கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 116,564 
 
 

ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர. அகால மரணமும் துர் மரணமும் உண்டாகாதிருக்க என்று நூறு பலன்கள் போட்டிருந்தாலும் பிள்ளைக்கு வேலை கிடைக்கத் தோதாக எந்தப் பாட்டும் இல்லை.

“அபிராமி பட்டர் காலத்தில் வேலை கிடைப்பது அத்தனை கஷ்டமில்லை போலும்” என்று எண்ணினார். அதேசமயம் இவ்வாறு எண்ணுவதே பாவம். தப்பு என்று பட்டு “சந்தேகத்துக்குக் கொள்ளேன் மனத்தில் நின்கோல மல்லாது” என்று தொடர்ந்து சொல்- விட்டு. பூஜை அறையிறீருந்து வெளியே வந்தபோது மேஜை மேல் மந்தார இலையில் இட்றீ சட்டினி பொட்டலம் காத்திருந்தது.

மகாலட்சுமி அடுத்த வீட்டில் ஸ்டார் டி.வி பார்க்கச் சென்றிருக்க. பாலாஜி அப்போதுதான் எழுந்து பல் துலக்கிக் கொண்டிருந்தான். பொறுப்பில்லாமல் இருக்கிறானே என்று ஆத்திரம் வந்தாலும் காதல். கீதல் என்று எதுவும் ஆரம்பிக்காமல் ஒழுங்காக லைப்ரரி போய் பார்ட்டைம் செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறானே. அதுவே பாக்யம் என்று மனத்தில் நிம்மதி இருந்தது. இவனுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும். அதற்கு அபிராமி அந்தாதியில் நல்ல பாட்டு இருக்கிறது.

‘திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க’ – ஆனால் மகன் பாலாஜி என்னும் விசுவநாதனுக்கு வேலை கிடைப்பது இரண்டு வருஷம் இழுத்தடித்துக் கொண்டு போய்விட்டது. போன வருஷம் பல நிறுவனங்களுக்கு மனுப் போட்டு. அனுமதிப் பரிட்சை எழுதினான். எதிலும் கிடைக்கவில்லை. சிரத்தையுடன் படிக்கவில்லை என்றுதான் தோன்றியது. அதைக் கேட்கவும் தயக்கமாக இருந்தது. கோபக்காரன். சண்டை போட்டுக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிப்போய் விட்டானானால்? ஒரே பையன்.

“இந்த வருஷம் எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சுடேன் பாலாஜி” என்றார். அவன் ‘எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்’ விரக்தியுடன் பார்த்துக்கொண்டு என்னப்பா இத்தனை வருஷம் படிச்சு பாஸ் பண்ணி மறுபடியும் வேலைக்குப் பரிட்சைன்னா போர் அடிச்சுப் போச்சுப்பா.” என்றான். லட்சுமி ஹாங்காங் பணக்காரர்கள் இல்லங்களைத் துறந்துவிட்டு அப்போதுதான் உள்ளே வந்தாள்.

“பின்ன என்னதான் செய்யறதா உத்தேசம்?”

“நான் உங்களுக்கு பாரமா இருக்கேன்?”

“இல்லை; இருந்தாலும் படிப்பு முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சேன்னு”

“வேலை. கல்யாணம் பிள்ளை பெத்துக்கறது. அப்பா இதானா வாழ்க்கையில் குறிக்கோள்.”

“வேற எதாவது இருந்தா சொல்லு”

“சாமியாராப் போகணும்ங்றாயா” என்றாள் மகாலட்சுமி.

“சொல்றேன்” என்றான் விரோதமாக.

“நீ சும்மாரு” என்று மனைவியை அதட்டிவிட்டு “பாரத் பரீட்சை எழுதப் போற இல்லை.”

“இந்த வருஷம் அவனை பாரத் கம்பெனிக்கு பரீட்சை எழுதச் சொல்வதற்கே பெரிய போராட்டமாகிவிட்டது.”

“எனக்கு அந்தப் பரீட்சை எல்லாம் பாஸ் பண்ண தெம்பில்லைப்பா ரொம்ப டஃப்பா இருக்கு. போன வருஷம் எழுதினேனே ஒரே மாதிரி நாலு ஆன்ஸர் கொடுத்திருக்கான்; அதில் எல்லாமே சரி போல இருக்கு. ரொம்ப கஷ்டமான பரீட்சை. பேப்பர் செட் பண்றவன் எல்லாம் இதுக்கு முந்தி எமலோகத்தில் சித்திரவதை டிப்பார்ட்மெண்ட்டில் இருந்தவன் போல.”

“இன்னும் ஒரு முறை எழுதிப் பாரேன் கொஞ்சம் சிரத்தையா படிச்சு”.

“ஏதோ நீங்க சொல்றீங்கன்னு எழுதறேன்” என்றான்.

“கிடைச்சா நல்ல வேலைதானே?”

“நல்ல வேலைதான் இந்தியாவிலேயே சிறந்தது. ஆனா பத்தாயிரம் பேர்னா எழுதறாங்க”

“அதைப்பத்தி உனக்கு என்ன?”

“எனக்கு எங்க கிடைக்கப் போறது.”

“கொஞ்சம் படிச்சுப் பாரேன்; கொஞ்சம் எக்ஸ்பெர்ட்? ”

“ரமேஷ் எழுதி பாஸ் பண்ணலை?”

ரமேஷ் மகாலட்சுமியின் தம்பி பையன்.

“அம்மா! எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ரமேஷ் வேற நான் வேறன்னு”

“நீ உள்ளபோறயா இல்லையா?” என்று அவளை ஆள்காட்டி விரலால் திசை காட்டினார்.

“ஆமா எல்லாரும் சேர்ந்து என்னை அதட்டுங்கோ”

“ட்ரை பண்றேன்பா. எனக்காக நீங்க ரெண்டு பேரும் சண்டை போட வேண்டாம்” என்றான்.

அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எட்டு செஸமஸ்டர். ஏறக்குறைய எண்பது பேப்பர் எழுதிக் களைத்து அலுத்து மறுபடி பரீட்சை என்றால் எத்தனை அலுப்பாக இருக்கும்! எத்தனை போட்டி! ஒரு வேலைக்கு எத்தனை விண்ணப்பங்கள்!

“இந்த உலகத்தின் மேல வெறுப்பில்லாம நான் நடமாடிண்டிருப்பதே ஆச்சரியம் என்று பனியனை
மாட்டிக்கொண்டு புறப்பட்டான்!

“எங்க போறான் ! தெருக்கோடில சிகரெட் பிடிக்க!”

***

பிசில் அவரைத் தேடிக்கொண்டு விஷ்ணுமூர்த்தி என்பவர் வந்திருந்தார். ராமதுரையின் மேசை மேல் ஆப்பிள் பழங்களையும். பென்சில் செட்டையும் வைத்தபோதே உஷாரானார். என்ன விஷயம் இதெல்லாம் எதுக்கு? விஷ்ணுமூர்த்தி என்பவர் அறிமுகமாவதற்கு முன்னாலேயே சிரித்தவர். அந்தக் கூழைச்சிரிப்பை ரத்து செய்யாமல் விவரம் சொன்னார். அவர் மேலதிகாரிக்கு கோரமங்களாவில் ஒரு “சைட்” அலாட் ஆகியிருந்தது. “அது இன்னும் லெட்டரா வரல்லை; விசாரித்ததில் எதோ பேமெண்ட் டீபால்ட் இருந்ததால் அலாட்மெண்ட் கான்ஸல் ஆகி கமிஷனருக்கு மனுப்போட்டிருக்கு” அந்த மனு ராமதுரையின் டேபிளுக்கு வந்திருப்பதாகவும் சொன்னார்.

“ஆமா நான் என்ன செய்யணும்” என்றார்

“நீங்கள் நினைத்தால் அலாட்மெண்ட் கொடுக்க சிபாரிசு செய்யலாம்” என்றார்;

“வேணுமென்றால் கவனித்துக் கொள்ளலாம்” என்றார் அறையில் சுற்றும் முற்றும் பார்த்து.
ராமதுரை அவரை நேராக நோக்கி லஞ்சமா என்றார்.

”அப்படின்னு இல்லை. ஒரு கன்ஸிடரேஷன் ”

“எழுந்து போய்யா. நான் இந்த டிபார்ட்மெண்ட்டில இருபத்தைந்து வருஷம் உழைத்திருக்கிறேன்; வீட்டுக்கு ஒரு குண்டூசி கூட எடுத்துச் செல்லமாட்டேன் தெரியுமா?”

“சொன்னாங்க”

“பின்ன என்ன தைரியத்தில் எங்கிட்ட லஞ்சம் கொடுக்க வருகிறீர்? இப்ப போலீஸுக்குப் போன் பண்ணினால் உம்மை அரஸ்ட் பண்ணுவார்கள் தெரியுமா?” என்றார்.

“மெள்ள… மெள்ளப் பேசுங்க; இப்ப நான் என்ன சொல்லிவிட்டேன்?”

“என்னை லஞ்சம் வாங்குபவன் என்று எப்படித் தீர்மானித்தீர்?”

அந்த ஆசாமி ராமதுரையை நேராகப் பார்த்து, “மிஸ்டர் ராமதுரை என்னை நீங்க தப்பா நினைக்கக்கூடாது. நா லஞ்சம் கொடுக்க வரவில்லை. ஒருவிதமான பரஸ்பர உதவிக்காக வந்தேன்.

என் மேலதிகாரி ‘பாரத்’ல பெரிய ஆபீசர் “பாரத்” என்றார்.

“உங்க பையன் இன்ஜினியர் வேலைக்கு அனுமதி பரீட்சை எழுதுகிறானே அதே பாரத் கம்பெனியில்”

”ஸோ”

விஷ்ணுமூர்த்தி மறுபடி இடம் வலமாக ரேடார் போலத் தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு.

“நீங்க இந்த அலாட்மெண்ட் போட்டுக் கொடுத்தால். பரீட்சை பேப்பரைக் கொண்டு வந்துகொடுக்கிறேன்”

ராமதுரையின் கை நடுங்குவதை அவர் கவனித்து “பரிட்சை முடிந்து அலாட்மெண்ட் கொடுத்தால் போதும்”

ராமதுரை; “முடியாது நத்திங் டுயிங்” என்று சொன்னாலும் அதை அத்தனை கடுமையாகச் சொல்லவில்லை.

“பாருங்க ஸார் உங்களால முடிஞ்சா சரி; இல்லை இன்னம் மேல போகணும்னாலும் போகலாம்”

“அதெல்லாம் எதுவும் பிராமிஸ் பண்ண முடியாது முதல்ல கேஸ் ஷீட்டைப் பார்க்கணும்”

“நல்லா பாருங்க. ராமதுரை மை ஆபீசர் இஸ் ஓப்பன். ஒரே ஒரு பேப்பர்தான் வெளிய வரும். வேற யாருக்கும் கிடைக்காது எஸ்-எ-ஸ்பெஷல் கேஸ்” ராமதுரை பென்சிலால் பலவாறு மேசை
மேல் சுழித்துக் கொண்டிருக்க.

“திங்கள்கிழமைக்குள்ள யோசிச்சு வையுங்கோ; ஸண்டே வீட்டிலதான் இருப்பேன்; போன் பண்ணலாம் என்று விஸிட்டிங் கார்டைக் கொடுத்தார். “பரீட்சை பத்தாம் தேதி ஒரு நாலு நாளாவது டயம் வேணுமில்லையா? என்று சொல்லிக்கொண்டு செல்கையில் கூட இது லஞ்சம் இல்லை” என்று சொல்லிவிட்டுத்தான் போனார். ராமதுரை அவர் போனதும் இருப்புக் கொள்ளாமல் யோசித்தார். அந்த பைலைப் பார்த்தார். கொஞ்சம் சிக்கலான கேஸ்தான் பேமெண்ட் டிöபால்ட் ஆகியிருக்கிறது. டிபால்ட் இல்லை என்று இவர் சர்ட்டிபிகேட் கொடுத்தால் காரியம் ஆகும். லெட்டர் கொடுக்க முடியும்.

முதல் தவணைகளையெல்லாம் கட்டியிருக்கிறார். நடுவில் மூன்று தடைப்பட்டு அலாட்மெண்ட் கான்ஸல் ஆகி; ஆக்ஷனுக்குப் போயிருக்கிறது. இன்னும் ‘ஆக்ஷன்’ ஆகவில்லை; வெளிநாடு போயிருந்தேன் என்று சாக்கு சொல்லி பழைய கேஸ் ஒன்றில் விதிவிலக்கு. போன வருஷம் கொடுத்தது. ஞாபகம் வந்தது, இருந்தும்…

என்ன நான் பணம் வாங்குகிறேனா. லஞ்சம் வாங்கவில்லை.

ஒரு “பிரிஸிடெண்ட்” படித்தான் அலாட் பண்ணப் போகிறேன் என்றெல்லாம் பலவிதத்தில் சமாதானம் செய்து கொண்டாலும். ஆதாரமாக இது தப்பு என்பது உறுத்தியது. எந்தவிதத்தில் தப்பு!

இன்றைய தேதிக்கு அந்த சைட்டின் மதிப்பு மிக அதிகம். ஆக்ஷனில் போனால் எட்டு லட்சம் வரும்.

இந்த இலாக்காவுக்கு இருபத்தைந்து வருஷம் உழைத்ததுக்கு ஒரு சின்ன சலுகை எடுத்துக் கொள்வது போலத்தான் இது. எத்தனை பேர் கொள்ளையடிக்கிறார்கள்; அவரவர் ஆயிரம்கோடி. இரண்டாயிரம் கோடி என்கிறார்கள். ஸ்டாக் ஊழல் பாங்கு மேலதிகாரிளைப் பார்! அப்படியெல்லாமா இது? ஏதோ ஒரு சின்ன விதிவிலக்கு பண்ணி; ஒரு அலாட்மெண்ட் வட்டியோடு கட்டிவிடச் சொல்லி வீட்டுமனையைக் கொடுக்கப் போகிறேன். அதற்கு பிரதியுபகாரமாக அவன் ஒரு கேள்வித்தாளை தரப்போகிறான்!

பத்தாயிரம்தான் பேமெண்ட். ஆனால் இன்றைக்கு அந்த சைட்கோரமங்களாவில் எட்டு லட்சம் போகும் என்பதைப்பற்றி அவர் நினைக்க மறுத்தார்.

***

வீட்டுக்கு வந்தபோது லட்சுமியிடம் சொன்னார்.

“பேசாம செஞ்சுடுங்கோ. என்ன பணமா காசா? இவனுக்கும் ஸ்திரமா வேலை கிடைச்சுடும். கிடைச்சா கல்யாணத்துக்கு பொண் கொடுக்க காத்துண்டிருக்கா. நம்ம கஷ்டம் கவலையெல்லாம் தீர்ந்து போய்டும் இவனும் என்னைத் தொந்தரவு பண்றதை நிறுத்துவான்.”

“தொந்தரவு பண்றானா?”

“எதைக் கேட்டாலும் எதுத்துப் பேசறான். உங்க பிள்ளை இன்னிக்கு என்னை அடிக்கவே வந்துட்டான்!”

“எங்கே அவன்?”

“லைப்ரரிக்குப் போயிருக்கான் உங்க மேல இருக்கிற ஆத்திரத்தை என்கிட்டக் காட்டறான்.”

“நான் என்ன செஞ்சேனாம்.”

“சரியா வேலை வாங்கிக் கொடுக்கலைன்னு அவனுக்குக் குறையோ. என்னவோ.”

“எதும் செய்ய வேண்டாம்.இவனுக்கு அந்த பேப்பரோ என்னவோ சொன்னீங்களே. அதை வாங்கி பாஸ் பண்ண வெச்சுருங்கோ. நம்ம பொறுப்பு முடிஞ்சுது. அப்புறம் கல்யாணம் பண்ணினா பண்ணிக்கிறான்; இல்லன்னா எக்கேடோ கெட்டுப் போகட்டும். வாங்கிக் கொடுத்துருங்கோ. வீட்டில இருந்தா எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும். தினப்படிக்கு இருபது ரூபாயைக் கொண்டாங்கறான். எதுக்கடான்னு கேட்டா. “நீ யார் கேக்கிறது. அப்பா சம்பாதிக்கிறார்ங்கறான். முரடன். எனக்கு இந்த வீட்ல என்ன உரிமை இருக்கு?”

“புலம்பாதே முதல்ல. பையனைப் பத்தி புகாரை முடிச்சாச்சா இல்லையா”

“உங்களுக்கு விளையாட்டா இருக்கு. நான்தான் வீட்டில இருபத்து நாலு மணி நேரமும் கஷ்டப்படறவ. என்ன எதுத்துப் பேசறான் தெரியுமா?”

அவனைப்பற்றி கேட்கக் கேட்க அவன் மேல் இல்லை. இதைத் தட்டிக் கேட்க முடியாத அல்லது விரும்பாத தன் கையாலாகாத் தனத்தின்மேல் ஆத்திரம் வந்தது.

“சரி. சரி சாயங்காலம் வந்ததும் கேட்டுர்றேன்” என்றார்.

“கேக்கமாட்டிங்க. அதுக்கெல்லாம் தைரியம் எங்க இருக்கு? பேசாம அந்த பேப்பரோ என்ன எழவோ அதை வாங்கிக் கொடுத்துருங்கோ”

***

ராத்திரி பாலாஜி வந்தபோது அவனிடம் காட்டமாகச் சிகரெட் வாசனை அடித்தது. கேட்க விருப்பமில்லை; சிகரெட்தானே ட்ரக் பழக்கம் இல்லையே என்று எண்ணிக் கொண்டார். இருந்தும் அவன் மேல் கோபம் வந்தது. என்ன ஒரு பொறுப்பில்லாதவன். பையில் மெறீதாகத் தெரிந்த வில்ஸ் பாக்கெட் அவரைச் சீண்டியது “என்ன பாலாஜி பரீட்சைக்கு எப்படிப் படிக்கிறே.”

“இனிமேத்தா ஆரம்பிக்கணும். இந்த வருஷம் பாட்டர்னை மாத்திருக்காளாம் எனக்கு என்னவோ சான்úஸ இல்லப்பா”

“எனக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் பாரத்ல வேலை பார்க்கறார். அவர் சில குறிப்புக்கள் மாதிரி கொடுக்கறேன்னிருக்கார்.”

“அப்படியா” என்றான் “பரவால்லையே அவர் அட்ரஸ் கொடுங்கப்பா நான் போய் பார்த்துட்டுவரேன்”

“அவரே என்னைப் பாக்க வருவார்”

“ஏதாவது ஹிண்ட் கிடைச்சு அதிர்ஷ்டம் அடிச்சு பாஸ் பண்ணாத்தான் சரி. ரொம்ப கஷ்டமான பரீட்சை” என்றான்.

“இந்த தடவை பாஸ் பண்ணிடுவே பாலாஜி”

“ஏன் அபிராமி அந்தாதி ரெண்டு வேளை சொல்ல ஆரம்பிச்சிருக்கிங்களே அதனாலயா?”

“அம்மா கூட என்ன சண்டை? எதுத்துப் பேசினியாமே”

“அம்மா நான் சொல்றதையெல்லாம் உங்ககிட்ட சொல்றா; அவ எங்கிட்ட கேக்கற கேள்விகளை எல்லாம் சொல்றாளோ? சொல்லமாட்டாப்பா. அம்மா சிலவேளை என்னை எப்படியெல்லாம் திட்டறா தெரியுமா? தெண்ட சோறுங்கற போதெல்லாம் என்ன ஆத்திரம் வரும் தெரியுமா?”

“இருந்தாலும் உன் அம்மதானேடா அவ”

“அதைச் சொல்லுங்கோ ஞாபகப்படுத்துங்கோ இவனுக்கு சின்ன வயசில மாந்தம் வந்து எத்தனை கஷ்டப்பட்டிருக்கேன்னு சொல்லுங்கோ!” என்றாள் உள்ளே நுழைந்ததுமே.

“எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு இல்லையா. ஒவ்வொரு முறையும் பணம் கொடுக்கறப்பப் பிச்சைக்காரன் மாதிரி பீல் பண்ண வெக்கிறா. எப்பப் பார்த்தாலும் ரமேஷோட கம்பாரிஸன்”

“இனிமே அவனுக்குப் பணம் கொடுக்கற காரியத்தை எங்கிட்ட ஒப்படைக்க வேண்டாம் சொல்லிட்டேன். ”

“ஷட் அப்” என்றான்.

“பாத்திங்களா கேட்டுண்டே இருக்கிங்களே ”

“என்ன பண்ணச் சொல்றே? வளந்த பையனை அடிக்க முடியுமா?”

“அது ஒண்ணுதான் பாக்கி.”

ராமதுரைக்கு வந்த கோபத்தில் இவனை ஏன் பெற்றோம் என்று தோன்றியது. ஒரே சவட்டு சவட்டலாம் என்கிற ஆத்திரம் விஷ்ணுமூர்த்தி வந்ததால் அடங்கிவிட்டது.

பாலாஜி தன் அறைக்குப் போய்விட்டான்.

***

ன்ன ஸார் பாத்திங்களா? நமஸ்காரம் அம்மா” என்று கூடை ஆப்பிளை மேஜை மேல் வைத்தார்.

“கேஸ் ஷீட்டைப் பார்த்தேன்; ஒரு வருஷம் வெளிநாடு போயிருந்ததால பணம் கட்ட முடியலைன்னு மனுவை மாத்திக் கொடுத்துருங்கோ. அலாட்மெண்ட்டை ரெஸ்டோர்
பண்ணிர்றேன்.”

இதைக் கேட்டதும் அவர் முகம் பல்பு போட்டாற் போல் பிராகசமாகியது.

“பிரில்லியண்ட்; வெரிகுட் அப்ப காரியம் முடிஞ்சாப்பலதான்.”

“ஆமாம் அப்பறம் அந்த..” .

“பரீட்சைதானே? நான் சொன்ன வார்த்தையைக் காப்பாத்துவேன்” அவர் தன் கைப்பையைத் துழாவி காகித உறையை எடுத்தார்.

“இதைப் பையனிட்டக் கொடுத்துவிட்டு இதுமாதிரி வரும்னு சொல்லிடுங்கோ”

“வேற எதுவும் சொல்ல வேண்டாம்”

“அதெல்லாம் ப்ராப்ளம் இல்லை”

“அப்போது பாலாஜி உள்ளே வந்தான். “பாலாஜி நான் சொல்லலை பாரத்ல நம் ப்ரெண்டுன்னு இவர்தான்.”

“நமஸ்காரம் ஸார். உங்க கம்பெனி பரீட்சை ரொம்ப டஃபா இருக்கு”

இவர்தான் பரீட்சை பத்தி ஹிண்ட் கொடுக்கறார்.

பாலாஜி அந்தக் கவரைப் பார்த்தான்.

“இதில் இருக்கிற மாதரி வரும் கேள்விகள் எல்லாம். இது மாடல் பேப்பர் மாதிரி…”

“அப்படியா ரொம்ப தாங்ஸ் ஸார் இந்த முறையாவது ஆனஸ்டா முயற்சி பண்ணிப் பார்க்கலாம்” என்று அவன் அதை வாங்கிக் கொண்டான்.

“நான் வரட்டுமா? வியாழக்கிழமை வந்தா அலாட்மெண்ட் லெட்டர் ரெடியாய்டுமா?”

“மத்யானம் வாங்கோ. அப்பதான் சேர்மன் ஆபிஸ்ல இருப்பார்; கையெழுத்து வாங்க முடியும்.”

“காரியம் ஆய்டுமோல்றீயோ?”

“ஆய்டும்”

“உங்களுக்கும் ஆய்டும் ஆனப்பறம்தானே லெட்டரே கொடுக்கப் போறேன்”

***

பாலாஜிக்கு அந்தப் பரீட்சை புதன்கிழமை இருந்தது. விஷ்ணுமூர்த்தி கொடுத்த கேள்விகளுடன் மற்ற பல பகுதிகளையும் படிப்பதாகச் சொன்னான். அதைப்பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை. விஷ்ணுமூர்த்தியின் கேள்விகள் பதிலுடன் இருந்ததாகச் சொன்னான்.

“அதை முழுக்க பாத்துட்டல்ல”

“பாத்துட்டேன்ப்பா இது மாதிரி வந்தா எழுத முடியும்னு தோன்றது:பார்க்கலாம்” என்றான். ராமதுரைக்கு உள்ளுக்குள் உவகையாக இருந்தது பையன் பாஸ் பண்ணிவிடுவான்… வேலை
கிடைத்துவிடும்; ஹிந்துவில் மேட்ரிமோனியலில் போடலாம்”.

Non Baradwaja match for handsome boy Age27. Employed in Premier Public.

***

புதன்கிழமை ஆபீஸ் போயிருந்ததால் சாயங்காலம் வரை விசாரிக்க முடியவில்லை. திரும்பி வந்ததும் “பாலாஜி வந்தானா?” என்றார்.

“வந்தாச்சு; மாடில படுத்துண்டிருக்கான்”

“பரீட்சை எப்படி எழுதினானாம்”

“அவனையே கேளுங்கோ; பரீட்சை எழுதப் போய்ட்டு சீக்கிரமே வந்துட்டான். எப்டிரா எழுதினேன்னு கேட்டதுக்கு உன் வேலையைப் பாத்துண்டு போன்னான்”

முதலிலேயே விடைகள் தெரிந்ததால் சீக்கிரம் எழுதி முடித்து விட்டு வந்து விட்டான். பைத்தியமே என்று மனசில சொல்லிக் கொண்டார்.

***

பாலாஜி ஆறு மணிக்கு மத்யானத் தூக்கத்தால் உப்பின கன்னங்களுடன் வந்தான்.

“என்ன பாலாஜி எப்படி இருந்தது பேப்பர்?”

அவர் எதிரே உட்கார்ந்தான்.

“அப்பா ரொம்ப பெரிய சர்ப்ரைஸ். அந்த பேப்பர் மாடல் பேப்பர் இல்லை. அதே பேப்பர்; அன்னிக்கு அந்த ஆளு கொண்டு கொடுத்த அதே பேப்பர். ஒரு கேள்விகூட தவறாம நூறு கேள்வியும் அதே வந்தது.”

“அப்படியா தட்ஸ் லக்கி! எழுதிட்டயோல்றீயோ? அதான் சீக்கிரமே எழுதிட்டு வந்துட்டியா?”

“இல்லை எழுதாம வந்துட்டேன்”

அதிர்ந்து போய் “என்னது” என்றார்.

“ஆமாம் வெறும் தாளைக் கொடுத்துட்டு எழுந்து வந்துட்டேன்”

“என்னடா சொல்றே பைத்தியக்காரா! ஏண்டா”

“எனக்கென்னவோ இது நியாயமில்லைன்னு பட்டுது; பத்தாயிரம் பேர் எழுதறாங்க. ஒழுங்கா நேர்வழியில் மாஞ்சு மாஞ்சு எழுதறாங்க. நான் மட்டும் திருடப்பட்ட, லீக் ஆன பேப்பரை வெச்சு எழுதறது. இட்ஸ் நாட் பேர். அப்பா நீங்க அன்னிக்குப் பேசிண்டிருந்ததை கவனிச்சப்ப அந்தாளுக்கு ஏதோ காரியம் செய்ததுக்கு லஞ்சம் மாதிரித்தான் இந்த பேப்பரோன்னு தோணித்து; எனக்குப் பிடிக்கலைப்பா!”

“என்னடா பிடிக்கலை”

“அப்பா நீங்க எவ்வளவு சுத்தமானவர்னு தெரியும். எனக்காக நீங்க உங்களைக் கறைப்படுத்திக்கறதை நான் விரும்பலை. அப்புறம் இந்த மாதிரி பரீட்சையெல்லாம் சொந்த முயற்சியில்தான் பாஸ் பண்ண விரும்பறேன். உங்களைச் சார்ந்து இருந்தது போதும் எனக்கு!”

மகாலட்சுமி இடிந்துபோய்க் கன்னத்தில் கைவைத்துத் தரையில் உட்கார்ந்துவிட்டாள். “இந்த மாதிரி ஒரு பைத்தியத்தைப் பெத்து வெச்சிருக்கோமே; அவனை அடிங்களேன் முதுகில. ஆத்திரம் தீர ஒரு சாத்து சாத்துங்களேன்” என்றாள்.

ராமதுரை கிட்டே போய் அவனை அணைத்துக் கொண்டார்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “அனுமதி

  1. வாவ் சுஜாதா சுஜாதாதான். குழந்தைகளுக்கு values சொல்லி வருவது இல்லை பெர்ற்றவர்களை பார்த்து வருவது என்ற கருத்தை சார்ந்து எழுதப்பட்டுள்ளது. மகன் முரடனை போன்று தோன்றினாலும் மனதில் தகப்பன் போன்றவன் என்ன கூரியது ஆருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *