அந்த முடிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 7,417 
 

“இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?”

தொலைகாட்சிப் பெட்டியிலிருந்து தன் கவனத்தைக் கஷ்டப்பட்டு மனைவியிடம் திருப்பினார் அம்பலம். முப்பது வருட தாம்பத்தியத்தில் அவர் கற்றுக்கொண்ட ஒரு பாடம், மனைவி பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாதிருந்தால் வாழ்வில் அமைதி நிலவும் என்பதுதான்.

ஆறு மாதத்திற்குமுன் மணமாகிப் போன கடைக்குட்டி பார்வதி அன்று சாயங்காலம் திடுதிப்பென்று வந்திருந்தாள். அதுவும் தனியாக. ஏதோ புருஷன் பெண்டாட்டி சண்டையாக இருக்கும் என்று இவரும் எதுவும் கேட்கவில்லை.

இப்போது, எல்லாரும் சாப்பிட்டு முடிந்து, தூங்கப்போகும் சமயத்தில் அவள் வரவின் காரணத்தை மனைவி ஒன்றுக்குப் பத்தாகக் கூற வந்திருப்பாள் என அசுவாரசியமாகப் பார்த்தார்.

“ஏங்க? எதுக்காக கல்யாணம் பண்ணிக்கறது? இல்ல, எதுக்காகன்னு கேக்கறேன்!”

நான்கு பிள்ளைகளைப் பெற்றபின் அவளுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் எழுந்தது? அம்பலத்திற்குச் சிரிப்பு வந்தது. மனைவியின் கோபத்தை உத்தேசித்து அடக்கிக் கொண்டார்.

“அட, கேக்கறேன், இல்லே?” என்று முடுக்கினாள்.

வாயில் வந்தது எதையாவது சொல்லித் தொலைத்தாலே ஒழிய இவள் அப்பால் நகர மாட்டாள் என்று, “ஏதோ.. பிள்ளை குட்டி பெத்து, கடைசி காலத்தை அவங்க நிழல்லே..,” என்ற் மென்று முழுங்கினார். இந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாகப் பேசுவார்களா யாரேனும்!

“இவரு கடைசி காலத்துக்குப் போயிட்டாரு! இங்க மொதலுக்கே மோசமா இருக்காம்!” நொடித்தபடி அவள் சொல்லாமல் சொன்னது லேசாகப் புரிய, அதை நம்ப முடியாது, திகைப்புடன் அவளைப் பார்த்தார்.
அவர் கண்ணில் தேங்கியிருந்த கேள்விக்கு அதே ரீதியில் பதிலளித்தாள் மனைவி.

“ஏதுடா, தங்கமானவங்களா இருக்காங்களே சம்பந்தி வீட்டுக்காரங்க; `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. நீங்க செய்யறதைச் செய்யுங்க’ன்னு அவங்க தேனாப் பேசினதில நான்கூட இல்ல ஏமாந்துட்டேன்!” ஆண்மை இல்லாத ஒருவனைத் தங்கள் பெண் தலையில் கட்டிவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் குமுறினாள் பொன்னம்மா.

“இனிமே என்ன செய்ய முடியும்?”

“என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? இனிமேதான் செய்யணும். `இந்த மாதிரி இருக்கு. எனக்கு அவரோட சேர்ந்து வாழ விருப்பமில்லே!’ அப்படின்னு பார்வதி கோர்ட்டில அடிச்சுச் சொன்னா, விவாகரத்து வாங்கிடலாம். ஜீவனாம்சம்கூட கிடைக்கும்!”.

அம்பலத்துக்கு குழப்பம் அதிகரித்தது. “எதுக்கு அவசரம், பொன்னம்மா? மாப்பிள்ளை அம்மாவுக்கு ஒரே பிள்ளை! இன்னும் சின்னக் குழந்தைன்னே நினைச்சு, அருமையா நடத்தி இருப்பாங்க! அதான் இப்படி..! கொஞ்சம் விட்டுப் பிடிச்சா..!” மனைவியை எதிர்த்து, ஒரே மூச்சில் அவர் இவ்வளவு பேசியதே அதிகம்.
அப்போது அவரே எதிர்பாராதவண்ணம் மகள் புயலென சீறியபடி உள்ளேயிருந்து வந்தாள்.

“நான் இனிமே அந்த வீட்டுக்குப் போக மாட்டேம்பா. எங்க வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடக்கூட விடறதில்ல அவங்கம்மா. அவரும், `ஒரே களைப்பா இருக்கு. என்னைத் தொந்தரவு செய்யாதே’ன்னு தினமும் கட்டிலைவிட்டுக் கீழே படுத்துக்கிறாரு!” தன் இளமையும், பெண்மையும் கட்டியவருக்குக்கூட ஒரு பொருட்டாகப் படவில்லையே என்ற அவமான உணர்வில் அழுகை பொங்கியது அவளுக்கு.

மகளுடைய துயரம் தாயையும் பாதிக்க, “இன்னும் என்ன கதை கேக்கறீங்க? பேசாம, நான் சொலறபடி செய்யுங்க!” என்று ஆணை பிறப்பித்துவிட்டு, “நீ வாடா, கண்ணு! யாரோ செய்யற தப்புக்கு நாம்ப எதுக்கு அழணும்?” என்று மகளை அணைத்தபடி உள்ளே அழைத்துப் போனாள்.

நீதிமன்றத்தில் பேசவும் வாயெழாது, அவமானத்துடன் தலைகுனிந்த வண்ணம் பிறர் தன்னை விமர்சிப்பதைக் கேட்டு, அங்கமெல்லாம் சுருங்கியவனாக நின்றிருந்த மாப்பிள்ளை கிருஷ்ணனின் நிலை பொன்னம்மாவைப் பாதிக்கவில்லை. `இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்ததற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்!’ என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போது அவள் எதிர்பார்க்கவில்லை, தான் பெற்ற பிள்ளைகளே தன் முடிவை வன்மையாக எதிர்ப்பார்கள் என்று.

“எங்களையும் ஒரு வார்த்தை கேக்கணும்னு ஒங்களுக்குத் தோணலியா? ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் ஆவறதே பெரும் பாடு. ஜாதி, ஜாதகம், சீருன்னு ஆயிரம் பிடுங்கல்! நம்ப மாப்பிள்ளைக்கோ நல்ல வேலை! பாக்கவும் லட்சணமா இருக்காரு!” என்று மூத்த மகன் இன்னொரு ஆண்மகனுக்குப் பரிந்து பேசியபோது, பொன்னம்மாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தன்னை ஒருவன், அதிலும் தன் வயிற்றில் பிறந்த மகன், தட்டிக் கேட்பதாவது!

“அழகும், பணமும் இருந்தா மட்டும் ஒருத்தன் ஆம்பளையாகிட முடியுமா?” என்று விரசமாகக் கத்தினாள். தங்கள் குடும்பத்துடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு பெற்ற பிள்ளைகளே போனபோதும் கலங்கவில்லை.`என் மகளுக்கு படிப்பிருக்கு. சுயமா நிக்கற தெம்பிருக்கு!’ என்று திமிராகச் சொல்லிவந்தாள்.

பார்வதியும் அதை நம்பினாள். ஆனால், இடையில் எதுவும் நடக்காததுபோல, பழையபடியே வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, தான் எதையோ இழந்துவிட்டது போன்றதொரு வெறுமை ஏற்பட்டது அவளுக்கு.

தன்னையொத்த பெண்கள் கணவன்மாரோடு உரசியபடி நடப்பதைப் பார்க்கும்போதும், தாம் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சுவதைப் பார்க்கும்போதும் அவளுக்குத் தன்மேலேயே பரிதாபம் மிகும். எல்லாருக்கும் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் இன்பங்கள் தனக்கு மட்டும் ஏன் அரிதாகப் போய்விட்டன?
உலகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டிருக்காத வயதில் அம்மா சொற்படி கேட்டு நடந்தது தவறோ?
இந்த அப்பாதான் ஆகட்டும், குடும்பத் தலைவராய் லட்சணமாய், யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கக் கூடாதா!

`என்ன முடிவு?’ என்று உடனே விரக்தி எழும்.

கணவருடன் சேர்ந்து இருந்திருந்தால், உலகை வேண்டுமானால் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், தனக்குள் பொங்கிப் பொங்கி எழுந்த அவமான உணர்ச்சியையும், விரக தாபத்தையும் எப்படி சகித்து இருக்க முடியும்!
ஆரம்பத்தில் அனுசரணையாக இருந்த அம்மாகூட, தெரிந்தவர்களும், உறவினர்களும் காட்டிய பராமுகத்தால் மாறிப்போனாள். `துக்கிரி! எந்த வேளையில் பிறந்திச்சோ! இதுக்கு ஒரு நல்லது செய்யப்போய், எனக்கு யாருமே இல்லாம போயிட்டாங்க!’ என்று மகளைக் கரிக்க ஆரம்பித்தாள்.
இப்படி ஒரு அம்மாவுடன் காலமெல்லாம் எப்படித் தள்ளப் போகிறோம் என்ற மலைப்பு எழுந்தது பார்வதிக்கு.

ஆயிற்று, இப்போதே முப்பத்தி இரண்டு வயதாகிவிட்டது. இன்னும் இப்படியே இருபது இல்லை, முப்பது வருடங்கள் தள்ளிவிட்டு.. நினைக்கும்போதே அயர்ச்சியாக இருந்தது.

வயிற்றுப்பாடு ஒரு பிரச்னையாக இல்லைதான். ஆனால், தனிமை?

படைத்தவன் மனிதர்களுக்குத் துன்பத்தைத் தருவதே அவர்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளத்தானாம். பார்வதி அடிக்கடி கோயிலுக்குப் போக ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கோயில்.
அங்கெல்லாம் அம்மாவின் ஓயாத புலம்பலைக் கேட்காமல் இருப்பதே நிம்மதியாக இருந்தது.

அன்று கோலாலும்பூர், ஈப்போ ரோடிலிருந்த தண்டாயுதபாணி கோயிலுக்கு வந்திருந்தாள். சிறுவயதில் அண்ணன்மார்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிய மகிழமரம் ஒரு சிறு நெகிழ்ச்சியை உண்டடுபண்ணியது. ஆலமரத்தடியில் அக்கடா என்று இருந்த பிள்ளையார் இப்போது ஒரு சிறு கோயிலுக்குள். கலை, இந்து மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடக்கும் பெரிய `செட்டியார் ஹால்’.
அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த முருகனைப் பிரார்த்தித்துவிட்டு, பிரதட்சணம் செய்யப்போனாள். நீண்ட உட்பிராகாரம், வெளிப் பிராகாரம் இரண்டின் தரையிலும் சலவைக்கல் பதிக்கப்பட்டு இருந்தது.

“பாப்பா! ஓடாதே!”

எங்கோ கேட்ட குரலாக இருக்கவே, திரும்பினாள்.

அவளைப் பார்த்துச் சற்றே துணுக்குற்றவன், “நல்லா இருக்கீங்களா?” என்று விசாரித்தான், உபசாரமாக.
இனியும் தன் மனைவியாக இல்லாதவளை ஒருமையில் விளிப்பது மரியாதை இல்லை என்ற அவனது பண்பு பார்வதியை என்னவோ செய்தது.

“ம்!” என்றாள் முனகலாக. அவள் பார்வை எல்லாம் கிருஷ்ணனின் பிடியிலிருந்து திமிற முயற்சித்துக் கொண்டிருந்த குழந்தையிடமே பதிந்து இருந்தது.

“என் பெண்!” அவன் குரலில் எக்காளம் இல்லை. சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால், அது அவளுடைய கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது.

`தீர யோசியாது, விளக்கம் தர எனக்கொரு சந்தர்ப்பமே அளிக்காது, பலபேர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினாயே!’ என்று கூறாமல் கூறுகிறாரோ?

“அத்தை..ம்.. ஒங்கம்மா நல்லா இருக்காங்களா?” பேச்சை மாற்றினாள்.

“கேசில தீர்ப்புச் சொன்னதுமே அம்மா இருதய நோயாளியா ஆகிட்டாங்க. அவங்க போய் பத்து வருஷமாயிடுச்சு!”

எதையோ சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கியவனாய், முன்னாள் மனைவியையே பார்த்தான் கிருஷ்ணன். பின், ஒரு முடிவுக்கு வந்தவனாக, வேகமாகப் பேசினான்: “இப்ப நினைச்சா, அதிசயமா இருக்கு — இருபத்து நாலு வயசிலே நான்தான் எவ்வளவு ஜடமா இருந்திருக்கேன்! அப்பாவைத்தான் தெரியுமே! சினிமாப் பாட்டே வீட்டிலே கேக்கக்கூடாது, ஆண்-பெண் விவகாரம் எல்லாம் வாய்விட்டுப் பேசற விஷயம் இல்லே, அப்படி, இப்படின்னு ஏகக் கண்டிப்பு! பதினஞ்சு வயசில, நான் ஒரு பொம்பளை படம் வரைஞ்சதுக்காக கையை மடக்கச் சொல்லி, இரும்புத் தடியால போட்டிருக்காரு பாரு, ஸாரி, பாருங்க!”

`உரிமையுடன், ஒருமையில் பேசுங்களேன்!’ என்று கதறவேண்டும்போல இருந்தது பார்வதிக்கு.
“அம்மாதான் ரொம்ப அழுதாங்க. `எனக்கு இப்படி ஒரு கொறைன்னு நீ சொல்லவே இல்லியேடா! வீணாலும் ஒரு கல்யாணத்தைச் செஞ்சுவெச்சு, அந்தப் பொண்ணோட பாவத்தைக் கொட்டிக்கிட்டோமே!’ன்னு!
தாயின் நினைவில் சற்று நேரம் மௌனித்திருந்தவன், தொடர்ந்து பேசினான். “ரொம்ப ஒருஷம் சிகிச்சை குடுத்தாங்க எனக்கு. ஒடம்பு, மனசு எல்லாத்துக்கும்தான். நான் ஆம்பளைதான்னு உறுதியானதும், உன்கிட்ட ஓடி வந்து அதைச் சொல்லணும்போல இருந்திச்சு. நீதான் அந்த சந்தோஷத்தை என்கூட பங்கிட்டுக் கொள்ளணும்னு ஒரு வெறி. ஆனா, அதே சமயத்திலே தயக்கமாவும் இருந்திச்சு!”
எப்பேற்பட்ட இழப்பு அவளுடையது! எங்கே அவனெதிரே அழுதுவிடப் போகிறோமோ என்று பயந்தவளாக, “இருட்டப் போகுது. போகணும்,” என்று முணுமுணுத்தாள் பார்வதி.

“வா பாப்பா!” என்றபடி, கிருஷ்ணன் நடக்க, அடக்க முடியாது கேட்டாள் பார்வதி. “இவங்கம்மா வரலியா?”
திரும்பியவன், ஒரு வரட்சியான சிரிப்பை உதிர்த்தான். “எனக்குப் பொண்டாட்டி ராசி இல்ல போலிருக்கு. இந்தக் குழந்தையைப் பெத்துப் போட்டுட்டு, இவங்கம்மாவும் போயிட்டாங்க. அதாவது, செத்துப் போயிட்டாங்க!”

`உன்னை மாதிரி, உயிரோடேயே கொண்டவனை நிர்க்கதியாக விடவில்லை!’ என்று அவன் மறைமுகமாக பழிப்பதாக எடுத்துக்கொண்டு, குன்றிப்போனாள் பார்வதி.

`வீட்டுக்கு வாங்க,’ என்று அவனை அழைக்க ஆசையாக இருந்தது. ஆனால், எந்த முகத்துடன் அழைப்பது?
“யாருப்பா இது?” என்ற குழந்தையின் கேள்விக்கு, “ரொம்ப வருஷத்துக்கு முந்தி எனக்குத் தெரிஞ்சவங்கம்மா,” என்று மாஜி கணவன் அளித்த விடையிலேயே அவன் அவளைவிட்டுத் தொலைதூரம் சென்றுவிட்டது தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *