அந்த நிலவை நான் பார்த்தால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 3,296 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாப்பிடுவதற்கென்று அமர்ந்துவிட்டால், இந்தச் சனியன் பிடித்த நாய் வந்து முன்னே இருந்து விடுகிறது. நான் வளர்த்த நாய்தான் – இப்பொழுது ஒரே குட்டையும் சொறி யும். அது முன்னால் இருக்கும் பொழுது சாப்பிடுவதற்கே அருவருப்பாயிருந்தது. அடித்தேன். அடியின் வலி தாங்க முடியாமற் குளறிவிட்டு மீண்டும் என் காலடியிலேயே வாலை ஆட்டிக்கொண்டு சுற்றி வந்தது. எனக்கு, எரிச்சலாயிருந்தது. மீண்டும் அந்த விறகுக் கட்டையால் ஓங்கினேன். அது தலையைக் குனிந்து பயத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தது. அதன் கண்களிலிருந்து கண்ணீர்கூட வழிவது போலிருந்தது. எனக்கு இரக்கம் மேலிட்டது.

– இந்த நாய்க்கு அடித்தால், அது என்ன செய்யும்? வலி பொறுக்க முடியாமற் குளறும். மீண்டும் என்னையே சுற்றி வரும். அது, நான் சோறு போட்டு வளர்த்த நாய். எப்படி அடித்தாலும் நன்றியை மறக்காது.

பேசாமல் வந்து கதிரையில் அமர்ந்தேன். நாயும் வந்து என் காலடியிற் சுருண்டு படுத்துக் கொண்டது – என்னுள்ளத் தில் அவள் நினைவு

– அவளுக்கும் அன்று கண்மண் தெரியாமல் அடித் தேன். “நாயே, என் வீட்டை விட்டுப் போய்விடு!” என்று ஏசினேன்.

அவள் அழுதாள், “என்னை அடியுங்கோ… உதையுங்கோ.. நாயே, பேயே எண்டெல்லாம் பேசுங்கோ…அதுக்கெல்லாம் உங்களுக்கு உரிமை இருக்குது. உங்களை விட்டுப் போக மாத்திரம் சொல்லாதையுங்கோ! எனக்கு உங்களைத் தவிர வேறை ஆர் இருக்கினம்?” என்றாள்.

எனது ஆத்திரம் வெடித்தது:

“ஏன்?….அவன் சிவானந்தனோடை போய் இரன்!”

“எதுக்காக அதையே திரும்பத் திரும்பச் சொல்லி என்ரை வேதனையைக் கூட்டுறீங்கள்?” என அழுதாள்.

“துரோகி! உனக்கு வேதனையாயிருக்குதா? என்ர வாழ்க்கையையே பாழாக்கிப் போட்டியே…” என ஒரேயடியாகக் கத்தினேன்.

அவள் போய்விட்டாள்.

அப்படி அவளைக் கலைத்திருக்கக் கூடாது. இன்று தனிமையிலிருக்கும் பொழுதுதான் அவளுடைய அருமையை உணர முடிகிறது. அவள் என்னைப் பிரிந்து ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது. இப்பொழுது, அவளை மறந்துவிட வேண்டுமென முயல்கிறேன். முடியவில்லை.

ஆறு வருடங்களுக்கு முன்னர் தான் அவளுடைய பழக்கம் ஏற்பட்டது…

யாழ் புகையிரத நிலையத்தை விட்டு மெயில் வண்டி கிளம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் எனது நண்பர்களும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சைக்காக. கண்டிக்குப் பிரயாணம் செய்கிறோம். யாழ் நிலையத்தில் ஏறிய வனிதாவும் அவள் சிநேகிதிகள் சிலரும் இருக்க இடமின்றி வந்து கொண்டிருக் கிறார்கள். வனிதாவை அதற்கு முதல் ரியூசன் கிளாசில் கண்டிருக்கிறேன். அவளுடன் கதைக்க வேண்டுமென, எனக்குப் பல நாட்களாகவே அடங்காத துடிப்பு. அதற்குச் சந்தர்ப்பம் வந்ததே என மனது குதூகலித்தது.

“இருக்க இடமில்லையா வனித்?” என்றேன், த்ல் ஓர் அழுத்தம் போட்டவாறே. அப்படி ஆசையாக அழைப்பதில் எனக்கே, ஒரு தனி உரிமை இருப்பதாக எண்ணம்!

“இல்லை!” என்றவாறே சிரித்தாள்.

அது போதும் எங்களுக்கு! உடனேயே தாராள மனப்பான்மை வந்து விட்டது. தயாள சிந்தையுடன் நாங்கள் ஓர் இருக்கையில் நெருங்கியிருந்தவாறே முன் இருக்கையை அவர்களுக்கு அர்ப்பணித்தோம். ஒவ்வொரு விடயங்களைப் பற்றியும் சுவாரஸ்யமாகக் கதை வளர்ந்தது. தெரியாத அரசி யலைப்பற்றியும் விவாதித்தோம். எனக்கிருக்கும் தமிழ்ப்பற்றைக் கண்டு அவள் புகழ்ந்தாள். எனக்குப் பெருமையாக இருத்தது.

பொல்காவலையில் இறங்கி புகையிரதம் மாறிய பொழு தும், கண்டியில் இறங்கிய பின்னரும் அவள் பெட்டியைக் காவியது நான் தான்! காதலி (யி)ன் முன்னே, அவையொன்றும் எனக்குக் கேவலமாகப் படவில்லை.

பரீட்சை முடிந்ததும், பேராதனைப் பூந்தோட்டத்திற் சந்தித்தோம். கதையோடு கதையாக, “நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா வனிதா?” என்றேன். “ஆம்!” என்பது போல தலையை அசைத்தாள். எனக்குக் கவலையாயிருந்தது. அதை அறிந்து கொள்ளாமற் பழகி விட்டோமே என எண்ணினேன். மனவருத்தத்துடன், “அது, யாரென்று எனக்குச் சொல்லலாமா?” என்றேன். “நீங்கள் தான்!” என்றவாறே எனது நெஞ்சிலே தனது பிஞ்சு விரலைப் பதித்தாள். அந்த மென்மை தந்த ஸ்பரிசம் அல்லது அவளது வார்த்தையினால் மனது அடைந்த ஸ்பரிசமாயிருக்கலாம், இன்ப வானத்திலே மிதந்து பறக்கின்றேனோ என்ற உணர்வையடைந்தேன். ஆனந்த மிகுதியால் அவளை அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

“வனித்! என் அன்புப் பரிசாக ஏதாவது தரவேணும் போலிருக்கு. என்ன வேண்டும்?” என்றேன்.

“இந்த இதயத்தை எனக்கு நிரந்தரமாகவே தந்து விடுங்கோ, போதும்!” என மீண்டும் என் நெஞ்சிலே தனது விரலைப் பதித்தாள்.

அந்தக் கையை ஆதரவுடன் பற்றிக் கொண்டே “வனித்!…வனித் !…”

– உணர்ச்சிப் பரவசத்தில் திடீரென எழுந்து கொண்டதில், காலடியிற் படுத்திருந்த நாயையும் மிதித்து விட்டேன். அது கத்திய சத்தத்திற்தான் மீண்டும் சுயநினைவுக்கு வருகிறேன்.

வானத்திலே முழுமதி சிரிக்கிறது. நிலவு பகலாக எறிக்கிறது.

இளம் தென்றலின் தழுவலில் நழுவி, ஆடுகின்ற தென்னையிளம் கீற்றுக்கள் வண்ண மதியைத் தொட்டு விளையாடுவது போலிருக்கின்றன. நிலவு ஓலைகளில் பட்டுத் தெறிக்கிறது. அந்த நிலவு என்ன சொல்கிறது…

– நான் பல்கலைக் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட் டேன். வனிதா பரீட்சையிற் தேறவில்லை. தொடர்ந்து வீட்டி லிருக்க விரும்பாமல் தட்டெழுத்துப் பழகி ஒரு நிறுவனத்தில் வேலைக்கமர்ந்தாள்.

திருமணமாகியதும் அவளை வேலையிலிருந்து நிறுத்தி விட்டேன். மனைவி எனக்கு மாத்திரம் தான் சேவை செய்ய வேண்டுமென்பது எனது சுயநலமான ஆசை!

திருமணத்திற்குப் பின்னர் இனிமையாகக் கழிந்தவை எட்டு மாதங்கள் தான். அதன் பின்னர்தான் அந்தச் சூறாவளி எங்கள் இன்ப வாழ்வைக் குலைத்தெறிந்தது.

சிவானந்தனை ஒரு நாள் காண நேர்ந்தது – எனது பழைய நண்பன். வனிதாவுடன் அவளுடைய அலுவலகத்தில் வேலை பார்த்தவன். ஆனால்…என் திருமணத்துக்கோ, அதன் பின் னரோ அவன் என் வீட்டுக்கு வரவில்லை. விரக்தியுற்றவன் போலக் காணப்பட்டான். கேட்டால், ஏதோ சாட்டுச் சொல்லி, எதையோ மறைக்க முயன்றான்.

பொறுமையாக வற்புறுத்தினேன்.

ஓர் எரிமலை வெடித்தது –

“உன்ரை மனிசி வனிதா…என்னைக் காதலிச்சவள்”.

“சிவா! என்ன இது?”

“உனக்கு ஆத்திரமாய்த்தான் இருக்கும். ஆனால் சத்தியமாய்ச் சொல்லுறன்…. இது உண்மை!”

“அதை…..நீதானே சொல்லுறாய்….?”

“அவள், எப்பிடிச் சொல்லுவாள்?…நீ இன்ஜினியர்…நான் ஒரு கிளார்க்தானே?”

வனிதாவைக் காண நேர்ந்த நாளிலிருந்தே ….. ‘எனிதா எனக்கு மாத்திரம் உரிய சொத்தாக வேண்டும்’ என்ற உணர்வுடன் இருந்தவன் நான். அதனாற்தான் அவளையே மணமுடித்தேன். ஆனால்….. அவள் சிவானந்தனையும் காதலித்திருக்கிறாளாம்! எனக்குக் கடிதமெழுதிக்கொண்டு, அலுவலகத்திலும் நடனமாடியிருக்கிறாள்.

வனிதா எனக்குக் கடிதம் கூட எழுதியிருக்கிறாள் என்றான் சிவானந்தன்.

அந்த ஆவேசத்துடன் வீடு சென்றேன். அதன் விளைவு வனிதாவை அவள் பெற்றோர் வீட்டுக்கு அனுப்ப வைத்தது. அந்தச் செய்கைதான் அப்போதைக்கு எனக்கு நிம்மதியாகத் தோன்றியது.

தனிமையில் இருக்கும் பொழுது வனிதாவின் நினைவு வந்து வெறுப்பை ஊட்டும். காலம் செல்லச் செல்ல அவ் வெறுப்பு ஓரளவு மாறிக் கொண்டு வந்தது. வெறுமையான வீட்டில் உலாவும் பொழுது, அவள் இருந்த காலம் நினைவில் வந்து நெஞ்சை உறுத்தும். வேதனை இதயத்தைப் பியக்கும். முன்னர் அவள் எனக்கு எழுதிய கடிதங்களை எடுத்து வாசிப்பேன். என்னை எப்படியெல்லாம் ஏற்றிப் புகழ்ந்து எழுதியிருக்கிறாள்! தான் வணங்கும் தெய்வமென்றும்…. தன் இதயத்துச் சக்கரவர்த்தி என்றும்! இவளா இன்னாருவனுக்குக் கடிதம் எழுதக் கூடியவள்?

சிந்தனை விரிந்தது –

“ஐயோ!….நான் அவருக்குக் கடிதம் எழுதினேனா….அலுவலகப் பழக்கத்திலை சும்மா கதைச்சுச் சிரிக்கிறனான் தான்…அப்பிடியெண்டால் அந்தக் கடிதங்களையே வேண்டிப் பாருங்கோவன்” என அவள் அழுதது நினைவில் வந்தது.

அப்பொழுது இவையெல்லாம் என் சிந்தனைக்கு எட்ட வில்லை. அவள் எது சொன்னாலும் ஆத்திரமாகவே வந்தது. அவள் பேயாகக் காட்சியளித்தாள் எனக்கு.

சிவானந்தனிடம் சென்று அக்கடிதங்களை வேண்டிப் பார்க்கலாமா என எண்ணினேன்.

கடிதங்களைப் பார்த்ததுமே பெரிய அதிர்ச்சி! அவை வனிதாவினுடைய எழுத்தல்ல.

“இது வனிதாவுடைய கையெழுத்தல்ல” என்றேன்.

“அவளுடைய கையில்லாமல் காலா இதையெல்லாம் எழுதியது?” எனக் கிண்டல் செய்தான் சிவானந்தன்.

நான் சற்றுப் பொறுமையாக அவனிடம் கேட்டேன்; “சிவா, இது விளையாட்டில்லை…என்ர குடும்பப் பிரச்சினை…தயவு செய்து சொல்லு. இதையெல்லாம் அவளே எழுதி உன்னட்டைத் தந்தாளா?”

“எங்கடை ஒபீஸ் பீயோன் தான் தூது. அவனையே கேட்டுப்பார்!” என்றான்.

பீயோன் பெடியன் சண்முகத்தினுடைய வீட்டுக்குச் சிவானந்தனையும் அழைத்துக் கொண்டு சென்றேன். அவனிடம் விஷயத்தைக் கேட்ட பொழுது, அவனும், “கடிதமெல்லாம் வனிதாதான் கொடுத்தா” என்றான். எவ்வளவோ கேட்டும் அவன் ஒரே பிடியாகத்தான் நின்றான். எனக்கோ நம்பிக்கை யில்லை. கோபமும் பீறிட்டுக் கொண்டு வந்தது.

– தலைமயிரைப் பிடித்து இழுத்து, அவன் கன்னங்களில் மாறிமாறி விளாசினேன்.

“ஐயோ! அடியாதையுங்கோ…உண்மையைச் சொல்லுறன்” என்றான்.

“இந்தக் கடிதங்களை அவ தரவில்லை”.

“பின்னை ஆர் தந்தது?”

“நான் தான் எழுதுவேன்.”

“ஏன்?”

“சிவானந்தன் ஐயா தருகிற கடிதங்களை வனிதாவுக்குக் கொடுப்பதால் அவர் எனக்குப் பல விஷயங்களிலை சப்போட் பண்ணினார். ஆனால் அவற்றை கடிதங்களுக்கு வனிதா பதில் தரமாட்டா என்பதும் எனக்குத் தெரியும். அவவுக்கு வேறு காதலர் இருந்தார். அவருக்கு அவ எழுதிற கடிதங்களையும் நானே சில வேளைகளில் போஸ்ட் பண்ணியிருக்கிறேன். அதனால் அவற்றை கடிதங்களுக்கு நானே பதில் எழுதிக் கொடுத்தேன்.”

சிவானந்தன் ஒரு வெட்கப்பட்ட பேர்வளி. மடையன், தானே சென்று வனிதாவுடன் விஷயத்தைக் கதைத்திருந்தால் அவள் உள்ளதைச் சொல்லியிருப்பாள். வெட்கத்தில் பீயோனிடம் கடிதத்தைக் கொடுத்திருக்கிறான். அலுவலகப் பழக்கத்தில் வனிதா சிரிக்கும் போதெல்லாம் காதல் என்று வாயைப் பிளந்து விட்டிருக்கிறான்.

“வனித்! என் கண்ணே, என்னை மன்னித்து விடு. என் இதயம் நிரந்தரமாகவே உனக்குத்தான்…” – மனது மௌனமாக அழுதது.

வனிதாவைக் கூட்டிவர அவள் தாய் வீட்டுக்குப் போனேன். அங்கே அவள் இல்லை. பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றிருந்தார்கள் என அறிந்து சென்றேன்.

‘ஒப்பிரேசன்’ செய்து தான் குழந்தையை எடுக்க வேண்டுமாம். டாக்டரிடம் விசாரித்தேன். “பிரசவ காலத்தில் மனைவியைக் கவனமாகப் பார்க்க வேண்டும். எங்கேயோ கிணற்றடியில் விழுந்ததாகச் சொன்னாள். குழந்தையை ஒப்பிரேசன் செய்து தான் எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் குழந்தை இறந்திருக்கிறது.”

“என்ன டாக்டர்? என் குழந்தை இறந்து விட்டதா?…வனிதா என்னவானாள்?”

“இப்பொழுது சென்று தொல்லை கொடுக்க வேண்டாம். உங்கள் மனைவி களைப்புற்றிருக்கிறாள்.”

“ஐயோ… எனக்காக இல்லாவிட்டாலும், என்வயிற்றில் வளரும் உங்கள் குழந்தைக்காகவாவது என்னை அடியாதையுங்கோ, உங்களைக் கும்பிடுறன்” – அன்று ஆத்திரவேகத்தில், நிதானமிழந்து அடித்த பொழுது அவளது வயிற்றிலும் அடிபட்டு விட்டது. அதன் தாக்கம் இப்பொழுது எனது வயிற்றில் அடித்தது.

வனிதா ! மலரிலும் மெல்லிய உன் மனத்தை வருத் தினேன். மலர்கள் இறைவனுக்கு பூஜிக்கப்பட வேண்டியவை. அதை அவமதித்ததற்கு எனக்குக் கிடைத்த தண்டனை போதும்.

சிறிது நேரத்தில் தாதியிடம் – அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்றேன். என்னரிய வனித் கட்டிலிற் கிடந்தாள். அமைதியாக…அசையாமல்…உறங்குகின்ற மலரைப்போல். கன்னங்கள் சிவந்து வீங்கிப் போயிருந்தன. பாவம்! நன்றாக அழுதிருக்கிறாள்.

“நல்ல சத்தான சாப்பாடே சாப்பிடுவதில்லையா… உங்கடை மிஸ்ஸிஸ்? பிரசவகாலத்தில் சாப்பாட்டு விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்… ஒழுங்கான உறக்கமோ…உணவோ இல்லாமல் வலிமையை இழந்து விட்டாள். பாவம்” – இது தாதியினுடைய அனுதாபம்.

என்னைப் பிரிந்து இருக்க முடியாதென்பாயே வனித் ? எனக்காக, இந்த ஆத்திரக்கார மடையனுக்காக….. நீ ஏன் ஊணோ உறக்கமோ இன்றி இருந்தாய்? உனக்கு என்னைத் தெரியாதா வனித்…? காரணமில்லாத காரணங்களுக்கெல் லாம் சட்டெனக் கோபப்பட்டுவிடுவேனே. பின்னர் அதற்காக…. அந்தக் கோபத்தால் உன்னை வருத்தியதற்காக எவ்வளவு கவலைப்படுவேன். நீ…. என்னைப் புரிந்து கொண்டவள் …. எனது கோபம் ஆறிய பொழுது, ஏன் என்னைச் சமாதானப் படுத்தாமல் விட்டாய்?.. வனிதா …. உனது பொறுமையும் எல்லை கடந்து விட்டதா?

அவள் கண்விழிக்கும் நேரத்தை எதிர்பார்த்தபடியே கன்னங்களைத் தடவிக் கொடுத்தேன். சிறிது நேரத்தில் கண்கள் இறந்தன ….. “வனித்! வனித்!” என அவள் தலையை அணைத்துக் கொண்டேன். நெற்றியில் ஆதரவுடன் முத்தமிட்டேன். அப்பொழுது எனது கண்ணீர் அவள் முகத்தில் விழுந்து எனது தவறுக்காக மன்னிப்புக் கோரியது.

“நான் உங்களுக்குத் துரோகம் செய்யவில்லை…. சத்தியமாகத் துரோகம் செய்யவில்லை…என்னை நம்புவீங்களா அத்தான்?” – அவள் முனகலுடன் அழுதாள்.

“இல்லை வனித்!…எனக்கு எல்லாம் தெரியும். என் இதயம் நிரந்தரமாகவே உனக்குத்தான்…”

“அத்தான்…இனி, நீங்கள் எனக்கு அடிக்கமாட்டீங் களே?…என்னைக் கலைக்கமாட்டீங்களே…”

“வனித் என்னை ஏனிப்படி வதைக்கிறாய்? என்னைப் பார்த்துச் சிரிக்கமாட்டாயா? நான் இனி என்றுமே உன்னை விட்டுப் பிரியமாட்டேன்.”

வனிதா சிரிக்கவில்லை. அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஏன் வனித் சிரிக்கமாட்டாயாம்? எனக்குப் பயமாக இருக்கிறது. வனித்! வனித்! அவளுடைய அந்தக் கண்கள்…. அவை ஏன்…? அவை என்னை விட்டு எங்கேயோ…ஓ !வனிதா, நான்…நான் என் உயிருக்காக ஓலமிடுவதையும் பொருட்படுத்தாமல் அவள் செத்துக் கொண்டே இருந்தாள்.

என் வனிதா செத்துப் போய் விட்டாள்.

அவள் இறந்து ஒரு வருடம் கடந்து விட்டது.

இன்னமும் மறக்க முடியவில்லை. என்னையும் மீறி அடிக்கடி அழுது விடுகிறேன். கண்ணீர்த்துளிகள் முன்னே படுத்திருந்த நாயின் முகத்தில் விழுந்ததும்….அது என்னை நிமிர்ந்து பார்த்து, என் கால்களை நக்கிக்கொடுக்கிறது. தேற்று கிறது? இப்பொழுது அதுதானே எனக்குத் துணை. மடையன், அதைக்கூட அடிக்கத் துணிந்தேனே….

…மனம் நிம்மதியின்றி… ஏகாந்தத்தை நாடுகிறது. எழுந்து, தென்னங் கன்றுகளினூடு செல்கிறேன். ஓலைகளினூடு பால் நிலவு என்னை, எட்டி எட்டிப் பார்க்கிறது.

அந்த நிலவு என்ன சொல்கிறது…

என் நிலையைப் பார்த்தா நிலவு சிரிக்கிறது?…அதில் வனிதாவின் நினைவுகளுடன் எனது இதயம் கரைந்து கொண்டிருக்கிறது.

குவிந்து நிற்கும் மரங்களின் ஓலைகள் சலசலத்துக் கொள்கின்றன. அவற்றை ஊடுருவி வந்த குளிர்ந்த காற்று என்னைத் தழுவிக் கொள்கின்றது. என் பின்னே வந்த நாய் எதற்காகவோ ஊளையிடுகிறது. அதன் அழுகையில் எனது உடல் மயிர்க் கூச்செறிகிறது. என் இதயத்தை நிரந்தரமாக அவளிடம் கொடுத்து விட்டேன் – அவள் என்னை விட்டுப் போய்விடவா போகிறாள்?

– மாணிக்கம் 1973 – பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பாதிப்பு: 10-07-1977, தமிழ்ப்பணிமனை, யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *