மீண்டும் மொபைல் ஒலித்தது.
மது.
நான்கு முறை அழைப்பு வந்திருந்தது.
காரணம் இல்லாமல் கூப்பிட மாட்டாள்.
மரத்தடியில் வண்டியை நிறுத்தினான்.
முதல் ரிங்லேயே எடுத்தாள்.
“எத்தன தடவ கூப்டறது?
குரலில் பதட்டமிருந்தது.
“என்ன மது?
“அப்பாக்கு தெரிஞ்சுடுச்சு ஆதி.”
“எப்படி?”
“நேத்து என்ன டிராப் பண்ணினத அண்ணா பாத்துருக்கான். அப்பாகிட்ட போட்டுக் கொடுத்துட்டான்.”
“சரி.”
“உன்னப் பத்திக் கேட்டார்.. எல்லாத்தையும் சொல்லிட்டேன்..”
“எல்லாத்தையும்னா?”
“உன் வேலைதான்.”
“என்ன சொல்றார்?”
“அண்ணாக்குப் புடிக்கலையாம்.”
“பரவால்ல.. அவர் தங்கச்சிக்குப் பிடிச்சுருக்குல்ல..”
“வெளாடாத ஆதி. சிரீயஸாப் பேசு.”
“சரி சொல்லு.. நான் இப்ப என்ன பண்ணனும்?”
“உடனே அண்ணாவ நீ பாக்கணும்.”
“அப்பா..?”
“முதல்ல அண்ணாவப் பாரு.”
“அவர் ஒத்துக்குவாரா?”
“நிச்சயமா மாட்டான்.”
“அப்றம்.”
“எதாவது சொல்லி கன்வின்ஸ் பண்ணு.”
“எப்டி பண்றது…எதாவது ஐடியாக் குடு.”
“என்னச் சுத்தி சுத்தி வந்து கன்வின்ஸ் பண்ண மாதிரி அவன் கிட்ட பேசு.”
“உன் கிட்ட போட்ட டெக்னிக் அவரு கிட்ட செல்லுமா?”
“அப்ப பொண்ணு கிட்ட போடறதுக்குன்னு ஒரு தனி டெக்னிக் வச்சிருந்தியா?”
“அம்மா தாயே.. ஆள விடு… எதாவது க்ளு கொடுத்தின்னா எனக்கு உதவியா இருக்கும்ல.. அதான் கேக்கறேன்.”
“அவன் என்ன சொல்றானோ எதுத்துப் பேசாம முதல்ல கேட்டுக்கோ.?”
“அப்றம்.”
“எல்லாத்தையும் சொல்லிட்டு அப்றமா உன்னப் பேசச் சொல்வான்… அப்ப பேசு.”
“ஏன் உங்க வீட்டு ஹிட்லர் அவர் தானா?”
“நான் உன்கிட்ட நூறு தடவ சொல்லிருக்கேன். அவன் ஒத்துக்கிட்டாத்தான் நம்ப கல்யாணம்னு..”
“சொன்னே…சரி நானே பேசிக்கறேன்.. இப்ப ஒரு பாட்டிம்மாவுக்கு லஞ்ச் எடுத்துட்டு போய்ட்டு இருக்கேன். பாவம் அவங்க பசி தாங்க மாட்டாங்க. கொடுத்துட்டு போய் அவரப் பாக்கறேன்.”
எதிர் முனையில் மது சிரித்தாள்.
“இதுதான் உன்கிட்ட பிடிச்சதே.. அதப் பாத்துதான் மயங்கிட்டேன். சரி. நீயும் சாப்பிட்டுட்டுப் போ.
“சரி.”
“எங்க சாப்பிடப் போறே?”
“வழக்கம் போலக் கையேந்தி பவன்லதான்.”
“கண்ட இடத்துல சாப்பிட்டு உடம்பக் கெடுதுக்காதே.”
” அப்ப நீ சாப்பாடு போடு.”
“அண்ணா கிட்ட ஒழுங்கா பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வை.”
“சரிப்பா.. ஸ்ட்ராங்கா எதாவது சொல்லி என்னை வழியனுப்புடா செல்லம்.”
” ஐ லவ் யூ ஆதி.”
“இது போதும் மது.”
“ஓ.கே….ஆல் த பெஸ்ட்.”
முருகன் மளிகைக்கடை.
அவ்வளவு பெரிய கடையில் கூட்டமில்லை.
கடைப்பையன் தான் இருந்தான்.
” சார்..சொல்லுங்க?”
“முருகன் சாரப் பாக்கணும்.”
பையன் தயங்கினான்.
“அண்ணா இப்பத்தான் சாப்பிட்டார்.”
“எங்கே இருக்கார்? பாக்கலாம் தானே!”
மீண்டும் தயங்கினான்.
“என்ன தம்பி?”
“சாப்ட்டுட்டு ரெண்டு நிமிஷம் தூங்குவார்.. எழுப்புனா கோச்சுக்குவார்.”
“அதெல்லாம் கோச்சுக்க மாட்டார்.. அவரு சொந்தக்காரந்தான் நான். ஆதி வந்துருக்கேன்னு சொல்லு.. அவருதான் என்ன வரச் சொன்னாரு.”
உள்ளேப் போனான்.
“உள்ற வரச் சொல்றார். போங்க.”
அறை பெரியதாக இருந்தது.
மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.
அவர் பார்வையில் சிநேகமில்லை.
கையில் இருந்த ஸ்வீட் பாக்கெட்டை நீட்டினான்.
“என்ன?”
“கொஞ்சம் ஸ்வீட்.”
“எதுக்கு?” குரலில் காட்டமிருந்தது.
“யாரப் பாக்க போனாலும் வெறுங்கையோடப் போகக் கூடாதுன்னா எங்க அம்மா சொல்வாங்க.”
“அது சரி. என்ன படிச்சிருக்கேப்பா?”
“இன்ஜினியரிங்.”
“படிச்சப் படிப்பு ஒண்ணு… பாக்குற வேல ஒண்ணு. ஊர்ல எத்தனைக் கம்பெனி இருக்கே. அதுல ஒண்ணுல கூடவா உன் படிப்புக்கு வேலக் கிடைக்கல..”
“கிடச்சுது.. சம்பளம் ரொம்பக் குறைச்சல்.”
“காசு நிறயக் கொடுத்தா எந்த வேலைன்னாலும் செய்வீயாப்பா?”
“நியாயமான வேலயா எது இருந்தாலும் செய்யலாம் தானே..?
“ஓஹோ.. அப்படியா?..சரி.. உங்க வேலயப் பத்தி நாங்க எப்படி வெளில கேக்குறவங்ககிட்ட சொல்றது.?”
“உண்மையைச் சொல்ல வேண்டியதுதான்.”
“இங்க பாருங்க தம்பி.. எனக்கு ஒளிச்சு மறச்சுல்லாம் பேசத் தெரியாது.. எனக்கு உங்க வேலப் புடிக்கல.. ஒரு நல்ல வேலத் தேடிக்குங்க.. அப்றம் பாக்கலாம்.”
“சார்.. நான் சொல்றதயும் கேளுங்க.”
“தம்பி கடைல ரொம்ப வேல இருக்கு.”
தயங்கினான்.
“போறப்ப அந்த ஸ்வீட் பாக்கெட்ட எடுத்துட்டு போய்டுங்க.. எனக்கு சுகர் இருக்கு.”
எழுந்து கொண்டார்.
கதவைத் திறந்த மது அதிர்ந்தாள்.
“டேய்.. இங்க என்ன பண்றே?”
“உன் அப்பாவப் பாக்க வந்தேன்.”
மறுத்து தலையாட்டினாள்.
“உன்ன முதல்ல அண்ணாவத்தானப் பாக்கச் சொன்னேன்.”
“பாத்துட்டேன்.. ஒத்துக்கல.. வேற வேல வாங்கிட்டு வந்து பேசுன்னுச் சொல்றார்.”
“ஏன் எனக்குப் ஃபோன் பண்ணி சொல்லலை.”
“நேரா சொல்லிக்குவோம்னு வந்துட்டேன்.”
“இங்க வந்து ?”
“உன் அப்பாகிட்டப் பேசறேன்.”
“அண்ணா ஒத்துக்கிட்டாதான் அப்பா ஒத்துக்குவார்.”
“அத அவர் சொல்லட்டும்.”
மெலிதாகச் சிரித்தாள்.
“வா.”
ஹால் பெரிதாக இருந்தது.
“உட்கார்.அப்பாவ வரச் சொல்றேன்.”
“உங்க அண்ணி.”
மது கண் சிமிட்டினாள்.
“அவங்க நம்ப சைடு.”
அப்பா தளர்ந்த நடையில் வந்தார்.
எழுந்து வணங்கினான்.
“வாங்க தம்பி.”
எதிரில் அமர்ந்தார்.
“அண்ணிய வரச் சொல் மது.”
அண்ணி மெல்லிய புன்னகையுடன் வந்தார்.
“மது உங்களப் பத்தி சொல்லிருக்கு… நீங்க சொல்லுங்க தம்பி.. “
“முருகன் சாரப் பாத்தேன். அவருக்கு என் வேல பிடிக்கலை… வேற வேலத் தேடிட்டு வான்னு சொல்லிட்டார்.”
இவன் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தார்.
“நான் நியாயமான எந்த வேலையையும் இழிவாப் பாக்கறதில்ல..நான் கிராமத்து பையன் ஐயா.. என் வீட்டில் இன்ஜினியரிங் படித்த முதல் ஆள் நாந்தான்..அம்மா கடன் வாங்கி தான் படிக்க வச்சாங்க.”
தலையசைத்தார்.
“கஷ்டப் பட்டு தான் படிச்சேன்.ஆனா சரியான வேல கிடைக்கல.அம்மாவுக்கு எதாவது செய்யணும்ல.. இந்த வேலைல நல்ல சம்பளம் கொடுக்கறாங்க.. கைல காசு இருந்தாலும் பசிக்கறப்ப சமச்சுக் கொடுக்க ஆளில்லாம இப்ப நெறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கற வேலைதான். ரொம்ப திருப்தியா இருக்கு ஐயா.”
“மனுஷனுக்கு திருப்திதானப்பா முக்கியம்… இது நிலையான வேலையா.. நிலையான வருமானமா..? அதுவும் முக்கியம் தானப்பா..?”
“நிச்சயமில்ல தான்.. ஆனா என் அம்மாவையும், உங்கப் பொண்ணையும் நல்லாப் பாத்துக்குவேன் சார்.”
“ஆனா முருகன் பயப்படறானே..!”
“மது உங்களப் பத்தி நிறைய சொல்லிருக்காங்க.. அம்பது வருஷத்துக்கு முந்தி தொலைதூர கிராமத்திலேர்ந்து இங்க வந்து ஒரு மளிகைக் கடைல பொட்டலம் கட்டி இப்ப எவ்ளோ பெரிய கடை ஓனரா வளந்திருக்கீங்க? உங்க உழைப்பத் தானே ஐயா முருகன் சார் அனுபவிச்சிட்டு இருக்கார். நான் சின்ன பிள்ளையா இருக்கும் போதே என் ஐயா இறந்துட்டார். என்னையும், என் அம்மாவையும் கைத் துக்கிவிட யாருமில்லை.. அநாதை மாதிரி இருந்தோம் “
சொல்லும் போதே அவன் உடைந்து போனான்.
பெரியவர் எழுந்து அவன் அருகில் அமர்ந்தார்.
அவன் முதுகைத் தட்டினார்.
அவன் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.
“என் மாமனாரை நான் என் அப்பாவாத்தான் நெனச்சேன்… நீயும் என்ன உன் ஐயான்னு நெனச்சுக்கேயேன்… என்ன அப்பான்னு கூப்பிட்டா நான் வேண்டான்னா சொல்லப் போறேன்.”
மதுவுக்கு தான் முதலில் புரிந்தது.
சின்னக் குமுறலுடன் தாவி வந்து அப்பாவின் மடியில் முகம் புதைத்தாள்.
அருமை
கஷ்டப்பட்டவங்களுக்குதான் கஷ்டம் தெரியும். நெகிழைவைக்கும் சிறுகதை .