அந்நியர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 7,555 
 
 

லண்டன் 1995.

சந்திரசேகரம் தனது வீட்டுக் கதவை இழுத்துப் பூட்டினான். வழக்கமாக அவனை வாசல் வரை வழியனுப்பவரும் அவன் மனைவியோ,’பை பை ப்பா’ என்று கைகாட்டி விடைகொடுக்கும் சின்ன மகன் மோகனோ இன்று மௌனமாகவிருந்தார்கள்

அவன் தெருவில் இறங்கினான்.நவம்பர்மாதக் குளிர் காற்று காதில் உறைத்தது.காற்று பயங்கரமாகவிருந்தது. இலையுதிர்காலத் தாண்டவத்தில் மரத்திலிருந்த உதிர்ந்த இலைகள் தெருவை நிறைத்திருந்தது.பழுத்த இலைகள் பாதையில் பாய்விரித்துக்கிடக்க.இரவு பெய்தமழை அவற்றில் படிந்ததால்,இவன் கால் வைக்கும்போது சதக் சதக் என்ற சப்தத்தையுண்டாக்கியது.

அவன் மனமும் இப்படித்தானிருக்கிறது.ஆத்திரம் படிந்த மனதில் எரிச்சல் இரத்தம் கொட்டுகிறது.

அதற்கு யாரை நொந்து கொள்வது?

இப்போது,நவம்பர் மாதக்குளிர் உடம்பில் உறைக்க உறைக்க, காலையில் அவனுள் காலையில் அனலாகச் சீறப்பாய்ந்த ஆத்திரம் குறையத் தொடங்கியதும் அவனிடம் அடிவாங்கிய மனைவியிலும் மகனிலும் பரிதாபம் வருகிறது.

‘எனது அன்பான மனைவி தேவகியை அடித்திருக்கக்கூடாது,மகன் குமரனைக் கட்டாயம் அடித்திருக்கக்கூடாது. ஆத்திரத்தில் அடித்துவிடN;டன்’;.அவன் தனக்குள் வெட்கப்படுகிறான்.

வேலைக்குப் போகாமல்,வீட்டுக்குப்போய் அவர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும்போலிருக்கிறது.தெருவில்,இவனைக் கடந்து சென்ற கார்;,பாதையில் தேங்கிநின்ற நீரை இவனுக்கு அடித்துவிட்டுப்போகிறது.’கவனமாக நடக்கவேணும்’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தெருவின் ஓரத்தில் நடக்கிறான்.

காலை ஏழமணியாகிவிட்டது. லண்டன் இன்னும் இருளில் மூழ்கிக்கிடக்கிறது.

‘லண்டன் மட்டுமா இருளில் மூழ்கியிருக்கிறது?என்னைப்போல் எத்தனையோ மனிதர்களின் மனங்கள் எத்தனை துயர்களில் மூழ்கிக்கிடக்கின்றன?.

வாய்விடடுச் சொல்லிக் கொள்கிறான்.

தேவகி கடந்த இரண்டு மாதங்களாக, அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகவிருக்கிறாள். மூன்று தமயன்கள்,இரண்டு தம்பிகள்,ஒரு தமக்கை,இரண்டு தங்கைகள் என்ற பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள் தேவகி..

தேவகியின் தாய் தகப்பன் தங்களின் சிறு நிலத்தில் பயிர் செய்தும், தங்களின் சின்னக் கடையொன்றில் வியாபாரம் செய்தும் தங்கள் குழந்தைகளை வளர்க்க ஒடாய் உழைத்தவர்கள்.

இன்றைக்கு நடக்கும் அரசியல், சமுகப் பேரழிவால் அவர்களின் நிலை?

சந்திரசேகரம் அண்டக்கிரவுண்டை அடைந்து விட்டான். பிக்கடில்லி லைன் ட்ரெயின் எடுத்து லண்டன் மத்தியிலுள்ள கடைக்கு வேலைக்குப் போகவேண்டும். லண்டனில் பணத்தாசை பிடித்த,’மனிதம்’இழந்த மனிதர்களுடன் வேலை செய்யாமல்,ஊருக்குத் திரும்பிப்போய் மாமனாரின் தோட்டத்தில் வேலைசெய்து பிழைத்தாலும் பரவாயில்லை என்று அவன் மனம் யோசிக்கிறது.

ஊருக்குத் திரும்பிப் போய்த் தோட்டத்தில், ஆறுதலாகப்படுத்துக்கொண்டு,ஒரு தமிழ்ப்; பத்திரிகையைப் படிக்கும் காலம் இனித்திரும்பி வருமா?.

ட்ரெயின் இருளைப் பிழந்துகொண்டு பாதாளக்குகைக்குள்ளால் விரைகிறது.

இந்த ட்ரெயின் அடுத்த ஸ்ரேசனில் நிற்கும் லண்டன்வாழ் தமிழ் அகதிகளின் வாழ்க்கை எங்கே போய் நிற்கும்?

சுவிட்சர்லாந்தில் வந்திறங்கிய தமிழ் அகதிகளைத் திருப்பியனுப்ப ஏற்பாடு செய்கிறார்களாம். இங்கிலாந்து அரசும் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பினால் நாங்கள் எங்கேபோவது?

தேவகியின் ‘நவக்கிரகம் மாதிரியான எண்ணிக்கையுள்ள ஒன்பது பிள்ளைகளில் நான்கு உயிர்களை இலங்கைப் பயங்கரவாதமும்,தமக்கையின் குடும்பத்தை முஸ்லிம் பிரச்சினையால் வந்த கலவரமும் பலிவாங்கி விட்டது.

‘என்ர உயிர் இஞ்ச போவதானாலும் இனி நான் இலங்கைக்குத் திரும்பிப்போகமாட்டேன்’ தேவகி இப்படித்தான் விம்மியழுகிறாள்.

கொஞ்ச நாளைக்கு முன் அவளது கடைசித் தம்பியைத்,’தமிழ்த் துரோகி’ என்ற பட்டத்துடன் ஒருத்தரை ஒருத்தர் அழித்தொழிக்கும், தமிழ் இயக்கம் ஒன்று கொலை செய்து விட்டது. அந்தத் துயரில்,கடந்த சில மாதங்களாக தேவகி அழுது வடிந்து கொண்டிருக்கிறாள்.அவளை அடித்திருக்கக் கூடாது. கணவனிடம் தன்னைக்கொடுத்த மனைவியைத் துன்புறத்துவதை வெறுப்பவன் அவன்.

முக்கியமாக அவன் காதலித்துக் கைபிடித்த அவனது அருமை மனைவியை அடித்திருக்கக்கூடாது.

இரவு நடந்த வாக்குவாதத்தால் அவன் அளவு மீறிவிட்டான். யாரிடமோ உள்ள ஆத்திரத்தை அவளில் காட்டியிருக்கக்கூடாது.

ட்;ரெயின் ஒரு ஸ்டாப்பில் நின்றது. இரவு வேலை செய்து நித்திரைத் தூக்கத்தால் தூங்கி விழும் முகங்கள், பகல்வேலையை ஆரம்பிக்க,அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் முகங்கள்,ஏனோ தானோ என்று உணர்ச்சியற்று,இந்த உலகத்தோடு தங்களையிணைத்துக்கொள்ளும் முகங்கள்,இப்படி எத்தனை முகங்களை அவன் தினமும் சந்திக்கிறான்?.

‘இதில் எத்தனைபேர் என்னைப்போல் லண்டனுக்கு அகதியாய் வந்த தமிழனாக இருப்பார்கள்? இவர்களுக்கு ஒரு நாடு,ஒரு மொழி,ஒரு தனித்துவக்கலாச்சாரம்,வாழக்கைமுறை,பண்பாடு,அவர்களுக்கென்ற பாதுகாப்பு எல்லாம் இருக்கும்தானே?’

சந்திரசேகரம் பலநினைவுகளுடன் பெருமூச்சு விட்டுக்கொள்கிறான்.

வீட்டில் நடந்த தகராறால் வேலைக்குப் போய்ச்சேர இன்னும் அரைமணித்தியாலம் பிந்தி எடுக்கும்.அவன் ஒரு குஜராத்தி முதலாளியின் கடையில் வேலை செய்கிறான்.

அவனுக்கு அந்தக்கடையில்,கணக்காளர் வேலை.காலையிலிருந்து பின்னேரம்வரை ‘ரில்’அடிக்கவேண்டியவேலை. கத்தரிக்காய், முருங்கக்காய்,புடலங்காய்களைப்பார்த்து அலுத்துவிட்டது.

வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து ஆழ்ந்த நித்திரைக்குப்போனால் அவன் கனவில்,புடலங்காய் பாம்பாகவும்,பூசணிக்காய் பூதமாகவும், வந்து தொலைக்கின்றன.

என்ன வாழ்க்கையிது? பகலைக் காணாத வாழ்க்கை! கடையினுள் பகலெல்லாம் வேலையாயிருக்கிறது. கிழமையில் ஆறுநாட்கள் வேலை. அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு,காலை எட்டுமணி தொடக்கம் இரவு எட்டுமணிவரை கடைக்கார முதலாளி ரஞ்சித் பட்டேலுடன் மாரடித்துவிட்டு வீட்டுக்கு இரவிற் போனால்,தேவகியின் அழுதுவடிந்தமுகம் எரிச்சலையுண்டாக்குகிறது.

கிடைக்கும் சம்பளத்தில்,வாடகை கட்டி,குடும்பச்செலவுகள் பார்த்து,ஊரிலுள்ள ஒன்றிரண்டு உறவினர்களுக்கு உதவி செய்து முடியக் கையில் மிஞ்சுவது கிட்டதட்ட ஒன்றுமில்லை என்ற விதத்தில் அவன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அதையெல்லாம் பொறுக்கலாம்,ஆனால் வீட்டில் நிம்மதியற்ற வாழ்க்கையை அவனாற் தாங்கமுடியாது.

அவன் கையில், தேவகி கட்டிக்கொடுத்த சாப்பாட்டுப் பார்சல் இருக்கிறது. காலைச் சாப்பாடாக, புட்டும் பொரியலும் சம்பலும் வைத்திருப்பாள்.

அவளுக்கு அல்லது குழந்தைகளுக்குச் சுகமில்லை என்றாலும் காலையில் எழும்பி இவனுக்குச் சாப்பாடு செய்து கொடுக்க அவள் தவறியது கிடையாது. மாலையில் வேலை முடிந்து களைத்த முகத்துடன் அவன் போகும்போது, குழந்தைகள் இவனைத் தொந்தரவு செய்யாமற் பார்த்துக்கொள்வாள்.இரவும் அப்படித்தான், எல்லாம் ஒழுங்காக நடந்தது. ஆனால் அவனின் மூத்தமகன் குமரன்;, சந்திரனின் கோபத்தைத் தூண்டிவிட்டான்.

குமரனுக்கு ஒன்பது வயதாகிறது.அவன் கடந்த நான்கு வருடங்களாகத் தகப்பனைப் பிரிந்திருந்தவன்.குமரனுக்குக் கிட்டத்தட்ட நான்கு வயதாக இருக்கும்போது, சந்திரசேகரம் லண்டனுக்கு வந்து விட்டான். அப்போது,தேவகி இரண்டுமாதக்கர்ப்பவதி.

மகள் பிறந்ததும்,லண்டன் வந்திருந்த கணவனின் விருப்பத்திற்கிணங்க,அந்தப் பெண்குழந்தைக்குக் கார்த்திகா என்று பெயர் வைத்தாள் தேவகி.

கடைசி மகனுக்கு இப்போதுதான் எட்டு மாதம்.

அந்தச் சிறு பிறப்பு,தகப்பன் காலையில் வேலைக்குப் புறப்படும்போது,தனது மழலை மொழியில் தகப்பனுக்கு,’ பை பை ப்பா’ சொல்ல முயற்சிக்கிறது.

அன்பான மனைவி.அழகான மூன்று குழந்தைகள். ஏதோ ஒரு உழைப்புடன் ஓரளவான சீவியம்.இத்தனையிருந்தும் அவனுக்கு நிம்மதியில்லை.

எத்தனை தமிழ் அகதிகள் லண்டனில் நிம்மதியாகவிருக்கிறார்கள்? உலகெங்கும் நாடோடியாகத் திரிகிறார்களே!

அகதிகள் என்ற அடையாள அட்டைகள்.வாழ்க்கைத் தொடரிலிருந்து துண்டிக்கப்பட்ட அசாதாரண வாழ்க்கையமைப்பு.

மகனுக்கும் தகப்பனுக்கும் கடந்த நான்கு வருடகாலமாகத் துண்டிக்கப்பட்டிருந்த பாசத் தொடர்பின் எதிர்விளைவை சந்திரசேகரன் இப்போது முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது.

பிரிந்திருந்த காலத்தில் அவன் மகனுக்கு அனுப்பிக் கொண்டிருந்த பிறந்தின வாழ்த்து மடல்களும், பரிசுகளும் அருகிலிருந்துகொண்டு ஒரு தகப்பன் கொடுக்கும் பாசத்துக்கு ஈடாகுமா?

,தேவகி ஊரிலிருந்து இரண்டு குழந்தைகளுடனும் லண்டனுக்கு வந்திறங்கியபோது,மூத்த மகன் குமரன் அவனின் தகப்பனை ஒரு அந்நியனாகப் பார்த்தான். தகப்பன்; லண்டன் வரும்போது தாயின் வயிற்றில் கருவாகவிருந்த இளைய மகள் கார்த்திகா,’யாரம்மா இவர்?’ என்று தாயைக் கேட்டாள்.

சந்திரசேகரனுக்குக் கண் கலங்கி விட்டன. நான்கு வருடங்கள் அவர்களைப் பிரிந்திருந்து, அவர்களை லண்டனுக்கு எடுக்க அளவற்ற கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான். அவளும், தாங்கமுடியாத பல துன்பங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்தாள்.கணவனைப் பிரிந்து வாழும் தங்கையை உயிருக்குயிராகப் பாதுகாத்த தமயன் இனவாதத்துக்குப் பலியானபோது அவள் அடைந்த துன்பம் அவள் லண்டனுக்கு வந்து இறங்கியபோது அவள் ஒட்டிக்கிடந்தது.

லண்டனுக்கு வந்த நாளிலிருந்து அவன் மூத்தமகன் குமரன் ஒதுங்கியே நடக்கிறான்.மகள் கார்த்திகா ஓரளவுக்குப் பரவாயில்லை.

தந்தை, குழந்தைகள் புத்தகம் வாசித்துக் கதைசொல்வதை மெய் மறந்திருந்து கேட்கிறாள். ஊரில் அவள் பார்த்த துன்பங்களை அந்தப் பிஞ்சு மனது மறந்து கொள்ளலாம்.

தனது குடும்பம் அனுபவித்த துயரின் வடுக்களை ஆற்றச் சந்திரசேகரன் தன்னாலானவற்றைச் செய்கிறான்.

இலங்கையில் மட்டுமல்ல,இங்கிலாந்திலும்தான் இனவாதமிருக்கிறது என்பதை அவன் உணர்ந்து, அந்தச் சங்கடங்களுக்கெல்லாம் முகம் கொடுத்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்றப் படாத பாடு படுகிறான். இவற்றையெல்லாம் சமாளிக்கத் தன் குடும்பத்தில் நிம்மதியை அவன் எதிர்பார்க்கிறான்.

அண்மையில் இறந்து விட்ட தம்பிக்காகத் தேவகி இன்னும் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறாள்.இலங்கையில் தமிழராகப் பிறந்தனுபவிக்கும் கொடுமைகளை அவளாற் தாங்கிக் கொள்ளமுடியாதிருக்கிறது.

அண்டை நாட்டான இந்தியாவில்,எத்தனை இனங்கள்? மதங்கள்?மொழிகள்? ஆனால் அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொலை செய்யவில்லையே.

ஏன் இலங்கையிலுள்ள மக்கள் இப்படி இனக் கொலை செய்து அழிந்து கொண்டிருக்;கிறார்கள்?.

ட்ரெயினின் இன்னொரு ஸ்ரேசன் வந்து விட்டது. துரத்திலிருக்கும், கல்லூரிகள் பாடசாலைகளுக்குப்பேகும் மாணவ மாணவியினர் கூட்டம் திமுதிமு என வந்து ஏறகிறார்கள். தங்களைச் சுற்றியிருக்கும் உலகை மறந்த பாவனையில் இளமைத்துடிப்புடன் கல கலவென என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சந்திரசேகரனுக்குப் பக்கத்தில் ஒரு பையன் வந்து உட்காருகிறான்.சந்திரசேகரனுக்கு அந்த இளம் வயதுப் பையனைக் கண்டதும்,அண்மையில் இறந்து விட்ட தேவகியின் தம்பியின் ஞாபகம் வருகிறது.

இறந்து விட்ட தேவகியின் தம்பிக்குச் செந்தில் என்று பெயர். தேவகியின் அம்மாவின் செல்ல மகன்.எட்டு வயதிலேயே தனது திறமையைக் காட்டிக்கொண்டவன்.

தேவகியின தமயன் ஒருத்தன் நன்றாகக் கவிதை எழுதுவான்.; அவன்,பாம்புகள்போல் நெளிந்து வளைந்த தெருக்களில் நடக்கும் பல விடயங்களுக்கும் அவன் கவிதைகள் மூலம் உயிர்கொடுப்பான்,

அவர்களது ஆச்சியின் காற்றோடு விளையாடும் பரட்டைத்தலை,அப்புவின் பல்லிலாச் சிரிப்பு,போன்றவை அவனது கவிதைகளில் அமரத்துவம் பெற்றவை. கடைசிப் பையனான செந்தில், தமயனின் கவிதைகளுக்கு மெட்டமைத்துப் பாடுவான்.

தேவகி,தனது தம்பியின் பாட்டில் சிலிர்த்துப்போவாள்,அவ்வளவு அழகாகப் பாடுவான்.

சந்திரசேகரம்,தேவகியை விரும்பிய நாட்களில் அந்தப் பக்கம் அடிக்கடி தனது பைசிக்கிளிற் போவான்.அந்தக்கால கட்டத்தில்,செந்திலின் கீச்சுக்குரலில் ஒலிக்கும் பாட்டும்,அதற்குத் தேவகியின் கலகலவென்ற சிரிப்பும் சந்திரசேகனின் நினைவில்ப் பதிந்த அழகிய ஞாபகங்கள்.

அண்மையில்,செந்திலையும் கொலைசெய்து விட்டார்கள். ஓரு தமிழ்க்குழு அவனைத்’துரோகியாக்கிக்’கொலை செய்து விட்டார்கள்.

சிங்கள இனவாதத்தால் அழிக்கப்பட்ட இளைஞர்களைவிட, தமிழ்க்குழுக்கள் ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்க அழிக்கப்பட்ட இளைஞர்கள்; அதிகம் என்பதைப் பலர் அறியார்கள்.

தம்பியின் மறைவின் துயர்தாங்காத தேவகி அழுது வடித்துக்கொண்டிருக்கிறாள். அவளது துக்கத்தைச் சந்திரசேகரன் புரிந்து கொள்வான். ஆனால், அவளது சொந்தக் குடும்பத்தின் தேவைகளை,குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புக்களை மறந்து அவள் அழுத கண்ணும் சிந்தியமூக்குமாக இருப்பதை அவன் விரும்பவில்லை,

இந்த விடயம்தான் நேற்றைய சண்டைக்கும் தேவகியையும் மகனையும் அடிப்பதற்கும் காரணியாகவிருந்தது. இலங்கையில் நடக்கும் பிரச்சினை எத்தனை மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாக்கிவிட்டிருக்கிறது?

சந்திரசேகரம் அவன் வேலை செய்யும் கடைக்குள் நுழைகிறான்.இவனைக் கண்டதும் முதலாளி ரஞ்சித் பட்டேல் தனது கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக்கொள்கிறார். கொஞ்சம் லேட்டாக வந்தது என்று அவனுக்குத் தெரியும்தானே? அவர் அதை ஏன் சாடைமாடையாகக் காட்டிக்கொள்ளவேண்டும்?

இவன் அவருக்குக்,’குட்மோர்னிங்’ சொல்கிறான். அவர் அது தனக்குக் கேட்காத பாவனையில் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்.

காலையில் பால்,பாண் வாங்க வரும்பெண்கள்.இனிப்புக்கள் வாங்கவரும் பாடசாலை மாணவர்கள்,வேலைக்குப் போகும்போது பத்திரிகைகள் வாங்க வருவோர் என்று கடையில் மக்கள் நிறையத் தொடங்கிவிட்டார்கள்.சந்திரசேகரம் வேலையில் மூழ்கிவிட்டான்

‘டாடி’ பட்டேலின் மகள் மீனா தனது அழகிய,இனிய ஒய்யாரமான தொனியில் தகப்பனையழைக்கிறாள்.

பட்டேலின் குடும்பம், கடைக்கு மேலுள்ள மாடியில் குடியிருக்கிறார்கள்.

இரு ஆண்களும்,இருபெண்களும், அரிசி மூட்டைமாதிரி ஊதிப்போன திருமதி பட்டேலுமாக அவரின் குடும்பம் மேல் மாடியில் வாழ்கிறார்கள். மீனா, சந்திரகேசரத்தைத் திரும்பியும் பார்க்காமல்,அவனைத் தாண்டிக்கொண்டுபோய்த் தகப்பனிடம் குஜராத்தி மொழியில் ஏதோ பேசுகிறாள்.

அவளுக்கு இருபது வயது. லண்டன் யூனிவர்சிட்டி ஒன்றிற் படிக்கிறாள்.

திருவாளர் பட்டேலுக்குத் தனது மகளில் பெரிய பெருமை. லண்டனிற் பிறந்தாலும், அவர்களின் குஜராத்திய பாஷை பேசுகிறாளாம்.இந்திய பண்பாட்டைக் கடைபிடிக்கிறாளாம். மீனா பட்டேல்@’சீ யு டாடி’ சொல்லி விட்டுப்போகிறாள். இங்கிலாந்தில் வாழும் பெரும்பான்மையான,இந்திய பாகிஸ்தானியக் குழந்தைகள் தங்கள் வீடுகளில் தங்கள் தாய் மொழியிற்தான் பேசுகிறார்கள்.

ஆனால்,லண்டனில் வளரும் எத்தனை தமிழ்க் குழந்தைகள் ‘சுத்தத்’ தமிழில் பேசுகிறார்கள்? எத்தனை இளம் தலைமுறையினரைக் கோயில்களிற் காணலாம்? ஏன் பெரும்பாலான தமிழ்க் குழந்தைகள்,தங்கள் கலாச்சாரத்தையும் மொழியையமு; அந்நியமாக்கி விட்டார்கள்?

சந்திரசேகரனுக்குக் கோபம் வருகிறது. யாரிற் கோபம் எதற்காக் கோபம் என்று அவனுக்குத் தெரியாது.

பட்டேலின் மனைவி மிகவும் கண்டிப்பானவள்.அவள் தலைமையில் குழந்தைகள் மிகவும் கண்டிப்பாக வளர்க்கப் படுகிறார்கள்.தாய் நன்றாக இருந்தால் குழந்தைகளும் நன்றாக இருப்பார்கள்தானே? தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலைதானே?

சந்திரசேகரனுக்குத் தேவகியிற் கோபம் வருகிறது. மகன் குமரனில் சந்திரசேகரன் கோபப்படத் தேவகிதானே காரணம்?

வீட்டிலிருக்கும் மனைவியை நினைத்து வந்த கோபத்தில்,சந்திரசேகரன் கடைச்சாமான்கதை; தாறுமாறாக அடுக்குவதைப் பட்டேல் கோபத்துடன் பார்க்கிறார்.

அரசியல் போராட்டங்கள்,;தனிமனித வாழ்க்கைப் போராட்டங்கள்,தனிமனித துயர்கள்,குடும்பப் பிரச்சினைகள், இவ்வளவையும் முகம் கொடுக்கும் சாதாரண மனிதன் அவன். தனது வாழ்க்கையை,முடிந்த மட்டும் பிரச்சினையற்ற வாழ்க்கையாக வாழமுயற்சிக்கிறான் சந்திரசேகரன். ஆனால்,மகன் இப்போதே முரண்டு பிடிக்கிறானே?

அவனின் மகன் குமரனுக்கு இப்போது ஒன்பது வயதாகப்போகிறது. அதற்கிடையிலேயே தகப்பனுடன் விலகி நின்று நடந்து கொள்கிறானே ஏன்?

நான்கு வருடங்கள் உயிருக்குப் பயந்து ஓடிவந்து அவர்களைப் பிரிந்திருந்தது அவனின் தப்பா? அவன் வேண்டுமென்றா அவர்களைப் பிரிந்து ஓடிவந்தான்?

தமிழனாகப் பிறந்த குற்றத்திற்காக ஒவ்வொரு தமிழனும் மிருகமாக இலங்கை இராணுவத்தால் வேட்டையாடப்பட்டபோது, சந்திரசேகரன் ஓடிப் பிழைக்க வந்திருக்காவிட்டால் இன்று குமரனுக்குத் தகப்பனே இல்லாமலிருந்திருக்குமே?.

சந்திரசேகரன் பல சிந்தனைகளுடனும் தனது வேலையைத் தொடர்கிறான்.

மனவைத்தியர்கள் சொல்வதுபோல், இளமையில் தகப்பனுக்கும் மகனுக்குமிடையில் வந்த-தவிர்க்க முடியாத பிரிவால்; அவன் மகன் அவனுடன் முரண்டு பிடிக்கிறானா?

காமவெறியும் கொலை வெறியும்பிடித்த சிங்கள இராணுவம் சுற்றியிருக்கும் ஊரில் தனது தாயைத் தனியே விட்டு விட்டுத் தகப்பன் தப்பி ஓடிவிடதாக அந்தப் பிஞ்சுமனம் நினைத்துக்கொண்டு வளர்ந்ததா?

தாய் அங்கு இரவு பகல் தூங்காமல் விழிந்திருந்து தன் குழந்தைகளைக் காப்பற்றப் படாதபாடு பட்டபோது, தகப்பன் லண்டனுக்கு வந்து ஏதோ படாடோபமான வாழ்க்கை வாழ்ந்ததாகக் குமரன் நினைக்கிறானா?

அய்யோ இது என்ன கொடுமை? அப்படி அந்த இளம் மனது இப்படிப் பலவற்றை நினைத்துக்கொண்டு தன்னுடன் முரண்பிடிக்கிறதா?

சந்திர சேகரன் அன்றெல்லாம் சரியாக வேலையில் மனதைச் செலுத்த முடியவில்லை.

வீடு வருவதற்கு ட்ரெயின் எடுக்க வரும்போது அவன் உடலும் உள்ளமும் அடியோடு சோர்ந்து விட்டது.

நேற்று நடந்த விடயம் இன்னொருதரம் அவன் ஞாபகத்தில் ஊசலாடுகிறது.

சந்திரசேகரம், தன் மகனிடம், மகனின் படிப்பு விடயமாக ஒருசில கேள்விகள் கேட்டான். மகன் தகப்பன் கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மறுமொழி சொன்னான். குமரன்,லண்டனுக்கு வந்து கிட்டத்தட்ட இருவருங்களாகின்றன. அதற்கிடையில் அழகிய அவன் தாய்மொழியான தமிழை மறப்பதா?

தமிழிற் தகப்பன் கேட்ட கேள்விக்குத் தமிழில் பதிலை எதிர்பார்த்த தகப்பனுக்கு மகனின் ஆங்கிலத்திலான மறுமொழி எரிச்சலைத் தருகிறது.

‘தமிழில் மறுமொழி சொன்னால் என்ன?’ தகப்பன் மகனிடம் கேட்டான்.

‘சும்மா போங்கோ,அவன் இப்பதான் லண்டனுக்கு வந்திருக்கான்,இங்கிலிஷில கதைச்சாற்தான் கெதியாய் அந்தப் பாஷையைப் புடிக்கலாம்.’தேவகியின் முணுமுணுப்பு சந்திரசேகரத்திற்கு எரிச்சலையுண்டாக்கியது.

தாய்மொழியான தமிழுக்குத் தேவகி முதலிடம் கொடுக்காதது சந்திரசேகருக்கு மிகுந்த கோபத்தையுண்டாக்கிவிட்டது.

‘லண்டனில் வாழுற எந்தப் பிள்ளையும் ஆங்கிலத்தைப் புடிச்சுக் கொள்ளும்.தாய் நாட்டைப் பிரிஞ்சிருக்கிற் நாங்கள் எங்கட தமிழ் மொழியை எப்பவும் பேசிக்கொண்டிருந்தாற்தான் எங்கட மொழியை அழியாமற் பார்த்துக்கொள்ளலாம்’ தகப்பன் ஆத்திரத்தில் வெடித்தான்.

தாயும் தகப்பனும் மிகவும் கோபத்துடன் வாக்குவாதப்பட்டார்கள். ஆத்திரம் அளவு கடந்தபோது,சந்திரசேகரத்தின் கைகள் தேவகியின் கன்னத்தைப் பதம் பார்த்தன. இந்தச் சண்டை வரக் காரணமான மகன்; குமரனுக்கும் அடிபோட்டான்.

அந்தச் சம்பவத்தையும், தமிழுக்குத் தன்வீட்டிலிருக்கும் ‘அங்கிகாரத்தையும்’ நினைக்கச் சந்திரசேகரனுக்கு இன்னும் ஆத்திரம் வருகிறது.அதே நேரம் தனது அளவு கடந்த ஆத்திர்த்தில் மனைவியையும் மகனையும் அடித்ததையிட்டு மிகவும் வெட்கமும் வருகிறது.

தனது பாதுகாப்புக்கு அடைக்கலமாக வந்த மனைவியிடமும், பாசமும் பரிவும் காட்டவேண்டிய மகனிடமும் தனது ஆண்மையின் முரட்டுத்தனத்தைக் காட்டியதையிட்டு அவன் வெட்கப்படுகிறான்.

வாக்குவாதம் முற்றும்போது அதைப் பேசித்தீர்க்கலாம். அதைச் செய்யாமல்,அவர்களைக் கண்டபாட்டுக்கு அடித்திருக்ககூடாது.

அவன் தனது வீட்டுக்கதவைத் திறந்தபோது,அவனின் சின்ன மகன் மோகனின் அழுகைக்குரல் கேட்டது. தேவகி கோபத்தில் அந்தச் சின்னக் குழந்தையை அதட்டிக் கொண்டிருந்தாள்.

மகள் கார்திகா, தகப்பனைக் கண்டதும்,பயத்துடன் சோபாவில் சுருண்டு பதுங்கினாள். மகன் குமரனைக் காணவில்லை.

சந்திரசேகரன் தான் போட்டிருந்த ஜக்கட்டைக் கழட்டி ஹாங்கரில் மாட்டிவிட்டுச் சோபாவில் தொப்பென்று வீழ்ந்தான்.

தேவகி, தேனிரைக் கொண்டு வந்து கணவனிடம் மௌனமாகக் கொடுத்தாள்.அவள் கன்னம் நேற்று இவன் அடித்த அறையால் வீங்கியிருந்தது.

‘குமரன் எங்கே?’என்ற கேட்டுக் கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளின் வீங்கிய கன்னங்களைக் கண்டு துடித்து விட்டான்.

அவள் கொடுத்த தேனிரை வைத்து விட்டு எழுந்து அவளையணைத்துக்கொண்டான்.

‘சாரி தேவகி.. குமரன் என்னோட தமிழில கதைக்காதது எனக்குக் கோபத்தையுண்டாக்கிப் போட்டுது’ அவளின் உப்பிய கன்னத்தையவன் முத்தமிட்டான்.

தேவகி வாய்விட்டழத் தொடங்கிவிட்டாள்.

மகள் கார்த்திகா,தகப்பனையும் தாயையும் மாறி மாறிப்பார்த்தாள்.அவள் முகத்தில் குழப்பம். அப்பா அவளுக்கு அடித்தாலும் அம்மா அழுகிறாள்.இப்போது,அப்பா அணைத்துக் கொண்டபோதும் அம்மா அழுகிறாளே என்ற குழப்பம் அவள் முகத்தில் பிரதிபலித்தது.

‘அறியாத குழந்தையள் பிழை செய்தால், அதைப் பற்றிக் கதைத்துத் திருத்துவதற்குப் பதிலா அதுகள அடிக்கலாமா? சிங்கள இராணுவம் தனக்குப்பிடிக்காத தமிழனை அடிக்குது, கொல்லுது, தமிழ்க் குழுக்களும் அதைத்தான் செய்யினம்.அதுமாதிரித்தானே நீங்களும் செய்யுறியள்? அவள் விம்மியழுதபடி அவனைக் கேட்கிறாள்.

என்ன பெரிய தத்துவமான கேள்வியிது?

அவனுக்கு அவளின் விம்மலையும் கேள்வியையும் புரிந்து கொண்டதால்; கண்டு கண்ணீர் வந்துவிட்டது.

மகனிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்கவேண்டும்.

அவசரமாக மாடிக்குப்போனான்.

ஓன்பது வயதுப் பாலகன்,தகப்பனின் உருவத்தைக் கண்ட மகன் நேற்று அவனிடம் வாங்கிய அடிகள் ஞாபகத்தில் வர, உடலும் உணர்வும் ஒடுங்கிய நிலையில்த் தன் கட்டிலில் முடங்கியுட்கார்ந்திருந்தான்.

அந்தப் பரிதாபமான நிலையைக் கண்ட தகப்பன், ஓடிப்போய்த் தன் செல்வ மகனை அணைத்துக் கொள்கிறான். மகன் விம்மியழத் தொடங்கி விட்டான். தகப்பனும் மகனும் ஒருத்தர் அணைப்பில் இணைந்து அழுதார்கள்.

நான்கு வருடங்கள் பிரிந்திருந்ததால் அவர்களின் பாசத்தின் பரிமாணம் அந்தக் குழந்தைக்குப் புரியவில்லையா? அரசியற் கொடுமையால் தவிர்க்க முடியாதிருந்த அவர்களின் பிரிவு இருவரையும் அந்நியர்களாக்கி விட்டதா?

‘மகனே,என்னை மன்னித்து விடு’ வயதில், அனுபவத்தில் வளர்ந்த தகப்பன், வாழ்க்கையின் ஆரம்பப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் மகனிடம்,மனம் உருக.மகனின் மன்னிப்புக்காக மன்றாடியது.

மகனின் கண்கள் மடையெனத் திறந்த சோகத்துடன் கேவிக் கேவியழுதான்.

தகப்பன் மகனிடம் நெஞ்சுருகச் சொன்னான்.’மகனே,நாங்கள் இலங்கைத் தமிழர்கள்- அங்க நடக்கிற பல பிரச்சினையால் ஊரை விட்டோடிவந்தவர்கள். எங்கட பாஷையை மற்றவர்கள் அழிக்கக்கூடாது என்டு போராடுபவர்கள்—நீ இஞ்ச லண்டனுக்கு வந்த கொஞ்ச நாளிலலேயே நீ தமிழில கதைக்கத் தயங்குறதப் பார்த்து எனக்குக் கோபம் வந்திட்டு. அதனால் உன்னை அடிச்சுப் போட்டன்.—-‘ தகப்பன் தனது முரட்டுத்தனமான நடவடிக்கையின் காரணத்தை விளக்கியபோது, மகன் தகப்பனை இன்னும் பயத்துடன் பார்த்தான்.

‘அப்பா—அப்பா’ மகன் தனது விம்மலுக்கிடையே தன்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறான் என்று தகப்பனுக்குப் புரிந்தது.

‘ என்ன மகன் சொல்லப் போகிறாய்?’

‘அப்பா— இலங்கையில் நாங்க தமிழ் கதைக்கிறபடியாலதானே மாமாக்கள் எல்லாம் கொலை செய்யப் பட்டினம்’ மகன் தான் என் லண்டனுக்கு வந்ததும் தமிழ் பேசவில்லை என்ற விளக்கின் உள்ளர்த்தத்தைப்புரிந்துகொண்ட தகப்பன் அதிர்ச்சியடைந்தான்.

‘அப்பா நாங்க தமிழில கதைச்சா லண்டனில யாரும் எங்களக் கொலை செய்யமாட்டினமா?’

மகனின் கேள்வியின் தாக்கத்தால் தகப்பன் சிலையாக நிற்கிறான்.

(யாவும் கற்பனையே)

– ‘அந்நியர்கள்’ என்ற பெயரில் ‘ஈழமுரசு’ பிரசுரம் 03.09.1995.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *