அந்த முகமா இந்த முகம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 2,310 
 
 

ஆனந்துக்கு மூச்சு திணறியது.. நீருக்குள் கால்கள் இரண்டையும் யாரோ பிடித்து இழுக்கிறார்கள்..மேலே எம்பி எம்பி வரப்பார்க்கிறான் .

ஊஹும்…பிடி இறுகிக் கொண்டே போகிறது.

சுற்றிலும்  நீலப்போர்வை ….நீர்த்திவலைகள் முகத்தில் மாறி மாறி … கண் மூடி மூடித் திறக்கிறது..

திடீரென ஒரு முகம்.. அவன் கண் முன்னே…!  தெளிவில்லாமல்…!

ஒரு கை அவனை நோக்கி நீளுகிறது…

“பிடிச்சுக்கோ..வா….கைய கெட்டியா பிடிச்சுக்கோ…”

அரையும் குறையுமாய் காதில் விழும் வார்த்தைகள்..பிடி நழுவுகிறது…

“ஐய்யோ…! என்னக் காப்பாத்துங்க..! மூச்சு முட்றதே..!”

‘அம்மா…!’

ஆனந்த் பெரிதாக அலறி முழித்துக் கொள்கிறான்….

அடுத்த அறையிலிருந்த அம்மா

“ஆனந்த்..! என்னப்பா….? மறுபடியும் கனாக்கண்டியா…? இந்தா…இந்த தண்ணியக் குடி….”

செம்பிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறாள்…

ஆனந்துக்கு உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது..

இப்போதெல்லாம் இந்தக் கனவு அடிக்கடி வர ஆரம்பித்து விட்டது..

“ஒண்ணுமில்ல…நீ போம்மா….பயப்படாத…! எப்பவும் வர கனவுதான்….!”

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான் ஆனந்த்..எப்போது தூங்கினான்….?

திரைச்சீலை விலகி முகத்தில் சுளீரென்று வெயில்.

கடிகாரம் மணி பத்து என்று அறிவித்தது..

‘ஓ..இன்னக்கி ஞாயித்துக்க்கிழமையா..? அதான் அம்மா தூங்கட்டும்னு விட்டுட்டா போல இருக்கு….’

குளியலறையில் புகுந்த கொண்டவன் அங்குள்ள கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே  பற்குச்சியை கையில் எடுத்தவன்  ஒரு வினாடி திடுக்கிட்டு நின்றான்.

கண்ணாடி மேல் புள்ளிப் புள்ளியாய் நீர்த்துளிகள்..அவனுடைய முகம் ஏதோ விகாரமாய் , மங்கலாய்….

துண்டை எடுத்து கண்ணாடியை அழுத்தித் துடைத்தான்..

அப்படியேதான் இருந்தது.. தீடீரென்று அவன் முகத்தை மறைத்துக் கொண்டு மற்றோர் முகம்.. அதுவும் தெளிவில்லாமல்…!

ஆனந்துக்கு  தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது…

வெளியில் வந்தவன்  தனது அறைக்குள் நுழைந்து அங்கிருந்த கண்ணாடியைப் பார்த்தான்… அதில் அவன் கண்டது என்ன..? நிச்சயமாக அவன் முகம் இல்லை..வேறு முகம்… அவ்வப்போது வந்து போன அதே முகம்.. மீசை தாடியுடன்! இருபது வயது இளைஞன்..

இப்போது தெளிவாக.. மிகத் தெளிவாக…! தன் முகத்தைத் தடவிப் பார்த்தான்..மீசையுமில்லை…தாடியுமில்லை…. யார் இவன்…? நான் எங்கே…?

“அம்மா ! அம்மா…உடன இங்க வாயேன்..!”

“என்ன ஆனந்த்…..?”

“எம்முகத்துல மீசையும் தாடியும் வளந்திருக்கா….?”

“என்னடா…. உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா….? மழுமழுன்னு இருக்கு…மீசையாம்..தாடியாம்…. அதுவும் ஒரே நாள்ல…?”

“இரும்மா….போகாத…இந்தக் கண்ணாடில என்னப் பாரு…நீயே பயந்து போய்டுவ…”

கண்ணாடிய எட்டிப்பார்த்த அம்மா சிரித்தாள்..

தாடியுமில்ல…மீசையுமில்ல…!

“உனக்கு பிராந்து பிடிச்சிருக்குன்னு தோண்றது…. எனக்கு வேல கெடக்கு..நீயே உம்முகத்த ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடி…!”

ஆமாம்..அவனுக்கு பிராந்துதான் பிடித்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் அதே உடை.. ஆனால் முகம் மட்டும் யாரோ ஒருவனுடையது என்றால்…! பயித்தியம்தான் பிடித்திருக்க வேண்டும்….


மறுநாள் அலுவலகம் செல்லவேண்டும்…அன்று உறங்கும் வரை கண்ணாடி பார்ப்பதைத் தவிர்த்து விட்டான்… பயமாய் இருந்தது என்றுகூட சொல்லலாம்..

ஆனால் கை மட்டும் தாடையைத் தடவி தடவிப் பார்த்துக் கொண்டேயிருந்தது…

“ஆனந்த் ..என்னப்பா! ரொம்ப லேட்டாச்சு போல இருக்கே…! தாடி மீசை யெல்லாம் ஒண்ணுமில்ல…சீக்கிரம் கெளம்புற வழியப் பாரு…”

பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்…

வழியில் தெரிந்த ஓரிரண்டு பேர் கையை கட்டினார்கள்…மறுபடியும் கை அவனறியாமல் தாடையைத் தடவியது..

ஆஃபீசில் வழக்கம்போல்’ குட் மார்னிங் ஆனந்த்‘

டைப்பிஸ்ட் பாலாவும், அக்கவுண்டன்ட்  நிர்மலாவும் ஏதோ ரகசியமாய் பேசி சிரித்தது அவனைப் பார்த்து தானோ…?

வேலை தலைக்குமேல் இருந்ததால் மனசு வேறொன்றையும் நினைக்கவில்லை…

வீட்டிற்கு கிளம்புமுன். பாத்ரூமில் நுழைந்தவன்  கண்ணாடியைப் பார்த்து அரண்டு போய் நின்றான்..

அவன் முகம் இது இல்லவேயில்லை..

தாடியும் மீசையுமாய் அதே இளைஞன்…

சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை..

இந்தக் கண்ணாடியும் பொய் சொல்கிறதா..? ஸம்திங்  சீரியஸ்லி ராங்…

டாக்டரிடம் கண்டிப்பாய் காட்டவேண்டும்.. ஒரு மனநல மருத்துவரிடம்…


டாக்டர் பரசுராமைத் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது…பார்த்ததுமே ஒருவரின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை கேமராவில் படம் பிடிப்பது போல கண்டு பிடிப்பதில் எம்டன்..ஆனால் ஒரே ஒரு விஷயம்தான் உறுத்தியது..

அவருக்கென தனி மருத்துவ மனை இல்லை… ஒரு பாலி க்ளீனிக்கில் மாலை நாலு மணியிலிருந்து இரவு ஒன்பது வரை…

வெளியில் காத்திருக்கும் போது மற்ற மருத்துவர்களை காணவருபவர்கள் கண்ணில் பட்டால்…. அதுவும் தெரிந்தவர்கள்.. நண்பர்கள்….!

வேறு வினையே வேண்டாம்..

“ஆனந்த், டாக்டர் பரசுராமனப் பாக்க உக்காந்திருக்கானே…அப்பவே நெனச்சேன்.. அவன் பேச்சும் சிரிப்பும் கொஞ்ச நாளாய் சரியில்ல…”

கை முளைத்து கால் முளைத்து ஊரையே சுற்றி வந்து விடும்  அவனது சரித்திரம்…வேண்டாம்..!

டாக்டர் நளினி..!அவர் குணப்படுத்தாத கேஸே கிடையாது….ஆனால் ஆனந்த் கொஞ்சம் கூச்ச சுபாவம்… அவனால்  பெண் மருத்துவரிடம்  இயல்பாய் இருக்க முடியாது..

டாக்டர் பூபதி…! அண்மையில் விரைவிலேயே  மிகப்பிரபலம் அடைந்துவிட்ட இளம் மருத்துவர்.. புறநகர் பகுதியில் க்ளினிக்.. யாரும் கவனிக்க வாய்ப்பில்லை….காலை பத்திலிருந்து இரவு எட்டு வரை…

புதன் கிழமை அலுவலகத்திற்கு விடுப்பு  எடுத்துக் கொண்டு மாலை மூன்று மணிக்கு கிளம்பினான்..

அம்மா ஊரிலில்லாததும் ஒருவிதத்தில் நல்லதாய்ப் போச்சு…

நாலு மணிக்கு அப்பாயின்ட்மென்ட்….

“இன்னும் இரண்டு பேஷன்ட்.. அப்புறம் நீங்க போலாம்….”

ரிசப்ஷனிஸ்ட்   ஒரு டோக்கனைக் கொடுத்தாள்..

ஆனந்த் முன்னால் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தான்… ஒன்றும் வித்தியாசமாகப் படவில்லை.. நெற்றியில் எழுதியா ஒட்டியிருக்கும்..?

பாவம்…! அவர்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறதோ….?

சரியாக நாலு பத்துக்கு ,

‘ஆனந்த்…நீங்க உள்ளே போகலாம்’ என்றாள் அந்தப் பெண்…

கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் ஆனந்த்…


டாக்டர் பூபதி இவ்வளவு இளமையாக இருப்பாரென்று  அவன் எதிர் பார்க்கவில்லை..மிஞ்சி மிஞ்சி போனால் அவனைவிட ஏழெட்டு வயது கூட இருக்கலாம்..

ஒரு நண்பனிடம் பேசுவதைப் போல பேசலாம்…

“ஆனந்த்.. கமான்.. டேக் யுவர் ஸீட்…பீ கம்ஃபர்ட்டபிள்..!

ஆனந்துக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது..

“தாங்யூ டாக்டர்..”

“ஆனந்த் நல்ல ஃரெஷ்ஷா இருக்கீங்க..! யூ லுக் வெரி ஸ்மார்ட்…ம்ம்ம்…சொல்லுங்க…!”

உடனே பேச்சு வரவில்லை… பூபதி எதிர்பார்த்த ஒன்றுதானே… முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தயங்குவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை…

ஆனந்த் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்….

டாக்டர் மேசையின் மேலிருந்த ரூபிக் க்யூப் அவனது கவனத்தை கவர்ந்தது..

சட்டென்று அதைக் கையில் எடுத்தான்….

“ஆனந்த்..ரூபிக் க்யூப் விளையாடறது பிடிக்குமா….?”

காதில் விழாது போல ஆனந்த் அதைத் திருகிக் கொண்டிருந்தான்..

“அட…அதுக்குள்ள மூணு பக்கம் முடிச்சிட்டீங்களே…யூ ஆர் டூ  ப்ரில்லியன்ட்..இன்னும்  பத்து செகண்ட்ல முடிச்சிடுவீங்கன்னு நெனைக்கிறேன்…குட் ட்ரை…”

உடனே அதை மேசை மேல் திரும்ப வைத்து விட்டான்..

மறுபடி சிறிது நேரத்து மௌனத்தைக் கலைத்தது அவனது  அடுத்த எதிர்பாராத நடவடிக்கை….

கையில் வைத்திருந்த சிறிய  பர்ஸிலிருந்து கைப்பிடி வைத்த ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தான்..
டாக்டர் முகத்துக்கு நேரே நீட்டினான்…!

“டாக்டர்…இதப் பாருங்க….என்ன தெரியுது..?”

கொஞ்சம் கூட பதட்டப்படாமல் டாக்டர்,

“என்னோட முகம்” என்றார்…

“எனக்கு மட்டும் ஏன் என்னோட முகம் தெரியல டாக்டர்….ப்ளீஸ்..! சொல்லுங்க டாக்டர்… என் முகம் எங்க போச்சு..? என் முகம் தொலஞ்சு போச்சு டாக்டர்..அது எனக்கு வேணும்…ப்ளீஸ் டாக்டர்..அதக் கண்டுபிடிச்சு குடுக்க முடியுமா….? “

லேசான விசும்பல்  குலுங்கும் அழுகையாக மாறியது…..

பூபதி அவன் கரங்களைப் பற்றிக் கொண்டு,

“கூல் டவுன்…ரிலாக்ஸ் ஆனந்த்…” என்று தேற்றினார்…


“பயப்படாதீங்க ஆனந்த்…உங்க காணம போன முகத்த சீக்கிரமே கண்டுபிடிச்சிடலாம்….என்ன நம்புங்க..!

உங்க கிட்ட நிறைய பேசவேண்டியிருக்கும்…பொறுமையா நான் கேக்கற கேள்விக்கு உண்மையான பதில் தேவை…கோர்வையா இல்லைன்னா பரவாயில்ல… மனசுலே இருக்கிறத மறைக்காம சொல்லணும்… ஓக்கே….? “

“ஓக்கே டாக்டர்…..ஐ வில் ட்ரை மை பெஸ்ட்…”

“குட்..தாட் வில் மேக் மை ஜாப் ஈஸி….

போன மாசம் நடந்த சம்பவங்கள் பத்தி கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா…? உங்களுக்கு  சமீபத்துல ஏதாவது விபத்து ஏற்பட்டதா..? யோசிச்சு பதில் சொல்லலாம்….”

ஆனந்த் கொஞ்சம்  தயங்கினான்..

“அத விபத்துன்னு சொல்றத விட ஆபத்துன்னு சொல்லலாம்…

ஒரு மாசத்துக்கு முன்னாலே நான் சில நண்பர்களோடு கோவளம் பீச்சுக்கு போயிருந்தேன்.. எனக்கு நீச்சல் தெரியாது.. ஆனாலும்  நண்பர்கள் வற்புறுத்தலால  லைஃப் பெல்ட் போட்டுகிட்டு நீஞ்ச ஆரம்பிச்சேன்…

அப்படியே ஆர்வக் கோளாறுல கொஞ்சம் உள்ள போய்ட்டேன்…இடுப்பில இருந்த லைஃப் பெல்ட் நழுவி எங்கியோ போயிருந்தது..

கொஞ்சம் கொஞ்சமா தண்ணி என்ன உள்ள இழுக்க , நான் மூழ்க  ஆரம்பிச்சேன்..

‘காப்பாத்துங்கோ! யாராவது காப்பாத்துங்கோ’ ன்னு கத்தினேன்..

சட்டுனு ஒரு கை என் தோளத் தொட்ட மாதிரி…

‘என் கையைப் பிடிச்சுக்கோ..கெட்டியாப்பிடி…’ ன்னு ஒரு குரல்..!

கண்ணு இருட்டி ஒரே மயக்கம்..

கண்ணத்திறந்து பாக்கும் போது  ஒரு  கடற்கரை மணல்ல..சுத்தி என் நண்பர்கள்..

‘ஆனந்த்..யூ ஆர் வெரி லக்கி….!’

அவங்க சொல்லிதான்  நடந்ததே எனக்கு தெரியும்….! “

“ரியலி…த்ரில்லிங் எக்ஸ்ப்பீரியன்ஸ்….! உங்கள் காப்பாத்தினது யாருன்னு  தெரியுமா…?”

“தெரியாது டாக்டர்… அவன் சொல்லாம கொள்ளாம காணாம போயிருந்தான்…..”

“அவன் முகமாவது நெனவிருக்கா….?”

“அவன் முகத்த பாக்குற நெலையிலையே நான் இல்ல. ஆனா, ஒண்ணு மட்டும் லேசா நெனவுக்கு வருது.. அவனைப் பிடிச்சுக்க முயற்சி பண்ணினப்போ ஏதோ தாடி மாதிரி கையில அகப்பட்டுது…..”

“தேர் யூ ஆர்…! அப்போ உங்களுக்கு தலைல அடிகிடி…?”

“மயக்கம் போடறதுக்கு முன்னாடி லேசா தலை ஒரு பாறை  மேல மோதினமாதிரி…! கொஞ்சம் ரத்தம் கட்டியிருந்தது… அவ்வளவுதான்…!”

“அம்மாவுக்கு தெரியுமா…?”

“நான் சொல்லல டாக்டர்….”

“ஆனந்த் … இந்த சிக்கல்ல இருந்து  கூடிய சீக்கிரமே உங்களுக்கு விடுதல கிடைக்கும்…அதோட ஒரு முனை என் கையில அகப்பட்டிருக்குன்னு நினைக்கிறேன்…..”

“என்ன சொல்றீங்க டாக்டர்….?”


“ஆனந்த்… நீங்க பயப்படறமாதிரி உங்க மனசுல எந்த பாதிப்பும் இல்லை.. நீங்க பாக்க வேண்டியது ஒரு நரம்பியல் மருத்துவரத்தான்…”

“டாக்டர்.. எனக்கு மூளையில கட்டி ஏதாவது..?”

“நீங்களா எதையும் முடிவு கட்டிடாதீங்க… டாக்டர்.. குமரவேல்  எனக்கு தெரிஞ்ச பெஸ்ட் நியூரோஸர்ஜன்..அவருக்கு ஒரு கடிதம் எழுதித் தரேன்..உடனே அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும்.. நிச்சியம் உங்க முகத்தை சீக்கிரமே திருப்பித் தருவார்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு.. ஆல் தி பெஸ்ட்…!”


டாக்டர் குமரவேல் நல்ல பழுத்த அனுபவசாலி என்று  அவரது வயதும் பேச்சும் கூறிற்று…

பொறுமையாக அவன் சொன்ன விவரங்களையெல்லாம் கேட்டார்..

“மிஸ்டர் ஆனந்த்..இந்த டெஸ்ட்டெல்லாம் பண்ணிட்டு வாங்க… எல்லாம் சரியாய்டும்னு நம்புங்க….”

டெஸ்ட்டெல்லாம் முடிந்து ரிப்போர்ட்டுடன் டாக்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் ஆனந்த்.. இதயம் படபடவென்று துடித்தது…


“ஆனந்த்.. உங்க ரிப்போர்ட்டெல்லாம்  பாத்துட்டேன்… ஒரு அபூர்வ  கேஸ்தான்..ஆனா உலகத்துல இந்த மாதிரி  யாருக்கும் நடக்கலன்னு .சொல்லமுடியாது.. நான் பாக்குற முதல் பேஷன்ட்னு வேணா சொல்லலாம்..”

“டாக்டர் எனக்கு மூளைல ஏதாவது தீராத வியாதி….?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல… நான் சொல்லப் போறத கவனமா கேளுங்க..

நம்ம மூளையே ஒரு புரியாத புதிர்.. அதப் பத்தி இன்னும் முழுசா தெரிஞ்சுக்க அறிவியல் உலகமே திணறிட்டுதான் இருக்கு..

உங்க முகத்தக் காணம்ன்னு நீங்க சொல்றத  நான் நம்பறேன்..அது நூத்துக்கு நூறு சத்தியம்..

யூ ஆர் நாட் அப்நார்மல்….

நம்ப மூளைல முகத்த நினைவு வச்சுக்க’ ஃப்யூஸிஃபார்ம்  கைரஸ்’ அப்படின்னு ஒரு இடம் இருக்கு..

உங்களுக்கு தலைல லேசா அடிபட்டப்போ அதன் நரம்பணுக்கள் பாதிக்கப்பட்டிருக்கு.. அதனாலதான் உங்க முகமே உங்க நெனவுல இல்ல.

ஆனா ஒரு சின்ன  ஸர்ஜரி போதும்..அத சரி பண்ணிடலாம்…”

“மூளைல ஆப்பரேஷனா…? வேண்டவே வேண்டாம்.. எனக்கு முகம் தெரியாட்டா கூட பரவாயில்ல….”

“ஆனந்த்..நீங்க பயப்படற  மாதிரியில்ல…கீ ஹோல் சர்ஜரிதான்…”

“டாக்டர்..ஆனா..இன்னொரு முகம் எப்படி வந்தது….?”

“அதுதான் உங்க கேசுல  ஒரு அதிசயம்…நீங்க மயக்கம் போடும்போது  உங்கள காப்பாத்தினவனோட முகத்த ரொம்ப நெருக்கத்துல பாத்தீங்க இல்ல….அதனால அவனோட முகம் அதுல பதிவாயிருக்கணும்..

உங்க சொந்த முகம் வந்ததும் அவன் காணாம போயிடுவான்…”

“நோ. நோ! அவன் காணாம போகக்கூடாது டாக்டர்…..”

“என்ன சொல்றீங்க ஆனந்த்….?”

“ஆமா… அவன் யாருன்னு எனக்கு தெரியணும்…. நான் இன்னைக்கு உயிரோட இருக்கேன்னா அது அவனாலதான்..ஐ வான்ட் டு  தாங்க் ஹிம்….ப்ளீஸ்! என்ன புரிஞ்சுக்குங்க. டாக்டர்….”

“ஆனந்த்….நீங்க உண்மையிலேயே ஒரு தனிப் பிறவி…. எனக்கு மூணு நாள் டைம் குடுங்க….ஐ வில் ட்ரை மை பெஸ்ட்…. குட் லக்….!”


டாக்டர் குமரவேல்  சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டார்..

“ஆனந்த்… நான் கண் மருத்துவர்  டாக்டர்..கிரிதர் கிட்ட உங்க கேசப்பத்தி டீடெய்லா டிஸ்கஸ் பண்ணினேன்…அருமையான ஸஜஷன் கொடுத்திருக்காரு….

இப்போ உங்க விழித்திரையில பதிவான அந்த முகத்த ஸ்கேன் பண்ணி ஒரு பிரின்ட் எடுக்கறதுதில ஒரு சிரமமுமில்ல..அத ஸர்ஜரிக்கு முன்னால செய்யணும். இல்லைனா அந்த முகம் மறைஞ்சு போயிடும்..

அப்புறம் அவன சுலபமா கண்டுபிடிச்சிடலாம்…

ஆர் யூ ஹாப்பி?”


“அம்மா..இதப் பாருங்க….!”

அம்மாவிடம் ஒரு படத்தை காட்டினான்…

“என்னடா.. மறுபடியும் தாடியும் மீசையுமா..?”

“இந்த முகம்தான் என்ன துரத்திகிட்டே இருந்தது…”

“யாருடா இது….ஆமா..உன்ன கேக்கணும்னு நெனச்சேன்.. அடிக்கடி எங்க போற ? எங்கிட்டேயிருந்து ஏதாவது மறைக்கிறயா…?”

“அம்மா.. உங்கிட்ட போய் மறைப்பேனா..? சமயம் வரும்போது சொல்லலாம்னு இருந்தேன்..”

ஆனந்த் ஒன்றுவிடாமல் அத்தனையும் சொல்லி முடித்தான்..

“ஆனந்த்..சினிமா கதை மாதிரி இருக்கேடா…. உனக்கு நல்ல மனசுடா..! உங்கூட நான் இருப்பேன்..கவலையே வேண்டாம்….”


ஆனந்துக்கு இப்போது கண்ணாடியைப் பார்க்க பயமே இல்லை.. ஆனாலும் அந்த முகத்தை  தேடிப் பார்க்கிறான்…!

எல்லா செய்தித் தாளிலும் விளம்பரம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறான்…

பார்ப்போம்..இந்த முறையும் அதிர்ஷ்ட தேவதை அவன் வீட்டுக் கதவை தட்டாமலா போகும்…..?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *