
 
 

தொண்ணூறு பாகை டிகிரியில் செங்கோணித்து சூரியன் சிரித்ததில் அல்லது எரித்ததில் ஆரோகணம் மற்றும் அவரோகணத்தில் உச்சி மண்டையில் குந்திக் கொண்டு வெயில் உச்சஸ்தாயியில் வியர்வை ராகத்தில் வழிந்து கொண்டிருந்தது.

அது ஒரு வகையான ராகம்….ஆவிப் பறக்க அனலில் சுருதி சேர்த்து ஏழு கட்டையில். அடுப்பேயில்லாமல் கண்களிரண்டிலிருந்தும் சுடச்சுட ஆவி பறந்து கொண்டிருந்தது.

குரங்கு பாய்ந்தானா அல்லது குரங்கு பாஞ்சானா எனும் தொணியில் ஒரு காலத்தில் பல் வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று அது குரங்குபாஞ்சான் தான் என்பதற்கான புராதனத்து இதிகாச மற்றும் தற்கால வாய் மூல மற்றும் ஆவணரீதியயான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டு… தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் இந்த விவாதம் கட்டுரைகளாகவும் பத்தி எழுத்துகளாகவும்… மேலே சொன்னது போல அது குரங்குபாஞ்சான்தான் என பெரும்பாலும் முடிவுக்கு வந்து… இந்த இடத்தில் ஊரில் கதை சொல்வதில் பேர் போன ஹஸன் மௌலவி குரங்குபாஞ்சான்தான் என்பதற்கான ஆதாரமாக அவர் முன்வைத்த வாதம்… பெரியாற்றுமுனை தொங்கலிலிருந்து – ஆயிலியடி எல்லைவரை ரொம்பப் பிரபலம்.

முழுக்கிண்ணியாவுக்கும் தெரியும்… மனுஷன் முன்வைத்த வாதம்… சொல்லுவார்களே சிரிக்கவும் சிந்திக்கவும் என்று… அந்த வகையறா… அவரது வாதம் என்னவெனில்… (வாசகர்கள் மன்னிக்க வேண்டும்.. அது பெரிய்ய்ய்ய கதை… இன்னொரு நாள் சாவகாசமாகச் சொல்கிறேனே… ஏன்னா இது குரங்கு பாஞ்சானா அல்லது குரங்கு பாய்ந்தானா என்ற பட்டிமன்றத் தலைப்புக்குரிய கதையல்ல… மாற்றமாக..மேலே வாசிக்கவும்)

அப்பேர்ப்பட்ட குரங்குபாஞ்சான்… பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக குடியிருந்த அத்தனை சனங்களும் தொண்ணூறுகளில் குரங்கு பாஞ்சானை விட்டு அகதிகளாக வெளியேறி மீண்டும் பிரதேச செயலகத்தினால் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏறுத்தாழ குரங்குபாஞ்சான் மீள் காடாக்கம் செய்யப்பட்ட நிலையில்தான் இருந்தது. மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் தமது நிலங்களை (காடுகளை) வெளிசாக்கி கொட்டில் போட்டு குடியிருக்க வேண்டியிருந்தது.

காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டவர்கள் பிரதேச செயலகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் குரங்கு பாஞ்சானில் தமது காணிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள வான் எல பொலிஸாரினால் காரணமேயில்லாமல் சிலர் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னால் ஆஜர் படுத்தப்பட்டு ஒரு மாத காலம் சரியாக விளக்க மறியலில் இருந்து வதை பட்டு இப்போதும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் அநியாயத்துக்கு வழக்கு போய்க் கொண்டிருக்கிறது என்பது வேறு கதை.

நம்ம ராபி மாஸ்டரிடம் கேட்டால் அது பற்றி விலா வரியாகச் சொல்லி விடுவார். மாட்டுப்பட்டவர்களில் அவரும் ஒருவராச்சே….அவரும் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னால் ஆஜர் படுத்தப்பட்டு ஒரு மாத காலம் சரியாக விளக்க மறியலில் இருந்தார். அவரை பிணையில் எடுப்பதற்கு பட்ட கஷ்டம் இருக்கிறதே…செய்யாத குற்றத்துக்காக மனுஷன் இன்றும் பாடசாலைக்கு லீவு போட்டுக் கொண்டு வழக்குத் தவணைகளுக்கு நீதவான் நீதிமன்றத்துக்கு போய் வந்து கொண்டிருக்கிறார்.

எப்பதான் முடியப் போகுதோ அந்த மனுஷன்ட வழக்கு…

குரங்கு பாஞ்சானில் புதிதாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களது காணிகளைத்தவிர ஏனைய பெரும்பாலான பிரதேசங்கள் இப்போதும் புதர் மன்றிக்; காடுகளாகி… பயிர் செய்வோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

நெற்றியில் விஸ்ரூபித்திருந்த வியர்வையை வலது கையின் அத்தனை விரல்களையும் பயன்படுத்திக் கொண்டு துடைத்துக் கொண்ட அனீபா, களைப்போடும் மூச்சிளைப்போடும் பெயர் சொல்லத் தெரியாக அந்த மரத்தின் மார்பு விரிந்த நிழலின் கீழ் போய் ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டான். அவனது வெற்றுடம்பு பூராகவும் வியர்வையின் வனவாசம்…சூரியனது சண்டித்தனம் அவனது உடம்பில் பக்காவாகத் தெரிந்தது. மூர்க்கத்தனமாக செல்ஷியஸில் எகிரிய வெயில் அவனை கிளீன் போல்ட் செய்திருந்தது.

‘எண்ட ரப்பே… இன்னும் கொஞ்சம்தான் முக்காவாசி வேலை முடிஞ்சிட்டு… மூணு மணிக்குள்ள வெளிக்கிட்டுரலாம்” என தனக்குள்ளேயே நம்பிக்கை செய்து கொண்ட அனீபா கடந்த இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு குரங்குபாஞ்சானில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களுல் ஒருவன். தொண்ணூறுகளின் பின்னர் குரங்கு பாஞ்சானிலிருந்து அகதிகளாகி சூரங்கல் பிரசேத்தில் அடைக்கலம் புகுந்து அரசு தரும் மாதாந்த ரேஷனில் வயிற்றுக்காகவே வாழ்ந்து… அப்படியே பழக்கப்பட்டு வாழ்க்கையே ஒரு போராட்டமாகி வாழ்க்கை என்பதே ஜீரணிப்பதற்கான ஜீவனோபாயமாகி..

மூன்று குழந்தைகளுக்கும் தகப்பனான அனீபாவின் பயோடேட்டா அத்தனை பெரிசல்ல. வயசு நாற்பது… தொழில் கூலி… வேளாண்மை வெட்டுதல்… பிரதானமாக வயலும் வாழ்வும்… தற்போதைக்கு சொத்து என்று சொல்ல ஒரு பழைய இத்துப்போகும் நிலையில் ஒரு புஷ் பைசிக்கிள்… அதுதான் சோறு போடுகின்றது.

இப்போது… வெட்டுகின்ற விறகுகளை அந்த சைக்களின் பின்னால் உள்ள ரொம்பப் பழசான அந்தப் பெரிய கேரியரில் லாவகமாக அடுக்கி தட்டுக்குமேல் தட்டு வைத்து பின்னர் குறித்த உயரத்துக்கு விறகுகள் அடுக்கப்பட்டு கயிற்றினால் கட்டி நடையாய்த்தான் சைக்கிளை தள்ளிச்சென்று விறகுகளை விற்றுவர வேண்டும்.

‘முன் டயரையும் சீட்டையும் பிரேக்கையும் மாத்த வேண்டும்… அப்படியே கலீல் பாசினைக்கிட்ட குடுத்து சைக்கிள சேர்விஸ் பண்ணி எடுக்கனும்” என எண்ணி அதற்காகத் திட்டமிட்டு சுமார் ஆறு மாசங்களிருக்கும். வயிற்றுப் பிழைப்பே ஒரு கேள்விக்குறியாக மாறிவிட்ட நிலையில் சைக்கிளைத்திருத்த ஏது பணம்… தனக்குள்ளேயே அனீபா பெருமூச்செரிந்தான். தனக்குள்ளே மீண்டும் தானாக வழமை போல எரிந்தான்….விரல்களுக்கிடையே சிக்கிக் கிடந்த அந்த பீடித்துண்டை வெறுப்பாக சற்று அப்பால் இப்போது தூக்கி எறிந்தான்.

‘எப்படியும் சைக்கிள் திருத்தி எடுக்க வேண்டும்” ஆயிரத்தோராவது தடவை நினைத்துக் கொண்டான். பலருக்கு நினைவுகள் ஒன்றுதானே வாழ்வின் ஆதார சுருதியாகி விடுகின்றது. அதுவும் இல்லையென்றால் சுவாசிப்பதே சுமையாகி தற் கொலைப் பட்டியல் ரொம்ப நீண்டு விடும்.

‘இல்லாட்டா கொஞ்ச நாளை தொழில் செய்ய முடியாமல் போய்விடும்” அடிவயிற்றில் ஒரு பயப்பந்து துள்ளித்துள்ளி எகிறிக் குதித்தது.

குரங்குபாஞ்சானில் மீள்குடியேறி ரெண்டு வருஷமாச்சு. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிறகு எத்தனை கஷ்டங்கள்… எத்தனை துயரங்கள்… மூணுவேளை வயிறார இல்லாவிட்டாலும் பசியின் சூட்டை ஓரளவேனும் தணிப்பதற்கு எத்தனை கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிக்கிடக்கிறது. ஆளை விழுங்கி ஏப்பமிட்டு விக்கல் விடும் வாழ்க்கைச் செலவின் பெறுமானம் ரொம்பவும் உசத்திதான்.

இதற்கிடையில் பிள்ளைகளின் படிப்புச் செலவு அவ்வப்போது முன்னறிவித்தலின்றி வலுக்கட்டாயமாக வந்து போகும் மருத்துவச் செலவுகள்… என சிலவேளைகளில் இரண்டு வேளைகளில் மட்டுமே அடுப்பெரியும் அதிஷ்டம். அகதிகளாக வாழ்ந்த காலத்திலாவது பிரதேச செயலகத்தினால் மாதாந்தம் நிவாரணமாவது தரப்பட்டது. இப்போது பிரச்சினைகள் முடிஞ்சு போச்சு… மீள்குடியேற்றமும் செய்யப்பட்டாச்சு… அவங்க அவங்க வழியை அவங்க அவங்கதான் பார்த்தாகனும். பிரச்சினை முடியவில்லை அன்றாடம் சோத்துக்கே நாவரளும் கட்டத்துக்கு… அது எச்ஐவி வைரஸ் போல… ஒரு குணப்படுத்த முடியாத வைரஸாக வாழ்க்கை பூராகவும் வந்து கொண்டேயிருக்கிறது தரித்திரமும் வறுமையும்.

‘ம்ஹும்… சைக்கிளை எப்படியாவது இந்த கெழமக்குள்ள திருத்தியாகனும. புஹாரியடி வாசுன கலீல்ட்ட கொடுத்தா சுருக்கா செஞ்சு குடுத்துருவாரு. கொஞ்ச காசக் குடுத்திட்ட அப்புறமா மிச்சத்தக் கொடுக்கலாம்.

மீண்டும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அனீபா எழுந்தபோது மணி மாலை மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. காலை ஏழு மணிக்கு இந்த காட்டுக்குள் விறகு வெட்ட வந்தவன். காய்ந்த மரங்களை கோடாரியால் வெட்டி விறகுகளைத் துண்டம் துண்டமாக்கி ஓரிடத்தில் அடுக்கி வைத்திருந்தான்.

கடந்த ஆறுமாத காலங்களாக அனீபாவுக்கு இதுதான் தொழில். வேறு தொழில் எதுவும் கிடையாது. வேளாண்மை வெட்டுவது விறகு வெட்டுவது தவிர வேறெந்த தொழிலும் அவனுக்குத் தெரியாது. இப்போது வேளான்மை வெட்டும் சீஸன் ஆடிந்து விட்டது.

காட்டுக்கு வந்து இப்போதெல்லாம் விறகு வெட்டும் தொழில் செய்வதும் பேராபத்து நிறைந்த தொழிலாய்த்தான் மாறிவிட்டது. பொலிஸ் தொல்லை… அடிக்கடி பொலிஸ் வந்து ஒற்றை விறகினை சமையலுக்கு கொண்டு சென்றாலும் அரெஸ்ட் பண்ணி ஏதோ சந்தன மரங்களை வெட்டிச் சரித்த லெவலில் அவனுக்கெதிராக வழக்குப் போட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தி அப்புறம் திண்ணவே வழியில்லாதவனை ஐம்பதினாயிம் வரை தண்டப்பணம் கட்டச் செய்து… அப்சேர்ட்…

ஜஸ்ட் எ ஜஸ்டிஸ்…

கடந்த வாரம் ஆதம் காக்காவும் மூஸா காக்காவும் காட்டுக்குள் சென்றது மாத்திரம்தான். ஒற்றை விறகுகூட வெட்டவில்லை. அதற்குள் பொலிஸ் வந்து அவர்களை கைசெய்து மூன்று நாள்வரை அறைந்து… உதைத்து… கோர்ட்டில் ஆஜர் செய்து…..

குற்றத்தை கோர்ட்டில் ஏற்றுக் கொள்ளச் சொல்லி பொலிஸாரினால் வற்புறுத்தப்பட்டு (சாதாரண குற்றச்சாட்டுதான் போட்டிருக்கோம்..பயப்படத் தேவையில்ல…லோயரும் புடிக்கத் தேவையில்ல..சுத்தவாளியா இல்ல குத்தவாளியான்னு கேப்பாங்க…குத்தவாளின்னு சொல்லுங்க…சும்மா சின்ன தண்டப் பணம்தான் வரும்னு அவர்களை கோர்ட்டுக்கு கொண்டு வரும் போது பொலிஸார் உபதேசம் செய்தார்களாம்).

ரெண்டு பேருக்கும் தலா முப்பதினாயிரம் தண்டப்பணம் அடிக்கப்படடது. இது சின்ன தண்டப்பணமா என்ன?… அந்த தண்டப்பணத்தை எப்படிக் கட்டினார்கள் அந்த ஏழைகள்…?

அனீபாவும் ரொம்பத்தான் பயந்திருந்தான். விறகு வெட்டி தொழில் செய்வது இப்போதைக்கு ஒரு இந்த ஏரியாவைப் பொறுத்த வரை ஒரு க்ரைம்…..?
ரொம்பத்தான் கூடிப் போச்சு பொலிஸ் கெடுபிடி… அதுசரி வறுமைப்பட்டவனையும் கஷ்டப்பட்டவனையும் இல்லாதவனையும் மட்டும்தான் பெரும்பாலும் பொலிஸார் பிடித்துச் செல்லுனகின்றனர்… ஏன்… இல்லாதவன் மட்டும்தான் குற்றம் செய்கின்றானா? அனுபவத்தில் தன்னை அடிக்கடி கேட்டுக் கொண்டே கேள்விகளுக்கு அனீபாவுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

அவனுக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் அப்படித்தான். பொலிஸ் என்றால் அனீபாவுக்கு அப்படி ஒரு பயம். அவனும் இப்போதெல்லாம் அடிக்கடி விறகு வெட்ட வருவதில்லை. இருந்து இருந்துதான் அவனும் விறகு வெட்ட வருவான்.

ஒவ்வொரு தடவையும் விறகு வெட்ட வரும்போதும் உசுரை கையில் இறுக்கப்பிடித்துக் கொண்டு அங்கால இங்கால அலங்க மலங்கப் பார்த்து வெட்டிய விறகுகளை கட்டிக் கொண்டு வீடுவரை அச்சமும் திகிலும் சேர்ந்து கூடவே வரும். என்ன பொழப்பு? வயிறு கேட்குதில்லையெ அடம்பிடிக்கின்றது.

பாழாய்ப் போன இந்தக் காட்டுத்தொழிலத் தவிர வேறென்ன தெரியும் அவனுக்கு… வயிற்றுக்குத் தெரியுமா என்ன… அதற்குத் தெரிந்ததெல்லாம் அஹிம்சையோடு வன்முறை புரிய மட்டுமே.

பசி என்பதே ஒரு மிகப் பெறும் பயங்கரவாதம்தான்.

‘வாப்பா எப்பவும் இந்த செத்தல் மீனும் ஜப்பான் மீனும்தானா. எனக்கு இனி; இது வேணாம்… நான் சாப்பிட மாட்டேன்… எனக்கு மஞ்சச் சோரும் எறச்சிக் கறியும் ஆக்கித் தாங்க” ரெண்டாம் மகன் ஜுனைத் அனீபாவைக் கட்டிக் கொண்டு நேற்று அழுதது…

‘என்னங்க பானைல கெடந்த அரிசி முடிஞ்சிச்சி. நம்ம ஸஹானாவ பெரிய டொக்டர்கிட்ட காட்டச் சொல்லி ஆஸ்பத்திரில முந்தா நாள் டாக்டர் ஐயா கண்டிப்பாச் சொல்லிட்டாரு. இல்லாட்டி ஆபத்தாம். வாங்க குழந்தைய எடுத்திட்டு டவுனுக்கு போயிட்டு வருவோம். எனக்கென்னவோ பயமாயிருச்சி” என மனைவி மர்சூக்கா அழுததும்…

எப்படியாவது நிறையக் கொள்ளிய வெட்டி அத வித்து… என்ட அல்லாஹ் எப்படியாவது நாளைக்கு மகள டவுனுக்கு கொண்டுபோய் பெரிய டொக்டருக்கிட்ட காட்டனும்.

தான் இதுவரை வெட்டிக்கொத்தி துண்டங்களாக்கிய விறகுகளை ஒரு சீராக சைக்களின் பின் கேரியலில் வைத்து அடுக்கினான் அனீபா. அவனுக்குப் பசித்தது. இன்னும் சாப்பிடவில்லை. காலையில் இரவு ஆக்கின சோத்துல இருந்த மிச்சத்துல தண்ணிய ஊத்தி மர்சூக்கா வச்சிருந்தா. வெங்காயத்த வெட்டிப் போட்டு அதுக்குள்ள ரெண்டு மிளகாயையும் நறுக்கிப் போட்டு சாப்பிட்டது. மிச்சமில்ல…அதுவும் கொஞ்சமாத்தான். தண்ணீரைக் குடித்தான் அனீபா. வீட்டுக்குப்போய் சாப்பிடுவோம்.

வயிறு கலோரிப் பெறுமானம் கேட்டு ரொம்பத்தான் பிடிவாதம் பிடித்தது.

பழக்கப்பட்ட ஒன்றுதான். புதிதாக ஒன்றுமில்லையே அவனது இரண்டு உள்ளங்கைகளும் மேற் தோல் உரிந்து மரத்து மொர மொரவெனக் காய்ச்சுப் போயிருந்தது. கோடாரியும் மண் வெட்டியும் பிடித்த கைகள்… பின்னெப்படி இருக்கும். பசி தன்னை மீண்டும் மீண்டும் அவனுக்கு இம்சை கொடுத்தது.

இன்னிக்கு நெறய வெறகு வெட்டிட்டேன். அவனோடு விறகு வெட்டுவதற்காக காலையில் கூட வந்திருந்த சைபுல்லாவும், அன்வரும் ஏற்கனவே புறப்பட்டிருந்தனர்.

இப்போது தனியாக நின்று கொண்டிருந்தான்

‘டொக்டர் என்ன சொன்னார்… ஸஹானாவுக்கு நியுமோனியாவோ ரூமேனியாவோ வரத்துக்கான அறிகுறிகள் நெறைய இருக்குன்னாரே…நியுமோனிய்யான்னா… அப்படீன்னா என்ன…ஒண்ணுமே புரியல்ல..மனுஷன் வேற சொன்னது அத்தணையும் இங்கிலிசுல வேற…ஆனா உசிருக்கு ஆபத்துன்னாரே.

இன்னிக்கே டவுனுக்குப் போகனும் புள்ளயக் காட்டுறதுக்கு” எனப் பயந்தவனின் எண்ணங்கள் அவனது மூன்றாவது குழந்தையான ஸஹானாவின் வெப்பம் பீய்ச்சியடிக்கும் பிஞ்சி உடம்பும், சூடான மூச்சும், அதி சிரமத்தின் மத்தியில் சுவாசிப்பதும் அலைடித்தன.

“தொடர்ந்து ஸஹானா இருமிக் கொண்டுதானே இருக்குது…புள்ள பாவம்” நியுமோனியான்னா அவ்வளவு பயங்கரமா….புதுசு புதுசா என்னென்னமோ நோயெல்லாம் சொல்லுறாங்க…அல்லாவுக்குத்தான் வெளிச்சம்.

அவசர அவசரமாக சைக்கிள் கேரியரில் அடுக்கியிருந்த விறகுகளை கயிற்றால் கட்டி ஒரு பெரிய அழுத்தமான பாரத்தைச் சுமந்த அந்த சைக்கிளை தள்ள ஆரம்பித்தான்.

அவனுக்கு மூச்சிறைத்தது. களைப்பு, இளைப்பு, பசி, மற்றும் வெயிலின் உஷ்ணம் அத்தனையும் மிக்ஸாகி அவனைத் தள்ளாட வைத்தன. சோர்வின் சாய்வு நாற்காலியில் அவனது சரீரம் சரிந்து போயிருந்தது.

எனினும் சைக்கிளை அந்த மணற்பாதையில் தம்மை அடக்கிக் கொண்டு தள்ளினான். பளீரென்ற வெயில் அவன் கன்னத்தில் பளாரென அறைய கால்கள் புதையும் அந்த மணலில் மெல்ல மெல்ல சைக்கிளை உருட்டி கொண்டிருந்தான். மிக மோசமாக அவனுக்கு மூச்சிறைத்தது.

எப்படியோ அந்தக் காட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியாகி வீதியிலிறங்கி… இன்னும் அரை கிலோமீட்டர்தான் வீட்டுக்கு.

அனீபாவினால் முடியவில்லை. மயக்கம் மயக்கமாய் வந்தது. காலையிலிருந்து தொடர்ந்து விறகு கொத்தி அவற்றை துண்டங்களாக்கி… வெறியேற்றும் வெயிலில் வியர்வை வழிய பசியை அலட்சியப்படுத்தி மணிக்கணக்கில் வேலை பார்த்ததன் விபரீதம்… கண்களிருண்ட மாதிரி ஒரு உணர்வு… பரவாயில்லை இன்னும் கொஞ்ச தூரம்தான்.

வரப்பிரசாதமில்லா இரைப்பைகளோடு வாழ்வில் தொடர்ந்து நிகழும் யுத்தத்தில் இல்லாதவனை மல்லாக்கப்போட்டு மார்பில் குத்துகிறது இல்லாமையும் ஏழ்மையும் இயலாமையும். உலகம் எப்போதும் சர்வைவல் ஒப் திப பிட்டெஸ்ட்தான்.

மேகங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் விறகுகள் அடுக்கிய தனது சைக்கிளை மகத்தான சிரமத்தின் மத்தியில் அனீபா மெல்ல மெல்ல தள்ளிக் கொண்டிருந்தான்..

‘ஏய்… நவத்தபங்”

குரல் வந்த திசையில் திரும்பிய அனீபாவின் கண்களில் திகிலின் திடீர்ப் பிரவேசம். இருளின் மொத்த அமிலமும் இதயத்தின் வழியே இறங்கியது. பார்வைக்குள் பயத்தின் பதிவிறக்கம். அவனுக்குப் பின்னே மோட்டார் சைக்கிளிரண்டில் காக்கி தரித்த நான்கு காவல்காரர்கள்.

இவர்கள் எப்படி இந்த நேரத்தில்…

இப்போது எந்த நேரத்தில் இவர்கள் வருவார்கள் போவார்கள் என்ற எவருக்கும் தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் இந்தப் பக்கம் பொலிஸின் கெடுபிடி ரொம்ப. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசத்துக்கு எதற்கு இத்தனை கெடுபிடி.

அருகே நெருங்கி வந்தார்கள். ஒருத்தனின் காக்கி யுனிபோர்மில் ஒற்றை வெள்ளி வானத்தைப் பார்த்துச் சிரிக்க ஏனைய மூன்று பேரும் ‘ராலஹாமி மஹத்தயா” ரகம்.

‘கெலேட்ட அயுத்து லெஸ எதுல்வெலா அமு கஸ் ஒக்கொம கபலா அரங் யனவா நேத” என்று சொல்லிய அந்த ஒற்றை வெள்ளியின் வார்த்தைகளில் பாதரசம். அனீபாவுக்கு உள்ளங்கைகள் இரண்டிலும் நமைச்சலெடுத்தது.

‘யக்கோ… மேக மொனவபங்… ஒயலா வகே மோட மினிசுன்ட கொச்சர கிவ்வத் கவதாவத் அஹன்னே பங்” வார்த்தைகளில் சூடு தெறித்தது.

அனீபாவுக்கோ இது வரை கொஹேத, மொனவத, மம போன்ற சில சொற்களைத்தவிர வேறெதுவும் சிங்களத்தில் தெரியாது என்பது அவனது பிதுங்கிய விழிகளின் பிம்பங்களில் தெரிந்தது.

வந்தவர்களில் ஒரு காக்கிக்கு தமிழ் கொச்சையாகத் தெரிந்திருக்க வேண்டும் ‘மஹத்தயா கேக்குறாரில்ல… காட்டுக்குப் போய் பச்ச மரத்த யெல்லாம் வெட்டி எங்கடா எடுத்திட்டுப் போற”

அனிபாவின் சைக்கிள் கேரியரில் இருந்தவை அத்தனையும் காய்ந்த விறகுகள் என்று வந்திருந்த அந்த பொலிஸ்காரர்களுக்கு நன்றாகத் தெரியும்… வழமைபோலவே அவர்களுக்கு கேஸ் தேவைப்பட்டிருக்க வேண்டும்.

‘இல்லீங்க… காஞ்சவெறகு வெட்டிட்டுப் போறன்” அனீபாவின் வார்த்தைகளில் ஊட்டிக் குளிர் வெடவெடத்தது.

‘தர… எஹமனங் பலபத்திரய தியனவாத”

‘டேய் வெறகுன்னா…. வெறகு வெட்ட பேர்மிட் இருக்காடா”

‘இல்… லீ… ங்… க”

‘அப்படின்னா வெறகு இல்ல…பச்ச மரத்தயெல்லாம் வெட்டி நாசப்படுத்திட்டு கொள்ளி வெட்டினேன்னு பொய்யா சொல்லுற” என்று அந்த ஒற்றை நட்சத்திரம் அனீபாவின் கன்னத்தில் பளார்…

‘ஆ… ஆ… ஆ…!”

அனீபாவின் பசிகலந்த மயக்கத்தோடு பின்னிணைப்பாக ஒற்றை நட்சத்திரத்தின் வலக்கையால் வன்முறைக்குள்ளான அந்தக் கன்னத்தின் சிவப்பு வலியும் சேர்ந்து கொண்டது.

‘தமுஸ்ஸ பச்ச மரத்த வெட்டிட்டு வெறகுன்னு பொய் சொல்றது… வெறகு வெட்டுறதுக்கு பேர்மிட் வேணுன்னு தெரியாதாடா ஒனக்கு….நட்ரா ஸ்டேஷனுக்கு…” கொச்சைத் தமிழ் ஓர்டர் இன் கொம்மான்ட் இப்போது ஆகிவிட்டிருந்தான்.

‘ஐயா… ஐயா… இது வெறகுதாங்க… சத்தியமா நான் பச்ச மரத்த வெட்டலீங்க… ஊட்டுல புள்ளக்கு சொகமில்லங்க… பொழப்புக்கு வேறு வழியில்லீங்க… இனிமே சத்தியமா நான் காட்டுல வெறகு வெட்ட மாட்டேங்க… அல்லாஹ்வுக்காக என்ன விட்டுடுங்க… என்ட அல்லாஹ்…”

அழுத அனீபா சோர்வாலும் தளர்வாலும் அவன் பிடித்துக் கொண்டிருந்த சைக்கிளின் ஹேண்டிலை விட அது தெருவில் அஷ்டகோணலாகி விழுந்து விறகுகள் சிதறித் தெறித்தன.

ஓற்றை விறகொன்று தவறி கொச்சைத் தமிழின் சூக்காலில் விழ..
“….அம்மே…”

அம்மேயுடன் இணைந்ததாக மீண்டும் அனீபாவின் இடக் கன்னத்தில் ரௌத்ரமாக…அவனது வலது கை..

இப்போது அனீபா
“அல்லாஹ்…”

அனீபா என்னென்னவோ சொல்லி கெஞ்சிக் கெர்டிருந்தான்…மடிப் பிச்சை அவனது வார்த்தைகள் பொலிஸ்காரர்களின் செவிகளில்;…ம்ஹும்…

‘தம்ஸ… என ஆரம்பித்தவனின் பின் வந்த வார்த்தைகள் அனைத்தும் நாகரீகம் கருதி இத்தால் தணிக்கை செய்யப்படுகின்றன.

‘டேய்… எல்லாம் அள்ளுடா…”

சில நேரங்களில் அனாவசியத்துக்கு பயப்படுவது கூட நினையாப் புறத்திலிருந்து எப்படியோ பயந்தது போல நடந்து விடுகின்றது…கொய்ன்ஸிடன்ஸ்…அனீபா மாதிரி.

அனீபா அந்த பசி மயக்கத்திலும் தொண்டை வரட்சியிலும் கீழே சிதறிக்கிடந்த விறகுகளைப் பொறுக்கி மீண்டும் கேரியரில் கட்டி குனிந்த தலை நிமிர சரியாக இருபது நிமிடங்களாகி விட்டன. அந்த இருபது நிமிடங்களுக்குள் ஓராயிரம் வலி அவனுள் ஊமை கண்ட கனாக்களாக…

‘மெயாவ ஸ்டேஷமட்ட கெனயன்ட”

ஒற்றை நட்சத்திரம் சொல்லிவிட்டு முன்னே நகர பின் வந்த கொச்சைத் தமிழ் ‘நடடா” என அனீபாவை தள்ளாத குறையாய் எம்பினான்.

இயலாமையிலும் வெறுமையிலும் சைக்கிளினை பெறும் பாரத்தோடு தள்ளிச் செல்லுகையில் அனீபா தள்ளாடினான். அவன் சைக்கிளினை தள்ளிக் கொண்டு போக பின்னே இரு பொலிஸ்காரர்கள் தொடர்ந்தார்கள்.

பொலிஸ் ஸ்டேஷனை நோக்கி அனீபா தனது சைக்கிளினை தள்ளிக் கொண்டு இதோ செல்கிறான்…

இன்னும் ஒன்றரை மணித்தியாலங்களாவது அந்த சைக்கிளினை அவன் தள்ளிச் சென்றாக வேண்டும்.

அந்த பொலிஸ் நிலையம் இன்னும் ஐந்து மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது…..

– 2012-01-01

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *