அன்பின் விழுதுகள் அறுவதே இல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 9,516 
 
 

“சந்திரா… சந்திரா… இங்கே…இங்கே…” என கை காட்டிய படி ஓடினாள் கன்னியம்மாள். கூட வந்த அவள் மகள் மங்கைக்கு கோபமாக வந்தது. எதிர் திசையில் சென்றுக்கொண்டிருந்த சந்திரன் பார்த்ததும் தான் நிறுத்தி மூச்சுவிட்டாள். தன் வயதை மறந்து ஓடியது கன்னியம்மாளுக்கே வெட்கமாக தான் இருந்தது. என்ன தோன்றியதோ சந்திரன் இவளை கிராஸ் பண்ண வைக்காமல் அவனே வந்தான். வந்தவுடன் அவன் கைகளைப் பிடித்து “எப்படிடா இருக்க?” என்றாள் முகம் நிறைய பூரிப்புடன். “நல்லா இருக்கேன் அத்தை” என்றான். “நீங்க நல்லா இருக்கீங்களா?” என்றான். கூட நின்றிருந்த மங்கையின் தோளை தட்டி சிரித்தான். மங்கையின் கோபம் இருந்த இடம் தெரியாமல் ஓடியது.

“என்ன அத்தை இந்த பக்கம்?”

“இங்க ஒரு கல்யாணம்”

“முடிஞ்சிட்டுதா?”

“ஆ… வீட்டுக்கு தான் போறோம்”

“ஸ்கூலுக்கு மட்டமா?” என மங்கையை பார்த்துச் சிரித்தான்.

அவளும் சிரித்தாள்.

“வாங்க அத்தை வீட்டுக்கு” என்றான் அவன் கண்களில் குற்றவுணர்வு கொப்பளித்தது.

“இருக்கட்டும்பா…” என்று சொன்னாலும் சீனுக்குட்டியைப் பார்க்க மனது அடித்துக்கொண்டது.

“இல்ல அத்தை அதான் மங்கை ஸ்கூலுக்கு லீவு தானே. மாமா வேலைக்குப் போய்ட்டு இருப்பாங்க. நீங்க வாங்க” என்று கைப்பிடித்து இழுத்தான்.

இவள் மங்கையைப் பார்க்க மங்கை உன் இஷ்டம் என்பது போல் அந்த பக்கம் திரும்பிக்கொண்டாள். ஆனால் உள்ளூர அவளுக்கும் ஒரே குஷியாகத் தான் இருந்தது. எப்படியும் அம்மா பாசிட்டிவ்வான முடிவு தான் எடுப்பாள் என்று தெரியும். அன்பு தானே அவளது பலம் பலவீனம் எல்லாம்.

சரி என கன்னியம்மாள் தலை ஆட்டும் முன்பே சந்திரன் போனில் அவள் அம்மாளிடம் இவர்கள் வருகையை அறிவித்து விட்டான்.

ஆட்டோவை கைதட்டி அழைத்தான். ஆட்டோவில் உட்கார்ந்திருக்கும் போது இதே சந்திரனுடன் ஆட்டோவில் நந்தினியை கர்ப்பிணியாக கூட்டிப்போனது கன்னியம்மாளுக்கு ஞாபகம் வந்தது.

இன்னும் நாள் இருக்கே என்று ஊரிலுள்ள தாத்தாவின் இறப்புக்கு வசந்தாவும் அவர் கணவரும் பஸ் ஏறி சென்னையைத் தாண்டி இருக்கமாட்டார்கள். திடிரென இருட்டில் படி இறங்கி வந்தாள் நந்தினி.

“என்னம்மா இந்நேரத்தில்?” என கேட்டவரிடம் ஒண்ணுமில்லை மாமா என சிரித்தபடி கன்னியம்மாளின் கைப் பிடித்து இழுத்தாள். சமையல்கட்டுக்குள் நுழைந்தவுடன் தான் தெரிவித்தாள். அவள் பாவாடை முழுதும் நனைந்திருந்தது. அது பனிக்குட நீர் என்பது கூட அவளுக்குத் தெரியவில்லை. வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளையிடம் என்ன சொல்ல, என கொஞ்சம் நேரம் எதுவும் புரியாமல் தவித்துப் பின் கீழிறங்கி வந்திருந்தாள். கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.

ஜாஸ்திப்படறதுக்கு முன்னாடி வந்து சொன்னியே. “ஒண்ணும் பயப்படாதே” என்று சொல்லி சந்திரனை அழைத்து அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு மங்கையை அவரிடம் பார்த்துக்கொள்ளச்சொல்லி ஆட்டோவில் பயணித்தாள்.

இரவு 8.30 மணிக்கு கிளம்பியது. ஆட்டோ ஒவ்வொரு ஸ்பீடு பிரேக்கரில் ஏறும் போதும் “மெதுவாப்போப்பா” என்று நந்தினியை அணைத்துக்கொள்வாள். தன் கைச்சூட்டின் வழி தன் ஆறுதலை அவளுக்குத்தெரிவித்துக்கொண்டே இருந்தாள். புடவை, நகைகளையெல்லாம் கழற்றிக்கொடுத்துவிட்டு அவர்கள் தந்த உடையில் செல்லும் போது “அத்தை…”என்று கன்னியம்மாளின் கைப்பிடித்துக்கொண்டு விட மறுத்தாள். அவள் கண்களில் மட்டுமல்ல உடல் முழுவதும் பயத்தின் பிரவாகம். அவளை தேற்றுவதற்குள் இவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

நைட் முழுவதும் அவளும் சந்திரனும் அந்த அரசு ஆஸ்பத்திரியில் காத்துக்கிடந்தார்கள். புதுசுபுதுசாக வண்டிகளில் முனகல்களோடு வந்து இறங்கினார்கள் கர்ப்பிணிகள். நிக்க முடியாமல் அதுகள் படும் பாடு அப்பப்பா. அது வெயில் காலம் தான் என்பதால் குளிரில்லை என்றாலும் புழுக்கமும் கொசுத்தொல்லையும் படுத்தின. அதையெல்லாம் விட பிரசவிக்கும் பெண்களின் வலியின் ஒலி உடம்பெல்லாம் சிலிர்த்துகொண்டே இருந்தது. எல்லாருடைய முனகலும் நந்தினியுடையதாகவே பட்டது. அவளுக்கு இத்தகைய ஆஸ்பிட்டல் எல்லாம் பழக்கமில்லை. எல்லாம் தனது கிராமத்து வீட்டிலே தான். இங்கே இவர்கள் பேசும் பேச்சுக்கள் கால்களில் நடுக்கத்தை பரவவிட்டன. “ரொம்ப கத்தினா இப்ப மட்டும் தான் வலிக்குதா என்று கண்டபடி அசிங்கமா பேசுவாங்களாம் நர்சுங்க” என்றாள் ஒருத்தி. “வலி வரலைன்னா உருட்டுக்கட்டையாலே அடிப்பாங்களாம்” என்று எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றினாள் ஒருத்தி. “ஊரான் வீட்டுப்பிள்ளை. கடவுளே இரு ஜீவனையும் நல்லபடியா கரை சேர்த்திடு” என்று தன் குலதெய்வத்துக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டாள். மரணத்தைத்தொடும் நிகழ்வல்லவா அது. வாழ்வின் பல நிதர்சனத்தை உணர்த்தும் தருணம் அல்லவா அது. புதுசுபுதுசாக குழந்தைகள் பிறந்துகொண்டே இருந்தன. யார் பெயர் சொல்லி அழைத்தாலும் எல்லாரும் தலை தூக்கிப் பார்த்தார்கள். தூங்குபவர்கள் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தார்கள்.

கன்னியம்மாளும் சந்திரனும் தூக்கம் இல்லாமல் ஆளுக்கொரு மூலையில் அவ்வவ்போது டீ வாங்கி குடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். நந்தினி புருஷனுக்குத் தகவல் தெரிவித்தும் அவன் வரவில்லை. அவள் அப்பா அம்மாவிற்கோ இரவு தகவல் தெரிவிக்க இப்போது போல் செல்போன் வசதியெல்லாம் இல்லை.

காலை 7 மணிக்கு “நந்தினி… நந்தினி” என குரல் கொடுத்தாள் ஆயாம்மா. அசந்து வாய்பிளந்து சேரிலே தூங்கிக்கொண்டு இருந்த சந்திரனை தட்டி எழுப்பிவிட்டு முதலில் கன்னியம்மாள் ஓட சந்திரன் பின் தொடர்ந்தான்.

ஆயாம்மா காசுக்கொடுத்தால் தான் குழந்தை முகத்தைக்காட்ட முடியும் என்று குழந்தையை தன்னோடு அணைத்துக்கொள்ள சந்திரன் தன்னிடம் மீதமுள்ள சில்லறைகளை சேகரிக்க சட்டென்று 3 நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து ஆயாம்மாவிடம் கொடுத்தாள் கன்னியம்மாள். இருவரும் பார்த்த சில நொடிகளுக்குள் ஆயாம்மா குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றாள். அவள் அம்மா வரும் வரையில் நந்தினிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள் கன்னியம்மாள். வசந்தா வந்தவுடன் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வந்து படுத்தவள் தான் டைபாய்டால் ஒரு மாதம் படுத்தேவிட்டாள். கன்னியம்மாளின் அம்மா தான் உழைப்பெடுத்தாள். “ஆஸ்பத்திரியில் கிடந்திருக்கா. ஏதோ காத்து கருப்பு அண்டியிருக்கும்” என வருவோர் போவோரிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் அந்த பாட்டி.

சந்திரன் ஆட்டோவை விட்டு இறங்கி ஆட்டோவிற்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தான். இது தான் வசந்தாவின் வீடா? ஒரு காலத்தில் இருவரின் வீடுகளும் ஒன்று தான் இல்லையா, இன்று இவர்கள் இங்கு தான் வசிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவே பல நாட்கள் பிடித்திருக்கிறது. கன்னியம்மாளிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. உள்ளே நுழையும் போது இருந்த தயக்கத்தை வசந்தாவின் குரல் மாற்றியது.

“வா கன்னிம்மா”

கைகள் பிடித்துக்கொண்டாலும் பேச ஏதுமற்றது போல் வாய் செயலற்று இருந்தது. தண்ணீர் எடுத்து வர வசந்தா உள்ளே சென்றாள். பார்வை எதேச்சையாக உள்ளே அலைய அங்கே நந்தினி படுத்துத் தூங்கிகொண்டிருந்தாள். சத்தம் கேட்டு அவள் எழுந்திருக்கவில்லை. வசந்தாவும் அவளை எழுப்பவில்லை. தண்ணி கொடுத்துவிட்டு,

“என்ன மங்கை சௌக்கியமா? உங்க அப்பாரு எப்டி இருக்காங்க?”

என்று விசாரித்துக்கொண்டிருந்தாள்.

சந்திரன் கூல்டிரிங்ஸ் வாங்கி வந்திருந்தான். மங்கை மட்டும் வாங்கிகொண்டாள். மறுபடி எங்கோ கிளம்பி விட்டான்.

வசந்தா “கொஞ்ச நேரம் இரு சமையல் வேலையை முடிச்சிட்டு வந்திடுறேன்” என்றாள். நடுநடுவில் வந்து பேச்சுக்கொடுத்தபடி இருந்தாள். அவளுடைய கேள்விகளுக்கு பதிலளித்தாலும் கண்கள் படத்திலிருந்த சீனுக்குட்டியின் மீது சென்றதை தவிர்க்க முடியவில்லை. நந்தினிக்குப் பிறந்த ஆண் குழந்தை பல நேரம் இருந்ததே கன்னியம்மாளின் மடியில் தான். நந்தினியின் கணவன் நடவடிக்கை சரியில்லாததால் தாய் வீட்டோடு இருந்தாள். அது பற்றிய கவலையே இல்லாமல் அவளையும் அவள் குழந்தையையும் வசந்தாவும் கன்னியம்மாளும் பார்த்துக்கொண்டார்கள். வசந்தா வீட்டில் வசதி குறைவு என்பதால் கறி மீன் எது செய்தாலும் உடனடியாக மங்கையிடம் கொடுத்து மேல் வீட்டிற்கு அனுப்பி வைப்பாள் கன்னியம்மாள். பழம் பூ என எது வாங்கினாலும் மேல் வீட்டுக்கு ஒரு பங்கு கட்டாயம்.

எங்கே போனாலும் சீனுவை தூக்கிப்போவது, சாப்பாடு ஊட்டி விடுவது, அவனுக்கு டிரஸ் பொம்மை என்று வாங்கிகொடுப்பது என்று எந்நேரமும் தன் கூடவே வைத்திருப்பாள். சீனுவும் அம்மம்மா என்று எந்நேரமும் கன்னியம்மாளின் காலைச் சுற்றி சுற்றியே வருவான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கோழிக்கறி வாசனை வீட்டை தூக்கியது. வசந்தா எப்போதுமே இப்படித்தான் ஊர் மணக்க மணக்க சமைப்பவள். இரண்டு பேரும் சேர்ந்து சமைத்த காலங்களை நினைத்துப்பார்த்தாள். சமையலின் பல சந்தேகங்களை தீர்த்து வைத்தவள் வசந்தா தான்.

வீட்டு ஓனர், குடித்தனக்காரர் என்ற பேதமே இல்லாமல் இருவரும் பழகிக்கொள்வது பக்கத்து வீடுகளுக்கு பொறாமை தான். வசந்தாவை கன்னியம்மாள் “அக்கா… அக்கா” என்று சுற்றி வருவாள். அதற்குப் பதிலாக நந்தினியும், சந்திரனும் இவளை “அத்தை… அத்தை” என்ற படி வளைய வருவார்கள். நந்தினி வயதுக்கு வந்த போது கூடமாட எடுத்துப்போட்டு செய்தது, கல்யாணத்தில் ஓடியாடி உதவியது என எல்லாம் செய்தாள்.

“சாப்பிட வா கன்னியம்மா …”

“இல்லக்கா… கிளம்பணும்” என்றாள். சீனு பள்ளிக்கு போய் இருந்தான். அவனைப் பார்க்காமல் போவது தான் கஷ்டமாக இருந்தது.

ஆனால் வசந்தா விடவே இல்லை. கெஞ்சாத குறையாக வற்புறுத்தினாள்.

சாப்பிட உட்கார்ந்தார்கள்.

“நந்தினியை எழுப்பலை?”

“அப்புறமா எழுப்பலாம். நீங்க சாப்பிடுங்க”

“என்ன உடம்பு சரியில்லயா?”

அதெல்லாம் ஒண்ணுமில்லை. சொல்லு போதே அவள் கட்டுப்படுத்தியதையும் மீறி வசந்தாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.

“என்னாச்சுக்கா, நந்தினிக்கு என்ன மறுபடி அவங்க வீட்டுக்கார் தகராறு பண்றாரா? “

“இல்லை. அதெல்லாம் இல்லை”

“பின்ன?”

“அங்கிருந்து வந்தவாட்டி அவ புருஷன் வந்து கூட்டிக்கிட்டுப்போனான். அவன் முன்னமாதிரி இல்ல தான். ஆனா… அவன் சம்பாரிக்கிற காலணா காசு சாப்பாட்டுக்கே போதல. இதுல நல்ல வீட்டுக்கு எங்க போறது. ஏதோ ஒரு சின்ன வீட்டில் குடி வச்சான். அட்வான்ஸ் கூட நாங்க தான் கொடுத்தோம். நல்லா தான் குடித்தனம் பண்ணாங்க…” கொஞ்சம் இடைவெளி விட்டு,

“நீ சாப்பிடு வசந்தா சாப்பிடற நேரத்தில் அது எதற்கு?”

“அட சொல்லுக்கா என்கிட்ட சொல்லக்கூடாதா?”

“அது வந்து நந்தினி இரண்டாவது முழுகாம இருந்திச்சி. நேத்து கலைஞ்சிடுச்சி”. துக்கத்தை தொண்டையில் அழுத்த முயற்சி செய்தாள்-.

கன்னியம்மா ஏதும் பேசாமல் அவள் கைகளை பற்றிக்கொண்டாள். இவளுக்கும் கண் கலங்கியது.

“ஒரே தண்ணிப்பிரச்னை அந்த வீட்ல. எல்லாத்துக்கும் தண்ணி, பம்புல தான் அடிக்கணும். அதனால ரொம்ப ஸ்ட்ரெயின் ஆயிடுச்சி…

உனக்கு நாங்க செஞ்ச பாவந்தா… வேறென்ன சொல்ல…” என்று முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டாள்.

சாப்பாட்டை அரைகுறையாய் முடித்துக்கொண்டு எழுந்தாள். சாப்பாடு அவ்வளவு ருசியாய் இருந்த போதும் சரியாக சாப்பிட முடியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு நந்தினி சீனுவை அழ அழ தூக்கிப்போனது கண்முன் நிழலாடியாது.

“நீங்க நேத்து ஊருக்குப்போய் இருந்தப்ப, தவழ்ந்துகிட்டே வீட்டை சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தான். நீங்க இல்லாம தவிச்சுப்போய்ட்டான் உங்க பிள்ளை”. இப்படி வாய்க்கு வாய் உங்க பிள்ளை உங்க பிள்ளை என்று சொல்லிக்கொண்டிருந்த நந்தினிக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சீனுவை கீழே வரவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தாள். மங்கை போய் தூக்கி வந்தாலும் கூட சிறிது நேரத்திற்கெல்லாம் வந்து தூங்க வைக்கணும், சாப்பாடு ஊட்டணும் என்று எதாவது சாக்குச்சொல்லி தூக்கிக்கொண்டு போனாள். “பிள்ளை உன்கிட்டே ஓவரா ஒட்டிக்கட்டான். அது பிடிக்காமத்தான் இப்படி பண்றாங்க” என்று தன் கணவன் சொன்னதை நம்ப மறுத்தாள் கன்னியம்மாள். நாளாக நாளாக படிக்கட்டின் முனையில் தடுப்பு ஒன்று வைக்கப்பட்டது. சீனு மேலிருந்து கத்திக்கொண்டே இருக்கும். தூக்கப்போனால் டக்கென்று தூக்கி இடுப்பில் வைத்துகொள்வாள் நந்தினி. நந்தினியின் அப்பா “குழந்தையை அவங்களிடம் கொடுத்தனுப்பு” என்று சொன்னாலோ,”நீ சும்மா இருப்பா பால் குடுக்கணும்” என்பாள்.

வசந்தாவும் இதற்கு உடந்தையாய் இருந்தாள். இது புரிந்த போது கன்னியம்மாளுக்கு தாங்கவே முடியவில்லை. இரவுகளில் அமைதியாக அழுதாள். பக்கத்தில் இருந்து கொண்டே பார்க்க முடியாமல் போவது மிகுந்த வருத்தத்தைக்கொடுத்தது. அவள் வருத்தத்தைப் புரிந்துகொண்ட அவள் கணவன் ஒருநாள், வசந்தாவின் கணவரிடம் “நீங்க வீட்டைக்காலி பண்ணிக்கொடுத்திடுங்க. ரிப்பேர் ஒர்க் பண்ணணும்” என்றார். இதை கன்னியம்மாளே எதிர்பார்க்கவில்லை. “என்ன இப்படி சொல்லிட்டீங்க. ஐயோ…” என்று பதறினாள். வசந்தாவிடம் ஓடி தன் கணவன் தவறாக சொல்லிவிட்டார் என்றும் அப்படி ஒரு முடிவு எடுக்கவேண்டாம் என்றும் சொல்லிப் பார்த்தாள்.

அதற்குப்பிறகு அவர்கள் யாரும் கீழ் வீட்டில் உள்ள ஒருவருடன் பேசுவது இல்லை. ஒரு நாள் “நாளை காலி செய்யப்போகிறோம்” என்ற சொன்னார்கள். மறுநாள் விடியற்காலையில் ஏதோ சத்தம் பலமாக கேட்க, எழுந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முக்கால் வாசி சாமான்கள் அங்கு நின்றிருந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்தன. எப்படி சத்தமே இல்லாமல் எப்ப எழுந்தார்கள், எப்ப ஏற்றினார்கள் எதுவுமே புரியவில்லை. அப்போது மேலே இருந்து நந்தினியும் வசந்தாவும் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். “வர்றோம்” என்று மட்டும் சொல்லிக்கொண்டு குழந்தையின் முகத்தைக்கூட காட்டாமல் இவள் அழ அழ டாக்ஸியில் ஏறிப்போனார்கள். மங்கை எழுந்திருக்கும் போது லாரி கிளம்பிக்கொண்டிருந்தது. “தம்பி போய்ட்டானாம்மா? அவனைப் பார்கக்கூட இல்லம்மா” என்ற போது இவளுக்கு இதயம் அறுந்து விழுந்தது போல் இருந்தது.

அன்று போனவர்களை இன்று தான் பார்த்தாள்.

நந்தினி எழுந்து வந்தாள். “அத்தே…” என்ற கட்டிக்கொண்டு அழுதாள். நெடு நேரம் அழுது கொண்டே இருந்தாள். குழந்தை கலைந்து போனதை விடவும் ஒரு காலத்தில் தான் குலைத்துப்போட்ட அத்தையின் மனதையும் நினைத்துத் தான் அழுது கொண்டிருந்தாள். அவள் வலியை உணர்ந்து கொண்டது இவளது தாய்மனம். பிரசவத்தன்று கொடுத்த அதே ஆறுதலைத் தான் இப்போதும் வழங்கிக்கொண்டு இருந்தாள் கன்னியம்மாள்.

கொஞ்சம் தெளிந்து எழுந்த நந்தினி, “சீனுவைப் பார்த்துட்டு தானே போவீங்க. அவன் வந்தவுடன் பார்த்துட்டு தான் போகணும் அத்தை. குழந்தை ரொம்ப ஏங்கிப்போய்ட்டான்” என்றாள் இப்போது சீனுவிடம் எந்த அளவுக்கு பழக வேண்டும் என்று கன்னியம்மாளுக்கும், மங்கைக்கும் குழப்பமாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *